சனி, 29 ஆகஸ்ட், 2015

குற்றாலம்




குற்றாலம்
==========================================ருத்ரா

 சிலுசிலுத்தது குற்றாலம்.
சிங்கன் சிங்கி கூத்து துவங்கியது
அந்த குத்துப்பாறைகளில்.

 அருவி
வேங்கையில் விழுந்து
வேங்கையை நனைத்தது.
முதலில் மரம்.
அப்புறம் புலி!

  நான்கு முழ இளஞ்சிவப்புத்துண்டில்
தொந்திகள் தொப்பைகள்.
சிக்ஸ் பேக்ஸ்ம் தான்.
மலையிலிருந்து அது
யாரோ எவளோ?
தலையை கோதிய சுகத்தில்
எவனுக்கு வேண்டும்?
எண்ணெயும் சீயக்காயும்.

 அருகே
கிளுகிளுக்கும் 
வளையல்காடுகளில்
"ஒலியும் ஒளியும்" தான்.

 மானம் இழந்து
மருட்சி உற்ற‌
மாணிக்க அருவி
சூரிய ஒளியில் தற்கொலை!
ஏழு வர்ண ரத்தம்!
=========================================================

செப்பு விளையாட்டு

செப்பு விளையாட்டு
=========================================ருத்ரா
வாழ்க்கை
ஒரு குறுகிய சன்னல்.
அதன் வழியாய் தெரிகிறது
பொன் மழை வைர மழை..
வீடு எனும் சிமிழில்
சூரிய சிவப்பொளி அற்புதம் தான்.
அது
கதவுகள் கழன்று
கூரைகள் நீங்கி
சுவர்கள் தரையில் மல்லாந்து
பரிணாமம் அடையும் போது
அங்கு உன்னுடன்
உறைய வருபவை
அண்டங்கள் எனும் "ஞானத்"தின்
பண்டங்கள் தான்.
உன் புலன்கள் உன் நிழல்கள்
எல்லாம் நின்றுவிடச்செய்து நீ
கழன்று கொள்வது தான்
"ஓம்".
ஆம் என்பதும் அதே..
ஆங்கிலம் அந்த‌
உயிரோட்டத்தின் "மின் தடையை"
தன் மேஜையில் உட்கார்த்தி
அழகு பார்க்கிறது..
உனக்கு உட்கார்த்தவும் தூக்கிவிடவும்
மந்திரங்கள் அல்லவா
தேவைப்படுகிறது.
நடைப்பிணங்கள் மீது அடுக்கப்பட்ட‌
செப்பு வீடா இது?
வடிவேலுவைக்கேட்டால்
"சின்னப்பிள்ளத்தனமாவுல்ல இருக்கு"
என்பார்....அதனால்
போதும் இந்த செப்பு விளையாட்டு.
========================================================
Paramasivan Esakki's photo.





கனவுக்குள் அகப்படவில்லை!

thoorikaikkaadukal.png
ருத்ரா





கனவுக்குள் அகப்படவில்லை!
================================================ருத்ரா


ஏன் அகப்படவே மாட்டேன் என்கிறான்?
இமைகளை அழுத்தியும்
மூடிப்பார்த்து விட்டேன்.
அன்னத்தூவிகளாலும்
மூடிப்பார்த்து விட்டேன்
ஏன் இன்னும் வரவில்லை?
சைக்டெலிக் நரம்புகளை
என் இமைகளில் ரங்கோலி
போட்டுக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு போய் தொலைந்தான்?
அந்த இரவின்
வெளிச்சதை பிழம்புக்குள்
விஞ்ஞானிகளின் டார்க் மேட்டரின்
இருட்பிண்டமாய்
இழைந்து கொண்டிருக்கிறானோ!
பெண்களின் தடிமான அமுதக்கவர்ச்சிகளை விடவும்
அந்த எம் தியரியின்
தலையணை புத்தகங்களோடு
அமுக்கிக்கொண்டு கிடப்பவனாயிற்றே!
ஏதாவது
காதல் வசனம் இரண்டு சொல்லடா
என்றால்
"ஏடிஎஸ்ஸும் ஹோலோக்ராஃபிக் பிரபஞ்சமும்"
என்று
விளக்கத்துவங்குவானே!
இருப்பினும் அவனை என்னால்
மறக்க முடியவில்லை.
அந்த சோடா புட்டி கண்ணாடிக்குள்
கூகிள்களை சுரங்கம் வெட்டி வைத்திருப்பவன்
அல்லவா!
அடியில் தீ எரியும்
உடல் புணர்ச்சிக்கு
பெர்ஃப்யூம் எழுத்துக்களால்
கிச்சு கிச்சு மூட்ட‌
இன்னும் ஏன் அவன்
கூகிளுக்குள் போகவில்லை?
இருப்பினும்
அவனை எனக்கு
ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
டேய்..
சீக்கிரம் வந்து கனவுகுழம்புக்குள்
கலக்கேண்டா!
வா!வா!...

 ...................
................

 "ஏண்டி காஃபி கலந்து கொண்டு வருவாய்
என நினச்சிட்டிருக்கேன்..
நீ இன்னும் எழுந்திருக்கவே இல்லை..
அடச்சீ..எழுதிந்திரு..
உன் "சோடா புட்டி"
உனக்காக வராண்டாவில்
வெகு நேரமாய் உட்கார்ந்திருக்கிறான்"

=================================================
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:02 கருத்துகள் இல்லை: 

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

"மெடுஸா "



காதல் தேவதையே
 இது என்ன கோலம் ?
கிரேக்க அழகியின்  ஒரு ராட்சசக்கோலம் ..
உன் ஒரு முழம் மல்லிகைச்சரம்
என் கனவில் ..
.நாகப்பாம்பு கொத்துக்களாய்...
மலைப்பாம்புக்குட்டிகள்
 தலைவிரி கூந்தலாய்
"மெடுஸா " எனும்
மயிரிழை க்காட்டில்
 நச்சுத்தலைகளா  இங்கு
காதலைச் சொல்ல
 முகம் காட்டி மயக்கும்?









Medusa-the-olympians-12768964-600-679.jpg

ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து...





ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து...

====================================ருத்ரா


இதுவரை

நம் மேய்ச்சல் நிலத்துக்கு

அவன் கொடுத்த ஆடுகளை யெல்லாம்

எண்ணிப்பார்த்து

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

என்று பாடிக்கொண்டே இருக்கிறோம்.

69 ஆடுகளாமே!

அலங்கார வண்டிகள்...

வானத்தில் புகையெழுத்துக்களால்

இன்னும்

விமானத்தைக்கொண்டு உழும்

அதே மூவர்ண வரிகள்..

வானொளிகளின் வழியாக‌

நம் வீட்டுக்குள் வந்து

ராணுவ முரசுகள் செய்யும் அதிர்வுகள்...

எல்லாம்

வழக்கம்போல‌

காது விடைத்துக்கொண்டு

தீனிக்கு அலையும்

ஆடுகளின் 

வர்ண வர்ண சுதந்திரக்காட்சிகள்..

மின்னணுப்பொறியை

தட்டும் வரை வளர்ந்துவிட்டாலும்

ஆடு..புல்லுக்கட்டு..புலி

விடுகதை தீரவில்லை.

பஞ்சம்..பட்டினி..பிணி என்பதை

திருப்பி திருப்பி மொழி பெயர்த்தாலும்

லஞ்சம்..லாவண்யம்..அறியாமை என்று தான்

எதிரொலித்துக்கோண்டிருக்கிறது.

ஆட்கள் என்றால் என்ன?

ஆடுகள் என்றால் என்ன?

அம்பத்தொண்ணு விழுக்காடுகளில் தான்

இங்கே ஜனநாயகக் கூச்சல் காடுகள்.

ஆகஸ்டு என்றால் 

சுதந்திரம் என்ற வெளிச்சம் 

நம் காலண்டர்களில் பிரசவித்த‌

மாதம் ஆயிற்றே!

ஆனால் இவைகளுக்கு தெரிந்த மாதம்

மே...மே...மே..தானே!

பாவம் போகட்டும் விடுங்கள்

அந்த ஆடுகளை!

தங்கள் வெளிச்சத்தையெல்லாம்

விழுங்கித்தீர்க்கும்

இருட்டின் குத்தாட்டங்களைத்தான்

அவை மேய வேண்டுமாம்.


=====================================

வியாழன் 27 ஆகஸ்டு 2015