ஒரு வினாடி கூட நிற்பதில்லை
ஆறு.
ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஒன்று இரண்டு என்று
எண்ணிக்கொண்டிருக்கவில்லை
அது.
ஒன்று..ஒன்று..
எப்போதும் ஒன்று தான்.
இரண்டுகளும் மூன்றுகளும்
வயதாகி முதிர்ந்து விட்டவை.
எண்ணுவதற்கு
அதில் இடமும் இல்லை நேரமும் இல்லை.
ஒன்று ஒன்றை விழுங்கிய பின்னும்
மீண்டும் அது ஒன்று.
என்ன
கடவுள் ஒன்றே
என்கிறீர்களா?
நீங்கள் வந்து கேட்கிற
வரங்களை கேட்கும்
செவிகள்
அதனிடம் இல்லை
என்கிறீர்களா?
எங்கு தான் அவர் போகிறார்?
எங்கிருந்து எங்கு அவர் போகிறார்?
கடுங்கோடை வந்தது.
வெற்று மணல்வெளி ஆனது.
ஆனாலும்
சர சர வென்று
நடையின் ஓசை கேட்டது.
வழியில் இடறிய கூழாங்கற்கள்
கேட்டன
எதற்கு இந்த பயணம்?
ஏன்...
அவை முடிக்க வில்லை.
ஆம்.
அந்த ஏன் தான் இன்னும் இருக்கிறது.
அது தான் கடைசி மைல்கல்லா?
இல்லை
அது தான் எதற்கு இந்த ஓட்டம்
என்று சொல்லப்போகிறது..
அதுவரை...
வெறுமையாய் இருந்து கொண்டே
ஓட்டம் தொடருமா?
நீங்கள் தானே கடவுள்
நீங்கள் தேடும் கடவுள் யார்?
நான் யாரும் இல்லை!
அப்படியென்யென்றால்..
ஓடிக்கொண்டே இருப்பவன்
முகம் திரும்பி பார்க்கிறான்.
எல்லோரும்
குரல் எழுப்புவது கேட்கிறது.
ஓ மனிதா!
ஓ மனிதா!
ஓ மனிதா!
.....................................................
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக