• Home »
  • கவிதைகள் »
  • டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)

டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)

This entry is part of 22 in the series 20010917_Issue
ருத்ரா

இந்த கள்ளிக்காட்டைச்
சுற்றி சுற்றி வருகின்றோம்.
கம்பளிப்பூச்சிகள்
மொய்த்துக் கிடப்பது போன்ற
இந்த முட்களுக்குள்
காதல் களியாட்டங்களின்
ரோமாபுாி ராஜ்யங்களை
பதியம் போட்டுவிட
சுற்றி சுற்றி வருகின்றோம்.
எங்கும்….இந்த
முட்காடுகளின்
முக்காடுகள்.
அதிகாலை ஐந்து மணிக்கே
அலாரம் வைத்து
எழுப்பிவிட்ட
சுவர்க்கோழிகளின் ‘கிறீச்சுகள் ‘
சுப்ரபாதம் இசைக்கும் போதே
சுண்டிய ரத்தத்தின்
இந்த விதைகளைத்
தூவியது யார் ?
விந்துகளை மேலேற்றும்
‘ஊர்த்துவ ரேதஸ் ‘எனும்
தவம் புாியும் முனிவனா
பிரபஞ்சம் ?
முட்டையை
உடைக்க வந்த மேனகையா
இந்த ‘பிக் பேங்க் ? ‘.
கருத்துக்கும்
நடப்புக்கும்
நடுவே
இன்னமும் நிழல்.
அசைவுக்கும்
அதிரடிகளுக்கும்
இடையே
இன்னமும் நிழல்.
இந்த
நிழல்வீழ்ச்சியில்
உயிர் அமுதம் சொாியும்
நீர்வீழ்ச்சி.
‘ஆண்டவரே ! ‘
‘உமக்காகவே இந்த ராஜ்யம்.. ‘
கருவின் நிகழ்ச்சிக்கும்
கருவின் திரட்சிக்கும்
நடுவே ஒரு நிழல்.
எண்ணத்தின்
புடைப்புக்கும்
படைப்பிற்கும்
நடுவே ஒரு நிழல்.
கொப்புளிக்கும் உணர்ச்சிக்கும்
கோலமிடும் நெகிழ்ச்சிக்கும்
நடுவே ஒரு நிழல்.
‘ ‘..இந்த ஜீவியம் நீடூழி வாழும்ம்ம்ம்ம்…. ‘
ஆசைக்கும்
ஆவேசத்திற்கும்
ஊடே ஒரு திரையாய்
இந்த நிழல்…
காதலுக்கும்
காக்காய் வலிப்புகளுக்கும்
ஊடே ஒரு திரையாய்
இந்த நிழல்….
சிலிர்ப்பதற்கும்
துளிர்ப்பதற்கும்
ஊடே ஒரு திரையாய்
இந்த நிழல்…
பிறப்பதற்கும்
இருப்பதற்கும்
ஊடே ஒரு திரையாய்
இந்த நிழல்…
பிழி படும்
முன்னும் பின்னும்
இந்த உயிர்ச்சாற்றின் ஊற்றே……
இந்த நிழல்…
சந்ததிகள்
கூடை கூடையாய் ஈசல்கள்.
காதல் எனும்
சீனி பாட்டிலுக்குள்
சாாி சாாியாய் எறும்புகள்.
மில்லியன் மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னமேயே
விறைத்துக்கிடக்கும்
அந்த ராட்சஸப் பல்லிகளின்
கூபக எலும்புப்பூட்டுக்குள்ளும்
கூளப்ப நாயக்கன் காதல் கதைகள்.
‘ஆண்டவரே ! ‘
‘உமக்காகவே இந்த ராஜ்யம் ‘…
‘உமக்காக…..
இந்த ஜ ‘வியம்….
உமக்காகவே…
உமக்காகவே…
உமக்காகவே……. ‘
தேவ வசனங்களுக்கு
ஒரு நாள்
தீப்பிடித்துக் கொண்டது.
ரத்தம் பாய்ந்து
சதைப்பிடித்தது.
வார்த்தைகளில் எல்லாம்
மாமிசப்பணியாரங்கள்.
பங்கு தந்தைகளுக்குள்
பங்குச் சந்தைகள்
பங்கு வகித்ததில்
தேவாலய மணிகளின்
நாக்குகளில் எல்லாம்
நீர் ஊறியது…
ஒடிந்து கிடக்கும்
உங்கள்
எலும்புத்துண்டுகளை வைத்து
ஒரு ‘நோவாக் கப்பல் ‘
கட்டிக்கொள்ளுங்கள்.
ஆசைப்புயல்..
காமக்கடல்…
உங்களை ஒருவரோடு ஒருவர்
கொன்று தீர்த்துக்கொள்ளும்
வெறியலைகளின்
கொந்தளிப்பு…
அதோ..
ஊழிப்பிரளயம்..
உங்கள் உதட்டருகே…
முத்தங்களில்.
உயிர்த்துளிகளில் எல்லாம்
உயிர்களை விழுங்கும்
சமுத்திரங்கள்….
அதோ..உங்கள்
இமை மயிர்களின் தூக்கில் தொங்கும்
இமயங்கள்.
சுக்கல் சுக்கலாய்
உடல் சிதறும் பனிப்பாளங்கள்.
அமர்நாத் பனிலிங்க வடிவில்
அம்மணமாய் தொியும்
அணுகுண்டுகள்…
உள்ளீடு அற்ற
உலக உருண்டைக்குள்
சூாியன்களைக் காய்ச்சி
ஊற்றுவோம் வாருங்கள்.
சவப்பல்லக்கு
தூக்கிச்சுமந்தது போதும்.
சம்பிரதாயங்களை
அடித்துத்துவைக்கலாம்
வாருங்கள்.
இல்லையென்றால்
இந்த ‘சப்பளாக்கட்டை ‘களுக்குள்
நசுங்கிப்போங்கள்.
உடுட்டும்
செபமாலைக்குள்
செல்லாித்த கணங்களாய்
கரைந்து போங்கள்.
இப்படித்தான் முடியப்போகிறது உலகம்…
இப்படித்தான் முடியப்போகிறது உலகம்…
இப்படித்தான் முடியப்போகிறது உலகம்…
விடியல் அல்ல..விசும்பல் அது.
வெடிக்கவில்லை….வெம்பல் அது..
கிழித்துக்கொண்டு வரமுடியாத
கிழக்கு வாசல் அது.
நாளங்கள் வெடிக்கும் முன் உங்கள்
நாட்களை பழுது பாருங்கள்.
சூாியனின்
ரத்தவாந்தியிலா உங்கள்
பூபாள ரங்கோலிகள் ?
பூட்டி வைக்காதீர்கள்
உங்கள் பூஞ்சிாிப்பை.
============================ருத்ரா
(மொழிபெயர்ப்பு எனும் 
மறு உயிர்ப்பு
முற்றும்….முற்றும்….முற்றும்)

=========================================================================


ஒரு பிற்சேர்க்கை…..


ருத்ரா


துண்டை உதறி
தோளில் போட்டுவிட்டேன்.
இடுப்பில் நாலு முழம்.
உள்ளுக்குள்
வேதங்கள் சொல்லும்
‘ஆத்மா ‘வாய்
அந்தரங்க நாற்றம் அடிக்கும்
கெளபீனம்.
பனியனுமாய் இல்லாமல்
சட்டையுமாய் இல்லாமல்
டப்பாக்கை வைத்த
சட்டை என் உடம்பில்.
நெற்றியில் ரூபாய் அளவு
வட்டக்குங்குமம்.
நான் கிளம்பிவிட்டேன்
கையில் மஞ்சப்பைக்குள்
பைண்டு நோட்டு.
அதில்
கைக்குழந்தை எனும்
என் பேனா
கவிதைகளாய்
மல ஜலம் கழித்த
காகிதங்கள்.
நான் கிளம்பிவிட்டேன்.
ஊர் ஊராய்.
முடுக்கு முடுக்காய்.
பிரம்மதேச அம்பாசமுத்திர
மண்சுவர் தொண்டுகளை யெல்லாம்
தாண்டி..
படுத்துக்கிடக்கும்
வண்டிமறிச்ச அம்மன்களோடெல்லாம்
படுத்துக்கிடந்து..
சுடல மாடனின்
முண்டக்கண்ணுகளையும்
வெட்டாிவாள்களையும்
ஆலிங்கனம் செய்து கிடந்து…
நான் புறப்பட்டுவிட்டேன்.
தாமிரபரணியில்
காமாட்சிகளோடு..
அபய குஜலாம்பா..
குண்டலாம்பாக்களோடு..
அபிராமிகளோடு..
ரக்த பீஜாசுரன்களை
வதம் செய்த அம்பாக்களோடு…
காற்றில் கர்ப்பம் தாித்த
தேவ நாகாிச் சதைப்பிண்டங்களின்
சுலோகங்களோடு…
கட்டிப்புரண்டு
ஜலக்கிாீடை செய்துகொண்டே
நான் கிளம்பிவிட்டேன்.
பஞ்சுப்பிசிறுகள்
கண்ணிலும் மூக்கிலும்
கற்பனையாய்
கிச்சு கிச்சு தாம்பாளங்கள் ஆடும்
விக்கிரமசிங்கபுரத்து
விப்ர நாராயண லீலைகளையெல்லாம்
உதறித்தள்ளிவிட்டு
இதோ நான் கிளம்பிவிட்டேன்.
மார்க்ஸையும் எங்கல்ஸையும்
குறைப்பிரசவங்களாய்
அந்த பஞ்சாலையின்
கர்ப்பபைக்குள் கிடத்திவிட்டு
நான் கிளம்பிவிட்டேன்.
பட்டினத்தார் ‘கஸ்ட்யூம் ‘
எனக்கு சுகமாக இரூக்கிறது.
அருணகிாி நாதரைப்போல
‘ஜொள்ளு ‘களையெல்லம்
துடைத்தெறிந்து விட்டு
அடிவயிற்றைப்பிசைந்து
அல்வா கிண்டுவது
சுகமாக இருக்கிறது.
பிறப்புவாசல்கள் கோடி கோடியாய்
கதவுகள் திறந்தும்
வினாக்களே இன்னும் புழுக்களாய்
நெளிந்து கொண்டிருக்கின்றன.
பிறப்பு அறுக்கும் உபாயத்தோடு
அந்த பிரமனைக்கூட
நிரோத் பலூனுக்குள்
பிரதிஷ்டை செய்து
கும்பாபிஷேகம் நடத்துவதற்கு
திக்விஜயம்
செய்யக்கிளம்பிவிட்டேன்.
என் பிஞ்சுவயதுகளில்
பிய்ந்து கிடக்கும்
பிக்காசோ சித்திரங்களை
எல்லாம்
பொறுக்குவதற்கு
இதோ புறப்பட்டு விட்டேன்.
கோலி விளையாடும் வயதில்
கூடவே
எலிவால் பின்னலில்
எழிலாய்ச்சிாித்துக்கொண்டு
தீ வளர்த்து நின்ற
அந்த சிறுமியை தேடி
நான் கிளம்பிவிட்டேன்.
பம்பரம் விட்டு
உள்ளங்கையில்
அதை நுள்ளியெடுத்து
அவளுக்கு காட்டுகையில்
நுரைப்பூக்கள் ஒதுங்கும்
அவள் சிாிப்பின்
சுழிக்கடல்களில்
தொலைத்து விட்ட
என் தூண்டிலையும்
அந்த மீன்களையும் தேடி
இப்போது நான் கிளம்பி விட்டேன்.
இப்போது அவள் தன்
நரைக்கூந்தல்களை
கோதிவிட்டுக் கொண்டிருக்கலாம்.
ஆனாலும் அந்த
மின்னல் அருவி
என் மீது
கவிழ்ந்து கொண்டதில்
கந்தல் ஆகிப்போனேன்.
அந்த கிழிசல் கண்கள் தோறும்
வானவில் பிழம்பின்
வர்ணப்போதைகள்.
அதன் குழம்பு தோய்த்த
தூாிகையாய்
நான் கிளம்பி விட்டேன்.
நண்டு சிண்டுகளோடு
ஓட்டாஞ்சல்லிகளாய்
எங்கோ
அவள் ஒதுங்கிகிடக்கலாம்.
வயதுகள் துருத்திய
விலா எலும்புகளில்
ஒரு வீணையின் நரம்புகளை
முறுக்கேற்ற
நான் கிளம்பிவிட்டேன்.
நான்
விக்கிரமாதித்தனா ?
பாலகுமாரனா ?
மாஃபஸான்
மண்டையோட்டுக்குள்
மத்தாப்பூ கொளுத்தும்
மன்மதப்பூசாாியா ?
டி.எஸ் எலியட்டை
சுருட்டி மடக்கி
உள்ளே திணித்துக்கொண்ட
கவிதைப்பிண்டமா ?
என் உயிர் விளிம்பின் வரை
அதன் முள்முனையில்
துளியாய் நின்று துடிக்கின்ற
சிக்மண்ட் ஃப்ராய்டின்
கருத்தோட்டமா நான் ?
லார்ட் டென்னிஸனின்
‘ லோடோஸ் ஈட்டர்ஸ் ‘ எனும்
கனவுக்காய்கள் தின்று தீர்க்கும்
பட்டாளங்களாய்
தேடல் போதையில் யாத்திரை செய்யும்
திருமகனா நான் ?
‘ஹோமர் ‘படைத்த ‘இலியாத் ‘தின்
இரும்பு நரம்புகளுக்குள்
ஒரு ‘செளந்தர்ய லாகிாி ‘யை
சுருதி சேர்த்துக் கொண்டு அலையும்
அந்த திருப்புதல்வனா நான் ?
நிர்வாணத்தை மூட
இன்னொரு நிர்வாணமே
தேவை.
நான் நீ அவன் அவள் அது..
என்ற
தன்மை முன்னிலை
படர்க்கைகளை
படுதா போட்டுக்கொண்டவன் அல்ல
அந்த பரந்தாமன்.
‘ரமணீய ‘மான அந்த
எதிரொலிகளால்
உருகி யோடும்…அந்த
திருவண்ணாமலைப்
பாறைகளில் ஒன்றா நான் ?
நத்தைகளும் மரவட்டைகளுமே
என் கூட நகர்ந்து வரும் பாிவாரங்கள்.
தூசிகளில் கூட
பூகம்பப் பயங்கள் கருவுயிர்க்க
கரப்பான் பூச்சி மீசைகளாய்
முன்னே
தடவி தடவி
பாதை போட
எவ்வுயிரூக்கும் தீங்கு நினையாமல்
இதோ..நான்
கிளம்பிவிட்டேன் பாதயாத்திரை.
=============================================ருத்ரா.