வியாழன், 13 மார்ச், 2014

நிலா நிலா ஓடிவா .


Medusa-the-olympians-12768964-600-679.jpgநிலா நிலா ஓடிவா .
====================================================ருத்ரா

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
இல்லாவிட்டால்
உன்னையே
இவன்
நறுக்கி நறுக்கி நறுக்கியே
உப்புக்கண்டம் போட்டு
கவிதை தொகுதி போடுவான்.

மயில் பீலிகளிலும்
தடவி தடவி
ரத்தம் கசிய வைப்பதில்
எழுத்துக்களும்
எலும்பு துருத்திக்கொண்டிருக்கும்.

பாலவன மணல்துளிக்குள்
படுத்துக்கிடந்து எழுதுவான்.
ஒட்டகங்கள்
ஓய்ந்து நின்று
அங்கு வந்து "நயாகரா" பெய்து
நட்டமாக நின்றதென்று
நடுகல் வைத்து எழுதுவான்.

பேனாவுக்குள் புகுந்து கொண்டு
நிலவுச்சதையை உருக்கியே
காகிதமெல்லாம்
வட்டம் வட்டம் வட்டமாய்
வரட்டிகள் தட்டி வைப்பான்.

ம்ம்ம்
இதோ பாருங்கள்
ஆரம்பித்து விட்டான்...


"போய்க்கொண்டே இருக்கும் கடையாணி சக்கரத்தின்
நாக்கை நக்கிப்பார்க்க துடித்தது.
சக்கரப்பட்டையில் சக்கரவாகங்கள் நசுங்கிக்கிடந்தன.
சிறகுகளில் எல்லாம்
நட்சத்த்திரப்பொடிகள் பார்பர்ஷாப் குப்பையாய்...
பிரமிடுகள் பிடரிமுளைத்து
கோரைப்பற்கள் காட்டி வாய் பிளந்தன.
மெடுஸ்ஸாவின் தலை வெட்டப்பட்டு
மாலைச்சுரியன் க்ரிம்ஸன் ரெட்ல் ஜூஸ் பிழிந்து
ஆயிரம் ஆயிரம் நாகங்கள் திசைக்கொன்றாய்
நெளிந்து ஓடி..
அப்படியும் அந்த கண்கள் பட்டு
அந்த பேனாவும் காகிதமும்
கல்லாய் உறைந்து கிடக்கும்.
பாம்புகள் மொய்த்த நிலவா அது?
டெல்ஃபிக் ஆரக்கிள் கோடாங்கி அதிர்வுகளில்
அவள் இமையின் மெல்லிய பச்சை நரம்புகள்
ஈ சி ஜி வரிகளாய்
பூக்கள் தூவப்பட்டும் இப்போது கசங்கி
நிர்மால்யமாய் தலையணை மெத்தையில்
குமிழி குமிழி குமிழி குமிழிகளாய்
எதைச்சொல்லும்?
மிச்சமாய்
ஒரு நிலாவும் அங்கு ஒரு குமிழியாய்
உதிர்ந்து கிடக்கிறது."
...............
.....................

====================================================ருத்ரா
Picture of Medusa ...with Courtesy  of GOOGLE images

அந்த விளிம்பு..


அந்த விளிம்பு..                                                      ருத்ரா இ.பரமசிவன்
=================================================================
உன்னோடு தொட்டுபிடிச்சு விளையாட ஆசை.
எங்கெல்லாம் ஒளிந்து கொள்வாய் என்று
எனக்குத்தெரியும்.
என் கணுக்கால் பூ மயிர்கள் கூட‌
ஆன்டெனா ஆகி விடும்
உன்னை கண்டுபிடிக்க.
உன் கை வழ வழ வென்று
கோதுமை நாகம் போல்
அந்த கல் உருளையைச்சுற்றிக்கொண்டு
மூசு மூசு என்று மூச்சிரைத்து
ஒளிந்து கொண்டிருக்கும்போது
உன் வளையல்களோடு
கரிய பொன் கீற்றுகளாய்
உன் முன்கையின் வெல்வட் மயிர்கள்
உரசுவதை வைத்தே
கண்டு பிடித்து விடுவேன் நான்.
வேண்டுமென்றே
அந்த குத்துக்கல்லின் ஊசி முனையிலிருந்து
குரல் கொடுப்பாய்.

திகில் கொண்டு துடிப்பேன்.
டேய் தடியா
இது அவள் எனக்கு வைத்த செல்லப்பெயர்.
அதை ஒலித்து ஒலித்து
உரக்கக்கத்துவாய்.
உன் எதிரொலி அடுக்குகள்
பிய்த்து எறியும் ரோஜா இதழ்கள் போல்
என் மீது "மழை"க்கும்.
ஒன்று இரண்டு..என்று
நான் கண்களைப் பொத்துவது போல்
நடிப்பேன்.
நான்"கள்ளாட்டை" ஆடுகிறேன் என்று
உன் கண்களை
ஊடுருவிக்கொண்டு என் கண்களோடு
கலந்து கொண்டு விடுவாயே..
அப்புறமும்
நீ எப்படியோ ஓடி வந்து
என் முதுகுப்புறம் ஒளிந்து கொள்வது போல்
ஒட்டி இழைந்து நிற்பாய்.
நூறு நிலவுகளைக்கொண்டு
சோப்பு செய்து என் முதுகு தேய்த்து
என்னை நீ
குளிப்பாட்டுவதாய் நான்
களிப்புக்குமிழிகள் பூத்து நிற்பேன்.
திடீரென்று
சத்தம் காட்டி எதிரே வந்து
கலவரப்படுத்துவாய்.
நானும் பயந்தது போல்
முகம் வெளுத்து வெட வெடத்து
முறுவல் காட்டுவேனே.
அன்றொரு நாள்
அந்திநேரம்
உன் மீது அழகாய்
ஒரு குட்டைப்பாவாடையாய்
குழைந்து நெளிந்து அசைந்தது.
ஒளிப்பிழம்பு உனக்கு பின்னல்
கொண்டைத்திருக்கு சூட்டியது போல்
சூரியன் உன் பின்னே
ஹேர்பின் இல்லாமலேயே
உன் ஜடையில் சொருகி
இளஞ்சிவப்பாய்
வானமெல்லாம் சிரித்தான்.
"டேய்
ஒழுங்கா கண்ண மூடுடா
இப்ப என்னைக்கண்டுபிடி பார்க்கலாம்"
முகம் காட்டிக்கொண்டு
பின் புறம் நடந்து நடந்து நகர்ந்தாய்.
வேகமாக நகர்ந்தாய்.
அந்த விளிம்பு..அந்த விளிம்பு
அவள் பின்னே....
என் அரைகுறை கண் மூடலில்
பார்க்கும் போது...
ஐயோ..
எங்கே அவள்?

===================================================================
படம்..நானே எடுத்தது..அமெரிக்கா அரிஸோனாவில் "கொலராடோ ஆறு"

ஞாயிறு, 2 மார்ச், 2014

விடியவே இல்லை இன்னும்.....விடியவே இல்லை இன்னும்.....
=========================================ருத்ரா

ஜென் என்றால் என்ன?
இப்படி கேள்வி கேடபதே ஜென்.
கேள்வியே இல்லாத போது
கேள்வியைத் தேடும் பதில் ஜென்.

கடவுள் பற்றி
தியானம் செய்யும் வகுப்பில்
முதலில் உட்கார்வது கடவுள்.
வகுப்பை துவக்குவது ஜென்.

பிற‌ந்து தான்
வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும்.
இற‌ந்து தான்
வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை.

வாழ்க்கையின்
அஸ்தமனம் எது?
விடியவே இல்லை இன்னும்..

அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது
புத்த‌க‌மும் புதிது.
மாண‌வ‌னும் புதிது.
ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென்.

ஜென் ஒரு புதிர்.
ஜென்னை அவிழ்ப்ப‌தும்
இன்னொரு புதிர்.
ம‌று ஜென்ம‌ம் உண்டு.
அதுவும் இந்த‌ ஜென்ம‌த்தில் தான்
உண்டு.
அதுவும் "ஜென்"ம‌ம் தான்.

ஞான‌ம் ஒவ்வொரு த‌ட‌வையும்
தோலுரிக்கிற‌து.
அதுவும் ஜென்ம‌மே
இந்த‌ ஜென்ம‌த்தின் க‌ருப்பை
அறிவும் சிந்த‌னையும்.

வ‌ழியை மைல்க‌ல்க‌ளில்
சொல்வ‌து புத்தியின் அடையாள‌ம்.
மைல்க‌ல்க‌ளை பிடுங்கியெறிந்து விட்டு
வ‌ழியை தேட‌ச்சொல்வ‌து ஜென்.

க‌ண்க‌ளை மூடுவ‌து அல்ல‌ தியான‌ம்.
க‌ண்க‌ளை திற‌ந்து வைத்து
பார்வையை மூடுவ‌து தியான‌ம்.
காட்சிப்பொருள‌ல்ல‌ ஜென்.
காட்சியின் பொருள் ஜென்.

ம‌னம் ஊசிமுனையில்
க‌ழுவேற்ற‌ப்ப‌டும்போது
ஆகாய‌த்தில் முக‌ம் துடைக்க‌ச் சொல்வ‌து
ஜென்.

ஆசை முத்த‌ங்க‌ளின் ருசி கேட்கும்போது
அங்கு சிக்கி முக்கிக்க‌ல் ஜென்.
தீக்குள் விர‌ல் வைத்து தீண்டி
ந‌ந்த‌ லாலாவை சுவைக்கும்போது
தீயின் லாலி பாப் ஜென்.

ஜென்
எது?
ஜென்
யார்?
ஜென்
எங்கே?
ஜென்
எத‌ற்கு?

ஜென் ஒரு ஜ‌ன்ன‌ல்.
இங்கிருந்து மூட‌ல‌ம் திற‌க்க‌லாம்.
அங்கிருந்து மூட‌லாம் திற‌க்க‌லாம்.
ஆத்திக‌ன் திற‌ந்தால் நாத்திக‌ம் தெரிவான்.
நாத்திக‌ன் திற‌ந்தால் ஆத்திக‌ன் தெரிவான்.

எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி
எடுத்துக்கொண்டு போவார்க‌ள்.
உட்கார்ந்து தியான‌ம் செய்ய‌.
எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி
எடுத்துக்கொண்டு வ‌ந்து விடுவார்க‌ள்.

சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து
சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து
தியான‌ம் செய்தது
அந்த‌ பாய் ம‌ட்டுமே.
அந்த‌ பாய் ம‌ட்டுமே ஜென்.

த‌ய‌வு செய்து வீசிஎறியுங்க‌ள்
ஜென் ப‌ற்றிய‌ புத்த‌க‌ம் ஒன்றை
வான‌த்திற்கு.
க‌ட‌வுள்க‌ள் விண்ண‌ப்பித்திருக்கிறார்க‌ள்.

======================================================