ஞாயிறு, 14 ஜூலை, 2024

ஆயிரம் கோயில்கள்

 ஆயிரம் கோயில்கள்

________________________________________


ஒரு எழுத்தாளன் 

தன் எழுத்துக்கள் ஊர்ந்து செல்லும்

தடம் உணர்ந்தவன்.

ஆண்பாலாகச்சொன்னாலும்

பெண்பாலாய் உள்ளிருந்து

எழுச்சியின் எழு கடலாய்

எழுந்து நிற்பான்.

பெண்பாலாய் இருந்து எழுதினாலும்

அவளது ஒரு சிறு நிறுத்தற்குறி கூட‌

கொடுங்கோன்மையின் 

கனத்த சங்கிலிகளுக்கு

மிகவும் கனத்த முற்றுப்புள்ளியை

வைத்து நசுக்கிக் கூழாக்கும்.

காகிதம் காகிதமாக‌

ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக‌

எழுத்துக்கள் எரிந்து எரிந்து

சூடேற்றிக்கொள்கின்றன.

காதலின் பன்னீரி மழையைக்கூட‌

அமில மழையிடையே

அகலச்சிரிக்கும் பூவாக‌

விரித்து வைத்துக்கொண்ட நிழலில் 

குடையாக்கிக்கொள்கின்றன.

சமுதாய நச்சுத்தனமான அவலங்களிலும்

சொற்றொடர்களின் கொலுப்பொம்மைகளை

வரிசையாய் அடுக்கி

அதற்குள் எரிமழையின் மேகங்களை

மெதுவாய் கர்ப்பம் தரிக்கச்செய்கின்றன.

மக்கள்

செல்லரித்துப்போன புராணங்களின்

கரையான் புற்றுக்குள் மூடி

சமூக அநீதியின் சாக்கடைத்தேக்கங்களுக்குள்

காணாமல் போய் விடும் அபாயம்

தன் கண்முன்னே ஒரு ஹோலோகிராஃபிக்

பிம்பமாய் 

இந்த மொத்த சமுதாய இருப்பின்

கருச்சிதைவடைந்த‌

காணச்சகியாத காட்சியாய் இருப்பின்

இந்த‌ எழுத்துக்களே

எல்லாவற்றையும் துளைத்து சல்லடையாக்கி விடும்

தோட்டாக்களாய் சிதறுகின்றன.

ஓ! எழுத்துக்களே

உங்கள் தும்மலும் செறுமலும் கூட‌

தாறு மாறான பொய்ப்பிரமைகளை

தூளாக்கிவிடும்

என்ற நம்பிக்கையே இங்கு

ஆயிரம் கோவில்களுக்கு சமம்


_______________________________________________

கல்லாடன்.


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக