செவ்வாய், 30 ஜூலை, 2024

ஒரு குமுறல்

 

ஒரு குமுறல்

_________________________________

செங்கீரன்



பழைய வயதுகளைக்கொண்டு

பல்லாங்குழி ஆடுவதும் 

ஒரு சுகம் தான்.

சுகம் தவிர்த்து என்னை சொல்லைப்

போட்டாலும்

அது சொல்லைக்கொண்டு

ஏமாற்றிக்கொள்வது ஆகும்.

தமிழில் மகிழ்ச்சி என்று சொல்லி

தமிழைக் காயப்படுத்திக்கொள்ள 

விரும்பவில்லை.

ஆனாலும் இப்படி சமஸ்கிருதம் 

நம்மை அட்டையாய் 

உறிஞ்ச இடம் கொடுத்து விட்டு

இப்போது அரசியல் தமிழ் அல்லது

தமிழ் அரசியல் செய்வது

அர்த்தமற்றது தான்.

பாருங்கள் மறுபடியும்

"அர்த்தமற்றது தான்"

சரி..பல்லாங்குழியைத்

தொடருவோம்.

மேலும் ஒரு வயது சுமையாய்

முள் குத்திக்கொண்டிருக்கும்

தருணங்களை துடைத்து விட்டுக்

கொள்வது போல் தான்

இந்த விளையாட்டு.

எண்ணிக்கை கூடிய‌

வயதுகளுக்குமா கிலோக்கணக்குகள்

வந்து விடும்?

பால் வழியும் அந்த‌

பிஞ்சு வயதுகளின் வழியே

வாழ்க்கையின் பாறாங்கல்லை

இந்த தட்டாம்பூச்சிகளின்

கண்ணாடிச்சிறகுகள்

பளு தூக்கியதில்லை தான்.




வார் வைத்த கால் சட்டையா அது?

மயிற்பீலிகளைக்கொண்டு

தையல்காரரிடம் தைத்து வாங்கி

வைத்தது போல் அல்லவா இருக்கும்.

காற்றோடு

பலீஞ்சடுகுடு.

கைகளை ஸ்டீரிங்காய் மாற்றி

கார் ஓட்டுவது.

உதட்டு அதிர்வுகளின் பிசிறு ஒலியில்

கார் ஸ்டார்ட் பண்ணி 

வேகம் எடுக்கும் அழகே அழகு.

அந்த பிஞ்சுவயதுகளில்

தமிழுக்கு சமஸ்கிருத நச்சுப்பால்

ஊட்டி வளர்த்த கயவர்கள் யார்?

கண்ணுக்குத்தெரியாமல்

பல நூற்றாண்டுகளாய்

நம்மோடு உறவாடிய வில்லன் அவன்.

கயமை

என்றே ஒரு கனமான நாவல் எழுதிய‌

டாக்டர் மு வ

நம் தமிழைத்தூய்மைப் படுத்திக்கொண்டே

நம் வாழ்க்கை விரிசல்கள் வழியே

எட்டிப்பார்க்க‌

அந்த புத்தகச்சாளரம் அருமை அருமை.

வயதுகள் கனக்குமா

என்று முதலில் கேட்ட புள்ளிக்கே

வந்து நிற்கிறேன்.

தமிழ் எனும் அனிச்சம் 

இந்த மந்திர எச்சங்களில் குப்பைக்காடாய்

பாரம் ஏற்றி

நம்மை இன்னும் மூச்சு வாங்க‌

வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழர்களே!

இந்த குப்பையை கிளறுங்கள்.

நம் கதிரவன்களின்

மணி ஒளி எத்தனைக்காலத்துக்குத்தான்

மண்ணுக்குள் மக்கிக்கிடப்பது?

தமிழா!

எனும் இந்த விளிவேற்றுமைக்கு நீ

ஒன்றும் 

இலக்கணக்குறிப்பு

சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

மூட நம்பிக்கைகளின் முரட்டுத்

தாக்குதலால்

இப்படி சிறுமைப்பட்டு

வேற்றுமைகளின் சூத்திர ஆபாசங்களால்

நைந்து கிடக்கலாமா?

சூடேற்றிக்கொள் தமிழா!

சுட்டெரிக்கும் சூரியனை வைத்துக்கொண்டு

இந்த ஊதுபத்தி சாம்பிராணிகளிலா

நீ இன்னும் உழன்று கிடப்பது?

பாவ புண்ணிய கொட்டாங்கச்சிகளில்

ஜலம் தெளித்துக்கொண்டிருப்பவனே

உலகத்து

ஏழ் கடல் திரைகளையும்

கட்டி இழுத்து ஆண்ட‌

திரைவிடன் அல்லவா நீ!

சிறுமை கண்டு பொங்குவாய் என்றானே!

அவன் தீ மூட்டிய பிறகும்

இன்னும் சூடம் காட்டத்திரிகிறாயே!

என்ன வீழ்ச்சி இது?

தமிழா!விழி!

தமிழா!எழு!


_______________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக