காப்பிக்கோப்பைகள்.
____________________________________
சொற்கீரன்.
மனித விழிப்புகள்
மலர்களில் கார்ட்டூன்களாய்
காட்சி தந்து கொண்டிருக்கும்
அந்த சன்னல் துண்டு சித்திரத்தில்
உதடுகளை வைத்துக்கொண்டு
காப்பிக்கோப்பையை உறிஞ்சினேன்.
ரோஜாக்களை மட்டுமே
குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கும்
கவிஞர்கள்
அந்த பட்டாம்பூச்சிகளின் சிறகுகளில்
ஒட்டியிருக்கும்
காதல் மகரந்தங்களை
தூவிக்கொண்டே இருப்பார்கள்.
அந்த வியாபாரம் எப்போதுமே
சூடான பக்கோடாக்கள் தான்.
கொஞ்சம் கொறிக்க
இந்த தினவுகள் ஊரும் ஹார்மோன்களை
வைத்துக்கொண்டு
இந்த மலட்டு நூற்றாண்டுகளை
தள்ளிக்கொண்டே போகலாம்.
மனிதம்
சாதி சமய சாக்கடைகளில்
தேங்கிக்கொண்டிருப்பதை
கவிதை எழுதிக்கொண்டிருக்கும்
இந்த ஈக்களின் துடிப்புகளில்
எந்த எரிமலைகளும்
கண் திறந்து கொண்டு வந்து
நம்மை சுட்டெரிக்கப்போவதில்லை
என்று
சுகமாய் அந்த நுரைக்குமிழிகளின்
காப்பியை
சுவைக்கத்தொடங்கினேன்.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக