வியாழன், 31 ஆகஸ்ட், 2017

உள்ளே வெளியே

உள்ளே வெளியே
===================================ருத்ரா

தமிழ் நாட்டில்
உள்ளே வெளியே
ஆட்சி விளையாட்டு
நன்றாயிருக்கிறது.
அருமையான ரெஃப்ரி
கவர்னர் கிடைத்திருக்கிறார்.
ஒரே கட்சியின்
ரெண்டு முதலமைச்சர்கள்
உள்ளே
ஒரு முதலமைச்சர்
வெளியே!
வாக்காளர்கள்
தேர்தல் நடத்தும்
கணிப்பொறி எனும்
எலிப்பொறிக்குள்
எப்போதுமே!

==================================

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

மைக்கேல் ஜாக்ஸன்

மைக்கேல் ஜாக்ஸன்
===================================ருத்ரா

(மைக்கேல் ஜாக்ஸன் மறைவுக்கு ஒரு கவிதை அஞ்சலி)
09.07.2009 ல் எழுதியது
------------------------------------------------------------------------------


பேழைக்குள் ஒரு பிரளயம்
-----------------------------------------------------------------ருத்ரா

கரடு முரடாய் வாழ்க்கை.
கனவுகளோ மூளி வானத்தை
பாதாம் அலவாவின் கனசதுரங்களாய்
வெட்டி வைத்திருக்கின்றன.
மொய்த்துக்கொண்டிருப்பது
கொசுக்களா?
பூச்சிகளா?
தேனீக்களா?
இல்லை சாக்கடை ஈக்களா?
ஓ இளைஞர்களே!
ஏக்கத்தின் கடி  தாங்காத
தீக்கொளுந்துகளில்
ஜீன்ஸ் அணிந்து கொண்டு
ந‌ட‌மாடிக்கொண்டிருந்த‌ போதும்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ளின்
வ‌ர‌ம்புக‌ள் அறுந்துபோய்
காதலின் வெம்மை தகிக்கிறது.
கம்பிக்காடுகளில்
பங்களாக்களில்
பதுங்கிக்கொண்டு
என்னத்தைப் பார்க்கிறீர்கள்?

சுவாசங்களில் கந்தல்விழுந்த
அந்த நுரையீரல்களை கழற்றிவைத்துவிட்டு
இசையின் புதிய யுகத்தைப்பூங்கொத்தாக்கிய
நுரையீரல்களை சூட்டிக்கொள்ளுங்கள்.
எத்தனை ஓசைகள்! எத்தனை வண்ணங்கள்!
தேன்சிட்டுகள் ரெக்கைகளில்
அதிரும் ஏ.ஆர்.ரஹ்மான்கள்
தட்டாம்பூச்சிகளின் கண்ணாடி சிறகுகள்...
அதில் எவ‌னாவ‌து ஒரு புதுக்க‌விஞ‌ன்
தாஜ்ம‌ஹால்க‌ள் க‌ட்ட‌த்த‌விப்ப‌து...
அதோ வான‌த்தை பிய்த்துக்கொண்டு கொட்டுகிற‌தே
மைக்கேல் ஜாக்ஸ‌னின்
"த்ரில்ல‌ர்" இசைக்குழ‌ம்பின்
வ‌ர்ண‌ப்பிர‌வாக‌ங்க‌ள்....
அவ‌னா இற‌ந்துவிட்டான்?
இந்த‌ செவிக‌ளுக்குள்
செதில் உதிர்த்துக்கொண்ட‌ இத‌ய‌ங்க‌ள்
இத‌ய‌ங்க‌ளுக்குள்
செதுக்கிக்கொண்டேயிருக்கும்
அவ‌ன் ர‌த்த‌ங்க‌ளின் ச‌ப்த‌ங்க‌ள்..
கோடி கோடி டால‌ர்க‌ள் கொட்ட‌த்த‌யாராய்
இருக்கும்
ர‌சிக‌ சூறாவ‌ளியின் அக‌ல‌விரித்த
பெருங்க‌ர‌ங்க‌ள்...

"ஒன்றாய் குர‌லெழுப்பினால்
ந‌ட‌க்காத‌து ஏதுமில்லை"
இந்த‌ உல‌க‌த்துக்கே வ‌லிக‌ள் தீர‌
சிகிச்சை அளிப்போம்"...

அவன்   குர‌ல்க‌ள் ம‌ழை பொழிகின்ற‌ன‌.
இது க‌ண்ணீர் அல்ல‌.
வைரக் "கிடாரை" த‌ங்க‌ப்பேழைக்குள்
வைப்ப‌து போல்
அவ‌ன் உட‌ல் அட‌க்க‌ நிக‌ழ்வு
இந்த‌ உல‌க‌த்தையே உதிர‌வைத்த‌து.
அந்த பேழைக்குள் கிடப்பது
தூக்க மாத்திரைகளின் சதியோ?
தூங்காத இசையின் நதியோ?
எதுவாய் இருப்பினும்
அந்த பேழைக்குள் இருப்பது
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஒரு பிரளயம்.
எம‌ன் எனும் பொறாமைப்பிண்ட‌மே!
உன் தோலையே உரித்துப்போட்டுவிட்டு
ஒரு பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்துகொண்டு வா!
இவ‌ன் இசையை உன்னால்
உருவாக்க‌ முடியாது.
ஐம்ப‌து வ‌ய‌துக்குள்
அவ‌னை ப‌ல‌கார‌ம் ப‌ண்ணிவிட்டேன் என்று
கொக்க‌ரிக்காதே.
நீ தின்ற‌து இவ‌ன் ச‌தையை ம‌ட்டும் தான்.
இசை "டோர்ன‌டோவாய்"
உய‌ர‌ங்க‌ள் எல்லாம் க‌ட‌ந்து
ஒரு சுழ‌லில் "ஃபுன‌ல்" வ‌டிவில்
விஸ்வ‌ரூப‌ம் எடுத்துக்கொண்டு நிற்கிறான்.
ஓ! ம‌னித‌ர்க‌ளே!
உங்க‌ள் துய‌ர‌ங்க‌ளை இதில் வ‌டிக‌ட்டிக்கொள்ளுங்க‌ள்.
ம‌னித‌ப்பிற‌விக‌ள் பிரபஞ்சக்கூழாய் க‌ரைந்து
அந்த‌ "எத்தியோப்பிய‌" சிசுக்க‌பால‌ங்க‌ளிலும்
க‌ண் குழிக‌ளிலும் உயிர் ஈர‌த்தை
கசிய விடும்போதும்
நம்பிக்கை அங்கே குரல் இனிப்பாய்
ந‌க்கிக்காட்டுகிற‌து .
தாய்மையின் க‌த‌க‌த‌ப்பே அந்த‌ இசை.
இசைச் சுர‌ங்க‌ளுக்கு
ச‌ங்க‌மம் தான் உண்டு; ச‌மாதிக‌ள் அல்ல‌.
லாஸ் ஏஞ்ச‌ல‌ஸின் "ஸ்டேப்ள‌ர்ஸ் சென்ட‌ரில்"
அன்று (ஜூலை 7.. 2009)
தேச‌ எல்லைக‌ளின் காங்கிரீட் கோடுக‌ள் கூட‌
நொறுங்கிப்போயின‌.
குறுகிய‌ வ‌ன்முறைக‌ள் தொலைந்து போயின‌.
வெள்ளைக்க‌ண்க‌ளிலும்
க‌ண்ணீர்க்க‌ருங்க‌ட‌ல் முட்டிநின்ற‌ன‌.
நினைவின் க‌ட்ட‌ங்க‌ள்
சிறைவைத்திருக்கும்
இந்த‌ புழுக்கூட்டை உடைத்துக்கொண்டு
புற‌ப்ப‌ட்டு வ‌ருவேன்.
என்று ஒரு புதிய‌ இசையை
அந்த‌ ஹாலிவுட் ஹில்ஸின் தூரிகைப்புல்க‌ளில் கூட‌
புதுப்புது யுகங்களை  மெட் அமைத்து
பாடுகிறான் அவ‌ன்.
அவன் இசையைக்கேட்டு
பிறந்து பிறந்து இறக்கிறோம்
அல்லது
இறக்காமலேயே  பிறக்கிறோம்
அவன் அமர இசையாய்!

=========================================================
ருத்ரா இ.ப‌ர‌ம‌சிவ‌ன்
த‌வுச‌ண்ட் ஓக்ஸ் (லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்)
க‌லிஃப்போர்னியா
யு.எஸ்.ஏ.


.

சனி, 26 ஆகஸ்ட், 2017

அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
==========================================ருத்ரா

செந்தில்

அண்ணே! ஒரு "ஐயம்".

கவுண்டமணி

கேளுடா..அதுக்கு ஏண்டா புரியாத மொழியில‌ கேக்கிற.
சந்தேகம்னு தமிளுல‌ கேளுடா.

செந்தில்

முதலமைச்சரத் தான் மாத்தணும். அவரைத்தவிர யாரை வேணும்னாலும் போட்டுக்குங்க . ஆட்சியை நாங்க கலைக்க மாட்டோம்னு லெட்டர் குடுத்துருக்காங்களே..அதனால..

கவுண்டமணி

அதனால...

செந்தில்

நா வேணா "முதலமைச்சர்" பதவிக்கு விண்ணப்பம் குடுக்காலாம்ணு..ணு..ணு...
(சொல்லி முடிக்காமலேயே ஓடி விடுகிறார்)

கவுண்டமணி

அடீய்ய்ங்க்க்...படுவா..ஓடிப்பொய்ரு...ஆசையபாரு ஆசைய..

(கவுண்டமணி கையை ஓங்குகிறார்)

=========================================================
(நகைச்சுவைக்காக)

நகைச்சுவை (2)

நகைச்சுவை (2)
=============================================ருத்ரா

"அந்த டாக்டர் "நீட்"தேர்வு எழுதி பாஸ் பண்ணின டாக்டர்னு எத வெச்சு சொல்றீங்க?"

"பேஷன்ட்ஸ் கிட்ட சிகிச்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி
"நீட்" கேள்வித்தாள் கொடுத்து விடை எழுதச்சொல்றார்.
அதில் அவர் பாஸ் பண்ணினாத்தான் அவர் கிட்ட
சிகிச்சை பெறுகிற தகுதி அந்த பேஷண்டுக்கு வருகிறதாம்!"

======================================================

ஒரு நகைச்சுவை

ஒரு நகைச்சுவை
========================================ருத்ரா


பான் (வெற்றிலை பீடா) கடை வைத்திருக்கும் சேட் ஒருவரிடம்
ஒருவர் பீடா கேட்கிறார்.


"சேட் ஒரு பான் தாங்க சேட்"

"பான் தர்ரான் இல்லே"

"என்ன சேட் சொல்றீங்க"

"பான் மேலே ஆதார் சேர்க்கரான்.அப்ரம் பான் தர்ரான்"

"ஒண்ணும் புரில்லே சேட்."

"போய் பேப்பர் பாக்ரான்.அப்ரம் நம்பள் கிட்டே பான் கேக்ரான்"

"என்னா சேட்ஜி இப்டி சொல்றீங்க?"

==========================================================

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

(அன்னை தெரஸா)

"வெள்ளை அங்கிக்குள் ஒரு வெளிச்சக்கடல்" (அன்னை தெரஸா)
============================================================ருத்ரா

அன்னை...
அன்னை...
நாக்கிற்கும்
பல்லிற்கும் இடையே
சத்தங்களின்
சம்மட்டிகளுக்குள்
கிடந்த
வார்த்தையின்
வெறும் நசுங்கல் வடிவம் இது..
'அன்னை தெரசா '
என்று நாங்கள்
உன்னை உச்சரிக்கும் வரை !
'அன்னை தெரசா '...என்று
எங்கள் இதயங்கள்
ஒலிக்கும் போது
தேச-உலகப் பரிமாணங்கள்
காணாமல் போயின.
மத வேலிகள் எல்லாம்
மறைந்து போயின.
இன-மொழிக்கூடுகள்
இற்று விழுந்தன.
நீலக்கோடுகள் போட்ட
வெள்ளை அங்கிக்குள்..
வெள்ளமாய்ப் பொங்கும்
மனிதநேயக்கடல் நீ !
அந்த வெளிச்சக்கடலில்
சாதி மதப்பூதங்களின்
இருட்டுகள் எல்லாம்
கரைந்தே போயின!

உன் முகத்தாமரை
பரந்தாமன்களின்
'நாபித்தாமரை"களை விட
உன்னதமானது.
ஏனெனில்
குப்பைத்தொட்டிகளில்
நாய்களால்
கவ்விக்கொண்டு வந்து
போடப்பட்ட
மனிதப்பிஞ்சுகள் கூட
உன் கரம்பட்டு
மாணிக்கத் தாமரைகள் ஆயின !
குளிர் பூ மழையே !
குமுறும் எரிமலைகள் கூட
உன் கண்களில் கசியும்
ஈரம் கண்டு
சுருண்டு கொள்ளும்.
உன் முகத்தில்
பழுத்த சேவையின்
சுருக்கம் விழுந்த
ஒவ்வொரு வரியும்
யதார்த்தமான
பைபிள் வாசகங்கள்.
நடைமுறைக்கு வந்த
கீதைப்பேருரைகள்.
மனிதனின் அருகாமைக்கு
வந்து விட்ட
அல்லாவின் அருள்மொழிகள்.


மீன் வேடம்...
ஆமைவேடம்..
வராக வேடம்...
சிங்க வேடம்...என்று
கடவுள்
பத்து விதமாய் வந்த போதும்
பத்தவில்லை.
அதனால்
மானுட நேயம் போதிக்க
வேடம் போடாமல் வந்த
அவதாரம் நீ !


பசிப்பவனுக்கு
உடனே புரியும் மொழி
எபிரேயமும் அல்ல.
சமஸ்கிருதமும்  அல்ல.
ஒரு ரொட்டித்துண்டு தான்.
ஒரு கவளச்சோறு தான்.
'பரிந்து ஊட்டும் '..அந்த
தாய்மை மொழி
நீ அல்லவா!

பிணியில் கந்தலாகிக்
கிடப்பவனுக்கு
சங்கு சக்கரத்து
விசுவரூபம் தேவையில்லை.
உன் பாசத்தின்
மருந்தும் சிகிச்சையுமே
அங்கு தெய்வதரிசனம்.
மனித சேவையின்
சாந்து கொண்டு கட்டிய
எங்கள் கோவில் அல்லவா நீ !

இறைவனைத்
தொழுவதற்கு கூட
கைகள் இல்லாத
தொழுநோய்க்காரர்களின்
கைகளாய் இருந்த
கை கண்ட தெய்வம் அல்லவா நீ!
மானுட நேயத்துக்கு
சமாதி கட்டிவிட்டு
பக்தியை பரப்புவதற்கு மட்டும்
கோவில் என்று
பளிங்கில் கட்டினாலும் சரி
கடைந்தெடுத்த
கருங்கல்லில் கட்டினாலும் சரி
அவையடக்கத்தோடு
சொல்லிக்கொள்கிறேன்..
அவையெல்லாம்
சவக்கிடங்குகளே!
சைத்தான் என்பது
கடவுளின் எதிர்வடிவம்.
ஆனால்
விழுந்து கிடப்பது
குற்றுயிராய்
குலையுயிராய்
ஒரு சைத்தான் என்று
தெரிந்தாலும்
ஓடோடிச்சென்று
பணிவிடை செய்வது
உனக்குத்தெரிந்த
கடவுள் வடிவம்.
நாங்கள்
தேவன் வசனங்களை
ஒப்பிக்கிறோம்.
நீயோ அவற்றை
உயிர்ப்பிக்கிறாய்.
அன்னை தெரசாவே!
அன்பின் ஆலயமே!
காலத்தால் கரையாத
மெழுகுவர்த்தியே!
மரித்துப்போனபின்னும்
மண்ணுக்கு அடியில்
தின்ன வரும்
புழுக்களுக்கு கூட
பணிவிடை செய்ய
படுத்திருக்கும்
உன்னைக் கண்டு
வெட்கம் கொண்டு
தன்னை அங்கு
புதைத்துக்கொண்டான் அவன்.
ஆம் !
அந்தக் கல்லறையில்
கிடப்பது...
நீயல்ல!
மரணதேவன்.
கால ஓட்டத்தில்
ரத்த சதையாய்
உருகியபின்னும்
எங்களது
வெளிச்சம் நீயே!
புதிய ஏற்பாடுகளையெல்லாம்
பழைய ஏற்பாடுகள் ஆக்கி
கரையான்கள்
அவற்றை
சாப்பிட்டுவிட்டுப்போகட்டும்
என்று
எப்பொதுமே
ஜெயிக்க...
எப்போதுமே
ஜெபிக்க
'மனித நேயத்தின் '
ஒரு புதிய 'புதிய ஏற்ப்பாட்டை '
எங்களிடையே
பதிய வைத்த
இந்த பிரபஞ்சத்தின்
தாயல்லவா நீ !
'கிருமிகள்
என்னைப்
புசித்துக்கொள்ளட்டும்.
புனிதப்படுத்த
உயிரோடு
என் உடல் அங்கு  வர  வேண்டும்
என்று நீங்கள் கேட்டால்
அந்த புனிதப்பட்டம்
எனக்குத் தேவையில்லை...
என்று
நான் கூறும் குரல்
உங்களுக்கு கேட்கிறதா ? '
ஆம்.
இத்தனை நாள்
அடம் பிடித்த
அந்த 'வாடிகனுக்கு '
அன்னையின் குரல்
கேட்டுவிட்டது.
இறுதியில்
வாடிகன் தன்னை
புனிதப்படுத்திக்கொண்டது.

தாயே !
இந்த பங்குத்தந்தைகள்
உன்னை
கொச்சைப்படுத்திய போதும்
நீயோ
உன் பங்குக்கு
இவர்களை
தூய்மைப்படுத்தி விட்டாய்.
சொர்க்கங்கள் எல்லாம்
தலை குனிந்து கொண்டது.
நரகங்கள் எல்லாம்
புனிதமாகிப்போனது.

======================================================== ருத்ரா.
25.03.09

விவேகம்

விவேகம்
====================================ருத்ரா

இந்த படத்துக்கு
விமர்சனம் எழுதுவது என்பதெல்லாம்
கட்டுபடியாகாது!
ஒரே வரியில்
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹிட்ட்ட்ட்ட்ட்
என்று சொல்லிவிட்டு
விவேகம் _2 க்கான‌
டீஸருக்கு
வாய்பிளந்து நிற்பதே
நம் 21 ஆம் நூற்றாண்டு இளைய சிற்பிகளின்
வேலை.

இதை விட அப்பனாக‌
க்ராஃபிக்ஸில் கேம்ஸ் பார்க்கின்றனர்
நம் "குட்டீஸ்".
ஆனால் அவர்களுக்கு
காஜா அகர்வால் அக்ஷரா ஹாஸன்
சமாச்சாரங்களுக்கு
வெர்ச்சுவல் ரியாலிடியை
அவ்வளவு "புஷ்டி"கரமாக காட்ட முடியாது.

இருந்தாலும்
இந்த வேதாளாம் விளையாட்டை
எப்படி வேணுமானலும்
காட்டி
தெறிக்க விடலாமாங்க்ற‌
வியர்வை தெறிக்க‌
கோழை வழிய‌
உச்சரிக்கும் பஞ்ச் டயலாக்கை
கலர் கலர் ஆக்கினால் போதும்
வண்ணமாய் நொதிக்கும்
ஆர்ப்பாட்டங்கள் ரெடி.

அஜித் உயிரை கொடுத்து
நடித்திருக்கிறார்.
வாங்கிய துட்டுக்கு வஞ்சகம் இல்லாமல்
பரிமாற்றிக்கொடுத்துக்
குவித்திருக்கிறார்.

அந்த சிக்ஸ் பேக் மாமிச உறுமல்களில்
ஆங்கில வாடை கொப்புளிக்கிறது.
மீசை முளைக்காத சின்னப்பசங்கள்
கார்ட்டூன் கேம்களில்
கரைந்து போவது போல் தான்
இந்த மீசை முளைத்த சின்னப்பசங்கள்
நிஜத்தை தின்றுவிட்ட‌
நிழல்களுக்கு தீனியாகிக்கொண்டே
இருக்கிறார்கள்.

காட்டாற்று வெள்ளங்களை
மயிற்பீலிகள் கொண்டு
தடுப்பணை கட்ட முடியாது.
தமிழின் பூங்குமிழிகள்
உடைந்து உடைந்து தான்
இந்த கல்லாப்பெட்டிகளை
நிரப்புகின்றன.
செங்கோல்களே கைமாறும்
சுநாமிகளைப்போட்டு
தாலாட்டுப்பாடிக்கொண்டிருக்கின்றன‌
இந்த தமிழ்ப்பிஞ்சுகள்.

நம் புறநானூற்றுச்செய்யுட்களில்
தமிழ் ஆவேசங்களைச்
செருகி வைத்துக்கொண்டு தான்
இந்த நுரைக்கோட்டைகளை
தகர்க்க முயலுதல் வேண்டும்.

கால கட்டங்கள் என்பது
நகர்ந்து கொண்டே இருப்பவை.

===============================================



வியாழன், 24 ஆகஸ்ட், 2017

தமிழர்களே! தமிழர்களே!

தமிழர்களே! தமிழர்களே!
==============================================ருத்ரா

இந்தக்குரல்
உங்கள் செவிகளுக்குள்
நுழைவதே இல்லை.
அங்கே
ஏகப்பட்ட அடைசல்கள்.
அவனும் அவளும்
குழந்தைக்கு பெயரிட‌
கம்பியூட்டரைத்தட்டினார்கள்.
இஸ் புஸ்ஸென்று
ஆயிரம் பெயர்கள்
அவர்கள்
காதுகளை ஆக்கிரமித்துக்கொண்டன.
"இஸ்கேமியா" என்றான் அவன்
நன்றாக இருக்கிறதே
என்றாள் அவள்.
குழந்தை "இஸ்கேமியா"
படு சுட்டியாக வளர்ந்தாள்.
அப்புறம்
அந்த டிவி யின்
சுட்டிகளுக்கான நிகழ்ச்சியில்
அந்த சின்னப்பூ முகம் பூத்து
அறிவின் சுடர் பளீர் பளீர் என்று வீச‌
அவையோரை அசத்திவிட்டாள்.
அண்ணாச்சியும்
வழக்கம்போல கேட்டார்
"உன் பெயருக்கு என்ன  அர்த்தம்"என்று கேட்டார்.
(என்ன பொருள் என்று கேட்டால் தான்
நமக்கெல்லாம் பொரு விளங்காய் இனிப்பு தானே
நினைவுக்கு வரும்.
அதனால் அவர் "அர்த்தம்" கேட்டார்.
குழந்தை
பெற்றோரை திருப்பிக்கேட்டது.
அவர்களோ ஒரு இனிமைக்காக‌
இந்த அயல்மொழி ஓசையை சேர்த்தோம்
உடனே  அங்கு இருந்த "டாக்டர் ஒருவர்"
விளக்கினார்.
(மருத்துவர் என்றால்
ஏதோ ஒரு பட்டிக்காட்டு ஆள் என்றல்லவா
நினைத்துக்கொள்வார்கள் )
"இஸ்கேமியா" என்றால்
இதயத்தில் ஏற்படும் உள்காயத்தினால் வரும் வலி
என்றார்.
இதைக்கேட்டதும்
அவர்களுக்கு இதயத்துள் வலி வந்தது போல்
உணர்ந்தார்கள்.
ஆம்..
தமிழ் எனும் மொழிக்கு
ஏற்பட்ட வலிகளா இவை?
அவர்களுக்கும்
இதயம் வலித்தது.
அங்கேயே பெயர் சூட்டினார்கள்
அவளுக்கு "இனியா" என்று.

==========================================

புதன், 23 ஆகஸ்ட், 2017

யானை

யானை
===============================ருத்ரா இ.பரமசிவன்

இங்கே கொலை.
அங்கே கொலை.
கொலைக்குள் ஒரு தற்கொலை.
தற்கொலைக்குள் ஒரு கொலை.
சாதிக்காரணம்.
அரசியல் காரணம்.
காவிரித்தண்ணீர்.
ஈழம்.
தமிழ் என்னும்
ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள்.
இந்திய சாணக்கியம்
இறுக்க தாழ் போட்டு விட்டது.
ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு
குப்புறக்கிடக்கிறது.
யாருக்கென்ன?
பிள்ளையார்களையெல்லாம்
கடலில் கரைத்தாயிற்று.
அந்த "சசி வர்ண சதுர் புஜ"
ரசாயனம் எல்லாம்
திமிங்கிலங்களின் வயிற்றில்.
நூற்றுக்கணக்காய் அவை
நாளை மிதக்கும் கரையில்.
அதையும் விழாக்கோலம் கொண்டு
பார்க்க மக்கள் கூட்டம் தான்.
எங்கும் எதிலும்
ஈக்கள் கொசுக்கள் மொய்க்கின்றன‌
ஊடகங்களாய்.
சினிமாக்களிலும்
சமுதாய உடல்களின்
மார்ச்சுவரி இருட்டுகள்.
நீதி மன்றங்களும்
அப்போதைக்கப்போது
மரச்சுத்தியல் தட்டுகின்றன.
வாய்தா.
ஜாமீன்.
மறுபடியும்
மறுபடியும்
சக்கரம் சுழல்கிறது.
மண் புழுக்கள் நசுங்குகின்றன.
மணற்கொள்ளை.
வீடு புகுந்து
கொள்ளை கொலை.
கிரானைட்டை வெட்டி எடுக்கிறேன்
என்று சொல்லி
மலைகளை எல்லாம்
மாமிசம் போல் அறுத்து விற்பனை.
பணம் குவிகிறது.
அதன் நிழலே
நம்மை எல்லாம் அசையாமல்
தின்கிறது.
அந்த ராட்சசப்பறவை
சிறகடிக்கிறது.
சட்டம் ஒழுங்குக்குப்பின்னால்...
ஒழுங்கு சட்டத்துக்குப் பின்னால்...
சட்டம் ஒழுங்கு என்பது
செல்லரித்துக்கிடக்கிறது.
படத்தை தொலைத்த
வெறும் சட்டத்தின் வழியே
ரத்தம் பாய்கிறது.
இந்த சவ்வூடு பரவலில்
சமுதாயமே கிழிந்து போனது.
லஞ்சமும் ஊழலும்
நம்மை நசுக்கிப்பிதுக்கி
தின்று தீர்த்தது.
சாதி மதங்கள்
நம்மை சாறு அற்ற சக்கையாக்கின.
இதனூடே
தேர்தல் ஆணையம் எனும்
மந்திரக்கோல்
ஒரு யானையிடம்
மாலையைக்கொடுத்து
போடச்சொல்கிறது.
அது
மாலையா?
மலர்வளையமா?
இந்த ஜனநாயகம் விறைத்துக்கிடக்கிறது.

===================================================
20.09.2016






செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

காலம்

காலம்
=========================ருத்ரா

எங்கே அது?
கருப்பு சிவப்பா
கண்ணுக்கு தெரியவில்லை.
விடியலும் அந்தியும் தான்
நம்மோடு வரும்
அதன் மைல்கற்கள்..
அதன்
நீளம் அகலம் ஆழம்
யாருக்குத் தெரியும்?
அன்றொரு நாள்
அகல விழியில்
பேருந்தின் பிதுங்கி வழியும்
கூட்டத்தில்
ஒரு மின்னற்பூவைக் கண்டேன்.
என்னை நோக்கி
அனிச்சத்தில்
அம்புப்பார்வை ஒன்று
அவள்
எய்து விட்டாள்
அன்று முதல்
அதே பேருந்தில்
அதே தடத்தில்
அதே பேருந்து நிறுத்தத்தில்
அதே பிதுங்கி வழியும்
வியர்வை நாற்றத்து
காடுகளிடையேயும்
அந்த ஆழமான
விழிகளைத்தேடுகிறேன்.
ஆம் இன்னும் தேடுகிறேன்.
அந்தக் காலப்பரிமாணம்
களவு போனது.
வருடங்கள் நெல்லிக்காய்
மூட்டையாய்
சிதறுண்டு போனது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து
அம்பது சொச்சம் ..
இரண்டாயிரத்து சொச்சம் என்று.
கனத்த வாழ்க்கை.
நரைத்த வாழ்க்கை.
புஷ்டியான குடும்பசந்தோஷத்துக்கு
குறைச்சல் இல்லை.
அடிவானத்தில்
வெட்கமில்லாமல்
சூரியனும் கடலோடு
குடைந்து குடைந்து
ஒளியை வைத்து கண் பொத்தி
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான்.
காலம்
அர்த்தமற்றதாய்
தன்  அசிங்கமான
பாம்புச்சட்டைகளை
உரித்துப்போட்டு
சென்று கொண்டிருந்தது,
செத்தபாம்பாய்
என் மின்னல் பூமாலையும்
அடித்து நசுக்கப்பட்டு கிடந்தது.
அந்த விழிகள் மட்டும்
என்னைத்தீண்டிக்கொண்டே இருந்தது.
காலமாம் காலம்!
அது பொத்தலாய்க் கிடந்தது.

==========================================

.

அன்பான ரஜனி அவர்களே!

அன்பான ரஜனி அவர்களே!
==============================================ருத்ரா

தூய வெள்ளாடையில்
கர்ஜித்து
ஜனநாயகத்தின் ஊழல் அழுக்குகளை
ரஜனியின் வெள்ளாவியில் வைத்து
அவித்து
தூய்மைப்படுத்தக்கிளம்பியிருக்கிறார்
காந்திய நெறியாளர்
தமிழருவி மணியன்!
கேட்கும் போது
எங்களுக்கு புல்லரிக்கிறது.
அரசியலில் சேர‌
அரசியலை நடத்த‌
ரஜனி அவர்களுக்கு
ஆண்டவன் கட்டளை கிடைத்தது பற்றியும்
எங்களுக்கு நெஞ்சமெல்லாம்
பூரிக்கிறது.

ஆனாலும் ஒரு கேள்வி.
எங்கள் அன்பான ரஜனி அவர்களே!
இந்த நாட்டு நதிகள்
வெறும் நீர்க்கயிறுகள் அல்ல.
வெள்ளக்காடுகளா அவை?
அள்ள அள்ள குறையா
செல்வம் அவை.
கொட்டாங்கச்சி அளவு தண்ணீர்
இருந்தாலும்
உயிர்களை கொன்று குடிக்கும்
அளவு வெள்ளம் என்றாலும்
இது என் தண்ணீர்
என்று குறுகிப்போய்
கருத்துக்கண் அவிந்துகிடக்கும்
நம்மிடையே
எப்படி ஒற்றுமையின்சிந்தனை இமைகளை
உயர்த்தப்போகிறீர்கள்.?
தேசிய நதிகளை இணைக்கப்போகிறீர்கள்.
மோடிஜியின் நாற்காலி அல்லவா
அதற்கு வேண்டும்.
அந்த "நவாப் நாற்காலியோ "
இந்துத்வா எனும்
ஒரு பத்தாம்பசலிப்புத்தகத்தை...
மானிட நாகரிகங்களுக்கு
சமாதிகட்டும் சப்பளாக்கட்டைகளை
அல்லவா...
முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
அந்த செங்கோலுக்கு
பூண் பிடிக்க உங்கள் இயக்கம்
பயன்பட்டுவிடுமானால்
அதை விட ஒரு பெரும்பேரிடர்
இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை.
பத்தாண்டுக்குள்
நதிகள் எனும்
இந்த தோப்பூள் கொடிகளையெல்லாம்
முடிச்சு போட்டு விடுவதாய்
சபதம் செய்கிறீர்கள்.
அதற்கு உங்கள் தேசிய அலைகள்
துணைக்கு வருமா?
அமித்ஷாக்கள் குரலுக்கு
உதடுகள் அசைப்பது போல்
கழகங்கள் இல்லா பூமியில்
உழ கலப்பை தூக்கியிருக்கிறீர்கள்.
ஊழல் மீது காட்டும்
அறச்சீற்றம் அது!
அது வளர்க! அது வெல்க!
ஆனாலும்

"பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
த்ராவிட உத்கல பங்க."
அந்த தேசிய இதயத்துடிப்புகளை
உற்றுக்கேளுங்கள்..
திராவிடம் என்பது
சிந்துவெளியிலிருந்து
புள்ளியை தொடங்குகிறது.
ஆம்!நம் இந்தியாவின்
உயிர்ப்புள்ளிகளின்
உயிர்மெய் எழுத்தே தமிழ்.
அதற்கு கல்லறை கட்டுபவர்களுக்கு
காண்ட்ராக்ட் போடவா உங்கள் இயக்கம்?
அதுவும் தமிழ் நாட்டிலிருந்தே
இந்த அப்பாவித்தமிழர்களின்
சிதலங்களையும்
அவலங்களையும்
சிமிண்ட் ஆக்கியா
உங்கள் அரசியல் கட்டுமானத்தை
தொடங்க வேண்டும்.
எங்கள் தமிழ் மண்ணின்
உயிர் மூச்சுகளை
உங்கள் சினிமா நிழல்கள் ஆக்கினாலும்
ஒரு நிஜ இமயமாய்த்தான்
எங்கள் முன் நிற்கிறீர்கள்.
அன்பான ரஜனி அவர்களே
உங்கள் வேள்விக்கு
எங்கள் தமிழ் ஆவேசங்களே
ஆகுதியாய் நெய்யாய் ஊற்றி
நாங்கள் தரப்போகும் பங்கு.
இதைக்கொண்டு
எல்லா சாதி மத மற்றும்
பணங்களின் ஊழல்களை
எரித்து விட திரளுவோம்.
தமிழருவி மணியனின்
ஊழல் எதிர்ப்புப்போர்
தமிழ் எல்லைகளுக்குள் மட்டும்
மத்தாப்பு கொளுத்தும்
வேலையாக சுருங்கிவிடக்கூடாது.
நீங்கள் இதற்கும்
ஆண்டவன் கட்டளையையும்
ஆத்மீகத்தையும் அழைத்தால்
முகமுடி மாட்டிக்கொண்டு
மாட்டுஇறைச்சி அரசியலும்
கேஸ் சிலிண்டர் ஊழல்
கொடுந்தீ நாக்குகளும்
வியாபம் என்கிற‌
மனிதக்கொலைகளை
சங்கிலியாய் கோர்த்துக்கொண்ட‌
கொள்ளைகளும்
உங்களுக்கு தோள்கொடுக்கும்.
யோகங்கள் அது இது என்னும்
சர்க்கஸ்களை வைத்துக்கொண்டு
இந்த
ஜனநாயக ஆட்டுக்குட்டிகளை
அந்த பாசிஸ புலிக்கு
இரையாக்கும்
திரை மறைவு தந்திரங்களுக்கு
பலியாகி விடாதீர்கள்.
உங்கள் நோக்கம் வெல்லட்டும்.
உங்கள் இயக்கமே ஆளட்டும்.

======================================






ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

உன் விழிகள்

உன் விழிகள்
=================================ருத்ரா

உன் விழிகள் தன் பார்வையால்
என் மீது சோழிகள் வீசுகின்றன.
பாம்பா ? ஏணியா?
இந்த இதய அரங்கத்தில்
பரமபதக்கட்டங்கள்.
சிகரம் ஏற்றி
பள்ளத்தாக்கில்  எறிகிறாய்!
ரோஜாக்களின் ஏரியில் மிதக்கிறேன்...
நம் மனங்கள் கொண்டு செய்த
படகுவீட்டில்
நீரின் பளிங்குத்துடிப்புகளோடு.

===============================

அந்தி

அந்தி
==================================ருத்ரா


கடல் ரத்தம் கக்கி சாகும்
என்று எந்த முனிவனின் சாபம் இது?
ரத்தம் கக்கியது
கடல் அல்ல.
நம் மனத்தின் அடிவயிறு.
அதன் அகோரப்பசி.
எங்கு பார்த்தாலும்
கிருஷ்ணன் மொட்டையாய்
சொன்னது போல் அதர்மம்.
அது முதுகு காட்டி உட்கார்ந்து இருக்கும்
தர்மம் என்று
அவன் சக்கரம் விட்டபிறகு
தெரிகிறது.
அதை வருடிக்கொடுக்க‌
அவன் முனையும் போது
அங்கே அதர்மத்தின் கோரைப்பற்கள்.
அவன் களைத்துப்போனான்.
எது தர்மம்? எது அதர்மம்?
பகவத் கீதை
விஸ்வரூபம் காட்டுகிறது.
அதர்மம் வாய்பிளந்து தர்மம்
என்று
உள்ளே "உள் நாக்கால்"
சமஸ்கிருதத்தை
எச்சில் மழை பெய்தது.
தர்மத்துள் அதர்மம் இருப்பதே
அந்த விஸ்வரூபம்.
சாங்கிய தத்துவத்தில்
நெய் பூசிய விஷ அம்புகள்
மனிதத்தின்
பச்சை ரத்தம் குடிக்க
பயிற்சி அளிக்கவே
லட்சக்கணக்காய் சுலோகங்கள்.
 பதினெட்டு நாட்கள் கோரயுத்தத்தில்
மனிதப்புல் கருகிப்போனது.
மீண்டும் மனிதம் முளைக்கவே இல்லை.
எல்லோரும் சொர்க்கத்துக்கு போனார்கள்.
அரசநீதிகள் விருந்துண்ண‌
மனிதநீதிகளின் இறைச்சிகள்
பரிமாறப்பட்டன.
ரம்பைகளும் ஊர்வசிகளும்
ஆடிப்பாடினர்.
வியாஸன்
முற்றும்
என்று எழுதிவிட்டு
எழுத்தாணியை முறித்துப்போட்டுவிட்டான்.

==========================================

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஓவியா (2)

ஓவியா (2)
================================ருத்ரா

பெண்ணியமா?
கண்ணியமா?
இவர் இப்போது
சூட்டியிருக்கும் மகுடம்.
அவள் அப்படித்தான் மாதிரி
இவள் இப்படித்தான்
என்று
கோடி ஹிட்டுகள்
இவரது "திருப்பதி" உண்டியலில்
விழுந்திருக்கின்றன.
அந்த ஹிட்டுகளுக்கு
நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கமலாதாஸ் எனும்
மகத்தான பெண்ணின் கண்களில்
காமத்தை வாசித்தவர்கள்
அவரது புத்தகங்களை
"பெஸ்ட் செல்லர்" வரிசையில்
நிச்சயம் அடுக்கியிருக்க மாட்டார்கள்.
அவரது
ஆசையும் அவலமும்
ஒரு சேர விரித்த‌
அந்த அகலமான விழிகளில்
நள்ளிரவு நமைச்சல்களின்
அழகிய கவிதைகளைத்தான்
வாசகர்கள் கண்டார்கள்.
கள்ளோ காவியமோ என‌
மு.வ அவ‌ர்களின் தடித்த‌
நாவலாய்
ஒரு சுற்று புரட்டப்பட்டு
அவர் மறைந்து கொண்டார்.
நானும் அந்த கோடியில்
கலந்து கொள்கிறேன்.
"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் "ஓவியம்""
இதன் பிக்காசோ தூரிகைகளின்
அர்த்தம்
யாருக்குமே புரிய வாய்ப்பில்லாத‌
"நவீன ஓவியம்" இவர்.

================================================

மனிதம் சுடர்க!

மனிதம் சுடர்க!
=======================================ருத்ரா

நடந்து செல்.
நிமிர்ந்து செல்.

வானம் மட்டுமே உன்னை இடிக்கும்.
அப்போதும் அந்த‌
வானத்தோடு கொஞ்சம் கிசு கிசுத்துப்பார்.
அன்பும் அறிவுமே
இங்கு கடல்கள்
இங்கு வானங்கள்
இங்கு விண்வெளி மண்டலங்கள்
என்று சொல்லிப்பார்
இப்போது
வானம் உன் காலடியில்.

உன் காலடிகள் தோறும்
அத்வைதம் தான்.
மானிடத்துள் கடவுளர்கள்.
கடவுள் எனும் பாஷ்யம்
பல்லுயிர் நேசமே.
இதில் வெட்டரிவாள்களுக்கும்
வேல் கம்புகளுக்கும்
இடமில்லை.
துப்பாக்கிகள் கூட‌
முறிந்து போகும்
சோளத்தட்டைகளே.

உலக மானிடம் என்ற‌
பேரொளியில்
சில்லறை மதங்கள்
வெறும் மூளித்தனமான‌
இரைச்சல்களே.
உன் கடவுள் என் கடவுள்
என்று ஜீவ அப்பத்தை
கூறு போட்டு
தின்னும் குரங்குகள் அல்ல‌
நாம்.
அது என்ன தான்
என்று
அறிவின் நுண்ணோக்கியிலும்
ஆய்வின் விண்ணோக்கியிலும்
உற்றுப்பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்.
இது தான்
என்று சமாதி கட்டும்போது
அதில் நசுங்கும்
சிற்றெரும்பின் குரல்
உன் காதுகளில் விழவில்லையா?
ஆம்..
அறிவு ஊர்ந்து செல்லும் இடங்கள்
எத்தனை எத்தனையோ?
அதன் தடம் தெரிந்தால் போதும்.
மாய சொப்பனங்களுக்கு
வர்ணங்கள் பூசாதே!
கலக்கங்களையும் அச்சங்களையும்
கல்வெட்டுகள் ஆக்காதே..

நகர்ந்து கொண்டே இரு.
சூரியன் ஆனாலும்
பூமி ஆனாலும்
புளூட்டோ ஆனாலும்
நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
நகர்ந்து கொண்டே இருக்கும்போது தான்
நிற்கவும் செய்கிறீர்கள்.
அந்த இனர்ஷியா எனும்
அக ஈர்ப்பும் புற விடுப்பும்
சமம் ஆகும் ஒரு புள்ளியை
கணிதப்படுத்துவதில் தான்
விஞ்ஞானிகள்
தங்கள் ஆயுள்காலங்களையெல்லாம்
தொலைத்து இருக்கிறார்கள்.
விருப்பு வெறுப்பு எனும்
உணர்ச்சிகள்
தீயாக உன்னைச்சூழ விடாதே!
சிவ உருவெளி எனும்
சச்சிதானந்தங்கள்
எல்லா மக்களும்
எல்லா மக்களுக்குமாக‌
வாழ்ந்து இன்புறுவதே.
வேறு நமைச்சல்களுக்கு இடமில்லை.
எல்லா உயிர்களின் ஊற்றுக்கண்ணும்
மனிதம் வழியாக திறக்கட்டும்.
அது திக்கெட்டும் பாயட்டும்.
மனிதம் வாழ்க!
மனிதம் சுடர்க!

==================================================



வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தரமணி

தரமணி
=====================================ருத்ரா

பெண்ணியம்
என்பது
ஆணியத்தால்
வளர்க்கப்படும் பட்டுரோஜாவா?
அல்ல..அல்ல‌
என்று
ரோஜா பாதி முள் பாதி கூட‌
இல்லாமல்
முழுவதுமாகவே முள்ளாய்
ஆணியத்தின் கயமை மீது
குத்தி குத்தி
ரத்தம் கசிய வைக்கும்
அருமையான படம்.
ஒரு கதாநாயகி
ஆயிரம் கதாநாயகன்களின்
சுமையை
"அட்லஸ்" போல
அநாயசமாக தூக்கிக்காட்டும்
மிகக்கனமான படம்.
விருதுக்கமிட்டியார்களே
"ஊர்வசி"விருதுகளையெல்லாம்
உங்கள் மடியில்
சுருட்டி வைத்திருந்தது போதும்!
கதாநாயகியின் நடிப்புக்கு
அந்த "ஊர்வசியை" ஒரு
பட்டர் பேப்பர் போல சுற்றிக்கொள்ளலாம்.
அவ்வளவு தான்.
"ஆ ண்ட்ரியா "என்ற பெயருக்குள்
அந்த "ஆல்தியா ஜோசஃ ப் "
அப்படியே செருகிக்கொண்டது
அற்புத நடிப்புக்களஞ்சியமாய்.
தாடி மீசைக்காடுகளில் வந்து
கதாநாயகன்
காதல் எனும் ஒரு ரோஜாப்பூவை
நீட்டிவிட்டு
வார்த்தை ஊசிகளால்
குத்தி குத்தி வாங்கும்போது
ரணம் மிகவும் வலிக்கிறது.
இந்த ரணங்களின் ஆரண்யத்தில்
ராமன் காலத்து
சலவைத்தொழிலாளியின் சந்தேகம்
ராமாயணத்துள் கீமாயணமாய்
பரபரப்புகளின் நெருப்பை
கொடூரத்தின் உஷ்ணமாய் மூட்டுகிறது.
படம்  ஃ பிரேமுக்கு  ஃ பிரேம்
ராம் ராம் என்று உச்சரிக்கிறது.
பெண்ணின் உள்வலியே
இங்கு இசையமைப்பு
யுவன் நரம்புக்கருவிகளிலிருந்து
அந்த வலியை கவிதையாக்கி இருக்கிறார்.
இதற்கு இன்னொரு கவிதையை
இசையமைத்தது போல்
ந.முத்துக்குமாரின் அந்த வரிகள்
"ஒரு கோப்பை வேண்டும் கொண்டு   வா"
என்ன ஆழமானதொரு சொல் கூட்டம்?
"கல் பிறந்தது
மண் பிறந்தது
பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில்
கண்ணீர்த்துளிகள்
கன்னம் தீண்டியதே .."
கல் தோன்றி
மண் தோன்றாக்காலத்தேயும்
ஆணின் சந்தேகம்
காக்காமுள்ளாய்
பெண்ணின் இதயம் கீறியதோ
என்கிறார் கவிஞர்.
அவர் பேனா விட்டு விட்டுப்போன
அந்த வலிக்கு
இன்னும் மரணம் இல்லை.
தோழில் நுட்பத்தின் உருவகம்
அந்த "தரமணி"
கவித்துவமான பெண்ணின்
வலி நுட்பத்தின் உருவகம்
இந்த "தரமணி"

=================================================




"ஆதி பகவன் "

"ஆதி பகவன் "
===========================================ருத்ரா

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

‍‍‍‍__________திருக்குறள் (1)


வள்ளுவனின் கைரேகை கிடைக்கவில்லை என்று கவலைப்படவேண்டாம்.
இந்த குறள்  தான் எங்கும் விரவிக்கிடக்கிறது.இந்த தலை விளக்கை (ஹெட் லைட் )போட்டுக்கொண்டு வரும் இந்த ஒன்றரை அடி  ஊர்தியின் முன் எல்லா இருட்டும் தொலைந்து போகிறது.தூசிகள் தூர விலகுகின்றன.  எல்லோரையும் போல கடவுள் வாழ்த்தை முதல் முடுக்கு (கியர்) போட்டு தான் தன் தமிழ் ஊர்தியை ஓட்டத்துவங்குகிறார்.

 எழுத்துக்கள்  எல்லாம்  "அ "வை முதலாகக்கொண்டு ஒலிக்கின்றன. அதுபோல்தான் உலகம் ஆதி பகவனை முதலாகக்கொண்டது.

அவ்வளவே இதன் பொருள்.

ஆதி பகவான் என்றால் கடவுளர்களா? அல்லது திருவள்ளுவரின் அம்மா அப்பாவா? வள்ளுவர் மிகவும் நுண்மாண் நுழைபுலம் மிக்க புலவர்.அந்த தொன்மை காலத்தில் கடவுள் மறுப்பு கோட்பாடுகள் இருந்தனவா? என்பது பற்றி  தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அவரது சொற்களின் ஊடே நுழைந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பெரும்பான்மையானவர்கள் அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்துகிறார்."பகவன்" என்ற பெயர் இன்னும் நம்மிடையே இருக்கிறது ஜைனர்கள் அதாவது சமணர்களின் பெயராக.அப்ப ன்ற தாய் பெயர் இந்துவாக இருக்கிறதே
என நீங்கள் கேட்கலாம்! இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் திருக்குறளை இயற்றினார்.அப்படி அவர் ஓலையில் எழுதிய முதல் குறளே சமஸ்கிருதம் கலந்த சொற்களைக்
கொண்டு படைத்த காரணம் என்ன? எது தொன்மையானது? தமிழா? சமஸ்கிருதமா? இரண்டும் வழங்குகிற கால கட்டங்கள் தான் நம் சங்க காலம்.ஆனால் அது எப்படி இயலும் "கல் தோன்றி மண் தோன்றா" காலத்தேயும் முன் தோன்றிய மூத்த குடியல்லவா நம் தமிழ் இனம்.அப்படியிருக்க இது எப்படி இயலும்? இந்த தமிழ் செய்யுள் வரிகளில்
சம்ஸ்கிருத சொற்கள் "அடிச் சொற்களா? மேல் சொற்களா?" இல்லையில்லை இவை மேற்சொற்கள் தான்.தமிழ் தோன்றிய பிறகு அப்புறம் வந்து கலந்த சொற்கள் தான் என்று அடித்துச்சொல்லும் தமிழ் ஆராய்ச்சியாளர்களே அதிகம்.அவர்களது தமிழ்ப்பற்று அப்படி அடித்துச்சொல்ல வைக்கிறது.

இந்த சூழ்நிலையில் "மொழி ஞாயிறாக" நம்மிடையே தோன்றியவர்
"தேவ நேயப்பாவாணர்".அவரது "வேர்ச்சொல் " ஆராய்ச்சி எனும் கூரிய அறிவுத்திறன் தமிழின் தொன்மைப்படிவங்களை (ஃ பாசில்களை ) தோண்டியெடுத்து மேலே கொண்டு போட்டது! ஆனாலும் இன்றளவும்
அந்த சம்ஸ்கிருதம் தான் நம் தமிழின் மேல் படுத்துக்கொண்டு தமிழின்
மூச்சை அழுத்தி நசுக்கிக்கொண்டிருக்கிறது.தமிழ் இனிய மொழி.செம்மொழி அதெல்லாம் சரி தான் .ஆனாலும் நான் என் பிறந்த குழந்தைக்கு கம்பியூட்டரையெல்லாம் தட்டி தட்டி "தஸ் புஸ்"னு தான்
பெயர் வைப்பேன் என்கிற பச்சைத்தமிழர்கள் தான் நம்மிடையே இருக்கிறார்கள்.இதையெல்லாம் போரிட்டு தடுப்பேன் என்கிற "தூய தமிழ்"
இயக்கக்காரர்களோ "காஃ பி" எனும் அயற்சொல்லை அப்படியே எடுத்துக்கொள்வதற்குப்பதில் அதை ரொம்பவும் பிதுக்கியெடுத்து
"கொட்டை வடி நீர்" என்று புதுச்சொல் உருவாக்கும் போது நம் திருக்குறளை வைத்து நம் தலையில் அடித்துக்கொல்வத்தைத் தவிர வேறு வழியில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்."

என்பதே அந்தக்குறள்.(குறள்--140)

இப்படி உலகத்தோடு ஒட்ட ஒழுகித்தானே "நம் தமிழ் "மணிப்பிரவாளம்"ஆகி
சமஸ்கிருதத்தமிழாகிஇருக்கிறது. இதுவும் மறுப்பதற்கில்லை.வேறு என்ன தான் செய்வது ?

(தொடரும்)






என் ஆளோட லிப்ஸ்டிக்கை காணோம்.

என் ஆளோட லிப்ஸ்டிக்கை காணோம்.
=================================================ருத்ரா

"என் ஆளோட செருப்ப காணோம்"னு
ஒரு படம்.
"வைரல்" ஆகிறாப்ல தலைப்பை மட்டும்
வச்சாபோதும்.
நாப்பத்துக்கு மேலே மார்க்கு போட்டு
புது தலைமுறையை
தூக்கி விட்டு தன் "சமூக ஆர்வலத்தனத்துக்கு"
நூறு மார்க்கு போட்டு
தன் முதுகுல தானே தட்டி கொடுத்துக்கிட்டு
இளசுகள் இடையே
கலெக்சனையும் ஏத்திக்கிட்டு
வர்ற பத்திரிகை
என் ஆளோட லிப்ஸ்டிக்
விவகாரத்தை கையில் எடுக்குமான்னு
தெரியல.
இருந்தாலும் எழுதறேன்.

என் அவள் உதடுகளின்
வண்ணம் அத்தனை அழகு
என்ன நாவல் பழங்களை நெறைய தின்னுட்டியா?
உதடுகள் "செர்ரி பிரவுன்" கணக்கா
டக்கரா இருக்கு என்றேன்.
"சீ போடா"ன்னு
அவள் சிணுங்கியது
என் நெஞ்சுக்குள் அவள் செம்பஞ்சு விரல்கள்
பிசைந்து பிசைந்து பின்னியெடுத்தது!

அன்று என்னவோ
அவள்உதடுகள் "தன் நிறத்தில்" இருந்தன.
என்ன இன்றைக்கு நாவல் கனிகள் தின்னவில்லையா
என்று கேட்டேன்.
"போதும்டா கிண்டல்
அந்த லிப்ஸ்டிக்கை காணோம்டா என்றாள்.
அன்று முதல்
கல்லூரிக்குமரிகள் ஒருவர் பாக்கியில்லாமல்
அருகில் போய்
ஏதாவது "உதடுகள்" அப்படி
நாவல் பழங்கள் தின்றிருக்கின்றனவா என்று
துப்பறிந்தேன்.
பேச்சுக்கொடுத்ததில்
என் முகத்தில் குற்றாலச்சாரல் தான்!
நான் இப்படி
ஓட்டு சேகரிப்பவன் போல்
பெண்களை மொய்த்ததில்
சினந்து
என் ஆளுக்கு இப்போ ஒரு செருப்பைக்காணோம்.
என் மீது வீசியதில்
அது எங்கு போய் விழுந்தது என்று
தெரியவில்லை.
இப்போது லிப்ஸ்டிக்கோடு
அந்த செருப்பையும் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் ஆளுக்காக!

=====================================









சொடக்கு போடும் நேரத்தில்…

சொடக்கு போடும் நேரத்தில்…
=========================================ருத்ரா இ.பரமசிவன்

காலத்தின்
இந்த சந்து பொந்துகளில்
ஓடிக் களைப்பது யார்?
ஊடிக் களிப்பது யார்?
ஒரு பூகம்பம்
லட்சம் பேரை தின்று விடுகிறது.
நாஸா
பிரபஞ்சத்தின் காது குடைந்து
சங்கீதம் கேட்கிறது.
மில்லியன் ஒளியாண்டு தூரத்து
ஒரு பூமியில் கூட‌
என்னை மாதிரி
ஒரு ருத்ரா
என்னென்னவோ
எழுதிக்கொண்டிருக்கலாம்.
திடீரென்று
அப்துல் கலாம்
நம் முன் எழுந்து நிற்கலாம்.
இளம்பிஞ்சுகளின்
அரும்புக்கனவுகளில்
கூடு கட்டி கிடப்பதற்கே
வந்தேன் என்கலாம்.
நோபல் பரிசு விஞ்ஞானியின்
டி.என்.ஏ ஆர்.என்.ஏ தியரி
ஊசி மருந்தின் வழியே
புற்று நோய் நரகத்துள் புகுந்து
அதை
நாசம் பண்ணி விடலாம்.
தூக்குப்போட்டுத்தொங்கி
யாரோ ஒருவர்
இந்த உலகத்தின் மீது
காறி உமிழும் களங்கத்தை
செய்யாது தப்பித்து விடலாம்.
நம்பிக்கையின்
பசுந்தளிர் தலைநீட்டி
மன இறுக்கத்தின்
பாறாங்கல்லை
தவிடு பொடியாக்கலாம்.
காலத்தை
சொடக்கு போடும்
உங்கள்
விரலில் வழியும்
மூளையின்
பல்ஸை
பொறுத்ததே அது.
பொறுத்து பொறுத்தாகிலும்
பொருத்தமாகவே
சிந்தியுங்கள்.

=====================================================

அல்வா வாசு (2)

அல்வா வாசு (2)
==================================ருத்ரா

இயற்கை கொக்கரிக்கிறது
"நீ மட்டும் தானா?
நானும் கொடுத்துவிட்டேன்
அல்வா."என்று.
அல்வா என்றால் இன்று
இனிக்காமல்
கசக்கிறது.
கண்ணீரில் உப்புக்கரித்தாலும்
அடி ஆழத்தில்
அவர்  காமெடி பிம்பம் இனிக்கிறது.
அவர் மறைவு கொடுஞ்சோகம்.
கல்லீரல் எனும் கல்லறையையா
இத்தனை நாளும் வயிற்றில்
கட்டிக்கொண்டிருந்தார்?
நினைக்க நினைக்க
நெஞ்சம்  பிழிகின்றது.
அன்னார் குடும்பத்தார்க்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.

----------------------------------------------------------------


வியாழன், 17 ஆகஸ்ட், 2017

டெங்கு

டெங்கு
===============================ருத்ரா

கொசு திரும்ப திரும்ப‌
வந்தது.
ஒரு தடவை ஆதார் அட்டை
கேட்டது.
இன்னொரு தடவை
பான் கார்டு கேட்டது.
மீண்டும் வந்து
திருத்தம் போடச்சொன்னது.
அப்புறம்
ஒன்றோடு ஒன்று
இணைக்கணும்னு
சொன்னது.
இப்போது மறுபடியும்
வருகிறது.
என்னிடம் தட்டை அணுக்கள்
காலி.
நான் மல்லாந்து விட்டேன்
தட்டையாய்.

==========================================


அல்வா வாசு


அல்வா வாசு
========================================ருத்ரா

அல்வா வாசுவை நினைத்தால் வடிவேலு தோன்றுவார்.
வடிவேலுவை நினைத்தால் அல்வா அருகில் நிற்பார்.
மனிதர்களின் கவலைகளை
தன் ஊமைத்தனமான வசனத்தால்
விரட்டி சிரிக்கவைத்து வெளிச்சமேற்றும்
இருட்டுக்கடை அல்வா அவர்.
அவர் நிச்சயம் இந்த நோயிலிருந்து
மீண்டு வரவேண்டும்.
நகைச்ச்சுவையின்
நாதஸ்வரக்கச்சேரியில்
அவர் ஓரமாக நின்று 
"ஒத்து நாயனம்" வாசித்தாலும்
அவர் நிமிண்டிவிடும் சிரிப்பலைகளில்
டி.என்.ராஜரத்னம்பிள்ளையின்
நுணுக்க இசையும் கேட்கும்.
அவர் நலமோடு வந்து 
நம்மை சிரிக்க வைக்க‌
மனம் நெகிழ்ந்து அந்த‌
இயற்கையை மன்றாடி வேண்டுகிறேன்.
பெயரில் கல் வைத்திருன்ந்தாலும்
அன்பான கல்லீரலே
அவரை வாழவிடு!
உன் கல் மனம் இளகட்டும்.
அவரும் நலம் பெறட்டும்.

நெகிழ்வுடன் ருத்ரா

புதன், 16 ஆகஸ்ட், 2017

சராஹா


சராஹா
=====================================ருத்ரா

ஒரே ஒரு ஊரில்
ஒரே ஒரு கம்பியூட்டர்.
அது எல்லாவற்றையும் தின்றது.
அறிவும் கொழுத்தது.
உலகத்துப் பல்கலைக்கழகங்கள்
எல்லாம்
அதற்குள் ஜீரணம்.
அந்த கூகிள் யுனிவெர்சிடியில்
ஆக்ஸ்ஃபோர்டு அகராதிகள் கூட‌
அற்பம் ஆனது.
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
வேகம் வேகம் வேகம்..என்று
பிரபஞ்சங்களையே கூட
பிசைந்து தின்றான்.
அதையும் கூட
பொம்மை விளையாட்டு ஆக்கி
பில்லியன் பில்லியன் பில்லியன் என்று
பங்கு சந்தையின் வேதாள உலகத்தை
படைத்து நின்றான்.
ஆன் லைன் ட்ரேடிங்க் என்று
ஆப்பக்கட்டை ஆயாவின்
கூன் விழுந்த முதுகின்
சில்லரை வியாபாரத்தையும்
முறித்து நசுக்கி கூழாக்கினான்.
இந்த இன்விசிபிள் வெறி
ஆயிரத்தொரு இரவு கதைகளில்
வரும்
அற்புத பூதம் ஆனது.
மனிதன் கேட்டான்
இந்த மண்டை மாதிரி கணினிவேண்டாம்
கையடக்க பேசியில்
உலகத்தை அடக்கு என்றான்.
அது
முகநூல் தந்தது.
வாட்ஸப் தந்தது.
இப்போது
மனிதக்கருவில்
மனிதப்பசை பிடிக்குமுன்னரே
பேராசை எனும் அரக்கனின்
தொப்பூள்கோடி
வெளியே வந்தது.
காதலும் காமமும்
ஒன்றையொன்று முந்தி வந்தது.
சாட்டிங்கில்
பிரபஞ்சத்தைக்கூட‌
அந்த‌
ஹிக்ஸ் போஸான்களை கூட‌
ப்ரேன் காஸ்மாலஜியைக்கூட‌
அவன் கண்டுகொள்ளவில்லை.
பல் தேய்ப்பதில் இருந்து
கடலை போடுவது வரையிலும்
அதில்
குப்பைக்காகிதங்களை கிழித்துப்போட்டான்
குப்பைகளைத் தந்தவர்கள்
கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
கம்பியூட்டர் விஞ்ஞானிகள்
டாலர்களின் அசுரவயிற்றில்
அடைக்கலம் ஆனார்கள்.
வக்கிரம் நிறைந்த விளையாட்டுகளில்
உலகத்தை சிறைப்பிடித்தார்கள்.
கைபேசிகள் கொண்டு
மக்கள் புரட்சிசெய்யலாம்
என்று மாயமான‌
கானல்நீர்ப்படகுகள்
ஓட்டினார்கள்.
அதிலும் லாபங்கள் குவிந்தன.
மனிதபிஞ்சுகளின்
அமுதக்கைகளிலும்
தற்கொலைப்பிசாசுவை
விளையாட்டுத்தோழனாக்கி
தளிர் விடும்
மானிடப்பரிமாணத்தையும்
வெட்டி முறித்து
கல்லா கட்டினான்.
அந்த நீலத்திமிங்கிலம்
பிஞ்சுகளின் மரணத்தில் 
விழுங்கி விழுங்கி விளையாடுவதை
கல்லா கட்டினான்.
இப்பொது
இந்த அழகிய விண்வெளியை
மொட்டைக்கடிதங்களின்
புண் வெளியாக்க
சராஹா என்றொரு
சைபர் அணுகுண்டு தயார் செய்து விட்டான்.
இனி மனிதக்கபாலங்கள் குவிந்த
ஒரு சஹாரா
அந்த விண்வெளியில்
பரந்து கிடக்கும்.
மனிதா
நட்சத்திரங்கள் இரவில்
உன் அழிவைப்பார்த்துக்கொண்டே
சோழி குலுக்கி விளையாடும்.

=============================================




அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
======================================ருத்ரா

அண்ணே சென்னையிலே மவுண்ட் ரோடு தாண்டி இந்த ரோட்டில்
நடந்து போனால் வரி போட்டுருவாங்களோ அண்ணே!

ஏண்டா அப்டி சொல்றே?

பாருங்க! ரோடு பேரு "ஜி எஸ் டி" ரோடுன்னுல்லா இருக்கு.

அட நீ வேற..டெல்லி காதுல இது விழுந்துறப்போறது?

====================================================

"ஜனவரிவரி".

"ஜனவரிவரி".
=========================
2018 ஜனவரி
புதிய ஜனவரியாக இருக்குமாம்.
மோடிஜி சொல்கிறார்.
ஆம்.அது "ஜனவரிவரி".
முதல் வரி சிஜிஎஸ்டி
2ஆம் வரி எஸ்ஜிஎஸ்டி.
"ஜன"ங்களுக்கு
வரிக்கு மேல் வரி.
"ஜி எஸ் டி பாரதம் ஜிந்தாபாத்!"

__________ருத்ரா இ.பரமசிவன்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கொடுவரி முதலை குடை தண் துறைய‌

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ்
தோலின் முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே
.
______________________________________________________________

(சங்கத்தமிழ் நடையில் எனது (செய்யுட்)கவிதை )


விளக்க உரை.
==============================================ருத்ரா இ.பரமசிவன்



தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

தன் குட்டிகளையே தின்னும்முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே.
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா?
எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?


அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)



எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.

மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம் வந்து என்னைத்தழுவிக்கொள்வாயாக.அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.

==============================================ருத்ரா இ.பரமசிவன்



ப்ளு வேல்

ப்ளு வேல்
==========================ருத்ரா

ஜனனம் ஒரு விளையாட்டு.
மரணம் கூட ஒரு விளயாட்டு.
பஜ கோவிந்தம்
இதையெல்லாம் "மதுரம்"
என்றது.
ஆனால் ஆத்மீகம் கூட‌
லாபம் சம்பாத்திக்க
எப்படி முனைந்தது?
பிஞ்சுகளின் தற்கொலை கூட‌
ஒரு விளையாட்டு என்கிறது
ஒரு விபரீத வியாபாரம்.
முதலாளித்துவத்தின்
வக்கிரம் உக்கிரம்
அடையும் காலகட்டம் இது.
சமுதாய பிரக்ஞையுடன்
இதை எதிர்ப்பதே
இப்போதைய அவசியமான‌
சமுதாயக்கடமை.

====================================

நூலேணி (3)


நூலேணி (3)
===================================ருத்ரா

"செல்லை" தூக்கியெறியுங்கள்.கைக்கு அடக்கமாய் திருக்குறளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களோடு "சேட்டிங்" செய்ய அதைப்போல ஒரு தோழன் இவ்வுலகில் எவனும் மில்லை.

___________________________________ருத்ரா

குறள் 372:

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

மு.வரதராசனார் உரை:

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

பரிமேலழகர் உரை:

இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது, அது அந்த அறிவினைப் போதையாக்கும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிக்கும்.

கார்ட்டூன்(2)

கார்ட்டூன்(2)
=========================================ருத்ரா


திங்கள், 14 ஆகஸ்ட், 2017

சுக்கா மிளகா சுதந்திரம்?

சுக்கா மிளகா சுதந்திரம்?
========================================ருத்ரா

"சுக்கா மிளகா சுதந்திரம்?"
சொல் கிளியே!

பாவேந்தர் சுதந்திரம் பற்றி
சுக்கு மிளகு போல்
சுலபம் இல்லை என்று
சூத்திரம் சொன்னார்.

சுதந்திரத்தின் உள்ளே
விலங்கு என்றும்
ஒரு அர்த்தம் உள்ளது.

சுதந்திரம் என்பது
சுதந்திரமாய்
நமக்கு நாமே
விலங்கு மாட்டிக்கொள்ளும்
வாழ்க்கை ஆகிப்போனது.

நமக்கு பிடித்த பிள்ளையாரை
கும்பிட ஆரம்பித்து
பிறகு அவரையும்
அந்த அரசமரத்தையும்
சுற்றி சுற்றி வர ஆரம்பிக்கிறோம்.

பொழுது போக்க‌
சுதந்திரமாய் பார்க்க ஆரம்பித்த
டி.வி
அப்புறம்
அதன் ரிமோட்டுகளில்
நாம் விலங்கு மாட்டிக்கொள்கிறோம்.

சுதந்திரமாய்
டெக்ஸ்டிங்கும் வீடியோவும்
பயன்படுத்திய பிறகு
அந்த செல்ஃபோன்களே
நம்மை அடைத்துப்போடும்
"செல்"கள் ஆகின.

அப்பா சொன்னாரே
தாத்தா சொன்னாரே
என்று
சும்மா ஜாலியாய் போட்டுக்கொண்ட‌
சாதிப்பெயர்
நம் பெண்குழந்தைப்பிஞ்சுகள்
நமக்குத்தெரியாமல்
நம் சாதிக்கோடுகள் தாண்டி
காதல் கத்தரிக்காய்
என்று
கிலோக்கணக்கில் வாங்கி வந்து
வாழ்க்கை வியாபாரம் தொடங்கியபோது
பல்லை நற நறக்கிறோம்.
நரம்பு புடைக்கிறோம்.
ஏதோ ஒரு வெறி
நம்மை விலங்கு பூட்டுகிறது.

ஓட்டுகள் போடும் சுதந்திரம்
என்று
அவர்கள் கொடுத்த சீட்டுகளில்
அவர்கள் விரட்டுகின்ற மிரட்டுகின்ற‌
அல்லது
"காக்காய் காக்காய் நீ அழகாய் இருக்கிறாய்"
உன் அலகைத்திறந்து பாடு"
என்று அவர்கள் பண்ணுகிற‌
அதிரடி தந்திரங்களில்
அல்லது இலவசங்கள் எனும்
அவர்களின் பேய்மழையில்
நாம் காணாமல் கரைந்து போகிறோம்.
மின்னணுப்பொறிக்குள்
குப்பைமேடுகள் குவிந்து போனது.
பொன்னான அந்த சீட்டு...நம்
புண்ணான மர்மமும்

நமக்குத்தெரியாத ஒரு சுதந்திரம் அது.
அந்த மொண்ணைக்காகிதம்
உறுதியான எஃகினால் ஆன‌
நம் விலங்குகள் எப்படி ஆனது?
சுதந்திரமாய்
ஐந்து ஐந்து ஆண்டுகள் தவணையில்
நாம் ஆயுள் தண்டனை
பெற்றுக்கொள்ள‌
நமக்கே உண்டு சுதந்திரம்.
நம் கண்ணீர்.
நம் வேர்வை.
நம் ரத்தம்...எல்லாம்
உலகப்பொருளாதார வயல்களில்
அவர்களுக்கே மகசூல் ஆகி
ஜனநாயகத்தின்
சூல் கலைந்து
சிதைவுற்று..அந்த‌
வர்ண வர்ண "அபார்ஷன்"களை
நம் டிவியில் நாமே கண்டு கொள்ள‌
நமக்கு பூரண சுதந்திரம் உண்டு!


===============================================



நூலேணி (2)

நூலேணி (2)

நிழல்
===========================================ருத்ரா

தாமஸ் ஹார்டி கவிதை எழுதினார்.
குறும்புக்கார சிறுவன் கையில்
பட்டாம்பூச்சி
இறக்கை வேறாய் உடல் வேறாய்
பிய்க்கப்படுகிறது.
கடவுளும் அப்படி ஒரு சிறுபயல் தான்.
மதங்கள் செய்யும் கசாப்பில்
மனிதம் எனும் சிறகுகள்
பிய்த்து எறியப்படுகின்றன.
கடவுளே பிறந்து வந்து
கடவுளை மறுத்தாலும்
கடவுளின் நிழலே
அக்கடவுளை கழுவில் ஏற்றும்!

============================================

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

கோர(க்)ப்பூர்

கோர(க்)ப்பூர்
============================================ருத்ரா

இது என்ன கோரம்?
சில லட்சங்கள் பாக்கி
என்பதற்கா
இந்த மனிதப்பிஞ்சுகளின்
குரல் வளைகள்
திருகப்படவேண்டும்?
மார்க்ஸ் சொன்னார்
லாபம் ..லாபத்திற்கு மேல் லாபம்
(சூப்பர் ப்ராஃபிட்) தான்
இந்த அசுர முதலாளித்துவத்தின்
ரத்தம்.
அதற்கு
மனித  ரத்தம் குடிப்பதே
தாராளமய பொருளாதாரம்.
மனிதர்கள் என்ன‌
சமுதாயங்கள் என்ன‌
எல்லாவற்றையும்
உறிஞ்சிவிடும் இந்த மிருகம்.
உலகத்து நகரங்களின்
பளபளப்பான கட்டிடங்கள்
கூட‌
அழகிய படமெடுத்த‌
பிரம்மாண்டமான
இந்த நாகப்பாம்புகள் தான்.
முதலாளித்துவம்
எவ்வளவுக்கு எவ்வளவு
அழகாயிருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு அது
மானிட ஜனநாயகத்தின் நஞ்சு.
மனிதர்களே
உங்கள் மதங்கள் எல்லாம்
இந்த நச்சுப்பைகளைத்தான்
கர்ப்பப்பைக்குள் வைத்திருக்கின்றன.
காவி மதங்களும்
அதில் தள்ளுபடியில்லை.
இந்தியாவின் பெரிய மாநிலத்தில்
நிகழ்ந்த
எவ்வளவு பெரிய கேவலம் இது?
கொத்து கொத்தாய்
ஏழு எட்டு பத்து என்று எழுபதுக்கும் மேல்
பிஞ்சு உயிர்கள் பலியாகினவே!
இந்த எழுபத்திஒண்ணாவது
சுதந்திர தினத்தைக்கொண்டாட‌
இப்படி ஒரு குரூரமான‌
நிகழ்வு தான் நடக்க வேண்டுமா?
(இப்போது  நூற்றுக்கும் மேல்  பலி )
தினந்தோறும்
எமனின் பாசக்கயிறு
அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களின்
கழுத்துக்களிலா வீசப்படவேண்டும்?
அந்த டாக்டர் கஃபீல் அகமது
தனி முயற்சி எடுத்து
எத்தனை உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்!
காழ்ப்புணர்ச்சியில்
அவருக்கும் கூட எத்தனை தொந்தரவுகள்?
அவர் முன்
உங்கள் பாரத ரத்னாக்கள் எல்லாம்
வெறும் கண்ணாடிக்கற்கள்.
மாய பிம்பம் பார்த்து
ஓட்டுகளை
மெட்ரோ நகரத்து "கம்போஸ்ட் குப்பை" போல‌
குவிக்கும்
இந்திய குடிமகன்களே!
மத சாராயத்தைக் குடித்து
நீங்கள் மதி மயங்கியது போதும்.

