வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நிலவில் ஒரு உலக இதய தினம்

 நிலவில் ஒரு உலக இதய தினம்

____________________________________

ருத்ரா



நீ யார்?

உன் முகம் தெரியாது.

அகம் தெரியாது.

ஆனாலும் என்னைப்பார்த்து

வீசி விட்டுப்போனதாக‌

உன் புன்னகைப்பூ எனக்கு

உன் முகவரி தந்தது.

நீ

நிலாவில் இருப்பதாக!

சற்று பொறு.

இதோ வந்து விடுகிறேன்.

அதற்குள்

ஏதேனும் ஒரு விண்கல் வந்து விழுந்து

உன் முகவரி சிதைந்து போவதற்குள்

வந்து விடுவேன்.

அய்யோ.

நிலவில் ஒரு விண்கல் மோதியதாக‌

டி வி யில் தெரிகிறது.

மோதிக்கொண்டது அங்கே

இவன் இதயமும் அவள் இதயமும் தான்.

சிவப்பும் பச்சையுமாய் எரியும்

அந்த மத்தாப்பூ தெறிப்பில்

அவர்கள் புன்னகை தான்.

______________________________________

அட்டைகளே தான் மிஞ்சும்.

 கொஞ்சம் மிச்சம் 

வைத்துக்கொள்ளுங்கள்

கவிஞர்களே!

உலக இதய தினத்தில்

இதயங்களையெல்லாம்

கொட்டிக்கவிழ்த்த பின்

"வேலன்டைன்"தினத்துக்கு

வெறும் அட்டைகளே தான்

மிஞ்சும்.

_________________________________

ருத்ரா






படிக்கட்டுகள்

 படிக்கட்டுகள்

____________________________________________

ருத்ரா




தூங்கிக்கொண்டே இரு.

நீளமான காலப்பாம்பை

துண்டு துண்டாய்

ஊறுகாய் போட்டு

அதில் ஊறிக்கொண்டே இரு.

தூங்கும்போது

கனவின் விழிகள்

மூர்க்கமாய் திறக்கின்றன.

எதிர்ப்படும் இட்லர்களின்

தலைகளையெல்லாம்

கொய்து விடுவாய்.

அப்புறம் என்ன‌

எல்லோருக்கும் மகுடம் தான்.

தூக்கம் கலைந்து விடுகிறது.

கனவு நூலாம்படைகள் 

கிழிந்து தொங்குகின்றன.

அவலங்களே 

வாழ்க்கையாகிப்போன பின்

வியர்த்து வியர்த்து வழிகின்றது

இமையோரங்களில்

கனவுகள்.

தூங்கிக்கொண்டே விழித்துக்கொண்டிரு.

அல்லது

விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிரு.

என்ன இது?

புதிர் போடும் யோகாசனமா?

புதிர் அவிழ்க்கும் யோகாசனமா?

ஓம் ...கருந்துளை.

அதையும் துளைத்து புழுத்துளை வழியே

அந்த எதிர் பிரபஞ்சத்தின்

பிடரியைப்பற்றி இழு.

துரியப்பாய்ச்சல் என்று

கௌடபாதர் 

ஜிகினாக்களின் ஸ்லோகங்களில்

சுகமாய்த்தான் தொங்கவிடுகிறார்

உரித்த கோழிகளாய்.

பதமாய் சுட்டுத்தின்கிறார்கள்.

பாஷ்யங்களாய்

பாஷ்யங்களின் பாஷ்யங்களாய்

கூவிக் கூவி

குவித்து வைத்து எரிக்கிறார்கள்.

அஞ்ஞானம் எரிகிறது.

ஞானம் ஒளிர்கிறது.

அது எப்படி

வர்ணங்களுக்கு இங்கே

ரத்தக்கம்பளம்?

மனிதர்கள் சாம்பலாய் மிஞ்சினால் 

போதும்.

ஆயிரம் ஆயிரமாய் சாதிகளைக்கொண்டு

இங்கு எல்லாம் எரிக்கப்படுகிறது.

பிரம்மமும் இங்கு 

உடன்கட்டை ஏறுகிறது.

புரிகிறதா?

புரிந்து ஒண்ணும் நீ

கிழிக்கப்போவது இல்லை.

உன் தவத்தை தொடர்.

தூங்கிக்கொண்டே விழித்திரு

அல்லது

விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிரு.

இறப்புகளும் பிறப்புகளும்

உன் மூக்கு நுனியில்

பில்லியன் கணக்கில் 

பிம்பங்கள் 

காட்டிக்கொண்டே இருக்கட்டும்.

இந்தத் தீயைப்பொசுச்சி விழுங்கி விடும்

இன்னொரு தீயை எப்போது

பற்றவைக்கப்பொகிறாய்?

இந்த சூரியமண்டலம் தாண்டிய‌

எக்ஸோ ப்ளேனட்டுகள்

காத்திருக்கின்றன உன் படிக்கட்டுகளாய்!


_______________________________________________________________‍











வியாழன், 29 செப்டம்பர், 2022

பெரியார்






See the source image
















பெரியார்

____________________________________________________________


வெண்கதிர் வீச்சு

அறிவொளி தெறிக்க‌

இதோ

கண்டுபிடித்து விட்டோம்

ஒரு காலக்ஸி 

பெயர் பெரியார்

என்றது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி.

தூரம் 

வெகு வெகு அருகில் தான்

தமிழ் நெஞ்ச ஒளி மண்டலங்களே

அவை.

காலம்

உளுத்துப்போன இருள் ஆண்டுகளை

அடித்து துவைக்கவந்த‌

மனிதத்தின் "சுய மரியாதை"யின்

ஒளியாண்டு!


________________________________________

கவிஞர் ருத்ரா

வைராவி குளம்

வைராவி குளம்

_____________________________________



"வைராவி குளமா?"

முகநூலில் யாரோ தொட்டுக்

காட்டினார்கள்.

அம்பதுகளின்

அந்த வைர நினைவு 

பளிச்சு களில்

இப்போதும் 

சலவை செய்யப்பட்டு விடுகிறேன்.

எனது தந்தை வழி 

அத்தை அவர்கள்

எங்கள் கல்லிடைக்குறிச்சி

குமாரர் கோவில் தெரு வீட்டுக்கு

வருவார்கள்.

எல அய்யா எசக்கி என்று

வாய் நிறைய 

எங்கள் அப்பாவை

அழைத்துக்கொண்டே தான்

வருவார்கள்.

அந்த உற்சாகத்தை

அன்றைய‌

சிறு பயலாய் ஒரு தீபாவளி

மத்தாப்பூவை 

"பொருத்தி"க்காட்டினால் தான்

புரியும்.

குடமுருட்டி சங்கரன் கோயில் 

ஆடித்தவசு விழாவுக்கு போகும் போது

பெண்களின் கண்களை

கருவிழிகளாய் 

பாதையெல்லாம் விழும் 

கருநாவல் பழங்களோடு

அன்று உவமிக்கத்தெரியாத‌

பொடிப்பயலாய்

அந்த கன்னடியன் 

கால்வாய்க்கரையோரம்

அம்மா இடுப்பில் 

சுமந்துகொண்டு போகும்

கூட்டாஞ்சோற்றின் சூட்டை

மோப்பம் பிடித்துக்கொண்டே

சென்ற நாட்கள் இனி

சென்ற நாட்கள் தான்.

கோவிலுக்கு செல்லும் போது

கால்கள் அந்த‌

நீர் என்னும் பளிங்குப்பாயில்

அளைய அளைய‌

கால்களில் சரசரக்கும் 

அத்தனை கூழாங்கற்களும்

என் வைரகற்கள் அல்லவா?

பற்பசையை 

குழாயிலிருந்து

பிதுக்கிய பின் மீண்டும்

குழாய்க்குள் நுழைக்க முடியுமா?

ஏதோ படத்தில்

நாகேஷ் சொன்ன காமெடி இது.

அப்படி மீண்டும் அந்த‌

பாற்கடலை

நசுங்கிப்போன இந்த வாழ்க்கை 

டியூபுக்குள் 

அடைக்க முடியுமா?

வேண்டும்போதெல்லாம்

அந்த நினைவுகளின்

அமுதக்குழம்பை 

சுவைக்கத்தான் முடியுமா?

நோஸ்டால்ஜிக்

எனும் பழம் நினைவோட்டம்

செறிந்த செர்ரி மரக்கூட்டங்களுக்குள்

நுழைந்து வருவது தான்

என் எழுத்துக்களில் அந்த‌

வைராவிக்குளம் தளும்பி நிற்பதாகக்

காட்டிக்கொண்டே இருக்கும்.

வைராவிகுளமே!

உனக்கு தலபுராணம் பாட‌

தெய்வங்கள் தேவையில்லை.

அந்த பச்சை வயல் விரிப்பும்

மணிமுத்தாறும் தாமிரபரணியும்

இழை ஊடி நெசவு செய்யும்

அந்த அற்புதமுமே போதும்.

அங்கு ஒரு நாள் வருவேன்.

எவனோ வானத்திலிருந்து இறங்கி

குதித்து வருவான்

என் ஓட்டை உடைசல்களோடு 

வியாபாரம் செய்து கொள்ள.

ஈயம்பித்தாளை பேரிச்சம் பழத்துக்கு

போட்டு விடப்போகும் 

இந்த உடம்புக்கூட்டுக்குள்

பாயும் பழம் நினைவுப்பாய்ச்சல்களை

புதுப்பித்துக்கொள்ள‌

நானும் ஒரு நாள்

வைராவி குளம் வருவேன்.


________________________________________________

ருத்ரா இ பரமசிவன்.







 

இன்று இதயங்களின் தினம்.

 


இன்று இதயங்களின் தினம் அல்லவா?

உலகத்தின் எல்லா இதயங்களின்

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்

அறைகளுக்குள் எல்லாம் சென்று

தேடிப்பார்த்து விட்டேன்.

என் இதயத்தை அன்று

அந்த ஷாப்பிங் காம்ப்லெக்ஸில்

அவளிடம் தொலைத்தேன்.

அவள் தோழிகள் 

ஒரு பெயரை வைத்துக்கூப்பிட்டதில்

அவள் பெயரை 

உச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

அந்தப்பெயரை அழைத்துக்கொண்டே தான்

என் இதயத்துள் அவள் பெயரை

பதியம் இட்டு க்கொடுத்தேன்.

அன்று இழந்த இதயத்தை தான்

இன்று தேடுகிறேன்.

ஒரு கனவில் சொன்னாள்

இந்த தினத்தில்

எல்லா இதயங்களிலும்

மின்னல்களைக்கொண்ட நெய்த‌

பட்டாம்பூச்சியாய்

சிறகடிப்பதாய் சொன்னாள்.

அதைத்தான் இன்னும் தேடிக்கொண்டே

இருக்கிறேன்.

அந்தப் பெயரின் எழுத்துக்கள் 

எந்த இதயத்திலாவது இன்னும்

ஒலிக்கிறதா

என்று தேடிப்பார்க்கிறேன்.

ஓ!  இதயங்களே சொல்லுங்கள்..

அட..அதற்குள் இருட்டிவிட்டதா?

இந்த உலக தினம் முடிந்து விட்டது.

இனி

அடுத்த உலக தினம் வரட்டும்.

என் தேடல் தொடர்கிறது.


_______________________________________

ருத்ரா




புதன், 28 செப்டம்பர், 2022

இது எத்தனையாவது சூத்திரம்?

 அந்த மூலையில் 

சிலந்தியின் அற்புதமான வலை.

அந்த அற்புதங்கள் எல்லாம்

சின்ன சின்ன பூச்சிகளின்

வண்டுகளின்

சமாதிகளாயின.

அவையும் அற்புதமாக‌

சுருட்டப்பட்டு சுருட்டப்பட்டு

சித்திரங்கள் பேசின.

பிரம்மசூத்திரம்

பிரம்மத்தைப்பற்றி

555 சூத்திரங்கள் 

சொல்லியிருக்கின்றன.

சங்கரர் மட்டும் பாஷ்யம் 

எழுதவில்லை.

இந்த சிலந்தியும் 

எழுதிக்கொண்டே இருக்கின்றது.

கடவுளைப்பற்றி

நினைத்துக்கொண்டே இருந்தேன்.

சிலந்திப்பூச்சி 

என்னைச் சுருட்டிக்கொண்டே 

இருக்கிறது.

இது எத்தனையாவது சூத்திரம்?

_________________________________________________

ருத்ரா


"கவுண்ட் டவுண்"

  "கவுண்ட் டவுண்"

________________________________



மனிதா!

உன்னையே நீ

சுருட்டிக்கொண்டு

காணாமல் போய்விடுவதற்கு

கண்டு பிடித்த உனது சொல்

"டெக்னாலஜி"

எல்லா துறைகளிலும்

சந்து பொந்துகளிலும்

மூலை முடுக்குகளிலும்

புழு பூச்சி

மரம் மட்டைகளிலும்

ஏன்

கண்ணுக்குத்தெரியாத‌

அந்த நுண்ணுயிரிகளிலும்

இன்னும்

மில்லியன் ஒளியாண்டுகளை 

கடந்து

பல வண்ண முகங்கள் காட்டும்

ஒளி இருள் பிழம்புகளிலும்

அந்த சொல்

ஊடுருவியிருக்கிறது.

மூளைப்பெட்டியை திறக்கும் 

சாவி உன்னிடம்

வந்து விட்டது.

கருமுட்டைகளும் விந்தணுக்களும்

உன் டிஜிடல் கர்ப்பத்துள்

நுழைந்து விட்டன.

என்ன செய்யலாம் இதை வைத்துக்கொண்டு?

பணம் பண்ண வேண்டியது தான்.

பிஞ்சுகள் கூட‌

அரக்கத்தனமான "கேம்ஸ்"களில்

கருகிப்போகின்றன.

கவலையில்லை.

பணம் குவிகிறது.

உலகத்தின் கனிம வளங்களையெல்லாம்

சுருட்டி வைத்துக்கொண்டு

அழைக்கின்றாய்.

வாருங்கள் இதோ

செவ்வாய்க்கோளில் போய்

நட்சத்திர ஓட்டல்கள் கட்டி

பிரபஞ்ச காக்டெய்லை

கண்ணாடிக்கிண்ணங்களில் ஏந்தி

அருந்தி அருந்தி அனுபவிக்கலாம்.

பில்லியன் பில்லியன் டாலர்களில்

அந்த பயணத்துக்கு டிக்கெட்டுகள்

ரெடி ஆகி அச்சடிக்கப்பட்டு விட்டன.

பில்லியன் கணக்கில் இருக்கும்

மக்களின் 

கனவுகளில் ஆசைகளில்

தீ பற்றி எரிகிறது.

ஆனால்....

எதியோப்பிய சோமாலிய‌

எலும்புக்கூட்டு மனிதர்களின்

குழிவிழுந்த 

பசித்த 

வெறித்த கண்கள்

மண்ணுக்குள் மக்கத்தொடங்கி விட்டன.

ஓ!

டெக்னாலஜியே!

ராட்சச டினோசார்கள்

எலும்பு ஃபாசில்களாய்

மிஞ்சி விட்டது போல்

இந்த மொத்த பூமி உருண்டையின்

எலும்புக்கூட்டு ஃபாசில்கள்

பற்றி

இன்று ஒரு ஏ ஐ சைபோர்க்

குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது.

மனிதா!மனிதா!

இந்தக்கணினிகள்

உன் ரத்தசிவப்பு அணுக்களில்

நுட்பமான "பைத்தான்"களை

கூடு கட்டிக்கொள்ளுவதற்கு முன்

உன்னையே

உலுக்கிக்கொண்டு

விழித்துக்கொள்.

ரகசியமான ஒரு "கவுண்ட் டவுண்'

உன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு

டிக் டிக் டிக்..

என்கிறதே?

உன் இதய "லப் டப்"களில்

அது சின்க்ரோனைஸ் ஆகும் முன்

விழித்துக்கொள்.

ஆம்

விழித்துக்கொள்.


_________________________________________________________

ருத்ரா

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நாகேஷ்

 நாகேஷ்

_________________________________‍_____

ருத்ரா



சினிமாத் திரை எனும்

வெங்கலக்கடையில் 

ஒரு பூனைபோல் .நுழைந்த யானை

சிரிக்க வைத்து சிரிக்க வைத்து

தன் நகைச்சுவை அங்குசத்தால்

பார்ப்பவர்களை ஆட்சி செய்தது.

படங்கள் ஒவ்வொன்றையும் 

நாம் சொல்லிக்கொண்டே போனால்

நூறு இமயங்களின் சிகரங்களை

ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூன்று படங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

சர்வர் சுந்தரம்.

அருமையான நடிப்பு 

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரிப்பு

கொடி கட்டி பறக்கிறது.

நிறைவேறாத காதலை

தேவதாஸ் பிழிந்து பிழிந்து தந்திருக்கிறது

உணர்ச்சியின் எரிமலையிலிருந்து.

சிரிப்பு மூட்டிக்கொண்டே

அதே சோகத்தை வெளிக்கொணர்ந்த‌

நாகேஷ் எங்கோ ஒரு உச்சிக்கு போய் நிற்கிறார்.

அதிலும் ஒரு காட்சி.

காதலிக்கு பூங்கொத்து தருவார்

உற்சாகம் பொங்க.

அவள் காதலிக்க வில்லை என்று 

தெரிந்ததும்

அந்த பூங்கொத்து குப்பைக்கூடைக்குத் தான்

போகும் என்று தெரிந்தும்

இப்போதே குப்பையில் போட்டு விடாதே

என்பதை 

நகைச்சுவை கலந்த சோகத்தோடு சொல்வார்.

ஒரு சிரிப்புக்குள் எங்கோ சொருகிவைத்திருந்த‌

ஒரு சம்மட்டியை எடுத்து

நம் நெஞ்சத்தை நொறுக்கிவிடுவது போல்

காட்டிவிடுவார்.

இதைப்போல எத்தனையோ காட்சிகள்.

அடுத்து திருவிளையாடல்.

சிவாஜியுடன் அந்த கேள்வி பதில்..

நீ கேட்கிறாயா?

நான் கேட்கட்டுமா?

என்று அவர் கேட்டவுடன்

அவர் காட்டும் அந்த பதற்றத்தில் கூட‌

ஒரு பயத்தையும் காட்டுவார்.

அதிலும் அவர் நம்மை குலுங்க குலுங்க‌

சிரிக்க வைத்து விடுவார்.

நடிப்பு என்றால் சோகத்தை தத்துவத்தில்

தோய்த்து தருவது தான்.

அந்த கனமான உணர்ச்சிகளில்

ஒரு சிரிப்பின் இழையையும் 

மெல்லிய மயிலிறகாய் வருடி நம்

இதயத்தின் ஆழத்தையே 

துளைத்துக்கொண்டு விடுவார்

நீர்க்குமிழி என்ற படத்தில்.

மரணம் தன் தோளில் அமர்ந்த போதும்

அந்த சுமையை சிரித்து சிந்திக்க வைக்கும்

நகைச்சுவையால்

அந்த கனபரிமாணத்தை இலேசாக்கி விடுவார்.

இந்த மூன்று படங்களையும் தாண்டி

எப்போதும்

சட்டம் போட்டு சுவரில் மாட்டியிருப்பது போல்

ஒரு படம் உண்டு.

அது

காதலிக்க நேரமில்லை.

என் நினைவுகளில் சிரிப்பு அலைகளாய்

உலா வந்து கொண்டே இருக்கும் படம் அது.

எதைச்சொல்வது?

எதை விடுவது?

அந்தப்படம் வந்த வருடத்திலிருந்து

நேற்று பார்த்த விண்குழல் காட்சிகள் 

வரையும் 

என்னிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் 

படம் அதுவே தான்.

டி எஸ் பாலையாவுடன் அவர் அடிக்கும்

லூட்டி ஒன்றே போதும்.

அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்

என்று கணக்கு எடுத்தால்

செஞ்சுரியை தாண்டியிருக்கும் என‌

நினைக்கிறேன்.

அவர் சேட்டைகள்

ஹாலிவுட் நடிகர் "ஜெர்ரி லூயிஸை"

நினைவு படுத்துவதாக இருக்கலாம்.

அவர் ஒரு ஃப்ரேமுக்குள் நிற்பார்.

ஆனால் இவர் நின்று கொண்டிருப்பதே தான்

இங்கு ஃப்ரேம்.

பாலச்சந்தர் அவர்கள் தன் "டைரக் ஷனை"

இவரிடம் கூர் தீட்டிக்கொண்டார்

என்பதே நிஜம்.


_____________________________________________________________


முற்றுப்புள்ளி இல்லாமல்...

 ஆதலினால் காதல் செய்வீர்

பாரதி

நறுக்கென்று தலையில் குட்டி

சொல்லி முடித்தான்.

அது என்ன

இப்படி ஜிவ்வென்று ஏறுகிறது?

என்ன கணேசா?

நலம் தானே என்று

ரெண்டு தட்டு தட்டியிருப்பான் அவன்.

அதற்கும்

இப்படித்தான் ஜிவ்வென்று ஏறியிருக்கும்.

திருவல்லிக்கேணி கோவிலில்

அவனுக்கு 

முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.

பாரதியின் குயில் பாட்டு

எங்கிருந்தோ கேட்கிறது.

"காதல் காதல் காதல்"

முற்றுப்புள்ளி இல்லாமல்...

_____________________________________________

ருத்ரா

உலக சுற்றுலா தினம்.

 உலக சுற்றுலா தினம்.

_______________________


காலை எழுந்ததும் 

நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

மாலையில் தான் எழுந்தேன்.

உலகப்பயணத்தில் பாதிதூரம்

சென்று முடித்துவிட்டேன்.


________________________________

ருத்ரா

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

மணிமுத்தாறே!

 மணிமுத்தாறே!

_______________________________________________
ருத்ரா


அம்பதுகளின் என் நினைவுப்பரல்களில்
உன் மணிகளும் முத்துக்களும் தான்
என் சிறு வரலாற்றுப்புத்தகத்தில்
கிலுகிலுப்பையை ஆட்டி ஆட்டி
மகிழ்வு ஊட்டுகின்றன.
அந்த பாறைகள்
அந்த சிறு பாலங்கள்
பசுமையான மரக்கூட்டங்கள்
இவற்றின் பின்னணியில்
நீர்ச்சேலையை நெளியவிட்டுக்கொண்டு
ஓடுகின்ற
மணிமுத்தாறே!
அந்தக்காட்சிகள் இன்று
ஏதோ ஒரு வறட்சியின்
எலும்புக்கூடுகளாய்
சிதறிக்கிடக்கின்றனவே.
"கல்பொருது இற‌ங்கும்" உன் அருவி
உயிர்களை தின்னும்
கண்ணுக்குத்தெரியாத ஒரு அரக்கியாய்
காட்சியளிக்கும் நிகழ்வுகளும் உண்டு.
நீரில் வலை கட்டிய போதும்
சில மக்களின் உற்சாகம்
அதையும் மீறி அந்த நீருக்குள்
பலியாகிப்போன சோகங்களையும்
மறக்க இயலாது.
ஓ!
எங்கள் அழகிய மணிமுத்தாறே
உனக்கு வயது இல்லை.
மூப்பு இல்லை.
குன்றா எழில் கசியும் குன்றுகளுடம்
பச்சை உயிர் போர்த்த
உன் சீரிளமை எப்போதும்
புன்னகை சிந்தும்.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலயமே
உன் ஒளிர்சிரிப்பை ஏந்திக்கொண்டு
நிற்பதாய்
நான் உணர்ந்திருக்கிறேன்.
எனது பள்ளி திலகர் வித்யாலம்
எனது "பைக்கூட்டையும் புத்தகங்களையும்"
அந்த வழியாய் நான் கடந்து செல்லும்போது
என் மீது செல்லமாய் வீசி எறிந்து
விளையாடுவதாயும் உணர்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்து
நான் பார்த்த முதல் கோவில்
அந்த மணிமுத்தாறு அணைதானே.
ஓ மணிமுத்தாறே!
வயதுகளின் சுமையின் அடியில்
நசுங்கிக்கிடக்கும்
அந்த பட்டாம்பூச்சிச்சிறுவனை
மீண்டும் படபட‌த்துச் சிறகடிக்கச்செய்!
இதோ
உன்னைத்தேடித்தான்
வருகிறேன்.
__________________________________________________________
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

புதன், 21 செப்டம்பர், 2022

அவனே தான் அவன்.

 

அவனே தான் அவன்.

_________________________________________________________



விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து

கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நம் உலகில் எத்தனை எறும்புகள் உள்ளன?

என்று.

இரண்டு போட்டு அதன் பின்னே

பதினாறு முட்டைகள் போட்டுக்கொள்ளுங்கள்.

அத்தனை எறும்புகளா?

சுறுசுறுப்பு. 

வாழ்கையில் வரிசை முறைகள்

வகுத்துக்கொள்ளும் அறிவு.

நினைத்தால் இந்த உலகத்தையே

வாயில் கவ்விக்கொண்டுக்

கிளம்பிவிடும் உறுதி..

இதெல்லாம் நம்மை 

மலைக்க வைக்கிறது.

இயற்கை இந்த மண்ணையே

ஒரு பரிசோதனைக்கூடம் ஆக்கி

பல உயிர்களை ஆக்கி

அப்புறம் அழித்து

ஏதோ ஒரு உண்மையை

கிண்டி கிழங்கு எடுக்க விரும்புகிறது.

டைனோஸார் எனும் 

உயிர் வடிவங்களை

ஆக்கிப்பார்த்த அதன் வரலாறும்

அவை அழிக்கப்பட்ட விதமும்

ஒரு உண்மையை வீசி எறிந்திருக்கிறது.

இன்று "ஹல்க்" எனும் ஹாலிவுட் படைப்பை

நாம் பார்த்திருக்கிறோம்.

ஆம்.இயற்கை தன்னையே

அப்படி ஒரு கதாநாயகனாக‌

படைத்துக்கொண்டு வாழ வேண்டும்

என்ற கனவைத்தான்

டைனோசார் மூலம் காட்டியிருக்கிறது.

போதும் இந்த விளையாட்டு என்று

பெரும் விண்கல் மற்றும்

பெருமழை பனியுகம் மூலம்

அதை கலைத்துவிட்டது.

உடலை பெரிதாக்கி பூதமாக்கி

வாழ்வதை விட‌

அறிவின் திரட்சியான‌

மூளையை பல்மடங்கு நுட்பமாக்கி

அதைக்கொண்டு 

மனிதர்களைப்படைத்துப்பார்ப்போமே

என்ற பரிசோதனையில்

இறங்கி இருக்கிறது இயற்கை.

அந்த மூளை அதற்குள்

பல பில்லியன் மடங்கு நுட்பங்களை

உருவாக்கிக்கொண்டு விட்டது.

மூளையே ஒரு செயற்கை மூளையை

உருவாக்கி

இந்த பிரபஞ்சங்களையெல்லாம்

தனக்குள் விழுங்கிக்கொண்டுவிடும்

போலிருக்கிறது.

இயற்கையின் இயற்கை இது.

அதன் உள்குத்து அதற்கே தெரியும்.

விஞ்ஞானத்தின் விஞ்ஞானமே 

அஞ்ஞானம் தான்.

என்ன?

ஆம்!

அறிந்துகொள்ளப்படவேண்டியது

பெரும்பிழம்பாய்

அறிவின் முன்

வழி மறித்து அல்லது வழி கொடுத்து

விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது.

மனிதனின் காலடிச்சுவடுகளில்

தன் காலடிச்சுவடுகளையும் 

பதித்துக்கொண்டு

ஒருவன் பின் தொடர்கிறான்.

பின் தொடர்வது யார்?

கடவுள் தான்.

தான் படைத்த பிரபஞ்சத்தை

அறிந்து பார்க்க ஒரு மூளை வேண்டுமே.

அது மனிதனிடம் தானே இருக்கிறது.

அட! நான் தான் அந்த‌

டி என் ஏ ,ஆர் என் ஏ எனும் 

புதிர்களின் முறுக்குச்சங்கிலியை 

வீசியெறிந்தேன்.

அந்த புதிர்களின் புதிர்களுக்குள்ளும்

கணித சமன்பாடுகள் கண்டவன்

மனிதன் அல்லவா?

விட்டால் "கடவுளையே"

வைரஸ் ஆக்கி வலம் வர 

வைத்து விடுவானே அவன்!

மனிதனின் பயணமும்

அவன் முன்னே இருக்கும்

எல்லையில்லாமல் நீண்டுகிடக்கும்

கால் சுவடுகளை ஒட்டியே தான்

தொடர்கிறது.

அவை அவனுக்கு அறிவு.

அவன் பின்னே கடந்து சென்ற‌

கால் சுவடுகளும் அறிவே தான்.

அறிவு என்பதற்கும்

ஒரு ஓர்மை உண்டு.

அறிவும் அறியாமையும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளி ஒன்று உண்டு.

அந்த சிங்குலாரிடி

பெருவெடிப்பா? கருந்துளையா?

அகற்சியா? ஈர்ப்பா?

இதை இறைவன் அறிந்து கொள்ள‌

மனிதனை பின் தொடர்கிறான்.

மனிதனும் இன்னொரு

பெரு மனிதனைப் பின்தொடர்கிறான்.

மனிதன் கடவுளை கற்பனை செய்தபின்

மீண்டும் தான் பின் தொடர்வது ஒரு இறைவன்

என்று கற்பனை செய்து

அந்த அறிவை 

அவனே கொச்சைப்படுத்திக்கொள்வதை

அவன் விரும்பவில்லை.

ஏனேனில் 

மனிதனும் அறிவும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளியும் அவனே தான்.

அவனே தான் அவன்.


________________________________________________





வியாழன், 15 செப்டம்பர், 2022

குற்றாலக்குளியல்

 குற்றாலக்குளியல்

_____________________________

ருத்ரா



பிரபஞ்சத்தைக்கரைத்து

நுரையாக்கி

பூக்களாக்கி...

கிச்சு கிச்சு மூட்டுகிறது

இதயத்துள்

மென் காந்தள் வருடல்கள்.

குற்றாலத்தையே 

நெய்து கொடுத்த துண்டு 

இடுப்பில்.


எங்கிருந்தோ

மரம் செடி கொடி இலை

தளிர் 

பளிங்குப்பாறைகள்

எல்லாம் தடவி விட்டு

என்னையும் தடவுகின்ற‌

மின்னல் துளிகளே.

சில்லிட்டு நுள்ளிவிட்டுப்போகிற‌

அந்த 

திவலைகளில் தெறிக்கிறது

பொங்குமாங்கடலின் ஏக்கம்.

நீலமும் சிவப்புமாய்

கொஞ்ச தூரத்து நீர்ப்படலத்தில்

அந்த மீன் கொத்தி

அந்தக்கெண்டையைக்கவ்விய பின்

மீண்டும் போட்டுவிட்டுப்

போகிறது.

"விழியே!விழியே!

உன்னை உண்ண மனமில்லை" என்று.

இந்த குத்துப்பாறைகளிடையே தான்

முளைக்கிறார்கள்

திரிகூட ராசப்பர்களும்

வைரமுத்துக்களும்.


________________________________________________________


பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

 பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

___________________________________________



மனிதனே

ஐம்பொறிகளின் 

ஆராய்ச்சிக்கூடம் தான்.

தினமும் நடக்கும் 

பரிசோதனைகள் தான்

வாழ்க்கை எனப்படுகிறது.

ஒரு கணித சமன்பாட்டின் தீர்வு

இப்படி ஆரம்பிக்கிறது.

எக்ஸை ஒய் என்போம்.

இறுதியில் இது முரண்பட்டு நிற்கிறது.

எக்ஸ் என்பது ஒய் இல்லை

என்று நிறுவப்படுகிறது.

மறுபடியும்

ஒய்யை எக்ஸ் என்போம்

என்று ஆரம்பிக்கிறோம்.

இதுவும் முரண் பட்டு நிற்கிறது.

முரண்பாட்டின் முரண்பாடு இது.

இது சாத்தியம் இல்லை

எனவே எக்ஸ் இஸ் ஈகுவல் டு ஓய்

என்று 

எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தியரி ஆஃப் நெகேஷன் ஆஃப் நெகேஷன்.

என்று

மார்க்ஸும் ஏங்கல்சும்

பொருள் முதல் வாதம் எனும்

அந்த அரிய "ஜேம்ஸ்வெப்" டெலஸ்கோப்பை

சொற்களின் பொருளுக்கு மிக் மிக 

அருகே 

கொண்டு சென்று விடுகிறார்கள்.

மீண்டும் அந்த‌

ஐம்பொறிக்கூடத்துக்கு வருவோம்.

கொஞ்சம் எட்டிப்பார்ப்போம்.

வாழ்க்கை எனும் துளியினுள்

அந்த வடிவக்கூறுகள் 

நேனோ வாக அங்கே 

இருவரால் ஆராயப்படுகிறது.

கடவுள் மனிதனைத்தேடுகிறது.

மனிதம் கடவுளைத்தேடுகிறது.

இவனுக்கு அவன் கடவுள்.

அவனுக்கு இவன் கடவுள்.

தீசிஸ்..ஆன்டி தீசிஸ்...சிந்தெசிஸ்.

டையலக்டிகல் மெடீரியலிசம்

டார்ச் லைட் அடிக்கிறது.

இப்போது எல்லாம் புரிகிறது.

வர்ணங்கள் இல்லை.வேதனைகள் இல்லை.


.அன்று  "ப்ரவ்தான்" என்பவர்

"வறுமையின் தத்துவம்" என்று

நூல் எழுதினார்.

அதற்கு எதிர் மிரட்டலாக 

அறிவின் கூர்மையான 

வாதங்களைக்கொண்டு

"தத்துவத்தின் வறுமை" என்று

மார்க்ஸ் எழுதினார்.

மனிதனின் மூளைப்பொறிக்குள் தான்

கடவுள் கரு தரித்தான்.


____________________________________________

ருத்ரா

புதன், 14 செப்டம்பர், 2022

சுடுமண் நாதஸ்வரம்

 சுடுமண் நாதஸ்வரம்

__________________________________ருத்ரா


Vannadasan Sivasankaran S

51 நி  · 

பைத்தியம் பிடித்த சூளைக்காரன்

செய்து பார்க்கிறான்

ஒரு சுடு மண் நாதஸ்வரத்தை.




வண்ணதாசன் அவர்களே.


உங்கள் அந்த‌

மூன்று வரிக்குள்

அட்னக்கால் போட்டு

உட்கார்ந்து உட்கார்ந்து 

பார்த்துவிட்டேன்.

ஆம்.

படைப்பவன் 

அவன் இறைவன் என்றால்

இன்னும்

வடிகட்டிய பைத்தியக்காரன் தான்.

ஜன்ய ராகம் தன்ய ராகம் 

அது இது என்று

எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராகங்களை

மில்லியன் கணக்கில் 

சுருட்டி சுருட்டி விரித்து

படுத்து தூங்கி எழுந்து விழித்து

வியர்த்து...

உணருவதை அந்த‌

மலட்டு சுடுமண் நாதஸ்வரம் 

சீவாளி ஊதி 

அமுத எச்சில் வழிய வழிய‌

பெய்து காட்டுமா என்ன?

யார் கண்டது?

அந்த நாதஸ்வரத்தை நிறுத்திவைத்து

உங்கள் மௌன அலைகளை

லேசர் ஆக்கி பாய்ச்சிப்பாருங்கள்.

அந்த ராட்சத டரன்டுலா நெபுலாவுக்குள்

ஒன்றியம் ஆகி விடுவீர்களோ

என்னவோ?

யார் கண்டது?


____________________________________________________

ருத்ரா

திரண்டு நில்லுங்கள்

திரண்டு நில்லுங்கள்

__________________________________________ருத்ரா


இளைஞர்களே!

உங்கள் காதுகளுக்குள்

எத்தனை கிலுகிலுப்பைகள்?

உங்கள் இமையோரங்களில்

ஜிகினாக் கனவுகளின் கூடாரங்கள்

எத்தனை? எத்தனை?

இன்னும் 

அடி குத்து வெட்டு

ஆகாசங்களையே சுருட்டு சுருட்டு

என்று பிசைந்து எடுத்து 

எம்பிக்குதித்து

எத்தனை சொமர்சால்ட்டுகள்?

சூப்பர்ஸ்டார் அரிதாரங்களின்

நயாகரா நீர்வீழ்ச்சிகளில்

சுகமாக தொலைந்து போகிறீர்கள்?

கால ஓட்டங்கள்

உங்களையும் சுமந்து கொண்டுதான்

ஓடுகின்றன.

நெட்ஃப்லிக்ஸ் உங்கள் நுண்பொறிகளில்

மயில் இறகுகள் கொண்டு

கிச்சு கிச்சு மூட்டுகிறது.

சத்யஜித்ரே பாணி படங்களின்

கலவையில்

பாகுபலி கிராஃபிக்ஸ்களும்

சேர்ந்து உங்கள்

சினிமாத்தனத்தை தோலுரிக்கத்

துவங்கி விட்டன.

சிட்டிசன்களின் முதுகுக்குப்பின்

நிழல்களாக‌

நெட்டிசன்களாகவும்

நீங்கள் மார்ஃபாசிஸ் பிம்பத்துள்

நன்றாகவே அச்சம் காட்டுகிறீர்கள்.

இந்த சமுதாய மருத்துவத்தில்

போலிகளும் 

பணமூட்டைகளைக்கொண்டு

வக்கிரம் அடைந்த அரசியலை

பிலிம் காட்டும் அபாயங்களையும்

ஓ! இளைஞர்களே!

உங்கள் அறிவின் திட்பத்தின்

நுட்பம் கொண்டு எதிர்க்கத்

திரண்டு நில்லுங்கள்.

நம்பிக்கையின் கொழுந்து நெருப்பில்

நீங்கள் காட்டும் வெளிச்சமே

இங்கு 

எல்லா கனத்த  இருட்டுக் கத‌வுகளையும்

தவிடு பொடியாக்கி விடும்.


_____________________________________________________

 

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

அகவு

 


அகவு

________________________


என் பேனாவுக்குள் 

தோகைவிரித்த எழுத்துக்கூட்டம்

அவள் நீள்விழிக்கு

மண்டியிட்டது.


பேச நினைத்தது

புதைந்து போனது.

புதைந்த விதையிலிருந்து

விழித்த ரோஜாக்கள்

விழித்த படியே

உதிர்ந்த‌

யுகங்களின் சருகுகளில்

என் சொற்கள் இன்னும்

காத்துக்கிடக்கின்றன.


ஒரு நாள்

நானும் அவளும் பேசிவிட்டோம்.

"கண்டிப்பாக வந்து விடுங்கள்"

"கட்டாயம் வருவேன்"

அவள் கொடுத்த திருமண அழைப்பிதழ்

இதோ

எனக்குள்

அகவுகிறது.

அகவிக்கொண்டே இருக்கிறது.

அவள் கூந்தல் தோகையுள்

சிலிர்த்துக்கொண்டே

அது

அகவிக்கொண்டே இருக்கிறது.


___________________________________________________

ருத்ரா

ருத்ராவின் கவிதைகள்

 ருத்ராவின் கவிதைகள்

___________________________



ஸ்ரார்த்த பிண்டமும்

குடல் வெளியேறிய எலியும்

இதற்கு ஒன்று தான்.


காக்கா.

_________________________________


அம்பது வருடமாய் புத்தகத்துள் 

வைத்திருக்கிறேன்

வண்ணங்களின் ஃபாசிலாய்.


பட்டாம்பூச்சி.

___________________________________


மிச்சக்கனவுகள் நுரையுடன்

காலையில் 

இந்த கோப்பையில்.


காஃபி

______________________________________

அன்புக்குரிய திரு சியாமளம் அவர்களே

 


அன்புக்குரிய திரு சியாமளம் அவர்களே



எங்கிருந்தாலும் வாழ்க 

என்று 

நீங்கள் எங்களுக்கு

எங்கிருந்து கொண்டாவது

வாழ்த்துகள் வழங்கினால் 

அதன் செழுமையும் செறிவும் 

அற்புதமானது.

ஜனவரி 2021ல் நீங்கள் 

மறைந்து விட்ட போதும்

அது எப்படி உங்கள் எழுத்தாளுமை

இன்னும் இங்கே 

உயிர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது?

நமக்கு இடையில் எப்போதும்

ஓடிக்கொண்டிருக்கும்

அந்த தாமிரபரணி ஆறும்

அந்த மண்டையன் ஆசாரிச் சந்தின்

டிங்கரிங் சத்தங்களும்

அதற்குள்ளிருந்தும் தன்

சிந்தனைச்சம்மட்டியால் நம்

தலையில் தினமும் சமட்டும்

மார்க்ஸின் மானுட இயல்

நிமிண்டல்களும் மறக்க முடியாதவை.

இப்படி

"மறக்க முடியாதவை" என்று

நம் மாணிக்கத்தருணங்களை

நமக்குள் 

குலுக்கி குலுக்கிப்பார்த்துக்கொள்ளும்

இந்த அரிய வாய்ப்புகளை

நல்கும் தோழர் அவர்களே.

இந்த மெல்லிய அருவி ஓசை

உங்களிடமிருந்து

நூற்றாண்டுகளையெல்லாம்

உருட்டிக்கொண்டு

ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

காலங்கள் தோற்றுக்கொண்டே

இருக்கட்டும்.

உங்கள் நினைவுகள் 

எனக்கு எப்போதும்

அந்த "அம்பாந்த்ர"

பச்சை வயல்கள் தான்.


_______________________________________________

செங்கீரன்

(இ.பரமசிவன்)

திங்கள், 12 செப்டம்பர், 2022

வண்ணதாசனின் தரிசனம்.



வண்ணதாசனின் தரிசனம்.



ஒரு சாவை 

அவர் தரிசனம் செய்ததில்

ஆயிரம் கோயில்கள்

குடி கொண்டிருந்தன.

அந்த உடலை மற்றவர்களோடு

சேர்ந்து தூக்கி கிடத்தியது.

அந்த கால்விரல்களை 

கயிற்றில் முடிச்சு போட்டது.

உயிரற்ற உடலைப்பற்றிய‌

அவரது கவிதை

அத்தனை உயிர்ப்புடன் இருந்தது

சிறு வயதுகளில்

நெய்ப்பந்தம் பிடிக்கும்போது மட்டும்

கூப்பிடுவார்கள்

தாத்தாவுக்கு 

சொர்க்கம் செல்லும் பாதையின்

இருட்டை துடைத்து அழிக்க.

மற்றபடி 

பசங்களா..பக்கத்துலெ வராதீங்கலெ

பயந்திருவீங்க..

வெளயாடப்போங்கலேன்னு

வெரட்டீருவாங்க.

சாவு செய்தியே தீட்டாகி

பக்கத்திலே

குழல்வாய்மொழி சமேத ஒரு

சிவன் கோயிலையே

இழுத்துப்பூட்டி விடுவார்களே.

இந்த நிலையில் 

நீக்கள் சாவும் கூட‌

மனிதன் அழகிய பக்கங்களில்

ஒன்று என்றும்

அவனால் முற்றும் என்று

எழுதிய நாவலின் முற்றுப்புள்ளியை

பார்க்கவே முடியாத 

எழுத்தாண்ட பக்கம் என்றும்

நினைத்திருப்பீர்களோ.

சாவைப்பற்றி 

சுகமாக ஒரு கவிதை எழுத‌

எமனின் மடியையே 

சௌகரியமான ரெக்ளைனிங்க் சேர் ஆக‌

வைத்து எழுதும் வல்லமை பெற்றவர்

நீங்கள்.

முயன்று முயன்று பார்த்து

வலிக்க வைக்க எண்ணியது மரணம்

கவிஞனை!

வாடா! காலால் உன்னை எட்டி 

உதைக்கிறேன்

என்ற அந்த எரிமலைக்கவிஞனின்

எட்டயபுரத்து சுவாசம் 

இன்னும் அடங்கவே இல்லை.

நாம் தான்

நினைவு தின தோரணங்களில்

அவனை 

தொங்க விட்டுக்கொண்டிருக்கிறோம்.

சாவு என்ற புள்ளி

பின்னுக்கே போய்

அந்த மாணிக்க கருப்பையில்

சுடர் பூத்ததையும்

தரிசனம் செய்பவன் 

கவிஞன் எனப்படுகிறான்.


______________________________________________

ருத்ரா



கழச்சி



தாசாலில் இருந்து கொண்டு

கால்களை நீட்டி

ஒரு சௌகரியத்தில் அமர்ந்து

அடுத்த வீட்டு

மீனாட்சி அக்காவுடன்

என் அக்காவும்

கழச்சி ஆடுவாள்.

தங்க அதலி செடியின் 

மஞ்சள் பூவும் 

அதன் பச்சைக்காய்களும் கூட‌

அவர்களோடு

பாட்டுப்பாடி ஆடும்.

அந்த பச்சைக்காய்களின்

பச்சநாவிக்கொட்டைகளா

இந்த உல்லாச விளையாட்டுக்குள்

பாத்திரம் வகிக்கின்றன?

அமுதமும் நஞ்சும் உடன்பிறப்புகள் தானே

பாற்கடல் பாசுரத்தானுக்கு.

பாட்டில் புராணம் கூட வரும்.

ஏன்

அந்த இந்திரனுக்கு

ஆயிரம் கண் முளைத்த 

பிலாக்கணங்கள் கூட வரும்.

அந்த தாஸாலில் 

கழச்சிகளாய் கலீர் கலீர்

என்று ஒலிப்பது

இப்போது வெறும் வயதுகளாய்

கரைந்து ஓடிக்கொண்டிருக்க்கிறது.


____________________________________________

ருத்ரா

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

 வாழ்க்கையை

வாழ்வதற்குப்பதில்

அதை 

கவிதை சிறுகதை

நாவல் என்று

நறுக் என்று கடித்தோ

நாவல் என்று

பல்லில் கடித்து

சவ்வு போல் இழுத்து 

பீட்ஸா தின்பது போல்

தின்றோ

ரசிக்கலாம்.

இசை ஆல்பங்கள் என்று

லட்சக்கணக்கில்  கோடிக்கணக்கில்

ஸரிகமபதிநிஸவை

பதினியில் நொங்குவெட்டிப்போட்டு

அந்த பனையோலைப்பட்டையில்

உறிஞ்சுவது போல்

ருசிக்கலாம்.

இன்னும் கண்ணாடிப்புட்டி

சொர்க்கங்கள் இருக்கின்றன.

நெட்ஃப்ளிக்ஸ் கிளிக்குகளில்

வாழ்க்கையின் காமிரா பிம்பங்களை

உருட்டிப்பிசைந்து உண்ணலாம்.

இதற்கு மேல்..

வாழ்க்கை என்றால்

வெறும் மன அடுக்குகள்.

அதன் ஹாலுசினேஷ சிமிட்டல்கள்

ஃப்ராய்டிஸ உட்பிறாண்டல்கள்..

இல்லாவிட்டால்

மாண்டூக்ய உபநிஷத காரிகைக்கு

உள் நுழைந்து 

முடக்கென்று பிடித்துக்கொண்ட‌ 

சிந்தனைச்சுளுக்குகளை

நீவி விடும் கௌடபாதன் வரிகள்..

தொடாமலேயே

சிந்தனை செயல் அறிவு உணர்வு

ஆகியவற்றால் தொடாமல் தொடுவது எனும்

"அஸ்பரிச யோகம்"...

ஆம்..

வாழாமலேயே வாழ்வது...

சரி தான்

அந்த முட்டை அப்படியே இருக்கட்டும்.

அதிலிருந்து

இந்த பிரபஞ்சங்கள் சிறகு முட்டிக்கொண்டு

வெளி வரட்டும்...

சரியா..

வாழ்க்கை எனும் அது

எப்படியேனும் வாழட்டும்..

அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே

நமது வேலை..

அல்லது இலக்கியம் 

அல்லது தத்துவம்

அல்லது

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

சமுதாயம்..

இதன் ரம்ப நாக்குகள்

அறுத்து தள்ளும்

அவலங்களின் சிதிலங்களின்

சித்திரங்கள் 

ரத்த வண்ணத்தில் மட்டுமே

வலியை வடித்துக்கொண்டிருக்கட்டும்.


_________________________________________________

ருத்ரா







ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

திரைச்சீலை

 சன்னலுக்கு 

பூப்போட்ட துணியில்

திரைச்சீலை மாட்டியிருந்தது

புதிதாய்.

வானம் வெட்கப்பட்டது 

கண்டாங்கிச்சீலை 

உடுத்திக்கொண்டது போல்.

பறவைகளும் அந்த வண்ணக்கிளையில்

கூடு கட்டிக்கொள்ளத் தவித்தன.

உள்ளே வந்துவிட்ட‌

பட்டாம்பூச்சிகளும் மலர்களைத்தேடின.

சிறகுகளில் ஒட்டியிருந்த‌

மகரந்தங்களை

சன்னல் கம்பிகளில்

உதிர்த்துவிட்டுப்போயின.

பூக்கள் மீது

மண்ணாங்கட்டிகளுக்கும்

இங்கு மோகம் தான்.

சன்னலை ஒட்டியிருந்த அந்த‌

மேஜையில்

என் பேனாவும் காகிதமும் மட்டுமே

மலடு தட்டிக்கிடந்தன.


_______________________________________________

ருத்ரா



சனி, 10 செப்டம்பர், 2022

அதை .....

 



அதை .....


வெறும் 2024 ஆக‌


புதிய தோரணங்களுடன்


வரவேற்க காத்திருக்கும்


அன்பான இந்திய மக்களே!


"ஆண்டு ஒன்று போனால்


வயது ஒன்று போகும்"என்று


சோழியை குலுக்கிப்போட்டு பார்த்து


ராசிக்கட்டங்களுக்குள் போய்


படுத்துக்கொண்டு விடாதீர்கள்.


ஓட்டு எனும் '


உக்கிராண அறை சாவி"


நம்மிடம் தானே


என்று 


ஒவ்வோரு தடவையும் அந்த‌


சாவி களவு போகவிட்டு


சரி போகட்டும் விடுங்கள்


என்று இருப்பவர்களாக‌


இருந்தால்


இந்த தடவை 


அந்த சாவி மட்டும் அல்ல‌


உங்கள் வீடு


உங்கள் தெரு


உங்கள் ஊர்


உங்கள் இனம்


உங்கள் மொழி


எல்லாமே தொலைந்து போகும்


ஒரு அபாயம் நெருங்கி இருப்பதை


உணர்ந்து விட்டீர்களா?


போதும்.


நிறுத்துங்கள்.


இந்த குத்தாட்டங்கள் 


குதியாட்டங்கள்


மின்னணு ஊடகங்கள் என்ற‌


பெயரில் இருக்கும்


இந்த மண்ணாங்கட்டி ஊடகங்கள்


கை பேசி வழியே


கலர் கலர்க்கனவுகள்


இவற்றையெல்லாம்


சீர்திருத்திக்கொண்டால் தான்


உங்கள் பாதை


உங்களுக்குத் தெரியும்.


உங்கள் பயணம்


உங்களுக்குப் புரியும்.


இந்த சாதி மத சாக்கடைகளா 


உங்கள் கங்கையும் பிரம்ம புத்திராவும்?


பக்தி சேனைகள் பதுக்கியிருக்கும்


வெறித்தீயில் கிடைக்கும்


சாம்பல் பாரதமா


சாதனை பாரதம்?


அநீதிகள் ஒழிய‌


அறிவொளி பரவுக!


வாழ்க 


நம் ஜனநாயக பாரதம்!


________________________________________________

ருத்ரா

கடைசித்துடிப்புகள்

 கடைசித்துடிப்புகள் 

__________________________________________________




கேட்டா கேளுங்கலே

இல்லாட்டா போய்ச்சாவுங்கலெ


அந்த பெரிய பழுப்பேறி 

கந்தலாய் இருந்த‌ 

வெள்ளைப்பிளாஸ்டிக் பையை

தோளில் போட்டுக்கொண்டு

அந்த குப்பை பொறுக்குநர்

கம்பில் கிடைத்த காகித கூளங்களை

எடுத்து எடுத்து

பையில் போட்டுக்கொண்டே சென்றார்.


மெலிந்த குச்சி உடம்பு.

வற்றிய முகம்.

வதங்கிய உடல்.

பிசிறுத்தலைமுடி சிலுப்பல்கள்.

ஏதோ ஜோர்டான் ஆற்றங்கரையில் நிற்கும்

யோவான் போல‌

சொல்லிக்கொண்டே

குப்பை செகரித்துக்கொண்டே இருந்தார்.


ஆமாலெ..கேட்டா கேளுங்க 

கேக்காட்டா போங்கலே...


‍புலி வருது புலி வருதுன்னு

நாங்களும் சொல்லிப்பாத்துட்டோம்.

புலியா..

பாத்துக்கலாம்..அதோடயே

குத்தாட்டம் போட்டா போச்சுன்னு

எளக்காரம் பேசுறதெல்லாம் இருக்கட்டும்.


மீட்பர் வராரு மீட்பர் வராருன்னு தான்

சொன்னேன்.

அவரையும் கட்டையிலே குத்தி

ஆணியடிச்சு

சாவடிச்சீங்க.

அவர் பொறந்த நாள 

கலர் கலரா பல்பெல்லாம் மாட்டி

கொண்டாடுறீங்களே..

ஒரு அப்பத்தை பிய்த்து

எல்லோருக்கும் கொடுத்தாரேமே..

அந்த சித்தாந்தம்

இன்னுமா உறைக்கவில்லை?

அந்தோ! பரிதாபம்!

கம்யூனிசம் கூட‌

மிராகிள்ல வந்தாதான் உண்டு.

~

இந்த ஒலகத்து மண்டையிலேயே

முட்கிரீடம் மாட்டி

பிளந்து துண்டு துண்டாக்கி

பிசினஸ் பண்ற‌

கார்ப்பரேட்டுகளும்

அவங்களோ பிட் காயின்ஸ்ம் தான்

ஒங்க இடுப்புல கயித்தகட்டி

ஆட்டி வச்சுகிட்டே இருக்கப்போவுது...


இல்லாட்டா கூட‌ 

மதங்களுக்கும் சாதிகளுக்கும் தான்

இங்க பஞ்சமில்லையே.

ராமா கிருஷ்ணான்னு

ராட்டினம் சுத்ர வேலய வச்சு

மக்கள எல்லாம் 

கார்ப்பரேஷன் குப்பையாக்கி

காலியாக்க்கிடுவானுக..

எல்லா பிரபஞ்சமும் கரிப்பிடிச்சு 

எரிஞ்சு 

இருட்டுப்பிண்ட‌மும் 

இருட்டு விசையும் தான் மிச்சமாம்.

அந்த கரிப்பிடிச்சவன் வேசத்துலெ

கடவுளே கீழே எறங்கி

ஒரு  கோயில்ல போய்

கடவுள பாக்கப்போனாராம்.

யார்ரா நீ

நீ தீண்டப்படாதவன்னு

நூல் போட்ட‌

ஒரு வெள்ளைக்காரன்

கத்தினான்.

இவன் தீட்டுப்பட்டவன்

இவன எரிங்கடான்னு சொன்னான்.

இப்டி இருக்கும்போது

என்னத்தப்பண்ணி கிழிக்கப்போறீங்க..

மொதல்ல‌

மனுஷ்ஷன்னா யாருன்னு

பாருங்கலே.

எலெ...அவன் மூளைக்குள்ள‌ மனசுக்குள்ள‌

பெரிய தீ எரியுதுலே

அதுக்குள்ளேருந்து கோடி கோடி...கோடி 

பிரபஞ்சங்கள கொணாந்துரலாம்லெ


எலெ..

இதுல தேர்தல்னு ஒரு தந்திரம் 

பண்றாங்களே

இங்கே..

அது சூட்சுமம் தெரியுமா?

கணிப்பொறியோ காகிதமோ

எப்டி நீங்க‌

ஓட்டுப்போட்டாலும்

அவ்ய்ங்கதாப்பு வந்து குந்தப்போறாங்க.

மூட்டை மூட்டையா கோடிகள் வச்சு

யாவாரம் நடந்துட்டுருக்கு.

தோத்தாலும் பரவாயில்ல‌

ஜெயிச்சவங்களே அப்படியே

அள்ளிக்கொணாந்து வச்சுக்கல்லாம்.

இதெ என்னைக்கு புரியப்போறீங்க..

போங்கலெ

வேலய பாத்துக்கிட்டு.

என்ன வேலயா..?

அதாம்லெ ..போய்ச்சாவுங்கலெ

ஒங்கள சாவடிக்கிற பயத்துலேயே

வச்சு

சாவடிச்சுட்டே இருப்பானுக...

..........................


குப்பை சேர்ந்து மூட்டை பெரிதாகியது.

அந்த பொறுக்குநர்...

கிரீச்...

எதிரே வரும் ராட்சச லாரியின் கீழே..

நசுங்கிய‌

கரப்பான் பூச்சியாய்..

முள்ளு நிறைந்த கால்களும்

நீள அன்டெனா மீசையும்

அசைந்து கொண்டே இருந்தன.

கடைசித்துடிப்புகள் அவை.


_____________________________________________________‍‍‍

ருத்ரா






போன்ஸாய்

 போன்ஸாய்

__________________________________

ருத்ரா




மேஜையில் 

ஒரு கண்ணாடி குடுவையில்

விளையாட்டு போல்

ஒரு ஆலங்கன்று நட்டேன்.

அதற்குள்

எப்படி ஒரு முழு வானத்தின்

குடை முளைத்தது?

சூரியனும் எப்படி

அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது?

அமேசானின் அசுர மழையும்

அங்கே

அந்த வேர்த்தூவிகளில்

எப்படியோ ரத்தம் பாய்ச்சியது.

பாருங்கள்

என் காகிதமும் பேனாவும்

என் கூட வர மாட்டேன் என்கிறது

கவிதை எழுத.

அந்த அடையாறு ஆலமரமே

அந்த கண்ணாடிச் சிமிழுக்குள்

கண் சிமிட்டுவதை

என் மேஜை உலகமே 

வெடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

பவளம் போல கொத்தாய் கிடக்கும்

ஆலம்பழங்களை கொத்த‌

பவள மூக்கிகளான கிளிகள் கூட‌

வந்து விட்டன‌

சின்ன சின்ன கொசுக்கள் போல.

அந்த கிளைகளினூடே

"கல்லிவர்ஸ் ட்ராவல்" நாவலின்

பிஞ்சிலும் பிஞ்சான சிறுபயல் ஒருவன்

சிறு வண்டாய் 

விறு விறு என்று

ஏறிக்கொண்டிருக்கிறான்.


________________________________________________________










வியாழன், 8 செப்டம்பர், 2022

வண்ணதாசன் ஆற்றுப்படை 2

 வண்ணதாசன் ஆற்றுப்படை 2

______________________________


பிள்ளையார் நினைத்தால்

அம்மா அப்பாவிடம் 

ஒரு பூவை வாங்கி

தூக்கிப்போட்டு

பிடித்துவிட்டேன் என்பார்.

_______________________________

ருத்ரா

வண்ணதான் ஆற்றுப்படை


இறந்த காலம் 

நிகழ் காலம்

எதிர் காலம்

சூரியனை நெய்து

இந்த சட்டையை 

மாட்டி விட்டவன் மனிதன்.

காலப்பாம்பு நம்மீது

ஊர்வதாய் கொண்டால்

அது

இருபதை நக்கினாலும் சரி

எழுபதை நக்கினாலும் சரி

அதற்கு வெறுமே

உப்பு கரிச்சு தான் கிடக்கும்.

வெறுத்துப்போய் 

கொத்தி விட்டால் மட்டுமே

அந்த மரணத்தில்

பிரம்மம் சுவைக்கும்.

வேறு என்ன சொல்வது?

எலுமிச்சைப்பழத்தோலில்

தீபம் ஏற்றி

கால பைரவனிடம்

கேட்டுப்பார்க்க வேண்டும்.

