வியாழன், 29 நவம்பர், 2018

சூப்பர் ஹைப்பர் ஸ்டார் ரஜனி

சூப்பர் ஹைப்பர் ஸ்டார் ரஜனி
=============================================ருத்ரா


தமிழ் மண்ணே!
நீ மண் சோறு சாப்பிட்டது
வீண் போகவில்லை.

ட்விட்டர்கள் எல்லாம்
வண்ண வண்ணமாய்
வாண வேடிக்கை தான்.

ரஜனி
இன்று முதல்
"சூபர் ஹைப்பர் ஸ்டார்"

நமக்கு கிடைத்திருக்கிறார்.
பஹுத்
"அச்சா குமார்"

கம்பியூட்டரில்
சங்கரின் இயக்கம்
ஒரு சங்கராபரணம்.

சிட்டிக்குருவி சிட்டிக்குருவி
சேதி தெரியுமா?
சிட்டியெல்லாம் இதே பாட்டு.

ரஜனியின் நடிப்பு
சிலிர்க்க வைக்கிறது.
காலைக்கடிக்கும்
அரசியல் செருப்பை அவர்
உதறி விட்டால்
ரசிகர்களுக்கு அது
3.0, 4.0 ,5.0, 6.0.....


இருந்தாலும்
ரஜனி அவர்களே

தமிழன் மட்டும்
மண் சோறு சாப்பிடவில்லை.
மண்ணும் சோறாய்
தமிழனை சாப்பிட்டுவிட்டது
இலங்கையில்.

இந்த சோகத்தீ
ரஜனி அவர்களே
உங்கள் வெளிச்சம் மூலம்
உலகத்தின் சுடர்
ஆகவேண்டும்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ரஜனிக்கு
நம் மனம் கனிந்த வாழ்த்துக்கள்

===========================================================









அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
===========================================ருத்ரா

அண்ணே...அண்ணே

என்னடா?

இந்த ரெண்டு வெரல்ல ஏதாவது ஒண்ணத் தொடுங்கண்ணே.

எதுக்குடா?

தொடுங்கண்ணே ...சொல்றென்.

(ஒரு விரலைத்தொட்டார்)

ஆகா! சரியா தொட்டுட்டீங்க!

என்னடா..வெவரத்தை சொல்லு.

இது தாண்ணே ஒரு விரல் புரட்சி. என் ஒரு விரல் சொல்லிட்டுது.
கண்டிப்பா..விஜய் அரசியல்ல குதிக்கப்போறாரு...

ஏண்டா இந்த "கில்லி ஜோஸ்யம்" தான் புரட்சியா?

(இவர் அடிக்க ஓங்குகிறார்.அவர் ஓடி விடுகிறார்)

===============================================================






கூடத்தில் தொங்கிய கேள்வி

கூடத்தில் தொங்கிய கேள்வி
========================================ருத்ரா

பிறந்த உடன்
என்னை
அப்படியே தகப்பனை
உரித்து வைத்திருக்கிறது என்றார்கள்.
தவழ ஆரம்பித்த போது
அப்படியே
தாய் மாமன் தான் என்றார்கள்.
வயது ஏற ஏற‌
குரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது.
இப்போது
"டார்வினை"க்காட்டி
அந்த பரிணாமத்தின் படி தான்
நான் இருப்பதாய் சொல்லி
கண்டிப்புக்கார பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்
என்னை இடுப்பில் கயிறு கட்டாத குறையாய்
வைத்திருக்கிறார்கள்.
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதாம்.
எல்லாம் என் கைக்கெட்டாத தூரத்தில் தான்.
ஒரு நாள் எனக்கு..
அந்த முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்தது.
அதற்குள் தெரிந்த‌
முகத்தை
உலுக்கி குலுக்கி பார்த்தேன்.
சுழட்டி சுழட்டி பார்த்தேன்.
நான் யார் ஜாடை?
தெரியவில்லை..
இசகு பிசகாய் கண்ணாடி விழுந்து நொறுங்கியது.
அந்த குப்பையை எட்டி பார்த்ததில்
பலப்பல பிம்பங்கள்..
அத்தனையும் வேறு வேறாய்..
ஒன்றில் கண்
ஒன்றில் மூக்கும் வாயும்
இன்னொன்றில்
நெற்றி மட்டும்.
எனக்கு மட்டும் அதிலும் ஒரு கண் தெரிந்தது.
"சரியான வாலுப்பயல்.."
முதுகில் மொத்து விழுந்தது.
"தள்ளிக்கடா...காலில் கண்ணாடி
குத்திவிடப்பொகிறது.."
என்றாள் அம்மா.
கண்ணாடி செதில்களில்
நான் யார் ஜாடை?
"கேளா ஒலியில்"
அந்த கூடம் முழுதும் அது எதிரொலித்தது.

"நான் யார்?"

இப்படியொரு கேள்வியில்
கூடத்து நடுவில் உயரத்தில் படத்தில்
கோவணம் கட்டிப் படுத்துக்கொண்டு
அந்த முனிவன்
சிரித்துக்கொண்டிருந்தான்.
பாறை இடுக்குகளில்
பள்ளி கொண்ட பெருமாளாய்
இருந்தவன்
ஞானித்தின் விளிம்பில்
இருந்து கொண்டல்லவா அதை
கேட்டிருக்கிறான்.

கண்ணாடிச்சிதறல்களில்
ஒரு துண்டில் "நான்"!
இன்னொரு துண்டில் "யார்?"
கேள்வியின் வில் முறிந்தது.
எதுவும் அற்ற அது
அல்லது இது
இல்லாவிட்டால் எதுவோ அது!
இப்போது
அடையாளங்களைப்பற்றி
எனக்கு கவலை இல்லை.


====================================================
18.06.2016




மெல்ல அசைபோட்டேன் கண்ணதாசன் வரிகளை...

மெல்ல அசைபோட்டேன் கண்ணதாசன் வரிகளை...
========================================================ருத்ரா

(ஒரு மீள்பதிவு)


Kaviyogi Vedham <kaviyogi.vedham@gmail.com>
19 அக்., 2014, முற்பகல் 11:38
பெறுநர்: Chandar, நான்

 படிப்பீராக.. ருத்ராவின் அருமையான கவிதை. கீழே. கண்ணதாசன் பற்றி.,

 யோகியார்


---------- Forwarded message ----------
From: ருத்ரா <epsivan@gmail.com>
Date: 2014-10-18 23:26 GMT+05:30
Subject: [தமிழ் மன்றம்] கண்ணதாசன் அலை
To: tamilmanram@googlegroups.com
Cc:கவியோகியார்



கண்ணதாசன் அலை
==============================ருத்ரா

கோப்பைக்கவிஞனென 
கொச்சைப்படுத்துவார்
கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும்.
இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு.
எழுத்துக்கள் எழுந்துவந்தால்
அத்தனையும் சுநாமிகளே
அதர்மக் கரையுடைக்கும்
ஆவேச அலைகள் தான்.
துலாபாரத்தின் 
"துடிக்கும் ரத்தம் பேசட்டும்"
இன்னும் இந்த தேசத்தின்
செங்கொடிகளில்
நரம்போட்டங்களை காட்டுகின்றன.

தத்துவம் என்பது தனியாக இல்லை.
வீடு வரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இந்த இரண்டு வரிகளில்
மனிதனின் தேடல் பற்றிய‌
கேள்வியின் கூர்மை நங்கூரம் 
பாய்ச்சி நிற்கிறது.
பிரமனையும் படைக்கும் பிரமனே கவிஞன்.
இதையும் ஆணித்தரமாய் சொன்னான்.
சாவு என்பது பயப்பட அல்ல‌
ஆலிங்கனம் செய்து கொள்ள.
யமன் கூட அவனுக்கு "உமன்" தான்
வா வந்து அணைத்துக்கொள் என்பான்.
மனிதன் தன் நிழலையே படைத்தான்
கடவுள் என்று.
அதனால் தான் அவன் இப்படி எழுதினான்.
"நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை"

சட்டி சுட்டதடா. கை விட்டதடா.

எறும்புத்தோலை உரித்துப்பார்க்க‌
யானை வந்ததடா..
என் இதயத்தோலை உரித்துப்பார்க்க‌
ஞானம் வந்ததடா!

என்ன ஆழமான வரிகள்?
வேதங்களின் லட்சக்கணக்கான சுலோகங்கள்
முழங்கியா
நம் "லப் டப்"களுக்கு
அர்த்தம் சொல்லப்போகின்றன?

இரவின் கண்ணீர் பனித்துளி என்றான்.
இருட்டுக்கும் கூட உணர்ச்சி உண்டு.
தூங்காத இமைகளில் 
கண்ணீரின் வைரங்கள். 
கவலைகளே பட்டை தீட்டும்.

காதல் என்ன பளிங்கு கோட்டையா?
சலவைக்கல் கட்டிடமா?
அந்த தள்ளுவண்டிக்காரியின்
தளுக்குத் தமிழ்கூட 
இனிய கலித்தொகை அல்லவா?
"எலந்த பயம்..எலந்த பயம்.."
தமிழ் நாட்டின் ஒலிபெருக்கிகள் எல்லாம்
தொண்டை சுளுக்கிக்கொண்டன.
காதல் கிளுகிளுப்புகள் கூட‌
அந்த கவியரசனுக்கு
விளையாட்டு காட்டும் கிலுகிலுப்பைகள் தான்.

"சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.
உப்புக்கடல் கூட சர்க்கரை ஆகலாம்.
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?"

காதலியின் காதல் மட்டுமே உண்மை.
அதோ அந்த பாறாங்கல்லில் முட்டி
சுக்கு நூறாக சிதறிப்போகிறேன் பார்
என்கிறான் காதலன்!
கவிஞனின் பேனாவுக்குள்
காதல் 
டிராகுலாவாகவும் இருக்கலாம்.
மயில்பீலிகளாகவும் வருடலாம்.
கண்ணதாசன் என்ற கவிஞன் மட்டுமே
தன் மைக்கூட்டில்
எரிமலையின் லாவாவை நிரப்பி வைத்து
காதலை கவிதையாக‌
கொப்பளிக்க முடிந்தது.

மெட்டுக்கு சட்டை தைத்து தரவே
பேனாவை ஏந்தினார்.
மெட்டு ஒலி
அவர் கவிதையால்
தமிழ் மண்ணையே எதிரொலிக்கும்
மெட்டி ஒலி ஆனது.
.....................................................................................................---ருத்ரா
=====================================================

புதன், 28 நவம்பர், 2018

கோலம்


கோலம்
=====================================ருத்ரா

மின்னலைபொடி
செய்து
இதயச்சிமிழ் பெய்து
விரலெல்லாம் கனவாக‌
வாசல் இமைவிரிக்க
வாசம் நீர் தெளிக்க
கோல வெள்ளருவி
கொட்டுவது பாரீர்.
துயிலாத விழி பிழிந்து
துவள் நினைவை
தொட்டு எடுத்து
புள்ளியாய் கோடாய்
கலை உமிழும்
வளவு நெளிவுகளாய்
தரை படரும்
தங்கக் கொடிப்பின்னல்
பூவையும் காட்டாமல் காட்டி
பூவையின் மின் துடிப்பும்
புலராமல் புலர்ந்து
இட்டாள் ஒரு கோலம்.
பூமித்தாய் கர்ப்பத்தில்
புகுந்த மனக்கீற்று
அங்கே மையம் கொள்ளும்.
அருகில் போகாதீர்..
காதல் புயல் வேகம்
மணிக்கு லட்சம் மைல்.
அவள் நாயகன் வரும் நேரம்
நமக்கு அங்கு வேலையில்லை.

================================================
21.12.2014

காலண்டரின் சக்ரவர்த்தி ரஜனி!

காலண்டரின்  சக்ரவர்த்தி ரஜனி!
==============================================ருத்ரா


ரஜனியின் 2.0
என்பது
இனிமேல் தான் தீபாவளி
என்று நவ.29ல் காட்டவருமா?
இல்லை
இரண்டாவது தீபாவளியாய்
வலம் வருமா?
இந்த பெரிய வெடிக்கு
திரியும்
நீளம் நீளம் நீளம் தான்.
கிராஃபிக்ஸ்
ரொம்பவே பயமுறுத்துகிறது.
360 டிகிரியில் ரஜனி
சுழற்றி சுழற்றி
உமிழ்கிறார்
துப்பாக்கிக்குண்டுகளை.
மெய் சிலிர்க்கிறது.
காக்காவும் கழுகுமாய்
பயங்கர ரெக்கையில்
ராட்சச உருவங்கள்
அலற வைக்கின்றன.
கூரிய நகங்களோடு
கை நீட்டி
கட்டிடத்தின் கழுத்தை
நெறிப்பது போல் ஒரு காட்சி.
அஜய்குமார் உண்மையிலேயே
அசத்தல் குமார்.
சங்கரும் கலாநிதிமாறனும்
காத்து காத்து செய்த
பகீரதன் தவம்
கம்பியூட்டரின்
ஊற்றுக்கண்ணிலிருந்து
இந்த மகா கங்கையின்
கிராஃபிக்ஸ் அடர்மழையை
பொழிந்து தள்ளப்போகிறது.

ரஜனி அவர்கள்
அந்த மின்னணு அரக்கனுடன்
சண்டையிடுவது எல்லாம்
திகில் நிறைந்தது தான்.
அந்த அரக்கனின் பின்னே
ஒளிந்து கொண்டிருக்கும்
அரக்கர்களை
சங்கர் அவர்கள்
எப்படி வெல்லப்போகிறார்
என்பதே இன்றைய கேள்வி.
காலம் என்பது
கம்பியூட்டரைப்பொறுத்து
நேனோ செகண்டுகள் ஆகும்.
ஆனால் வருடங்கள் ஓடிவிட்டனவே
அடுத்த வர்ஷனுக்கு வர.
உண்மையில்
5.0 அல்லது 6.0 என்ற வர்ஷனுக்கு
தாவிவிடும் ஒரு அற்புத சூபர்ஸ்டாரை
வைத்துக்கொண்டு
2.0 க்கே இவ்வளவு காலம் என்பது
ஹாலிவுட் இலக்கணத்துக்கு மீறுவது தான்.
நம் கோடம்பாக்கத்துக்கு தகுந்த‌
இந்த எள்ளுருண்டை போதுமென்று
எண்ணிவிடக்கூடாது.
வெர்ஷன் "7.5" ஆகி விடக்கூடாது
என்பதே
ரசிகர்களின் உள்ளார்ந்த கவலையும் கூட.
"காலா" என்று துவங்கி அது
காலம் எனும் ஒரு முற்றுப்புள்ளி(ம்)யைத்
தொடும் முன்னே
அப்படம் வெளிவந்ததே
ஒரு மகத்தான வெற்றி.
மேலும் அரசியலின்
வெப்ப அலைகள்
ஒரு பக்கம்
பட வெற்றியின் அலைகளோடு
சில "இன்டெர்ஃப்ரன்ஸ் பேட்டர்ன்ஸ்"ஐ
உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
படம் வெளிவருவதின்
இந்தக்காலதாமதம்
எளிதில் வெல்லமுடியாத‌
ஒரு ராட்சசன் ஆகும்.
தேதி அறிவிப்புகள்
ஒவ்வொரு தடவையும்
படத்தின் எதிர்பார்ப்பை
ஆங்கிலப்படத்தில் வரும்
அந்த "ஹல்க்கை" விட‌
பிரம்மாண்ட பூதமாய்
ஊத வைத்துள்ளன.
இதையும் தாண்டி
2.0 பூதம் வெற்றிகளைக்குவிக்கும்
என்று நம்புவோமாக.
கிராஃபிக்ஸ் கலைஞர்கள்
தங்கள் மூளையையெல்லாம்
வியர்க்க வியர்க்க வைத்து
நம்மை வியக்கவைத்து
உழைப்பை நல்கியிருக்கிறார்கள்.
சூபர்ஸ்டாரின் மிடுக்கும் துடிப்பும்
நிறைந்த நடிப்பு
அந்த "நேனோ" வேகத்தையும்
வெல்லும் என்பதும் மிக மிக நிச்சயம்.
அக்ஷைய் குமார் இந்த படத்துக்கு
கிடைத்த ஒரு கோஹினூர் வைரம்.
படக்குழுவினருக்கு
நம் பாராட்டுகள்
நமது வாழ்த்துக்கள்.
நம் ரசிகர்களுக்கு
நவம்பர் 6 என்பது
வெறும் தேதி தான்.
ஆனால் ரஜனி தான்
அவர்களின் தீபாவளி.
ஏனெனில் அவர்
காலண்டர் தாள்களையெல்லாம்
கடந்த  சக்ரவர்த்தி.
நடிப்பின்
இமயங்களுக்கெல்லாம் இமயம்!

================================================================













செவ்வாய், 27 நவம்பர், 2018

தாழ்வாரம்



(Thanks to thiru.Durai Na Vu for his Flickering photo.)



தாழ்வாரம்
==========================================ருத்ரா இ பரமசிவன்.

எந்த அலைகளின் ஆரவாரமும் இல்லாத‌
கடலோரம்.
வெண்காக்கைகள் அலகு பிளந்து
மீன்கள் விழுங்கும் தருணங்கள் இங்கு இல்லை.
சிப்பிக்கூடுகள் கிளிஞ்சல்கள்
தன் கர்ப்பத்தை திறந்து காட்டும் காட்சிகள் இல்லை.
நுரை ஜரிகையிட்டு
நெஞ்சு எலும்பு துருத்தி
நெய்யும் நெசவாள அலைகளின்
தறி முழக்கங்கள் மவுனத்தின்
குறுக்கு நெடுக்கு "ஓடை"களில்
கரைந்து கரைந்து மங்கல் சித்திரங்களை
கந்தல் திட்டுகளாய் வலித்தீவுகளாய்
வார்த்துக்காட்டுகின்றன.
பகலின் மேய்ச்சல் முடிந்து
இரவு அங்கு முளையடிக்கப்பட்டு விட்டது.
சிமிட்டும் தூரத்து நட்சத்திரங்களுக்கும்
இங்கு தான் நங்கூரமா?
புழுக்கத்துக்கு அஞ்சி தூக்கம் தேடி
இங்கே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கும்
அப்பாவை தேடுகிறேன்.
நடுஇரவிலும்
வெற்றிலைச்செல்லத்தில்
விரல் நுழைத்து
வெற்றிலையும் புகையிலைவிழுதுகளும் சேர்த்து
வாய்க்குள் திணித்து
ஏதோ ஒரு வசந்த நெளியலுக்கு
துருப்பு தேடும் அவரது
அந்த வேட்டையைக்கண்டு
விதிர் விதிர்த்து நோக்குகிறேன்.
வாய் கொப்புளித்து விட்டு
மீண்டும் படுக்கை.
விடியலைத்தேடி கனவு பிசையும் கண் மூட்டங்கள்.
எத்தனையாவது விடியல்?
ப்ரைம் நம்பர்களின் ஃபெர்மேட் தியரம் போல்
எல்லைகள் இன்றி
எல்லைகள் உடைந்து
விளிம்புகள் சிதறி
கரைகள் கரைந்து காணாமல் போன‌
கடல் அது.
வேதாளம் போல் அகன்று
குச்சிகளில் கிளைகளில்
துளித்துளி ஊசி இலைகளிலும்
கண்கள் கூசி விழியைச்சுருக்கும்
அந்த ராட்சச புளியமரத்தின் பேய்ப்புளிப்பு..
அந்த தாழ்வாரத்தின்
நள்ளிரவிலும் வந்து நக்கிக்கொடுக்கும்..
இலை நாக்குகள் வருட‌
படுக்கையிலிருந்து திடீரென்று
எழுந்தது போல்
விக்கல் எடுத்து குலுங்கி குலுங்கி
பானைத்தண்ணிரை
தேடித்திரிவது போல்
அந்த பால் நிலவு..
என் கண்ணுக்குள் இறங்கியது..
"களக் களக்" சத்தங்களுடன்..

அப்பா அசைந்து கொடுக்கிறார்.
சட்டென்று மார்பில் அடித்த கையில்
ஒலுங்கு எனும் பெருங்கொசு
நசுங்கி விட்டதை அவர் அறியவில்லை.
தூக்கம்
அவர் ஆன்மாவை
இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது.
...........
..................
காலை வெயில்
தாழ்வாரத்தை கழுவி விட்டுக்கொண்டிருக்கிறது.
அப்பா எங்கே?
சூரியச்சிவப்பு
புளிச்சென்று துப்புகிறது.
வெற்றிலை குதப்பும்
அது வெளிச்சமா? நிழலா?
தாழ்வாரம் காலியாக கிடக்கிறது.

================================================
15.02.2015





திங்கள், 26 நவம்பர், 2018

தென்னைமரங்கள்

தென்னைமரங்கள்
=============================================ருத்ரா

கஜாப்புயல் கொன்று குவித்த
சடலங்கள் லட்சக்கணக்கில்
நீட்டிக்கிடந்தன.

விவசாயிகள் அழுதார்கள்.
எங்களுக்கு
சோறு தண்ணீர் எல்லாம் வேண்டாம்.
இவைகளுக்கு கொஞ்சமாவது
உயிர் இருக்காதா?
108க்கு சொல்லி
எடுத்துக்கொண்டு போங்கள்.
காணச்சகிக்கவில்லை.

"தென்னையைப்பெத்தா  இளநீரு
பிள்ளையப்பெத்தா கண்ணீரு "
மவராசன் நல்லாப்பாடினாரு.

புயலின்
இந்த குருட்சேத்திரத்திலே
தர்மம் அதர்மம்
லேபிள்கள் ஒட்டுவதெல்லாம்
ஏமாத்து வேலை.

இந்த பிள்ளைகள்
எங்களுக்கு தாகம் தணித்தார்கள்.
குடிசைகள் தந்தார்கள்.
பசுமை உயிர் பாய்ச்சினார்கள்.
அந்த அழகிய கீற்றுக்கூந்தலுக்கும்
தினமும்
தலைவாரி சடை போட்டு
பின்னல் வைத்து
கற்பனையின்
சன்னல் திறந்து பார்ப்போம்.
எவ்வளவு அழகு?
கொள்ளை அழகு?
தேங்காய்கள் எனும்
தன் இதயக்குவியல்களை
அள்ளி அள்ளிக்கொடுத்து
எங்களைத் துடிக்கவைத்த‌
இந்த "மூச்சுத்தோப்பு"
மூச்சடங்கிக்கிடக்கிறதே.
அதிகாரிகள் புள்ளிவிவரங்கள்
எடுத்தார்கள்.
இந்த எங்கள் பிள்ளைகளுக்கு
என்ன விலை கொடுக்க முடியும்?
முப்பது ஆண்டுகள் வரை
மூச்சுப்பிடித்து வளர்த்தோமே.
திடீரென்று
நாளை ஒரு தென்னைமரம்
வளர்த்துக்கொடுக்க முடியுமா?
கரன்சிகளைக்கொண்டு
கண்ணீர் ஈரம் துடைக்க முடியுமா?
நியாயம் சொல்லுங்கள்.
நாட்டோரே! நல்லோரே!
புயலுக்கு
யானை குதிரை என்று
எதை வேண்டுமானாலும்
பெயர் வையுங்கள்.
தென்னை என்று மட்டும்
பெயர் வைத்திடாதீர்கள்.
கொடுத்துக் கொடுத்து
நம் உயிர் வளர்க்கும்
தென்னைகள்
கொலைக்காரப்பெயர் தாங்கி
அவை இங்கே வரவேண்டாம்.

==============================================

"விஸ்வாஸம்" போஸ்டர்

"விஸ்வாஸம்" போஸ்டர்
===============================================ருத்ரா

இன்னொரு தீபாவளி
வந்து விட்டாற்போல்
அந்த உல்லாசத்தில்
லைக்குகளின் வெள்ளம்.
பார்வைகளின் பேரிடர் வெள்ளம்.
கைபேசிகளே
பேரிடர் மேலாண்மைக்கு
தகவல் கொடுங்கள்.
எந்திரமனிதனையும்
முந்திக்கொண்டு
மூக்கு நீட்டுகிறது
விஸ்வாசம்.
எல்லாம் காஞ்ச மாடு
கம்பங்கொல்லை புகுந்த
கதை தான்.
அஜித் என்னும் நடிகர்
அவர் ரசிகர்களால்
கட்டி வைக்கப்பட்ட கோட்டையில்
பத்திரமாக இருப்பவர்.
இருந்தாலும் கோட்டை
ரசிகர்களால் கட்டப்பட்ட‌தில்லை.
அவர் தனக்குத்தானே
கூடு கட்டிய கோக்கூனில்
குடியிருப்பார்.
இப்போதைய "ட்ரென்டிங்"
தலை விக்கில் "பெப்பர் அன்ட் சால்ட்"
இருப்பது மட்டுமே.
அதை வைத்து பல்லைக்கடித்து
நரம்பு முறுக்கி
விழியை சுழட்டினால் போதுமானது.
அந்த "சூப்பர்ஸ்டார்"
கறுப்பு மனிதர்களின்
நெருப்புக்கனவுகளை
காசாக்கியவர்.
அவர் தேசத்தவர் தானே.
இவருக்கும்
தமிழர்களின் தாகம் எல்லாம்
புரிந்து கொள்ளத்தேவையில்லை.
வடமாலை
வீரம்
ஆரம்பம்
என்று
ஏதாவது சிந்து பாடி
வேதாளம் போல் சிரித்துக்காட்டும்
அந்த அழகு ஒன்றே போதுமே
நம் சிங்கக்குட்டிகளுக்கு!
அரசியல் பேசாதவர்.
அது போல்
தமிழ் நாட்டுத்தலைவர்கள்
யாரையும் சட்டை செய்யாதவர்.
சமீபத்தில் தன் ஏரோனாட்டிக்
திறமையை
ஆராய்ச்சி மாணவர்களுக்கு
பகிர்ந்து பக்குவம் காட்டினார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில்
உட்காரும் நாற்காலியைத் தவிர‌
வேறு எந்த நாற்காலிக்கும்
ஆசைப்படாதவர்.
"பைக்" மூலம் வேகம் காட்டி
அதன் முரட்டுக்கொம்புகளையும்
தன் ஹீரோயிசத்தால்
ஜல்லிக்கட்டு ஆடும் "விஸ்வாசம்"
ஒரு புழுதிப்புயலை
தற்போது வீசியுள்ளது.
வேகம் கி.மீ எத்தனை என்று
தெரியவில்லை.
இவர்களின் ஸ்பீடா மீட்டர் எல்லாம்
வசூல்
இத்தனை கோடி அத்தனை கோடி
என்ற பரபரப்பு மட்டுமே.
அவர் மனதுக்குள்
"தமிழ்"மக்கள் இருக்கிறார்களா
என்று தெரியாது.
ஆனால்
அவரது பாக்ஸ் ஆபீஸ் மொய்க்கும்
"விஸ்வாச" ஈசல்கள் எல்லாம்
அவருக்கு ஈசன்கள் தான்.

=============================================================





சாமி சிலை

சாமி சிலை
================================================ருத்ரா


இது சாமி சிலை.
ஆசாமிகளுக்கு வைத்ததை எல்லாம் விட‌
உயரமாக வைக்க வெண்டும்.
பீடம்
சிலை
குடை என்று
உயரம் அந்த வானத்தைப்போய்
இடிக்க வேண்டும்.
பார்லிமெண்டையெல்லாம்
புரட்டிப்போட்டு
மேஜை மைக்குகளையெல்லாம்
உடைத்து
அவசரச்சட்டம் கொண்டு வந்து
சிலைகள்
வைத்தார்கள் அப்படியே!
அந்த சிலைகள் எல்லாம்
சுற்றுலாத்தலங்கள் ஆயின.
வெளிநாட்டு
ஆடவர் பெண்டிர்
ஆரத்தழுவிக்கொண்டு
பாப் கார்ன் கொறித்துக்கொண்டு
சிலைகளை அண்ணாந்து பார்த்தார்கள்.
கோகோ கோலா டப்பாவைச்  சப்பினார்கள்
எப்படியோ
டாலர்கள் குவிந்தன.
யாரோ ஒரு கனவான்
கனத்த பில்லியன் டாலர் செக்குடன்
நன்கொடை கொடுத்துவிட்டுப்போனான்.
கூடவே கட்டளையும் பிறப்பித்திருந்தான்:

"சாமிகள்
சிலை உயரம் தான்.
அந்த சாமியின் குடைமீதும்
போய்
எச்சமிட்டுத்திரும்பும்
அந்த காக்கைக்கே
அவர்களையெல்லாம் விட‌
ஒரு உயரமான சிலை அமைக்கவேண்டும்!"

சும்மா விடுவார்களா
அந்த நன்கொடையை.
அதற்கும் எல்லா சிலையையும் விட‌
உயரமான சிலை வைத்தார்கள்.
பெயரும் பொறித்தார்கள்.
"சனீஸ்வரன்"
என்று.
எள்ளுப்பொட்டலம் போடும் மேடையே
நூறு அடி உயரம்.
சனிக்கோளுக்கு செல்லும் நம் ராக்கெட்
தூக்கிட்டுக்கொண்டது.


=========================================================
(JUST A COMIC VISUALISATION)


பளிங்கத்து அன்ன பல்காய் நெல்லி

"பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் 
தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது" பற்றிய 
சங்கப்பாடல் ஒன்றில் கீழே வரும் வரிகள் மிக மிக 
அழகானவை..காட்சிகளும்  நுட்பம் செறிந்தவை
"பாலை பாடிய பெருங்கடுங்கோ" எனும் அப்புலவன் 
எழுதிய பாடல்கள் எல்லாம் நம் தமிழ் மொழியின் 
இலக்கிய ஆற்றலையும் நுண்மை வாய்ந்த அதன் 
சொற்பிறப்பு மற்றும் அதன் சொல் ஆளுமையையும்  
உலக அறிஞர்கள் பெரிதும் போற்றுகிறார்கள். அந்த 
"அகநானூறு பாடல் (5) ன்  சில வரிகளை கீழே பாருங்கள்.





.............................................................
...........................................................
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, 
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, 
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம்...............

"பட்டுப்போன ஓமை மரங்கள் நிறைந்த 
அந்த பெரும்பழமை வாய்ந்த காடுகளில்
பளிங்கு போன்ற அந்த  கொத்து கொத்தான 
நெல்லிக்காய்கள்வெகு அழகானவை.
பெரிய முரட்டுப்பாறையில் அவை உதிர்ந்து 
கிடப்பது "சிறுவர்கள் விளையாடும் "வட்டுகளை 
(அதாவது கோலி குண்டுகளை)ப்  போல இருந்து 
ஏமாற்றுகிறது".......

என்ன அசத்தலான கற்பனை?
"பாலை பாடிய பெருங்கடுங்கோவின்"
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
எனும் வரிகளின் அழகில் மூழ்கித் 
திக்கு முக்காடிப்போனேன்.

அந்த பொறியில் கிளர்ந்த கற்பனையில்  நான் 
இந்தப்பாடலை சங்க நடைசெய்யுட் கவிதையாய் 
ஆக்கியுள்ளேன்.



பளிங்கத்து அன்ன பல்காய் நெல்லி 
====================================ருத்ரா இ பரமசிவன். 


வேங்கை அங்குறி அடை சேர்ந்தாங்கு 
அவன் மணிகிளர் அகலம் தழையக்கூடி 
அலை விழி புதைக்கும் மீட்கும் ஆங்கே 
நுண்டுழி திண்டிய இலஞ்சியின் பனிநீர் 
கானிடை நீழல் பளிங்கத்து அன்ன 
பல் காய் நெல்லி கண்டிசின் திரள் தரு 
கனவின் வாழ்க்கை துய்க்கும் துடிக்கும் 
மீட்டும் மீட்டும் தழீஇய செய்யும் 
மட மாண் ஆயிழை ஒண்ணுதல் வேர்க்கும்.
பஃ ருளி பாய்தரு அடுக்கத்து அருவி 
சில்லொலி சிலம்ப செயிர்த்துழி புலம்பும்.
ஒங்கலிடையும் ஓவா திரையில் 
அணிசெய் நீலம் கடல் கண்டாங்கு 
எக்கர் ஞாழல் பொழில் சூழ் குன்றன்
எற்றுக்கிவள் மையுண் மழைக்கண் 
அலமரல் செய்யும்  கவின் மீக்கழிய ?
 இஃது  உன்னுவன் துன்னுவன் ஆகி 
ஆர்கலி இன்பம் அவிர்படுதல் யாஞ்ஞன் ? என 
அவள் வாயுரை நோக்கி குழைந்தனன் ஆங்கே .
முகமதில் பல் கண் பூத்தது அன்ன 
கடலின் ஓரக்  குப்பைக்கண்ணே 
அலவன் யாக்கும் அடைகுழி மூசும் 
சில்புள் சிலவாக வந்தன சென்றன.
அன்னவாக  அவள் நெஞ்சும் அதிரும்.
பூவும் வருட அஞ்சும் அவள் அகம் .
பூஞ்சிறைத்தும்பி புகுதரல் செய்மோ என 
கையுட்சேக்கை அனிச்சங்கள் போன்ம் 
ஆர்த்தவன் தழுவினன் அணைவாய் ஒற்றி. 

============================================





என்ன அசத்தலான கற்பனை?
"பாலை பாடிய பெருங்கடுங்கோவின்"
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
எனும் வரிகளின் அழகில் மூழ்கித் 
திக்கு முக்காடிப்போனேன்.

அந்த பொறியில் கிளர்ந்த கற்பனையில்  நான் 

இந்தப்பாடலை சங்க நடைசெய்யுட் கவிதையாய் 
ஆக்கியுள்ளேன்.

கவிதையின் உட்பொருள் 

-----------------------------------------
தலைவனும் தலைவியும் கூடும் அந்த இன்பப்பொழுதில் 
திடீரென்று அவன் சென்ற கொடும் கானத்தில் 
அவன் கண்ட அந்த நெல்லிக்காய்கள் கொத்து கொத்தாய் 
பளிங்கு குண்டுகளாய் அழகாகவும் தெரிகின்றன .
அதே சமயம் இந்த வாழ்க்கையின் இன்பம் நிலையில்லாமல் 
அந்த பளிங்கு குண்டுகளைப்போலஉருண்டு சென்றுவிடுமோ 
என்று பதை பதைப்பு அடைகிறாள். தலைவன் அன்புடன் அவளை 
ஆறுதல் செய்து அணைத்துக்கொள்கிறான்.

விரிவான பொழிப்புரை தொடரும்.



===============================================================










ஞாயிறு, 25 நவம்பர், 2018

மின்னற்பீலிகள் (5)











மின்னற்பீலிகள் (5)
==========================================ருத்ரா

நான்
தலை நிமிர்த்தியபோது
நீ
தலை கவிழ்த்துக்கொண்டாய்.
இந்த விளையாட்டு
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அன்று
நீயும் இல்லை.
நானும் இல்லை.
ஆனால் அன்று
புன்முறுவல்களை பறிமாறிக்கொண்டோம்.
நம் முகங்களையும் அகங்களையும்
ஒன்றிணைத்துக்கொண்டோம்.
என்ன இது?
திரையில்லாமல் சினிமாவா?
சந்திக்காமலேயே
மின்னல்களின் சங்கமமா?
புரிந்து கொண்டாயா?
இது நம் "ஹோலோகிராஃபிக் காதல்"

=======================================================

சனி, 24 நவம்பர், 2018

கமல் ரஜனி விஜய்யின் "மைக்குகள் "தேசம்.

கமல் ரஜனி விஜய்யின் "மைக்குகள் "தேசம்.
====================================================ருத்ரா

"ட்விங்கிள் ட்விங்கிள் ஜிகினா ஸ்டார்ஸ்"

ஆங்கில மழலைகள்
ஆகாயத்தைப்பார்த்து
தங்கள் கனவுகளை
உயர உயர
இந்த"ரைம்"மில்
தூக்கி வீசும்.
தமிழ்நாட்டின் அவலங்களின்
உச்சம் என்ன வென்றால்
இவர்கள்
சினிமா என்னும்
ஜிகினா உலகத்திலிருந்து தான்
தங்கள் விடியலை
கீறிப்பார்க்கத் துடிக்கிறார்கள்.
இருளைக்கிழித்து
மீண்டும் மீண்டும்
இருளையே தான்
கண்டுகொண்டிருக்கிறார்கள்.
தங்கள் தங்கள் முகங்களின்
அடையாளத்தை
அவர்கள்
காணமுடியாமல்
அந்த சினிமா இருட்டு
ஒரு புற்று நோயாய்
அவர்களை தின்று கொண்டிருக்கிறது.

நாற்காலியைப்பிடிக்க‌
சினிமாசாராயத்தைக்காய்ச்சி
மக்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாக‌
புகட்டினால் போதும்.
அதைத்தான்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக‌
ஓட்டு கேட்டவர்கள்
கொட்டு முழக்கினார்கள்.
அரசியல் என்றால் சித்தாந்தம்
என்பது
மாறிப்போய் விட்டது.
சித்தாந்தம் என்று எதுவும்
இல்லாத "சூன்யத்தை"
அரசியல் ஆக்கினார்கள்.
லஞ்சம் ஊழல் எனும்
நம் மரபணுக்கள்
நம்மையே அந்த "ஹல்க்"எனும்
ராட்சத மனிதர்களாய்
ஆக்கி விட்டது.

வார்தாப்புயல் ஒக்கிப்புயல்
கஜாப்புயல்
என்று ஒவ்வொரு புயலும்
தமிழன் புலம்பிக்கொண்டே
இருக்கும் ஒரு பிச்சைக்காரன் மட்டுமே
என்ற
அசிங்கமான உண்மையை
தோலுரித்துக்காட்டிக்கொண்டிருக்கிறது.


இவன் புலம்பலுக்கு
கொஞ்சம் பருக்கைகள் வீசிவிட்டு
மொத்த வளத்தையும்
சுருட்டி ஏப்பம் விடும் கலையை
கற்றுத்தேர்ந்து விட்டார்கள்.
இந்தப்புயல் கூட‌
தேர்தல் தேதியை மறைமுகமாக‌
அறிவித்துவிட்டதைப்போல் தான்
வாக்குகளை
எவ்வளவு அள்ளலாம்
என்று நிவாரண நிதிக்கணக்கெடுப்பில்
புள்ளிவிவரங்களை
அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டாட்சி தத்துவம் என்றைக்கோ
உயிர் வற்றிய
எலும்புக்கூடு ஆகிவிட்டது.
அதனால் சுயாட்சியும்
பேச்சு மூச்சு இழந்து விட்டது.
ஏதோ ஒரு "பாசிசப்புயல்"
"இந்து"மாக்கடலில்
மையம் கொண்டிருப்பதை
அறியாத அந்துப்பூச்சிகளாய்த்தான்
மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்
வாக்குகளை கொத்து கொத்தாக‌
அள்ளிக்கொள்ளும்
மீன்பிடிக்கும்
விசைப்படகுகளாக‌
முழு சூப்பர்ஸ்டார்களும்
மற்றும்
முக்கால், அரை, கால்,
மற்றும் காலே அரைக்கால்
சூப்பர்ஸ்டார்களும்
அணி வகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கமல் ரஜனி விஜய்யின் "மைக்குகள் "தேசம்
சினிமா கட் அவுட்டுகளைக்கொண்டா
முட்டுக்கொடுக்கப்போகிறது?

எப்படிப்பார்த்தாலும்
நம் சித்தாந்தம்
தமிழும் திராவிடமும் தான்.
சித்தத்தை இழந்துபோன நிலையில்
இந்த குத்தாட்டங்களும்
வெத்தாட்டங்களுமே
நமக்கு குட்காப்பொட்டலங்கள்.
மனிதனை மனிதன்
சுரண்டும்
இந்த வன்கொடுமை
நம்மை காயப்படுத்தவில்லை.
அந்த உள்ரணம் நமக்கு
இன்னும் உறைக்கவில்லையே!
அது கலர் கலரான சாதி மத‌
லேசர் ஒளியைக்காட்டி
நம்மை மரத்துப்போக
வைத்துக்கொண்டிருக்கிறது.
பொதுமை மனித சம நீதி
என்னும் தராசுத்தட்டுகள்
எங்கோ கடலில் வீசப்பட்டுவிட்டன.
இயற்கைச்சீற்றம்
நம்மை கம்பீரமானமான‌
அரசியல் புயல் ஆக்குவேண்டுமே ஒழிய‌
ஓட்டுக்கு என்ன தருவார்கள்
என்ற ஒரு அடிமை சாசனம்
நம்மை மண்ணோடு மண்ணாய்
புதைத்து விடக்கூடாது.
வருமானம்
உருவாக்கும் கைகள் தான்
உருவாக்கப்பட வேண்டும்.
யானையின் துதிக்கை போல‌
துதிக்கும் கைகள் தேவையில்லை.
இந்த யானையின் பலம் தெரியவேண்டும்
என்று தான்
அந்த (கஜா) யானை
பிளிறிக்கொண்டு வந்து நிற்கிறது.
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா"
சினிமாவில் ஒலித்தாலும்
இது சினிமா அல்ல.
சிலிர்க்கும் நம் உள்ளுணர்வு.

"என்று தணியும் இந்த தாகம்?"
ஆம்.
விடுதலை என்று
இந்த கானல் நீரை அல்லவா
அள்ளி அள்ளிக்
குடித்துக்கொண்டிருக்கிறோம்.

=======================================================













கஜா என்ன கஜா?

கஜா என்ன கஜா?
=============================================ருத்ரா

எ புள்ள!
எங்க வீட்டுக்கூரையெல்லாம்
காத்துல பறந்து போச்சு.

ஆமாண்டா!
எங்க வீட்டு எல்லாத்தென்னையும்
நெடுங்கிடையாய்
விழுந்து கெடக்கு.

ஆமா! மெல்லிய தென்றலாய்
காதல் போல வீசும்
காற்றுக்கு
ஏன் வெறி பிடித்தது?

எல்லாம்
நம் காதலைப்பிடிக்காமல் தான்.

அப்படியென்றால்
கஜா என்ன கஜா?
புயலுக்கு இப்படிப்பெயர்
வைத்திருக்கலாமே
"ஆணவக்கொலை" என்று.

===============================================

ஒரு நினைவு