நிழல் உன் தோளில்...
_______________________________________
விஞ்ஞானக்கலைச்சொற்களும்
கணித சமன்பாடுகளும்
அரிதாரம் பூசிக்கொண்டு
மெய்மை போன்ற பொய்மையான
வரைவுகளில்
ஆண் பெண் முத்தங்களும்
கோர்த்த கணினி மத்தாப்புகளை
கையில் ஏந்திய
ஆலிவுட்காரர்களின் அடிச்சுவட்டில்
நம்மூர் மிச்ச சொச்ச
மச்ச அவதாரங்களும்
இந்தி சமஸ்கிருத கொப்பளிப்புகளில்
இனி
கோடி கோடி என்று கோடிகளில்
கோலோச்சலாம்.
இலக்கிய பஞ்சமும்
சமுதாய சிந்தனை வறட்சியும்
கார்ப்பரேட் வியாபார பசியுமே
வெள்ளித்திரைகளில் அல்லது
தனிப்பட்ட கணினி கையடக்க
அரங்குகளிலும்
கோலு ஏறி நிற்கும்.
ஏ ஐயும்
மூளை வைரஸ்களில்
சீரியல் பல்பு வெளிச்சங்களாய்
வண்ண மின்னல்கள்
வெட்டி வெட்டிச்சாய்க்கும்.
மனிதம் மறைந்தே போகும்.
சாதி மத சாஸ்திரங்களே
மக்களைக்குதறும்
டைனோசார்களாய் வலம் வரும்.
ஓட்டு எனும் திட்டு
கரையான் புற்றுக்களால்
மூடப்படும்.
பழமை கூட சிந்திக்கத்தக்கது தான்.
ஆனால்
சமுதாய பொது நீதிகளின்
நடப்புகளை கல்லறைக்குள் தள்ளும்
பழமை வாதமே இனி
எங்கும் முடை நாற்றமெடுத்து
குங்குமம் வைத்துக்கொண்டு
கொக்கரிக்கும்.
உலக மானிடம் இனி
சிலிர்த்துக்கொள்ள வேண்டிய
தருணம் இது.
மனிதா! சிந்தி! சிந்தி!
சாவின் நிழல் உன் தோளில்
நீண்டு படர்ந்து இருப்பது கூட
உனக்கு
பிரம்மாண்ட சினிமா தானா?
விழித்துக்கொள்!
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக