வியாழன், 29 ஜூலை, 2021

மூன்று கவிதைகள்

 மூன்று கவிதைகள்

_______________________________ருத்ரா

29.07.2021



ஒரு டம்ளர் தண்ணீரில் 

எங்கள் தாகம் தீர்க்கும் உனக்கா

இத்தனை கார்களையும்  வீடுகளையும்

நொறுக்கிவிடும் தாகம்

ஏற்பட்டது?



சீனாவில் வெள்ளம்.

____________________________


புல்லுக்கும் புழுவுக்கும்

எவ்வளவு சுதந்திரம் இங்கு!

ஓட்டுக்கேட்கவும்

ஒட்டுக்கேட்கவும்

இங்கு யாருமில்லை!



சுதந்திரம் 

_____________________________


கொடி ஏற்றி இறக்கி

கயிறும் கம்பமும் 

தேய்ந்தது மட்டுமே மிச்சம்.



ஆடுவோமே பள்ளு பாடுவோமே

__________________________________

வெள்ளி, 23 ஜூலை, 2021

Blackhole's wormhole is a wombhole.

Blackhole's wormhole is a wombhole to bear "bigbang"for another universe. Modren physicists conceive with millions of mathematical equations that the cosmological entropy (a dynamical entity) ensembled in matter and energy is in pure essence nothing but an "information entropy" of thermodynamics that rule the whole cosma with its first and second laws of thermodynamics. Again when the classical physicists like Ludwig Boltzmann hinged on statistical mechanics thermodynamics was reduced to "informatics"of moving particles while they are heated.In a volume now the probability comes to the picture to pin-point the position and momentum of that particle that bears the thermodynamics. Now the entropy takes the form of information. Can Blackhole event horizon physics can be put in an easy way of "information entropy"? Yes of course because a blackhole is considered as a great "information scrambler" by many scientists of cpsmology today.Any matter enters blackhole never returns back we know. So also is for a "photon". Hence the informatiom of a photon now is lost and the same is scrambled in a sense means a paradox occures in its "state" of matter or photon. Whether or not blackhole turns to a backyard of this universe resulting into a wormhole the quantum entanglement the correlation physics takes up a keyhole to be reborn breaking the horizon.This endures by a thermodynamical laws and by a quantum bounce triggers the inflation of the universe.So here the wormhole teleportatin takes place even in this universe itself.Quantum entanglement peeps the womb of blackhole to take its own birth again towards the parent universe. Now let us see though the spacetime is redesigend how did it play the role of "quantum gravity? _________________________________________________Ruthraa E Paramasivan

வியாழன், 22 ஜூலை, 2021

மூடு

 மூடு

=================================ருத்ரா


விடியல் பற்றி 

விடிய விடிய பேசினார்கள்.

"விடிய மறுத்தால் என்ன

சிசேரியன் செய்து விடலாம்"

என்று ஒரு கவிஞன்

புதுக்கவிதை சொன்னான்.

விடவில்லை அவன்

வரிகளில் வெளுத்து வாங்கினான்.

"ஓ மனிதா!

நீ காது குடைவதே

இந்த மின்னல் குச்சிகளில் தானே!

தொடு இந்த தொடுவானத்தை

உன் பேனாவினால்

உன் காலில் விழும் அது"

"வாவ்" "வாவ் "

என்றார்கள்.

அப்புறம்

ஒரு வழியாய் தூங்கினார்கள்.

காலைச்சூரியன்

சுள்ளென்று

சன்னல் வழியே

வரிப்புலியாய்

கம்பி நிழல்களை

சூடு போட்டு எழுப்பினான்.


"யாரப்பா சன்னலை திறந்தது?

மூடு

அதற்குள்ளா விடிஞ்சு போச்சு?

தூக்கம் கலஞ்சு போச்சே"


முனகியது புதுக்கவிஞன் தான்.


___________________________________

21.10.2014


புதன், 21 ஜூலை, 2021

ஒரு உருவகம்


       நான் 1996ல் கம்பியூட்டரில் வரைந்த ஓவியம் இது.

  
  
ஒரு உருவகம்
________________________‍‍___ருத்ரா


ஒரு ஓவியத்துள்
அழகிய அன்னம் 
ஒரு அடையாளமாய்!
எல்லோருடைய மூச்சுக்காற்றையும் 
கொண்டு தீட்டப்பட்டு
உயிர்த்து நிற்கும் ஓவியம்.
கருப்பு இருட்டின்
கர்ப்பம் திறந்து
வெளிவந்த‌
மின்னல் அழகின்
வெளிச்சப்பிழம்பு 
சிறகு முளைத்து
சுடர் காட்டுகிறது.
பல ஆண்டுகளின் 
வரலாற்றுத்தடங்களில் 
கசிந்த ரத்தம்
மலை முகட்டு விளிம்பில்
சிவப்பாய் சிலிர்த்து நிற்பதை
அருந்துகின்ற அற்புத அன்னம்!
அதனுள் ஒரு நிழல்
கசக்கப்படுகிறது.
பிழியப்படுகிறது.
துண்டு துண்டாக்கப்படுகிறது.
ஏன்?
உள்ளே ஒரு அச்சம்
தீப்பற்றி எரிகிறது.
வெள்ளைத்தீ போல்
சிறகுக்குள் அடைகாத்து
எரிகின்றது.
இந்த சிறகுகள் எல்லாம்
பிய்க்கப்படுமோ?
கொள்ளை அழகு கொண்ட‌
அலகுகள் பிளக்கப்படுமோ?
நீருக்குள் 
அமிழ்த்தப்படுமோ?
சூழ்ந்து நிற்கும் பச்சை மரங்களின்
நரம்புகளுக்குள் எல்லாம்
நடுக்கத்தின் ஓலங்கள்.
இந்த ஓவியம் 
எல்லாம் உரிக்கப்பட்டு
மசாலா சேர்த்து 
வேக வைக்கப்பட்டு விடுமோ?
மிதந்து கொண்டிருக்கும்
கனவுகள் கசாப்பு 
செய்யப்பட்டு விடுமோ?
ஒரு உருவகத்துள்
நீளமாய் மரணப்பசி யெடுத்த‌
ஒரு நாக்கு சட சடப்பது
தெரிகிறது.
எங்கிருந்தோ அந்த‌
சுடுகாட்டுப்புகை நாற்றம்..!
குரல் வளை நெரிக்கப்படுகிறது.
கழுத்து திருகப்படுகிறது.
உஷ்!
மூச்சு காட்டாதீர்கள்.
மரம் மட்டைகளே!
உங்களுக்கு புதிய பூட்டுகள்
அதோ
காய்த்து தொங்குகின்றன.
_________________________________________

சனி, 17 ஜூலை, 2021

சருகு ஓசைகள்

 சருகு ஓசைகள்

______________________________________ருத்ரா


சருகுகளில்

ஏன் இத்தனை இரைச்சல்?

நேற்று உதிர்ந்தது

அதற்கு முன்னும் உதிர்ந்தது

கூட்டிப்பெருக்கவே இல்லை.

எப்போது அவை விழுந்தனவோ?

ஆனாலும்

அந்த இரைச்சல்களுக்குள்

இத்தனை இனிய‌

இசை அமைப்பா?

பாருங்கள் 

"அந்த போனால் போட்டும் போடா"

இசை அலைகளின் சுருட்டல்கள்.

மாலைப்பொழுதின் மயக்கத்திலே..

பெண்மை ஏக்கத்தின் இசை அருவிகள்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மணல் துளிகளில் இசையின் பிழம்பு.

இன்னும் எத்தனையோ

அந்த இரைச்சல்களின் வழியாக‌

இந்த மௌனத்தின் இதயம்

பிழியப்படுகின்றது.

பச்சையாக இந்த இலைகள்

தம் நரம்புகள் மூலம்

சூரிய பானம் பருகிக் களிக்கையிலே

எத்தனை இன்ப இழைகள்

அந்த நிழல் பிதுக்கங்களில்

வழிந்திருக்கும்.

நான் ஒவ்வொரு எட்டாக எடுத்துவைத்தேன்.

மெல்லிதாக‌

இன்னும் மெல்லிதாக‌

என் கால்களை பூவாக்கிக்கொண்டு..

இரைச்சல் மழை ஓய்ந்தது.

ஆனாலும் 

ஏதோ கூழாகிப்போன‌

ஆசைகளும் ஏக்கங்களும்

நூலிழை போன்ற ஒலி விழுதுகளில்

என் காலடியில்

அழுகைகளாக விசும்புகின்றன.


_____________________________________________


ஒரு இனிய பூங்காலை!

 ஒரு இனிய பூங்காலை!

===========================================ருத்ரா


எத்தனை எத்தனை கொட்டுகிறாய்?

காது வழியாய்

கண்கள் வழியாய்

உணர்ந்தது வழியாய்

ருசித்தது வழியாய்

புல்லரித்தது வழியாய்

எல்லாம் இங்கே தான் கொட்டுகிறாய்.

காலத்தின் எச்சில்

இங்கு தான் உமிழப்படுகிறது.

இந்த மூளைக்குப்பையில்

நீயும்

தேடுகிறாய் அந்த‌

மூளிப்ப்பொம்மையை.

முகம் மழுங்கி

கண்கள் இன்றி

உன் விளயாட்டுப்பொம்மையை!

அது பிணமா?

உயிர் உள்ளதா?

அது நிழலா? ஒளியா?

எல்லா நூற்றாண்டுகளையும் கொண்டு

பிசைந்து செய்தது தானே அது!

ஆம்!

அதைத்தேடிக்கொண்டே இருக்கிறாய்.

ஒரு நாள் அது

உன் கையில் கிடைத்தது.

ஐயோ!

என்ன இது!

சல்லடையாய் துளைத்து

வெறி நாய்கள் தின்றுக்குதறி போட்ட‌

எலும்பு மிச்சங்கள் போல்

அது அருவருப்பாய்..

சாதிகள் மதங்கள்

மூட நம்பிக்கைகளின்

முடை நாற்றமெடுத்த  நான்கு வர்ணங்கள்

அதன் மீது அப்பி..அழுகிய‌

உருவமாய்..அது!

அது என்ன?

அது யார்?

எல்லாமே நீ தான்!

மூக்கைப்பொத்தாதே

முகத்தைச்சுளிக்காதே

புதிய கபாலம் ஒன்று திற!

புதிய சிந்தனைகளை நிரப்பு.

அந்த நியூரான் நிமிண்டல்களுக்குள்

உன் தேடல்

புதிய "பால் வெளியை" நோக்கி இருக்கட்டும்.

பல்ஸார் குவாஸார் என்று

தொலைதூரங்களை

உன் முகத்தருகே கொண்டுவா!

மானிட நேயம் எனும்

அந்த நுண்ணோக்கியில்

உற்றுப்பார்த்து

புதிய சமுதாயத்தின்

டி.என்.ஏ ,ஆர்.என்.ஏ

உயிர்ச்சங்கிலியை பின்னிவைத்துப்பார்.

குப்பையை கிளறியது போதும்.

உட்பொருள் உணர்.

புதிய பார்வை ஒன்றை

உன்கண்களில் மாட்டிக்கொள்.

நம்பிக்கை பூச்செண்டுகளை

பரிமாறிக்கொள்ள புறப்படு.

உன் காலடிகளில்

பூமியின் இதயத்துடிப்புகள்

உணர்வதைப்பார்.

இதோ 

ஒரு இனிய பூங்காலை!


================================================

17.07.2016


அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.

 




அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.

===============================================ருத்ரா



அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.

என் நரம்பில் தெறித்த பூவாணமாய்.

பூத்தையல் போட்ட புது வானமாய்.

அப்படி என்ன சொல்லி விட்டேன்?

நான் உன்னை காதலிக்கிறேன்.

நீ என்னை காதலிக்கிறாயா? 

என்று தானே!


அது என்ன பண்டமாற்றா?

நீ கேட்டாய்.

ஏதாவது ஒரு வாக்கியத்தை தான்

நான் சொல்லியிருக்க வேண்டும்.


நான் உன்னை காதலிக்கிறேன் என்று

நிறுத்தியிருந்தால் 

அதற்கும் நீ சிரித்திருப்பாய்.

ஆனால் அதற்கப்புறம்

உன் தூக்கம் 

சூடான தோசைக்கல்லில் உடைத்த‌

ஹாப் பாயிலாய்

சிதைந்து 

மஞ்சளும் வெள்ளையுமாய்

ரங்கோலி ஆகியிருக்கும்.


உன் எம் எம் ஃபோம் கூட‌

சுநாமியாய்

எங்கோ உன்னை சுருட்டி வீசியிருக்கும்.

மறுநாள் என்னைப் பார்க்கும் ஆவலில்

கல்லூரி வகுப்புக்குள்

என்னை எதிர்பார்த்து ஆவலுடன்

விழித்தூண்டில் வீசிக்கொண்டு 

கண்ணுக்கு தெரியாத அந்த "தக்கையில்"

கண்பூத்து நின்றிருப்பாய்.

நான் வந்தவுடன் என்னை ப்பார்த்தவுடன்

அதே அலட்சியம்..

வேறு ஒரு விட்டம் நோக்கி

வெறும் பார்வை.

அப்போதும் இதே சிரிப்பு..

நான் கண்டுபிடித்து விட்டேன்

அந்த கதிர்வீச்சின் கண்ணாடி இழைக்கீற்றுகளில்

ஊமையாய்

ரகசியமாய்

ஒரு கண்ணீர்த்துளி 

முத்துக்கோத்துக்கொண்டிருப்பதை.

அது போதும்.

அதற்கே நான்

"பேண்ட்"போட்டிருந்தாலும்

லுங்கி இல்லாமலேயே

லுங்கி இருப்பதாய்

உயர்த்திக் காட்டி காட்டி ஆடிக்கொண்டிருப்பேன்.

அந்த தேசிய விருது

இந்த "லுங்கிக்கா"?

இல்லை உன் பட்டாம்பூச்சி சிறகுத்துடிப்புக்

கண்களுக்கா?

நீ வெடுகென்று திரும்பினாலும்

அங்கு ஒரு "க்ளுக்" சிரிப்பு

எனக்கு பன்னீர் தெளித்துக்கொண்டிருக்கும் என்று

எனக்கு மட்டுமே தெரியும்.


=======================================================

மகிழ்ச்சியாய்...

 



மகிழ்ச்சியாய்...

___________________________________ருத்ரா



இது என்ன நினைப்பு?

குதிரை கனைத்துக்கொண்டது போல்

இருந்தது.

இறந்த பின் 

கழிந்த நாட்களை 

கத்தியால் கூறுபோட்டு

அதன் சதை வேறு

ரத்தம் வேறாய் 

ஆக்கிப்பார்க்க முடியுமா?

நினைவின் அந்த கனத்தப்பெட்டகத்தை

எந்தக்கோடரியால் பிளப்பது?

அதில் ஒன்றுமே இல்லை 

என்று

மனம் அவசரமாய் 

முந்திரிக்கொட்டை போல்

கூற வந்தாலும்

நான் அவிந்து அவிந்து

வெந்து வெந்து 

மடிந்த தருணங்கள்

அங்கே தான் எங்கேயாவது

பதுங்கியிருக்கும்.

என் தேன்கூட்டுப்பிழியல்களின்

இன்ப விளாறுகளும்

அங்கே எறும்பு மொய்த்துக்

கிடக்கலாம்.

இன்னும்

என்னென்னவோ

சித்திரங்கள்

அங்கே அடிக்கப்பட‌

ஆணி தேடி சுவர் தேடி

மூச்சு முட்டிக்கிடக்கலாம்.

என் சறுக்கல்களும் சரிவுகள்

ஜரிகை பார்டர் வைத்த ஆடைகளாய்

அங்கே அடைந்து கிடக்கலாம்.

எல்லாம் போகட்டும்.

அதோ

மணற்குவியலாய்

என் கற்பனைக்குவியல்கள்.

காகித எச்சங்களில்

கவிதைகள் எனும் கசங்கிய‌

எழுத்துக்களில்

கனவுகள் பிய்ந்த விரிப்பில்

குந்தியிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டுகளாய் 

அடுக்கிய சிதையில்

இன்று

கொள்ளிச்சட்டி கவிழ்க்கப்படலாம்.

நன்றாக தீ

கொழுந்து விடட்டும்.

எனக்கென்ன வந்தது?

நான் 

என்ற என் ஈகோ என்ற‌

அகங்காரத்தை 

அந்த தீயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எனது

ஏதோ ஒரு கவிதை

அந்தப்பத்திரிகையில்

அன்றொரு நாள் பிரசுரம் 

ஆகியிருந்தது.

இந்த மணற்பிழம்புகள் போல்

எனக்கு

அது ஒரு சிற்பம் செய்தது.

அந்த எழுத்துக்களின்

ஊடே நான் ஊர்கின்றேன்.

போய் வா நண்பா.

நானே எனக்கு நண்பன் ஆகி

நானே என்னைத்தூக்கிச்சுமந்தவர்களுள்

ஒருவனாகி

கை அசைத்து அனுப்பிவைத்துக்

கொண்டிருக்கிறேன்.

என்னை!

மணலில் எல்லாம்

என் கால் தடங்கள்.

என் காலண்டர் தாள்களின்

மரணயோகங்களும் சித்தயோகங்களும்

அங்கே சிதறிக்கிடந்தன.

நான் மகிழ்ச்சியாய் எனக்கு

விடை கொடுத்தேன்.


_____________________________________







ஞாயிறு, 11 ஜூலை, 2021

லூப் குவாண்டம் காஸ்மாலஜி

 லூப் குவாண்டம் காஸ்மாலஜி

_____________________________________________________________ருத்ரா

(அளபடைய இயக்கவியல் வளையத்தின் விண்ணியல்)


ஐன்ஸ்டீன் தன் வாழ்நாட்களுக்குள் ஈர்ப்பு விசையையும் சேர்த்து மற்ற‌ ஆற்றல்களுடன் ஒரு பேரொன்றிய கோட்பாடு (க்ரான்ட் யுனிஃபிகேஷன் தியரி) நிறுவ எண்ணினார்.அதற்காகவே தன் பொது சார்புக்கோட்பாட்டில் நிறை பிண்டம் (மாஸ் அன்ட் மேட்டர்) இவற்றிக்கு தொடர்பாய் ஆற்றல் உந்துவிசை உள் திசைய கணிதத்தை (எனர்ஜி மொமெண்டம் டென்சார்) சேர்த்துக் கொண்டார். இருப்பினும் அந்த பேரொன்றியக்கோட்பாடு வேறுவடிவங்களோடு உருவெடுத்தது.மூன்று ஆற்றல் துகள் மற்றும் அதன் ஆற்றல் புலங்கள் ஒரு ஒழுங்கியத்துள் (சிம்மெட்ரி) அடைபடச்செய்ய விஞ்ஞானிகள் முயன்றபோதும் ஈர்ப்புவிசையின் பரிமாணம் நான்கு பரிமாணத்தையும் தாண்டிய அதிகப்படி பரிமாணங்கள்(எக்ஸ்ட்ரா டைமன்ஷன்ஸ்) கொண்ட உயர்மேல் ஒழுங்கியத்தை (சூப்பர் சிம்மட்ரி) நோக்கி தாவ வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.அதனால் "எல்லாவற்றுக்குமான ஒரு கோட்பாடு" (தியரி ஆஃப் எவெரிதிங்க்) என்பதை நோக்கி விஞ்ஞானிகள் பயணித்தனர்.


இப்போது அள்படை இயக்கவியல் என்னும் குவாண்டம் மெகானிக்ஸ்ம் இதைச்சார்ந்தே நகர்ந்தது.சிம்மட்ரியின் நீட்சியாக ஒரு சூப்பர் சிம்மட்ரிக்குப்பதில் குவாண்டமே "ப்ளாங்க்கின்பிரபஞ்சத்துக்கும் நமது இருப்பு பிரபஞ்சத்துக்கும் இடையே ஒரு பாலமாய்" ( குவாண்டம் ப்ரிட்ஜ் பிட்வீன் ப்ளாங்க் யுனிவர்ஸ் அன்ட் அவர் எக்ஸிஸ்டிங் யுனிவர்ஸ்) மாற்றப்படும் ஒரு கோட்பாட்டு இயற்பியல் உருவெடுத்தது. மேலும் பொதுசார்புக்கோட்பாட்டின் படி கருந்துளைப்பிரபஞ்சத்தில் தோன்றும் அந்த ஒற்றைப்புள்ளி அல்லது "ஒருங்கியம்"(சிங்குலாரிடி) காட்டும் சமன்பாட்டில் நம் இருப்பு பிரபஞ்சத்தின் "புழக்கடை"தான் வந்து முட்டி நிற்கிறது.ஒளி ஆற்றல் அங்கே நுழைந்தால் திரும்புவதில்லை.அந்த ஒளி நிகழ்வின் தொடுவானம் அல்லது முடிவானம் (இவன்ட் ஹோரிஸான்)அங்கே தீர்வு (சொல்யூஷன்) ஆகுவதில்லை.அது போலவே குவாண்ட இயலின் படி ஆற்றல் துகளின் அடி வானமும்(பார்டிகிள் ஹோரிஸான்)அங்கே தீர்வு சொல்லாது.குவாண்ட இயக்கவியல் ஈர்ப்பு ஆற்றலின் புலமான் "கிராவிடானை" அளவு படுத்த இயலாது.குவாண்டம் கிராவிடி என்பது அந்த "ப்ளாங்க்" புலத்தில் செல்லாது.அந்த முனையில் தானே பெருவெடிப்பு எனும் பிக்பேங்கின் திரி பற்ற வைக்கப்படுகிறது.இந்த நிலையில் கிராவிடியின் குவாண்டம் அதிலிருந்து ஈர்ப்புக்கு எதிரான அகல்விசையாய் மாறி குவாண்டம் எதிர் தாவல் (குவாண்டம் பவுன்ஸ்) நிகழ்கிறது.இதுவே பிரபஞ்சவிரிவு அல்லது வீக்கத்திற்கு காரணம் ஆகிறது.இதுவே குவாண்டத்தின் வளையம் (லூப் குவாண்டம்) ஆகிறது.ஐன்ஸ்டீன் ஈர்ப்பு நகர்ச்சியை "காலவெளியின்" ஜியோமெட்ரிகல் டைனாமிக்ஸ் என்றே குறிப்பிட்டார்.அது போல் இந்த‌கருந்துளை விளிம்பு எனும் சிங்குலாரிடியில் குவாண்டத்தின் நகர்ச்சி ஒரு குவாண்டம் ஜியோமெரியின் டைனாமிக்ஸ் எனலாம்.பிரபஞ்சத்தின் இந்த வடிவமும் ஒரு "காஸ்மாலாஜிகல் மாடல்" தான்.

மேலும் பொதுசார்புக்கோட்பாட்டின் படி கருந்துளைப்பிரபஞ்சத்தில் தோன்றும் அந்த ஒற்றைப்புள்ளி அல்லது "ஒருங்கியம்"(சிங்குலாரிடி) காட்டும் சமன்பாட்டில் நம் இருப்பு பிரபஞ்சத்தின் "புழக்கடை"தான் வந்து முட்டி நிற்கிறது.ஒளி ஆற்றல் அங்கே நுழைந்தால் திரும்புவதில்லை.அந்த ஒளி நிகழ்வின் 

தொடுவானம் அல்லது முடிவானம் (இவன்ட் ஹோரிஸான்)அங்கே தீர்வு (சொல்யூஷன்) ஆகுவதில்லை.அது போலவே குவாண்ட இயலின் படி ஆற்றல் துகளின் அடி வானமும்(பார்டிகிள் ஹோரிஸான்)அங்கே தீர்வு சொல்லாது.குவாண்ட இயக்கவியல் ஈர்ப்பு ஆற்றலின் புலமான் "கிராவிடானை" அளவு படுத்த இயலாது.குவாண்டம் கிராவிடி என்பது அந்த "ப்ளாங்க்" புலத்தில் செல்லாது.அந்த முனையில் தானே பெருவெடிப்பு எனும் பிக்பேங்கின் திரி பற்ற வைக்கப்படுகிறது.இந்த நிலையில் கிராவிடியின் குவாண்டம் அதிலிருந்து ஈர்ப்புக்கு எதிரான அகல்விசையாய் மாறி குவாண்டம் எதிர் தாவல் (குவாண்டம் பவுன்ஸ்) நிகழ்கிறது.இதுவே பிரபஞ்சவிரிவு அல்லது வீக்கத்திற்கு காரணம் ஆகிறது.இதுவே

குவாண்டத்தின் வளையம் (லூப் குவாண்டம்) ஆகிறது.ஐன்ஸ்டீன் ஈர்ப்பு நகர்ச்சியை "காலவெளியின்" ஜியோமெட்ரிகல் டைனாமிக்ஸ் என்றே குறிப்பிட்டார்.அது போல் இந்த‌ கருந்துளை விளிம்பு எனும் சிங்குலாரிடியில் குவாண்டத்தின் நகர்ச்சி ஒரு குவாண்டம் ஜியோமெரியின் டைனாமிக்ஸ் எனலாம்.பிரபஞ்சத்தின் இந்த வடிவமும் ஒரு "காஸ்மாலாஜிகல் மாடல்" தான்.இந்த எல் கியூ சி யை எல் கியூ ஜி என்றும் கூறுவார்கள்.அதாவது ஈர்ப்பு லூப் குவாண்டத்தில் வந்து விட்டது.






 


__________________________________________________________________________________






சொல்

 சொல்

__________________________________

ருத்ரா


அது

எறிபவனைப் பொறுத்தது.

நட்போடு ஒரு மனிதன் 

நீட்டுவது பூ.

பகைக்க மட்டுமே பார்ப்பவன்

எறிவது கல்.

தமிழை வாழ்த்தி

"தமிழ்ப்பகைவர்கள் எங்கோ மறைந்தார்"

என்று 

சங்கு முழக்கியவர்

இன்று உணர்ந்திருப்பார்

ஏமாந்து விட்டேன் என்று.

தமிழனுக்கு

தமிழே ஒவ்வாமை ஆனதால்

ஆங்கிலமும்

சமஸ்கிருதமும் கலந்த

களிம்பு கொண்டு பூசினால் தான்

அரிப்பே நீங்குகிறதாம்.

ஒரு தமிழ் அரும்பு

தொலைக்காட்சியில்

தலை நீட்டியது.

அறிவிப்பாளர் பெயர் கேட்டார்.

லக்ஷா என்றது.

லட்சணமாத்தான் இருக்கே

அதாவது ரொம்ப அழகாத்தான் இருக்கே!

"எழிலி"என்று அழைக்கலாமா?

என்றார் தமிழ் ஆர்வம் பொங்க!

கேட்ட உடனே

பெற்றொர் பக்கம் இருந்து

கூச்சல்.

கூக்குரல்.

தமிழ்ப்பெற்றோர்கள் தான்.

ஆனாலும்

தோலெல்லாம் அரிப்பு எடுத்தாற்போல்.

"வேண்டாம் அந்தப்பெயர்."

"பிரண்ட்ஸ் களுக்கு புரியாது!"

"அதென்ன எழிழி எலி என்று?"

"நாளைக்கு வரும் மாப்பிள்ளைக்கும்

பெயர் பிடிக்காமல் போய்விடலாம்"

"நாங்களும் விடிய விடிய‌

கூகிளில் தேடித் தான்

இந்தப்பெயரை

வைத்திருக்கிறோம்.."


இப்பொழுது புரிகிறதா?

தமிழ்ப்பகைவர்கள்

யார் என்று.


___________________________________



கடவுளின் குரல்

 

சனி, 10 ஜூலை, 2021

கடவுளே காப்பாற்று





கடவுளே காப்பாற்று

_______________________________________ருத்ரா




கடவுள் என்று

வானம் அச்சடித்தது

சூரியனை.

அது என்ன நெருப்பு தானே

பீடி பற்ற வைக்கும்போது

பார்த்துக்கொள்ளலாம்

என்றான் ஒருவன்.

கடவுள் 

"ஜலம்" என்று

வேதம் ஸ்லோகம் சொன்னது.

ஆமாம்

இதை எப்போதும் 

கமண்டலத்தில் 

வைத்துக்கொள்ளவேண்டும்

எதிரில் தீண்டத்தகாத "மனிதன்"

வந்து விட்டால்

அந்த திசையை

"ஜலம்"தெளித்து தானே

புண்யபூமி ஆக்கவேண்டும்

என்றார் ஒரு பெரிய மனிதர்.

மண் தான்

கடவுள் என்று

அந்தப்பக்கம் சொல்லிவிட்டு

இந்தப்பக்கம்

மனிதனாக 

அவதரித்தார் கடவுள்.

ராஜ நீதி அது இது என்று 

சொல்லி ராஜ்யபாரம் தாங்கினார்.

அவருக்கே தெரியும் 

அவர் மனைவி கற்பில் நெருப்பு என்று.

இருப்பினும்

அதே ராஜ்ய நீதி என்று

அவளை தீயில் விழச்சொல்லி

அவளும் தீயையும் வென்று

உன் ராஜ்யத்தையே நீ கட்டிக்கொள்

என்று

இந்த மண்ணுக்குள் புதைந்து போனாள்.

மண் எனும் கடவுளே

இங்கு மண்ணுக்குள்

புதைந்து போனது.

சரி..

இன்னும் எதை

கடவுள் என்று சொல்வது?

என்று

கடவுள் யோசித்துக்கொண்டே தான்

இருக்கிறார்.

கவலைப்படாதே 

இதோ நான் இருக்கிறேன் என்றது

கொரோனா வைரஸ்.

ஆல்ஃபா பீட்டா ..டெல்டா

எப்சிலான் ..கப்பா..

என்று கிரேக்க எழுத்துக்குள்

அவர் ஒளிய‌

அவர் பின்னே தடுப்பூசிகள் தொடர...

இப்போது

"டாம் அன்ட் ஜெர்ரி"

விளையாடவே அவருக்கு 

காலம் போதவில்லை.

கடவுளுக்கே 

வந்த போதாத காலமா இது?

கடவுளே இந்த‌

கட‌வுளைக்காப்பாற்று.


______________________________________








வெள்ளி, 9 ஜூலை, 2021

தூக்கம் கலை.

 தூக்கம் கலை.


__________________________ருத்ரா


போர்வையை உதறு.

தூக்கம் கலை.

இந்தக் கீற்றுகள்

சூரியப்பழத்தைச் சாறு பிழிந்து

குடிக்க முனைகிறதே!

நீ

இந்த உலகத்தில்

வெறும் கல்லும் மண்ணும் 

இல்லை.

உன் நினைவின் எழுச்சி

உன் அறிவின் கதிர் வீச்சு

ஒரு

புதிய வானத்தைப்படைக்கட்டும்.

உன் சிந்தனையின் 

கூர்மைமிக்க‌ வானவில்

இந்த உளுத்துப்போன‌

நான்கு வர்ண வானவில்லை

முறித்துப்போடட்டும்.

தூக்கம் கலை.

தூக்கி நிறுத்து இந்த‌

சுடர் பூக்கும்

மானிடத்தை!

______________________________






மாமூல் விடியல்


 


மாமூல் விடியல்

_____________________________________ருத்ரா



நீண்ட இரவு விழுங்கிய‌

நம்பிக்கைகளின் விதை

இதோ

இங்கு இப்போது 

ஊன்றப்படுகிறது.

தென்னைகள் சாமரம் வீச‌

புதிய உணர்வுகள் 

சுடர் பூக்கின்றன.

பஞ்சாங்கத்தில் படுத்துக்

கிடந்தோம்.

தோஷங்களும் பரிகாரங்களுமாய்

பஞ்சடைத்த‌

தலையணைகளில்

சாய்ந்து கிடந்தோம்.

நாம் மூச்சு விடும் 

தமிழ் மீதே

நசுக்கி உட்கார்ந்துகொண்டு

மூச்சு முட்டுகிறதே

என்று 

புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

எச்சம் இடும் காக்கைக்கும்

அந்த கல் ஒன்றும் 

வரம் கொடுப்பதில்லை

அல்லது

சூ சூ என்று

விரட்டுவதும் இல்லை.

"சங்கல்பம்" என்று

புல்லைப்பிடித்துக்கொண்டு

புரியாத இரைச்சல்களில்

அந்த இலையில் இட்ட‌

சோற்றுப்பிண்டத்தை

காக்கைகளின் மூலம்

மூதாதையருக்கு ஊட்டுகின்றோம்.

நூற்றாண்டுகள் தோறும்

ஓடுகின்றன.

நம் அறிவு மட்டும் கூர்மையற்று

மழுங்கியே கிடக்கிறது.

மற்றவர்களின் பேச்சுகள் அறிவுச்சொற்கள் 

எல்லாம் "மிலேச்சத்தனம்"

என்று

புதைக்கப்பட்டு

நாம் இந்த நீண்ட இருளில்

இன்னும் புதைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த இருட்டுக்கும் நான்கு வர்ணம் பூசி

இன்னும் இன்னும் 

ஆழப் புதைந்து கொண்டிருக்கிறோம்.

அந்த தென்னங்கீற்றுகளுக்கிடையில்

ஒளி பாய்ச்சும்

அந்த விடியல் தினம் தினம் 

ஒரு மாமூல் விடியலை 

அரங்கேற்றி விட்டு

ஓய்ந்து விடுகிறது.

இங்கு அது

நம் மலட்டுப்போர்வைகளின் மேல்

விழுந்து விழுந்து 

வான்வெளியின் காற்றில் கூட‌

சவக்களையை 

படரவிட்டுக்கொண்டிருக்கிறது.


________________________________________


சனி, 3 ஜூலை, 2021

கண்ணாடி

கண்ணாடி

____________________________________________ருத்ரா

03.07.2021



என்னவனே!

பெண் பார்க்கும் படலம் முடிந்து

நான்

இப்படி கண்ணாடி முன் நின்று

மட்டுமே

மணிக்கணக்காய் 

உன்னோடு

மவுனமாய் பேசிக்கொண்டிருப்பதை

வைத்து

ஏதாவது ஒரு உளவியல் மருத்துவர்

ஸ்கிஸோஃபெர்னியா

அது இது என்று எழுதிக்கொடுத்து

விலங்கு பூட்டிவிடுவார்களே!

ஏற்கனவே நீ

எனக்கு மாட்டிய உன் சொல்விலங்குகள்

என்னை 

என்ன பாடு படுத்திக்கொண்டிருக்கின்றன‌

என்று

உனக்குத் தெரியுமா?

சரி..சரி கேட்டதற்கு பதில் சொல்லு.

பொய்க்காமல் சொல்லு.

இந்நேரம் நீ

என்ன செய்து கொண்டிருப்பாய்?

வழக்கமாக சொல்வதைத்தான் சொல்வாய்.

அதாவது கோடிங்கில் நீ 

ஒரு புதிய வெர்ஷன்

உள் நுழைந்திருப்பதாக!

அது தானே.

ஆமாம்

அந்த கணினிக்கு கைமுளைத்து

திடீரென்று

கை நிறைய கண்ணாடி வளையல்கள் 

போட்டுக்கொண்டு

கிலுங் கிலுங் என்று

உன் நெஞ்சுக்குள் இருக்கிற‌

மஞ்சாச்சோற்றை 

தின்று தீர்த்துவிடத்தெரியுமா?

அல்லது

கால் முளைத்து அந்த‌

கொலுசுகளின் பரல்கள் வழியாய்

உன் காதுக்குள் இருக்கிற‌

பிருந்தாவனத்து பூக்களைத் தழுவி தழுவி

உன்னை சுருட்டிக்கொள்ள முடியுமா?

கம்பியூட்டர் படித்த பெண் எல்லாம்

வேண்டாம் என்று

நீ தான்

இந்த தமிழ் இலக்கியம் படித்தவளே

போதும் என்று

என் கண்களோடு 

உன் கண்கள் மோதிய‌

அந்த தீப்பொறிக்குள்ளேயே

இனிக்கும் ஒரு தேன்பொறிக்குள்

விழுந்து விட்டதாய்

என்பதை உன் சம்மதத்தில்

சிக்னல் கொடுத்துவிட்டு 

சென்று விட்டாயே!

