ஞாயிறு, 21 ஜூலை, 2024

சப்பரம்

 சப்பரம்

______________________________



என்ன தூங்கி விழுகிறாய்?

ஏன் கனவுகள் வந்ததில்லையா?

இப்போது எதுவும்

செய்யத்தொன்றவில்லை 

என்றாலும்

உனக்கு நீயே தான்

சாதித்துக்கொள்ளவேண்டும்.

அடடே

அந்த சாதியை குறிப்பிட்டு விட்டேனா?

இரவு முழுவதும் 

மின்சாரபல்புகள் நாளங்களாய்

தொங்க 

அந்த நாக்குத்துறுத்தி சாமி

முண்டைக்கண்ணும் அருவாளுமாய்

சப்பரத்தில் வலம் வந்திருப்பாரே.

உற்சாகம் தான்.

பானம் தான்.

கையில் வண்ணவண்ணக்கயிறுகள் தான்.

"டேய் டேய்..

இங்கேயே திருப்பிரலாம் சப்பரத்தை

அந்தத் தெருவு வாசன கூட‌

படப்படாது டோய்.."

அப்புறம் அங்கே

கொஞ்சம் தள்ளு முள்ளு.

சாமிகளே...

முண்டக்கண்ணு 

துருத்திக்கொண்டிருந்தது போதும்

கொஞ்சம் இறங்கி வந்து

என்னன்னு தான் பாருங்களேன்.

ஒவ்வொரு ஆண்டும்

இந்த அருவாள்கள் ருசிபார்க்க‌

இந்த மக்கள் தலைகளா?

வெறியை வைத்து

தீப்பந்தம் கொளுத்தி

எத்தனை காலம் தான் 

இருட்டுக்குள்ளேயே கிடப்பீர்கள்

சாமிகளே....

சப்பரம் தள்ளாடி தள்ளாடி

சாய்ந்து கொண்டே

அந்த தெருவைத்தாண்டியது.

அவனுக்கு 

தூக்கம் தூக்கமாகத்தான் வந்தது.

துண்டு துண்டாய்

மனிதர்கள் சிதறிக்கிடந்ததாய்த் தான்

கனவுகள்..

அதையெல்லாம் விரட்டிவிட்டு

அந்த வீட்டு வாசலில் நின்று

அவனைப் பார்த்து பார்த்து

விழுங்க நினைத்த 

அவள் விழிகள் எல்லாம்...

கனவில் வரும் 

என்று தான் பார்க்கிறான்.

சுள்ளென்ற வெயிலில்

வாசலில் கெண்டை மீன்கள் 

வறுவலுக்காக கருவாடுகள் ஆக‌

காத்திருந்து

விரிக்கப்பட்ட துணியில்

வெறும்

துள்ளலும் துடிப்புமாய்

தெரிகின்றது.


____________________________________________________

கல்லாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக