ஞாயிறு, 28 ஜூலை, 2024

28.07.2024 ல் எழுதிய‌ ஈரோடு தமிழன்பனின் கடலும் படகும் பற்றிய கவிதை

 


28.07.2024 ல் எழுதிய‌

ஈரோடு தமிழன்பனின் 

கடலும் படகும் பற்றிய கவிதை


படகு
போய்க்கொண்டே இருக்கிறது
தூரங்கள் தம்மைப்
படகு தொடும் நேரத்திற்காகக்
காத்திருக்கின்றன
எதிர்பார்ப்பில் கழிந்துவிடுவோமோ
ஏமாற்றத்தில் அழிந்து விடுவோமோ
என்ற கவலையில்
மூழ்கிக்கொண்டிருக்கின்றன
நேரங்கள்.
.
குறைந்துவரும் தொலைவு
எந்தத் திசைக்குச் சொந்தமென்று
படகு
யாரைப்போய்க் கேட்கும்?
படகில்,
ஒருபக்கம்,
கண்திறவாப் பச்சைப்பசுங்கனவுகள்
யார் தூக்கத்திற்குப்பிறந்தவையோ!.
தண்டிக்கப்பட்ட
தவறுகளா படகைச் சுற்றி
அலைகளாக எகிறிக்எகிறிக்
குதிக்கின்றன?
அழுகையின்
உலகப்பொது மொழியும்
காதலின்
உலகப்பொதுமொழியும்
கண்களில் பிறந்தவையே!
படகு இயங்கும் இடத்தில்
அலைகளில்
எதுஎது எத்தனை விழுக்காடு?
யாருக்குத்தெரியும்?
நீந்தத் தெரியாத
அலைகளுக்குப் படகில் யார்
நீர்ம எழுத்துப்
பாடநூல்கள் ஏற்றி அனுப்புவது?
கடலில்
மீன்கள், திமிங்கலங்கள் மட்டுமில்லை
பழகவரும்காற்றும்
பயணம்வரும் கப்பல்களும்
கடலின் தாய்மொழியைக்
கற்றுக்கொள்ளும்.
உலகிலேயே
உப்புமொழிதான் அதிகமாக
நீர்மக் குடிமக்களிடையே
வழக்கில்பரவியுள்ளது.
கண்டங்களுக்கு இடையே
இணைக்கும்
பொதுமொழியாக இருக்கும்
தகுதியும்
அதற்குத்தான் உண்டு.
நீந்தும்
அலைகளை அசை அசையாகப்
பிரித்தால்
தேமா புளிமா இனத்தின்
வாய்பாடுகள் தென்படலாம்.
யாப்பருங்கலக் காரிகை கண்படலாம்.
நீலக் காவல் நிலையங்களில்
எல்லா நடவடிக்கைகளும்
அறிக்கைகளும்
ஆணைகளும்
புதிதாக வந்துசேர்ந்த அலைகளுக்கும்
புரியும் வகையில் எளிய
உப்புமொழியில்தான்.
பயணத்தில்
ஒற்றைப் படகு
உடைந்துபோனாலும்
கடல்பாடும் ஒப்பாரிகளில்
உலராதஉப்பின்
கண்ணீரும் கண்டிப்பாய்க் கலந்திருக்கும்.
....................................................
நீர்மப் பொதுமொழி--தலைப்பு
28-07-2024 காலை 8-30


அலையும் படகும் கூட‌

அகவற்பா பாடுமா என்ன?

பாடவைத்திருக்கிறீர்கள்.

கண்ணுக்குத்தெரியாத‌

காற்றின் உதடுகள் 

பேசும் மொழி 

அலைகளுக்கும் அத்துபடி.

படகுகளுக்கும் அத்துபடி.

கட என்பதன் பகுதி

வினைச்சொல் ஆகி

கடல் ஆனதை

குறிப்பாய் காட்டினீர்கள்.

எல்லாவற்றையும் கடந்து போ

என்பதன் முதல்

நீர்க்கவிதையே இது.

பனியுகத்தில் இது

நடந்து போ என்றே

இருந்தது.

கடலின் ஓவ்வொரு பிசிறும்

நுரைக்குள் கட்டிய கூடே

அதன் மூச்சும் பேச்சும் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக