வியாழன், 28 ஜூலை, 2022

அந்தக்காடு.

 அந்தக்காடு.

ஆரண்யம் அல்ல.

அங்கு வால்மீகிகளும் இல்லை.

ஆனாலும் 

வில் முறியும் ஒலி கேட்டது.

அம்பு துளைத்தது.

வானம் முழுவதிலிருந்தும்

ரத்தம் ஒழுகியது.

ஓலைச்சுவடிகள்

அழுது கொண்டிருக்கின்றன.

இறந்தது

கடவுளா?மனிதனா?

________________________________________

ருத்ரா


அது சாணி அல்ல.

 வண்டுகள் எல்லாம் கூடி

ஒரு கவிதைப்போட்டி நடத்தின.

ஒரு சாணிவண்டு

பரிசை தட்டிச்சென்றது.

பரிசு கவிதைக்கு அல்ல.

காலப்பரிமாணத்தை

அது உருட்டிச்சென்றதற்கு.

அது சாணி அல்ல.

இந்த உலகமே தான்.

________________________________

ருத்ரா

செவ்வாய், 26 ஜூலை, 2022

உன்னை ஒன்று கேட்பேன்.

 உன்னை ஒன்று கேட்பேன்.

_______________________________________ருத்ரா


உன்னை ஒன்று கேட்கட்டுமா?

யார் கேட்கிறார்கள்

என்று தெரியவில்லை.

எதை கேட்கிறார்கள் 

என்று தெரியவில்லை

எங்கிருந்து கேட்கிறார்கள் 

என்றும் தெரியவில்லை.

நெஞ்சில் கேட்டேன் 

மனசாட்சியெல்லாம் இல்லை.

உன்னை ஒன்று கேட்கட்டுமா?

மீண்டும் கேள்வியின் ஒலி.

அப்புறம் சொற்களின் மழை..

முன்னொரு காலத்தில்

கடவுள் கடவுள் என்று 

ஒருவன் இருந்தான்.

அவன் தான் 

எல்லாத்தையும்

எல்லாரையும் செய்தான்.


அது சரி

இப்ப என்ன?


அதையெல்லாம் 

அவன் ஏன் செய்தான் என்று

இப்போது அவனையே கேட்கிறான்.

அவனுக்கு தெரியவில்லை

அல்லது விளங்கவில்லை.

அது தான் 

உன்னிடம் கேட்கிறான்.


சரி தான்.

அதான் நானும் நெனச்சேன்.


எத நெனச்சே?..எத நெனச்சே?


அதான்யா..அதே தான் நானும் நெனச்சேன்


எதெ நெனச்சே..எதெ நெனச்சே..


அதே தான்..நானும்..நெனச்..


"நிறுத்திக்கொ.."


அவன் வாயை கடவுள் பொத்தினார்.


அவன் என்ன நெனச்சான்..

என்ன நெனச்சான்..

. . . . . . . . . .

. . . . . . . . . . . 

தனக்குத்தானே இந்த கேள்வியை

"சஹஸ்ர நாமமாய்" கேட்டுக்கொண்டு

கடவுள் போய்க்கொண்டிருந்தார்.


__________________________________________







திங்கள், 25 ஜூலை, 2022

வாழ்க திராவிடம்!

 வாழ்க திராவிடம்!

_______________________________________

ருத்ரா




வேதகாலத்தில் 

பழங்குடிகள் என்பவர்கள்

பயங்கரமானவர்கள்.

காற்றில் எனக்கு மட்டும் கேட்டவை இவை

என்று

மீசை தாடிப்புதருக்குள் 

இருந்து அவர்கள் ஒலியெழுப்பினார்கள்.

நான் மட்டுமே ஒலிப்பேன்.

இன்னொருவர் செவிக்குள் அது

நுழைந்து 

அவர் வாயால் ஒலிக்கப்பட்டால்

அது எச்சில் தான் என்றார்கள்.

அவர்களே ரிஷிகள் எனப்பட்டார்கள்.

அவர்கள் அங்கே வருவதற்கு முன் 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்

அங்கே இருந்த பழங்குடிகள்

அவர்களுக்கு பகைவர்கள் ஆனார்கள்.

அவர்கள் மொழி 

இவர்களுக்கு புரியாததால்

அது "பிசாசு மொழி"ஆனது.

"நம் யாகங்களை அழித்து விடுவார்கள்.

இந்த சப்பை மூக்கி கருப்பர்கள்

மந்திரம் ஏவி நம்மை அழித்துவிடுவார்கள்.

என்றார்கள்.

விரைவாக ஓடும் குதிரையின் கால்களை

அவர்கள் வேதம் "த்ராவிட பாணி"என்கின்றது.

இந்த சப்பைமூக்கி கருப்பர்களும்

குதிரைகள் போல் 

மின்னலென தோன்றி மின்னலென‌

விரைவாக மறைந்து விடுவதால்

த்ராவிடர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

சரி.

அதெல்லாம் போகட்டும்.

இப்போது நமக்கு ஒரு பழங்குடி இனத்தவர்

குடியரசு தலைவர் ஆகிவிட்டாரே.

என்ன தான் குருதட்சிணை மூலம்

கட்டை விரலை வெட்டி வாங்கிக்கொண்டாலும்

நம் மகுடத்தை அவர்கள் 

தலையில் சூடவேண்டிய 

அவலம் வந்து இருக்கிறதே.

நம் யுத்த தந்திரத்தில் இதுவும் ஒன்று

என்று

இவர்களுக்கு புரியவா போகிறது

என அந்த துரோணாச்சாரியர்கள்

தமக்குள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அவர்கள் பல்லை நற நறத்துக்கொண்டு

பூங்கொத்துக்களை கொடுப்பதில்கூட‌

அந்த ஒலி நமக்கு 

கேட்கத்தான் செய்கிறது.

தமிழ் நாட்டு ஸ்டாலின் தந்த‌

"திராவிட பாணி" அரசு

இப்போது இந்தியா முழுமைக்கும் 

வந்து விட்டதே!

அது பொம்மையோ பொய்மையோ

அதுவே இப்போது உண்மை.

வாழ்க திராவிடம்! வெல்க திராவிடம்!



___________________________________________________‍

ஞாயிறு, 24 ஜூலை, 2022

கலைஞர் பேனா

 கலைஞர் பேனா

‍‍‍‍______________________________ருத்ரா



அடி முடி காணா

சிவனின் சிலை இது.

ஒற்றைக்கால் தவம் இது.

வளைநரல் பௌவம் உடுக்கையாக‌

உடுத்திய போதும்

விசும்பு எனும் விசையை

விரிக்கும் மந்திரக்கோல் இது.

இப்படி எப்படி வேண்டுமானாலும் 

சொல்லிக்கொள்ளுங்களேன்.

இதுக்குள்ளே படியேறிப்போனால்

கைலாசமும் வைகுண்டமும்

காட்டும் பஞ்சுமிட்டாய் 

மேகங்களையெல்லாம்..

அந்த மரணபய தூசி 

துரும்புகளையெல்லாம்...

துப்பறவு செய்து விட்டு

மனிதனின் அறிவே துணிவு

எனும் வெளிச்சம் காட்டும்

ஒரு விளிம்பு வந்து விடும்.

மனிதனின் உச்சிமுனையில்

மறைந்து போகும் 

கடவுள் கற்பனைகள்.

எழுதிய எழுத்துக்குள் இன்னும்

எழுதா எழுத்துக்கள் தேடிப்போகும்

ஓராயிரம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்புகளின்

இடம் இதுவே.

அறிவுக்கு "அடி யேது? முடியேது? 

அவதாரங்களின் அரிதாரங்கள்

கரைந்து போகும் 

தூய அறிவின் ஊசிமுனை 

இங்கே உண்டு.

அறியாமைகள் இங்கே

கழுவேற்றப்படும்.

இருட்டுகளே 

கூச்சல் இட்டுக்கொண்டே இருங்கள்.

ஒளியின் ஒளி உங்களை

ஓட ஓட விரட்டட்டும்.


________________________________________












முகம் தெரியாத ஒரு அகம்.

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒரு புதிய யுகம் 

உங்கள் இமை விளிம்பில் நழுவி விழுந்து

உங்கள் எதிரே காட்சிவிரிக்க‌

துவங்கி விட்டது.

ஒவ்வொரு புதிய பனித்துளியிலும்

விடியலின் தூரிகை

ஏழு வர்ணக்கனவுகளின்

வாசலைத்தட்டி திறந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பூவிலும் 

அந்த ஷெல்லி ஒரு "டேஃப்ஃபொடில் "பூவை

முகர்ந்து பார்க்கிறான்.

அதில் அந்த 

"முளி தயிர் பிசைந்த மென்காந்தள் விரலும்"

வாசம் காட்டுகிறது.

உங்களின் இந்த மகிழ்ச்ச்சி துள்ளும்

பொன்னாளில்

பிரபஞ்சத்தின் பல கோடி ஒளியாண்டுகளும்

ஒளிந்து விளையாடி

உங்களோடு "டைம் ட்ராவல்"செய்கிறது.

யாரோடு யார் இங்கே இந்த‌

பிறந்த நாள் களிப்பின் 

பூதக்குமிழிகளில்

பூவின் மகரந்தங்களை

வாரித் தெளிக்கிறார்கள்.

அவர் யார் எவரோ?

இவர் யார் எவரோ?

முகம் தெரியாத ஒரு

அகம் தெரிகிறது.

அதில் வாழ்க வாழ்க என்று

அகவும் மயில்களின்

அன்பு ஒலி பூக்கிறது.

இந்த மகிழ்ச்சி பூக்கட்டும்.

எத்தனை "பிக் பேங்கு"கள்

ஆனாலும் அங்கே

பூவாணம் சொரியட்டும்.

உங்களுக்கு என்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


_______________________________________________

ருத்ரா

சனி, 23 ஜூலை, 2022

வெண்பறை அதிர்ந்த குடுமியின் நாரை

 வெண்பறை அதிர்ந்த குடுமியின் நாரை

-------------------------------------------------------சொற் கீரன்.

( ஓலைத்துடிப்புகள் - 109)




வெண்பறை அதிர்ந்த குடுமியின் நாரை

எக்கர் புடைத்த இருங்கழி கூரும்

கயங்கொளீஇ பருங்கயல் துடிசெத்து உகள‌

ஈர்ஞெண்டின் பிதுங்கு விழிஅன்ன‌

புல்லிய பூம்பொழி வேம்பின் அண்ணிய‌

அடைகரை தீண்டும் திரைநுடங்கு மருங்கில்

முன்னீர் புணர்ந்த நோதல் உற்று 

முப்புரி அவிழ்த்து அதன்  கொடுங்குரல் 

புக்கு மாயம் ஓர்த்தாள் மன்னே 

மூன்று நீரும் முறுக்கல் காட்டும் 

அவள் கண்ணீர் கண்ணீர் கண்ணீர் மற்றே.

வருவேன் என்ன  பரவை பாய்ந்தவன் 

கல்பொரு நுரை தொறும் அழிந்து அடர்ந்து 

காட்சி மல்கிய வெந்துயர் ஏனோ 

சிறையடித்த புன் வெண் குருகே 

கூரலகு பிளந்து கூர் உரை கூறு.

-------------------------------------------------------------------

வெள்ளி, 22 ஜூலை, 2022

கவிஞர் ருத்ரா

 

கவிஞர் ருத்ரா

____________________________________________________________


அரசியல் விழிப்புணர்ச்சி 

இன்று அதிகமா?

இது என்ன கேள்வி?

இந்தக் கணினியுகத்திலா

இந்தக் கேள்வி?

ஆம் கணினிகள் கூட‌

மழுங்கடிக்கப்படுகின்றன‌

சிலர் சாணக்கியத் தந்திரங்களால்.

அன்று

கொடுமை கண்டு 

வெகுண்டெழுந்த சமுதாய‌

அறச்சீற்றங்கள் 

எங்கும் அணிவகுத்தன.

அப்புறம் அது

அடுத்த "சீனுக்கு" தாவுவதில்லை.

வடுப்பட்ட‌

காய‌ம்பட்ட ஜனநாயகம்

வலியையே உந்து சக்தியாய்

மாற்றிக்கொண்டு

அந்த புயல் மூச்சை

ஓட்டுகளுக்குள் ஊதி

உயிர்ப்பு தந்திருக்கின்றன.

இன்று அது

கையகல "பேசி"களுக்குள்ளேயே

பேசித்தீர்த்துக்கொள்கிறது.

குறு குறு காட்சிகளின்

குறுகுறுப்பிலேயே

எல்லாவற்றையும் கொறித்துக்கொள்கிறது.

பெரும்பசியின் ஊழித்தீ கூட‌

சில்லறைக்காணொளிகளில்

காணாமல் போய்விடுகிறது.

இன்று நம் அரசியலமைப்பின்

அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கிறது.

ஆனாலும்

வெறும் சிற்றெரும்புக்கடிகளாய்

அவை மரக்கப்படுகின்றன.

நம் குடியரசுதேர்தலைப்பாருங்கள்.

அந்த நுட்பமான அரசியலில் கூட‌

நாம் குடை சாய்ந்து

விழுந்து கிடக்கிறோம்.

சாதி மதங்கள்..

விடுங்கள் சார்.

இவை வெறும் பட்டிமன்றத்தினவுகளுக்கு

அரிப்பெடுக்கும் தலைப்புகள்

என்று 

பேசி பேசி "புசிக்கிறோம்".

அர்சியலின் பசி தீரவில்லையே.

இன்னும் முப்பது நாப்பது வருடங்களுக்கு

எங்கள் செங்கோல் தான்

என்று

மூளித்தனமான மொக்கை வசனங்கள்

பூதம் காட்டுகின்றனவே.

இப்போது சொல்லுங்கள்

அன்று மொத்தப்புரட்சி என்று

முழங்கினானே

ஒரு அரசியல் தலைவன்

அவன் இடம் இன்னும் இங்கு

வெறுமையாய்த் தானே இருக்கிறது?

ஏற்கனவே நம் அரசியல் அமைப்பில்

செத்தபாம்பாய்க் கிடக்கும் 

சோசலிசம்

இன்னும் அடித்துக்கொல்லப்படவேண்டும் 

என்று கூப்பாடு போடும்

வலது ஊளைகள் தானே

வண்ண வண்ணமாய்

ஊடகங்களில் 

காவடி ஆடிக்கொண்டிருக்கின்றன.

ஆம் 

இன்று எதுவும் இல்லை.

உண்மை அரசியலும் இல்லை.

விழிக்க வேண்டும் என்ற‌

உணர்ச்சியும் இல்லை.


____________________________________________


தட்சிணை.

 தட்சிணை.

_______________________________________

ருத்ரா




அன்று கட்டைவிரல் கேட்டு

தன் கூட்ட‌த்துக்கு 

மகுடம் சூட்டிக்கொண்டவர்கள்

இன்று அங்கிருந்தே

ஒரு கோடரிக்காம்பு செய்து

இந்த ஜனநாயக விருட்சத்தையே

வெட்டி வீழ்த்த 

முனைந்து விட்டார்கள்.

கணிப்பொறியைத்தடவும் 

உங்கள்

விரல்களில் எல்லாம்

மூளையின் பொறிதட்டினால் தான்

உண்டு.

இல்லையெனில் மீண்டும்

இனி அந்த‌

ஆயிரம் ஆண்டுகால‌ 

அடிமை விலங்குகளில் தான் 

நாம்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்!

என்ன இனிமையான 

போதை மாத்திரைகள் இவை!

---------------------------------------------------------------------



________________________________________________

வியாழன், 21 ஜூலை, 2022

ஒரு பயிற்சி

 ஒரு பயிற்சி

_______________________________________

ருத்ரா




ஆகா!

இந்த பூ எவ்வளவு அழகு?

அதோ

அந்த வானம் ஒரு அழகிய‌

தூரிகைத்திடல்.

இன்னும் ஓவிய மேகங்கள்

தெறிக்கப்படவில்லை.

அருகம்புல் விரிப்பு

அழைக்கிறது

வந்து படுத்துக்கொள்ளேன் என்று.

இலைச்சல்லடை வழியே

சூரிய டீ டிக்காஷன்.

இன்சுவை பானம்

எங்கிருந்தோ ஆவி பறத்துகிறது.


சரி..தாங்காது.

அந்த பட்டாம்பூச்சிப்பட்டாளத்தை

அழையுங்கள்.

மூசு மூசு வென்று

அந்த வண்ணச்சிதறகளில்

நாம் 

காணாமலேயே போய் விடலாம்.


சட்.

கொஞ்சநேரம்

அவள் முகத்தை அங்கேயே

அவள் வைத்துக்கொள்ளட்டும்

என்று

மறுத்து மறுத்துப்பார்த்தேன்.

என்னைக்காப்பாற்றுங்கள்

கவிதைகளே.

உங்கள் வறட்டுச்சொற்றொடர்களை

என் மீது 

வீசி எறிந்து கொண்டே இருங்கள்.


_____________________________________________



நல்லகவிதை.

 நான் ஒரு நல்ல கவிதை இல்லை என்று

சொல்லிக்கொண்டு

வந்து இறங்கும் 

அருவியே 

ஒரு நல்லகவிதை.

அருவியே.

அஞ்சாதே.

இங்கு நக்கீரர்கள் 

யாரும் இல்லை.

________________ருத்ரா

செவ்வாய், 19 ஜூலை, 2022

இ எம் ஜே

இ எம் ஜே

__________________________________________

செங்கீரன்



இறந்தவர்கள் அவதாரபுருஷர்களாய்

முகம் காட்டுவது

இந்தியாவின் மரபு.

இ எம் ஜே எனும்

எங்கள் அன்பான தோழனே!

உன் கையில் எப்போதும் 

இறவாத சுடரேந்தியாய்

சூரியக்குஞ்சுகளுக்கு கூட‌

இந்த வானத்தில் அவை 

எப்படி 

எப்போது 

சிறகு விரிக்கும் என்று

வகுப்புகள் எடுக்கும்

அந்த மகத்தான "மார்க்சிய மனிதத்தின்"

விடியல் புத்தகத்தை அல்லவா

கையில் வைத்திருந்தாய்!

உன் இதயம் துடிப்பதை நிறுத்திவைத்து

கொக்கரித்த அந்த தருணங்கள்

எப்படியோ செத்து ஒழியட்டும்.

உன் சொற்பொழிவுகளின் போது

உன் விரல்கள் செதுக்கிய காலச்சிற்பத்தின்

சிந்தனை இடுக்குகளில்

அந்த வெளிச்சம் இன்னும்

கசிந்து கொண்டே இருக்கிறது.

அதில் தினமும்

எங்களுக்கு ஆயிரம் சூரியன்கள்.

உன் கருத்துகள் கனியட்டும்.

உன் நினைவுகளின் நிழல்கள் 

எங்கள் மீது விழுந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க!வாழ்க! நீ

என்றும் வாழ்கவே.


________________________________________________________





 

சனி, 16 ஜூலை, 2022

நான் தான்.

 


மழைக்கும் வெயிலுக்கும் 

குடை நான் தான்.

கடலில் தத்தளிக்கும் போது

மிதக்கும் கட்டை நான் தான்.

பசியில் குடல்கள் சுருண்டு

உனைச் சுருட்டிய போது

அமுத வடிவில் கவளச்சோறும் 

நான் தான்.

எல்லாம் உனக்கு நான் தான்.

ஆனால் 

நீ எழுத்துக்கூட்டி படித்து

புத்தகங்களிடையே பயணித்து

உன் மைல் கற்களை 

கடந்து

கால நிகழ்வுகளின்

நாடித்துடிப்புகளை

நீயே அறிந்து தெளியும் போது

நான் 

குறுக்கே வரமாட்டேன்.

உன்னை நீ அறியும் போது

என்னை உன் மீது

வர்ணம் பூச மாட்டேன்.

நீ 

அறிந்து கொண்டபோது

உன்னிடம் நான் வரும் 

தருணங்கள் உண்டு.

நீ என்ன அறிந்தாய்

என்பதை 

நான் அறிந்து கொள்ளவேண்டும்

என்ற 

தினவும் 

வினவும்

உன் மீது நானாய் மொய்ப்பது உண்டு.

அதை 

அப்போது கொச்சைப்படுத்தி விடாதே

கடவுள் என்று.


________________________________________________

ருத்ரா

வெள்ளி, 8 ஜூலை, 2022

ருத்ராவின் குறும்பாக்கள்


ருத்ராவின் குறும்பாக்கள் 

--------------------------------------------------



சும்மா குந்தியிருந்த மலைக்கும் 

வேர்த்தது.


சாரல்.

-------------------------------------------------------------


இதன் கால்களில் 

ஒட்டியிருக்கும் பிக்காஸோக்களே 

மகரந்தங்கள்..


பட்டாம்பூச்சி 

--------------------------------------------------------------


மரமும் செடியும் கொடியும் 

அருவியும் 

காதலித்தன.


குறுந்தொகை 

-------------------------------------------------------------------





வியாழன், 7 ஜூலை, 2022

எக்கோ பார்க்

 


இனிய சூழலில் ஒரு பூங்கா

(எக்கோ பார்க் மதுரை)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________



பசுமை நிழல் கவிக்கும் பூங்கா.

இதில் நம் மனங்களையெல்லாம்

கட்டிப்போடும் இடம் உண்டு.

அது தான் அந்த

"ஓட்டை உடைசல்கள் கொண்டு"

உருவாக்கப்பட்ட சிற்பங்கள்.

உள்ளம் கிழிந்து

கந்தல்களாகிப்போனவர்களே

அவற்றை

உற்றுப்பாருங்கள்.

உதவாது என வீசி எறியப்பட்டவை

உயிர் பெற்று நம்மை

உற்றுப்பார்ப்பதை.

அதில் அந்த அழகிய மான்!

கொம்புகள் சிலிர்க்க‌

காட்டின் அடர்ந்த இருட்டின்

மரண சுவாசத்தைக்கூட‌

பச்சைப்புல்லாய்

மேயப்புறப்பட்ட நம்பிக்கை அது.

அடுத்த கணம்

அது எந்த புலியின் இரப்பைக்குள்

மாமிசமாய்க்கிடக்குமோ?

இருப்பினும் 

சங்கத்தமிழ் செய்யுட்களின்

வரிகளையே புல் கீற்றுகளாய்

குளிர்மை காட்டி நிற்கும் உயிர்மை அது.

திருக்கு ஆணிகளும் முறுக்கு ஆணிகளும்

எலும்புகளாய் சதையாய்

ஆகி ஒரு

புள்ளி மான் இங்கே

புயல் மூச்சையும் புற்படுகையில்

நிரவிக்காட்டும் 

செம்மைக்காட்சி இது!


___________________________________________________________


இரவில்....

 


இரவில்

____________________________


இரவில் ஏற்றினோம் மூவர்ணம்.

பகலில் தெரிந்தது

அது நான்கு வர்ணம்.

___________________________________

ருத்ரா


"திருவிளையாடல்"



"திருவிளையாடல்"

_______________________________________

ருத்ரா


அந்த வேடன் 

தன் கண் இரண்டையும் பிடுங்கி

நீர் வடியும் சிவன் கண்களுக்குப் பதில்

அதில் அப்பி வைத்தான்.

அடையாளம் தெரிந்து கண்களை பதிக்க‌

அந்த வேடன் செருப்புக்காலை

சிவனின் கண்களில் வைத்தான் 

என்பதற்கு 

அவனுக்கு சிரச்சேதம்.

சிவனும் பக்தியை மெச்சி

அவனை எழுப்பி கைலாசத்தில் 

வைத்துக்கொண்டான்.

இவர்கள் மட்டும்

இன்னமும்

அவனை பட்டியல் இனத்தில் வைத்து

சித்ரவதைகள் செய்தார்கள்.

இந்த வதைகளில்

புண்பட்டது சிவன் தானே.

இவர்கள் ஏன்

புண் பட்டது புண்பட்டது என்று

கோர்ட்டுக்கு போகிறார்கள்?


_______________________________________________‍‍

ஞாயிறு, 3 ஜூலை, 2022

என்று விடியும் இந்த வானம்?

 என்று விடியும் இந்த வானம்?

_______________________________________‍____

ருத்ரா.



என்ன உலகமடா?

ஒரு ஞானி 

அந்த தத்துவத்தின் சாறு பிழிந்து

அருந்துகிறார்.

அவருக்கு 

மொத்த பிரபஞ்சமும் 

ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.

விஞ்ஞானிகளும்

கிட்டத்தட்ட தொண்ணூற்று சொச்சம்

விழுக்காடுகளுக்கு

இந்த பிரபஞ்சம் 

இருட்பிண்டமும் இருள் ஆற்றலுமாகவே

திணிக்கப்பட்டிருக்கிறது

என்று 

கணித சமன்பாடுகளைக்

காட்டுகிறார்கள்.

ஒன்றுமில்லை என்ற நாத்திகமே

இங்கு

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

கண்டறிந்தன.

இதில் 

பிரம்மனுக்கு பிறந்தவன்

அவன் என்றும்

அவன் பூணூலே

"ஒஸ்தி"என்றும்

உடன் உறை மனிதர்களை

குப்பை கூளம் என்றும்

மந்திரங்கள் பிதற்றுவது

என்ன நியாயம்? என்ன நீதி?

சலவையே செய்யமுடியாத இந்த‌

அழுக்குக்கா

"சலவைக்கல்லில்"

கோபுரங்கள் கட்டுவது?

நாலு  வர்ண அஞ்சு வர்ண‌

பாகுபாடு என்று

மனிதனைக்கூறு போடுவது

வெறும் கூறு கெட்ட செயல் அன்றி

வேறு என்னவென்று கூறுவது?

அடி மட்ட‌

மனிதர்களை புழு பூச்சிகளாக‌

நசுக்கிக்கொண்டே

இதோ பாருங்கள் 

இந்த "மரவட்டை"யை நாங்கள்

ஜனாதிபதி ஆக்குகிறோம்

என்று

தம்பட்டம் கொட்டுவது

வெறும் ஏமாற்று வேலை தானே?

அன்பான மக்களே

முட்டாள் தனமான் மகுடங்களை

சூட்டி சூட்டி 

உங்கள் முடக்கும் இந்த‌

தந்திரங்களை

என்றைக்கு முறியடிக்கிறீர்களோ

அன்றைக்குத்தான்

உங்கள் "சுப் ப்ரபாதம்"

உயிரோடு ஒலிக்கும்.

அது வரை இந்த 

மரணக்கூப்பாடுகளில்

களிப்பு கொண்டிருங்கள்.


_______________________________________________________