___________________________________

ருத்ரா


(வண்ணதாசன் கவிதைகளுக்குள்

பயணம் போக நான் எழுதிய‌

வண்ணதான் ஆற்றுப்படை)



வண்ணதாசன் அவர்களே!

 வண்ணதாசன் அவர்களே!

ஒவ்வொரு கவிஞர்களும் காகிதங்கள் தான்.

அப்படித்தான் உங்கள் 

காகிதங்கள் காற்றில் சிதறிக்கிடந்தன‌

கவிதைகளை கழற்றிப்போட்டுவிட்டு.

வாடகைக்கு எடுத்துக்கொள்ளுவது போல்

அப்படியொன்றை எடுத்து

நானும் ஒரு கவிதை எழுதினேன்.

என் மனம் என்னை இடித்துக்கேட்டது.

என்ன தெனாவட்டு உனக்கு?

நானும் எனும் சொல்லில்

"உம்மை இழிவு " எனும்

இலக்கணக்குறிப்பு மட்டுமே உள்ளது.

ஒரு கவிதையின் நரம்போட்டத்தின்

சுவடு கொஞ்சம் கூட இல்லாமல்

பேனாவின் காக்கா வலிப்புக்கு

எழுத்துக்களை கோர்த்துக்க்கொண்டிருக்கிறாய்.

சரி மனமே! விட்டு விடு என்னை.

ஒரு வழியாய் அதை விரட்டிவிட்டு

அந்த காகிதத்தைத்தேடினேன்.

அது எங்கோ ஒரு மூலையில்

கசக்கி உருட்டி வீசப்பட்டு கிடந்தது.

மோசமான ப்ளேஜியரிசம் எனும் படுகுழியில்

நான் விழுவதை தடுத்ததாய்

அந்த இன்விசிபிள் கைகள் 

அசைந்து கொண்டிருந்தன.

இருப்பினும் தேடினேன் என் கவிதையை.

அது எழுத்துக்களின் 

குவாண்டம் என்டாங்கில்மென்ட்.

அவர் எழுதும்போது

எனது காகிதத்திலும் 

வரிகள் உழுது நெளிந்து வரும்.


____________________________________________________

ருத்ரா



புதன், 7 செப்டம்பர், 2022

தெக்குபூத்தெரு


தெக்குபூத்தெரு

_____________________________________

ருத்ரா




நியூயார்க் டைம்ஸ்குவேர் கூட‌

அப்புறம் தான்.

திருநெல்வேலியின் தெக்குபூத்தெரு

என்றால்

திருநெல்வேலிக்கார‌னுக்கு

இல்லை இல்லை.

தின்னவேலிக்காரனுக்கு

உடம்பெல்லாம் 

இதயம் முளைத்து 

துடிக்க ஆரம்பிக்கும்.

தெக்குப்பூதெருவு

மரமே இல்லாம 

எப்படி இப்படி "பூத்து"இருக்கு?

இது தான் திருநெல்வெலிக்காரந் தமிழு.

இனிப்பு தேங்காபூக்கணக்கா

ருசியா நெனவுல இருக்கிறது

இந்த தெக்குப்பூத்தெரு தான்.

"தெற்குப் புதுத் தெரு"தான்

இப்படி கூத்துகட்டி பாட்டு பாடுது.

பரமபதக்கட்டம் விளையாட்டு போல்

இருக்கும் 

வீடுகளின் கொத்து கொத்தான‌

வாசல் முடுக்குகள்.

எங்கு ஏணி

எங்கு பாம்பு 

தெரியாது.

எப்படியும்

மாமா அத்தை

சித்தி சித்தப்பா

அவர்களின் பிள்ளைகள்

எல்லாம்

சேக்காளிகளாய் இருப்பார்கள்.

அவர்களோடு

ரத்னா

பார்வதி

பாப்புலர்

ராயல் என்று

சினிமா டாக்கிஸ்களுக்கு போய்

படம் பார்த்து வருவது

சொர்க்க லோகம் போவது போல் தான்.

ஒவ்வொரு வீடும்

ஒரு சிறுகதை

ஒரு நாவல் 

ஒரு துணுக்கு

என்று 

நம் நினைப்புகளில்

அவல் தான்.

எழா..என்ன‌

அடுப்பாங்கரை வேல எல்லாம்

முடிஞ்சுதான்னு

உரையாடல் துவக்கினார்கள்

என்றால்

கலைடோஸ்கோப்பு சித்திரங்கள் போல்

வண்ண வண்ண உருட்டல்களில்

பாடு பேசல் எனும்

நிகழ்ச்சி நிரல் நீண்டுகொண்டே

இருக்கும்.

அப்படியென்றால்

அந்த தெருவில் வாக்கிங் போவது..

அது தான் இல்லை.

அந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற‌

அனுபவங்கள் எல்லாம்

வாகையடி முக்கு

வாய்க்காங்கரப்பாலம் தாண்டி

அந்த ரயில்வே ஃபீடர் ரோட்டின்

வயல் விரிப்பு தாலாட்டும்

காற்று வெளியில் மிதந்தால் 

மட்டுமே சுகம்.

நெட்டக்கழுத்து மரங்களின்

உயரம் 

பச்சைஇலை அடர்த்தியை வைத்து

நிழலையே பரப்பி வைத்து

கூழு வத்த காயப்போட்டது மாதிரி

சிவனோட புலித்தோலை

கார்பெட் ஆக்கி குளு குளு உணர்வை

தூவியிருக்கும்.

அதுல வாக்கிங் போய்ட்டு

அப்படியே ரோட்டோர சிமிண்ட் பெஞ்சில்

உக்காந்து 

தெங்காசி போற ரயிலை

உத்துப்பாத்தப்பறம்

அது அடுத்து போகும்

அந்த சேர்மாதவி கூண்டுப்பாலத்துக்குள்ள‌

நொழஞ்சு போறதையும் கற்பனைபண்ணி

பாத்து நெட்டுயிர்த்த போது

அதில் தான் திருநெல்வேலி வாசனை

மொக்கிகிட்டு நிக்கும்.

மந்திரமூர்த்தி ஸ்கூல் கட்டிடம்

கம்பீரமா மருத மரங்கள்

தோள்ல கை போட்டு நிக்கிற மாதிரி

போஸ் கொடுக்கும்.

இந்த ஹேலுசினேஷ சில்லிப்புகள்

அந்த ரோட்டில் நிறையவே

எனக்கு கெடச்சிருக்கு.

______________________________________________________

திங்கள், 5 செப்டம்பர், 2022

தீர்வு

 தீர்வு

____________________________________________‍

ருத்ரா



அந்த பாழடைந்த மூலையில்

நூலாம்படைகளின் சித்திரம்.

தூரிகை

கண்ணுக்குத்தெரியாமல்

வண்ணங்கள் ஏதும் குழைக்காமல்

அந்த கோட்டோவியமே

நம் நிலை காட்டும் ஓவியம்.

எத்தனைப் பூச்சிகளை

சுருட்டி சுருட்டிப்போட்டு

அந்த சிலந்தி விழுங்கியிருக்கிறது.

சாதியாக‌

மதமாக‌

சடங்குகளாக‌

சாஸ்திரங்களாக‌

மந்திரக்கூப்பாடுகளாக‌

இந்த மக்கள் எல்லாம்

இந்த மாயவலையில் 

சுருட்டப்படுகிறார்கள்.

இத்தனை நூற்றாண்டுகளாக‌

இந்த பின்னலும் நெசவும்

மூடத்தனத்தில் முடங்கிய நம்

சரித்திரங்களையே 

சின்னாபின்ங்களின்

சித்திரங்கள் ஆக்கியிருக்கின்றன.

அந்த பாழடைந்த மூலைகளில்

இதோ நம்

பகுத்தறிவு தீப் பந்தங்களைப்

பிடியுங்கள்.

விட்டால் இந்த சாணக்கிய சிலந்திகள்

விடிவின் வாசல் திறக்கும்

சூரியன்கள் மீதே

ஒட்டடை படர்ந்து

நம்மை 

அறியாமை இருட்டில் தள்ளிவிடும்.

விழித்தெழு தமிழா!

இனி உன் குரலே 

யாவற்றுக்கும் தீர்வு.


______________________________________________‍‍

ஓட்டை

 அந்த சிலேட்டுப்பலகையில்

கரிக்குச்சி கொண்டு

எழுதி வாசித்துப்படித்தோம்.

அந்தப்பலகையின் ஓரத்துக்கீறலில்

ஒரு நாள் 

ஒட்டியிருந்த துண்டும் உடைந்தது.

அதனால் திறந்த சன்னலில்

புதிதாய் எல்லாம் புரிந்தது.

சிலேட்டின் அந்த பக்கம்

அகர முதல புரிந்தபோது

இந்தப் பக்கம் 

நம் ஓட்டைச்சமூகமும்

புரிந்தது.


__________________________________________‍

ருத்ரா




வ உ சி எனும் உயிர் வெளிச்சமே வாழ்க‌

 வ உ சி எனும் உயிர் வெளிச்சமே வாழ்க‌

____________________________________________

ருத்ரா



வெளிச்சம் வேண்டுமானால்

தீ வேண்டுமே.

அடிமை இருட்டு அகல 

இந்த தீ தான் 

நம் பிணங்களுக்குள்

உயிர் பெய்தது.

சுதந்திர சுவாசத்தின் இந்த‌

தீவிர வாதம் 

பொங்கிப்பெருகிய வரலாற்றின்

சுருக்கம் தான்

வ உ சி.

அடிமை மக்களின் வாழ்வை

மேலும் அடிமைத்தனத்தில் 

தீயிட்டுப் பொசுக்கும்

மதவெறி காழ்த்த‌

தீவிர வாதம் அல்ல இது.

அதனால் தான்

இவரை வெறும் வியாபாரி என்று

கொச்சைப்படுத்திய போது

கொந்தளித்தது

செந்தணல் வீசிய‌

செந்தமிழ்க்கூட்டம்.

வ உ சி எனும் 

சுதந்திரத்தின் 

உயிர் வெளிச்சமே வாழ்க!


_________________________________






ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

எல்லோரும் கொண்டாடுவோம்

 எல்லோரும் கொண்டாடுவோம்

__________________________________________________



கடவுள் என்பதை 

மனிதனே  உருவாக்கினான்.

மனிதன் முதன் முதலில் 

அறிவு கொண்டு சிந்திக்க தொடங்கிய போது

இது என்ன? 

அது ஏன்? 

இது எப்படி? 

என்ற கேள்விகளால் துளைக்கப்பட்டான்.

எல்லாம் எப்படி தொடங்கியது 

என்பதில் தான் 

அவன் தேங்கிபோனான்.

அது செயற்கையான கொள்ளுதல் (கொள்கை)

ஆக இருக்கும் போது 

இதை வைத்துக்கொள்ளுவோம் என்று

தன் கைப்பிடிக்குள் (பிண்டம்) ளிருந்து 

ஒன்றை உருவாக்கினான். 

அப்படித்தேங்கியவர்களே 

கோவில் என்றும் சிலை என்றும் 

கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முழு மனிதர்களாக 

மேற்பட்ட கேள்விகளை 

இன்னும் கேட்டுக்கொண்டிருப்பவர்களே

இந்த உலக வாழ்க்கையின் வளர்ச்சியை 

உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களுடைய செயற்கை செட்டிங்குகளே

இந்த மதங்கள்.

இந்த பொ(ய்)ம்மைகளை வைத்து 

முதிர்ச்சி அடையாத 

இவர்கள் விளையாடலாம்.

ஆனால் பொம்மை ஆயுதங்களை 

உண்மை ஆயுதங்கள் ஆக்கி 

மனிதர்களை பலிகொள்ளும் அளவுக்கு 

"கெட்ட போரிடும்"நிகழ்வுகளில் வீழ்வது 

மனிதப்பரிமாணத்தின் 

தலைகீழ் வீழ்ச்சி.

இது சாதாரண வீழ்ச்சி அல்ல‌

ஒரு நயாகரா வீழ்ச்சி.

பாருங்கள் அதன் குதியாட்டங்களை.

இரைச்சல்காடுகளில்

அமுங்கிப்போனவை 

மெல்லிய உண்மைகளே.

மனிதனே கடவுள்.

மனிதனுக்கு மனிதனாய்

வாழும் அந்த அன்பு மின்சாரத்தின்

பாய்மமே பிரம்மம்.

அப்படி என்றால் கடவுள் என்று

ஒன்றுமே இல்லையா?

ஆம்.

நான் சொன்னால் நீ கோபம் கொள்ளுவாய்.

நீயே

சொல்லிக்கொள்ளேன்.

ஆம்...

இல்லை.



__________________________________________

ருத்ரா

சப்பரம்

 சப்பரம்

___________________________________________

ருத்ரா



ஒவ்வொரு மணித்துளியும்

சொட்டு சொட்டாய்

முற்றுப்புள்ளி வைக்கிறது.

இடைவெளியைக்கூட‌

லட்சக்கணக்காய் கூறு போடுகிறது

இயற்கை எனும் இயற்பியல்.

அந்த நுண்துளிக்காலத்தில்

நுண்ணுயிரிகளின்

பிரபஞ்சங்கள் பல கோடி.

எதை அடையாளம் காண்பது.

ஆம்.

திரும்பிப்போக‌

வீடு மறந்து விட்டது

கடவுளுக்கு.

மனிதன் வழி காட்டுகிறான்

தன் கணித நுட்பத்தால்.

"எண்கள் என்பவை எல்லை கடந்தது.

அதில் பகா எண் எனும் 

ப்ரைம் நம்பர்களின்

இறுதி எண்ணில் தான் 

உங்கள் வீடு" என்றான்.

கடவுளும் மலைத்தது போல் நின்றார்.

அப்புறம் 

சிரித்துக்க்கொண்டே சொன்னார்.

அந்த வீடு நீ தான்.

அதில் எப்போது நுழைவாயோ

அதில் தான் நானும் நுழைவேன்."

அவனது "வாயேஜர்"

இப்போது தான்

சூரியன் வீட்டு புழக்கடையைத்

தாண்டியிருக்கிறது.

"ம்ம்ம் சப்பரம் புறப்படட்டும்."

குரல்கள் குதூகலித்தன.

கோவிலிலிருந்து 

சாமி ஊர்வலம் துவங்கியது.


___________________________________________________

54வது திருமண நாள்

இன்று எங்களுக்கு

54வது திருமண நாள்!

கெட்டி மேளங்கள்

தட்டி தட்டி இசைத்தபோது

எங்கேயோ 

இமயங்கள் தேடி

சிகரங்கள் தேடி

இன்பக்களிப்போடு

நடக்கத்துவங்கி விட்ட‌

ஒரு உணர்வு.

எங்கள் இருவரது உள்ளங்களும்

அந்த தாமிரவருணி ஆற்று

பளிங்குப்பிழம்பாய்

நடந்தபோது

வாழ்க்கையின் பிம்பம் காட்டிய‌

ஒரு ஹோலோகிராஃபி ஓடியது.

வாழ்க்கை நிஜம் ஆகியது.

வெற்றிக்குவியல்களின் மேல்

எங்கள் பயணம்.

குழந்தைகள் பேரக்குழந்தைகள்

என்று

எங்கள் தேசம் 

விரித்த பாசக்கொடியில்

இருந்ததெல்லாம்

அன்பின் மாணிக்கத்தருணங்களே.

இந்த நினவுகளும் நிகழ்வுகளும்

பின்னிய பொற்கொடியில்

மேலும் மேலும்

மகிழ்ச்சிப்பூக்கள்

பூத்துக்குலுங்கட்டும்.


___________________________________________________


 

சனி, 3 செப்டம்பர், 2022

உனக்கு புரிந்து போயிருக்கும்

 எப்படி வேண்டுமானலும் 

எதற்கு வேண்டுமானாலும்

கவலைப்படு.

கவலைப்படவேண்டுமே 

என்ற 

கவலையே இல்லாமல்

கவலைப்படு.

கவலைகள் அடர் மழை தான்.

இந்தக் கவலையையே

குடையாக்கிக்கொள்.

கொஞ்ச நாளில் 

உன் அகராதியே மாறிப்போகும்.

எந்தச்சொல்லுக்கு

நீ அர்த்தம் தேடினாலும்

அது கவலை என்றே

அர்த்தம் சொல்லும்.

இப்போது தான்

ஒரு சொல்லின் அர்த்தம்

அகராதியே இல்லாமல்

உனக்கு புரிந்து போயிருக்கும்.

அது

"வாழ்க்கை"


___________________________________________________

ருத்ரா

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

தேங்காய்களின் உலகதினம்

 தேங்காய்களின் உலகதினம்

___________________________________

ருத்ரா



உலகத்தேங்காய்களே!

அதற்கு முன் நீங்கள்

இளநீர்க்காய்கள்.

அதற்கு முன் 

நீங்கள் தென்னை மரங்கள்.

உள்ளே குலுங்குவது

இனிக்கின்ற வெறும்

தண்ணீர் அல்ல.

ஈழத்தமிழர்களின் 

லட்சம் படுகொலைகளுக்கு

இன்னும் 

வடிக்கின்ற கண்ணீர் தான் அது

என்று

ஓ உலகத்தேங்காய்களே

உங்களுக்கு ஓர்மை இல்லையோ?


_____________________________________________

அரிதாரம் பூசுகின்றது

 


சொட்டு சொட்டாய் 

என் மீது உதிர்ந்து கொண்டிருக்கிறது.

அதை

பேனாவுக்குள் அடைத்து

அல்லது 

விசைப்பலகையில் 

தட்டச்சுக்குள் கோர்த்து

மாலை தொடுக்கிறேன்.

எழுத்துக்குள் ரசம் பாய்ச்சி

ஒரு கண்ணாடி பிம்பமாய்

என்னைக் காட்டிக்கொண்டேயிருக்கிறது.

அங்கங்கே திட்டு திட்டாய்

ரசம் இல்லாத இடத்தில்

இன்னொரு முகம்

தெரிகிறது.

அது யார்?

அது ஏன் தெரியவேண்டும்?

சிரிப்பு தெரிகிறது.

அதன் அழைப்பின் சுழிப்பில்

நீலக்கடலும் நீலவானமும்

கலந்து கொடுத்த காக்டெய்லில்

கலர் கலர் கனவுகள்

இமை விளிம்பில் 

அரிதாரம் பூசுகின்றது


______________________________________________

ருத்ரா

வியாழன், 1 செப்டம்பர், 2022

கேட்கட்டும்

 கேட்கட்டும்

________________________________________‍

ருத்ரா



மரம் நிறைய் இலைகள்.

இலை நிறைய சூரியத்தழுவல்.

பச்சையம் என்ற‌

உயிர்ப்போர்வை தரும்

பச்சை நிழலுக்குள்

பட்டாம்பூச்சிகளின் 

பல்கலைக்கழகங்கள்.

காற்றின் சிலுசிலுப்பு

ஏதோ ஏக்கங்களைக் கொண்டு

நெய்யத்தொடங்கின.

கண்களுக்குள் அகப்படாமல்

கைப்பிடிக்குள்

உள்ளங்கை ரேகைகள்

அனக்கொண்டாக்கள் நெளியும்

அமேசான் ஆறுகளாய்

அனல் பரப்பும் நினைவுகளை

அங்கே நெஞ்சமே

லாவாவைக்கொட்டி

படுக்கை விரித்தன.

ஏன் இந்த அழுத்தங்கள்?

கடவுள் எனும் மயிற்பீலி கொண்டு

வருட நினைத்தால்

அங்கே நம்பிக்கையும் மனத்தெளிவும்

தொலந்து கிடக்கும்

முரட்டு வசனங்களே

மந்திரங்களைக்கொண்டு

வதம் செய்கின்றன.

செம்பவளங்கள் போல்

அந்த ஆலமரத்துப்பழங்கள்

நீலவானத்தை உரசி உரசி

ஒரு செவ்வானத்தேனை பிழிந்து

இனிமையால் என்னை

ஆட்கொள்ளுகின்றன.

இதை மட்டுமே என் இறைவம்

என்று 

நான் சூட்டிக்கொள்கிறேன்.

இப்போது அந்த 

கடவுள் கேட்கட்டும்

வரம் தருவேன்.


_____________________________________________________