செவ்வாய், 31 மார்ச், 2020

ஒன்றுபோல் காட்டி...

ஒன்றுபோல் காட்டி...
============================================================ருத்ரா

நம் மன அழுத்தங்களை நீவி விடுவதற்கு ஒரு வழி இருக்கிறது.
அது நம் அறிவின் நுட்பத்தை சீண்டி விளையாடும் விளையாட்டே அது.
நமக்கு அறிவு இருக்க்கிறதா? அதுவும் நுட்பமான பரிமாணங்களில் நம்மிடம்
இயைந்து உள்ளதா?
இதற்கு நம் முன்னோர்கள் விளையாடும் விளையாட்டு ஏதாவது 
ஒரு தடித்த புத்தகத்தில் இருக்கும் அதைவிட தடிமனான சொற்கூட்டங்களில்
புகுந்து கொண்டு வாழ்க்கையின் உயிரின் உட்பொருள் தேடுகிறேன் என்று
அதற்குள் கண்ணாமூச்சி ஆடுவது தான்.கண்ணாமூச்சி விளையாட குறைந்தது இரண்டு பேர் வேண்டும்.ஒளிந்து கொள்ள ஒருவன்.அவனை தேடிக்கொண்டிருப்பவன் ஒருவன். இதற்கு அவர்கள் கையாண்ட வழியே
 
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இதற்கு இம்மை மறுமை ஆத்மா மரணம் மரணத்துக்குப்பின்னும் வாழும் ஆவி வாழ்க்கை என்றெல்லாம் சோழி குலுக்கிப்போட்டுக்கொண்டு அதிலிருந்து சில சிந்தனைப்பாடுகளை சித்தாந்தங்களாக்கிக்கொண்டு அமிழ்ந்து கிடக்கவேண்டும்.தற்கால அறிவு முறை கேள்வி பதில்களாலும் செயல்முறையில் நிகழ்தன்மை உடையதாகவும் இருக்கும் ஒரு பாதையில் தான் பயணிக்கிறது.அதில் மனித சமுதாயம் பல வகைகளில் ஏற்றம் பெற்றிருக்கிறது.இது அறிவியல் எனப்படுகிறது.ஏன் முட்டாள்தனங்களைக் கூட அறிவியல் தன் அறிவியல் கண்கொண்டு தான் பார்க்கிறது. அப்படி ஒரு பரிணாமப்பாதையில் மனிதன் இன்னும் ஒரு விளையாட்டுப்பொம்மையை
கையில் ஏந்திக்கொண்டு அந்த பொம்மையின் அதாவது பொய்மையின் மெய்மையை நோக்கி பயணம் போய்க்கொண்டு தான் இருக்கிறான்.அந்த பொம்மையே இங்கு கடவுள் என்பது. மனிதன் தொட்டில் குழந்தையாய் இருக்கையில் ஒரு "கிலு கிலுப்பையில்"அமைதி கொள்கிறான்.
ஆனால் வாழ்க்கையின் அந்தி வேளையில் ஒரு சாய்வு நாற்காலியில் கிடந்து தவிக்கையில்  அந்த பொம்மையே அவன் உற்ற தோழன் ஆகிறது.மன அழுத்தம் அவனை ஒரு ஆழத்துள் கொண்டுபோய் அமிழ்த்துகிறது.

அது என்ன?
அது எங்கு இருக்கிறது?
இது தான் அதுவா?
அது தான் இதுவா?
பின் 
எது தான் அது?
அது இருக்கிறது என்பவன்
ஆத்திகன்.
அது எதுவாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்.
அது 
இது என்று உன்னால்
சொல்லமுடியாத போது
அது எதுவும் இல்லை
அது அதுவும் இல்லை
அது இதுவும் இல்லை
அது இல்லவே இல்லை 
என்று 
விளிம்புக்கு வந்து விடுகிறாயே!
அது இல்லை என்று 
சொல்லிவிட்டு
அது ஏன் இல்லை என்று வேண்டுமானால்
ஆராய்ச்சி செய்து கொண்டிறேன்.
இருக்கிறது 
இல்லை 
என்ற இரு முனைகளும்
எதிர் எதிராய் வந்து உன்னைச்சந்தித்து
உனக்கு போக்குக்காட்டலாம்.
நீ போக்கு காட்டப்படுகிறாய்
என்பது தான் மெய்.
மற்றதெல்லாம் பொய்.
சிந்தனையை அடித்து அடித்து
துவைத்து இறுக்கிப்பிழிந்து
காயப்போட்டு விரித்ததில்
ஓட்டை ஒட்டையாய் கந்தல்கள்
தெரிந்தன.
கணித இயலில் அதற்கு
டோபாலஜி என்று பெயர்.
"இடநிலை இயல்"
நீ எங்கே இருக்கிறாய்
என்று 
உன் தேசப்படத்தை அது
விரித்துக்காட்டுகிறது.
அது என்ன?
புத்தகத்தை விரித்தேன்.
என் அருகே
கடிகாரமுட்கள் ஒரு
திருக்குறள் சொன்னது.

"நாள் என‌ ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் 
வாள் அது உணர்வார்பெறின்"

============================================================



கொரோனா(6)

