புதன், 13 டிசம்பர், 2017

அண்ணே அண்ணே (3)

அண்ணே அண்ணே (3)
===============================================ருத்ரா

"அண்ணே..உங்க வாக்கை எங்களுக்கே போட்டுடுங்கண்ணே"

"அண்ணே...நானும் அதையே தான் கேக்குறேன்..ஆமாண்ணே
நீங்க யாரு? வாக்காளர் இல்லையா?

"சரி தான் போங்க! இருட்டுனதுக்கு அப்புறம் பிரச்சாரம் பண்ணினா  இப்படித்தான் ஆகும்."

(தூரத்தில் "ஆணையக்காரர்களின்" ஜீப் ஒலி கேட்டு மண்டபமே
காலி. இருட்டு மட்டுமே அங்கு இருந்தது)

=============================================================

செவ்வாய், 12 டிசம்பர், 2017

ஏன் சார்?

ஏன் சார்?
=========================================ருத்ரா

"மேலும் மூணு நாலு கம்பெனிகள் இங்கே வந்திருக்காம்!"

"ஏன் சார்? முதலீடுகளை அதிகரிக்கவா?"

"அட! நீங்க ஒண்ணு!தேர்தலுக்காக‌ சட்ட ஒழுங்கு காக்க வந்த‌
துணை ராணுவக் கம்பெனிகளைச் சொல்றேன்.

==================================================
(நகைச்சுவைக்காக)

12.12.17

12.12.17
=======================================ருத்ரா

அன்புக்கும் அன்பான‌
எங்கள் ரஜனி அவர்களே!
நூறாண்டுக்காலம்
நீங்கள் வாழ்க!

நீங்கள் மட்டும் அல்ல
நாங்களும் தான்
ஒரு தடவை சொன்னால்
அது நூறு தடவைகள்
சொன்ன மாதிரி!
நூறாண்டு காலம்
நீங்கள் வாழக!

வெறும் மும்பை கரிகாலனா
நீங்கள்?
தமிழ் மண்ணுக்கு
வெண்கொற்றக்குடை ஏந்தி
செங்கோல் ஏந்தி ஆளவரும்
"கரிகாற்பெருவளத்தானாக" அல்லவா
நாங்கள்
எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
காவிரிக்கு கரையெடுத்து
நீர் வளம் காத்த மாமன்னவன்
அல்லவா அவன்?
காவிரியை
பல அணைகள் மூலம்
சுருட்டிக்கொள்ளும்
சூழ்ச்சிகள் நடைபெறுகிறதே!

ஆனால்
"போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம்"
என்ற
உங்கள் "பஞ்ச்"டைலாக்
வெறும் "பஞ்ச்" ஆகி குத்தி
அந்த போர்முரசே
கிழிந்து போய்விடுமோ
என்ற அச்சமே
எங்கள் மீது கவிகிறது.

கபாலிடா நெருப்புடா
என்று
நீங்கள் தீப்பொறிகளை
பூட்ஸ்ல் பூக்கச்செய்து நடந்து
சிலிர்த்தபோது
சமூக நீதியின்நாடி நரம்புகளில் ஒரு
சரித்திரத்தின் பக்கங்கள்
சர சரக்கின்றனவே.
ஆனால் "நீட்" தேர்வு
இங்கே தீப்பற்றி எரிந்தபோது
உங்கள் இடிக்குரல்
கேட்கவில்லையே.
வழக்கமாய்
சிகரெட்டை மேலே போட்டு
கப்பென்று
வாயால் பிடித்து புகை விடுவீர்களே
அந்த புகையோடு
நாங்கள் மௌனமாக ஒன்றிவிட்டோம்.

பிறந்த நாளைக்  கொண்டாட
உங்கள் வீடு நோக்கி
வந்த ரசிகர் வெள்ளம்
நீங்கள் வீட்டில் இல்லை
என்று
திரும்பியதாய்
ஊடகங்கள்  காட்டியபோது
ஊமைத்தனமான கண்ணீர்த்துளிகள்
அங்கு
முட்டிக்கொண்டு நின்றன.

உங்கள் 67 வயது நிறைவை
இனிப்பாக்கி...
6700 கேக்குகளால்
சாலையெல்லாம் உங்களை  ஓவியமாக்கி
அகமகிழ்ந்தோமே !
தலைவா!
அது நிஜத்திலும் நிஜம்.
உங்கள்    பிறந்த நாள்
எங்களுக்கு
ஆயிரமாயிரம் தீபாவளிகள்!

டிவி ஊடகங்களில்
உங்கள்  அரசியல் புயல்
கருமையம் கொள்வது பற்றி
ஒரு இனிய பிரசவவலியின்
இன்பப்பிரளயம் பொங்கும்
என்று
காத்திருந்தால்
இதுவரை நீங்கள்
நடந்த சினிமா காற்சுவடுகளின்
ஒட்டுப்படங்களை  ஓட்டி
அவை
தன் "ஹிட் ரேட்டை " மட்டும்
தக்கவைத்துக்கொண்டனவே.

உங்கள் ஆத்மீக வாதம்
எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
இமயமலை பாபாவையும்
ராகவேந்திரரையும் நீங்கள்
எங்களுக்கு காட்டும்போது
அவர்கள்
மத நல்லிணக்கமும் மனித நீதியும்
காக்கும் "உருவகங்களாகத்தான்"
இருந்தார்கள்.
அப்போது உங்கள் கையில்
ஆத்மீகம் கூட சமூகநீதியைக்
காக்கும் "சிவாஜியின்" வாள் ஆகத்தான்
தெரிந்தது.
அந்த வாளுக்கு "மஞ்சள் குங்கும"
வெறி பூசி கொச்சைப் படுத்தி
விடமாட்டீர்கள் என்று
மெய்யாலுமே
ஆம்
மெய்யாலுமேதான்
நம்புகிறோம் !
வாழ்க எங்கள் ரஜனி!
நீடூழி நீடூழி
வாழ்க எங்கள் ரஜனி!

====================================================


கடவுளைத்தேடு!கடவுளைத்தேடு!
===================================ருத்ரா

ஒரு ஞானியிடம்
கடவுள் இருக்கிறாரா
என்று ஒருவன்கேட்டான்.
அவர்
ஒரு வைக்கோற்படப்பை
காட்டி
இதில் தான் இருக்கிறார்
தேடு என்கிறார்.
அவன் ஒவ்வொரு வைக்கோலாக
தேடுகிறான்.
எல்லாவற்றையும் தேடி முடித்துவிட்டான்.
பார்த்துவிட்டாயா
என்று கேட்கிறார்
இல்லை
என்கிறான்.
எதைத்தேடினாய்?
எதைத்தேடினேன் என்பதே
மறந்து விட்டதே
என்கிறான்.
இப்போது உனக்கு
என்ன தெரிய வேண்டும்?
எனக்கு எதுவுமே தெரிய வேண்டியதில்லை
என்பதே
நான் இப்போது தெரிந்து கொண்டது.
ஞானி
இப்போது அவன் காலில் விழுந்தார்,
"குருவே
எனக்கு அந்த ஞானத்தை
போதியுங்கள்"
என்றார்.

=========================================

திங்கள், 11 டிசம்பர், 2017

நகைச்சுவை (2)

நகைச்சுவை (2)
==========================================ருத்ரா


அதிகாரி

தம்பி உனக்கு பதினெட்டு வயது நிறையலையே .
அப்புறம் எப்படி உனக்கு வாக்குரிமை வரும்?

பையன்

அதனால என்ன? ரூபாய் நோட்டுக்கட்டை  எங்கிட்டே
குடுத்துப்பாருங்க. மட மடன்னு  எண்ணி வைக்கிறேனா
இல்லையான்னு பாருங்க.

அதிகாரி

???!!!!!

=================================================

நிவின்பாலி

நிவின்பாலி
========================================ருத்ரா

மலையாள சிலிர்ப்போடு
தமிழ்ப்படத்துள்
ஒரு புதிய நல் வரவு.
"ரிச்சி" படத்தில்
தென்பாண்டி
அறுவாள்வீச்சு வாசனை
அதிகமாக அடிக்கவில்லையென்றாலும்
அந்த யதார்த்தமான‌
கோபமும் பழிவாங்கலும்
ஒரு புதிய பரிமாணத்தை
பதியமிட்டுள்ளது.
வில்லன் என்று வெறுமே
தள்ளிவிடமுடியாத அளவுக்கு
உள்ளுக்குள்ளிருந்து
நிமிண்டிப்பார்க்கும்
ஒரு கதாநாயகத்தனமும்
தெரிகிறது.
மலையாளப்படங்களில்
கதை வேறு
நடிப்பு வேறு
என்று துருத்திக்கொண்டிருக்காது.
தமிழ்ப்படங்களில்
வேறு வேறாய் அலங்காரம்
செய்யப்பட்டிருக்கும்
ஆனால் மலையாள மொழி
மக்களோடு சவ்வூடு பரவல் மூலம் நிரவி
மண் வாசனையை
அங்குள்ள மனங்களின்
வாசனையாக்கி விடும்.
அன்றாட‌
நடவடிக்கைகளை
யாரோ ஒரு புகழ்பெற்ற‌
எழுத்தாளர்
காகிதத்தில் எழுதி உலவ விட்டது போல்
நிகழ்வுகள் முறுக்கு ஏறி நிற்கும்.
அதனால்
நிவின்பாலி
நிஜமாய் ரவுடித்தனம் பண்ணும்
அடாவடியை அற்புதமாய் காட்டுகிறார்.
கூச்சல் இல்லை.இரைச்சல் இல்லை.
இன்னொரு பாபி சின்ஹா
என்று சொல்லிவிடமுடியாத வகையில்
ஒரு புது வடிவம் காட்டுகிறார்.
சிறுவயதில்
அபாண்ட பழி சுமத்தப்பட்டு...எனும்
சிறு பொறி
இவ்வளவு கொந்தளிப்புகள் ததும்பும்
பாத்திரமாக உலவுகிறது
என்பதை
தனித்த முத்திரையோடு
காட்டுகிறார் நிவின்பாலி.
வழக்கமாய்
வில்லனாய் கர்ஜிக்கும்
பிரகாஷ்ராஜ்
இங்கு தன் பளிங்கு துளிர்ப்புகளான‌
கண்ணீரில்
தன் மகன் வாழ்க்கை சிதைவது அறிந்து
சகிக்காமல் சகிப்பதை
நன்றாக காட்டுகிறார்.
ஃபாதரின் வெள்ளையுடைக்குள்
துடிக்கும் ரத்தம்
ஊமைச்சிவப்பாய்
சோகம் இழையோடச்செய்கிறது.
இன்னும் எத்தனையோ காட்சிகள்
மற்றும்
நடிக நடிகைகளின்
அளவாக செதுக்கப்பட்ட நடிப்பின்
அற்புத தெறிப்புகள்
நிச்சயம் பாராட்டப்படவேண்டியது தான்.
இசையும் செவிகளை வருடுகிறது.
கதையின் தளும்பல்களோடு
நெஞ்சை நெருடுகிறது.
நிவின்பாலியின் நடிப்பு தெரியவில்லை.
அந்த வைக்கம் பஷீர் அவர்களின்
"எழுத்தாளும்"
ஒரு விவரிப்பு நுட்பமாய் இழைகிறது.
இயக்குனர்
பாத்திர உருவங்களை "உருவகங்களாக"
காட்டியிருக்கிறார்.
உதாரணம் அந்த "டெமாகிரசி "சிறுவன்.
பாலசந்தர் "அச்சமில்லை அச்சமில்லையில்"
இப்படித்தான் "சுதந்திரத்தின்"
உருவகமாய்
ஒரு வளர்ச்சி  அடையாத பையன் போன்றவரை
காட்டியிருப்பார்.
"ரிச்சி"பட
இயக்குனரின் காமிராக்கண்ணில்
நிறையவே "உஷ்ணம்" இருக்கிறது.
நிவின்பாலி சினிமாக்கதையை
இலக்கியமாய்
தன் பாத்திரத்தில் பூசிக்கொண்டு
உயிர்ப்பு காட்டுகிறார்.

========================================================
பாரதி

பாரதி
==============================ருத்ரா

பாரதி!
நீ முண்டாசா?
முறுக்கு மீசையா?
வீரம் சுடரும்
வேங்கை விழிகளா?

"மங்கிய தோர் நிலவினிலே..."
நீ கனவு கண்டதை
காதலோடு இசை பிசைந்து
நாங்கள் ருசித்தது உண்டு.

"சிந்து நதியின் மிசையினிலே"
இந்தியாவின்
ஒற்றுமைச்சித்திரம்
நீ தீட்டிக்காட்டியும்
தமிழ்
இங்கே சில சனாதனிகளிடம்
"மிலேச்ச பாஷையாக" அல்லவா
இருக்கிறது.

இவை
உனக்கு எப்போதும் அரண்
என்று
அப்போது முழக்கிச்சென்றாயே
ஆம்
அவை
அப்போதும்
இப்போதும்
எப்போதும்
எங்களுக்கு நல் அரண் தான்!

விடுதலை விடுதலை விடுதலை!
விடுதலை விடுதலை விடுதலை!!

======================================