வியாழன், 11 ஜூலை, 2024

அடையாளங்கள்

 அடையாளங்கள்

_______________________________



உலகத்தின் 

எல்லாமொழிகளும்

முதலில் 

சுவைத்து சுவைத்து 

சாப்பிட்டது

ஒலிகளைத்தான்.

அந்த சிக்கி முக்கிக்கல்

தன் முதல் தீப்பொறியை

உமிழ்ந்த போது

மனிதனுக்கு

நரம்புக்குள் எல்லாம்

அக்கினியின் தேன் தான்.

வானம் இனித்தது.

சூரியன் அவனை முத்தமிட்டது.

பறவைகள் சிறகடித்து சிறகடித்து

விண்வெளியின்

பூட்டை உடைத்துக்காட்டியது.

ஓடையில் தன் உருவத்தைக்கண்டு

முதலில் திடுக்கிட்டான்.

அப்புறம் 

ஆண்பால் பெண்பால்

அவற்றுக்கு இடையே 

கொதித்துக்குமிழியிட்ட‌

தீயின் பால்..

எல்லாம் திரண்ட‌

முதல் பாற்கடல்

அவன் அமிழ்ந்தது.

அவன் அளைந்தது.

அவன்

அவளையும் தொட்டது...

எல்லாம் அவனுக்கு

துலங்கியது தெளிவாகியது.

இப்போது தான்

அருகே அதுவும் வந்து

உட்கார்ந்து கொண்டது.

பிம்பங்கள் கலந்து கொண்டன.

அதில் எது

கடவுள் ஆனது?

எதற்கும் எதுவும் இன்னும்

நுழை படவில்லை.

இப்போது உச்சிக்கு வந்து

விட்டான்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியாய்

எல்லாம் அளைந்து துழாவிக்

கொண்டிருக்கிறான்.

அந்த பட்டாம்பூச்சி கேலக்ஸியை

அதன் நெருப்புச்சிறகுகளில்

தன் அறிவுத்தூரிகை கொண்டு

இன்னும் இன்னும் இன்னும்

அடையாளங்களைத் தேடி 

ஓவியம் தீட்டிக்கொண்டேயிருக்கிறான்.


____________________________________________

கல்லாடன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக