வியாழன், 26 மே, 2022

முகத்தைத் துடைத்துக்கொள்.

 



முகத்தைத் துடைத்துக்கொள்.

__________________________________

ருத்ரா



முகத்தைத் துடைத்துக்கொள்.

மூக்கைச்சிந்தி அழுது முடித்து

முகம் கழுவிக்கொள்.

உன் புலம்பல்களே உன் கல்லறைகள்.

போதும்.

ஒப்பாரிகள்.

புன்னகைக் கதிர் வீசு.

உன் வெறிகளையெல்லாம்

வெட்டி முறித்து விடு.


மனிதன் கண்ட தொலைநோக்கி

ஆயிரம் ஒளியாண்டுக்கு அப்பாலும்

"ஈர்ப்பால்"

நடனம் ஆடிக்கொண்டிருக்கிற‌

இரு "கேலாக்சி" எனும்

விண் ஒளித்திரட்சிகளோடு

கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு

மடியில் வைத்துக்கொண்டு

விளையாடிக்கொண்டிருக்கிறது.

உன் கவலைகள் இப்போது

தூசியிலும் தூசு.

உன் மனக்குறைகள்

கரைந்து போய்விடுகின்ற‌

வெறும் குமிழிகள்.

இன்னும்

வெட்டுவேன் குத்துவேன் என்று

சாதி மதங்களை..

பிணக்கிடங்கின் அந்த‌

குப்பை கூளங்களை... 

கிளறிக்கொண்டிருக்கிறாய்.

இதையெல்லாம் அள்ளி

உன் ஓட்டுப்பெட்டிக்குள்

நிரப்பிக்கொண்டிருக்கிறாய்.

உன் பழைய‌

நூற்றாண்டுகள் எல்லாம்

முடை நாற்றம் வீசுவது

உனக்குத் தெரியவில்லையா?

இன்று

என்பது நேற்றைய பிணம்.

நாளை

என்பது பிறக்கவே முடியாத‌

ஒரு குழந்தை.

காலம் உன் விரல் நுனியில்

கரு தரிக்கிறது

செயலின் சூறாவளிகளாய்.

நிமிர்ந்து கொள்.

விழித்துக்கொள்.

அப்புறம் சிந்திக்கலாம் என்று

இப்போது நீ

பஜனை செய்து கொண்டிருந்தால்

உன் "அந்திமக்கிரியைகள்"மட்டுமே

உனக்கு

மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும்.

ஆம்.

மறுபடியும் அதே 

வலியுறுத்தல்கள் தான் உன்

வலிகளை எல்லாம் நீக்கும்.

"நிமிர்ந்து கொள்.

விழித்துக்கொள்"


_____________________________________________________

புதன், 25 மே, 2022

பிம்பங்களாக‌

 பிம்பங்களாக‌

‍‍‍‍‍‍________________________________

ருத்ரா



என் அருமை 

உடன்வரு பயணாளிகளே!

ஒரு வாழ்க்கையை நோக்கிய நம் பயணம்

இன்னும் ஒரு

நடவே படாத மைல்கல்லுக்கு அருகில்

நாம் மூச்சிரைத்து வரும்போது தான்

புரிகிறது

அது நம் "பிள்ளையார் சுழி" என்று.


தனி மனிதனாய்

தனித்தனி மத்தாப்பு கொளுத்திக்கொண்டு

நாம் வெளிச்சம் ஏற்படுத்தும் போதும்

நமக்கு புரிகிறது

அது கும்மிருட்டு தான்  என்று,


எல்லோருமாக‌

எல்லோருக்குமாக‌

பயணம் துவக்குவது

எந்நாளோ

அதுவே நம் திருநாள் 

எனும் பெருநாள்.


தனித்தனியாய்

மதமாக சாதியாக‌

நாம் சின்னாபின்னமாய்

ஆகும் போது

மனிதம் என்ற‌

உள்ளொளியே பட்டுப்போய் விடுகிறது.


எங்கோ ஏதோ 

ஒரு மைல் கல்லில் 

ஒரு மஞ்சத்துணியை 

சுற்றி வைத்து

அதற்குள்ளிருந்து

ஒரு சாமியைத்தோண்டி எடுத்து

சப்பரங்களும் தேர்களும்

உலவ விட்டு

இறுதியில்

நம் தடம் விட்டு

நம் இடம் விட்டு

நம் இனம் விட்டு

நம் மொழி விட்டு

நம்மை நாமே

யார் என்று கேட்டு விட்டு

அலைந்து குலைந்து போய்

நிற்கின்றோம்.


பாதை எங்கே?

பயணம் எங்கே?

என்று நாம் தேடும் முன்

மந்திர இரைச்சல்கள்

நம்மை 

வெறும் குப்பை கூளங்களாய்

வீதியில் எறிகின்றன.

அவை 

நம் வரலாற்றின் 

சுவடுகள் அழித்து

நம்மை பிம்பங்களாக்கி விட்டன.


அந்த நிழல்கள் பிசைந்து செய்த 

சட்டி பானைகளாக 

நாம் நொறுங்கிக்கிடக்கிறோம்.

அதனோடு 

நொறுங்கிக்கிடப்பது

நம் சரித்திரங்களும்  தான்.


_________________________________


செவ்வாய், 24 மே, 2022

இமிர் கருந்தும்பி

 இமிர் கருந்தும்பி 

-----------------------------------------------------------------------

சொற் கீரன்


குமிழப்  பரந்த  வெள்ளிடைத்   தீஞ்சுரம் 

குலாவ ப்பூஞ்சினை இமிர் கருந்தும்பி 

ஆலாடு விழுதின் செம்புல   மன்றில் 

புற்றம் ஆங்கொரு  குன்றம் செத்து 

நிழற்குடை கவித்த எழிலின் ஆட் சி 

இறையுண்ட சீர்மலி வேந்தின் அன்ன 

தமியள் அப்பால் ஒருதனி யிருந்தாள் 

தன்னை அங்கு தனியொளி  காட்டும் என்று. 

-------------------------------------------------------------------------------------------------


பொழிப்புரை 

----------------------------------------------------------சொற்கீரன்.

குமிழ மரங்கள் உடைய அந்த வெட்ட வெளியிடையேயும் 

அழகிய இனிமை செறிந்த காட்டுவழியொன்றில் வளைந்து 

வளைந்து அந்த மரத்தின் பூங்கிளைகள் உரசும்.அதன் மீது 

கரிய சிறு வண்டுகள் ஒலியெழுப்பும்.ஆல மர  விழுதுகள் 

ஆடும் ஒரு செம்புலத்து மேட்டில் குன்றம் போல் ஒரு புற்று 

உயர்ந்து நிற்கிறது.அந்த அடர்ந்த காட்டின் நிழல்  ஒரு  குடைபோல் 

கவிந்து ஒரு வெண்கொற்றக்குடையாய்  அந்த அழகின் ஆட்சியை 

நடத்துகிறது.ஆனால் அந்த அழகு கோலோச்சும் திறனுக்கும் திரை 

(கப்பம்) செலுத்தப்பட்டு பெறும் ஒரு அரசன் போல் அவள் (தலைவி)

அங்கு வீற்றிருக்கிறாள்.ஒரு தனி சிறப்புடன் அவள் அங்கு அமர்ந்திருக்கிறாள்.

தனது தலைவன்  (தன் + ஐ =தன்னை) அங்கு வந்திடுவான்.அவன் வந்தவுடன் 

அவனது முகம் பூக்கும் பேரொளி அங்கு பரவி நிற்கும் என்று அவள்  மகிழ்கிறாள்.

----------------------------------------------------------------------------------------------------------------






ஞாயிறு, 22 மே, 2022

மனிதா!

 மனிதா!

_____________________________________‍

ருத்ரா



மனிதா!

உன் மீது படிந்த 

ப‌ழம்பெரும் நூற்றாண்டுகளில்

நீ

அந்த‌ அந்துப்பூச்சிகளால் 

தின்னப்பட்டுக்கொண்டிருந்தாயே .

உன் இனத்தை கூறு பிரித்து

இவர்கள் 

வர்ணம் பூசி வன்மம் தீட்டும் 

வகையினை அறியாமல் 

நீ சுருண்டு கிடந்தாயே.

உன்னைப்போலவே

பசி தாகம் எடுத்தவர்ளும்

மல ஜல ஆபாசம் கொண்டவர்களும் தானே

இவர்களும்.

எப்படி இவர்கள் மட்டும்

கடவுளின் விந்து புத்திரர்கள் ஆனார்கள்?

இவர்களும் 

இறப்பின் இறுதிக்கொள்ளியில்

அல்லது

மண் குழிகளில்

மறைந்து தானே போகிறார்கள்.

இந்த கடவுள் புத்திரர்களுக்கும்

சுடுகாடும் இடுகாடும் தானே

எல்லைக்கோடுகள்.

இவர்களையே 

கடவுளர்களாய்  எண்ணி 

இவர்கள் கால்கள் நசுக்கும்

புழுக்களாய் நீங்கள்

தேய்க்கப்படுவதன் அநியாயங்கள்

உங்களுக்கு புரிவதே இல்லையே

அது ஏன்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

கடவுள் எனும் 

சூழ்ச்சி தான் உங்களை 

மண் மூடிப்போக‌

மந்திரங்களில் கூச்சல் இடுகிறது.

உங்களை கூறு போட்டு

உங்களை உங்களாலேயே

கசாப்பு செய்யவே 

இந்த சாதி சமயக்

கடவுள் பூச்சாண்டிகள்.

இந்தக் கரையான்கள் தின்றது போதும்.

எரி மலையாய் சுழன்று எரி!

பொய்மைச்சடங்குகளை 

சாம்பலாய் பொசுக்கி எழு!

மனிதக் கல்லறைகளைக் கொண்டு

பளிங்குக்கோயில் கட்டும் இந்த‌

பாசாங்குகாரர்களின்

பசப்பல்களை

அடித்து நொறுக்கு.

அலைகளாய் கிளர்ந்து வா!

அடிமைக்கரைகளை

அழித்து நீ

பொங்கி எழுந்து வா!

உன் கால் இடறல்களில்

புது யுகங்கள் முளைக்கட்டும்.

வாழ்க மனிதம்!

வெல்க மனிதம்!


________________________________________________


சனி, 21 மே, 2022

புளித்த ஏப்பம்

 புளித்த ஏப்பம் 


-----------------------------------------‍‍‍‍

ருத்ரா




தூணிலும் இருப்பான்


துரும்பிலும் இருப்பான்


எதில் இருக்கவேண்டுமோ


அதில் இருக்க மாட்டான்.




அவனன்றி ஓரணுவும் அசையாது


அசைகின்ற அணுவிலோ


அவன்


இல்லவே இல்லை.




ஆயிரம் ஆண்டுகளாய்


மார் தட்டிக்கொள்கிறோம்


"தமஸோ மாம் ஜ்யோதிர் கமய"


ஆனால்


மின்சாரம் மிலேச்சன் தான் 


கண்டுபிடித்தான்.




புளி போட்டு புளி போட்டு


விளக்கி


பளிச்சென்று ஆக்கியதாய்


அதே பொய்மையை 


பெருமை பேசினான்


"ஆத்மீகம்" என்று.





"பெல்  ஷேப்பெடு நார்மல்  கர்வ்"


என்று 


மேலை நாட்டான்


"ப்ராபபிலிட்டி"யை 


படம் வரைந்தான்.


நாம் அதை லிங்கம் என்று 


குங்குமம் வைத்தோம் .


இன்றும் 


அதன் கும்பமேளாவில் 


கங்கைகளையெல்லாம் 


சாக்கடையாக்கிக்கொண்டிருக்கிறோம்.



புத்தி கெட்ட பயல்களா!


அரசியல் சட்டம் எழுத பேனா


எதற்கு?


மாற்று மத வழிபாட்டுக் 


கட்டிடங்களை 


இடித்து நொறுக்கும் இந்த‌


கடப்பாரைகளே போதும்.




--------------------------------------------------------------------------






என் தம்பி செங்கோடி!

என்  தம்பி செங்கோடி!

_____________________________________


நம்பிக்கையை
நங்கூரம் பாய்ச்சியவன் அல்லவா நீ.
வாழ்க்கையின் அலைகள்
உன்னை அசைத்துப்பார்த்தும்
தளர்வு அடையாமல் வெற்றிகளோடு
வானத்தையும் இடித்துக்கொண்டு
நிமிர்ந்து நடைபோடும்
உயரம் அல்லவா நீ.
ஏதோ ஒரு ஊசிமுனை இடைவெளியை
எடுத்துக்கொண்டு
உன்னை
விருந்து உண்ட கொடிய அரக்கன் 
கொரானா.
தம்பி..
நம் கல்லிடைக்குறிச்சியில்
எனக்கு நீ தான்
அந்த சேரன் செங்குட்டுவன்.
அவனோ இமயம் ஏறி
கொடி நட்டான்.
நீயோ முயற்சிகளின் இமயத்தை
உன் விரலிடுக்கில் தானே
எப்போதும் வைத்திருந்தாய்.
தாமிரபரணியில் போய்
குளிக்க நினைத்தால்
உன்னோடு குளித்து விளையாடிய‌
அந்த தடங்கள்
இப்போதும்
சஹாராவாய் சுடுகின்றனவே.
உன் நினைவு மட்டுமே
என்னுள் ஒரு சட்டம் மாட்டிய‌
புகைப்படத்தை
நம் குடும்பத்துச்சித்திரமாய்
நிழல் காட்டிக்கொண்டிருக்கிறது.

_________________________________

இப்படிக்கு
உன் அன்புள்ள அண்ணன்
இ.பரமசிவன் குடும்பத்தினர்.
மதுரை 625007
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________
15.05.2022

வெள்ளி, 20 மே, 2022

மகத்தான மனிதன்

 மகத்தான மனிதன் 


"என் பெயரைச்சொல்லி

உன்னையும் துண்டு துண்டாக்கி

வெட்டி வீசியிருப்பார்களே!

நல்லவேளை நீதி உன்னை 

காத்து விட்டது.

நீதியின் புதல்வனே உனக்கு

என் வாழ்த்துக்கள் "

என்று அந்த மகத்தான மனிதன்

ராஜிவ் காந்தி

ஆரத்தழுவியிருப்பார்

பேரறிவாளனை.

_____________________________ருத்ரா

தமிழே! தமிழே!

 தமிழே! தமிழே!

--------------------------------------------------------------


மண்ணை அகழ்ந்து

கல்லைச்சுரண்டி

கண்டு பிடித்தீர்கள்

சிவலிங்கம் என்று.

உங்கள்

மதம் என்று

வானத்துக்கும் பூமிக்குமாய்

குதிக்கிறீர்களே!

அதற்கு கீழும் 

சிந்துவெளி சித்திரம் 

சொல்கிறது

அந்த சிவன் தமிழன் என்று.

இந்த மண்ணின்

அடி எலும்புக்குள்ளும்

நரம்புக்குள்ளும்

ஒலிப்பது எங்கள்

தமிழே! தமிழே!

தமிழே தான்!


_______________________________ருத்ரா




மெலி இணர் நவிரல் ஒள் வீ சிதற

 மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 


--------------------------------கல்லிடை  சொற்கீரன்.




மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 


வான் அதிர் உடுக்கள் வெள் நிலம் 


வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து 


வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு 


நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய்.


வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு  


மீள்வழி நோக்கி வானப்பரவை 


உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள் 


எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் .


அதனை அழித்திட வருவான் என்னே.


கலங்கல் மன்னே.காலையும் விரியும்.


---------------------------------------------------------



பொழிப்புரை 


-------------------------------------------------------


மெல்லிய பூங்கொத்து உடைய முருஙகை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது வானிலிருந்து விண்மீன்கள்  உதிர்ந்து  வெறும்   தரையில் கிடந்து கண்களைப்போல உன்னை வியந்து வியந்து பார்க்கின்றன. மணிகள் நிறைந்த அணிகலன்கள்  அணிந்த தலைவியே! உன் தலைவன் திரும்பி வரும் அந்த நெடிய  வழியை நீ காத்துக்கிடக்கும் காலத்தின் நீள்வாய்க் காண்கின்றாய்..வெயில் தகிக்கின்ற பாறைகள் நிறைந்த கடப்பதற்கு அரிய  பாதையைக்கடக்கும் உன் தலைவன் திரும்பி வருவதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாய்.பரந்த அந்த வானம் உன் கூரிய அம்பு விழி பட்டு பட்டு புண்ணான அந்த வடுக்களை ஒவ்வொன்றாய் புள்ளியிட்டு எண்ணிக் கொண்டிருக்கிறாய். அதை அழித்து விட உன் தலைவன் அந்த விடியல் வேளையில் வந்திடுவான்.

ஏன் கலங்குகிறாய்? கலங்காதே.


தவிக்கும் தலைவியின் எதிர்பார்ப்பை சங்கத்தமிழ் நடை செய்யுட்கவிதையாக்கி  நான் எழுதியுள்ளேன்..


---------------------------------------------------------------------கல்லிடை  சொற்கீரன்.

புதன், 18 மே, 2022

பேரறிவாளன் விடுதலை.

 


பேரறிவாளன் விடுதலை.

________________________________ருத்ரா


யார் சொன்னது

அந்த உச்ச பட்ச 

மரச்சுத்தியல்கள்

மரத்துப்போனது என்று?

நம் ஜனநாயகத்தின் 

இதயம் கூட இதில் தான்

என்று

உரத்து தட்டிக்காட்டி விட்டது.


___________________________________________

செவ்வாய், 17 மே, 2022

"ஹில்பெர்ட்வெளி"

 "ஹில்பெர்ட்வெளி"

--------------------------------------------------------------

ருத்ரா 


"நேரியல் நுண்கணிதமும்" (லீனியர் அல்ஜீப்ரா) "பகு-தொகு கணிதமும்"  (கால்குலஸ்) வரையறுத்த பரிமாணங்களையுடைய ஈக்குலீடியன் "திசைய வெளிகளிலிருந்து "வரையறையற்ற அல்லது எல்லையற்ற" பரிமாணங்களுடைய வெளிக்கு உருமாறும் ஒரு "இடநிலையியல் வெளி "(டோபாலஜிக்கல் ஸ்பேஸ்) தான் இங்கு "ஹில்பெர்ட் ஸ்பேஸ்" ஆக பார்க்கப்படுகிறது.இதுவும் ஒரு திசைய வெளியே.இதில் ஒரு சிறப்பு கணிதம் உட்படுத்தப்படுகிறது.இந்த திசைய வெளியில்  உட்கூறுகளின் பெருக்கல் (இன்னர் ப்ராடக்ட்) ஒரு முக்கிய செயல் ஆற்றுகிறது.அது ஒரு "தூரவியல் இயங்கியம்" தான்.(டிஸ்டன்ஸ் ஃ பங்க்ஷன்).இதில் "முழு தூரவியல் வெளி"(கம்ப்ளீட் மெட்ரிக் ஸ்பேஸ்)யின் நுண் கணிதம் பங்கேற்கிறது. இவற்றை யெல்லாம் அக்கு வேறாய் ஆணிவேறாய் அணுகி அப்புறம் ஒன்றாய் கூட்டி செயல்புரிவது பற்றி அறிவதே "கோட்பாட்டு இயற்பியல்"(தியரிடிகல்ஃபிசிக்ஸ்) ஆகும்.    இதனுள்ளும் "பகுதி பகுப்பயமும் " (பார்ஷியல் டிஃபரன்ஷியல் ஈக்குவேஷன்ஸ்)  ஃ பூரியர் அனாலிசிஸ் ம் (ஃ பூரியர் பகுப்பு இயலும்) கோர்க்கப்பட்டு  குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆராயப்படுகிறது. இந்த மொத்த கணித வெளி "ஹில்பெர்ட் ஸ்பேஸ்" என்று புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் "ஜான் வான் நியூமன்" அவர்களால் அழைக்கப்படுகிறது.இதை நிறுவியவர் "டேவிட் ஹில்பெர்ட்". இன்னும்  கொஞ்சம் விரிவாய் பார்க்கலாம்.

குவாண்டம் இயக்கவியல் என்பது ஆற்றலின் உந்துவிசையையும் (மோமெண்டம் ) அந்த ஆற்றல் துகள் இருப்பிடத்தையும் (பொசிஷன்) கணக்கிட்டு "அளவிடுவது" ஆகும்.எனவே குவாண்டம்  நம் தூயத்தமிழில் "அளபடை" என அழைக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.இப்பொது நகரச்சியியல் (டைனாமிக்ஸ்) என்பதும் அந்த அளபடை இயக்கவியல் பற்றி குறிப்பிடுவது தான்.துகளின் நகர்ச்சி எனும் போது அது ஒரு "வெளியில்"தான் இயங்குகிறது என நாம் அறிவோம்."வெளி" என்பதும் ஒரு கணிதத்துக்குள் தான் வருகிறது.அது என்ன கணிதம் ? அதுவே நவீன கணித வரிசையில் இடம்பெற்றிருக்கும் "இடநிலை இயல்" (டோபாலஜி) கணிதம் ஆகும். எனவே நாம் மேலே பார்த்த "வெளி" என்பது ஒரு "இடநிலை இயல் வெளி"ஆகும்.(டோபாலாஜிகல் ஸ்பேஸ்).நமக்குத் தேவையான இந்த அளபடை  வெளியை (குவாண்டம் ஸ்பேஸ்) எப்படி பிடித்துக்கொண்டு வருவது? முதலில் குவாண்டம் பற்றிய "ஸ்க்ரோடிங்கர் சமன்பாடு" என்பதன்  உள் கூடு (என்செம்பிள்) என்ன என்பதை அறியவேண்டும். அது ஆற்றலின் "அலை இயக்கவியலை"(வேவ் மெக்கானிக்ஸ்) பற்றித்தான் "சமன்பாடு"ஆக்கியிருக்கிறது.அலை ஏற்றம் இறக்கம் போன்ற "வெளிகள்"இங்கு ஒரு வகையில் "ஹில்பெர்ட் வெளிகளே" ஆகும். இந்த வெளிகளுக்குள் புகுந்து அறிவியல் பயணம் செய்வது ஒரு சுவையான நிகழ்வு ஆகும்.

----------------------------------------------------------------------------------------------------------------

"

சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌

 

சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌

------------------------------------------------------------------சொற்கீரன் 


குளித்து மணற்கொண்ட கல்லா இளமை

புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி

சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால்

தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும்

பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும்.

திணிமணற் பாவை உருகெழு கையின்

தேன்படு சிதரினும் பலவே பலவே.

சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌

பிஞ்சுவயதின் பூஞ்சினைக்  கையள்

குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய‌

வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய‌

நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே .


-----------------------------------------------------------------------------


வாய்க்காலில் குளிக்கும்  போது ஆழமாய் 

முக்குளி போட்டு கையில் மண் எடுத்து மேலே வருவது 

ஒரு களிப்பு தரும் விளையாட்டு.இந்த சங்கத்தமிழ் 

விளையாட்டு இன்றும் நம் ஆற்றங்கரை நாகரிகத்தின் 

எச்சமாய் நம் ஊர்களில் காணப்படுகிறது.அப்படி ஒரு சிறுவன் 

ஒரு சிறு வெண்கல்லை எடுத்து தன் தோழிக்கு காட்டுகிறான்.

அதைக்கண்ட அவளிடம் தோன்றும் அந்த  வெள்ளைசிரிப்பே 

அவன் உள்ளம் முழுதும் பூத்து படர்கிறது.

இது நான் எழுதிய சங்கநடைசெய்யுட் கவிதை.

-------------------------------------------------------------------சொற்கீரன் 




வெள்ளி, 13 மே, 2022

பலூன்பூதம்.

 மொத்தப்பொருளாதாரத்தை

மூணு சீட்டு ஆட்டம் ஆக்குவதே

பங்கு மூலதனப்பொருளாதாரம்.

பங்குவிலை என்பது

ஒரு பலூன்பூதம்.

இது வெடிக்கும் போது

பொருளாதார மந்தம் என்று

எல்லாம் படுத்துக்கொண்டு விடும்.

இந்த கணினி யுகத்தில்

கணினியால் அறிவுத்திறன்

மேலோங்கியிருந்த போதும்

"ஆன் லைன் ரம்மி"

எனும் 

சோம பான சூதாட்டம்

நம் சமுதாயத்தை

பார்வையற்ற குருடர்களாய்

தடவ விட்டுக்கொண்டிருப்பதைப்பார்க்கிறோம்.

கம்பெனிகளின் வளர்ச்சி

இந்த சூதாட்ட பணக்குவியலை

வைத்துக்கொண்டு

கண்ணாடி க்கட்டிடங்களை

பல அடுக்கில் கட்டி

மயக்கம் உண்டாக்குகிற‌து.

நல்லபாம்பின் படம் எவ்வளவு அழகு

என்று நமக்குத்தெரியும்.

மனித உழைப்பு 

மனித அறிவின் செழிப்பு

எல்லாம்

ஒரு கானல்நீர்க்கடலில்

கரைந்து கரைந்து

ஒரு "ஹேலுசினேஷன்"பொருளாதாரத்தை

சினிமா காட்டிக்கொண்டிருக்கிறது.


‍‍‍‍‍____________________________________ருத்ரா

வியாழன், 12 மே, 2022

சூரியோதயங்கள்.

 

சூரியோதயங்கள்.

-------------------------------------------------------ருத்ரா 


டாக்டர் ஜோசஃப் மர்பி எனும்

அறிஞரின் "விண்குழல்" உரை ஒன்றை 

தமிழில் கேட்டேன்.

"ஆழ்மனது"பற்றி

நீண்டதொரு சொல்லருவி அது.

மனிதனுக்குள்

இன்னொரு மனிதனை

தோண்டியெடுத்து

அதற்கு கடவுள் முலாம் பூசுவதாகத்தான்

அது இருந்தது.

ஒன்று எல்லோராலும் கவனிக்கத்தக்கது.

உடலை வளைத்து நெளித்து

முறுக்கிப்பிழிந்து 

யோகா என்று சொல்லி

"ரப்பர் ஷீட் ஜியாமெட்ரி"

எனும் டோபாலஜி கணிதத்தை

கடா முடா மொழியில் செய்வது போல்

மனித மனத்தையும்

ஜிம்னாஸ்டிக் வளைவு நெளிவுகள் கொண்டு

அறிய முயலும் பயிற்சியே

அவரது சொற்பொழிவு.

தனி மனித லாபம் ஒன்றையே

நேர்கோட்டு நம்பிக்கை எனும்

பாசிடிவ் திங்கிங் ஆக பசப்பும் வேலையே

இந்த "ஆன்மீகம்" எனும் அத்துமீறல்.

இது சமுதாயப்பார்வையையே

எதிர்மறைப்பார்வை என்று

புறம் தள்ளுகிறது.

சாக்கடையை வடிகட்டி

அதை விட மோசமான சாக்கடையை

ஏந்தி பருகச்சொல்வதே

இந்த அறிவற்ற அறிவுப்பரிமாணம் ஆகும்.

சாதியும் மதமும் சம்பிரதாய சடங்குகளும்

நம் உயிர்ப்பான‌

ரத்த ஓட்டத்தை 

சாக்கடையின் தேக்கத்துள்

தேக்கத்தூண்டுவதே இந்த‌

பாசிடிவ் பிறாண்டல் நோய் தான்.

நம்பிக்கை 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌

பொய்மையின் படுகுழியை

வெட்டிக்கொண்டே இருக்கிறது.

நம்பிக்கை -அவநம்பிக்கை என்று 

ஒரு மையக்கயிறு இல்லாமலேயே 

இந்த "கயிற்று இழுப்புப்"  போட்டியை 

நடத்திக்கொண்டேயி ருக்கிறது.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம்

என்பார்கள்

நாணயமே இல்லாத ஒரு நாணயத்தின் 

விளையாட்டு இது.

இதுவம் ஒரு பொய்யின் வடிவம் தான்.

இரண்டு பரிமாணமான நீளம்  அகலம் என்பவற்றின் 

"ஒரு பக்கம்"

எப்போதும்  "ஒரு பக்கமே"தான்.

அதன் மறு பக்கம் என்று பேசுவது 

இரண்டு பக்கங்களுக்கும் இடையே உள்ள 

ஒரு மர்மமான "கன பரிமாணத்தையும்"

சேர்த்து 

மூன்று பரிமாணம் ஆக்கி விடுவதை 

நாம் அறிவதில்லை.

இந்த பிரபஞ்சம் இப்படித்தான் 

ஒன்று 

இரண்டு 

மூன்று 

நான்கு 

ஐந்து 

ஆறு 

பத்து 

பதினொன்று 

இருபத்திநான்கு 

என்று சுட்டி மடக்கி வைக்கப்பட்ட 

பரிமாணங்களில் 

அதாவது "கர்லடு அப் டைமன்ஷன்ஸ் "

தோற்றம் தருகிறது.

நம் நம்பிக்கையும் அப்படியே.

அவநம்பிக்கைகள் சுருட்டி மடக்கி 

வைக்கப்பட்ட 

நம்பிக்கையே நம் வாழ்க்கை.

மாறி மாறி 

நம் முதுகு  சொரிந்து கொள்வது போல் தான் 

கடவுள் என்றும் சைத்தான் என்றும் 

நாம் புலம்பிக்கொண்டிருப்பது.

சிந்தனை தெளிவு ஒன்றே 

தினம் தினம் நம் முன் தோன்றும் 

சூரியோதயங்கள் !


--------------------------------------------------------------------------------------------------

!




செவ்வாய், 10 மே, 2022

என்ன இந்த ஐந்து பரிமாணம்?.....(1)

 என்ன இந்த ஐந்து பரிமாணம்?

------------------------------------------------------------------ருத்ரா 


காரணவியல் (காசாலிட்டி )என்னும் கோட்பாடு ஐன்ஸ்டினின் பொதுசார்பு (ஜெனரல் ரிலேட்டிவிட்டி ) கோட்பாட்டுக்கு மிக மிக அடிப்படையானது. நுண்ணய அளவில் உற்று நோக்கும் போது அவரது "காலவெளியின்" தூர   வியல்  அல்லது நீளவியல் (மெட்ரிக்) என்பது சமப்படுத்தப்பட்ட வெளியாக (ஸ்மூத் ) இருக்காது.மேலே குறிப்பிட்ட காரணவியல் கூறுபாடுகள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு வெளியைத்தான் (வைல்டு பிளக்சுவேஷன்ஸ் ) காட்டி நிற்கும்.ஏனெனில் அந்த காலவெளியை ஒரு தட்டையான பலகை போன்ற வெளியில் காட்டமுடியாது.அந்த காலவெளிச்சமன்பாடு ஒரு குழைவு வெளியில் (மேனி ஃபோல்டு) பதிக்கப்பட்டது போல் (எம்பெட்டட் ) அமைக்கப்பட்டுள்ளது.இது காலவெளித் தூரவியலின் மற்றும் அதன் காரணவியலின்  ஏறக்குறைய சமப்படுத்தப்பட்ட (அப்ராக்சிமேட்டிங் ) வெளி ஆகும். இதை ஒரு கணிதசமன்பாட்டியலில் கூறுவதென்றால் "கோர்ஸ் க்ரெய்னிங்" அதாவது "பருக்கை பரப்பல்"ஆகும். அது என்ன?

ஐன்ஸ்டின் சமன்பாடு நான்கு பரிமாண காலவெளி ஆகும்.இந்த அடிப்படையில் உள்ள அவரது "ஈர்ப்பு புல சமன்பாடு"  (கிராவிடேஷன் ஃபீல்டு ஈக்குவேஷன்) வல்லுர்கள் ஒத்துக்கொள்ளும் படி முழுமை அடையவில்லை. ஈர்ப்பின் அளபெடை எனும் குவாண்டம் கிராவிடி இங்கு இழையாமல் முரணுகிறது. இதனால் அடிப்படையான அந்த எல்லா ஆற்றல்களும் (நான்கு ஆற்றல்கள்) அந்த "பெரும்பேரொன்றியத்தில்"(க்ரேட் அண்ட்  க்ராண்ட் யுனிஃ பிகேஷன்) இழைய முடியவில்லை.இதை தீர்ப்பதற்கு ஒரு புதிய சமன்பாடு கண்டவர்கள் "காலூஸா -கிளீன்" ஆகிய இருவர் ஆவர். என்ன இந்த ஐந்து பரிமாணம்?


-----------------------------------------------------------------------------------------------------------------


வியாழன், 5 மே, 2022

பல்லக்குகள்

 


பல்லக்குகள்


_____________________________ருத்ரா




மனிதன் மீது மனிதன் 


பச்சைக்குதிரை ஏறி விளையாடும்


விளையாட்டு தானே இது


என்று


பக்தி ரசம் காட்டும்


இந்த கூட்டங்கள்


மனிதர்களுக்குள் மனிதர்கள்


இப்படி "பிழைப்பு வாதம்"


கொள்ளும் மரபு உடைந்தால்


"எங்கள் மனம் புண்படும்"


என்று கூச்சல் போடும்


ஒரு கீறல் விழுந்த ரிக்கார்டு 


வைத்திருக்கிறார்கள்.


மனித உரிமையின் முதுகெலும்பை


முறித்துப்போட்டு விட்டு


இந்த பாசாங்கு காட்டும் தந்திரத்தில்


நீதி மன்றத்துத் தராசுகளைக்கூட‌


தங்கள் விரல்பிடிக்குள் பிடித்து


வைத்திருக்கிறார்கள்.


ஆயிரம் ஆண்டுகளாய் 


இந்த அடிமை வாதத்தில் ஏறி 


பயணம் செய்யும் 


இந்த ஆதிக்க வெறியினால்


வீழ்ந்து கிடக்கும்


தமிழே!தமிழ் உணர்வே!


இது வெறும் பல்லக்கு விளையாட்டு 


இல்லையடா தமிழா!


வேத ஒலிகளின் எச்சில்களுக்குள்


தமிழ்


விலங்கு பூட்டிக்கிடக்கவேண்டும்


என்ற சூழ்ச்சிதானடா இது!


தமிழ் என்றால்

 

அமுது என்ற பெயர் மட்டும்


இல்லையடா! தமிழா!


மனிதம் என்பதன் "ஓர்மையும்"


தமிழ் தானடா!


உன் அந்த உணர்வு மரத்துப்போனதால்


மந்திரக்காடுகளில் 


நீ சிக்கிக்கிடக்கிறாய்.


உன் "மரப்பு"களின் நோயை வைத்து


"மரபு" விளையாட்டு விளையாடும்


இந்த குள்ளநரிகளை 


நீ விரட்டியடிப்பதே


உன் இன்றைய "புற நானூற்றுத்தமிழ்"


என்று


புரிந்து கொள்ளடா தமிழா!


சைவத்தை வைணவமும் 


வைணவத்தை சைவமும்


பல்லக்குத்தூக்கிக்கொள்ளட்டும்.


உன் அறிவும் ஆற்றலும்


உனை உயர்த்திச்செல்லும் 


பயணம் தொடரடா! தமிழா!


பயணம் இன்றே தொடர்!


_________________________________________________

புதன், 4 மே, 2022

ஒரு "சொல்"ஹைக்கூ.

 


ஒரு முழுத்திரைப்படத்தை 

ஒரு ஹைக்கூ ஆக எடுத்திருக்கிறார்.

அதற்கும் மூன்று வரிகள் தேவை.

இது ஒரு புதுமையான‌

ஒரு "சொல்"ஹைக்கூ.

அது எப்படி?

இரவின் நிழல் 

என்பது இரு சொல் அல்லவா

என்கிறீர்களா?

இரவு என்பதும் நிழல்

நிழல் என்பதும் இரவு.

மனிதம் என்ற ஒரு சொல்லில் 

மொத்தப்பிரபஞ்சத்தின்

"முட்டிக்கொண்டு நிற்கின்ற"

உயிர்த்துளி அல்லது 

ஒளி எனும் இருட்துளியாக‌

ஒரு புது இலக்கணத்தை இலக்கியமாய்

சொல்லலாம்.

அப்படி ஒரு

"ஒரு பொருட்பன்மொழி" இலக்கணத்தை

திரையில் புதுமையாக எழுதியிருக்கும்

"தொல்காப்பியன்" இந்த பார்த்திபன்

என்ற ஒரு சாதனையை 

கையில் வைத்துக்கொண்டு 

முறுவலித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் வெற்றிக்கு 

நம் பாராட்டுகள்!

______________________________கவிஞர் ருத்ரா

செவ்வாய், 3 மே, 2022

ஒரு விளிம்பு.

 

ஒரு விளிம்பு.

--------------------------------------------------------


2024..

இது ஏதோ வறட்டு எண் அல்ல.

இப்போ என்ன அதுக்கு?

கணினியின் பட்டனை

ஒரு நியூமராலஜி விளையாட்டுக்கு

பயன்படுத்திக்கொள்ளலாம்

அப்புறம்

என்று 

கொட்டாவி விடுபவர்களும்

சோம்பல் முறிப்பவர்களும்

கொஞ்சம் சிந்தியுங்கள்.

நீங்கள் படுத்திருப்பது

ஒரு விளிம்பு.

விழுந்தால்

மண்டை சிதறி 

இனி மேல் யோசிப்பதற்கே

இடமில்லை.

ஜனநாயகம் பற்றி 

ஆழமாய் கூர்மையாய் 

சிந்திப்பவர்களுக்குக் கூட‌

இங்கே இருக்க ஒரு அங்குல இடம் கூட‌

இல்லை.

எதிர்க்குரல் முணு முணுக்கும் 

இந்த தேசம் முழுதுமே

கழுத்தில் போர்டு தொங்கவிடப்பட்டு

அனாதையாய் திரிகிறது

"தேச விரோதி" என்று.

2024 என்றால் என்ன என்று

இப்போதாவது 

புரிந்து கொள்ளுங்கள்.

"மாட்டுக்கொட்டில்கள்"கட்ட‌

லட்சம் கோடிகளுக்கு டெண்டர் தயார்.

ஆனால் அது மாடுகளுக்கு அல்ல.

உங்களுக்கே தான்!

____________________________________________________

ருத்ரா 

ஞாயிறு, 1 மே, 2022

பீலி பெய் நடு கல்

 

 பீலி பெய் நடு கல்

_____________________________________________சொற்கீரன்


மண்காத்து தன் உயிர் நீத்தவர்

பீலிபெய் நடுகல் கண் வரிய தந்தவை

பேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறுமோ?

மறை மொழி மிழற்றும் வெறுமையின் ஓதை.

பிறப்பும் இறப்பும் அடுக்கியது  ஊழே.

இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்

சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்

கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌

பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்கு

உள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே.


____________________________________‍‍‍‍‍‍‍‍‍______


01.05.22 அன்று பகல் 2.40 மணியில்

நான் எழுதிய சங்கநடைச் செய்யுட்கவிதை இது.


விளக்க உரை

_____________________________________________சொற்கீரன்


தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி

மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் வரிகள்

வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளைக் கூறுமோ?

மந்திரச்சொற்களின் ஓசைகள் வெற்று ஒலிகளே ஆகும். 

பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் வருவதே விதி என்பர்.

இப்போது நம்மிடம் இருக்கும் நடப்பு வாழ்க்கை பற்றி 

சுள்ளென்று அந்த சூரியன் சூடு காட்டி சொல்லிச்செல்லும் 

உண்மையை உணராதவர்கள் ஒரு அச்சத்தில் தோய்ந்து கிடப்பார்கள்.

சுனையின் நடுவே நீரின் நிழலை பனை நுங்கின் கண்ணீர் 

என மயங்கி வாடுபவர் போல் வெறும் புனைகதைகளின் 

பால் பட்டு கலங்கித்துன்புறுவர்.

________________________________________சொற்கீரன்.