எப்போது நான் உன்னை மீண்டும்

சந்திப்பது?

ஆயிரம் கிராஃபிக்ஸ்களில்

அற்புதம் படைக்கிறாய்.

"கல்பொரு சிறுநுரை" என்று

குறுந்தொகையில் 

அந்தக்கவிஞன்

ஒரு பெண்ணின் உள் துடிப்பை

வரைந்திருக்கிறானே!

அதை உன் 

"ஃப்ராக்டல் ஜியாமெட்ரியும் 

ஜூலியா கர்வ்"வும்

உணர்ச்சி பொங்க பொங்க‌

வடிக்க முடியுமா?

அன்று உன்

அந்த "சம்மதம்" என்ற சொல் தான் என்னை

இன்னும்

இந்த பட்டாம்பூச்சி புழுக்கூட்டில்

அடைத்து வைத்திருக்கிறது.

வெறும் இலைகளையே தின்று கொழுத்து

வெடிக்குமாமே அந்தப்புழு.

நானும் 

உன்னை எனக்குத்தோன்றிய‌

பிக்காசோவின் தூரிகையில்

வண்ணம் குழைத்து வைத்திருக்கிறேன்..

அது 

வர்ணங்களின் பெரும்புயலாய்

கனவுசிறகு விரித்து வரும்போது...

...................

....................

அவளுக்கும் தெரியாது.

அந்த வீட்டுக்கும் தெரியாது.

"ஜாதகம் பொருந்தவில்லை மன்னிக்கவும்"

என்ற வரிகள் தாங்கிய‌

ஒரு கடிதம் 

அங்கே வந்து கொண்டேஇருப்பது

இன்னும் தெரியாது.


______________________________________ருத்ரா

வெள்ளி, 2 ஜூலை, 2021

உலக மருத்துவர் தினம்

"அகம் ப்ரஹ்மாஸ்மி

தத்வம் அஸி

இன்னும்

சஹானாவவது சஹனோபுனஸ்து

சஹவீர்யம் கர்வாவஹை...

.............

அக்னி மீளேம் ப்ரோஹிதம் 

யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்.."

நிறுத்து நிறுத்து போதும்

கடவுளின் இதயம் பற்றி

இன்னும் 

என்ன சொல்லப்போகிறாய்....?

..................

ஸ்ட்தெஸ்கோப் 

அந்த மந்திரங்களின் உடல் மீது

பயணித்து உண்மையை

புட்டு புட்டு வைத்தது 

இசிஜி வரிகளில்.

கொழுப்பு படலத்தில் எல்லாம்

அடைத்துக்கொண்டு விட்டதாம்!

__________________________________ருத்ரா

(உலக மருத்துவர் தினம்)

 

பரிணாமம்

                                                                                                                                                படம்  by ருத்ரா     



 பரிணாமம்

______________________________ருத்ரா இ பரமசிவன்.


கல் மண் கரடு

புல் பூண்டு 



புழு பூச்சி 

புலி சிங்கம் யானை

கரடி குதிரை குரங்கு

.............

அப்பாடா!

மனிதன்..மனிதன்..

மலர்ச்சியின் சிகரம் நோக்கி

இவனும் ஒரு மைல்கல்லே!

வானம் இடி மின்னல் பார்த்து

அதற்கு பின்னால் இருந்து

இயக்கும் விரல்கள் எவை?

சூரிய விண்மீன் கூட்டங்களின்

திரைச்சீலையை

நகர்த்துவது யார்?

மைல் கற்கள்

ஓடுகின்றன ஓடுகின்றன..

இன்னும்

அது யார்? அது எது?

இந்த உந்தல்கள்

ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

காலவெளி எனும் 

ஸ்பேஸ்டைம் கூட‌

பெருவெடிப்பின்

முன் 

முறிந்து போயின.

சூன்யம் என்கிற முட்டை கூட‌

அங்கே இல்லை.

முட்டையா? கோழியா?

என்று கேள்வியும் கூட‌

மரணித்துக்கிடக்கும்

ஒரு வியப்பு நிறைந்த‌

பிறப்பின் கன்னிக்குடம்

அங்கே 

உடையாமல் உடைந்து கொண்டிருக்கிறது.

நீ 

எதையெல்லாம் 

இப்படி சொல்லிக்கொண்டு போகிறாயோ

அதற்கும் முந்தியது

பிரம்மம்....பிரம்மம்...

..................

அதாவது "கடவுள்!"

அப்படித்தானே!

என்ன இது?

மிலேச்ச சப்தங்கள் எல்லாம் 

ஆபாசம்!

முடிந்து போயிற்று எல்லாம்.

கடவுள் என்ற அந்த 

பிணத்தைத்தூக்கி

எங்கேயாவது எறியுங்கள்.

இப்படி

பிரம்மமே

அதிரடியாய்

ஸ்லோகம் சொன்னது.

அந்த பிரம்மத்தையும் முந்திக்கொண்டு

மூக்கு நீட்டிய கேள்வி

கேள்வி கேட்டது.

ஓ பிரம்மமே!

கேள்வியின் ஒலிகள் தானே

எல்லாவற்றுக்கும் முந்திய 

சுருதி என்கிறாய்.

உன்னை ஒலித்த‌

அதிர்வு எண்ணை வைத்து வந்த‌

இழையம் எனும் ஸ்ட்ரிங்க் கோட்பாடு

உனக்கும் முன்னே முன்னே 

துடித்து துடித்து விரைகிறதே

அந்த கணிதம் என்பது என்ன?

அதெல்லாம் பேசாதே.

சுருதின்னா சுருதிதான்.

அதை மீறி எதையும் சொல்லி

எச்சில் படுத்தாதே

என்று சொல்லிவிட்டு

ஸ்லோகங்கள் மடங்கிக்கொண்டன.

அறிவு 

மனிதனின் மூளை நியூரான்களாக‌

முந்திச்செல்வதையெல்லாமே

முந்திக்கொண்டு

வெளிச்சம் பரப்பிக்கொண்டேயிருந்தது.

பின்னே....பின்னே

மிக மிகப்பின்னே

கீறல் விழுந்த ரிக்கார்டுகளாய்

இருட்டின் வரிகள்

"சப்தம்" கிளப்பிக்கொண்டே

இருந்தன.

_____________________________________


வியாழன், 1 ஜூலை, 2021

யார் அவன்?

 


யார் அவன்?

______________________________ருத்ரா



யாரை இங்கே இப்படி 

நட்டு வைத்திருக்கிறார்கள்?

நீல வானம் முழுவதையும்

விழுங்கித் தீர்த்துவிடும் 

தீர்மானம்

அந்த ஒவ்வொரு தோகையிலும்

ஒரு கலித்தொகை போல்

ஒலிக்கின்றது கேட்கின்றது.

அதன் 

தரவு இசையும் தாழ் இசையும்

ஏதோ ஒரு மௌனக்குழம்பில்

குறு குறுப்பது

எல்லா இதயங்களிலும்

எதிரொலிக்கிறது.

யார் அவன்? 

நல்நன் எனும் நன்னன்?

சிந்து வரியில் ஒலிக்கிறான் 

அவன்.

யாதும் ஒலியே யாதும் மொழியே

சிதறிடும் சொற்களில்

உதறிடும் பொருளில்

உயிர்ப்பது எதுவோ

அதுவே இங்கு

உலகப் பொது மொழி.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்

அனைத்து அறன்."


____________________________________


செம்பரல் முரம்பு

 செம்பரல் முரம்பு 

_______________________________________

ருத்ரா இ பரமசிவன்




செம்பரல் முரம்பில் நீள்வழி வெங்கான்


இலம் அசைஇ நெருப்பே பூத்தன்ன‌


கடும்பொறை அடுக்கம் திரிசுரம் வாங்க‌


மரல் தழீஇய மண்ணுழைப் பாம்பு


கூர்வான் படுத்த எருவைச்சேவல் நீள்விரல்செத்து 


அகன்சிறை விரித்த அடுநிழல் ஆங்கு


கண்டே அஞ்சி அண்ணிய சிறுபூப்


பைம்புதல் ஒளிக்கும் காட்சியும் மலியும்.


காழ்த்த கடுமுள் நெடுமரம் மறிப்ப‌


ஆளி எதிரிய அவிர்நிழல் அண்டும்


சிறுமுயல் தவிப்ப வெள்ளிய பருதி


கனல் பெய் ஆறு கடாத்த காலையும்


இறைமுன் எல்வளை பற்றிச்செயிர்க்கும்


நெஞ்சம் தோய்ந்து ஏய்க்கும் அவள் 


ஒள்வீ நகை அவிழ் கள்ளக்கூட்டம்


கண்டிசின் அவனும் கல் இடறி வீழ


இடர்ப்பட்ட ஞான்றும் இனியவே நகைக்கும்.


______________________________________________________

(நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் கவிதை)



பொழிப்புரை


_____________________________________________ருத்ரா இ பரமசிவன்




செம்மண் தரைப் பருக்கைக்கற்கள் நிறைந்த கரடு முரடான நெடிய வழியில் வெப்பம் மிகுந்த காட்டில் தலைவன் பொருள்தேடிச் செல்கிறான்.வழியில் இலவ மரத்துப்பூக்கள் நெருப்புப்பூக்கள் போன்று மலர்ந்திருக்கின்றன.இறுகிய பாறைகள் மலைகள் போன்று எதிர்ப்பட அதைத்தொடர்ந்து வளைந்து வளைந்து (திருகி)செல்லும் செல்லும் காட்டுவழி (சுரம்)தொடர்ந்து வளைந்து செல்ல (வாங்க) அவனும் செல்கிறான். அப்போது மடல் எனும் காட்டுச்செடி (சிறிய வரிகள் நிறைந்து நீண்டு இருக்கும்) ஒரு மண்ணுழிப்பாம்பு போல் தெரிய அதை அருகே உள்ள மண்ணுழிப்பாம்பு சுற்றித்தழுவி இருக்கும்.அதன் கூரிய பார்வையில் படும்படி வானத்தில் பறக்கும் ஆண்பருந்து நீண்ட விரல்களைப் போன்ற‌  (நீள்விரல் செத்து) சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்.அதன் வெயில் கலந்த நிழல் கூட அதற்கு தென்படும். அதனல் அஞ்சி அருகில் உள்ள (அண்ணிய)சிறு பூக்கள் பூத்த புதருக்குள் மறையும்.இது போன்ற காட்சிகள் நிறைந்ததே அக்காட்டு வழி.அது மட்டுமின்றி முற்றிய உயரமான‌ முள் மரங்கள் எதிர்ப்படும். (சங்ககாலத்தில் இருப்பதாக சொல்லப்படும்) யாளி எனும் விலங்கின் உருவத்தைப்போன்ற (எதிரிய) வெம்மை மிகுந்த நிழலை அண்டிநிற்கும் சிறுமுயலும் அங்கே வழியில் தவித்து நிற்கும். அத்தகைய வெள்ளைச்சூரியன் (வெள்ளிய பருதி...இங்கே பருதி என்பது சூரியனின் வட்டத்தைக்குறிக்கும்.பரிதி என்பது தான் சூரியனைக்குறிப்பது) நெருப்பு மழை பொழியும் காட்டாற்றை கடந்து கொண்டிருக்கும் பொழுதிலும் தலைவனின் நெஞ்சில் தலைவியின் அழகு மயக்கம் ஊட்டுகிறது. ஒளிபொருந்திய அழகிய வளைகள் (எல்வளை)அணிந்த அவள் முன்கையை (இறை முன்)ப் பற்றி உணர்ச்சியினால் உந்தப்படுகிறான். அவளின் சிறு சிறு முறுவல்கள் ஒளிரும் சின்னஞ்சிறிய பூக்களைப்போன்று இதழ் சிதறி கள்ளத்தனமான நகைப்புக் கூட்டங்களைக்கொண்டு அவன் நெஞ்சம் புகுந்து ஏமாற்றும்.இந்த கற்பனைக்காட்சிகளில் திளைத்த அவனோ காலில் கல் இடறி விழுகின்றான்.அப்பொழுதும் கூட அவளைக்கண்டு இனிமை நெகிழ சிரித்து மகிழ்கின்றான்.


__________________________________________ருத்ரா இ பரமசிவன்