வியாழன், 20 ஜூலை, 2017

அறிவுஜீவிகள்

அறிவுஜீவிகள்
===============================================ருத்ரா

அறிவு ஜீவி (1)

ஸ்டார் ஓட்டல்கள் என்பது நம் நாட்டுக்கலாச்சாரத்தைக்காட்டும் கண்ணாடி.

அறிவு ஜீவி (2)

அப்படியென்றால் ஒரு சிறந்த ஸ்டார் ஓட்டல் எங்கே இருக்கிறது என்று
சொல்ல முடியுமா?

அறிவு ஜீவி (1)

ஓ! அதற்கென்ன! சகல வசதிகளுடன் இருக்கும்... பரபரப்பாக பேசப்படும்
ஒரே சிறந்த ஸ்டார் ஓட்டல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் தான்
இருக்கிறது என்று சொல்கிறார்கள்


=======================================================
நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.

செவ்வாய், 18 ஜூலை, 2017

நகைச்சுவை (32)


நகைச்சுவை (32)
============================================ருத்ரா

செந்தில்

அண்ணே...நம்ம கமல்....

கவுண்டமணி

என்னடா சொல்லப்போறே...வயத்தக் கலக்குதடா..

செந்தில்

அவர் இல்லீங்க...அண்ணே

கவுண்டமணி

என்னடா நொண்ணே...சீக்கிரம் சொல்லித்தொலைடா ..

செந்தில்

ஒரே லஞ்சமும் ஊழலும் பெருகிப்போச்சு..

கவுண்டமணி

டேய்...டேய்...நிறுத்துடா..

செந்தில்

ஏண்ணே... பதறுரீங்க...ஏதோ "ஜம் ஜம் ஜமைக்கா"ன்னு ஒரு குட்டித்தீவுல
தான் லஞ்சம் ஊழல்னு சொல்லி மக்கள் போராடுறாங்க

================================================================
நகைச்சுவைக்காக எழுதியது...

ஞாயிறு, 16 ஜூலை, 2017

மோடிஜி எழுதும் குறும்பாக்கள்

மோடிஜி எழுதும் குறும்பாக்கள்
============================================ருத்ரா

ஆர்.எஸ்.எஸ்


எனக்கு மட்டும் அல்ல‌
இந்தியாவுக்கே இது தான்
ஆக்ஸிஜன் சிலிண்டர்.


விமானம்


நம் பாராளுமன்றம் எங்கே இருக்கிறது?
இதில் தான் ஏறி
சுற்றி சுற்றி தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஜி.எஸ்.டி


"கூஸ் அன்ட் சர்விஸஸ் டேக்ஸ்"
பொன் முட்டையிடும் வாத்து.
கார்ப்பரேட் காரர்களுக்கு.


மாட்டிறைச்சி


ஒரு கிலோ மாட்டிறைச்சியை பாதுகாக்க‌
நூறு கிலோ மனித இறைச்சி
தேவைப்படுகிறது.


பாண்டிச்சேரி


இந்த சுண்டைக்காயைப் பிடிக்க‌
எங்கள் ராட்சசத்தூண்டில்
கிரண் பேடி.


அதிமுக‌


இவர்களிடம் தான் இருக்கிறது
எங்கள்
வாக்கு வங்கி.


சமஸ்கிருதம்


இந்த விஷ ஊசி இருக்கும் வரையில்
இந்தியாவில் எந்த மொழியும்
வாயைத் திறக்க முடியாது.


யோகா


நம் நாட்டுப்பொருளாதாரத்தின்
"யோஜனா பவன்" இனி
"யோகா பவன்" தான்.


====================================================


மீண்டும் ஒரு அலை

மீண்டும் ஒரு அலை

மீண்டும் ஒரு அலை
==============================ருத்ரா

ஏதும் தோன்றவில்லை.
எதிரே
இரைச்சல் போடும்
அலைகள் கேட்கவில்லை.
மூழ்கப்போகும்
சூரியன் கூட‌
ஏதோ சொல்லத்துடித்து
சொல்லாமல்
சிவப்பாய் கக்கிவிட்டு
கரைந்து விட்டான்.
என்ன சொன்னாள்?
அந்த ஒலி மட்டும்
கோடரியாய்
என் நெஞ்சை பிளந்து விட்டது.
அந்த சொல்
இன்னும் விளங்கவில்லை.
விளங்காமலேயே
போய்விடக்கூடாது
என்று
அலைகள் தன் முந்தானையைக்கொண்டு
இந்த கரை முகத்தை
ஒற்றிவிட்டு ஒற்றிவிட்டுப்போகுமே
அங்கு..
தன் விரல்களால்
எழுதி விட்டுச் சென்றிருக்கிறாள்..
எழுத்துக்கள் அழிந்து
மிச்சம் தெரிந்தது
இது மட்டுமே..
...விடு."
மறந்து விடு
மன்னித்து விடு
உன் மனதை தந்து விடு.
எந்த "விடு" அது?
எதுவும் தோன்றவில்லை.
என்ன விடுகதை இத
தொடவும் மாட்டேன் என்கிறது
விடவும் மாட்டேன் என்கிறது
மீண்டும் ஒரு அலை
அந்த "விடு"வுக்கும் விடுதலை.
எனக்கு எதுவும் தோன்றவில்லை.
மிச்சம் உள்ள எழுத்துக்களை
அந்த ஆழத்துக்குள் தேடிக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு அலை..
வரட்டும்.
என்னை இழுத்துக்கொண்டு போக!

============================================

செவ்வாய், 4 ஜூலை, 2017

திங்கள், 3 ஜூலை, 2017

இலக்கு நம் இதயம் மீதிலே

இலக்கு நம் இதயம் மீதிலே !
==============================================ருத்ரா

நினைத்தால் காறி உமிழத்தோன்றுகிறது.
மேற்கே இருந்து வெள்ளைக்காரன் வந்து
நம் கழுத்தில் கத்தி வைத்தான்.
நம் அம்பத்தாறு தேச ராஜாக்களின்
வாரிசு அந்தரங்கத்தில் நுழைந்து
நம்மைக் கூறு போட்டான்.
ஏற்கனவே கூறு கெட்டுத்தானே
நாம் கிடந்தோம்.
என்ன நாய் பிழைப்பு இது?
ஆறுவகை மதம்பிடித்துக்கிடந்தோம்.
ஆறு கடவுளும்
நான்கு வர்ண வரப்புக்குள்
நம்மை நசுக்கி மிதித்தன.
கடவுளா அப்படி செய்தது?
இவை
அரசு நுகத்தடியை மக்கள் கழுத்தில் மாட்ட‌
சாதி சம்ப்ரதாய தில்லு முல்லுகள்.
சுயராஜ்யம் என் பிறப்புரிமை என்றார்கள்.
வந்தேமாதரம் முழங்கினார்கள்.
நாக்கு தொங்க  முண்டைக்கண் துருத்த‌
இடுப்பில் கபாலங்கள் கோர்த்து
ஆடையுடுத்த‌
பயங்கர காளிக்கு
மற்ற மதங்களை பலி கொடுக்கவே
கூர்வாள் தீட்டினார்கள்.
ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி
என்று கர்ஜித்தார்கள்.
எல்லாம்
சாதி மத சாக்கடையாறுகளில்
கும்பமேளா நடத்துவதற்குத் தான்.
குரங்குகள் போட்ட பாலத்தை
ராமன் போட்டதாய் சொல்லி
கடலில் ஆழமாய் பாதை போட்டு
வணிகம் செய்யும் பொருளாதாரத்தை
சிதைத்து விட்டார்கள்.
ஆக்கிரமிப்பு செய்து
உட்கார்ந்து கொண்டவர்கள்
அதன் பின் வந்தவர்களை
ஆக்கிரமித்தார்கள் என்று
அடித்து விரட்ட
அதிரடி கும்பல்கள் சேர்த்து சேர்த்து
வாக்கு வங்கிகளை குவித்தார்கள்.
மனித உரிமை எனும்
கீச்சுக்குரல் கூட பொறுக்காது
தெருவெல்லாம் கசாப்புக்கடை ஆக்கினார்கள்.
எங்கள் உயிரினும் மேலான தேசியக்கொடியே !
சுதந்திரப்போர்களில்
ரத்தம் முக்கிய உன் சிவப்பு வர்ணத்தை
சாதி இந்து காவி வர்ணமாய் மாற்றி
அதையும்
கார்ப்பரேட் ஆக்கி
நம் பாரதப்பண்பையே
சுரண்டித்தின்ன சூதுகள் செய்தார்கள்.
இந்த சூதாட்டத்திற்கு
பகடை உருட்டும்
சகுனிகளை வீழ்த்துவதற்கே
இனி நாம்
தேர்(தல்) வடம் பிடிக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகமே
அதன் நேரான பாதை!
வெற்றி நம் இமை மீதிலே!
இலக்கு நம் இதயம் மீதிலே!

==================================================
அறிவு ஜீவிகள் பேசிக்கொண்டால்...


அறிவு ஜீவிகள் பேசிக்கொண்டால்...
=================================================ருத்ரா

அறிவு ஜீவி (1)

பாத்தீங்களா! நம்ம பிரதமர் ஜி.ஏஸ்.டி யை எவ்வளவு எளிதாக்கிச் சொல்லிவிட்டார்.."குட் அன்ட் சிம்பிள் டேக்ஸஸ்"ன்னு சொல்லிவிட்டார்.

அறிவு ஜீவி (2)

மதத்தை அடிப்படையா வச்சு அவர் சொன்னதை இப்படியும் எடுத்துக்கலாம்
"காட்ஸ் அன்ட் ஸேடான் டேக்ஸஸ்"

==========================================================

ஞாயிறு, 2 ஜூலை, 2017

கார்ட்டூன்

கார்ட்டூன்
=========================================ருத்ராஆழ்ந்த இரங்கல்கள்

தோழர் சௌந்தர் மறைவு
எனக்கு
என் இருப்பிடத்தைச்சுற்றிய‌
ஒரு பூகம்ப அதிர்ச்சி.
என் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும்
அவரது சிற்றுளி ஒலித்திருக்கும்.
என் அருகே நடைபயின்று வரும்
"ஞான பீடம்" அவர்.
அவர் பாராட்டு சுகத்தை
எதனோடு ஒப்பிடுவது?
அந்த "தாஸ் கேபிடல்" பக்கங்களின்
சர சரப்பு ஒலிக்கீற்றுகளில்
ஒரு விடியல் பூச்சு
என் சூரியனை எனக்கு காட்டிநிற்குமே
அதைத்தான் சொல்லவேண்டும்.
ஆழங்காண இயலா
என் ஆழ்ந்த இரங்கல்கள் அவருக்கு!

====================================செங்கீரன்
02 ஜுலை  2017


சௌந்தர் என்றொரு தோழர்

சௌந்தர் என்றொரு தோழர்
======================================ருத்ரா

அடுத்த தெருவில் வசிப்பவர்.
பார்க்கும்போதெல்லாம்
நின்று பேசுவார்.
முகம் நிறைய மத்தாப்பூக்களின்
வெளிச்சம்.
அந்த பேச்சில்
என் கவிதையைக் கொஞ்சமாவது
தொடாமல் அகலுவதே இல்லை.
நான் எழுதிய கவிதையின்
உட்புறம் நுழைந்து
அதில் மிகவும் களிப்புறுவார்.
கவிதை எழுதிய என் காகிதங்களில்
நரம்போட்டமாய் நிற்பவர்.
நான் சாவதற்குள்
ஒரு இலக்கிய விருது பெறுவேன்
என்று நம்பிக்கை
எனக்கு இருந்ததில்லை.

அன்று திடீரென்று செய்தி வந்தது
அவர் இறந்து விட்டார் என்று.
எனக்காக உயிர்ப்புடன் நின்ற
அந்த "ஞான பீடம்"
சரிந்ததாய் நான் மிகவும்
துயர் உற்றேன்.
என் கவிதைகள் என் முன்னே
அலங்கரிக்கப்பட்ட
பூத உடலாய்  படுத்துக்கிடந்தது.
மரணம் எனும் கவிதை
காற்றாய் என் காகிதத்தில்
பட படத்தது.
அது அவர் எழுதியது.
சாகித்ய அகாடெமிகளில்
எனக்கு ஒரு
சாகாத அகாடெமியாய்
எங்கோ ஒரு தொலைத்தூர
விண்பூக்களில் இருந்து கொண்டு
என் கவிதைக்குள்
தினமும் வருகிறார்.

=========================================
இரவு  11.30 மணி ..02 ஜுலை 2017


அண்ணே! அண்ணே (5)

அண்ணே! அண்ணே (5)
=============================================ருத்ரா

டேய் சேதி தெரியுமா?

என்னண்ணே?

திருப்பூரில் ஏதோ தனியார் பின்னலாடை நிறுவன ஊழியர்களுக்கு
"ஜி.எஸ்.டி" கொண்டாட்டத்துக்காக விருந்து குடுத்திருக்காங்க!

என்ன விருந்துண்ணே? "கறி விருந்தா?"

இல்ல..."வரி விருந்து"

==========================================================
நகைச்சுவைக்காக எழுதியது.

இதோ ஒரு வாமனாவதாரம்.

இதோ ஒரு வாமனாவதாரம்.
=============================================ருத்ரா

கையில் தாழங்குடையில்லை.
முன் குடுமியோ பின் குடுமியோ இல்லை.
மேலும்
ஒழுங்காய் ஆளும் அரசன் தலையில்
ஏறி மிதித்து
அவனை பூமிக்குள் அழுத்தும்
சாணக்கியத்தனம் ஏதும் இல்லை.

பாருங்கள்
மத்திய பிரதேசத்தில் ....
இவர் பெயர் பெஸோரி லால்
அம்பது வயது ஆகியும் உயரம் 29 அங்குலமே !
அவரை தன் குழந்தை போல்
தன் இடுப்பில் ஏந்தி
மத்தாப்பூ சிரிப்பை சிந்தும்
பெறாத அந்த தாயின் அன்பு
கோடி மேல் கோடி பெறும் .
அம்பது வயது குழந்தையின்
அந்த புன்னகையில் கூட
ஆயிரம் காந்திப் புன்னகைகள்
சுடர் பூக்கின்றன!

பாருங்கள் இந்த அற்புத காணொளியை!

http://www.msn.com/en-in/video/viral/aged-50-and-only-29-inches-tall-born-different/vi-BBDyu5L?ocid=spartanntp

சனி, 1 ஜூலை, 2017

அண்ணே! அண்ணே! (4)

அண்ணே! அண்ணே! (4)
==============================================ருத்ரா

அண்ணே! எம் ஜி யார் நூற்றாண்டு விழா இன்னும் நான்கு ஆண்டுகளுக்கும் நடக்கும்னு சொல்றாங்கண்ணே!

அது எப்படிடா?

"மாராத்தன்" ஓட்டப்பந்தயமாம். இந்த மூணு அணியும்   மாறி மாறி சென்னைக்கும்டெல்லிக்கும் ஓடிகிட்டே இருப்பாங்களாம்...

=====================================================
நகைச்சுவைக்காக எழுதியது.

கண்ணாடித்தொட்டி மீன்கள்

கண்ணாடித்தொட்டி மீன்கள்
========================================ருத்ரா இ.பரமசிவன்
(தலைப்பு:உபயம்:"ஞானக்கூத்தன்)

நல்லவேளை
பௌராணிகர்களின்
சப்பளாக்கட்டையிலிருந்து
நான் தப்பித்தேன்.
இல்லாவிட்டால்
இந்த "அழுகிய நான்கு வர்ணத்தை"
சிருஷ்டித்த அந்த
சுவடிகளைக் காத்ததற்கு
நானும் அல்லவா
பொறுப்பு ஏற்க வேண்டும்!
அந்த "சோமுகாசுரனை"க்கொன்றதால்
இந்த கண்ணாடித்தொட்டியெல்லாம்
ரத்தத்தொட்டி அல்லவா ஆகியிருக்கும்.


========================================தண்ணீர்த்தொட்டி மீன்கள்
~ ஞானக்கூத்தன்

இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

காதல் ஜோக்ஸ் (2)


காதல் ஜோக்ஸ் (2)
=====================================ருத்ரா

"ஞாபம் வருதே ஞாபகம் வருதே"
______________________________________

காதலி

ஏன் எப்போ பார்த்தாலும் பீச் பார்க் என்று வரச்சொல்லுகிறீர்கள்?

காதலன்

தியேட்டர்களில் தமிழ்ப்படம் பார்க்கும் போதெல்லாம் மூடு அவுட் ஆகி விடுகிறது.

காதலி

ஏன் அப்படி ஆகிறது?

காதலன்

பின்னே என்ன! எல்லாப்படத்திலும் காதல் காட்சிகள் என்றால் அதை கல்லூரிக்கட்டிடங்களில் காட்டுகிறார்கள்.அதுவும் அதே "அண்ணா பல்கலைக்கழக "சிவப்புக்"கட்டிடங்களில்"

காதலி

ஏன் சிவப்பு நிறம் கண்டு மிரள்கிறீர்கள்?

காதலன்

கூடவே என் "செமஸ்டர் அர்ரியர்சும்"அல்லவா ஞாபகத்துக்கு வருகிறது.

==================================================================

இது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல!


இது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல!
===========================================================

தோழர் மோசிகீரனார்


மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும்  நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக் கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்!
ஆனால், உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்.
                                 - ஞானக்கூத்தன் (1938-2016)

(இது ஞானக்கூத்தன் பாட்டு )ஞானக்கூத்தன் அவர்களே!
உங்களுக்கு
தமிழ்ப்பற்று பற்றி
கவிதை எழுதிக்கொள்ள‌
நியாயங்கள் இல்லை தான்.
ஆயினும்
தமிழ் இலக்கியத்துக்கும்
மகுடம் சூட்டியிருக்கிறீர்கள்
இது நிச்சயம்
உங்களுக்கு ஒரு நிழற்குடை
அமைத்துக்கொள்ள அல்ல.
ஆனாலும்
மோசிகீரன் அந்த‌
மன்னனுக்கு தமிழின் உருவகம்.
அங்கே படுத்து உறங்கியது
பயணக்களைப்பால் அயர்ந்த‌
ஒரு தமிழ்!
அதனால் அவன் கவரி வீசியது
தமிழுக்குத் தான்.
ஆனால் தமிழுக்கு
புகழ் சூட்டப்படும்போதெல்லாம்
அதை புழுதியாக்கி
நையாண்டிக்கவிதைகள் எழுதி
உங்கள் உள் நச்சரிப்புகளை
ஏன் இப்படி சொறிந்து கொள்ளுகிறீர்கள்?
நீங்கள் சிறந்த கவிஞர்
உங்கள் தமிழ்ப் புதுக்கவிதைகள்
எங்களுக்கு புதிய இலக்கிய ஊற்று.
அதனால்
நீங்களும் அந்த முரசு கட்டிலில்
அதை அவமானப்படுத்தும் நோக்கில் இல்லாமல்
கொஞ்சம் படுத்து
கண்ணயர்ந்து விட்டீர்கள் என்று தான்
பொறுத்துக்கொள்கிறோம்!
எங்கள் பாராட்டுக்கவரிகளை
உங்களுக்கு வீசுகிறோம்.
வாழ்க தமிழ்!
வாழ்க உங்கள் தமிழ்ப்புதுக்கவிதைகள்!
=============================================ருத்ரா இ பரமசிவன்