வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

யுகங்கள்!

 






யுகங்கள்!

_______________________________________________ருத்ரா


என்ன தான் உன்னிடம் பேசுவது?

எந்த சொல் எடுத்து 

எய்வதற்கு

இந்த வில்லை வளைப்பது?

அவள் வரச்சொன்னாள்.

இவன் 

வந்து விட்டான்.

தொல்காப்பியம் எழுதியவர்களே

இந்த தொல்லைக்காப்பியத்தின்

எழுத்தும் சொல்லும் பொருளும்

ஒன்றுக்கொன்று 

ஒளிந்து நின்றுகொண்டு

பிம்பம் காட்டுகின்றதே!

என்ன செய்வது?

ஒரு ஆங்கிலப்படத்தை அல்லது நாவலை

ஒரு மையமாய் ஆக்கி

அதனிடமே இந்த கட்டப்பஞ்சாயத்தை

விட்டு விடலாமா?

இல்லை

அகநானூறு குறுந்தொகை என்று

அந்த பளிங்கு சொற்றொடர்களில்

பகடை உருட்டலாமா?

இல்லை 

சமீபத்தில் வந்த‌

கானாப்பாட்டை

மானசீகமான ஒரு பறையோசைப்

பின்னணியில்

ஹம் செய்யலாமா?

இவனுக்கு வியர்த்ததில்

ஏழுகடல்களின் உப்பு கரித்தன.

சரி..

இப்போதெல்லாம்

இங்கிலீஷ் தான் இன்பத்தேன் தமிழ்.

ஒரு வழியாக ஆரம்பித்தான்.

"பை த பை.."

சொல்லி நிமிர்ந்தான்.

அதற்குள் அவள் 

"பை"சொல்லிவிட்டுப் போய்

பல திரேதா யுகங்கள் 

முடிந்து விட்டிருந்தன.


_____________________________________




சோளத்தட்டை நாயகர்கள்

 சோளத்தட்டை நாயகர்கள்

_________________________________________

ருத்ரா



தொந்தரவு செய்யவேண்டுமென்றால்

ஒரு சக்கரநாற்காலியில் தான்

உட்காரவேண்டுமா?

பகல் வேஷங்களின் அரிதாரங்கள்

கையில் இருக்கும் போது

நாயாகவோ நரியாகவோ

இல்லை முடைநாற்றம் வீசும்

கழுதைப்புலியாகவோ இருந்து

இந்த மக்களைத்

துவைத்துக்காயப்போடலாமே.

யாவாராயினும் நா காக்க..

சொன்னது யாரு....?

ஓ அந்த ருத்திராட்சக்கொட்டை அணிந்த

சன்யாசியா  என்று

கன்னத்தில் போட்டுக்கொள்ளும்

இந்த கள்ள பக்திக்காரருக்கு

அக்கிரகாரங்களே அரசியல் சாசனங்கள்.

மனித உடலின் விஞ்ஞானம் மறந்து

பேசுகிறாரே.

மனித உடல் முழுதும் ஒத்துழைக்காமல் 

நின்றுகொண்ட போது

அறிவு மட்டும்

அந்த ஸ்டீஃபன் ஹாக்கின்ங்ஸ் ஐ

இந்த விஞ்ஞான உலகிற்கே

சக்கரவர்த்தி ஆக்கியது

ஒரு சக்கரநாற்காலியில் அவரை உட்காரவைத்து.

தாழ்நிலை மக்களின்

உயரத்தை இமயத்துக்கே கொண்டுசென்ற‌

திராவிடத்தின்

அந்த சக்கரநாற்காலியின்

சிறு "ஸ்க்ரு" கூட 

இப்படி மனிதநேயம் கழன்ற உங்களை

"மறை கழன்றவர்" என்று

கை கொட்டிச்சிரிக்கும்.

உலக நாயகன் என்று 

ஒரு மகுடம் செய்து கொடுத்தார்களே

இல்லை அது

"உலக்கை நாயகன்" தான்

என்று தடித்த வார்த்தைகளின் 

ஜிகினா நாயகனாக 

வலம் வந்து கொண்டேயிருங்கள்.

கோமாளிகளின் கூட்டணி

ஒரு சோளத்தட்டை நாற்காலியை

உங்களுக்கு தொங்க விட்டுக்கொண்டிருக்கிறது.

அதோ பாருங்கள்.

அங்கே ஓடுங்கள்.


_______________________________________________










தாவன்னா பாண்டியன்

தாவன்னா பாண்டியன்

___________________________________ருத்ரா


இப்படித்தான்

அந்தத் தோழரை

உழைப்பின் உப்புக்கரித்த‌

உதடுகள் உச்சரிக்கும்.

இடதுசாரி சிந்தனையின்

வலதுசாரி பீரங்கியாய் 

இருந்த போதும்

சுரண்டல் ஆதிக்க அரசியலை

சூடு மாறாமல் 

உமிழ்ந்து கொண்டே இருந்தவர்.

அவரது சிறுநீரகமும் கல்லீரலும் கூட‌

செயல் இழக்கும் வரை

தாஸ்கேபிடலை

துடிக்கும் நரம்புகளின் வழியே

சொற்பொழிவு ஆற்றித்தான் 

ஓய்ந்திருக்கும்.

இவர் ஒரு ஆரியப்படை கடக்கவந்த‌

செம்பாண்டியனோ

என நம்மை வியக்க வைத்த‌

சொல்வீரர் செயல் வீரர் எல்லாமும் தான்.

செதுக்கி செதுக்கி 

தத்துவார்த்தக் கூர்மையுடன் 

ஒரு சீரிய வழியுடன் ஓடும் ஆறு போல்

சொற்பெருக்காற்றும் சொற்சிற்பி.

பொது உடைமை தத்துவம்

என்றால் 

அது ஏதோ பிள்ளைபிடிக்கும் காரன்

வைத்திருக்கும் ஊதுகுழல் என்று

அறிவு கழன்ற நம் சமுதாய எந்திரம்

கட கடத்துக்கொண்டிருக்கிறது.

அதன் கடைவாயிலிலிருந்த‌

அடிமைத்தனத்தின் முடைநாற்றம்

நுரை தள்ளுகிறது.

அந்த "பொன்விடியலை"

கிரீடம் செய்து என்றாவது

இந்த மக்கள் சூடிக்கொள்ளவேண்டும்

என்ற 

அந்த கனவின் அடர்த்தி இன்னும்

செறிந்து தான் நிற்கிறது

இவரை நினைவேந்தலில் நாம்

ஏற்றிக்கொண்டபோது.

இந்த நினைவுகள் நம்மிடையே

சாவதில்லை.

கண்ணீர் விட்டு அஞ்சலி செய்து

இவரின் வீரக்கனவுகளை

நாம் மழுங்கடித்துவிட வேண்டாம்.

வாழ்க! வாழ்க!

என்றும் தா.பா நம்மிடையே!


__________________________________________


வியாழன், 25 பிப்ரவரி, 2021

பொன்விழா ஆண்டு வாழ்த்து

 திருமிகு ராஜேஷ் பரமசிவன் 

பொன்விழா ஆண்டு வாழ்த்து

===========================================


பொன்விழா காணும் எங்கள்

பொன்மனப்புதல்வனே!

வாழி நீ வாழி!

நீடூழி வாழி!

பொன்மலர்ப் பூங்கா எனும் 

பொருந்திய அன்பின் 

இல்லறம் தழைத்த நல்

இதயம் தாங்கி 

பேரன்பின் 

திருமிகு சுதாவுடன்

மங்கலம் நிறைந்து

நீடூழி வாழ்க! நீடூழி வாழ்க!

பிள்ளைகள் அன்பின் 

இன்னிசை அருவி 

என்றும் பொழிய‌

நவீன், கீர்த்தி 

இதய‌ச்செல்வங்கள்

இனிமை யாழினை

என்றும் மீட்ட‌

வாழ்வீர் யாவரும்

வாழ்வீர் யாவரும்

நீடூழி நீடூழி

வாழ்வீர் என்றும்!


அன்புடன்

அம்மா- அப்பா.


================================================

ருத்ரா இ பரமசிவன்



  


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

ரணம் சொட்டும் தோரணங்கள்?

ரணம் சொட்டும் தோரணங்கள்?

_________________________________________ருத்ரா



காதலர் தினம் என்றால்

இங்கே உள்ள

இருண்ட கண்டத்துக்குரல்கள்

குரைத்துத் தள்ளுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே

"கந்தர்வ மணம்" என்று

சொல்லி

பெண்ணைத் தவிக்க விட்டு

கரு கொடுத்து விட்டுப்போன‌

கந்தல் புராணங்கள்

எத்தனை?எத்தனை?

கடலில  படுத்துக்கிடந்து

பக்திப் பாய் விரிக்கும்

பரந்தாமனுக்கும்

இடப்புறம் ஒன்று வலப்புறம் ஒன்று

நடுப்புறம் நெஞ்சில் ஒன்று

என்று காதல் பொங்க மனைவியர்

எத்தனை? எத்தனை?

யுகங்கள் கடந்த போதும்

இந்த காலங்கள் தோற்றுப்போனது

ஒன்றே ஒன்று தான்.

அது தான் காதல்!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தேயும்

இந்த மூச்சுக்குமிழிகளில் 

முத்தெடுத்தவன் தமிழன்.

அவன் 

ஓலைத்துடிப்புகளில் எல்லாம்

இந்த தேன் சொட்டுகள் தான்.

இந்த மின் வெட்டுகள் தான்.

இந்த கல்வெட்டுகள் தான்.

அவை காதலின் கனல் பரிமாணங்கள்.

ஆனால் 

அதற்கும் ஒரு முக கவ‌சம் இட்டு

பக்தியிலும் பஜனையிலும்

பெண்களை நிர்வாணப்படுத்தியாவது

லீலைகள் புரிந்து

அதை சூட்சும அடையாளமாய் சொல்லி

மோட்சத்தையும்

நிர்குண பிரம்மத்தையும்

புல்லரிக்கும்படி புல்லாங்குழல்

ஊதும் உங்கள் ஊதைக்காற்று தானே

இன்று

இளசுகளை

மயக்கம் கொள்ள வைக்கிறது.

இருந்தாலும்

இந்த புதிய தலைமுறை

புதிய சமுதாயத்தின்

விடியல் விளிம்பில் நின்று கொண்டு

இந்த உணர்ச்சிப்பீலிகளை

"ஃபீல்"பண்ணுகின்றன.

இதற்கா இங்கே

எதிர்ப்பாய் இத்தனை

ரணம் சொட்டும் தோரணங்கள்?

____________________________________________________

https://www.thehindu.com/news/national/karnataka/ban-valentines-day-celebrations/article33825628.ece

___________________________________________________


சனி, 13 பிப்ரவரி, 2021

அவள்!

அவளை மறக்க‌

இழுத்து இழுத்துப்புகைக்கும்

உன் சிகரெட் சாம்பலின்

கடைச்சித்துளி தானே

அவள்!

_______________________________

ருத்ரா

அந்த தீ ஒலிக்கிறது.

 




நாமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்

கி பி ரெண்டாயிரம் ஆண்டுகளாய்

நம் தமிழைத் தொலைத்துவிட்டோம் என்று.

அப்படி புலம்பினோம்

ஒரு பக்தி இலக்கியக்கடலில்.

அது பக்தி அல்ல.

அது ஒரு வித பயம் அல்லது

நமக்கு நாமே அச்சுறுத்திக்கொண்ட

ஒரு பூச்சண்டித்தனம்

என்று கண்டுபிடித்தோம்.

என் செய்வது தமிழா?

இன்றும் நம் தோளில் அந்த பூதம்.

இதைத்தான் காட்டுமிராண்டித்தனம் என்று

பகுத்தறிவின்

அந்த வேண்தேடி வேந்தன் 

அடித்து விரட்டச்சொல்லி

ஒரு கைத்தடி கொடுத்தான்.

தமிழா!

அந்த குடுமி வைத்த பூதம்

மந்திர உச்சரிப்புகள் பல சொல்லி

உன்னை மல்லாத்திக்கொண்டிருக்கிறதே.

"மல்"ஆண்ட பரம்பரை நீ

உன் தமிழின்

சொல் ஒலி இழந்து கிடப்ப‌தோ?

வீறு கொள்!

விழித்துக்கொள்!


___________________________________

ருத்ரா




புதன், 10 பிப்ரவரி, 2021

காதல் என்று.

 


காதல் என்று.

_______________________________ருத்ரா


இருளை விதைத்தும்

ஒளியே முளைக்கும்.

நிலவுகள் உழுது

கனவுகள் விளைச்சல்.

பிறப்புகளினுள்ளும்

இறப்புகள் பிறக்கும்.

பிரம்மங்கள் கிழியும்

சன்னல்கள் தெரியும்.

அதில்

அவள் புன்னகை

உதிக்கும்.

காதல் உதிர்த்த‌

பிரபஞ்சம் கோடி.

இதில் நீ

எந்த தூசியில் 

எந்த துளியில்

முளைத்தாய் 

காதல் என்று!


______________________

வியாழன், 4 பிப்ரவரி, 2021

eluthu ranking

 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

தமிழ் வெல்க!

 தமிழ் வெல்க!

_________________________________________ருத்ரா


ஒரு பூ பூக்கிற வழியில் கூட‌

இங்கு பூகம்பங்கள்.

புல் விரிப்புக்குள் படுத்துக்கிடக்கும்

சுநாமிகள்.

ஓட்டுப்பெட்டியை

கணிப்பொறி பிடுங்கிக்கொண்டது.

நம் விரல் தட்டலில்

நழுவி விடும் நம் கனவுகள்.

தேவன்களின் அரிதாரத்தில்

அசுரன்களின் அரியாதனங்கள்.

ஜனநாயகம் எனும் 

கானல் நீரில்

அரக்க நாயகத்தின் அதிரடி

நீச்சல் விளையாட்டுகள்.

தனியாய் ஒரு தமிழ் நாடு

மகுடம் சூட்டிக்கொண்டு

தலை காட்டுவதா?

கோரைப்பற்கள் நற நறக்கின்றன.

ராமா ராமா என்ற கூச்சல்களில்

மக்களின் உயிர்கள் கூளங்கள் ஆகின்றன.

இது என்ன கோரம்?

இன்னும் ஒரு சுதந்திர தாகத்துக்கு

உயிர்கள் கசக்கப்படும் நிகழ்வுகள் 

நம்மை சிதறடித்து விடுமா?

சமக்கிருதம் எனும் 

உச்சரிப்புகளின் நச்சரிப்புகளில்

நைந்து இங்கு வீழ்ந்து போவோம் நாம்

என்றா இந்த வீணர்கள் நினைத்தனர்?

இமயம் அல்ல அது!

தமிழன் "பொறித்த" வில்

விறைத்து நிற்பதே அது.

வெற்றியின் அம்பே நீ

உறைந்து விடாதே!

உயிர்த்தெழு!

தமிழே! எங்கள் உயிரே!

நீயே எங்களை ஆக்குகின்றாய்.

நீயே எங்களை காக்கின்றாய்.

ஒலிக்கின்றோம் கேள்.

தமிழ் வாழ்க!

தமிழ் வெல்க!


___________________________________


பீலி

 பீலி

_________________________________ருத்ரா


பீலிபெய்ச் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

எத்தனை வகுப்புகள்?

அந்த குறள் எனக்கு

பிடி படவே இல்லை!

ஆனால்

மெல்லிதினும் மெலிதான‌

உன் ஒரு பார்வையில்

என் அச்சு முறிந்து ஒரு

மாயமான ஆனால் இன்பமான‌

பாதாளத்தில் அல்லவா

வீழ்ந்து கிடக்கின்றேன்.

வள்ளுவன் சொன்ன சுமை புரிந்தது.

அந்த இன்பச்சுமை

ஆயிரம் உலகங்களின் 

கனபரிமாணம்!

__________________________________