=============================================================

"மின்சாரக்கம்பியிலும் மைனாக்கள் கூடு கட்டும்.."

"மின்சாரக்கம்பியிலும்
மைனாக்கள் கூடு கட்டும்.."
==================================================ருத்ரா


"மின்சாரக்கம்பியிலும்
மைனாக்கள் கூடு கட்டும்.."

நுண்மைக்கவிஞர்
திரு மனுஷ்ய புத்ரன் அவர்கள்
மென்மைக்கவிஞன்
அமரர் ந.முத்துக்குமார் அவர்களின்
மேலே கண்ட வரிகளை
தொலைக்காட்சியில்
அருமையாக விளக்கினார்.

தொலைந்து போகாத‌
அந்தக்கவிஞன் வரிகள்
தொலைக்காட்சியில்
பத்திரமாக இருந்து
மின்னல்
அடித்துக்கொண்டிருக்கின்றன.

அந்தக்காதலை
மைனாக்கள் கூடுகளில்
மாணிக்கக்கற்களாய்
வைத்து
ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்.

துருவங்கள்
தொட்டுவிட்டால் போதும்
மின்சாரக்கம்பிகளில்
எல்லாமே கருகிவிடும்.

அபாயத்தை அருகில் வைத்து
இலை போட்டு
விருந்துண்ணும் உள்ளங்கள் அல்லவா
காதல் உள்ளங்கள்.

மரணங்களை தொட்டும்
புதிய புதிய பரிமாணங்களை
தேடும்
இன்றைய அதிரடிக்காதலின்
அழகிய வானவில்லின்
ரெக்கைப்பிஞ்சுகளை
தூவி விட்டுக்கொண்டு
பஞ்சணை போடும்
பருவத்தின் புதிய தலைமுறை
நன்கு குமிழியிடுகிறது
இந்த வரிகளில்.

இசைக்கருவிகளும்
திரைப்படக் கதையின்
திரட்சியான மூலைகளும்
முத்துக்குமார் எழுத்துக்களில்
குழைந்து
எப்போதும்
ஒரு அமுதக்குழம்பின்
லாவாவை
பீச்சியடிக்கிறது.

ஆணவக்கொலையின்
வெட்டரிவாள் காடுகளிலும்
இந்த காதல் பீலிகள்
தூரிகையாகி
இந்த பிரபஞ்சத்திலேயே
காதல் முகங்களையும்
கடல் போன்ற அந்த‌
மென்மை உள்ளங்களையும்
வரைந்து காட்டுகின்றன.

இரத்தச்சகதியில்
இவர்கள் சமுதாயம் புதைந்தபோதிலும்
புதிய விடியலின் கர்ப்பம்
கன்னிக்குடம் உடைப்பதை
எந்த ஆதிக்கமும்
தடுக்க முடியாது தான்..
என்று
அந்த மின்சாரக்கம்பி வரிகள்
ஒரு
அக்கினியாழை மீட்டுகின்றன.

இறவாத கவிஞனே
இந்நேரம் அந்த‌
கொடுங்கோலன் எமன் கூட‌
உன் கவிதைக்கு
இசையமைக்க்கும்
ஒரு ஆர்வத்தில்
மயங்கி
அல்லது மரணித்துக்கிடப்பான்.

உன் வரிகளுக்கு
ஏது கொள்ளியும் சிதையும்?
உன் எழுத்தின் ஏக்கங்களுக்கு
ஏது தகனமும் சடங்குகளும்?

உன் கவிதைகள்
இந்த
விரிந்து பரந்த‌
ஆகாயமாகிப்போனது.

===========================================










சனி, 12 ஆகஸ்ட், 2017

நூலேணி

நூலேணி
---------------

வெற்றுக்கனவுகள்
எனும்
நூல் கொண்டு கட்டிய
ஏணியிலா
வானம் தொடப்போகிறாய் ?
அறிஞர்கள் தந்த
நூல் வழியாய்
நீ
ஆயிரம் பிரபஞ்சங்களை
கைப்பற்றலாம்.

=====================================ருத்ரா 

பாதை



பாதை
=====================================


நான் தான் மிதிபடுகிறேன்
நீ நகர்ச்சி பெற.
நீ ஏன் மிதிபடுகிறாய்
அடிமையாக?

பாதை கேட்டது
மனிதனிடம்!

=============================ருத்ரா

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

குறும்பாக்கள்

குறும்பாக்கள்
=======================================ருத்ரா


சுதந்திரதினம்


"வந்தேமாதர"த்தில்
புன்னகை பூத்த தாய்..இன்று
வெட்டரிவாளோடு நாக்குத்துருத்திய காளி!


அமித்ஷா

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து
அடுத்த மோடி பொம்மைக்குள்
புகுந்து விளையாட தயார்.


சோனியா

இவர் காட்டில் மீசை முளைத்த‌
சிங்கங்களுக்கு பஞ்சம் வந்ததால்
சிறுநரிகளின் ஊளைகளே இங்கு தேசியகீதம்.


நீயும் பொம்மை நானும் பொம்மை.


ஜனாதிபதி மற்றும்
துணை ஜனாதிபதி தேர்தல்கள்
வெற்றி கரமாய் முடிந்தன.


ராமராஜ்யம்


இன்னும் நம் நாட்டில்
"ஆயா ராம் கயா ராம்கள்" தான்
ஆட்சி செய்கின்றனர்.


தமிழ்நாடு


சேரன் அம்பு சோழன் தொண்டையில்
சோழன் வாள்  பாண்டியன் முதுகில்.
தமிழகம் நசுங்கிப்போன  பெருங்காய டப்பா!


கனகவிசயர்கள்


இவர்கள்  ரோடு ரோலரில்
மூவேந்தர்கள்
கூழ் !கூழ்! கூழ்!


=====================================================

புதன், 9 ஆகஸ்ட், 2017

தேடிச்சோறு நிதம் தின்று....

தேடிச்சோறு நிதம் தின்று....

==========================================ருத்ரா இ பரமசிவன்





தினமும் செய்திகள் செய்திகள்

துணுக்குகள்

கவிதை மொக்கைகள்

பின் நவீனத்துவ‌

முன் நவீனத்துவ‌

மாயாவாதக் கனவுவாத‌

வார்த்தை ஆலாபனைகள்.



யாரோ ஒரு நடிகை

அங்கம் எல்லாம்

துண்டு துண்டாய் வெட்டப்பட்ட விவரிப்பும்

காவல் நாய்கள்

அந்த மாமிசத்தை மோப்பம் பிடிக்கும்

இராட்சத காமிரா காட்சியும்..

மயிர்குத்திட்டு நிற்கவைக்கும் எழுத்துகளும்...



ஒரு புது மாதிரி

தாடியோ

குல்லாவோ

வைத்துக்கொண்ட‌

சாமியாரின்

ஆன்மீகக்குடல் உருவிய‌

ஸ்லோக சங்கிலித்தொடர்

வாக்கியங்களும்.....



பங்கு மூலதனத்தில்

கரடியும் காளையும்

கட்டிப்புரண்டு

புழுதிகிளப்பியதில்

கருப்புப்பணங்கள் கூட‌

கை கட்டி வாய்பொத்தி

கும்பாபிஷேகம் பண்ணி

சம்ப்ரோக்ஷணம் செய்து

பொருளாதாரத்தை புள்ளி விவர‌

ஆணி அடித்து ஆணி அடித்து

ஆலவட்டம் போடும்

பத்தி பத்தியான கட்டுரைகளும்....



தேடிச்சோறு நிதம் நின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

சிந்தனைக்குள்

சிதறுகின்ற பாரதியின் எரிமலைகளையே கூட

அவித்துப் போடும்

அரட்டைக்கூளங்களும்....



எம்.எல் ஏ சீட்டு.

இல்லாவிட்டால்

எம்.பி சீட்டு

இல்லாவிட்டால்

ராஜ்ய சபா சீட்டு

இன்னும்

மெடிகல் சீட்டு

இஞ்சீனியரிங்க் சீட்டு

என்று

அரசியலின் சாயப்பட்டறைகள்

கழுவி கழுவி ஊற்றிய‌

வாய்க்கால் வரப்பு செய்திகளும்....



மணல் அள்ளிச்செல்லும்

கொள்ளைகளும்

ரோடுகளில் மக்கள்

மறியல் செய்து மறியல் செய்து

டிவிக்களில்

முகங்கள் மொய்த்த செய்திகளும்....


அன்பே சிவம் என்பது போய்

அடுத்த மதத்தை

கசாப்பு செய்வதே நமது மதம்

எனும் வெறி வளர்க்கும்

தீக்காடுகளால் நிரம்பிப்போன‌

தேர்தல் சாணக்கியங்களும்...



அணு உலை வேண்டாம் என்று

அடுக்கு அடுக்காய்

ஜனங்கள் குவித்து

தொட்டில்கட்டி குழந்தைகளுடன்

சுருண்டு கிடந்தும்

அணுவின் எலக்ட்ரானுக்குள்ளும்

பிளக்கமுடியாத‌

இனவாத மயிரிழை அரசியலும்

அது சார்ந்த‌

விஞ்ஞான அஞ்ஞான எடுத்துக்காட்டுகள்

குவிந்த செய்திகளும்.....



காவிரியும் முல்லையாறும்

இனி சங்கத்தமிழ் ஒலிக்காது

என்னும்

ஒப்பாரி முழக்கங்களும்

ஒரு சொட்டு கூட தர மாட்டோம்

எனும்

தேர்தல் பருவகால‌

நரம்பு புடைக்கும்

நாக்கு தெறிக்கும்

பேச்சுகளின் ஒளிபரப்பு செய்திகளும்...


சட்டமன்றங்களில்

பாராளுமன்றத்தில்

ஜனநாயகத்தின் மொழி என்பது

வெறும் கூச்சல் மொழி மட்டும் தானா?

என்ற ஆதங்கங்களும் ...


உள்ளுக்குள்ளே

உயிரற்ற மைக்குகளுக்கு

கை கொடுக்கும்

மேசை தட்டல் மழையோசைகளும்...



இன்னும்

இன்னும்

பூனைமயிரில்

புதுக்கவிதைகள் செய்து

காதலின் ரத்த அணுக்களின்

சத்த மியூசிக்குகளில்

சரித்திரம் படைக்க கிளம்பிய‌

லேசர் அரங்க பட்டைகிளப்பும்

சினிமா கலைநிகழ்ச்சி செய்திகளும்..



மூச்சு முட்டுகிறது.

செய்திகள் தின்று தின்று..

பாவம்.

கொண்டுவாருங்கள்

யாராவது

ஆக்சிஜன் சிலிண்டரை

நம் ஜனநாயகத்துக்கு..



======================================================

4 ஆகஸ்டு 2013 ல் எழுதியது

கார்ட்டூன் (1)

கார்ட்டூன் (1)
======================================ருத்ரா

ஒரு கவுண்ட் டௌன்

ஒரு கவுண்ட் டௌன்
================================================ருத்ரா

சூபர்ஸ்டார் கட்சி ராகெட்டு திரியை
பற்ற வைக்க
கவுண்ட் டௌன் ஆரம்பித்து விட்டது
என‌
ஊடகங்கள்
ஊளையிட ஆரம்பித்து விட்டன.
கொடி ரெடி
சின்னம் ரெடி
கொள்கை தான்
மிக்ஸியில் ஓடிக்கொண்டிருக்கிறது
என்று
அமித்ஷா அறிவிப்பு செய்கிறார்.
ஒரு டிவியின் க‌ருத்துக்கணிப்போ
அவரது
"தனி வழியிஸம்"தான் என்று
குழல் ஊதி விட்டது.
கைவசம் பிரம்மாண்ட படங்கள் இருக்கும்போது
அவரால் மாநாடு பேட்டி அறிக்கை என்று
ஓடிக்கொண்டிருக்குமா?
அந்த ராக்கெட்
மேட் இன் "அமித்ஷா"பாக்கெட்டிலா?
மர்மம் அவிழும்போது தெரியும்.
திராவிடத்தை எதிர்த்து கட்சி தொடங்கியவர்கள் கூட‌
திராவிட"லேபில்" ஒட்டிக்கொண்டு தான்
வந்திருக்கிறார்கள்.
சிங்கத்தையும் கழுதையையும் "ஒட்டு" இனமாக்கி
ஒரு திராவிட பாஜக வை தூக்கி
இவர்மீது அவர்கள் ஏற்றினாலும் ஏற்றுவார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து
திராவிட உச்சரிப்புகளை
பினாயில் கொண்டு கழுவி சுத்தப்படுத்துவதாய்
"கங்கா ஜலம்"கொண்டு வரும்
அந்த காவிக்கூட்டத்தோடு
கூட்டணி வைக்க
சூப்பர்ஸ்டாரின் தனி வழியிசம்
ஒரு தடை கல் போடலாம்.
இமயமலை பாபா ஒன்றும்
பாபா ராம் தேவ் இல்லை!
இமயமலை பாபா அவரது மறைமுக‌
கல்பாக்கம்.
அது "ஆத்மீக கதிர்கள்" விரித்தாலும்
சமூக நீதிகளை மத வெறிகளை
வேரோடு அழிக்கும் அணுக்கதிர்கள் தான்
என்பது
அவரது ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும்
எதிரொலிக்கிறது.
இந்த கவுண்ட் டௌன்
ஒரு கட்சி ரிலீசுக்கா?
அல்லது ஒரு பட ரிலீசுக்கா?
தெரியவில்லை!
நாளை
அவர் கோட்டையில் ஆட்சி செய்தாலும்
சினிமாக்கொட்டகைகளில் தான்
மசோதாக்கள் "வெந்தெடுக்கப்படும்"
நிழல்கள் கற்கோட்டைகள் ஆகுமா?
பார்ப்போம்!

===================================================


நகைச்சுவை (34)

நகைச்சுவை (34)
=============================================ருத்ரா

செந்தில்

(அழும் குரலில்)

ஆதார அட்டையை அந்த அட்டையுடன் சேர்க்கலாம் ..இந்த அட்டையுடன் இணைக்கலாம்னு சொன்னாங்களேன்னு
நானும் ஒரு அட்டையில் ஆதார அட்டையை இணைத்துத்தாருங்கள்னு கேட்டேன்.மாட்டேனுட்டாங்க..(விக்கி விக்கி அழுகிறார்)

கவுண்டமணி

அழாதேடா கண்ணா! நான் இணைக்கச்சொல்லி வாங்கித்தாரேன்.
எந்த அட்டை டா?

செந்தில்

இந்த அட்டைதாண்ணே! (கையில் ஒரு ரத்தம் உறிஞ்சும் அட்டையை காட்டி நீட்டுகிறார். அது வளைந்து வளைந்து கையில்
உறிஞ்சும் இடம் பார்த்து நெளிகிறது!)

கவுண்டமணி

அய்யோ அம்மா! அத தூர எறிஞ்சுட்டுவாடா அட்டைத்தலையா.
(அவரும் பயந்து ஓடுகிறார்)

=================================================================

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

அண்ணே! அண்ணே!

அண்ணே! அண்ணே!
==================================================ருத்ரா

"ஏண்ணே! இப்ப நம்ம கைவசம் மூணு அணி இருக்கு.எந்த அணியிலே சேரலாம் சொல்லுங்கண்ணே"

"நமக்கு வர்ர "நலத்திட்டங்களப்பாத்து" முடிவெடுத்துற வேண்டியது தானே.ஒரு தடவைக்கு நூறு தடவை நல்லா யோசிச்சு முடிவு எடுப்பா."

"நூறு தடவை இல்லேண்ணே."கோடி" தடவை நெனச்சுப்பாத்தாச்சு.
மூணுலேயும் சேரவேண்டியது தான்."

"அது எப்படிடா?"

"ஒரு இடத்துல சேந்துட்டு..கொஞ்சம் இருங்கண்ணே! எனக்கு உடம்பு சரியில்ல! வைத்தியம் பாத்துட்டு வந்திர்ரேன்னு சொல்லிட்டு அங்க போயிற  வேண்டியது தான்.அப்புறம் அங்கே இருந்து தோ வந்திடரேண்ணே! "ஆத்தா குறி சொல்லப்பொறா! கோடங்கிக்காரக எல்லாம் வந்துட்டாக.என்னன்னு கேட்டுட்டு வந்திடரேண்ணேன்னு கெளம்பிற வேண்டியது தான்..."

"டேய்..டேய்..பாத்து பாத்து...உங்க தலைகளையெல்லாம் எண்ணி
கணக்கெடுக்க நினைச்சா "கவர்னரே" மயக்கம் போட்டு விழுந்துருவாரு.."

___________________________________________________________________
இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.






திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஓவியா

ஓவியா
=========================================ருத்ரா


கிராமங்களின்
கோவில் விழாக்களில்
நடைபெறும் துகிலுரி நடனங்களில்
பார்ப்பவர்கள் தங்கள்
ஆடைகளை களைந்து விட்டு
ஆடுவது போன்ற
ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள்.
இந்த விளிம்பு நிலை தான்
"பாம்பும் தடுக்கப்பட்ட பழமும்
உள்ள ஈடன் காடு".
இந்த உள்ளவியலின்
உள்ளாடைகளை களைந்து எறிய‌
மசாலாக்காடுகளில் ஒரு மகாத்மா
கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று
மயக்கம் அல்லது தொங்குநிலை போன்ற‌
ஹேலுசினேஷன்கள் மூலம்
தங்கள் ஹிட் ரேட்டை உயர்த்திக்கொள்ளும்
ஊடக விளையாட்டு இது.
ஆரவ் ஊட்டிய காதல் ரசம்...
அதில் ஓவியாவுக்கு ஏறிய பித்தம்.. என்று
அந்த நிழல்காட்டுக்குள்
ஆயிரம் நிழல்கள்.
நிழல்கள் காதலித்தன.
நிழல்கள் காமுற்றன.
நிழல்கள் தற்கொலை செய்ய துடித்தன..
மனிதன்
ரத்த சதைகளால் பின்னப்பட்ட போதும்
"போலித்தனங்களால்"
உயிர் பிசைந்து உரு  திரட்டப்பட்டிருக்கிறான்..
யோகா செய்தாலும் சரி!
பதஞ்சலியின் சமாதியை அடைந்தாலும் சரி!
அது வெறும் நிழல்.
அதன் உள்ளடக்கத்தை உரித்தபோதும்
அதுவும் நிழல் இழைகளால் தான்
நெய்யப்பட்டிருக்கிறது என்பது
ஒரு ஆழமான உளவியல் உண்மை.
அந்த நெருப்புக்குழம்பை வைத்து
மத்தாப்பு கொளுத்துவதே
ஓவியாவும் பிக் பாஸ்ஸும்!
நம் நிர்வாணத்தை நாமே ரசிப்பது போல்
"ஓ கல்கத்தா" எனும் நாடகம்
இங்கிலாந்தில் ஆண்டுக்கணக்கில்
அரங்கேறிக்கொண்டிருந்தது நாம் அறிவோம் .
தன் இடுப்பு "டப்பியில்"
என்ன வைத்திருக்கிறேன்
என்று தேடத்தொடங்கிய மனிதனின்
பச்சை ரத்த பானங்களே
இந்த நாடகங்கள்.
ரத்தம் கசியும் வரை
அவன் இப்படியே
பிறாண்டிக்கொண்டிருக்கட்டும்.
லேசர் ஒளிக்காட்டில்
ஆடும் வேட்டை இது.
ஆளும் பொய்.
அம்பும் பொய் .
உணர்சசிகளின் தினவுகளே
இங்கு  இந்த சின்னத்திரைப்படங்கள்.

==============================================








ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

உன் மனதோடு ஒரு "செல்ஃ பி "

உன் மனதோடு ஒரு "செல்ஃ பி "
==============================================ருத்ரா

என் நிழலை உமிழ்ந்தது
யார் அல்லது எது?
சன்னல் கதவுகளை
விரீர் என்று திறந்தேன்.
சூரியன் கன்னத்தில் அடித்தான்.
வெகு கோடி மடங்கு
வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!
உன் கருவுக்குள்
விதை தூவியது யார்?
நாங்கள்
ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி
உன்னில்
ஜனித்ததாய்
கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறோம்.
உன் அப்பன் யார் அற்பனே?
பிக் பேங்க் என்று
ஆயிரம் அயிரம் கோடி
ஆற்றல் பிசாசு
ஆவி கொடுத்து
உருட்டித்திரட்டி
உரு பிசைந்த அண்டத்தில்
உன் பிண்டம் பிடித்த‌
கை எது?
கேள்வியின் திரி
நீண்டு கொண்டே இருக்கிறது.
மனித மூளையின்
முடிச்சு மண்டலங்களில் கூட‌
விடை வெடிக்கலாம்.
பிக் பேங் திரைக்கும் பின்னே
ஒரு தூரிகை அசைகிறது.
அந்த சவ்வு ஓவியங்களில்
"டி ப்ரேன்" பிரபஞ்சங்கள்
தெருக்கூத்து நடத்துகிறது.
அந்த விஞ்ஞான அரிதாரங்களை பூசிக்கொள்
அறிவுப்பிழம்பே!
அவதாரங்களின் மூட்டைகளை
அவிழ்த்துப்பார்த்து
அஞ்ஞானித்தது போதும்.
போ!
இறைவன் தேடும் இரைச்சல்களை நிறுத்து!
இந்த நிழலின்
ஒளியைத்தேடி ஒளிக்குள் ஒளிந்து போ!
ஒளி உன்னை உறிஞ்சக்கொடு.
இது உன் மனதோடு
ஒரு"செல்ஃபி"
எடுத்துக்கொள்ளும் விளையாட்டு.
இந்த நிழல்களின்
இதயத்துடிப்புகள் அதோ
கேட்கிறது பார்.
ஆயிரமாயிரம் பிரபஞ்சங்களையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
செரிபரம் செரிபல்லம் எனும்
மண்டைக்கருவூலத்து
உன் நியூரான்களுக்குள்
கேட்கிறது பார்
உற்றுக்கேள்.

================================================

சனி, 5 ஆகஸ்ட், 2017

அழகே..அழகே..அழகே




அழகே..அழகே..அழகே
===================================ருத்ரா


அழகே
உன்னைப்பார்த்துகொண்டே தான்
இருக்கவேண்டும்.
இந்த பிரபஞ்சங்கள் குருடு ஆகும் வரை..
அந்த நெருப்பு பிழம்புகள்
குளிர்ந்த ரோஜாவின் குளிர்ந்த இதழ் ஆகும் வரை..
அழகே..அழகே..அழகே
இந்த சொல் எங்கும் தூவிக்கிடக்கிறது.
மனித உயிர்கள் எனும் மின்சாரப்பூக்களின்
பரவசக்கடலின் திவலைகள் தோறும்
அழகே..அழகே..அழகே
உன் எலக்ட்ரான் ப்ரொடான் நியூட்ரான் கோர்வைகள் தான்
சடை பின்னிக்கொண்டிருக்கின்றன.
அழகின் இந்த விஞ்ஞானம் சொல்லும்
குவாண்டம் மெகானிக்ஸிலும் கூட‌
அழகும் அழகும் தான்
ஒளிந்து விளையாடுகின்றன.
அழகே
நீயும் கூட ஒரு
குவாண்டம் என்டாங்க்லிங் தான்.
கண்களாலும் சரி
எந்தக் கவிதைகளாலும் கூட‌
உன்னைப்பிடிக்கமுடியாது.
ஆனால் ...இங்கு எல்லாம்
உன் பிடிக்குள் தான்.
அழகே..அழகே..அழகே
நீ வாழ்க!
வாழ்க வாழ்கவே!!

================================================



செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மூன்று பொம்மைகள்

மூன்று பொம்மைகள்
________________________________________________ருத்ரா


பெரிய பெரிய ஆட்களின் மேசையில்
அந்த மூணு குரங்கு பொம்மை
இருப்பதுண்டு.
நிதிஷ் குமார் அவர்கள் மேசையிலும்
இருந்தது.

மோடிஜியை பார்க்காதே.
மோடிஜி சொல்லைக் கேட்காதே.
மோடிஜியோடு பேசாதே.

அந்த பொம்மை இப்போது
உடைந்து கிடக்கிறது.
பாவம்.
யாராவது இப்போது அவருக்கு
அந்த பொம்மையை
வாங்கிக்கொடுங்கள்!
இல்லாவிட்டால்
எங்கிருந்தோ ஆட்டிப்படைக்கிறதே
ஒரு சூத்திரக்கயிறு
அது
இவரையும் ஆட்டிப்படைக்கும்!

_______________________________________