வியாழன், 30 ஜனவரி, 2020

ரஜினியும் இமயமலையும்

ரஜினியும் இமயமலையும்
========================================ருத்ரா


பெரியாரை
"பெரியவா"க்கள்
கொச்சைப்படுத்த‌
டப்பிங்க் குரல் கொடுத்தவர்
குருமூர்த்தி.
வாயசைத்தவர் ரஜினி
மன்னிப்பும் கேட்கமாட்டேன் 
என்று சொல்லும் அளவுக்கு
ஆரியம் முறுக்கி விட்ட‌
அந்த 
தந்திரப்பொம்மை தான் 
ரஜினி.
மனித சமூகநீதியின்
விளைநிலமாக உள்ள‌
நம் திராவிட சமுதாயத்தை
அழிக்க வந்த இந்த‌
இந்த அரிதார "எந்திரனை"
அடித்து நொறுக்குவதே
தமிழனின் கடமை.
அதற்காக‌
ரஜினியை இமயமலைக்குப் போ
என்று ஆவேசப்பட வேண்டாம்
ஓ! தமிழர்களே.
அந்த இமயம் கூட‌
தமிழ் விழித்திருக்கும் இமையம்.
நம் சேரன் வில் பொறித்த‌
அடையாளம் அல்லவா அது !
ரஜினியை வைத்து 
நம் இமய மலையைக்கூட‌
கொச்சைப்படுத்த அனுமதிக்கலாமா?
சிந்துவெளித்தமிழர் அல்லவா நாம்!
சிந்தி தமிழா!சிந்தி!
சிந்தியா எனும் நம் இந்தியாவை
அந்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து
காப்பாற்றுவதே நம் 
புதிய வரலாற்றுக்கடமை.
சி ஏ ஏ மற்றும் என் சி ஆர் எல்லாம்
நமக்கு வெட்டும் புதை குழிகளே!
ஒன்று சேர் தமிழா!
இது வெறும் சமஸ்கிருத எதிர்ப்பு அல்ல.
அவர்கள் ஆதிக்க சதியில்  புதைந்து கிடக்கும்
நம் வரலாற்றை மீட்டெடுப்போம்.
தஞ்சசைப்பெருங்கோயில் 
தமிழன் இதயம் அல்லவா.
அதன் குடமுழுக்கு
தமிழின் பாற்கடலில் அல்லவா
நிகழ வேண்டும்.
சம்ஸ்கிருத நச்சு நீரா
அங்கே நனைக்க வருவது?
இது வரை அப்படித்தான் என்று 
சுரண்டியவர்களை 
சுடுகாட்டுக்கு அனுப்புவதே 
இனி நம் வேலை .

வாழ்க நம் செந்தமிழ்!
வெல்க நம் தொல் தமிழ்!

========================================================

தூது

 தூது
===============================================ருத்ரா



"என்னைப்பிளந்து
என் மனசைப்பிசைந்து
காற்றாக்கி 
தூசாக்கி உனக்கு
தூது விட்டிருக்கிறேன்.
வகுப்பு பாடம் 
நடந்து கொண்டிருக்கும்போதும்
உன் மேஜையில் வந்து
படிந்த அந்த தூசியை
தட்டி விட்டு 
எதை கவனித்துக்கொண்டிருக்கிறாய் நீ?"
காதலன் நெஞ்சம்
கலங்குகிறது.
"பாடம் என் காதில் ஏறவில்லை.
உன் குரலுக்கு ஏங்கி
என் மௌனத்தை உன் மீது
கண்ணுக்குத்தெரியாத  ட்டு
எதைக்கேட்டுக்கொண்டிருக்கிறாய்
அந்த 
பேராசிரியரின் கூச்சலில்."
காதலியின் கூர்மையான 
ஏக்கம் இது.

================================================

செவ்வாய், 28 ஜனவரி, 2020

"கல் பொரு சிறு நுரை"


"கல் பொரு சிறு நுரை"
================================================ருத்ரா


"கல் பொரு சிறு நுரை"போல
என்று தான்
காதலியின் பிரிவுத்துயரம் பற்றி
அன்று பாடினான்
ஒரு சங்கப்புலவன்.
பெண்ணே!
உன் சொல் பொரு மென் நுரை போல்
நொறுங்கிக்கொண்டிருக்கிறேன்.
கல் என்ன கல்?
ஆயிரம் இமயத்தைக்காட்டிலும்
கனமான சொல் அல்லவா அது.
நீ சொன்ன சொல்
அத்துணை கொடுமையானது.
"இதோ
என் திருமண அழைப்பிதழ்"
என்று
சிரித்துக்கொண்டே சொல்லி
கொடுத்து 
மறைந்து விட்டாயே!

===================================================

இனித்த மொழி

இனித்த மொழி
================================================ருத்ரா


ஆடு 
புல்லை மேய்ந்து கொண்டிருந்த‌
திடல் அருகே
ஒரு பெருமாள் கோயில்.
காண்டா மணியின் ஓசை
அந்தப் புல்லையும் 
ஆட்டையும்  
கசக்கி எறிந்தது.
பாம்பு படுக்கையில் கிடந்த‌
பர‌ந்தாமனுக்கும்
படு எரிச்சல்.
சற்று நேரத்தில்
ஆரம்பித்து விடுவார்கள்...
இந்த ஊளை சஹஸ்ர‌நாமங்கள்
எவனுக்கு வேண்டும்?
பெருமாள்
அந்த ஆட்டுக்கு அருகில்
புல்லில் போய் படுத்துக்கொண்டார்.
ஆடு "மே..மே" என்று
அர்ச்சனை செய்தது.
தமிழின் திருவாய் மொழியாய்
அந்த இடமெல்லாம் இனித்தது.
எறும்புகள்
வரிசை வரிசையாய் வந்து
தரிசனம் செய்தன‌
எந்த ஸ்பெஷல் ஆயிரம் ரூபாய்ச்சீட்டும்
இல்லாமல்.

============================================================

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!
===============================================ருத்ரா

இந்திய மண்ணின்
மைந்தர்களே!
அடிமை விலங்கை நொறுக்கி
விட்டோம் என்று
தெருவெல்லாம் 
அலங்கார ரதங்கள்
ஓட்டிக்களித்தீர்கள்.
ஆனாலும் 
பழைய நான்கு வர்ணம்
பூசிய 
விலங்குகளையல்லவா
கைகளிலும் கால்களிலும்
பூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
கடவுள் எனும்
மயிற்பீலி போன்ற உணர்வு
உங்களை 
வருடுவதில் உங்கள்
மனங்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.
அதே மயிற்பீலிகள்
பெரும்பாரமாய்
செத்துப்போன‌
சாதி மத வேதாளங்களாய்
இன்னும்
உங்களைப்பிய்த்து தின்னும்
நிலையை 
நீங்கள் அனுமதிக்கலாமா?
குடியரசு விழா என்று இந்த‌
மத அரசு மத்தாப்புகள்
உங்களை 
எரித்துவிடப்பார்க்கும்
கொடுமைகளை அனுமதிக்கலாமா?
கணினிப்பொறிகளை 
தட்டிய உங்கள் விரல்களில்
சமூக நீதியை.. 
மானுட சம நீதியை...
அடித்து நொறுக்கும்
சம்மட்டிகள் 
எப்படி ஜனித்தன?
என்று
இன்று நீங்கள்
யோசிக்கா விட்டால்
நாளை 
ஓ மானுடநீதிப் பூக்களே
நீங்கள்
அடிமைக்கொட்டில்களில்
அடைக்கப்படுவீர்கள்.
ஆம்!
விடியல் சுதந்திரம் 
இருட்டிவிடும் இந்த அபாயத்தை
உங்கள் 
சிந்தனைச்சுடர் ஏந்தி
வெளிச்சம் பாய்ச்சத் தயார் ஆகுங்கள்.
ஜனநாயகத்தின்
உங்கள் குரல்களை நெறிக்கும்
இந்தக்கூச்சல்களை
குப்பையில் தள்ளட்டும்
உங்கள் இடி முழக்கக்கங்கள்!
"ஜெய்ஹிந்த்"

================================================

சனி, 18 ஜனவரி, 2020

கனத்த தருணங்களில்




கனத்த தருணங்களில்......
----------------------------------------------------------------------ருத்ரா 


ஒரு புல் 
மண்ணிடம் சொன்னது.
"என்னை 
கற்றை கற்றையாய் 
முளைக்கவிடு.
இந்த மனிதர்கள் என்னை 
மிதித்து விட்டுப்போகட்டும்.
உனக்கு வலிக்காது அல்லவா?


கழுகு 


ஆயிரம் அடி உயரத்திலிருந்து 
பார்த்தது 
மிக அழகான முயல் குஞ்சை.
ரசிப்பதற்கு அல்ல ...
புசிப்பதற்கு.


கணினி 


கண்ணீர் விடாமல் சொன்னது.
உங்கள் 
நகப்பிறாண்டல்களில் 
நாளைய சரித்த்திரம்.
க்ளிக் செய்கிறேன் என்று 
கிள்ளி கிள்ளி 
நீ விளையாடினால் 
என் முகமெல்லாம் 
நட்சத்திர மண்டலங்கள்!

---------------------------------------------------------------------------------------
05.08.2019




வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு
=================================================‍‍‍‍‍ருத்ரா


விசும்பின் விரியிழைத் தோகையன்ன‌

மஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி

விடியல் இன்று கலித்தே ஆர்த்தது.

குரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம்

உழுதது கண்டே நனிகளி உற்று

நனந்தலைப் படப்பை நடந்தேன் ஆங்கு.

அலவன் வரிய மயிரிய மணற்கண்

எழுதிய போன்ம் எழுத்துக்கள் ஊர‌

கண்டேன் "தமிழ் வாழிய" என்றே!

ஆழிமகள் அடியொற்றித் தந்த‌

அனிச்சம் தூவிய மென்னகை அலையும்

அழிக்க ஒண்ணா அன்பொடு தடவி

வாழ்த்தும் வாழ்த்தும் ஈண்டு ஓர்

"தமிழ்ப்புத்தாண்டு! தமிழ்ப்புத்தாண்டு!"அஃதின்

விண் இமிழ் நுண் ஒலி எங்கணும் கேட்கும்.

கேள்மின்!கேள்மின்! மின் தமிழ் நண்பர்காள்!

மண்ணும் விண்ணும் மற்றும் எல்லா

மலர்தலை உலகம் யாவும் இது கேட்கும்.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!

தமிழ் என்றென்றும் வாழ்கவே!

================================================

அருஞ்சொற்பொருள்
======================

மஞ்சின் வரி ...மேகத்தின் படிமக்கீற்றுகள்

ஓவு...ஓவியம்

குரல்கதிர்....கதிர்க்கற்றைகள்

பழனம்....வயல்

நனந்தலை படப்பை...விரிந்த வெளியும் நெய்தல் சார்த்த வனமும்

அலவன் வரிய....நண்டுகள் நடந்த வரிச்சுவடுகள்

மயிரிய மணற்கண்....மெல்லிய இழைகளை

ஏற்படுத்தினாற்போன்ற கடற்கரையின் (பட்டு)மணல் படர்ந்த இடம்

எழுதிய போன்ம்...எழுதினாற் போலும் உள்ள காட்சி

ஆழிமகள் அடியொற்றி ......கடல்மகள் அடியெடுத்து நடந்து

அனிச்சம் தூவிய மென்னகை அலையும்.....அனிச்ச மலர்கள்

தூவியதைப்போன்ற மெல்லிய நகை புரிந்து வரும் அலைகள்

===========================================ருத்ரா இ பரமசிவன்
13.01.2018 ல் எழுதியது.

வியாழன், 16 ஜனவரி, 2020

விழிமின் தமிழர்களே! விழிமின்!

விழிமின் தமிழர்களே! விழிமின்!
===========================================================ருத்ரா 


இருபத்திஒன்றாம் நூற்றாண்டை
மகுடம் சூட்டியிருக்கிற 
இளைய மன்னர்களே!
சிந்தனையின் சுடரேந்திகளே!
எண்ண விளிம்புகளில் 
மின்னல் கீற்றுகள் 
நெளிய வேண்டிய இடங்களில் 
இந்த அரிதார 
நூலாம்படைகளையா 
அடைய விடுவது?
இமயச் சிகரத்தில்  
"வில் "பொறித்த வீரமா 
இந்த ஊசிப்போன 
"நூல்"களின் 
"துக்ளக்" "தர்பாரு"க்குள் 
பொம்மைகளாய் 
நசுங்கிக்கிடப்பது?
வரிசையாய் வந்த 
சினிமா நடிகரும் நடிகையும் 
பதித்த அடிச்சுவடுகளில் 
கண்டதெல்லாம் 
உங்கள் அடிமைச்சுவடுகளே!

கிருஷ்ணகிரி எல்லையோரத்தமிழன் 
என்று 
முழங்கிக்கொண்டு வரும் 
இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் 
வடக்கத்திய 
கிருஷ்ணர்களுக்கும் அர்ஜுனர்களுக்கும் 
அல்லவா 
இங்கே வந்து 
"சப்பளாக்கட்டைகள்" அடிக்கிறார்கள்.

மானுட சமூகநீதியை 
வர்ணாசிரமக் குப்பைத்தொட்டியில் 
வீசிடவே 
விரல் முத்திரை காட்டி 
மேடையில் வீராவேசம் காட்டுகிறார்கள்.
கருவிலேயே நூலின் மார்போடு 
பிறந்தவர்களாம் 
இந்த "பிரம்ம புத்திரர்கள்".
மற்ற 
தொண்ணூற்றேழு சதவீதமும் 
சாக்கடைப்புழுக்களாம்.

தமிழர்களே! தமிழர்களே! தமிழர்களே! 
உங்கள் காலின் கீழ் 
இருப்பது வெறும் மண் அல்ல!
அது  உங்கள்  
எரிமலை லாவாவின் 
நாளத்துடிப்புகள் என்று 
எப்போது உணருவீர்கள்?
விழிமின் தமிழர்களே! விழிமின்!

=======================================================










ஞாநி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

ஞாநி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
==============================================ருத்ரா

(ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
என்று
ஒரு எரிமலை பாடிய பாட்டு)


ஒரு தாடிமீசை.
சமஸ்கிருத ஸ்லோகங்கள்
இவையெல்லாம் வேண்டாமே
"ஞானி" என்று
போட்டுக்கொள்வதற்கு
என்பதாய்
ஒரு தர்க்கத்தின் உருவகம்
ஞாநி.
சமுதாய எழுச்சி என்பது
மத்தாப்பு போல்
எரிந்து அவியும் கிளர்ச்சி அல்ல.
அலங்காரம் அற்ற‌
சொல் அடுக்குகள் போதும்.
அதில் தெறிக்கும் கேள்விகள் போதும்.
கேள்விகளே விடைகளாய்
கொப்புளிக்க வைக்கும்
கேள்விகள் அவை!
ஏதோ
கி மு கால கட்டத்து
சாக்ரடீஸ் ப்ளேட்டோக்களின்
அறிவின் விளாறுகள்
நிறைய நிறைய‌
அவர் பத்திகளில்
கனன்ற போதும்
சமூக நீதியும்
சமூக நியாயமும்
"சீரியல் பல்பு"வெளிச்சங்களின்
புள்ளிவிவரக் க‌சிவில்
கீற்றுகள் காட்டுவது மூலம்
நவீன வரலாற்றுப்பக்கங்களை
பொட்டில் அடித்தாற்போல்
நமக்கு காட்டும்
ஒரு சித்தாந்த மேதை அவர்.
இவர் விளக்கு ஏந்தியபோது மட்டுமே
மற்றவர்களின்
அசிங்கங்கங்கள் அம்பலமாகிவிடும்.
இது
இவரது எழுத்து விளக்கின்
குற்றம் அல்ல.
பத்திரிகைகள்
யாரையாவது
தாக்கவேண்டுமென்றால்
இவர் பேனாவுக்குள்
ஒளிந்து கொள்வார்கள்.
ஏனெனில்
பத்திரிகைகளுக்கு
அந்த ஊழலை விட‌
அந்த ஊழல்காரர்களின்
உருவங்கள் கிழிக்கப்படவேண்டும்
என்பதே நோக்கம்.
ஆனால்
ஞானி
எப்போதுமே
நியாயத்தின் ஊசி முனை.
இந்த தந்திர ஆட்டங்கள் ஏதும்
ஆடத்தெரியாத‌
உண்மைத்தீயின் சுடரேந்தி.
கடைசியாக‌
குருமூர்த்தி அவர்களைப் பற்றி
அவர் சந்தோஷமாகவே
விமரிசித்திருக்கிறார்.
அவர் வெளிப்படையாகவே
சங்க பரிவார "கதாயுதத்தை"
தூக்கிக்கொண்டு நின்று
அம்பலமாகி விட்டார் என்று.
இதுவே
ஞானியின் நிப்புமுனை
எவ்வளவு கூரியது
என்று காட்டும்.
இவருக்கு கண்ணீர் அஞ்சலி எழுதினால்
வேடதாரிகளே
கொஞ்சம் எட்டி நில்லுங்கள்
என்று தான் விமரிசனம் வைப்பார்.
சிறுநீரகக்கோளாறுகள்
சில கோடீஸ்வரர்களுக்கு
வெறும் சில்லறைத்தொந்தரவுகள் தான்.
இவரை
காவு கொண்ட அந்த வியாதி
மௌனமாய் அவரை
தின்று முடித்ததைக்கண்ட போது
அது நமக்கு
ஒரு தாங்கவொண்ணா அதிர்ச்சியே!
ஆனாலும்
இவர் இழப்பு
சமுதாய அலசல்கள்
இல்லாத காலி பக்கங்களைத்தான்
இனி நமக்கு காட்டும்.
இந்த பத்திரிகைகள்...
ரீம் ரீமாக அச்சில்
ஓடிக்கொண்டிருந்தபோதும்.

=================================================
15.01.2018

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
=================================================ருத்ரா

இஞ்சியும் மஞ்சளும் கரும்பும்
முத்தமிழ்க் கலவையாகி
தமிழ் உள்ளம்
இங்கு பெரும்பொங்கல் ஆகி
சுவை கூட்டும்
"களித்தொகை"ப் பாடலென‌
சொல்கின்றேன்
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எங்கிருந்து தொடங்குவது
நம் தமிழின் ஆண்டை?
வள்ளுவன் ஆண்டே போதும்
உள்ளுவோம்
வாழ்வின் செம்மை தன்னை.

முன்னைப் பழம்பொருளுக்கும்
முன்னைய தாய்
பின்னைய புதுமைக்கும்
புதியதாய்
கொண்டாடுவோம்
நந்தம் தமிழ் ஆண்டை!

தமிழன்
கல்லைக்கண்டு உள்ளே
கனலைக்கண்டான்.
சொல்லைக்கண்டான்
அறிவின்
எல்லை கண்டான்.
உலகின் ஒளியைக்கண்டான்.
அந்த
கல்லாண்ட தமிழனே
எல்லாம் கண்டான்.

கடல் என்றால்
தடை அல்ல.
எல்லாம் கடத்தலே
இங்கு வாழ்க்கை.
அந்த வெள்ளத்தையும்
கட‌
என்று
துணிந்தான்
கடந்தான்.
தடுப்பதை
கடத்தலே அவனுக்கு
கடல் ஆயிற்று.
அது அவன் எழுதிய
முதல்
அலை படு கடாம்.

திரைகளோடு
திரண்டுநின்ற தமிழனே
திரையிடத்தான் ஆனான்.
திரைவிடத்தமிழின்
கூர்மையே இன்று
திராவிடம் ஆனது.

தமிழ் ஆண்டு
தொடங்கியது
இந்த‌
கல்லையும் கடலையும்
வைத்து தானே.

தொன்மைத்தமிழின்
இந்த
தமிழ்ப்புத்தாண்டுக்கு
நம் வணக்கம்.

எல்லோருக்கும்
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

================================================

புதன், 15 ஜனவரி, 2020

ரஜனி அறிவாளியா?

ரஜனி அறிவாளியா?
============================================ருத்ரா

துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவுக்கு
ரஜனி சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.
துக்ளக் பத்திரிகை
முதலில் ஆளும் கட்சியை
விமர்சித்து
கிண்டலும் கேலியுமாக
எழுதும் பத்திரிகையாகவே
இருந்தது.

ஆனால்
கொஞ்சம் கொஞ்சமாக‌
வாழைப்பழத்தில் ஊசியேற்றும்
அதுவும்
விஷ ஊசி ஏற்றி
மகிழ்ந்து கொள்ளும்
ஒரு சேடிஸ்ட் நகைச்சுவையைத்தான்
பக்கங்கள் தோறும்
கக்க ஆரம்பித்தது.

நச்சுப்புராணங்களில்
நசுங்கிக்கிடந்த தமிழனை
மீட்டெடுக்க வந்ததே
திராவிட இயக்கம்.
அறிவை இருட்டடிக்க வந்த
துக்ளக்குக்குகளே அதன்
எதிர் இயக்கம்.



தமிழ் இனத்தை
தமிழ் மொழியை
கொச்சைப்படுத்துவதே
அதன் பாணியாக‌ இருந்தது.
அந்த சிரிப்புக்குள் இருக்கும்
மரண வலி
தமிழ் இனத்துக்குத்தான்
தெரியும்.
தமிழை வைத்தே தமிழனை
அதாவது
தமிழிலேயே எழுதி
தமிழையே கழுவேற்றும்
ஆரிய சதி அது.

அந்த ஆரியம் புரியவேண்டுமென்றால்
நீங்கள் நிச்சயம்
திராவிடராய் இருக்கவேண்டும்.
ரஜனி அவர்களே
நீங்கள்
ஆரியரா? திராவிடரா?
நீங்களும்
இந்த துக்ளக்கை கையில்
சுருட்டி வைத்துக்கொண்டு
மானுட நீதியை
அழித்தொழிக்க அரங்கேறப்போகிறீர்களா?

வருணாசிரமத்தை
மட்டுமே
"நூலாக்கி"
படித்துக்கொண்டிருப்பவர்கள் தான்
அறிவாளியா?
ரஜனி அவர்களே
இந்த நூலைக்கொண்டு
ஆட்டும் பொம்மலாட்டத்தைத்தான்
உங்கள்
"பேட்ட" களும்
"தர்பார்"களும்
இந்த தமிழ் மக்களுக்கு
பிலிம் காட்டப் போகின்றனவா?

இவர்கள் எல்லாம்
பிறப்பிலேயே
அறிவாளிகள் எனும்
மூடக்கருத்தொன்றை முழக்கமிடவா
இங்கே
மேடை ஏறினீர்கள்?

சினிமா எனும் கானல் நீரைக்காட்டி
தமிழனுக்கு தண்ணி காட்டியவர்களின்
வரிசையில்
நீங்களும் தமிழ்நாட்டுச்செங்கோலை
கைப்பற்றும்
முயற்சிகள்
ஏதும்  செய்யவேண்டாம்.

திரையில் மட்டும்
சூப்பர் ஸ்டாராக நடித்துக்கொண்டிருங்கள்.
தரையில்
தமிழ் மக்களின்
பிரச்னைகளை குழப்பியடிக்கும்
வஞ்சக வேடத்தின்
சூப்பர்ஸ்டாராக நடிக்க‌
வந்து விடாதீர்கள்.

"சிங்க மராட்டியரின் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்"
என்றானே பாரதி!
சிங்க மராட்டியனுக்குள்ளும்
ஒரு திராவிடன் தான்
இருக்கிறான்.
ஏன் இந்த நரிகளுக்காக‌
ஒரு நரி போல வந்து
இங்கே ஊளையிடுகிறீர்கள்?

தமிழுக்கு அமுதென்றும் மட்டும்
பெயர் இல்லை.
தமிழ்ப்பகைவர்களை அழிக்கும்
ஊழித்தீயும் தான் தமிழ்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

======================================================

செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஒரு சொல்

ஒரு சொல்
__________________________________________________ருத்ரா

ஒரு சொல் உதிர்
போதும்.
என் உள்ளே உள்ள‌
பாலைவனங்கள் எல்லாம்
பச்சை இலைகளின்
குடை கவிக்கும்.

உன் ஒரு சொல்லின்
சொட்டு
உதிர்ந்தால் போதும்
ஏழு கடல்களின் உள்ளம்
இங்கே பொங்கும்.

இதழ் திறந்து உன்
இதயம் திறந்திடு.
இருண்ட கூட்டின்
என் வாசல் திறக்கும்.

உன் ஒரு சொல் போதும்
அன்பே!
இந்த தீக்கனல் காடுகள்
என் மீது
பூக்களின் மழை பெய்யும்.

உன் ஒரு சொல்...
.........
என்னால்
முடிக்க முடியவில்லை.
நான் முடியும் முன்
உன் சொல் உதிர்.
அதில்
எனக்கு ஆயிரம் உயிர்கள்
ஊறும்.

ஏனெனில்
காதலுக்கு உயிரெழுத்து
மட்டுமே உண்டு.
காதலில் உயிர்க்கட்டும்
உன் ஒரு சொல்!
போதும்
இந்த
உலகங்கள் தேவையில்லை.

‍‍‍‍‍______________________________________________________

எதற்கு...?

எதற்கு...?
_____________________________________________ருத்ரா

கடைசிச் சொட்டு வரை
அதை குடித்து முடித்துவிட்டேன்.
நுரையைக் கூட
பாக்கிவைக்க விரும்பவில்லை.
நாக்கை நுழைத்து
அதையும் நக்கி
சுத்தப்படுத்திவிட்டேன்.
அப்புறம்
எதற்கு அது?
அந்த கண்ணாடிக்கிண்ணத்தை
தூக்கி வீசி விட்டேன்.
நொறுங்கிப்போனது.
அந்த கடன்காரன் அள்ளிக்கொண்டு
போகிறான்.
எனக்கு என்ன வந்தது?
அது சரி..
இது வரை என் கையில் இருந்தது
வாழ்க்கையா?
மரணமா?

----------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

நீ

நீ
-----------------------------------------------------------ருத்ரா

நீ
நன்றாகத்தான் ஓடுகிறாய்.
துள்ளிக்குதிக்கிறாய்.
வண்ண வண்ண பலூன்கள்
உன் தோள்களில்.
காதலும் கத்தரிக்காயும்
கல்யாணமும்
உன் குழந்தை குட்டிகளும்
உனது தேசம்.
ஆனாலும் எப்போதாவது
தலையை உயர்த்தி
சிந்தித்திருக்கிறாயா?

எப்போதோ வெட்டிவிட்டு
போயிருக்கிறார்கள்
இந்தக் குழியை.
காலம் காலமாக‌
இதில் தான் விழ வேண்டும்.
உன் பிடறியைப்பிடித்து
உந்துகிறது.
அந்த வெறி விரட்டுகிறது.
பயம் பரிகாரங்களைக்கொண்டு
விரட்டுகிறது.
அறியாமை அரக்கமாகி
விரட்டுகிறது.
அறியத்தொடங்கு.
கடவுட்பேய்கள்
உன் காலடியில்
நசுங்கும்.

எல்லாரும் கீழே என்று
மேலே சிலர் நின்று
மிதித்துத் துவைக்கிறார்கள்.
எதற்கு அந்த வர்ணக்குழிகளில்
விழுகின்றாய்?

எகிறு .
திருப்பி உதை.
அந்த சாதிக்குழிகளை மூடு .
அவர்களைக்கொண்டே
அந்தக்குழிகளை மூடு
இது வரை
இருட்டைத்தின்று கொண்டிருந்த
நீ
அதையே காறி உமிழ்!
அவர்கள் அந்த சதுப்புக்குள்
புதைந்து போகட்டும்.


காலையில் அங்கு
சூரியன்
தெரியாது.
உன் முகமே அங்கு
இருக்கும்.
உன் முகமே
அங்கு
சிரிக்கும்!

------------------------------------------------------------------------------------
.






சனி, 11 ஜனவரி, 2020

ரஜினியின் தர்பார்


ரஜினியின் தர்பார்
=========================================================ருத்ரா

இந்த சமுதயம்
கல்லீரலை இழந்த போது
இதன் இதயம்
நாளங்கள் அறுந்து தொங்கும்போது
இதன் உயிரான‌
தமிழ் மொழி
ஆதிக்கச் சாக்கடையில்
விழுந்து கிடக்கும் போது
சாதி மத வல்லூறுகள்
இதன் கண்களை கொத்திப்
பிடுங்கும்போது
ஏ சுரணையற்ற
இளைய சமுதாயமே
தர்பார் போன்ற‌
கொள்ளிக்கட்டைகளைக் கொண்டு
உன் முதுகு சொறிந்து
கொண்டிருக்கிறாயே!
நிழலின் இருட்டு வார்ப்பில்
செய்த‌
காக்கிச்சட்டையையும்
துப்பாக்கியையும் கொண்டு
அநீதியைப்பொசுக்குவதாக
வலம் வரும் உன்
சூப்பர்ஸ்டார்
இங்கே அசலான பிர்ச்னைகள்
உன் மீது தீயை பற்ற வைக்கும்போது
அவர் மேஜிக் சிகரெட்டுகளை
அலேக்காக போட்டு
உதட்டில் கவ்விக்கொள்வதைக்கண்டு
புல்லரித்துப்போகிறவன் அல்லவா நீ!
பார்.
எரியும் பிரச்னைகளில்
சாம்பல் ஆகி கொண்டிருக்கிறாய்.
ஏதோ கணினியின்
மாயாபஜாரில்
சொக்கட்டான் ஆடி
இந்த ஜனநாயகத்தை மந்திரக்கோல்
ஆக்கியதாய் பூரித்து
பேயாட்சி செய்யும்
இந்த கொடுங்கோன்மை கண்டு
உன் விறைத்த காக்கிச்சட்டைக்காரனின்
எந்த குண்டும் சீறி எழவில்லையே!
கல்லாப்பெட்டியில்
சில்லறை குலுங்கவா
அந்த வெறிச்சிரிப்பும்
பல் நற நறப்பும்
விழி பிதுக்கலும்
மற்றும்
"கிழி சும்மா கிழி"
எனும் கம்பியூட்டர் இசை இரைச்சலும்?
அவர் சுட்டால் ஆயிரம் குண்டு மழை!
அவர் மீதோ
ஒரு கீறல் இல்லை.
ஆகா! இவர் போதுமே.
இவரை வைத்து இங்கே உள்ள‌
ஆயிரம் அநீதிகளையும்
சுட்டுப்பொசுக்கி விடலாமே.
அருமைத்தமிழனே!
உன் எண்ணங்களை
வெறும் கந்தலாக்கி விடாதே.
கிழிந்து தொங்கும்
உன் மக்களாட்சியை
கவனிக்க மறந்து
அந்த பொம்மலாட்டங்களில்
கரைந்து போகாதே.
தமிழனே!
பொங்குமாங் கடல் நீ.
இந்த "போங்காட்டமா"
உன்னை
இந்த "போகியின் பொங்கல் விழாவில்"
குப்பை எரிக்கப்போகிறது?
போதும்.
இப்போதாவது
விழித்தெழு.
இந்த சாதி மதப்பேய்களுக்கு
வேப்பிலை அடிக்க‌
அறிவு கொளுத்திய‌
உன் சிந்தனைச்சுடரை
தூக்கிப்பிடி.
ரஜனிகளே நோய்!
ரஜினிகள் மருத்து அல்ல.

==============================================================





வியாழன், 9 ஜனவரி, 2020

எழுக எழுக எழுகவே!

எழுக எழுக எழுகவே!
---------------------------------------------------------ருத்ரா 

எழுக எழுக எழுகவே!
ஜனநாயகம் எழுகவே!
விழுக விழுக விழுகவே!
சர்வாதிகாரம் விழுகவே!

எண்ணிக்கை பலம் காட்டி-எங்கள்
எலும்பு நொறுக்கவா ஆளவந்தீர்?
அரசியல் அமைப்பு இதயத்தையே
அழித்தொழிக்கவா ஆளவந்தீர்?

சாதி மத வெறியை ஊட்டி
நீதி குலைக்கவா அளவந்தீர்?
மசோதாக்களை எல்லாம்_ மதத்தின்
மசாலா அரைக்கவா ஆளவந்தீர்?

நாற்காலிகள் ஆளலாம் -வெறும்
"நாற்"காலிகள் ஆளலாமா?
கணினிகளின் மாயா பஜார்
ஜனநாயகம் ஆகுமா?

வெள்ளைக்காரன் போனபின்னே _-மத
வெள்ளைக்காரன் ஆளுவதா?
இந்தியர்களின் ஒற்றுமை தான்-எங்கள்
இந்திய மதம் அறிவீரோ?

இந்து மதமும் மற்ற மதமும் - எங்கள்
ஒற்றுமை  செய்த ஆயுதம்.
இந்துத்துவக்கோடரியா
எங்களைப்பிளக்கும் ஆயுதம்?

அவதாரக் கதைகள் நீங்கள்
பத்துவிதம் சொன்னீர்கள்
அப்படியும் பத்தவில்லை
அரக்கர்கள் தான் ஆனீர்கள்.

மக்களே எடுக்கப்போகும்
அவதாரம் ஒன்று உண்டு -உங்கள்
அரக்கத்தனம் அழித்திடவே
மக்கள் இயக்கமே  அவதாரம்.

ஜன கண மன அதி
நாயக ஜெயகே!
ஜன நாயக மன அதி
நாயக ஜெயகே !

ஜெயகே ஜெயகே
ஜன நாயகம் ஜெயகே!

===============================================










ஞாயிறு, 5 ஜனவரி, 2020

கள்ளிக்காட்டில் ஒரு ஆருத்ரா தரிசனம்.



24 மார்., 2014, 
SDC12156.JPG


24 மார்., 2014, 


கள்ளிக்காட்டில் ஒரு ஆருத்ரா தரிசனம்.
=================================================ருத்ரா இ.பரமசிவன்

எட்டு கோணலில் நின்ற‌
எண் குணத்தானே இங்கு
இது என்ன முள்ளின் கூத்து?
கள்ளிக்காட்டில் ஒரு ஆருத்ரா தரிசனம்.
கள்ளிக்காட்டில் ஒரு கனக சபையா?
இங்கே எப்படி என்றேன்?

அமெரிக்காவின்
"அரிஸோனா கள்ளிச்சபையும்
எனக்கு ஒரு சிதம்பரம் தான்.
ரகசியம் ஏதுமில்லை.
ஐந்து பூதத்துக்கும்
ஐந்து சபைகள் வைத்தேன்.
ஆறாம் பூதம் ஒன்று
இங்கு தான் உண்டு என்று கண்டேன்.
கணினி பூதம் அது
அதற்கோர் சபையும் செய்தேன்.
கணினியில் என் "கியூ பிட்ஸ்" தான்
ஊர்த்துவ தாண்டவமாகும்.
முள்ளிலே போட்ட முடிச்சு
மலரிலே அவிழ்ந்து போகும்.
எத்தனை கைகள் பார்.
எத்தனை கால்கள் பார்.
அவிர்சடை விரிந்ததென்றால்
ஆரக்கிள் என்று சொல்வார்.
உடுக்கைகள் ஒலித்து விட்டால்
யூனிக்ஸ் சிஸ்டம் தெரியும்.
அண்டமே அதிரவைக்கும்
அண்ட்ராய்டு என்னுள் உண்டு
பிக்பேங்க் வெடிக்கும் முன்னே
திரியினை பற்ற வைக்கும்
திரி சூலம் என்னிடம் தான்.
அமெரிக்கர் தெரிந்து கொண்டார்
அதனால் இங்கு வந்தேன்.
ஹிக்ஸ் போஸான் சூத்திரங்கள்
தீச்சுடர் ஏந்துமென் கையில்
தெரிந்ததென சொல்லுகின்றார்.
சாம்பலில் சிறகடிக்கும்
பறவையூர் ஃபீனிக்ஸ் கூட‌
திருநீறு தத்துவம் தான்
தெளிவுகொள் நன்றே இன்று."
இது சிவன் கிண்டிய‌
திருவாதிரைக்"களி"

==============================================================
24 மார்ச் 2014 ல் எழுதியது.

புதன், 1 ஜனவரி, 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

========================================ருத்ரா

இதோ ஒரு  புத்தாண்டு!


எப்போதும்

அந்த நள்ளிரவுக்கோளம்

உடைந்து

கல கலவென்று

சிரிப்புகளை  சிதறுவது தான்

இது.


வெளிச்சத்தை

ஊசி மழை ஆக்கி

இந்த இருட்டைக் கந்தலாக்கிக்கொண்டு

கண் விழிப்பது தான்

இது.


காலண்டர் தாள்களில் எல்லாம்

கன்னிக்குடம் உடைத்து

அந்த காலக்குழவியை

நம் கையில் ஏந்தக்கொடுப்பது தான்

இது.


அந்த திருவேங்கடத்தான்

"போதும்

அந்த ஸ்லோகங்களை

நிறுத்திக்கொள்
.
"ஹேப்பி நியூ இயர்" சொல்"

என்கின்றானே.

அதனால் தானே

லட்சம் லட்சமாய்

கியூக்களில் நிற்கிறார்கள்

இவர்கள்

"ஜனவரி ஒன்றாம் தேதியை"

தரிசனம் செய்ய!



ஆங்கிலம் என்ன?

தமிழ் என்ன?

சமஸ்கிருதம் என்ன?

எல்லா மொழியும்

கலந்து பிசைந்த

மன மத்தாப்புகளின்

நம்பிக்கை ஒளிப்பிழம்பு

இது.


தேவகுமாரன் தவழ்ந்து வந்து தந்த‌

புதிய சமாதானம்

இது.



சிலுவைகளும்

துப்பாக்கிக்குண்டுகளும் கூட‌

வருடங்களின் பிழம்பு

எனும் செங்கடல் பிளந்து தந்து வந்த‌

அந்த ஒளிக்கீற்று முன்

சுருண்டு தான் கிடக்கின்றன.



விண்ணை இடிக்க

கோவில் எழுப்பும்

வெறி மிகுந்த கடப்பாரைகளை

ஏந்துபவனே.


இந்த மனிதக்கபாலங்களை

அடித்து நொறுக்கியா

உன் கட்டுமானத்தை

தொடங்கப்போகிறாய் ?



பார்!

உன் கைகள் எல்லாம்

ரத்தம்.

ஆம்.அந்த‌

ராமன்களின் இதயம்

கூழான இத்தச்சேறு அது.


உனக்கும்

எங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


===============================================