`கொரோனா(6)
=========================================ருத்ரா

குண்டுகள் வீசாமல்
சித்தாந்தங்களைக்கொண்டு
மோதிக்கொள்ளாமல்
ஒரு மூன்றாம் உலகப்போர்
முற்றிக்கொண்டிருக்கிறது.
தொற்றிக்கொண்டிருக்கும்
கண்ணுக்குத் தெரியாத‌
அந்த நுண்ணுயிரி
உலக வளமையை சிதைக்கும்
புண்ணுயிரியாய்
இந்த மண்ணையே 
தின்று தீர்க்கத்துடிக்கிறது.
எவன் சொல்லிக்கொடுத்தானோ
இந்த அசுரனுக்கு
பிராணாயாமத்தை?
நம் நுரையீரல்களில்
பத்மாசனம் போட்டுக்கொண்டு
நம் சரித்திரத்தையெல்லாம்
சவப்பெட்டிக்குள் அடைக்கப்பார்க்கிறான்
அவன்.
பங்கு மார்க்கெட்டில்
இந்த பூகோளத்தையே
பெரும் லாபங்களின்
வரைபடமாய் காட்டிக்கொண்டிருந்த‌
நம் தாறு மாறான பொருளாதாரம்
தடம் புரண்டு அல்லவா கிடக்கிறது.
நம்மோடு
ஹைடு அண்ட் சீக் விளையாடும்
அந்த அரக்கச்சிறுவனுக்குப் பயந்து
நம் வீடுகளில் நாம் 
சௌகரியமான இருட்டு மூலைகள்
தேடி அல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறோம்.
கொரோனா எனும் பெயர்
பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டு விட்டது.
அது இறுமாப்போடு சொல்கிறது.
உங்கள் சுவாசங்களை நிறுத்தி வைத்து
அந்த குண்டலினியின் அணுகுண்டு ஆற்றலை
என்னோடு சோதித்துப்பாருங்கள் என்று!
எங்கோ ஒரு நாட்டில் 
"ஓம்"என்று கூட 
சிகிச்சை செய்து பார்ப்பதாய்
தொலைக்காட்சிகள் காட்டுகின்றனவே.
எங்கே போனது நம் ஜெனடிக் இஞ்சினியரிங் திறமைகள்?
நாம் 
நம் ஆய்வுக்கூடங்களில்
இந்த வைரஸ்களைக்கொண்டு
வினாடிக்கு பில்லியன் டாலர்களை
லாபமாக மாற்ற முடியுமா?
என்று தான் 
நம் விஞ்ஞானங்களையெல்லாம்
கொட்டிக்கவிழ்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதில் ஒன்று
நம்மையே விழுங்கி
மொத்த வியாபாரம் செய்ய வந்து விட்டது!
இந்த அவலத்தைப்பாருங்கள்!
செவ்வாய்க்கோளில்
பாறைகளை சுரண்டி சுரங்கம்
வைக்கலாமா என்று
நம் தொழில் நுட்பம்
எங்கோ ஒரு உயரத்துக்கு
சென்ற பின்பும்
"நமக்குத் தேவையான முக கவசங்களைக்கூட"
நம்மால் உற்பத்தி செய்ய முடியாமல் அல்லவா
வீழ்ந்து கிடக்கிறோம்.
"யுரேனஸ் நெப்ட்யூன்" களின் 
முதுகை சொறிந்து விட்டு
அவற்றின் முகங்களை எதிர் நோக்கும்
நமக்கு
"டெஸ்ட் கிட்டு"கள் கூட  ஒரு 
எட்டாத தூரம் ஆகி விட்டது!
நம் பரிணாம உயர்ச்சிக்குள்
எப்படி இப்படி ஒரு வீழ்ச்சி?
சமூக நேயத்தை கழற்றி வைத்து விட்டு
எந்த விஞ்ஞானமும்
இங்கே சுவாசிக்க முடியாது 
என்பதை
அதோ "லக லக லக.." என்று
வலிப்புக்காட்டி சிரித்து
சொல்லிக்கொண்டு
ஓடுகிறதே அந்த கொரோனா!
இது தான்
இந்த மூன்றாம் உலகப்போரின்
கனமான தொரு மைல் கல்.
இதுவே
நம் மீது விழுந்துகொண்டிருக்கும்
ஒரு விண்கல்.

================================================

ஞாயிறு, 29 மார்ச், 2020

அஞ்சி அஞ்சி சாவார்

அஞ்சி அஞ்சி சாவார்
==================================ருத்ரா

அவனின்றி ஓரணுவும் அசையாது
என்று சொல்லிவிட்டு
கொரோனாவுக்கு மட்டும்
இப்போது மனிதன் மீது
பழி போடுவது என்ன நியாயம்?
வைரஸ் என்றால்
உயிரற்ற பிண்டம் என்றும்
அதற்குள்ளும் 
இருப்பது குவாண்டம் எனும்
ப்ரோபபலிடி என்றும்
அதில்
உயிர் இருக்கும் ஆனால் இருக்காது
என்றும்
ஆராய்ச்சிக்கட்டுரைகளை
அடுக்கிக்கொண்டிருக்கிறான்
விஞ்ஞான மனிதன்.
லட்சக்கணக்கில் சாவு
எனும் மரண மழை தான்
மனிதனை 
அஞ்சி அஞ்சி சாகச்செய்து
கடவுள் பக்கம் தள்ளிவிடுகிறது.
பாவம் 
என் செய்வது?
மரணத்தீட்டு எனும்
மடி வந்து தாக்காமல் இருக்க‌
கடவுளுக்கும் கூட இங்கே
ஊரடங்கு தான்.
கனத்த இருட்டுகளின் பூட்டுகளுக்கிடையே
இந்த யாகமும் பூஜையும்
என்ன சாவி வைத்திருக்கிறது
நம் இருட்டை திறந்துபார்க்க?
விஞ்ஞானம் தன் விரலில்
இரு சாவிகளை சுழற்றிக்கொண்டிருக்கிறது.
ஆம்.
அவை 
"டார்க் மேட்டரும் டார்க் எனர்ஜியும்"

========================================



சனி, 28 மார்ச், 2020

கொரோனா (கார்ட்டூன்)

கொரோனா  (கார்ட்டூன்)
=======================================ருத்ரா




நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.!

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.!
==================================================ருத்ரா


ரிபோ நியூக்ளிக் ஆசிட்
சங்கிலி
பற்றி பாடம் நடத்தி
அதன் படம் வரைந்து
பாகங்கள் குறித்து
பரீட்சையை அந்த‌
சுடுகாட்டு சிதையில்
வைத்திருக்கும்
ஓ! கண்ணுக்குத் தெரியாத‌
கண்டிப்பான‌
ஆசிரியனே!
எங்களைப்பார்த்து
நீயும் கட்டாயம் ஒரு
பாடம் படித்துக்கொள்ளவேண்டும்.
உனக்காக‌
ஊரடங்கு நடத்தி
பரீட்சைகளையும் கூட‌
ரத்து செய்திருக்கிறோமே!
நீயும்
அந்த மரண பரீட்சையை
ரத்து செய்து விடு.
மனித உயிர்களுள் நுழைந்து
மனிதனாக வாழ்ந்து பாரேன்.
இந்த நுரையீரல் பூங்கொத்துகளை
நட்போடு தான்
நாங்கள் உனக்கு நீட்டுகிறோம்
அதை தின்று தீர்க்கவா
இப்படி புறப்பட்டு வந்தாய்?
எங்கள் கோவில்கள் கூட‌
அடைத்துக்கொண்டு விட்டன.
எங்கள் கடவுள்களிடம் உன்
பாச்சா பலிக்கும் என்று நினைக்காதே.
முடிந்தால்
அவர்களின் கல்லால் ஆன‌
இதயத்தையும்
நுரையீரலையும்
தின்று பாரேன்.
மனிதர்களை கொத்து கொத்து ஆக‌
நீ தின்பதை பார்த்தும்
அந்தக்கல் கல்லாகவே தானே
இருக்கிறது.
எங்கள் அறிவும் நம்பிக்கையும்
முயற்சியும்
தீரம் காட்டவே நீ
வீரம் காட்டுகிறாயா?
எங்கள் தோல்வி உன் வெற்றி அல்ல.
எங்கள் ஆராய்ச்சியில்
உன் முள் முகம் தொலைந்து போகும்.
உன் பூமுகம்
ஒரு புதியதோர் வாசல் காட்டும்.
முக கவசம் வீசியெறி
வா
அன்போடு கை  குலுக்கு!
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.!

=================================================






வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா (5)

கொரோனா (5)
===============================================ருத்ரா


நீ என்னை பார்த்ததை 
நானும் பார்த்தேன்.
நான் பார்த்ததற்கு
பதிலாக 
மீண்டும் நீ
என்னைப் பார்ப்பாய் 
என்று 
தினமும் பார்த்துக்கொண்டே தான்
இருக்கிறேன்.
காதல் 
அப்படியொரு வைரஸா என்ன?
பார்க்க மறுக்கும் ஒரு பாசாங்கில்
அலட்சியம் செய்வது போல் 
ஆனால் அதை விட ஒரு
கூர்மையான‌
கண்ணுக்குள் தெரியாத ஒரு
பார்வையாக அல்லவா ஆக்கி
உன் கண்களால் 
சோப்பு போட்டு சோப்பு போட்டு 
என் கண்களை 
கழுவிக்கொண்டே  இருக்கிறாய்!

=============================================================









================================================

கொரோனா (4)

கொரோனா (4)


உன் பரிணாமம் அறி.
=========================================ருத்ரா


கற்பனைக்காதலியுடன்
இச் இச் என்று
மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும்
உன் டிக் டாக் காட்சிகள்
வைரல் ஆகி
அது பில்லியனைத்தொட்டது
என்று
நீ புளகாங்கிதம் கொண்டபோது
உன் அயல் நாட்டு நண்பன் 
உனக்கு கொடுத்த தொற்றால்
நீ 
அந்த முள்ளு உருண்டை வைரஸ்
மூலம் 
உன் அந்திச்சிவப்பை 
நீ முத்தமிட்டு
மறைந்து விடுவாயோ
என்ற நிஜம்
இப்போது
ரத்தம் கொப்புளித்துக்கொண்டு
நிற்கிறதே!
என் செய்வது?
செல் பேசிகளில்
செல்லரித்துப்போய் விடுமோ
நம் 
மண்ணின் கனவுகள்?
இலவசமாய் கிடைக்கின்ற‌
ஜிபிக்களில்.. டேட்டாக்களில்..
நம் மனித ஆளுமைக்கு
நம் இலக்கிய தாகங்களுக்கு
நம் சமூக கடமைகளுக்கு
கல்லறை கட்டுவதையே 
குறிக்கோளாய் கொண்ட‌
கார்ப்பரேட் கான்சர் வியாபாரத்தில்
இந்த வைரஸ் விளையாட்டும்
அந்த "சா டூத்துடு" பங்கு மூலதன‌
சுழல்களும் ஒரு காரணியோ?
இளைய யுகமே!
உன் வலிமை 
உன் காலடியிலேயே
பொய் நிழலாய் 
படுத்துக்கிடக்கிறது.
உன் சீற்றமும் புயலும்
அவர்களின்
காசுகள் ஓலமிட்டு அழைக்கும்
ஒரு கொட்டாங்கச்சிப்பிரளயத்தில்
அலை அடிக்க‌க்கத்துடிக்கிறது.
இளம்புயலே!
உன் பரிமாணம் விரி.
உன் பரிணாமம் அறி.

================================================


செவ்வாய், 24 மார்ச், 2020

கொரோனா (3)

கொரோனா (3)
========================================ருத்ரா


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி...
மூச்
ஒலிபெருக்கிகளை 
அடக்கி வையுங்கள்.
ஊர் அடங்க 
உலகம் ஒடுங்க‌
அந்த ரோஜாப்பூ ஆர்.என்.ஏ
முட்களால் முகம் சிலிர்க்க‌
சப்பரத்தில் 
பவனி வந்து கொண்டிருக்கிறது.
மரணங்களால் 
தோரணம் கட்டி 
வேக வேகமாக வருகிறது.
முகமூடிகளில் 
மனிதக்குஞ்சுகள்
முணு முணுக்கின்றன.
உயிரியின் 
சிற்றறைக்குள் இருந்துகொண்டு
உலகையே சிறைக்குள் பூட்டி
அது
தனக்குத்தானே
விஷ்ணு சஹஸ்நாமம்
சொல்லிக்கொண்டிருக்கிறது.
உயிரற்ற நுண் பிண்டம்
உயிர்ச்சுநாமியை
உள்ளிருந்து இயக்கி
உயிர்களை 
தின்று
காக்டெயில் பார்ட்டியில்
களித்துத்திளைக்கிறது.
கம்யூனிசமும் தனியுடைமையும்
சமன்பாடு காண‌
ஏதோ ஒரு சூத்திரம் எழுதப்படுகிறது.
கடவுளைக்கொண்டு
பிய்த்து ஒடித்து
நாத்திக "பாஷ்யம்"
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நம் ஜெனடிக் இஞ்சினியரிங் எல்லாம்
காசு மழை கொட்ட‌
கார்ப்பரேட் வயல்களில்
அடிமை விவசாயம் செய்யும்போது
கிடைத்த‌
இடைவேளையில் வந்த‌
கொடூர 
சித்திரம் இது.
கோவில்கள் கூட‌
இதன் கீதங்களுக்கு
சிவப்புக்கம்பளம் விரித்து
ஆத்மீகத்துக்கு
மரண அங்காடி வைத்து
புலம்பத்தொடங்கி விட்டன.
அந்த ஆர்.என்.ஏ வின்
மூளை முடங்கலுக்குள்
அறிவின் கண்ணி முடிச்சுக்குள்
இன்னும் ஒரு விடியல்
துளிர்த்துக்கொண்டு தான்
இருக்கிறது.
வியாபாரம் தொடங்கிவிட்டது.
யாருக்கு வேண்டும்
உங்கள் டாலர்களும் ரூபாய்களும்?
சமூக மனிதம்
ஒன்றை
உயிர்ப்போடு
கட்டித்தர முடியுமா?
என்ற கேள்வியை
அது நம் முன்
வீசிக்கொண்டு ஓடுகிறது.
எங்கே
நம் சாதிகள் மதங்கள்?
எங்கே 
நம் ஆதிக்க அகங்காரங்கள்?
இந்த ஊரடங்கு
ஒரு வெறுமையான‌
கோயிலுக்குள் நம்மை
இட்டுச்செல்கிறது.
கடவுள்களின் பிணக்குவியலில்
ஒரு உயிர்த்தீயின் வெளிச்சம்
ஒரு "எதிர் பரிணாமக்கோட்பாட்டை"
அங்கே போதிக்கிறது.
இயற்கையே மனிதம்.
ஒன்றைத்தின்று ஒன்றை படைக்கும்
விஞ்ஞானம் இது.
உங்கள் வர்ணவெளிச்சங்களில்
இருக்கும்
இருட்டு வர்ணமே
உங்கள் சாவி.
டார்க் எனர்ஜி டார்க் மேட்டர்
என்று எப்படி வேண்டுமானலும்
அழைத்துக்கொள்ளுங்கள்.
திறவுங்கள் 
பிரபஞ்சங்களின்
சாளரங்கள் திறந்துகொள்ளட்டும்.

================================================






கொரோனா -2

கொரோனா -2
========================================ருத்ரா


உச்சரிக்க
அழகான பெயர் !
உன் சிரிப்பில்
மில்லியன் ரோஜாக்களை
உதிர்க்கிறாய்
என்றிருந்தேன்.
அது என்ன?
அத்தனையும் முட்களா?
பூக்களில் இதழ்களே
இல்லையே!
என்று
முகர்ந்து பார்க்க
முகம்    தொடுவதற்குள்
மூச்சைப் பறித்துக்கொண்டாயே?

==============================================

வெள்ளி, 20 மார்ச், 2020

இவர் (ரஜனி) வரல்லேன்னு யார் அழுதா?

இவர் (ரஜனி) வரல்லேன்னு யார் அழுதா?
=========================================ருத்ரா


விண்குழல் காணொளிகளில்
யாரோ ஒருவர் 
இப்படி சொல்லியிருக்கிறார்.
அப்படி ஒன்றும் இல்லையே!
நான் முதலமைச்சராக வரமாட்டேன்
என்று அவர் சொன்னவுடன்
ரசிக வெள்ளம் 
சோகத்தில் கண்ணீர் வெள்ளம் ஆனதே!
அது ஏன்?
அது எப்படி?
இது 
"டாய்ஸ்டோரி" எத்தனையாவது
என்று தெரியவில்லை.
அந்த குண்டு பொம்மையிலிருந்து
அந்த பொட்டெட்டோ முகம் 
தாடி மீசை முண்டைக்கண்கள் உள்ளிட்டு `
அந்த டைனொசார் பொம்மை வரைக்கும்
அழுது தீர்த்தன.
அப்புறம் அந்த‌
சூப்பர்ஸ்டார் கௌபாய் பொம்மை
குதிரையை மாத்திடலாமா?
காட்டை மாத்திடலாமா?
அப்புறம் அந்த‌
குரங்கு நரி கரடி யானை
பொம்மைகளுக்கு எல்லாம்
மற்றும்
சிங்கம் புலி முதலைகளுக்கு எல்லாம்
"ஆன்மீக" காத்து அடைத்து
கும்மென்று
ஓட்டுப்பெட்டியைச்சுத்தி
குலை குலையாய் முந்திரிக்காய்
விளையாட்டு ஆட வைக்கலாமா?
என்று
அந்த பெரிய மண்டையைச்சொறிந்து சொறிந்து
யோசிக்கிறது!
காட்டுக்குள்ளே திருவிழா.
கச்சா பிலிமுக்குள்
சுநாமி சுநாமி சுநாமி!
எல்லோரும் 
ஓடித்தப்பித்துக்கொள்ளுங்கள்.

================================================

திங்கள், 16 மார்ச், 2020

ரஜினி எனும் ஆனை

ரஜினி எனும் ஆனை
=================================================ருத்ரா

இதோ இந்த‌
பட்டத்து யானை
தும்பிக்கையில் மாலையுடன்
நமக்கு
ஒரு அரசரைத்தேர்ந்தெடுக்க‌
வீதியில் இறங்கி விட்டது.
ஊடகங்களின் வெங்கலக்கடைகளில்
பண்ட பாத்திரங்கள்
கல கலக்கத்தொடங்கி விட்டடன.
இதோ இங்கு ஒரு நல்லவர்.
அதோ அங்கு ஒரு நல்லவர்.
ரஜினி மிகக்கவனமாக‌
மனித சம நீதியை
உரத்து முழங்கும்
திராவிட நல்லாட்சிக்கு
சமாதி கட்டும் வேலைக்கு
எங்கோ
ஒரு தூரத்தில் காமெராவை
நிறுத்தி வைத்துக்கொண்டு
படப்பிடிப்புகளைத் துவங்கி விட்டார்.
போராட்டம் நாட்டை
சுடுகாடு ஆக்கும் என்று
கர்ஜித்தவர்
இன்று
புரட்சிக்கு
ஒரு புள்ளியைத்துவக்கி விட்டதாக‌
அள்ளி விட்டுக்கொண்டிடுக்கிறார்.
இப்போது பொருளாதாரம்
ஒரு சுடுகாட்டில்
சிதைமீது மல்லாந்து கிடக்கிறது
என்ற காட்சி
அந்த "மதம் பிடித்த" ஆனைக்கு
ஏன் தெரியவில்லை?
கொரானாவைக்கூட‌
ஒரு "சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்வதாய்"
விளம்பரத்தட்டிகள் வைத்து
ஒரு பீதியின் மூலம்
ஜனநாயகத்தின் "ஆத்மா"வுக்கே
முகக்கவசம் மாட்டிவிடும்
நடவடிக்கைகள்
அவருக்கு உறுத்துதல்
ஏற்படுத்த வில்லையே?
மற்ற மதத்தில்
ஒரு ஆயிரம் பேர்களை
தாக்க வேண்டும் என்றால்
நம் மதத்தின்
ஒன்றிரண்டு
பேர்கள்  மீது
தாக்குதல் நடத்து
என்பதே
மத வெறிக்கட்சிகளின்
சித்தாந்தம்.
இதற்கு பெட்ரோல் தான்
பக்தியும் பஜனையும்.
ரஜினி அவர்களே!
இந்த ஆன்மீகத்தைக்கொண்டு
தொடுத்த மாலையைத் தான்
உங்கள் தும்பிக்கையில் வைத்து
சுழற்றிக்கொண்டிருக்கிறீர்களா?
மக்களின் கபாலங்களை
குவிக்கப்போகும்
அந்த சுநாமிகளுக்குத்தான்
மாலை சூட்ட‌
களம் இறங்கியிருக்கிறீர்களா?
உங்கள் "ஊழல்" இலக்கணத்தில்
வர்ணம் ஏற்றாத‌
நான்கு வர்ண சாதி மத‌ நீதிகள்
இங்கு இருக்கின்றனவா?
தூய்மை ஆட்சியில் தான்
வங்கி இருப்புகளை எல்லாம்
"சுத்தமாக" துடைத்துக்கொண்டு ஓடிய‌
திருடர்கள் பெருகிப்போனார்கள்.
ரஜினி அவர்களே
நீங்கள் முதலமைச்சர் ஆவதற்கு
ஆசை காட்டாமல் இருக்கலாம்.
மக்கள் செல்வங்களை
விழுங்கும் முதலைகளின்
நீலிக்கண்ணீர் மீது படகு விடும்
சினிமா செட்டிங்கை வைத்துக்கொண்டு
பிலிம் காட்டுவதில்
எந்த நோக்கமும் நிறைவேறப்போவதில்லை.
இருந்த போதும்
உண்மையின் உள் வெப்பம்
ஏதாவது ஒரு கதிர்  வீச்சை
உங்கள் முயற்சிகள்
வெளிப்படுத்தும் என்றால்
அந்த இயக்கம்
வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்!


========================================================================

சனி, 14 மார்ச், 2020

மகளிர் தினம்

மகளிர் தினம்
=========================================ருத்ரா

பெண்ணே!
ஒரு நாள் போதுமா?
பெண்ணே!
உன் பெருமை போற்ற!
சிந்தனையும் அறிவும்
கூடவே
இந்த உலக உயிர்த்தொகையை
செழிக்க வைக்கும் 
கருவூலமாகவும்
இருக்கும் உனக்கு
ஒரு நாள் போதுமா?
பெண்ணே!
தெய்வமே நீதான்
என்று
ஸ்லோகம் குவித்தவர்கள்
உன் படைப்புத்தன்மையையே
தீட்டு
என்று கொச்சைப்படுத்தும்
குறுமதியாளார்களைக் கண்டு
சீற்றம் கொண்ட‌
ஆழிப்பேரலைகள் 
என்று அலைவிரிக்கின்றனவோ
அன்று தான்
இது மகளிர் தினமாக மட்டும் அல்ல‌
ஆண் பெண் இரு பாலருக்குமே
ஒரு புதிய யுகத்தின்
பொது விழாவாக‌
மலர்ச்சியுறும்.
அது வரை இந்த காகிததோரணங்கள்
குப்பை குவிக்கட்டும்.
இதில் யாருக்கும் வெட்கமில்லை.

================================================




கொரோனா

கொரோனா
================================================ருத்ரா

வைரலாகப் பரவுகிறது
உன் "ஸ்டேடஸ்".
கோடிக்கணக்கில் லைக்குகள்.
விண்ணின் கூரையிலிருந்து]
கூவுகிறாய்.
ஆனால் யாரோ
போட்ட ஸ்டேட்டஸ் இது.
டி.என்.ஏ அல்லது
ஆர்.என்.ஏ
என்று ஒரு புனைபெயரில்
போட்டாலும் போட்டான்
அது வைரலுக்கும் வைரலாக‌
பரவி
உலகத்தையே சுருட்டி மடக்கி
உட்காரவைத்து விட்டதே.
கணினி அறிவை
உள்ளங்கையில் உருட்டிவைத்துக்கொண்டு
சகுனிகளாய் மாறி
சொக்கட்டான் உருட்டினாயே!
விஞ்ஞானம் இன்னும்
விளங்கவில்லையே உனக்கு?
சமுதாய மானிடம் என்பது
ஒரு சமுதாய சமதர்ம இதயத்தை
இயக்கவைப்பது?
அந்த ஆர்.என்.ஏ
அம்பு தொடுத்து விட்டது.
வெறும் மயிர்த்துளை காமிராக்களும் க்ராஃபிக்ஸ்களுமாய்
மற்றும் "கில்லிங் ஸ்பிரிட்டை"வளர்க்கும்
கேம்ஸ் கிட்டுகளுமாய்
இந்த அறிவியல் களஞ்சியத்தை
இனியாவது
குப்பை மேடு ஆக்கும்
நோயிலிருந்து நீ விடுபடும் வரை
ப்ரோடோபிளாசம் எனும் உயிர் எழுத்து இல்லாமல்
சைடோபிளாஸம் எனும் வெற்றெழுத்தை
வைத்துக்கொண்டு
உயிர் போலவும்
உயிரற்றது போலவும்
வியூகம் கொண்ட இது
உன்னை துரத்திக்கொண்டிருக்கிறதே.
இன்னும் கார்ப்பரேட் பனிப்போரில்
நீ
காணாமல் போய்விடாதே!
மனிதா!
அச்சம் தவிர்!
எழுச்சி கொள்!
உன் உயிரியல் வேதியல்
துருப்புச்சீட்டை
இறக்கிவிடு.
கடவுளும் சைத்தானும்
விளையாடும் ரம்மி விளையாட்டு இது!
எச்சரிக்கை கொள்!
கடவுளையே நான் கடவுள் இல்லை
என்று
இந்த விளையாட்டிலிருந்து
விலக வை.
மூடத்தனம் எனும் சைத்தானை
முடக்கிப்போடு.
உன் பரிணாமம் பல‌
கொள்ளை நோய்களிலிருந்து
மீண்டு
மலர்ந்து வந்திருக்கிறது.
உன் அறிவு மழிக்கப்பட விடாமல்
கூர்மை கொள்.
நேர்மை கொள்.
கடமை ஆற்று
மடமைகளைக்கடந்த‌
மகத்தான மனிதனாக!

==============================================================




காதலின் ஃபாசில்கள்







காதலின் ஃபாசில்கள்
=========================================ருத்ரா

இளம் வயது எனும்
மின்னல் காட்டில
ஒளியின் சிறகுகள
ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும்
இருட்டு எனும் தேன்.
அது காதல்.
அந்த வெளிச்சம் மட்டுமே
இருட்டு போல் தோன்றி மயக்கும்.
குகை மனிதன்
முழு மனிதன் ஆகும்
பல்கலைக்கழகம் அது.
சிக்கி முக்கிக் கல்களிலும்
அவள் சிரிப்பே
சுடர்ப்பொறிகளாய்
கருவுற்று தித்திக்கும்.
பரிணாம வளர்ச்சி எனும்
அந்த தடிமனான புத்தகத்தில்
வெள்ளி மீன் போன்ற‌
சிறு பூச்சிகளின் அந்த 
ஃபாசில்களில்
முதல் தாஜ்மகால் கட்டப்பட்டு விட்டது.
மில்லியன்கள் ஆண்டுகளுக்கும் முன்
விதைக்கப்பட்ட முத்தங்களின்
எலும்புக்கூடுகளைத் தேடித் தானே
உன் 
இத்தனைக்குத்தாட்டங்களும்?

=====================================================================

வியாழன், 12 மார்ச், 2020

எங்கள் ரஜினியே!

எங்கள் ரஜினியே!
=========================================ருத்ரா


மன்னவனில் 
மன்னவனாக வந்த‌
மன்னனே எங்கள்
மன்னனாக வருவான்
என்று
வாயில் எச்சில் ஊற 
விசில் அடித்து
முழக்கமிட காத்திருந்தோமே
தலிவ்வா!
ஏன் இந்த தடுமாற்றம்?
எங்கள்
ஜிகினா தேசத்து
எழுச்சி நாயகனே நீதானே!
இன்னுமொரு எழுச்சி வந்து
அலையடித்து நடித்துக்கொடுக்க‌
கால்ஷீட் கேட்டிருக்கிறாயே
இது நியாயமா தலிவ்வா?
இங்கு  வந்தா நீ முதலமைச்சர்
ஆக வேண்டுமென்கிறாய்?
கன்னடத்துக்கு போ
மராட்டியத்துக்கு போ
என்று 
வாய் கொழுத்தவர்கள் சொன்னார்கள்
என்பதற்கா
நீ இப்படி விட்டுக்கொடுக்கிறாய்?

தமிழன்..தமிழன்னு கூவுறாங்க
இவங்க.
தமிழுக்கு எதிரியாய் எக்காளம் 
ஊதுவதே இவங்க பொழப்பு.
வீரம் கொப்பளிக்க‌
நெஞ்சுக்குள்ள‌
மஞ்சாச்சோறுண்ணு ஒண்ணு இருக்கு.
அதெல்லாம் இவங்ககிட்ட இல்லவே இல்ல.
இருந்துதுண்ணா
எப்பவோ 
என்னென்னவோ 
நடந்திருக்கும்.
பெரிசா..வரவேற்கிறாங்களாம்.

ஆக்கங்கெட்ட அறிக்கைகள் அவை.
முத்து பார்த்தோமே
அருணாசலம் பார்த்தோமே
பணத்தின் வாடையே உனக்கு
அலர்ஜியாகி 
அறம் வளர்த்த நாயகன் அல்லவா நீ!
நீ ஒரு தடவை சொன்னால்
நூறு தடவை என்று ஒரு பேச்சுக்குத்தானே
சொன்னாய்.
கோடி கோடி தடவை அல்லவா
பணமழை இந்த பூமியில் கொட்டும்.
நம் பொருளாதாரம்
வல்லரசுகளுக்குக் கூட எட்டாத உயரம்
உயர்ந்திடுமே!
போதும் தலிவ்வா!
எங்களை சோதித்தது.
சும்மாச்சும் விளையாட்டுக்குத்தானே
இதைச்சொன்னாய்
அடுத்தவர் முதலமைச்சராய் 
வருவார் என்று?
எங்களுக்கு எதுவுமே வேண்டாம் தலிவ்வ்வா!
இந்த சினிமா இருட்டே போதும்.
உன் கச்சா பிலிம் சுருளில் 
நெளிந்து கொண்டிருக்கும் 
புழுக்கள் நாங்கள்!
போதும் போதும் என்ற அளவுக்கு
பஞ்ச் டைலாக் வைத்து
கோட்டை கட்டி விட்டாய்.
இந்தக் கோட்டை 
இனி உனது கோட்டையே தான்.
அதிசய மனிதனில் அந்த‌
எமனோடு
"பெஜாஆஆரா..ப்போச்ச்சு"
என்ற காமெடி செய்வாயே
அது போல் எடுத்துக்கொள்கிறோம்.
அந்த வசனத்தை எல்லாம் 
அழித்து விடு போதும்.
எங்கள் கனவையெல்லாம்
உருக்கிச்செதுக்கி
உனக்கு 
அந்த ஆளும் நாற்காலியை
உருவாக்கி வைத்திருக்கிறோம்.
ஏமாறாதே!
ஏமாற்ற்றாதே!
லேட்டாகவே தான் 
வந்து கொண்டிருக்கிறாய்.
எப்போது 
லேட்டஸ்டாக வரப்போகிறாய்.
உன் வயதுக்கணக்கில்
நூறாண்டுகளுக்கும் மேலாகும் என்றாலும் சரி
எங்கள்
இளம்புயல் தலிவ்வா..அது நீயே தான்.
ஆண்டவன் சொல்றான்
அருணாசலம் கேக்கிறான்  
என்பதெல்லாம் இருக்கட்டும்.
எங்கள் ரஜினியே!
ஆண்டவனுக்கு நீயே சொல்லிடு
அடுத்த ஆண்டு
நீ தான் எங்கள் முதலமைச்சர் என்று!

==============================================




ஞாயிறு, 8 மார்ச், 2020

ரஜினியின் தனி வழி


ரஜினியின்  தனி வழி
========================================ருத்ரா


ரோட்டில்
மண்டை காய‌
அந்த குங்குமக்கலர் துண்டுகளை
வாயால் சப்பி
விதைகளை நாவால் நீவி
நீக்கி
தின்றுகொண்டிருந்தேன்.
என் குடியுரிமை என்பது
இப்படி
தர்ப்பூசணிகளோடு
செல்லமாய் நக்கி நக்கி
சுவைக்கும்
உரிமையும் சேர்த்தது தானே.
இதற்கு ஏன்
மக்கள் தொகை பதிவேடுகளில்
ரத்தக்களரிகள் போல்
அந்த சந்தேக வினாக்கள் ?
எட்டாயிரம் சமணர்களை
மரணத்தில் ஏற்றிய
அந்த கழுமரங்களா
இப்போது வினாக்களாய்
என் பின்னே
துரத்தி வருகின்றன?


"அதெல்லாம் ஒண்ணுமில்ல கண்ணா!
என்
"அண்ணாத்தெ"யிலெ
அந்த "தனி வழி" இருக்கும்.
காத்திரு."

அதென்ன
சூப்பர் ஸ்டாரின்
விரல்  முத்திரையா?
அல்லது
நச்சுப்புகை "கேம்ப்"களுக்கு
கை காட்டும்
மர்ம முத்திரையா?

=========================================================


புல்லுக்குள் ஒரு பிரபஞ்சம்

கீழே வரும் சுட்டிக்கு  நன்றி.அதில் உள்ள படக்கதையை கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=bOJwVtEfaak

புல்லுக்குள் ஒரு பிரபஞ்சம்
=========================================ருத்ரா

இந்தக்கதையிலே வ்ருகிற கடைசி சஸ்பென்ஸை அந்த படத்திலே சொல்லாமல் டைரக்டர் விட்டிருக்கிறார்.
அது தான் அந்த டைரக்டர்.
அவர் குவாண்டம் டெலிபோர்டேஷன் படி கி.மு 7005க்கும் கி.பி 43568கும் ஒரே சமயத்திலே போகிறார்.இதில் குறிப்பிட்ட வருடங்கள் சும்மா ஒரு உதாரணத்துக்குதான். இதன் படி அவர் டைம் டைலேஷன் (கால நெகிழ்ச்சி) கணித சூத்திரத்தை பயன் படுத்தி இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் ஒரே சமத்தன்மைவாய்ந்த காலமாக மாற்ற முயலுகிறார்.அவர் ஒரு ப்ரேன் காஸ்மாலஜி விஞ்ஞானி.அவர் கோட்பாட்டின் படி காலத்துக்கு இறந்த காலம் எதிர் காலம் என்று எதுவுமே கிடையாது.அப்படி யென்றால் இறப்பும் பிறப்பும் ஒரே தன்மை அடைகிறது.இது க்ராண்ட் யூனிஃபிகேஷன் ஆஃப்டைம். கிராவிடான் க்ளுவான் போசான் போஃடான் என்ற ஆற்றல்புலங்கள் ஒரே புலமாகி (யுனிஃபைடு ஃபீல்டு) மாறிவிடும் கோட்பாடுதான்  சவ்வுப்பிரபஞ்சம் (ப்ரேன் காஸ்மாலஜி) அது அடுக்கப்பட்டிருக்கும் ஆயிரம் (அல்லது பல பில்லியன்கள்) பிரபஞ்சங்களின் ஒரே நிலை அடைந்த (யுனிஃபைடு காஸ்மா) தன்மை ஆகும்.இதில் உயிர்களின் பல வடிவங்கள் ஒரே நிலையில் இருக்கும்.இறப்புக்கும் பிறப்புக்கும் அர்த்தங்களே இல்லை அதாவது நான் எக்சிஸ்டிங் எக்சிஸ்டென்ஸ் என்ற ஒரு குவாண்டம் ஃபோம்
நிலை தான் இருக்கும். குவாண்டம் எண்டேங்கிள்மென்ட்  கோட்பாட்டின் படி எலக்ட்ரான்கள் ஒளியின் வேகத்தை முறியடித்து எங்கு வேண்டுமானாலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் ("காரலேஷன் குவாண்டம் டைனாமிக்ஸ்). அதன் குழம்பிய சித்திரங்களே இந்த பிலிம். இதன் டைரக்டரும் இதில் ஒரு கேரக்டர்.
அவரை ஸ்மெல் உள்ளது சென்ஸ் பண்ணுவதற்கு  சூப்பர் சிம்மெட்ரி பார்டிகிள் உடைய ஆற்றல் புலம் வேண்டும்.அதாவது எலக்ட்ரான் இங்கே செலக்ட்ரான் எனப்படும். எஸ் என்ற எழுத்து எலக்ட்ரான் முன் இருக்கிறது.இது "சூப்பர் சிம்மெட்ரியை"குறிக்கும் "எஸ்" ஆகும்.இது மிகவும் அறிவியல் நுட்பம் திணிந்த ஒரு கற்பனை ஆகும்.
எனவே இந்தப்படம் உண்மையிலேயே மிகச்சிறந்த படம்.

________________________________________________________ருத்ரா இ பரமசிவன்



சனி, 7 மார்ச், 2020

வெர்ச்சுவல் ரியாலிடி


வெர்ச்சுவல் ரியாலிடி
=========================================ருத்ரா


உன் மனத்துள்
எப்படி நுழைவது?
டிக் டாக் இருக்கிறதே
என்று
மூன்றாம்பிறை கமல் போல்
தலையில் பாத்திரத்துடன்
ஆடுறா ராமாவை அரங்கேற்றினேன்.
நீயும் பதிலுக்கு
அரங்கேற்றி விட்டாயே.
சாம்பார் சாதம் ஒரு பாக்கெட்டை
என் முகத்தில் விழும்படி
வீசியெறிந்து விட்டு
ரயிலில் வேகமாய் மறைந்து விட்டாயே.
நவீன தொழில்நுட்பத்தில்
காதலின்
வெர்ச்சுவல் ரியாலிடி இது.

===============================================

வெள்ளி, 6 மார்ச், 2020

நம்பிக்கை

நம்பிக்கை
====================================ருத்ரா


எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின் 
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்று விடுவாயா?
முடிந்தால் விழுங்கிப்பார்.
இருட்டுப்பிழம்பே
கரைந்து போ! காணாமல் போய்விடுவாய்!
ஒரு கோடி வெளிச்சம்
என்னில் உண்டு.
நம்பிக்கை நம்பிக்கை.
ஆம்! நம்பிக்கையால்
இந்த வானம் சுருட்டுவேன்.
எல்லாம் என் காலடியில்.
"ஊழையும் உப்பக்கம்" காண்பேன்.
எப்பவோ எவனோ
எழுத்தாணி கொண்டு 
ஒரு ஓலையில் கிறுக்கிவிட்டுப்போனான்.
ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில்
கோடி கோடி வரிகளில்
அந்த கதிர்வீச்சு பரவிக்கிடக்கிறது.
பூ .... இவ்வளவு தானா?
வரட்டும் அந்த டிராகுலாக்கள்
அவற்றை நான் உறிஞ்சித்தீர்த்துவிடுகிறேன்.
வாழ்க்கை எனும் அழகிய‌
மாணிக்கக்கல் என் மடியில்.
தூரப்போ! அழிந்து போ!
அவற்றின் முகத்தில்
காறி உமிழ்கிறது..அந்த நம்பிக்கை!
சட சடவென்று
ராட்சதத்தனமாய்
மகிழ்ச்சியின் உந்துதல்
ரெக்கைகளாய் என் மீது
இப்போது ஓட்டிக்கொன்டிருக்கிறன!

=========================================
15.09.2017

கோடுகள்.





தலையணையோரம்
நங்கூரம் பாய்ச்சிய
கோடுகள்.

கனவுகள்.

-----------------------------------------------------------------


விரல்கள் இன்றி அவள்
விழிகளால் விழுந்த
கையெழுத்து  இது.

காதல்.

-----------------------------------------------------------------------


பிரமன்
சோம பானம் பருகிய பின்
தூரிகை நகர்த்தினான்.

பெண்


-------------------------------------------------------------------------


திங்கள், 2 மார்ச், 2020

ஒரு சாக்கலேட்.





ஒரு சாக்கலேட்.
==============================================ருத்ரா

கையில் அழகிய
சாக்லேட்டை வைத்துக்கொண்டு
அந்த வண்ணக்காகிததைக்கூட‌
இப்போது பிரிக்கவேண்டாம்
அதன் வழியே ஊடுருவி
அந்த வண்ணமய இனிமைப்பிழம்பின்
கனவுப்பிசிறல்களை
கற்பனையாய் நக்கிச்சுவைக்கும்
குழந்தையைப்போல்
மூடிக்கிடக்கும்
உன்
புன்னகைக்கீற்றுகளை
பார்த்துச்சுவைக்கின்றேன்.
அது வரை
போலியாய் காட்டும்
உன் இறுக்க மௌனத்தையும்
தாண்டி தாண்டி
என் மேகங்களை
உன் மீது உலா விடுகின்றேன்.
அது வரை
உன் பார்வைக்குள்
ஒரு பர்தாவை நெய்து
அணிந்துகொண்டிருக்கிறாயே
அதன் அசைவுகளில்
என் இதயத்துடிப்புகளையும்
நெய்து கொண்டு
காத்திருக்கின்றேன்.
காத்திருப்பு என்பது
உன் அன்புக்கடல்.
அதில் துளி துளியாய்
நீந்திக்களிக்கின்றேன்.
உன் கொந்தளிக்கும் அலைகளை
மட்டும் நிறுத்திவிடாதே

==========================================

எங்கோ.....?




எங்கோ.....?
--------------------------------------------------------------ருத்ரா


பாருங்கள்
மதம் என்பதே
சமூக விரோதம்
ஆகிப்போனது.
மானுடத்தை தின்னும் கடவுள்
மனிதனுக்கு அருள் செய்யும்
என்ற‌
மகத்தான பொய்மையின்
இந்த அரக்கு மாளிகையில்
நம்
மகா "பாரதத்தின்"
சாம்பல் மேடு தான்
மிச்சமாய் இருக்குமோ?
சீற்றமாய்
ஒரு பெருமூச்சு மூடவா
தோன்றாது?
விடியலின் கீற்றுகள் மட்டும்
எங்கோ
தொலை தூரத்தில்!

__________________________________________