இதற்கு அர்த்தம் சொல்லுங்கள்
_______________________________________
கடல்
எனக்கு வழி பிளந்து தர
தயாராக இருக்கிறது.
என் பின்னே மக்கள் இல்லை.
பிறகு எதற்கு
கடலின் நெஞ்சைப்பிளக்க வேண்டும்?
அலைகள் அதோ! அதோ!
விலகிக்கொண்டு தோரணங்கள்
கட்டுகின்றன.
தண்ணீர்ப்பாளங்கள்
பளிங்கு மண்டபம் ஒன்றை
எனக்கு கட்டித்தருகிறது.
நான் உள்ளே சென்று
அதன் அழகில் கரைந்து நின்றேன்.
அங்கே தனிமையிலும் தனிமையாய்
நான் ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.
மனித வாசனையே அற்ற
அந்த பாழ்க்கடல்
எனக்கு கவரி வீசியது.
அந்த பூங்குளிரின் குமிழிகள் மொய்த்த
பூங்காவில்
நான் தேடினேன் காலத்தை!
ஆம்!
காலம் எனும் பிழம்பின் அறிகுறி
அங்கு ஏதுமில்லை.
சூரியன் இல்லை.
வானம் இல்லை.
ஆனாலும் அந்த சூழ்நிலை
மிகவும் வெளிச்சத்துடன் இருந்தது.
இருள் என்பதே இல்லாத
வெளியில் நான் மிதந்து கொண்டிருந்ததாய்
உணர்ந்தேன்.
ஒன்றுமே இல்லை.
ஆனாலும் எல்லாமே அங்கு
இருந்ததாய் உணர்ந்தேன்.
ஒரு மனிதன் மட்டும்
இருக்கின்ற பூமியா அது?
ஒற்றைப்பனை போல்
நின்றிருந்தேன்.
காலம் கழன்று போய்விட்ட
ஒரு சுழி அது.
வெளி என்கிற
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட
பரிமாணங்களில் செதுக்கப்பட்ட
இடம் என்பதன் உருவம் அல்லது உருவற்ற
நுரை வெளியில்
உலா வந்து கொண்டிருந்தேன்.
ஒற்றையாய் இருந்த என் உட்கூட்டில்
என்ன இருக்கிறது
என்று தேடினேன்.
வியந்து போனேன்.
அது
என்னைப்போல எல்லாமும் நிறைந்து
மிடையப்பட்ட ஒரு பெண்.
அவள் என்னுள் அடை பட்டிருந்தாள்.
அவள் பேசினாள்.
என்ன மொழி அது?
என் நிழலா அது?
ஆணுக்குள் பெண்ணா?
திடீரென்று
என் அறிவின் சிந்தனை வளையம்
முறிந்து போனது.
இப்போது
அவள் வெளியே நான் உள்ளே.
இது என்ன
உருவெளி மயக்கம்?
மீண்டும் அந்த கடல் விளிம்பு.
எதிரே
பளிங்கு துடிப்பு அலைகளின் பிழம்பு.
வருக் வருக என்று
வழி பிளந்து தோரணங்கள் கட்டியது.
அதே வெளிச்சத்திரள்.
ஆம்...என்ன தான் மிச்சம்?
ஒன்றுமில்லாமல்
அந்த மணல் துளிகளுக்குள் நான்.
ஒரு குரல் மட்டும்
மின்னல் நூலாய்
என்னைச்சுற்றி ஏதோ
"அதிர்வு இழையம்" எனும்
ஸ்ட்ரிங்காய்
என்னைச்சுற்றி சுற்றி ஒரு
புழுக்கூடு பின்னியது.
இனி எப்போது சிறகுகள் முளைக்கும்?
இதற்கு அர்த்தம் சொல்லுங்கள்.
_________________________________________________________
மின்னற்பீலியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக