புதன், 31 ஜனவரி, 2018

காமம்செப்பாது கண்டது மொழிமோ!

காமம்செப்பாது கண்டது மொழிமோ!
================================================ருத்ரா

ஓங்கி உலகளந்த அழகனை
ஏங்கி உள்ளச் சிமிழுக்குள்
வாங்கினாள் ஆண்டாள் என்கின்ற‌
நம் மண்ணில் பூத்த மின்னற்பெண்!
தமிழ் ந‌றும்பூவின் சொல்லினிலே
அமிழ்தின் மழைதனை பெய்வித்தாள்.
தமிழைக்குழைத்தாள் தன் உள்ளமதாய்!....(1)

மார்கழிப் பனியின் விழுதுகளில்
ஊஞ்சல் ஆடினாள் தமிழிசைத்து.
பிரம்மம் என்பது உடலா? இங்கு
பிரம்மம் என்பது கடலா? அலையா?
கவலை அந்த கன்னிக்கில்லை
பொறி வண்டுகள் பூவைத் துளைக்க
பொறி அங்கு வைத்தது பிரம்மம் தானே.....(2)

கூர்த்த மதியும் குவியும்  உணர்வும்
தூர்த்து போமோ? அவள் செந்தமிழில்.
பாடல் தோறும் பாடல்தோறும்
பாற்சோற்றின் தீஞ்சுவை போல
ஊன்சோற்றுள் ஊடிப்  பற்றி
ஞானத்தீயும்  செஞ்சுவை ஊட்டும்.
விண்டத்தமிழில் அண்டம் விரிந்தது......(3)

இரண்டு ஆன்மக்கூடல் அங்கு
இருட்கடல் பிளந்து ஒளியாகி
கல்லும் மண்ணும் பூவும் புள்ளும்
கலந்த விண்வெளி யானதுவே! அவள்
பள்ளியெழுச்சி பாடலெல்லாம்
துள்ளிய ஞானச் சுடர்வரியே!
அள்ளிய நெஞ்சில்  அமிழ்தொலியே!....(4)

சிறுபூ தொட்டும் பெரும்பூ அணைந்தும்
அளைந்தாள் அவனை அணைத்தாளே..தன்
உயிர் மகரந்தம் தூவிக்கொடுத்து
சூடிக்கொடுத்தாள் தன் உயிர்மாலை.
விண்ணவன் மேனி வருடியதெல்லாம்
அவள் உயிரின் உயிரின் பூக்களே தான்.
அவள் மனங்களின்அந்தம் மகரந்தம்......(5)

பக்தி என்றோர்   சிறு சொல் போதா.
பெருங்கடல் கூட சில் துளி  தான்..அவள்
அன்பின் விரிவே ஆயிரம் அண்டம்!
அவன் அவதாரம் பாடினாள்.
அவ ன் அரிதாரம் பாடினாள்.
உருவம் கொண்டு அவளுக்குள்
உருண்டு திரண்டது பிரம்ம மதாய்.....(6)


வீட்டுப்பூட்டுள் ஒலிக்கும் பூங்கிளி
"வீடு"பேறு தேடி கோயில்
இதயம் புகுந்து கொண்டதுவே
பிரம்மம் என்னும் பேரின்பம்
பெருங்கனிச் சுவைத்து உண்டதுவே
அத்தனை சுவையும் தமிழாகி
அருஞ்சுவைப் பாட்டாய் ஒலித்ததுவே...(7)

சின்ன இன்பம் பெரிய இன்பம்
வேறுபாடுகள் தெரிவதெங்ஙன்?
ஆண்டவனுக்கே சூடிக்கொடுக்க தன்
ஆத்மப்பூக்கள் தொடுத்தாளே.
அத்தனைப்பாட்டும் நரம்பை மீட்டும்
அத்தனைப்பாட்டும் தமிழை மீட்டும்.
சொற்றுளியெலாம்  சோதிப்பெருங்கடல்.....(8)


ஒருபுறம் பார்த்தால் அங்கு
தமிழை ஆண்டாள்  அவள் ஆனாள்
மறுபுறம் பார்த்தால் அங்கு
தமிழால் ஆண்டாள் அவள் ஆனாள்.
பாற்கடல் பள்ளிக்கூடலும் தமிழ்ப்
பாற்கடல் பள்ளிக்கூடமே..அவள்
படித்ததெலாம்   அங்கு பரந்தாமன்.....(9)

உணர்வுத்தீயை பக்தி என்பீர்!
உணவுத்தீயும் அதுவே தான்.
ஞானமும் உண்ணலாம் அறிவீரோ?
ஞானப்பசியே உலகம்  ஆச்சு.
ஒவ்வொரு சோறும் வரலாறு ..மண்ணின்
ஒவ்வொரு துளியும் வரலாறு.
வரலாறு இன்றி வாழ்க்கை இல்லை.......(10)

மிருகமாய்த் தோன்றிய போதினிலே
இரைகள் தானே நம் இலக்கு...அந்த
இரையும்  காமமும் இறைவன் ஆகி
அவதாரம் வந்த கதைகளும் உண்டு.
அதையெலாம்  மறப்பது அறிவீனம்.
இறையாண்மை என்பதும் கூட
இரையாண்மையின் அடிப்படையே ....(11)

மனிதன் உருவில் இருந்தாலும்
இறைவன் உருவில் இருந்தாலும்
ரத்த சதையாய் இருந்தாலும்
ஆவிகளாய் திரிந்தாலும்  அது
பசியின் ஒளியே அறிந்து கொள்
அறிவின் பசியே உணவுகள் ஆகி
உலகு சுழற்றும் அறிவாய் நீ..............(12)

காமம் செப்பாது கண்டது மொழிமோ!
காமம் அங்கொரு அக்கினிக்குஞ்சாய்
காமம் அங்கொரு பொந்திடை இருந்து
காட்டிய வெளிச்சம் ஆயிரம் ஆயிரம் .
வெந்து தணிந்தது காடு காடு.
வேகாமல் நின்றது மனித சிந்தனை.
சாகாமல் நின்றது மனிதம் மனிதம்.......(13)

============================================


.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

2018 குறும்பாக்கள்

2018 குறும்பாக்கள்
=====================================ருத்ரா

மாதம் ஒன்று கழன்றது
கணக்குப்பார்த்ததில்
"கழன்றதுகளே" அதிகம்.
மந்த புத்திகள் உலா வந்ததில்
"மனிதம்"இங்கே
உதிர்ந்து விழுந்தது.

-----------------------------------------------------

தமிழுக்கு அமர
அமெரிக்காவில் மட்டுமே
இருக்கை அமர்த்தினோம்.
சுடுகாடுகள் நிறைய
தமிழ் நாட்டில் உண்டு.

--------------------------------------------------------

ஆரியம் திராவிடம்
வரலாற்றின் நெருப்பாறு.
வாக்குப்பெட்டிக்கு முன்
ஆரியமும் அணிந்து கொண்டது
திராவிடத்தின் முகமூடி.

--------------------------------------------------------

ஆண்டாள் என்றால் தமிழ்.
அவள் கனாக்கண்டாள்
"அவனைக் " கரத்தலம் பற்றினாள்
அதற்கு விழா எடுப்போம்
தேர் ஓட்டுவோம்...சரி!
தேரின் கீழே
நசுங்கித் தான் கிடக்க வேண்டுமா
தமிழ் ?

----------------------------------------------------------

பத்து பதினைந்து பூஜ்யங்கள்
அணிவகுக்க ரூபாய்கள்...
முன்னால் "ஒன்று" போட்டு
வாசிப்பார்கள் பட்ஜெட் என்று.
ஆனால் "அந்த"ஒன்றும் கூட
பூஜ்யம் தான் என்பதை
வதை பட்டு வதை பட்டு
அறிந்து கொள்வார்கள்
நம் அன்பு மக்கள்.

-------------------------------------------------------------

தேசத்தந்தையே!

தேசத்தந்தையே!
=====================================================ருத்ரா


தேசத்தந்தையே!

உனக்கு ரெண்டு சொட்டு
நிமிடத்துளிகள்
எங்கள் மௌனத்திலிருந்து
உனக்கு உதிர்ந்தன இன்று.
நம் தேசத்துக்கு
உயிர் கொடுத்த தியாகிகள் மீதும்
அது நம் நெஞ்சத்தைக்கரைத்து
ஊற்றியது இன்று.

இதோடு சரி.
அரசு ஆவணங்கள் தங்கள்
கோப்புகளை மூடிக்கொள்ளும்.
அந்த மியூசியக்கதவுகள் கூட‌
இனி
அடுத்த வருட "கிரீச்சு"களுக்குத்தான்
எண்ணெய் இட்டு
தயார் செய்து வைக்கும்.

குடியரசு பூத்து
அறுபத்தொன்பது கிளைகள் பிரிந்து
பூத்து பூத்து
எண்ணிக்கொண்டே இருக்கின்றன‌
வருடங்களை.

சுவரில்
நிரந்தர சிலுவைகளாய்
காலண்டர்கள் தொங்குகின்றன.
ஆண்டுகளைக்காட்டும்
முண்டைக்கண்கள் மட்டும்
புதிது புதிதாய் பிதுங்குகின்றன‌
தீராத எங்கள் பிரச்னைகள் போல்.

உழவர்கள் தான்
நாட்டின் மண்ணுக்குள்
மக்களின் கண்ணுக்குள்
தெரிகின்றனர்.
ஆனால்
அவர்கள் வாழ்க்கையின்
மதிப்பு
அரைக்கோவணம் கூட இல்லை.

அவர்கள்
விளைபொருள்கள் எல்லாம்
சந்தைச்சகுனிகளால்
பகடையுருட்டப்பட்டு
கொள்ளையடிக்கப்படுகின்றன.
பசிக்கின்ற‌
குழிவயிறுகளிலேயே
அவர்கள் கல்லறைகள் கட்டப்பட்டு
விடுகின்றன.
அந்த யோஜனா இந்த யோஜனா
என்று
கொழுத்த இந்திச்சொற்களில்
அவர்கள் கனவுகள்
தேய்ந்து போகின்றன.
அவர்களின்
தற்கொலைப்புள்ளிவிவரங்கள்
நம் பொருளாதாரத்தின்
மகாப்பெரிய கரும்புள்ளி ஆகும்.
அவர்களின்
உயிர்போன்ற உழவுக்கான‌
விதைகளும் உரங்களும் கூட‌
கார்ப்ரேட் காரர்களின்
"எட்டுக்கை ஆயுதங்களின்"
தினவுகளில்
தின்னப்பட்டுக்கிடக்கின்றன.

எங்கள் பாரதக்குடியரசே!
இன்னும்
உன் சுவடுகளில் தான்
நாங்கள் நடக்கின்றோம்.
நடப்பவை வெறும்
எலும்புக்கூடுகள் என்றாலும்
என்றாவது
அதில் அக்கினிப்பறவைகள்
கூடு கட்டும்..
சாதி மதங்களின்
இந்த மரண இருட்டுகள்
அதில் சாம்பல் ஆகும்
என்ற நம்பிக்கையில்
நடக்கின்றோம்.

உங்கள் அழுக்குப்பிடித்த‌
வர்ணங்களைக்கொண்டு
எங்கள் பயணத்தின்
இந்த மைல்கற்களுக்கு
எண்கள் இடுவதை
நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்கள் இதயங்களில்
எங்கள் கனவுகளுக்கு
எங்கள் மரணங்கள் தான்
அடையாளங்கள் இட்டுத்தருகின்றன.

புதிய உயிர் மூச்சுகளுடன்
புதிய வாழ்க்கையின் கீற்று
அதோ முழங்குகிறது.
உங்கள் சப்பளாக்கட்டைகளைக்கொண்டு
அதை நசுக்கி விடாதீர்கள்.

நாங்கள் ஒலிக்கிறோம்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று.
உங்கள் இந்தியை பரப்ப அல்ல.

கனல்கின்ற இந்தியாவின்
உள் வெப்பத்தை
ஒலி பரப்ப‌
அதை ஒலிக்கின்றோம்.

============================================================
திங்கள், 29 ஜனவரி, 2018

காம்ப்ளெக்ஸ் அனாலிசிஸ்

 காம்ப்ளெக்ஸ் அனாலிசிஸ்
===========================================================ருத்ரா 

சிக்கல் அல்லது கலப்புக்கணிதம்  (காம்ப்ளெக்ஸ் மேத்ஸ்) என்பது நம் அறிவைத்தூண்டும் ஒரு கணித இயல்.நம் கைவிரல்களைக்கொண்டு ஒன்று இரண்டு என்று எண்ணிக்கொண்டே போய் இப்பொது கோடி கோடி என்று எண்களை  எண்ணிக்கொண்டே போகிறோம்.இவை உண்மையில் நம் கண்ணெதிரே எண்ணப்படுகின்றன.இது மெய் இயல் கணிதம் எனப்படும்.(ரியல் மேத்ஸ்).ஆனால் 
எதிர்க்குறியுடன் (---) ஒரு எண்ணை உங்களால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும்.
அதிலும் வர்க்கமூல  குறிக்குள் (ஸ்குவேர் ரூட்) ஒரு எதிர்க்குறி (--- 1) எண்ணை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.ஏனெனில் இரண்டு எதிர்க்குறி  எண்களின் (---1 ம் ---1ம்) வர்க்கம்  +1 ஆகி விடும்.ஆனால் வர்க்க மூலக்குறிக்குள் இருக்கும் ---1 என்ற எண்ணின் முந்தைய வடிவம் அதாவது வர்க்க வடிவம்  +1 ம் --1ம் 
சேர்ந்த வடிவம் ஆக நிச்சயம் இருக்காது.வர்க்கம் என்றாலே ஒரே குறியுடைய இரு எண்களின் அடுக்கு தான்.இப்படி இரு எதிர்ரெதிர் குறிகளுடன் உள்ள எண்ணை 
அடுக்கு எண்ணாக நாம் கற்பனை செய்யத்தான் முடியும்.எனவே இவை சிக்கல் எண்கள் அல்லது கலப்பு எண்கள் எனப்படுகின்றன.இதுவே கலப்புக்கணிதம் (காம்ப்ளெக்ஸ் மேத்ஸ்) எனப்படும்.ஆங்கில சிறிய எழுத்தான i தான் இதை அடையாளக்குறியீடாக அறிவிக்கிறது.இதை "ஆய்லர்" எனும் மிகசிறந்த கணித மேதையே உருவாக்கினார்.இதன் மதிப்பு "வர்க்க மூலகுறிக்குள் ---1 என்பதே
(ஸ்குவேர் ரூட் ஆஃ ப்  மைனஸ் ஒன்) ஆகும்.


மேலே உள்ளது ஒரு விநோதமான கணித சமன்பாடு.காம்ப்ளெக்ஸ் கணிதத்தில் இதன் தன்மை என்ன என்ன என்று அக்கு அக்கு ஆக கொஞ்சம்
பிரிச்சு மேயலாம் வாருங்கள்.

====================================================

ஞாழல் பத்து

ஞாழல் பத்து
=====================================================ருத்ரா


ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும் வழக்கும் தமிழின் "செம்மை மற்றும் தொன்மை" சாற்றும் தன்மையுடையன.

மூ என்றால் மூன்று என்ற பொருள் யாவரும் அறிந்ததே.ஆனால் மூ என்று தனியெழுத்தே தமிழின் தொன்மை சுட்டுகிறது.அழகிய சிறந்த அறிவார்ந்த மூத்த குடிப்புலவன் என்று தான் "அம்மூவன்" என்பதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும்.மூவேந்தர்கள் என்று "மூன்று" அரசர்களோடு முடக்கிக்கொள்வதல்ல அப்பெயர்கள்.காலத்தால் மூத்த இனத்தின் அரசர்கள் என்பதே பொருள்.தமிழ் நாட்டில் "மூதேவி" என்றால் துடைப்பம் கொண்டு விரட்டி விட்டு ஒரு ஸ்ரீ யைச்சேர்த்த "சீர் தேவி(இது தமிழ்ச்சொல் தான்)யை நடு வீட்டுக்கே கொண்டு வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏன் வந்தது.இவள் செல்வம் கொண்டு வருவாள்.அவள் வெறுமே தொன்மை அறிவு மட்டுமே தானே தருவாள் என்ற அந்தக்காலத்து "பணப்பேராசை" எனும் டாஸ்மாக் தனம் நம்மிடையே நுழைந்ததால் இருக்கலாம்.மனிதர்கள் செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் தான்.அதற்காக மூத்தோர்கள் மூளி அலங்காரிகளாக வெறுக்கப்படும் கலாச்சாரம் எப்படி நுழைந்தது?  "மூதேவி" என்றால் வறுமை அல்லது தரித்திரம் வந்து விடும் என்று  அடித்த‌ கோடாங்கியின் ஒலி இன்று வரை எதிரொலிக்கிறது.சரி போகட்டும்.

அம்மூவன் எழுதிய அரிய தமிழ்ச்செய்யுட்கள் கண்டு இன்புறுவோம்.

ஞாழல் பத்து
==============

"எக்கர் ஞாழல் செருந்தியோடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே."....(செய்யுள்.141)


மூன்று வரிகளில்
அந்த புலிநகக்கொன்றையும்
செருந்தியும்
மலர்கள்
என்று பெயர் சொல்லிக்கொண்டு வந்து
அவள் உள்ளத்தையே
பெயர்த்து எடுத்து
காதலில் கடைந்து
வதை செய்ததை
காட்டுகின்றான் அம்மூவன்.
பயலை என்பது
பசலை என்று
இடைப்போலியின் இலக்கணம் தந்தாலும்
அவள் உடலில்
மாயக்கைகள்
மருதாணிக்கீற்றுகள் (மெகந்தி)போல்
சித்திரம் காட்டி
சித்திரவதை செய்வது எல்லாம்
துவலைத் தண் துளி வீசும்
பனிபடுத் துறைவன் தானே!
அந்த "துவலைக்குள்" அல்லவா
அம்மூவன்
அழகாக நெய்யப்பட்டிருக்கிறான்.
"நெய்யப்பட்டிருக்கிறானா?"
அவன் தானே
அச்செய்யுளை நெய்தது?
அவன் நெய்திருக்கலாம்
அதில் அவளது "பசலையின்"
தீச்சுடும் வரிகளில்
ஒரு துன்ப "டிசைனை"
கோர்த்து நெய்தது
அந்த பிரிவுத்துயரின்
வலியும் வேதனையும் தானே!
"துவலைத் தண்துளி" என்று
பாம்பே டையிங்
தேங்காய்ப்பூத்துவாலையை
அலைத்துளியாய் வீசி
அம்மூவன் அங்கே
போர்த்த நினனத்தாலும்
தலைவியின் உணர்ச்சியே
அங்கு கடல்.
அங்கு அலைகள்.

=========================================================ருத்ரா
22 மார்ச் 2015ல் எழுதியது.

"பலூன்" மேட் பை ரஜனி


"பலூன்" மேட் பை ரஜனி
=====================================================ருத்ரா

பதவிக்கு ஆசைப்படாமல் தொண்டு செய்.
மனசாட்சியை பக்கத்திலேயே வைத்துக்கொள்.
யாரையும் எதிர்த்து ஒர் வார்த்தை கூட பேசாதே.
நமக்குரிய காலம் நமக்கு வந்தே தீரும்.
ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தே ஆகவேண்டும்.
ஆண்டவன் சொல்வான்.
அப்போது தான் நீயும் சொல்வாய்.
ஆண்டவன் செய்வான்.
அப்போது தான் நீயும் செய்வாய்.
யாருக்கும் நீ பயப்படாதே.
எல்லாம் இங்கு கெட்டு கிடக்கிறது.
அவன் சொல்வான்.
அப்போது நீ எல்லாவற்றையும்
சீர் திருத்துவாய்.புரட்டி போடுவாய்.
அது வரை உன் குடும்பம் உன் தாய் தந்தையர்
உன் பிள்ளைகுட்டிகள் யாவரையும்
காத்துக்கொள்வதே உன் கடமை
அதுவும் ஆண்டவன் குரலே.
அவன் அன்றி ஒரு அரசியல் அணுவும் அசையாது.
இதுவே ஆன்மீக அரசியல்.
............................
............................

இது ஒரு பெரிய பலூன்.
இதை ஊதி ஊதி பெரிதாய்க்காட்டி
ஒன்றுமே தெரியாத எலிக்கூட்டங்களாய்ஓடும்
பெரிய படைகளுக்கு
குழல் ஊதி அறைகூவல் விட்டுக்கொண்டிருப்பதே
ரஜனி அவர்கள் கால்ஷீட் இல்லாமல்
நடத்திக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு!
என்ன அரசியல் திட்டம் என்பதே தெரியாத
ஒரு ஆன்மீகத்து ஊமைகட்டுப்பாட்டுக்குள்
நிர்வாகிகள் அமைத்து
ஒரு நீர்க்கோலம் போட்டு..அதை
ஊடகங்களுக்கும் தீனி போட்டு
இந்த பலூன் ஊதப்பட்டுக்கொண்டே வருகிறது..

அவர் ரசிகர்களுள் ஒரு எட்டுவயது சிறுவன்கூட‌
ஒரு ஊசி கொண்டு குத்தி
அதாவது ஒரு கேள்வி கெட்டு
இதை ஒரு பிரம்மாண்ட "டமார்" ஆக்கிவிடுவான்.

அது என்ன கேள்வி?

"...அவன் சொல்றான்..இவன் செய்றான்..
சரி தான் தலீவா..
அது அமித்ஷாவா? குருமூர்த்தியா?"

அந்த இமாலய ரகசியமே ஆன்மீகம்.


===============================================

தியானம்

Meditation.
======================================

They say it is

meditation
 but in a sense
it is a boiling point
where all our mind and body
evaporate
into a vacuum
where you can not
mind your
mindlessness..
You transcend all your foolery
to a new horizon of newer foolery.
Simply you can
label it psychology..
a science of mind.
You dive in the ocean of
rationalism..
but why you again
carry all these sea weeds of
irrational godly things
and other mental rubbish
and obsessions of void.

=================================  ruthraa  sivan


(இதை தமிழில் கீழே தந்திருக்கிறேன் )

தியானம்
============================================ருத்ரா

இது தான் தியானம் என்று
தியானத்தில் இருந்தவர்கள் 
சொல்கிறார்கள்.
ஒரு வகையில் 
இது ஒரு கொதிநிலை.
உள்ளமும் உடலும் வெந்து
ஆவியாய் மறைகிறது.
ஒரு மூளியான வெளிக்குள்
அது விழுகிறது.
அங்கே உள்ளம் அற்ற நிலை.
அதை உன்னால் 
உள்ளுவதும் இயலாது.
நீ திடீரென்று இப்படி
உருமாறுவதாய் அல்லது
உரு இழப்பதாய் உணர்கிறாய்.
உன் அறியாமையின் வர்ணசித்திரங்கள்
எல்லாம் அங்கே
காணாமல் போகின்றன.
அப்புறமும் அதைவிடவும் 
முட்டாள் தனமான விவாதங்களை எல்லாம்
சுமந்து கொண்டு வருகிறாய்.
தியானிப்பது என்பது
வெறும் "உளவியல் விஞ்ஞானம்"
எனும் முத்திரையை மட்டும்
வைத்திருந்தால் போதுமே.
எதற்கு இந்த‌
பொம்மை விளையாட்டு போன்ற‌
"விரல்" முத்திரைகள்.
"சூ மந்திரக்காளி"க்கூச்சல்களால்
உன் விடியல் தோன்றாது.
உன் மனதை அறிவோடு தீட்டி
இரண்டையும் கூர்மையாக்கவே
அந்த பகுத்தறிவுக்கடலுக்குள்
முக்குளி போடுகிறாய்.
மீண்டும் 
ஏன் அங்கிருந்து
"பாசிபிடித்த" கடற்பாசிகள் எனும்
குப்பை புராணங்களை
அள்ளிக்கொண்டு வருகிறாய்?
உன் மனம் வெறுமையானதில்
ஏற்பட்ட கிடு கிடு பள்ளத்தில்
விழுந்து கிடக்கிறாய்.
மனம் முறிந்து பட்ட‌
கருத்துகளையும்
அதன் கோணல் மாணல் உருவங்களையும்
கோவில்கள் என்ற பெயரில்
கொண்டு வந்த அடைக்காதே.
இந்த அடைசல்கள் 
அகற்றப்பட வேண்டியது பற்றியே
சிந்தனை செய்.
ஆம்.
தியானம் அல்ல‌
சிந்தனை செய்.

=============================================

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஒரு நிழல்

ஒரு நிழல்
==========================================ருத்ரா

அந்த அறுபத்தொன்பது வயது
முதியவன்
தன் முண்டாசை எடுத்து
முகத்தைத் துடைத்துக்கொள்கிறான்.
அந்த முகத்தில் தான்
எத்தனை சுருக்கங்கள்.
நம் தேசப்படத்து நதியின்
நெளியல் சுழியல்கள் போல்.
அவன் வேர்வை
அந்த சுருக்கங்க‌ளில் எல்லாம்
நிறைந்து வழிந்து ஓடியது.
இப்படி
இந்த நாட்டின் நதிகள் எல்லாம்
என்றைக்கு
ஒரே நாளமாய் பரவி
நம் "ஜெய்ஹிந்தை"
நீராக்கி
விதையாக்கி
பயிராக்கி
பயன் தரும் என்று தெரியவில்லை!
தாய் மண்ணே வணக்கம் என்று
தமிழில் பாடினாலும்
வந்தேமாதரம் என்று
தேசியமொழியில்
சிலிர்த்துக்கொண்டாலும்
வறட்சியில் மண்ணே கருகி
உழவின் திருமகன்கள்
எத்தனை எத்தனை பேர்
தற்கொலைகளில்
நம் கிராமியப்பொருளாதாரத்தை
நமக்கு
பாடம் சொல்லிப்போயிருக்கிறார்கள்?
கார்பரேடிஸம் எனும்
ஆக்டோபஸை நுழையவிட்டு விட்டு
இவர்கள்
இங்கு ஏதோ அரக்கன் வதம் பற்றி
குங்குமச்சேற்றில்
ரத்தவண்ணம் காட்டி
பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அதோ
அந்த அரசாங்க கட்டிடத்தில்
மூவர்ணம் அழகாக அசைகிறது
ஒரு உச்சிக்கம்பத்தில்.
அருகில்
ஒரு நீர் நிழலில் கூட‌
அது அழகாக இருக்கிறது.
ஆம்
மிக அழகாக
அந்த நிழல்
அந்த சாக்கடை நீரில் கூட!

======================================================
சனி, 27 ஜனவரி, 2018

இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!

இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!
========================================ருத்ரா

"லூப் தர்ரான் சரிதானா?"
என்று
இந்த பாடலுடன்
ஒரு பிரச்சார பிரளயம்
பெருமைக்குரிய
பாவலர் வரதராஜன் அவர்களால்
பட்டி தொட்டியெல்லாம்
ஆர்மோனியக்கட்டை
அழுத்தி அழுத்தி இசைக்கப்பட்டு
இந்த வாக்காளர்களின்
செவியும் சிந்தனையும்
நிரம்பி வழிந்தன அன்று!

அரசியலின்
புதிய விடிவு ஒரு வடிவு கொண்டது.
அந்த புயற்குழுவில்
மெல்லிதாய் இசை வருடிய‌
அந்த ராஜா
இன்று இசையின்
ராஜாதி ராஜா!

நிழல்கள் படத்தில்
அந்த "பொன்மாலைப்பொழுது"
அப்புறம்
நிறம் மாறாத பூக்களில்
"ஆயிரம் மலர்களே.."
இப்படி எத்தனை ஆயிரம்
தேன்மழையை
சொரிந்திருக்கிறார்
நம் இசைஞானி.
மேள கர்த்தாக்களும்
ஜன்ய ராகங்களும்
அதாவது இசையின்
தாயும் குட்டிகளும்
எப்போதும் அந்த ஞானியின்
குகைக்குள் குடியிருக்கும்.
கூப்பிடும் போது
செல்லமாய் அவர் ஒலியில்
குழைந்து
அருவியாய் ஆர்ப்பரிக்கும்.
அந்த இசைக்கடலை
இப்படியெல்லாம் சொல்வது
ஒரு கொட்டாங்கச்சியில்
அவரை அள்ளப்பார்ப்பது அல்லவா!
இயலுமா அது?
இது
இந்தியாவின்
இரண்டாவது பெரிய விருது தான்.
அதை அவருக்கு சூடும்போது
சிரமப்படுவார்கள்.
இமயங்களுக்கெல்லாம்
இமயம் அவர் இசை!
அந்த உயரத்தை எட்ட‌
இந்த விருதுக்கு
எத்தனை ஆயிரம் ஏணிகள்
வேண்டியிருக்குமோ?
இது தமிழனின் பெருமை.
பெருமகிழ்ச்சி கொண்டு
வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்!

====================================================


அடையாளம்

அடையாளம்
======================================ருத்ரா இ.பரமசிவன்

பேனாவும் பேப்பரும் உராய்ந்து கொள்ள‌
அரிப்பெடுத்தால் முதுகு சொறிந்து கொள்ள‌
உதவிக்கு வருவது
மனிதனின் கற்பனை..சிந்தனை.
கவிதை என்று அது கொச்சையாக்கப்படுகிறது.
அங்கே தீப்பொறி பறக்க‌
மனிதனின் மன இடுக்குகளின்
சிக்கி முக்கிக்கல்
கடைந்து கொடுக்கிறது.
மெல்லிய அனிச்சம் மலர்கள் போன்ற‌
காதல் உணர்ச்சிகளும் கூட‌
இந்த பற்சக்கரங்களில் தான்
கடகடத்துக்கொள்கின்றன.
மனிதன் பிறப்புக்கு முன் உள்ள‌
இருப்பு பற்றி
எழுதினால் படிக்க ஆளில்லை.
மனித மனக் குறுகுறுப்புகள் மட்டுமே
மசாலாப்பால் தருகிறது.
ஆண் பெண் பற்றிய தீப்பற்றியெரிதல்கள்
மத்தாப்பு கொளுத்தினால் போதும்.
ஆணும் பெண்ணும் அலையடிக்கும்.

வாழ்க்கைப்போருக்கு ஒரு சித்தாந்தமா?
இல்லை
வாழ்க்கையே தான் சிந்தாந்தமா?
முரண்பாட்டுச்  சித்திரங்கள்...
அந்த சமுதாய "சைக்காலஜி" நமைச்சல்கள்
என்றெல்லாம்
எழுத்துக்களின்
அழுக்கு மூட்டைகள் யாருக்கு வேண்டும்?
மானுட மலர்ச்சியின்
அடையாளங்கள்
ஒரு விடிவு காட்டவேண்டும் என்று
யாருக்கும் இங்கே
தினவுகள் இல்லை.
வினவுகள் இல்லை.


"சேட்"பண்ணினோமா
கன்னம் சிவந்தோமா
நகங்கள் கடித்தோமா
ஸ்மார்ட் ஃபோன் சாக்கலேட்டை
சப்பி சப்பி சுவைத்தோமா
இதுவே எழுத்து!
இதுவே படைப்பு!


==================================================
வெள்ளி, 26 ஜனவரி, 2018

நாளை நமதேநாளை நமதே
=============================================ருத்ரா

உலகநாயகன் அவர்களே!
உங்களை ஏன் இவர்கள்
கலக நாயகனாக பார்க்கிறார்கள்?
புதிய அரசியல் உதயம்
ஒன்றை விதைதூவ‌
அந்த மானுடவெளிச்சத்தின்
மாமேதை "கலாம்" அவர்களின்
பிறந்த மண்துளியிலிருந்து
நீங்கள் புறப்படுவதில்
என்ன "கொச்சைப்படுத்தல்" இருக்கிறது?
இது
அவர்கள் அடிவயிற்றுக்கிலியா?

இந்தியாவின் குடியரசு தினவிழா
நம் உள்ளங்களில்
இன்னும் மகிழ்ச்சியை நம்பிக்கையை
பெருக விட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
ஆம்
அது நம் அவலங்களையும் கவலைகளையும்
துன்ப துயரங்களின்கொடும் காட்சிகளையும்
நம் கொடியாக்கி துணியாக்கி
வர்ணங்கள் காட்டி காட்டி
அசைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
நம் அரசியல் கனவு
ஈடேறவில்லையே.
அது தான்
கமல் அவர்களே
உங்கள் காலடிகள் தோறும்
அச்சிட்டு அச்சிட்டு
இந்த மண்ணின்
காகிதத்தில் பதிக்க இருக்கின்றன.

நம் தேசிய கீதம்
எவ்வளவு நீண்ட கனவை
மாணிக்க வரிகளாக்கி
நம் முன் மடித்து மடித்து
விரித்துக்காட்டுகிறது!

"...........
பஞ்சாப் சிந்து குஜராத்து மராட்டா
"திராவிட" உத்கல பங்கா"
..............
................"

இந்தியாவை உலகில்
நாங்கள் தான் தூக்கி உயர்த்துகிறோம்
என்று
விமானங்கள் தோறும் ஏறி
வீர முழக்கம் செய்பவர்களே!

நன்கு கவனியுங்கள்!
உங்கள் அடியொற்றுபவர்கள்
எங்கள் தமிழ் நாட்டில்
வைக்கின்ற முழக்கம்
"திராவிடத்தை" அழிப்போம் என்பது.

உலக நாயகன் அவர்களே
"திராவிடத்தை"க்காப்போம்
என்ற சொல் உங்கள் உரையிலிருந்து
உதிர்ந்து விழக்கேட்டோம்.

தேசிய கீதத்தையே
அவமானம் செய்வது போல்
திராவிடத்தை
அழிக்கப்புறப்பட்டிருக்கும்
அந்த வெறித்தீயை
அழித்து ஒடுக்க‌
உங்கள் காலடிகள்
புயல்போல் புறப்படட்டும்.
உங்கள் பகுத்தறிவுச்சுடர்
இந்த சாதி மத குறுக்கீடுகளை
துடைத்து
ஒரு வெளிச்சம் பூக்க‌
புறப்படட்டும்!
வாழ்க உங்கள் இயக்கம்!
வெல்க உங்கள் பயணம்!

நாளை நமதே

இதோ
ஒரு திரைப்படம்
புதிய அரசியல் அலைகளின்
"திரை"ப்படமாக‌
நம் தமிழ்த்தரையெல்லாம்
சிலிர்க்க சிலிர்க்க
நடைபயின்று வருகிறது.
அந்த பாடல் கூட‌
ஒரு குடும்பம் இணைவதற்கான‌
ஒரு இன்னிசை முழக்கம் தானே!
நம் ஜனநாயகம்
கை வேறு கால் வேறாய்
இதயம் சுக்கல் சுக்கலாய்
ஊழல் கொடுநோயில்
சிதைவுற்றுக் கிடக்கிறதே!
தமிழ் எனும்
த‌ன்
உயிர்விசையைக்கூட‌
சில்லறை சில்லறையாக மாற்றி
சிதிலமடந்துதன் கல்லறையை இந்த‌
வாக்குப்பெட்டிக்குள்
இட்டுக்கண்டு இறுமாந்து கிடக்கும்
இந்த ஈசல்களிடையே இருந்து
ஒரு மின்னல் "பளீ ர் " இடட்டும்.

நாளை நமதே
விழித்துக்கொண்ட தமிழனுக்கு
"நாளை மட்டும் அல்ல"
நாளும் நமதே

===========================================
தாய்

தாய்
==============================================ருத்ரா

பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழுத் தவம்
கலைகையில்
வானத்தின் சிறகுகள்
வந்து ஒட்டிக்கொள்கின்றன.
தாயின் கருப்பை இனிப்பை
நக்கிப்பார்த்து நெஞ்சை வருடிக்கொள்ள‌
பிரபஞ்சமே ஏற்படுத்திய‌
பழைய ஏற்பாட்டுக்கும் பழைய ஏற்பாடே
தாய்.
புதிய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாடே
அன்னை.

நான் இருந்த சுவடு...
நான் சுருட்டி மடங்கிக்கிடந்த அந்த கூடு...
ஒரு சதைக்கூழ்க்கொடியில்
எனக்கு
உயிர் மின்சாரம் பாய்ச்சிய
அந்த கரு உலைக்கூடம்...
இருட்டைத்தின்று
ஒளியை உமிழும்
ஒரு அற்புத பரிணாமத்தின்
முதல் புத்தகத்தின்
முதல் பக்கம்..
இன்னும் என்ன சொல்ல‌
அந்த மாணிக்க வயிற்றின்
மணி விளக்கக்கோயில் பற்றி..
இந்த மூளியான வரிகளைக்கொண்டு
என்னை
இழுத்து இழுத்து போர்த்திக்கொள்கிறேன்.
தீயின் நாக்குகளுக்கும்
மண்ணின் புழுக்களுக்கும்
அந்த அர்த்தத்தை
சொல்லிக்கொடுக்கப்போகிறேன்.

குடம் உடைத்து துளை வழியே
உயிர்க்கண்ணீர் பெருக்கும்
அந்த எருமைக்காரன் வரையும்
கார்ட்டூன் சித்திரம்
சிதைகள் வழியே எரிக்கும்
தூரிகைக்கொளுந்துகளில்
நான் படர்வது....
அம்மா..அது உன் உயிரோவியம்.

டி என் ஏ ..ஆர் என் ஏ செய்த‌
சங்கிலிப்பிணைப்பை அறியாத மூடர்கள்
சங்கிலியில் அரைப்பவுன் குறைகிறது என்று
உன்னை...
தினம் தினம் சுட்டு கொள்ளிவைத்தார்களே!
இந்த விலங்குகளை விலக்கிக்கொண்டு
பார்த்தால்
அந்த மூல விலங்குகள் கூட‌
எள்ளி நகையாடும்.
இன்னும் எத்தனை நாளைக்கு
குரங்கிலிருந்து மனிதன் என்று
சொல்லிக்கொண்டிருப்பது?
மனிதனிலிருந்து
இன்னும் ஒரு கொடிய மிருகம்
கொப்பளித்துக்கொண்டிருக்கிறது!
தாயே!
உன்னால் தான் அதற்கு ஒரு
அன்பால் அணை கட்ட முடிகிறது?
மீண்டும் ஒரு பிரளயம் வருவதற்குள்
அம்மா
உன் "நோவா" எனும் தாய்மைக்கப்பல்
உயிர்களை உயிரால்
அடைகாக்கட்டும்.

பசியாய் எரிந்ததை முலைப்
பால் கொண்டு அணைத்தது.
அது தும்மியதில் இருமியதில் கூட‌
இந்த பிஞ்சுத்துடிப்புகளின்
பிரளயம் தான் இருந்தது.
அகர முதல எழுத்தெல்லாம்
அடுக்களையில் விறகாய் எரிந்தது.
பிரம்ம சூத்திரம் கூட‌
சொல் இடறி விழுந்து
பேய் முழி முழித்தது.
கடவுள் இலக்கணம்
கோடி கோடி வாக்கியங்களில்...
முற்றுப்பெறாமல்
மூலையில் கிடக்கிறது.

தாய்க்குள் தாய்
தாய்க்கு வெளியில் தாய்
தாயைச்சுற்றிலும் தாய்
தாய்..
ஐன்ஸ்ட்டீன் சொன்னான்..
ப்ளாக் ஹோல்...சிங்குலாரிடி..
வோர்ம் ஹோல்..லேம்ப்டா எனும் கான்ஸ்டண்ட..
கோவேரியன்ட டென்ஸார் ஃபீல்டு..
வெய்ல்..ரிக்கி..டென்சார்..
இன்னும் என்ன தான் சொல்வான்?

தன்னை வயிறுமுட்ட
கருப்பிடித்து வைத்துக்கொண்டு
என் பசியை அவள் உணவாக்கி
உண்டு கொள்ள
முக்கி முனகிக்கொண்டு
மூச்சைப்பிடித்துக்கொண்டு
தவித்தாளே..
அதை என்ன சொல்வது?
அவனும்
இன்னும்
யாருக்கும் அது விளங்கவே இல்லை.
அவன் தாயின் சூத்திரம் பற்றி
அப்படித்தான் சொன்னான்..

==================================================ருத்ரா
10.12.2014 ல் எழுதியது.புதன், 24 ஜனவரி, 2018

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
======================================ருத்ரா இ பரமசிவன்

நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
இது பீரா?பிராந்தியா?
எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து.
நான் கொஞ்சநேரம்
இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள்
என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன்.
அநியாயங்களை நியாயம் என்று
விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌
சமுதாய"ஷலக்கின்"கையில்
எப்போதும் ஒரு தராசும் கத்தியும்
ஆடிக்கொண்டிருக்கிறது!
வலுத்தவனின் ரத்தம் கசியும்
கொடூர கோரைப்பற்கள்
இங்கே நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறது.
அதன் கீழ்
எத்தனை ஆரவாரங்கள் நெரிசல்கள்.
அந்த கோரப்பல்லே
இவர்கள் வழி பாட்டில்...
இவர்கள் சள சளப்பு பேச்சுகளில்...
இவர்கள் வாழ்க்கை ஓட்டங்களில்...
ஏன் இது இவர்களின் "புரிதல்" பரிமாணங்களில்
விழவில்லை.
டிவிக்களில்... 4ஜி கைபேசிகளில்...
அதன் காமிராவின் அசிங்கப்பார்வையின்
ஏதோ சில கோணங்களில்...
இவர்கள் எதைத்தேடுகிறார்கள்?
மனிதனை மனிதன் செய்யும்
மௌனமான கசாப்புகள்
ஏன் இந்த மனத்திரைகளில்
அழுத்தமான பிம்பங்களாக பதியப்படவில்லை?
கொத்து கொத்தாய் கொலைகள்
சிற்றினங்களை
பேரினம் அப்படியே பிரியாணி பண்ணி சாப்பிடும்
அக்கிரமம் அநியாயம்...
அவை கலர் கலராய்
ஊடகங்களில் வாந்தியெடுக்கப்பட்ட போதும்
மனம் மரத்துப்போனவர்களாய்
சாலைகள் தோறும் ஈசல்கள் அப்பி அப்பி செல்வது போல்
எங்கே இவர்களின் பயணம்....இலக்கு?
"போதும்..போதும்
உன் புலம்பல்களையே
போதையாக்கி..
இப்படியும் ஒரு பாசாங்கா?"
திடீரென்று கோபம் முறுக்கேறுகிறது.
கண்ணாடிக்கிண்ணம்
உடைந்து தூள் தூள் ஆகிறது!
அந்த ரத்தச்சிதிலங்கள்
சிலந்திப்பூச்சி வலையாய்...
என் காரின் முகப்புக்கண்ணாடியில்!
எதுவும் எனக்குள் இன்னும்
அடங்கவே இல்லை.
அதற்குள் அந்த "டமார்".
ஒரு விபத்து நிகழ்ந்த‌
அந்த பிரம்ம முகூர்த்தத்தில்
ரெண்டு கடவுள்கள் மண்டையில்
தேங்காய் உடைத்துக்கொண்டனர் போலும்!
சிவப்புச் சகதியாய்
அந்த சிதறு தேங்காய்கள்.
இந்தக்குப்பையைக்கொண்டு
என்ன செய்யப்போகிறார்கள்?
காவலர்கள் சாக்பீஸில் வரைந்த‌
வட்டத்துள் கிடந்தேன்.
ஈக்களை நான் மொய்த்துக்கொண்டு!

===============================================
29.01.2017
.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

அந்த இருவர் (ரஜனி கமல்)

அந்த இருவர் (ரஜனி கமல்)
================================================ருத்ரா

அந்த இருவரையும்
மொய்த்து
கூட்டம் கூடிவிட்டது.
ரசிகர்கள் தலையில்
கிரீடங்கள்.

இன்னும்
மெனு எழுதிபோடவில்லை.
ஆனால்
பந்தி களைகட்டி விட்டது.
நாங்கள் ஒருவரும்
இங்கே
சாப்பிட வர வில்லை என்று
அவர்களில் சிலர்
வீரமுடன் முழங்கியதைப்பார்த்து
நம் வயிறு நிறைந்து விட்டது.
ஒரு ரஜனி நின்னாபோதும்
நூறு ரஜனி நிப்பாங்க!
(திருத்திக்கொள்ள வேண்டும்
நூறு இனி லட்சம்!)

இங்கே இவர்  என்னமோ
ஆழ்வார்பேட்டை வீட்டுத்திண்ணையில்
ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டு
பேசுவது மாதிரி
தன் ஆயுளுக்குள் இந்தியாவை
பெருமைப்படுத்திவிட்டே தான் போவேன்
என்று வெத்திலை குதப்புவது போல்
பேசுகின்றார்.
டிஜிட்டலில் இன்னும்
5ஜி யிலிருந்து 50 ஜி வரைக்கும்
தாவட்டும்.
ஆனால் அந்த வட இந்திய "ஜி"க்கள்
நமக்கு வைக்கும்
"ஹர்டில்" ரேஸில் நம்மை
மீட்டு தர
என்ன "மேனி ஃ பெஸ்டோக்கள்"
வைத்திருக்கிறார்
என்று  தெரியவில்லையே!
அவர்கள்
"ராமர் வில் முறித்ததை"த்தான்
அரங்கேற்றுகிறோம்
என்று சொல்லி
நம் "சுயாட்சியின் மு துகெலும்பை" அல்லவா
முறிக்கக்கிளம்பியிருக்கிறார்கள்.

இவர்களது
ஆத்மீகமும்
பகுத்தறிவும்
மாரீசன் சுபாஹு
பொய்மான்கள் போல்
நிழற்படங்கள் காட்டிவிடுமோ
என்றொரு அடி மனதின்  அச்சம்
நம்மை கவ்விக்கொண்டிருக்கிறது!

இந்திய ஜனநாயகம் எங்கோ
படுகுழியில்
விழுந்து கொண்டிருக்கிறது
என்று
கவலை நிறைந்த
சொற்கள் நிறைத்துத் அந்த‌
அந்த "நீதிப்பேரரசர்களின்"
மில்லியன் டாலர் கேள்விகளில்
எந்த "வேள்வியும்"
இங்கு நடப்பதற்கான‌
அறிகுறிகள் இல்லை!

ஒரு "மாமூல்" தனத்தை
"மாமூல்" அற்ற தனமாக மாற்றும்
மகத்தான வேள்விக்கு
இவர்கள்
எங்கிருங்து
"சுள்ளிகள் பொறுக்கி"
சுருதி கூட்டி
அக்கினி மூட்டப்போகிறார்கள்?
மொய்த்துக்கொண்டிருப்பது
சுறு சுறுப்பானா தேனீக்கள் தான்.
அவை
தேனீக்களா?
தேவ ஈக்களா?
இல்லை
வெறும் ஈக்களா?
மிகவும் அருகில் வந்து விட்டார்கள்.
கணப்பு சூடேறி விட்டது.
நிச்சயம்
ஒரு தூய விடியல் படைப்பார்கள்
என‌
நம்புவோமாக!
பெரு மகிழ்ச்சியுடன்
வாழ்த்துவோமாக!

================================================================


திங்கள், 22 ஜனவரி, 2018

"அர்த்தம் தேடி...."

"அர்த்தம் தேடி...."
===================================================ருத்ரா


காலையில் நாலு அம்பத்தஞ்சுக்கு
கண் விழித்து
படுக்கை சுருட்டி வைத்து
டாய்லெட் போய்
முகம் கழுவி
உப்பு இருக்கிறதா உப்பு இருக்கிறதா
என்று தொண தொணத்த அந்த விளம்பர ஓசைகளே
நாராசாமாய் துரத்த‌
டூத் பேஸ்ட் பிதுக்கி பல் விளக்கி
மைக்ரோ ஓவனில்
பால் சூடு செய்து ப்ரூ கலக்கி
கோப்பையில் பெய்து
அதைக் கைப்பிடித்து
ஹாலுக்கு வந்து
நாற்காலியில் உட்கார்ந்து
உட்கார்ந்து கொண்டே
விரலையும் மூக்கையும் வைத்து
மணிபூரகம் ரேசகம் கும்பகம்
என்று
மூச்சுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம் ஆடி
ஒரு வழியாய்
காப்பியின் கடைசிச்சொட்டோடு
என் அன்றாட தொப்பூள் கொடியின் முடிச்சை போட்டு
நிமிர்ந்த பிறகு
அவசரம் அவசரமாய்
புரட்டுகிறேன் அகராதியை
வாழ்க்கையின் அர்த்தம் தேடி....

=========================================================
13 ஏப்ரல் 2015 ல்  எழுதியது.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

ரஜனியின் ஆன்மீகம்

ரஜனியின்   ஆன்மீகம்
==========================================ருத்ரா

ஒரு கனத்த புத்தகத்தின்
பக்கங்களுக்கிடையே
ஒரு கரப்பான் பூச்சி
நசுங்கி லேமினேட் செய்யப்பட்டது
போல் ஆயிற்று.
அதன் கூழ்சதையும்
மற்றவையும் காணாமல் போனபின்
இறகுகளோடும்
முட்கால்களோடும்
அந்த காகிதங்களுக்கு இடையே
ஃபாஸ்ஸில் போல் கிடந்தது.

அது ஒரு உயிரின் பதிவா?
அது மீசையை மீசையை
ஆட்டிக்கொண்டு வரும்
நகர்வுகளின்
உறைந்து போன வடிவமா?
அதற்கும் மனம் இருந்து
எதையாவது கற்பனை செய்திருக்குமா?
அதன் மூளைப்பதிவுகளின்
மிச்சம் அந்த காகிதத்தில்
அச்சேறியிருக்குமா?

இது போல்
வாழ்க்கைப்பாறாங்கல்லில்
நசுக்கப்பட்ட‌
மனித உயிர்த்துடிப்பின்
அசைவுகள்...
அந்த மூளையின்
அந்த மன அடுக்கு மண்டலங்களின்
வீச்சுப்பதிவுகள்...
குறிப்பிட்ட‌
அந்த மனிதனின் "மேனரிசங்கள்"..
அவன் ஏதாவது
ஒரு "தர்பார் ராகத்தை"
அமர்த்தலாக‌
இசைக்கும் கம்பீரங்கள்.....
அவன் படித்தநூல்க‌ளின்
அறிவுப்பிழம்புகளின்
படிமச்சாறுகள்...
பூர்வ உத்தரமீமாம்சங்களின்
ஞானப்பிசிறுகளோடு
மார்க்ஸ் எங்கல்ஸின்
தர்க்கங்களும்....
டையலெக்டிகல் மெடீரியலிஸம் எனும்
முரண்பாடுகளையெல்லாம்
முரண்பட்டு
ஒரு முடிவுக்கு வரும்
சங்கம சித்தாந்தங்களின்
சிந்தனை அலை நொதிப்புகளும்...
கண்ணுக்குத்தெரியாத‌
"க்ளோ" எனும் வெளிச்சக்கீற்றுகளும்..
ஆகிய எல்லாம் ஆன‌
ஒரு பதிவிறக்கமே
ஆத்மா என்பது.
ஒரு "ஆள்" இப்படி
சாறு பிழிந்த வடிவமாய்
நமக்குத் தெரியும்
ஆள்மா எனும் தமிழ்ச்சொல்லே
வடமொழிக்குள்
ஆத்மா என தாவியது.
ஆத்மி என்றால் "ஆள்" தானே.
மனிதனே விலங்கிலிருந்து மாறுபட்டு
இயற்கையை "ஆளத்தொடங்கியவன்"
அவன் "ஆள்களில்" பெரும் ஆள் (பெருமாள்)
ஒருவனைத்தான்
இன்னும் தேடிக்கொன்டிருக்கிறான்.
கோவில்களில்
நின்ற வண்ணமாய் (நெடுங்கோடு)
கிடந்த வண்ணமாய் (கிடைக்கோடு)
ஜ்யாமெட்ரிகளில்
கிடக்கும் அந்த (பெரும்)ஆள்
இன்னும்
அந்த மனித தேடலின் "கார்ட்டூன்" தான்.
பக்தியின் திரை மறைப்பில்
எல்லாம் புகை மூட்டமாயும்
ஸ்லோக இரைச்சல்களாயும்
இன்னும்
வெட்டு குத்து களின்
சாதி சமய ஆர்ப்பாட்டங்களாயும்
நமக்கு அந்த பெருமாள்
தெரியாமல் தெரிந்து கொண்டிருக்கிறான்.
பிரம்மம் என்றாலும்
இப்படி ஒரு
குழப்பத்தின் பிம்பமே.
அந்த "ஆள்மியம்" அல்லது ஆத்மிகம்
என்பது
மனிதனின் ஒட்டுமொத்த
ஹோலோகிராஃபிக் இமேஜ்!
மனிதனுக்கு மனிதன் காட்டும்
பரிவும் நேசமுமே அது.
ஆனால் அது எப்படி
மனிதனை மனிதன்
அடிமைப்படுத்தும்
அல்லது தாழ்மைப்படுத்தும்
அசிங்கம் ஆகமுடியும்?
அந்த ஆத்மிகம்
மனிதன் தலையை
மனிதனே கொய்யும்
வெறியாய் எப்படித் தீப்பிடிக்க முடியும்?
ஆத்மிகம் என்று
பூடகமாய்
மனித அறிவுக்கு
பூட்டு போடும் செயல்களை
மதம் பளபளப்போடு காட்டுகிறது.
ஆயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு
ஆன்மிக பூமி என்று ஆனந்தப்படுவதில்
என்ன அர்த்தம்  இருக்க முடியும்?
ஜிகினா டாலடிக்கும்
சினிமாப்பூச்சோடு
அந்த "ஆத்மிக"த்தை
வெறும் மதத்தின் ஆத்மிகமாக‌
உடுக்கை அடித்துக்கொண்டிருப்பதே
நடிகர் ரஜனியின்
தற்போதைய திருப்பணி!
மனித அறிவின் ஊற்றுகளே !
அந்த "தேக்கத்தில்"போய்
கலந்து காணாமல் போய்விடாதீர்கள்.
அரசியலில் விழித்திரு.
அறிவில் பசித்திரு.
நம்
தமிழில் எப்போதும்
உயிர்த்து இரு!

=================================================கடவுளை நோக்கி....

கடவுளை நோக்கி....
===============================================ருத்ரா

கடவுளை அறிவதில் என்ன தெளிவு பெற்றீர்கள்?
கடவுள் மனிதன் இரண்டும் ஒன்று என்று
சங்கராச்சாரியார்கள் சொன்னபின்னும்
நான்கு வர்ணக்கொடியே
இன்னும் இந்த நாட்டை
ஆண்டு கொண்டிருக்கிறது.
சனி கிரகம் நோக்கி பயணம் செய்யும்
விஞ்ஞானி தான் உண்மை ஞானம்
எனும்இறுதி முனையை நோக்கி ஓடுகிறான்.
கடவுளை கும்பிட்டு பக்திகாட்டும் நீங்களோ
திருநள்ளாறு நோக்கி
பாய்ந்து பிறாண்டிக்கொண்டு ஓடுகிறீர்கள்
சனிப்பெயர்ச்சி தோஷம் போக்க..
அதாவது உங்கள் சுயநலம் காப்பதாய்
ஒரு மூட நினைப்பில் ஓடிக்கொண்டிருகிறீர்கள்.

*  *   *   *   *   *  *   *  *

இது வெறும் பெயர் சூட்டும் போர் தான்.
அஞ்ஞானத்தை ஞானம் என்பதும்
ஞானத்தை அஞ்ஞானம் என்பதும் தான் அது.
கட உள் அல்லது வெளியே
என்று கடந்து போய்க்கொண்டே
இருப்பது தான் ஞானத்தின் நோக்கம்.
கடவுள் என்பதோடு தேங்கிவிடுவதல்ல அது.
இல்லை இன்னும் தேடிப்போக வேண்டும்
என்பது நாத்திகம்.
போதும் இது.
வாருங்கள்மந்திரம் ஓதி
குடமுழுக்கு செய்யலாம் என்பது ஆத்திகம்.


*   *    *   *   *   *    *    *   *    *புதன், 17 ஜனவரி, 2018

கமல்+ரஜனி= ஜீபூம்பா!

கமல்+ரஜனி= ஜீபூம்பா!
===========================================ருத்ரா

அரசியல் கணிதத்தின்
ஒரு வினோத அல்ஜீப்ரா இது.
என்ன மாயமும் நிகழலாம்.
ஊழல் ஒழிக்கப்பட‌
இங்கும் ஒரு இரட்டைக்குழல்
துப்பாக்கி தான்!
ஆனால்
தோட்டாவுக்கு தடவுவது
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா?
என்று
அன்று ஒரு நிலமை வந்ததே
அதே போல்
இன்றும் ஒரு நிலமை!
பகுத்தறிவு அரசியலா?
ஆன்மீக அரசியலா?
ஒருவர் திராவிடம் என்றால்
மணக்க மணக்க‌
சிந்துவெளியிலிருந்து ஆரம்பிப்பார்.
இன்னொருவரோ
லிங்கா என்றால் என்ன?
பாபா என்றால் என்ன?
இந்தியமே ஆன்மீகம்
அந்த ஆன்மீகமே திராவிடம்
என்று சொன்னாலும் சொல்லுவார்.
தமிழிசைகளும்
குருமூர்த்திகளும்
குறுக்கே ஓடும் பூனைகளாக‌
சகுனத்தடைகள் செய்யலாம்.

ஸ்டாலின்
எடப்பாடி.. பன்னீர்
தினகரன்

பாதைகள் எப்படி அமையும்?
இது ஒரு
சுவாரஸ்யமான "விசுவலைசேஷன்"
வெறும் வாயை மெல்லும்
நம் ஊடகங்களுக்கு
அவல் மூட்டைகள் ரெடி.
ஜஸ்ட் லைக் தேட்
இது ஒரு சினிமா ப்ராஜெக்ட் போல்
எடுத்துக்கொண்டு
மக்களையே திரையாகவும்
மக்களே அதை பார்ப்பதாகவும்
வைத்து
இந்த இருவரும்நடிக்க முன்வந்தால்...?
(நடிக்க என்றால்
இங்கே இவர்களே நேரடியாக
களத்தில் இறங்குதல்  என்று பொருள்)
அரிதாரம் பூசாமல்
க்ளாப் அடிக்காமல்
காமிரா ட்ராலி இத்யாதிகள் இல்லாமல்
இவர்களே இயங்கினால்...?

காலம் (இப்பொதும் இவருக்கு காலா தான்)
பதில் சொல்லும்..
அல்லது
காலம் ஒரு மருந்து ஆகும்
நம் அரசியல் பிணிகள் யாவும் தீர்க்க!

இருப்பினும்
அன்று மெரினாவில்
முரட்டுக்கொம்புகள்
சமுத்திரமாய் வந்தது போல்
"நோட்டா"க்களும்
குவிந்து
முகமே தெரியாத ஒரு ஜனநாயகம்
பூத்திடுமோ?

இந்த மகத்தான படப்பிடிப்புகளுக்கு
"கட் சொல்லி"
கட்டை போடுவது
அந்த இருபது ரூபாய் டோக்கன்கள் அல்லவா!

இந்த கனத்த பூட்டை திறக்கும்
சாவிக்கு எங்கே போவது?

திரைகள் விலகும்.
திரைப்படம் தெரியும்.
பார்ப்போம்.
கள்ள சிடியை கண்டிப்பாக தவிருங்கள்.

===================================================

கமலின் சாசனம் (6)

கமலின் சாசனம் (6)
===========================================ருத்ரா

கல்வெட்டு சாசனம் என்று
நினைக்க வைத்தார்.
ஆனால் தெரிவதெல்லாம்
கானல் நீர் காட்சிகள் தான்.

நீரில் எழுத்துக்கள் கூட‌
சில வினாடிகள்
திவலைகளின் சிதறலாய்
தெறித்திடுமே!
இப்போது
பிப்.21 என்கின்றார்.
அதுவும் 2018 ஆ 2019 ஆ
என்று
மறுப‌டியும் ட்விட்டுவார்.
ராமநாத புரத்திலிருந்து
அவர் உலாவரும் கோலத்தின்
முதற்புள்ளி தொடங்குமாம்!

இவரும் சரி
அவரும் சரி
அந்த மலேசிய விழா எனும்
வண்ண வண்ணங்களின்
சதுப்புக்காட்டிலிருந்து
மீண்டு வரவேண்டும்.

தமிழ் நாடு அரசியல் எனும்
கொட்டாங்கச்சியில் தான்
இவர்கள் நீச்சல் குளங்களா?

உச்ச நீதி மன்ற‌
நீதிப்பேரரசர்களிடையே
உலைக்களம் ஒன்று
கொதிக்கின்றது.
அந்த கொல்லுலைக்கூடத்தில்
வெறும் அடிசரக்காய்
சிலர் விரும்பியது போல்
நம் ஜனநாயகம்
ஒரு "மத"நாயகமாய்
வார்க்கப்பட்டுவிடுமோ
என்றொரு அபாயம்
நம் கண்ணின் முன்னே
நிழல் ஆடுகின்றது.

கமலின் கருத்து எனும்
புயல்
இங்கே எங்கே மையம் கொள்ளும்
தெரியவில்லை
புரியவில்லை.

ரஜனிக்கு
குருமூர்த்தி எப்போது
ஒரு அலங்கார‌
முகமூடி ஆனார்?
மோடிஜியின்
எண்ணக்குமிழி தான்
இவர் ஆன்மீகமா?
குழம்புகின்றார்.
நம்மையும் குழப்புகின்றார்.

"இந்தியா டு டே"யின்
காகிதக்கிரீடம்
ஸ்டாலின் தலையில்!
அப்படியென்றால்
இந்த "கட் அவுட்"டுகளின்
நிழல்
எது வரை நீளும்?

கணினிப்பொறிகளின்
பட்டன் தட்டுமா
இவர்கள் கனவு?

இஸ்ரேல் பிரதமர்
நமது பிரதமரை
புரட்சி தலைவரே
என்கிறார்.

இங்கே
ஜெயகுமார்களும்
தம்பித்துரைகளும்
வட்டமடித்து கும்மியடிக்கும்
"எம்.ஜி.ஆர்" படத்தின்
எம்ஜியார்
நமக்கெதற்கு வம்பு என்று
தன் தொப்பியை
கழற்றி வைத்திடுவாரோ?

யார் கண்டது?
அரசியல்ல எல்லாம் சகஜமப்பா!
நம்ம கோடம்பாக்கத்து ப்ளாட்டோ
கவுண்டமணி அடித்த‌
கமெண்டே
நம்ம அரசியல் சட்டத்துக்குள்ளிருந்து
சட்டம் பிதுங்கி
வெளியே படம் காட்டுது.

கீரி எங்கோ?
பாம்பு எங்கோ?
இங்கே கூடை மட்டும் காலி.
சுற்றியிருக்கும்
கூட்டத்திற்கோ ஜாலி!

======================================================

செவ்வாய், 16 ஜனவரி, 2018

விழித்துக்கொள் போதும்

விழித்துக்கொள் போதும்
======================================ருத்ரா

நான் நான் என்று துருத்திக்கொண்டே இரு.
இல்லாவிட்டால் துருப்பிடித்து விடுவாய்.
"நான்" யார் என்று ஆத்மீக மழுங்கடிப்பில்
மடங்கிப்போய் விடாதே.
நான் எனும் உன் முனை
பிரபஞ்சத்தின்
அந்தப்பக்கம் வரை செல்லும்.
குறுக்கிடும் எதுவும்
உன் நட்பே.
ஊடுருவு.
உள் துளை.
நியூட்ரினோ எனும்
நியூட்ரானின் நுண்பிஞ்சு எத்தனை உலகங்களை
அடுக்கி வைத்தாலும்
ஊடுருவும் என்று
சொல்கிறான் விஞ்ஞானி.
ஒரு சாணி உருண்டையைப்பிடித்து
உன் எதிரே
அடையாளப்படுத்தி வைத்துக்கொண்டு
உன் "நெட்டுருக்களை"
"ஓங்கரிப்பதில்"
ஆயிரம் ஆண்டுகள்
நரைத்துப்போய் தொலைந்தும் விட்டன.
சூரிய உதயம்
கடலிலும் மலையிலும் காட்சிகொடுப்பது இருக்கட்டும்.
அது எப்போது
உன் நம்பிக்கை அலைகளிலும்
உன் எண்ண அடுக்குகளிலும்
தலை காட்டுவது.
இந்த காற்று மலை மழை எல்லாமே
நீ என்று நனை.
நாளை எனும் எம் எம் ஃபோம்
உனை படுக்கவைக்க‌
உன் இமையோரம் கனவு நங்கூரங்களை
எறிகின்றது.
நீ என்பவன் எப்போதும் "இன்று" தான்
நீ நாளைக்குள் புகுந்துகொள்வதானாலும்
உன் தோள்மீது
எப்போதும்
தொங்கிக்கொண்டிருக்கவேண்டும்
"இன்று"
இது எப்போதோ இறந்து போய்
நேற்றுகளாய் அழுகிய நிலையிலும்
இன்று எனும் உன்
உயிர்ப் பாக்டீரியாக்கள்
எத்தனை கோடிஆண்டுள் என்றாலும்
பனி ஃபாசில்களில்
உன் சாட்சியை காட்டிக்கொண்டே
இருக்கும்.
சம்ப்ரதாயங்கள் எனும்
பிணங்கள்
பெரும் பாறைகளாய்
உன் கழுத்தைக்கட்டிக்கொண்டு
சங்கிலியில் உன்னை
இடறிக்கொண்டிருக்கிறது.
இந்த‌
எல்லாவற்றிலிருந்து
விடுதலையாகும்
இலக்கணச்சொற்களே
"நான்" "நீ" என்பது.
ஒன்றின் அர்த்தம் இன்னொன்று.
வெற்றிடம் இருக்கிறதே
என்று
அதை கடவுள்களால் இட்டு நிரப்பதே.
வெற்றிடம் தான்
ஆற்றலின் கருவுக்கெல்லாம் கரு.
விழித்துக்கொள் போதும்.

=================================================

எங்கோ ஒரு உயரத்தில் விஜய்சேதுபதி!

எங்கோ ஒரு உயரத்தில் விஜய்சேதுபதி!
====================================================ருத்ரா

"ஒன் இந்தியா தமிழ்"
 கருத்துக்கணிப்பில்
76 சதவீதத்தையும் தாண்டி
ரசிகர்களைக் கவர்ந்த‌
நடிகராய்
விஜயசேதுபதி
உயர்ந்து நிற்கிறார்.
"ஸ்டார் வேல்யூ" என்ற‌
ஈய முலாம் பூசப்பட்ட‌
படங்களை விட‌
கதைக்குள் ஒரு சமுக ப்ரக்ஞயை
எந்த அளவுக்கு
கொளுத்திப்போடுகிறார்கள்
என்பதைப்பொறுத்தே
படம் முழுதும்
ஒரு "ஸ்டார் வேல்யூ"
வைரத்தின் ஒளிப்பட்டைகளை
கதிர் வீசுகிறது.
அந்த வகையில்
2017ல் விஜயசேதுபதியின்
விக்ரம் வேதா வும்
புரியாத புதிரும்
அவரை
உச்சத்தில் கொண்டுபோய்
வைத்து விட்டன!
அது சரி?
ஒரு பாரம்பரிய‌
நாற்காலி ஒன்றில்
"கடல் நுரை" போல்
நரைத்து விட்ட‌
தன் முழுச்சிகையில்
"சீதக்காதியின்"
"முதல் கண் வீச்சை"
(ஃபர்ஸ்ட் லுக்)
தெறிக்கவிட்ட‌
அந்த அமர்த்தலான அமர்வு
எத்தனை எத்தனை
அலைகளை
எழுப்பி விட்டிருக்கிறது!
பெரிய நடிகர்கள் எல்லாம்
கருப்பு வெளுப்பில்
"சால்ட் பெப்பர்"
காக்டெயிலுக்கு தாவி விட்டபோது
இவர் மட்டும்
முழு வெள்ளி ஜரிகைக்கூடமாய்
அள்ளித்தருகிறாரே
ஒரு கம்பீரத்தை!
அதை என்னென்பது?
நடிகர் திலகத்தின்
"எங்க ஊர் ராஜா" போல‌
யாரை நம்பி நான் "நடித்தேன்"
போங்கடா! போங்க!
என்பது போல் அல்லவா இருக்கிறது.
இவரது ஒவ்வொரு படமும்
"நவராத்திரியின்" நவ ரசங்களையும்
பிழிந்து ஊற்றுகிற‌து.
நடிப்பின் "ஊற்று" அல்லவா.
வற்றாத நடிப்புச்சுரங்கம் இவர்.
இவரது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
அன்புடன் நாம்
பொழிவோமாக!

======================================================
கேள்வி

கேள்வி
=====================================ருத்ரா

கடின பாறையிடுக்கில்
தலை நீட்டும்
 ஒரு பச்சைத் தளிர் அது.

தியானம் என்று
கண்ணை  மூடிக்கொண்டாலும்
எங்கிருந்தோ வரும்
மின்னல் அது.

ஆயிரம் பக்கங்கள்
எழுதினாலும்  படித்தாலும்
ஆயிரத்தொன்றாவதன்
ஒரு ஊற்றாய்
பீறிடும் அது.

அந்தி வண்ணத்தின்
தூரிகை விளாறுகளில்
எங்கோ ஒரு
இளங்கீற்றின்  பிசிறு போல
கவிஞனின் கடைசி எழுத்தை
முத்தமிடக் கேட்கும்
ஒரு தாகம்  அது.

யுத்தக்கடலில்
ரத்தங்களின் சத்தமாய்
மூழ்கி விட மறுத்து
ஒரு எரிமலைக்  குதப்பலை
கருவுயிர்த்து
உமிழ்ந்து காட்டும்
இன  எழுச்சி அது!

அகர முதல என்று
உரக்க குரலெழுப்பி
உலகை உலுக்கிவிடத்
துடிக்கும்
துடிப்பு அது!

========================================================திங்கள், 15 ஜனவரி, 2018

ஜெயமோகன் எனும் ஒரு பாசாங்கு

ஜெயமோகன் எனும் ஒரு பாசாங்கு

======================================ருத்ரா

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்


http://www.jeyamohan.in/105607#.Wl1edKiWbX3


----------------------------------------------------------------------------------------------------


எங்கள் அன்பான எழுத்தாளர்

ஜெயமோகன் அவர்களே !

நீங்கள்

எங்கள் தமிழ் எழுத்துக்களை

காக்காய் இறகுகளைப்போல் தான்

மகுடம் சூட்டிக்கொண்டு

அலைகிறீர்கள்

என்பதை மேலே உள்ள

உங்கள் வரிகள் அப்பட்டமாக

காட்டுகின்றன.

மிகவும் புளித்துப்போன

புராணங்களை

இதற்குமேலும்

அவை நோய்க்கிருமிகளின்

கிட்டங்கி தான்

என்று தெரிந்தும்

அதை "மேல் நோக்கு "

என்று முலாம் பூசி

அடைகாக்கும் நீங்கள்

கவிஞர் திரு வைரமுத்து

அவர்களைபற்றி

அந்த வரிகளை ஓட விட்டிருப்பது

சீக்குப்பிடித்த உங்கள்

குறுகிய இதயத்தின்

இ.சி.ஜி வரிகள் என்பதில்

எள்ளவும் சந்தேகமில்லை.

சூதர்கள்

பழங்காலத்தில்

எத்தனையோ

கிசு கிசுக்களை

கொசுக்களாக பரவ விட்டதே

நம்மை இன்னும்

மகாபாரதமாக கடித்து

டெங்கு பரவவிட்டிருக்கும்

இந்த வேளையில்

ஒவ்வொரு கொசுவையும்

லட்சக்கணக்கான சைஸுக்கு

உருப்பெருக்கி

இந்த இந்திய மண்ணை

நோய்களின் பண்ணைக்காடாக

மாற்றிக்கொண்டிருக்கும்

நீங்கள்

மனிதம் ..சமுதாயம் ..இலக்கியம்

என்றெல்லாம்

வேடங்கள் போடுவதை

நிறுத்திவிட்டு

ஒரு கதாயுதத்தைத்தூக்கிக்கொண்டு

ஏதாவது "ஒரு சேனாவின்"

பின்னால் ஓடுவதைத் தவிர

வேறு வழியில்லை.

கீழ் நோக்கி

எங்கோ ஒரு அதல பாதாளத்தில்

சாதி மத வெறிப்புகை

கக்கிக்கொண்டு விழும் நீங்கள்

"ஒரு முட்டாள்களின் சொர்க்கத்தில் "தான்

இருக்கிறீர்கள்.

கூழாங்கல் குத்துப்பாறை கூட

உங்களுக்கு "எவரெஸ்ட்" தான்.

மனிதம் எனும்

சமூக நீதியின் வெளிச்சம்

எங்கே கண்களில் பாய்ந்து விடுமோ

என்று

எழுத்துக்களின்

ஆயிரம் ஆயிரம் பாசாங்குகளில்

பாம்புப்படுக்கை விரித்துக்கொண்டு

அவதாரங்கள்

காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
"மயிற்பீலிகள்"என்று

மலையாள தேசத்தில்

ஓ.என்.வி .குரூப் என்ற

பெருங்கவிஞன் இருக்கிறானே

அவன் சுவாசம் பட்டுமா

உங்கள் பேனா

இப்படி யொரு  உலக்கையாக

ஒரு தலைகீழ் பரிணாமத்துள்

வீழ்ந்து கிடக்கிறது.

வெட்க்க்க்கம்..!


=======================================

ஒரு பொழிப்புரை

ஒரு பொழிப்புரை
=========================================ருத்ரா


கீழே நான் எழுதிய சங்கநடைப்பாடலுக்கு ஒரு  பொழிப்புரை.

________________________________________________________________

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
===============================================ருத்ரா

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
நுரையத் தரூஉம் நறவக் காட்சியான்
வேட்டுவன் யான் கூற்றம் கொண்டு
போயினும் ஓர் ஊழ்  வந்து மீட்டிய காலை
விண்ணின் இழிந்து ஓர் உயிருள் புகு தர
வேந்துகடன் ஆற்றும் நசைமிக்கூர‌
அகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌
வெண்ணிப்பறந்தலை வீழ்படுத்தாங்கு
விண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே!
என்னே பாழ் இது? ஈனப்படுகுழி
வீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌
சிலம்பும் புலம்பும்.எவன்செயும்?
இணரிடை ஊரும் அம்புல் எறும்பாய்
மீள் தர ஆங்கு எவ்விடையாயினும்
தோற்றிடும்  யான் நம் அருமைச்செம்மொழி
காத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு.
எத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து
வெல்குவன்  வெல்குவன் அதன்கண்
 உருகெழு பிறப்பின் மண்சுவை தமிழ்ச்சுவை
நனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்
மீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.

=====================================================

வீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு
நடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து
நினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்
படித்தேன். "அதியமான் நெடுமான் அஞ்சி"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்
"நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலம்..." (புறம் 232)
என்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.
இது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்
மறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி
தமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌
அவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.

(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)

===================================================ருத்ரா
27.12.2012

பொழிப்புரை
=============


வீரர்கள் போர்க்களத்தில் மறைந்தபோதும் அவர்கள் நினைவாக கல் நட்டி மயிற்பீலி சூடி தெள்ளிய மதுவை கலத்தில் பெய்து நுரைக்க நுரைக்க அதைப்படைத்து வணங்கும் நினைவின் மணம் கமழும் காட்சிகள் பெற ஆவல் கொண்டு யானும் அந்த போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறந்து போனேன்.ஆயினும் ஏதோ ஒரு ஆற்றல் எனும் ஊழ் வந்து எனக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.எனவே விண்ணிலிருந்து இறங்கி ஒரு உயிருள் புகும் ஆசையால் ஒரு மன்னன் ஆனேன்.மீண்டும் போர்க்களம் புகுந்து என் அகலமான மார்பில் ஆயிரம் அம்புகள் துளைத்து அந்த வீரம் செறிந்து மண்ணின் அகன்ற வெளியில் போர் புரியவே எனக்கு மிகவும் விருப்பம்.அப்படியே வீரமுடன் பொருது என் உயிரைப்போக்கி அந்தக்காற்றிலும் வெளியிலும் விரவும் படி உலவினேன்.

என்ன இது ? நம் தமிழ் நாடு நம் மொழி இழந்த பாலைவனம் எப்படி ஆனது?
எப்படி இந்த ஈனப்படுகுழியில் வீழ்ந்தது?

இங்கே பறக்கும் வண்டுகள் கூட துன்பத்தை ரீங்காரம் செய்கின்றன. இவ்வீழ்ச்சியினைத் துடைக்க இன்னொரு பிறவிக்குள் நுழைவேன். அது
அந்த பூக்களின் கொத்துக்களிடையே ஊரும் சிற்றெறும்பாய் இருப்பினும்
அந்த அழகிய புல்லில் தோன்றும் நான் எப்படியாயினும் நம் அருமை செம்மொழி காக்க ஒரு எறும்புப்படையாய் வல்லரண் அமைத்து கிளர்ந்து
வீறு கொண்டு எழுவேன். ஒற்றுமையும் உறுதியும் மிக்க அப்படை போல எழுந்து எத்துணை இடர்கள் உற்றபோதும் அப்போர்கள் புரிந்து உயிரைஈந்து  வெற்றிகள் நிறுவுவேன்.அதன் பின் மீண்டும் தமிழ் மண்ணின் தமிழ்ச்சுவை அறிய ஒரு நாள் பிறப்பெடுத்து வருவேன்! வருவேன்! காண்பீர்.காண்பீர்!

=====================================================================

தராசுகளின் தராசு

தராசுகளின் தராசு
=============================================ருத்ரா

ஒரு உயரமான சிகரத்தில்
தராசு.
கீழே தீர்ப்புகள் தோற்றுவிட்டால்
அவை மேலே தான்
வரவேண்டும்.
ஏனெனில் அது
தராசுகளின் தராசு.
"நுனிக்கொம்பர் ஏறினார்   அஃதிறந்து ஊக்கின்"
என்ற வரிக்கு இங்கு இடமில்லை.
ஈ காக்காய் ...ஏன்  கழுகுகள் கூட
பறந்து வர முடியாத உயரம் அது.
நீதியின் உச்சாணிக்கொம்பில்  தான்
நம் ஜனநாயகத்தின்
தூக்கணாங்குருவிக்கூடு
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது.

நம் மனசாட்சி
நம் மானிடநீதி
நம் சமுதாய நீதி
நம் உரிமைகள்.
நம் கடமைகள்.
நம் நாடு
எல்லாமே
இங்கு தான் கண்ணியமாய்
மகுடம் சூட்டிக்கொள்கிறது.
நான்கு நீதிப்பேரரசர்களின்
மன சாட்சி
மிகவும் உறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாய்
இந்த நீதியின் சிகர‌ விளிம்பில் நின்று
அறிவிப்பு செய்திருக்கிறது.
நாட்டின் ஜனநாயகம்
கீழே விழுந்தால் உடைந்துபோகும்
கண்ணாடி என்பதாலும்
அது
சில விருப்பு வெறுப்பாளர்களால்
பந்தாடப்படுவதாலும்
அதை நாங்கள் தெரியப்படுத்தா விட்டால்
நீதி எனும் உண்மையின் ஆன்மாவே
சிதைந்து போய்விடும் என்பதாலும்
எங்கே அதற்கு நாங்கள் மௌன சாட்சிகளாய்
மடங்கிப்போய் விடுவோமோ
என்ற திடுக்கிடும் உணர்விலும்
நாங்கள்
காமிராவின் முன்
ஊடகங்களின் முன்
பிரகடனம் செய்கிறோம்.
தலைமை நீதிப்பேரரசரை
நீக்குவதற்கு நாங்கள்
வரிந்து வரிந்துகட்டிக்கொண்டு வரவில்லை
என்பதும்
அதை இந்த தேசமே மேற்கொள்ளட்டும்
என்பதுமே எங்கள் நிலை.
இந்த ஊசிமுனைஇடத்தில்
ஒரு புள்ளியளவு கூட‌
நாங்கள் அங்கே இங்கே
நகர முடியாது என்பதையும்
உங்களுக்கு அறிவிக்கின்றோம்.

குஜராத் தானே
இந்தியாவின் அரசியல் காந்தஊசி காட்டும்
மாநிலம்.
அங்கு "எக்ஸ்டரா ஜுடிஷியல் கில்லிங்"
நடந்திருப்பதாக
பத்திரிகைகள் நமக்கு
முகம் காட்டுகின்றன.
அதை விசாரிக்கும் நீதிப்பேராசர்
அரசியல் நாடகங்களில்
காட்டப்படும் திடீர் காட்சி மாற்றம் போல்
"கார்டியாக் அர்ரெஸ்ட்" என்று
அறிக்கை தரப்பட்டு மறைந்து போகிறார்.
குடும்பத்தினர்
அது கொலை என ஐயம் கொண்டு
புகார் செய்கின்றனர்.
அதை விசாரிக்கும் நீதிப்பேரரசர்களுக்கு
ஒரு தர வரிசைப்பட்டியல் இருக்கிறது.
அந்த நடைமுறை
தலைமை நீதிப்பேரரசரின்
தனிப்பட்ட விருப்பத்துக்குள்
போய் விழுகிறது.
அவரின்புனித நூல் (குட் புக்ஸ்)
பக்கங்களில் தான்
இந்த நாட்டின் தேரை ஓட்டும்
கிருஷ்ணரும் அர்ஜுனரும்
இருக்கின்றனர்.
அது ஒன்றும் பகவத் கீதைத் தேர்  அல்ல.
மர்ம யோகிகள் சிலர்
எழுதும் அந்த மகாபாரதத்திற்கே
தெரியும்
யார் ஆளனும்
அதற்கு
யாரெல்லாம் "மாளணும்"?
என்று.
அதற்கும்
பதினெட்டு பருவங்கள் உண்டு.
இப்போது ஆட்சி பர்வம்
ரத்த ஆறு ஓடும் யுத்த பர்வம்
பின்னே வருகிறது.
மாட்டு மாமிசங்களை வைத்து
ஒத்திகை நடந்தும் முடிந்து விட்டது.

அந்த அர்ஜுனரும் கிருஷ்ணரும்
வேறு யாரும் அல்ல!
அந்த இருவர்கள் தான்!

இப்போது புரிகிறதா!
அந்த நீதிப்பேரரசர்கள்
ஏன் நடுநடுங்கிப்போனார்கள் என்று.

அதெல்லாம் சரி.
இதெல்லாம் ஒன்றுமில்லையாம் .

"ய ஸ்டார்ம்  இன் ய டீ கப்" தானாம்.

சும்மா
"டீ கப்பில் ஒரு ஈ கெடக்கு"
சரிதாம்ல ...ஈயை எடுத்துப்போட்டு
உறிஞ்சுல ."

"ஈயை எடுத்தா டீ (TEA)  இருக்காதே.

"கடி"ஜோக்கு சொல்லும்
அறிவு ஜீவியே
உனக்கும் காத்திருக்கு
"கும்பி பாகமும் கிருமி போஜனமும்"


================================================

ஞாநி

ஞாநி
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====================================ருத்ரா


ஒரு தாடிமீசை.
சமஸ்கிருத ஸ்லோகங்கள்
இவையெல்லாம் வேண்டாமே
"ஞானி" என்று
போட்டுக்கொள்வதற்கு
என்பதாய்
ஒரு தர்க்கத்தின் உருவகம்
ஞாநி.
சமுதாய எழுச்சி என்பது
மத்தாப்பு போல்
எரிந்து அவியும் கிளர்ச்சி அல்ல.
அலங்காரம் அற்ற‌
சொல் அடுக்குகள் போதும்.
அதில் தெறிக்கும் கேள்விகள் போதும்.
கேள்விகளே விடைகளாய்
கொப்புளிக்க வைக்கும்
கேள்விகள் அவை!
ஏதோ
கி மு கால கட்டத்து
சாக்ரடீஸ் ப்ளேட்டோக்களின்
அறிவின் விளாறுகள்
நிறைய நிறைய‌
அவர் பத்திகளில்
கனன்ற போதும்
சமூக நீதியும்
சமூக நியாயமும்
"சீரியல் பல்பு"வெளிச்சங்களின்
புள்ளிவிவரக் க‌சிவில்
கீற்றுகள் காட்டுவது மூலம்
நவீன வரலாற்றுப்பக்கங்களை
பொட்டில் அடித்தாற்போல்
நமக்கு காட்டும்
ஒரு சித்தாந்த மேதை அவர்.
இவர் விளக்கு ஏந்தியபோது மட்டுமே
மற்றவர்களின்
அசிங்கங்கங்கள் அம்பலமாகிவிடும்.
இது
இவரது எழுத்து விளக்கின்
குற்றம் அல்ல.
பத்திரிகைகள்
யாரையாவது
தாக்கவேண்டுமென்றால்
இவர் பேனாவுக்குள்
ஒளிந்து கொள்வார்கள்.
ஏனெனில்
பத்திரிகைகளுக்கு
அந்த ஊழலை விட‌
அந்த ஊழல்காரர்களின்
உருவங்கள் கிழிக்கப்படவேண்டும்
என்பதே நோக்கம்.
ஆனால்
ஞானி
எப்போதுமே
நியாயத்தின் ஊசி முனை.
இந்த தந்திர ஆட்டங்கள் ஏதும்
ஆடத்தெரியாத‌
உண்மைத்தீயின் சுடரேந்தி.
கடைசியாக‌
குருமூர்த்தி அவர்களைப் பற்றி
அவர் சந்தோஷமாகவே
விமரிசித்திருக்கிறார்.
அவர் வெளிப்படையாகவே
சங்க பரிவார "கதாயுதத்தை"
தூக்கிக்கொண்டு நின்று
அம்பலமாகி விட்டார் என்று.
இதுவே
ஞானியின் நிப்புமுனை
எவ்வளவு கூரியது
என்று காட்டும்.
இவருக்கு கண்ணீர் அஞ்சலி எழுதினால்
வேடதாரிகளே
கொஞ்சம் எட்டி நில்லுங்கள்
என்று தான் விமரிசனம் வைப்பார்.
சிறுநீரகக்கோளாறுகள்
சில கோடீஸ்வரர்களுக்கு
வெறும் சில்லறைத்தொந்தரவுகள் தான்.
இவரை
காவு கொண்ட அந்த வியாதி
மௌனமாய் அவரை
தின்று முடித்ததைக்கண்ட போது
அது நமக்கு
ஒரு தாங்கவொண்ணா அதிர்ச்சியே!
ஆனாலும்
இவர் இழப்பு
சமுதாய அலசல்கள்
இல்லாத காலி பக்கங்களைத்தான்
இனி நமக்கு காட்டும்....
இந்த பத்திரிகைகள்
ரீம் ரீமாக அச்சில்
ஓடிக்கொண்டிருந்தபோதும்.

================================================================


சனி, 13 ஜனவரி, 2018

"விக்ரம்" வரைந்த "ஸ்கெட்ச்".

"விக்ரம்" வரைந்த "ஸ்கெட்ச்".
========================================ருத்ரா

கேமிராக்காரர்கள்
வழக்கமாய் காட்டும்
மசாலா சண்டைப்படம் தான்.
ஆனாலும்
ஒவ்வொரு படத்திலும்
புதுவிதமாய்
நரம்பு புடைத்து
முக உணர்ச்சிகளில்
புது புது
எரிமலை கொப்பளிப்புகளை
தன் தனித்த பாணியில்
காட்டி
நடிப்பில் தருவதே
விக்ரமின் சிறப்பு.
ஒவ்வொரு படமும்
அவருக்கு ஒரு இமயமலைத்தவம்.
உடற்கட்டையும்
தன் நடிப்பின் இலக்கணத்துக்குள்
அடைத்து
பின் தளர்த்தி
பின் மீண்டும்
முறுக்கேற்றித்தருவதில்
விக்ரம் சளைப்பதே இல்லை.
"ஆட்டிஸத்தால்"
பால் வடிவது போல்
குழைந்து தழைந்து
அந்த "மனம் முறிந்த பிம்பத்தை"
காட்டிய‌ அந்த
"தெய்வத்திருமகனா"
இப்படி ஒரு அசுரத்தனமான‌
அசைவுகளை காட்டுவது?
வியப்பால்
தியேட்டரே வாய்பிளந்து
உறைந்து நிற்கிறது.
விக்ரம் படம் பார்க்கும்போது
அவரது மற்ற படங்களின்
ஃப்லிம் சுருள்களையும்
நம் மீது படரவிடுவதே
அவர தனிச்சிறப்பு.
அந்நியனில்
"நெகடிவ் பிலிம்" காட்சியாய்
அந்த "வெள்ளி மின்னல்களின்
நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற"
அவரது கூந்தல் நெளிவுகளிடையே
கேட்கும் அவர் கர்ஜனை
இன்னும் நம்மை கதிகலங்க வைக்கும்.
அவரது இந்த படத்தில்
வேறு மாதிரியான "ஸ்டைல்கள்"
நம்மை திகைக்க வைக்கின்றன.
மற்ற படி
தமன்னா வரும் காட்சிகள்
ஏதோ மயிலிறகு வந்து
சிங்கத்தை
கிச்சு கிச்சு மூட்டுவது போல் தான்.
சூரியின் காமெடி
பலப் பல காமெடிகளைக்கொண்டு
பற்றவைத்த‌
சூரிய காந்தி மத்தாப்பு போல்
நம்மை பிரகாசமாய்
சிரிக்க வைக்கிறது.
திரைக்கதை என்னவோ
எங்களிடம் "பரங்கி மலை" அளவு தான்.
இதை "எவெரெஸ்ட்" ஆக்கவேண்டியது
உங்கள் பொறுப்பு என்று
பாரத்தை "விக்ரமிடம்"
ஏற்றி வைத்தாற்போல் தெரிகிறது.
ஆம்
அவரும்
ஒரு வித்யாசமான‌
"கரகாட்ட"க்காரனாய் நன்றாகவே
திகில் நடனம் ஆடியிருக்கிறார்.
ஸ்கெட்ச்சில்
கோடும் வட்டமுமாய் இருக்கும்
பிக்காஸோவாய்
திருப்புமுனைகளை நன்கு
ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
தூரிகையெல்லாம்
விக்ரம் கையில் தான்!

================================================================வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு
=================================================ருத்ரா


விசும்பின் விரியிழைத் தோகையன்ன‌

மஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி

விடியல் இன்று கலித்தே ஆர்த்தது.

குரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம்

உழுதது கண்டே நனிகளி உற்று

நனந்தலைப் படப்பை நடந்தேன் ஆங்கு.

அலவன் வரிய ம்யிரிய மணற்கண்

எழுதிய போன்ம் எழுத்துக்கள் ஊர‌

கண்டேன் "தமிழ் வாழிய" என்றே!

ஆழிமகள் அடியொற்றித் தந்த‌

அனிச்சம் தூவிய மென்னகை அலையும்

அழிக்க ஒண்ணா அன்பொடு தடவி

வாழ்த்தும் வாழ்த்தும் ஈண்டு ஓர்

"தமிழ்ப்புத்தாண்டு! தமிழ்ப்புத்தாண்டு!"அஃதின்

விண் இமிழ் நுண் ஒலி எங்கணும் கேட்கும்.

கேள்மின்!கேள்மின்! மின் தமிழ் நண்பர்காள்!

மண்ணும் விண்ணும் மற்றும் எல்லா

மலர்தலை உலகம் யாவும் இது கேட்கும்.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!

தமிழ் என்றென்றும் வாழ்கவே!


=======================================================

அருஞ்சொற்பொருள்
======================

மஞ்சின் வரி ...மேகத்தின் படிமக்கீற்றுகள்

ஓவு...ஓவியம்

குரல்கதிர்....கதிர்க்கற்றைகள்

பழனம்....வயல்

நனந்தலை படப்பை...விரிந்த வெளியும் நெய்தல் சார்த்த வனமும்

அலவன் வரிய....நண்டுகள் நடந்த வரிச்சுவடுகள்

மயிரிய மணற்கண்....மெல்லிய இழைகளை

ஏற்படுத்தினாற்போன்ற கடற்கரையின் (பட்டு)மணல் படர்ந்த இடம்

எழுதிய போன்ம்...எழுதினாற் போலும் உள்ள காட்சி.

ஆழிமகள் அடியொற்றி ......கடல்மகள் அடியெடுத்து நடந்து

அனிச்சம் தூவிய மென்னகை அலையும்.....அனிச்ச மலர்கள்

தூவியதைப்போன்ற மெல்லிய நகை புரிந்து வரும் அலைகள்


===========================================ருத்ரா இ பரமசிவன்


நான் யார்?

SDC10550.JPG


நான் யார்?
======================================ருத்ரா இ.பரமசிவன்

நிச்சயம் நான் ஒரு ரமண முனி அல்ல.
என்னை
என் இரைப்பையில் தேடுவதா?
என் விதைப்பையில் தேடுவதா?
என்றெல்லாம்
என் மூளைச்செதில்களை 
செதுக்கிக்கொண்டிருக்கவும் விரும்பவில்லை.
மணிப்பூரகம் கும்பகம் ரேசகம்
என்று மூக்குத்துளைகளை பொத்தி பொத்தி
விளையாடவும் விரும்பவில்லை.
சமுதாய முடை நாற்றங்களுக்கு
பயந்து கொண்டு 
மூக்கைப்பிடித்துக்கொண்டிருக்கும்
ஒரு சாதாரண ஆம் ஆத்மி தான்.
ஆத்மீகத்தை தேடு
என்று
ராமனையும் கிருஷ்ணனையும் சிவனையும்
"பஜிக்கும்"
சப்பளாக்கட்டைகளில் நசுங்கும்
வெறும் பூச்சியும் அல்ல நான்.
ஏதோ ஒரு கட்டம் போட்ட சட்டையில்
மையோபிக் பார்வையை திருத்தும்
கண்ணாடிகள் வழியே
என் விழி உருண்டைகளை
அசைத்துக்கொண்டிருக்கும்
நடுத்தர குடும்ப அட்டைகளில் ஒட்டியிருக்கும்
ஒரு அந்துப்பூச்சி நான்.
இந்த சமுதாயம் ஒரு நாள்
விழித்துக்கொள்ளும் என்கிறார்கள்.
அந்த மாத்தாப்பு வெளிச்சங்களையெல்லாம்
தேடிக்கொண்டிருக்கும்
கனவுகளின் கூட்டுப்புழு நான்.
ஒரு நாள் அந்த‌
வர்ணப்பிரளயம் சிறகு விரிக்கலாம்.
அது வரை காகிதத்தை உழுது கொண்டிருக்கும்
வெறும்
வறட்டு விவசாயி நான்.

=================================================================


வியாழன், 11 ஜனவரி, 2018

தீவட்டிகள்

ஆண்டாள்
==============================================ருத்ரா


கோவில்களை
விட்டிறங்கி
மூலை முடுக்கெல்லாம்
இப்போது ஒலிக்கிறாள்.
அவள் பற்றிய
சொல்லையும்  பொருளையும்
உரைத்து பார்ப்பதில்
சொல் தான் தேய்ந்து போகும்.
அந்த வெளிச்சம் மறையாது.

ஒருவன்
என்னைக் கழுதை என்று
சொல்லி விட்டுப்போனான்.
அப்போது நான் ஒரு கழுதை  தான்.
ஆயிரம் பேர் வந்து
"உன்னை கழுதை "என்று சொன்னானாமே
என்று கேட்ட போது
நான் ஆயிரம் கழுதை ஆகிவிட்டேன்.
எறும்பு புற்றை இமயமலை ஆக்கும்
"பஜனை" சத்தங்களால்
செவிகள் கிழிவது தான் மிச்சம்!


கேவலம்
என்று ஒரு உபனிஷதம் இருக்கிறது.
கைவல்யம் என்ற பெயர்ச்சொல்
ஆகி
அது பிரம்மம் மட்டுமே
என்று விரித்து உரைக்கிறது.
 பிரம்மம் என்ன
கேவலம்ஆகி விட்டதா?
கேனோன் (கேணையன் )
என்றோர் உபனிஷதமும் உண்டு.
பிரம்மன் யார் என்று
அது
கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
அவன் என்ன கேணயனா?

ஒரு கல் வந்து
கல்லாக இருக்கும்
கடவுளிடம்
அர்ச்சனை செய்யவந்தாலும்
இந்தக்  கல்  அந்தக்கல்லிடம்
"உன் கோத்திரம்"
என்ன என்று கேட்கிறது.
ஆண்டாள்
தன் விண்ணப்பத்தை
ஆண்டவன் என்னும்
அந்த பெருமாளிடம்
அர்ச்சனையாய் வைத்திருந்தாலும்
என்ன கோத்திரம்
என்ற கேள்வி தானே வந்திருக்கும்.
அந்த மனவெளி உணர்ச்சியின்
"ஹெலூஸினேஷன்"
ஒரு ரசம் பிழிந்த தமிழாய்
நமக்கு கிடைத்திருக்கிறது.
தமிழின் வரப்பிரசாதம்
என்று நாம் கன்னத்தில் ஒற்றி
வணங்குவதும்
அற்புதம் தானே.

கடவுளை
"அஜாதம் அவர்ணம்" என்றெல்லாம்
போற்றி போற்றி என்று
பாடும்போது
அவன் பிறப்பும்
ஒரு வேரற்று தானே தொங்குகிறது.
பக்தி என்பதே பக்குவம்
என்பதன் மறு வடிவம்
பக்குவமற்ற பக்தியை
எப்படி அழைப்பது?
வேண்டாம்!
இருட்டில் இருப்பவர்கள் தான்
தீவட்டிகள் தூக்கி அலையவேண்டும்.

================================================

ஒரு பொங்கல் வாழ்த்து

ஒரு பொங்கல் வாழ்த்து
==============================================ருத்ரா

ஓ என் தமிழா!

பொங்கல் என்றால்

ஒரு கிலோ அரிசியும்
அரை கிலோ வெல்லமும்
கொஞ்சம் முந்திரிப்பருப்பும்
ஒரு கரும்புத்துண்டும்
அடங்கிய பொட்டலமா?

இலவசமாய் கொடுத்தால்
உன் ஒரு கிலோ
மாமிசத்தையும் அறுத்து
பாக்கெட் போட்டு
உன்னிடம் கொடுத்தால்
வாங்கிக்கொள்வாயா?

அப்படித்தான்
வாங்கிக்கொண்டிருக்கிறாய்
இத்தனை நாளும்.
உன் மொழியும் மண்ணும்
வீடும் கூடும்
காக்கைச்சிறகுகள் போல்
கிழிக்கப்பட்டு
சிதறடிக்கப்படுவதை

நீ உணர்ந்திருக்கிறாயா?

பொங்கல்...

இதன் இலக்கணம் தெரியாமல்
உன் இலக்குகள் இழந்தாய்.

பொங்கு! பொங்கு !
என்ற வினையின் ஆகுபெயரே
பொங்கல்!

அது உன் எரிமலை
என்று
இன்னும் புரியாமல்
இந்த மின்மினிப்பூச்சிகளிடமா
இன்னும் நீ
கை ஏந்துவது?

பொங்கல்! பொங்கல்! பொங்கல் !
தமிழின்
இதயத்துடிப்புகள் அவை!
அவற்றை வாழ்த்தி
என்ன பயன்?
அந்த துடிப்புகள்
அடங்கும் முன்
அவியும் முன்
அதன் ஆழிப்பேரலைகள்
பொங்கி எழுந்து
கரை கட்டிய இந்த
பாறைகளை புரட்டிப்போடட்டும்.
உன் அடிமைத்தளையின்
பழைய நூற்றாண்டுகள்
பொடிப்பொடி யாகட்டும்.
உன் தொன்மைத்தோற்றம்
சீற்றம் கொண்டு
எல்லா இழிமைகளையும்
சீர் திருத்தட்டும்!
நேர் படுத்தட்டும்!
பொங்கலோ !பொங்கல்!
தமிழா நீ பொங்கியே ஆகவேண்டும்.
அதனால் ..அதனால்
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!

==============================================


புதன், 10 ஜனவரி, 2018

கோப்பையில் காப்பி

கோப்பையில் காப்பி 
=====================================================ருத்ரா 

அன்பு நண்பர்களே!
சன்னல் திறந்து பார்த்தேன்.
காலை வணக்கம்.
கோப்பையில் காப்பி
ஆறிக்கொண்டிருக்கலாம்.
அதற்குள்
இந்த வானத்து டிகாஷனில்
ஒரு நீல வண்ணம் பருகலாம்.
நுரைக்கு முன்னே
நரைத்துப்போகும் வாழ்க்கையில்
கடல்களையும் சிப்பிகளையும்
பையில் அள்ளிப்போட்டுக்கொள்ளலாம்.
நம்பிக்கை இருக்கிறது.
ஏழு அல்ல‌
ஏழு மில்லியன் ஜன்மங்கள்
எனக்கு உண்டு.
பிண்டம் பிடித்து 
எள்ளும் தண்ணீரும் இறைத்து 
சம்ஸ்கிருத எச்சிலால் இரைச்சல் இட்டு 
ஜன்மாக்களை 
ஜபமாலை உருட்டுவதல்ல அது.
கவிதை மை ஊற்றில்
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
உடுத்திக்கொள்ளலாம்!
உங்கள் தோட்டத்தில் பாருங்கள்
ஒரு வளையல் பூச்சி ஒன்று
அந்த செம்"பருத்தி"ப்பூவில்
தன் கனவை ஆடையாக்கிக்கொள்ள‌
விரைந்து ஊர்ந்து கொண்டிருக்கிறது.
அது
ஏன் நானாக இருக்கக்கூடாது.?

========================================ருத்ரா இ.பரமசிவன்
10.01.2017ல் எழுதியது.

இரண்டு சிலைகள்

இரண்டு சிலைகள்
 =================================ருத்ரா

"என் விலாசத்தை
உன்னிடம் வைத்தேன்.
நீ
உன் விலாசம் தேடி
இங்கு வந்திருக்கிறாய்
நீ யார்?
அல்லது உன்னுள் இருக்கும்
அந்த
நான் யார்?"
கேள்வி கேட்டது சிலை.
கேள்வியைக் "கேட்டதும்"
இவன்
இங்கு சிலை!

======================================
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
=============================================செங்கீரன்

பொங்கல் திருநாளும்
தமிழ்ப்புத்தாண்டும்
ஒட்டிக்கொண்டு தானே வருகிறது.
என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லொருக்கும்.

இன்னுமா இது
உங்களுக்கு சூத்திரனின் புத்தாண்டு?
வாய்க்குள் விரலை விட்டு
ஓங்கரிக்கும்
அந்த சமஸ்கிருதப்பெயர்களை
வைத்துக்கொண்டு
சர்க்கரைப்பொங்கல் வைப்பவர்களே!
கொஞ்சம் சிந்தியுங்கள்.
தமிழன்
எழுச்சியுற‌
விழுச்சி பெற‌
வந்ததே இந்த தமிழ்ப்புத்தாண்டு.
"பழக்க"தோஷம்"
எனும் நோய்
இன்னுமா உங்களை விட்டு நீங்கவில்லை?
உங்கள் கணினியை
மடியில் வைத்து கருவுற்று
அந்த சமஸ்கிருதப்பேரை
தேடி தேடி
உங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுகின்றீர்களே !
எளிதாக சுருக்கமாய் இருக்கவே
அப்படி பெயர் வைப்பதாய்
சிலர் சொல்கிறார்கள்.

இதற்கு
ச்சூ ..சூ ..ட்ரியோ  டிர்ர்..
பா பா பா..
கொக்..கொக்..
கா கா ...
மியா மியா
இப்படியெல்லாம் கூட‌
பெயர் வைக்கலாம்.

வாயில்லாத
அந்த ஆடு மாடு
கோழி காக்கை பூனைகளை
கூப்பிடுவதைப்போல கூட
பேர் வைக்கலாமே!

என் இனிய தமிழ் நண்பர்களே
தமிழின் இன்னொலி
கேட்கப்படாத
ஒரு பாலைவனம் ஆகிடுமோ
என்ற அச்சத்தில் தான்
இந்த மனக்குமறல்.

வான "சாஸ்திரத்தையும்"
"வாக்கிய" கணித
பஞ்சாங்கங்களையும்
வராக மிஹிரர்களையின்
ஆர்ய பட்டாக்களையும்
கஷ்டப்பட்டு முன் வைத்து
தமிழ் "வருஷத்தின்"
அந்தப்பெயர்களுக்கு
சப்பைக்கட்டு செய்பவர்களே
ந‌ம்
எட்டுத்தொகையையும்
பத்துப்பாட்டையும்
ஏன் மறந்து போனீர்கள்?

தமிழ் மண்ணின்
உயிரும் மூச்சும்
இழந்து
பொருள் புரியா
மந்திரங்களுக்குள்
மறைந்து கிடப்பவர்களே!
உங்கள்
விடுதலை எப்போது
இனிய தமிழ்ச்சொல்லாக‌
ஒலிப்புயல் ஆகி
உலா வருகிறதோ....

அதுவே நம் இனிய புத்தாண்டு.
அதுவே நம் பொங்கல் புத்தாண்டு.திங்கள், 8 ஜனவரி, 2018

புத்தாண்டு குறும்பாக்கள்

புத்தாண்டு குறும்பாக்கள்
=========================================ருத்ரா


புத்தாண்டு

வழக்கம்போல் மெரீனாவில்
குத்தாண்டு.
ஆம்.
குத்தாட்டங்களின் குதூகலம்!

_____________________________________

ஆளுநர் உரை

தமிழ் நாட்டில்
பேனா இல்லை
காகிதம் இல்லை
எழுத ஆளும் இல்லை.

_____________________________________

தினகரன்

ஓட்டு சாணக்கியங்களின்
சக்கரவர்த்தி.
மற்றவர்களுக்கு சின்னம் அழகு.
இவரால் சின்னத்தற்கே அழகு.‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________

ஸ்டாலின்

கடலளவு நம்பிக்கை!
கணினிப்பொறிகளில்
மசாலா வாசனையை
வெல்ல முடியுமா?

___________________________________________

கமல்

எப்போதும்
கையில் கணினி ஏடுகள்.
ஆனந்தவிகனில் எழுத்தாணி.
கோட்டைக்கு எப்போ போவது?

___________________________________________

ரஜனி

"வரும்போது பாத்துக்கலாம்"
ஹா ஹா ஹா என்று சிரித்தவர்களின்
சிரிப்பு அடங்குமுன்னேயே
இவர்கள் மூக்கு முனையில்
போரின் வாள் முனைகள்!

______________________________________________


ஆன்மீக அரசியல்

ராகவா லாரன்ஸ்
அர்த்தம் சொல்லிவிட்டார்
ரசிகர்களுக்கு
கறி விருந்து படைத்து!

_______________________________________________

அமித்ஷாக்கள்

புரிந்து கொள்ளுவார்களா?
இந்துத்துவாக்குள்
இந்தியத்துவா இல்லை.
இந்தியத்துவாக்குள்ளும்
இந்துத்துவா இல்லை.‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


___________________________________________________

ஒரு கிளி ஜோஸ்யம் (கார்ட்டூன் )


ஒரு கிளி ஜோஸ்யம்  (கார்ட்டூன் ================================================ருத்ரா


கமலின் சாசனம் (5)

கமலின் சாசனம் (5)
==============================================ருத்ரா

இங்கு
ஜனநாயகம் தேர்தல்
இத்யாதி இத்யாதி எல்லாம்
"திருடன் திருடன்"விளையாட்டு என்று
மனம் கொதிக்கிறார் கமல்.

இந்த பையாஸ்கோப்புக்காரருக்கே
தலை சுத்த வைக்கிற‌
"கலைடோஸ்கோப்பு"க்காரர்களாக‌
இருக்கிறார்கள்
நம் வாக்காளர்கள்.
பச்சோந்தி வண்ணங்கள்
எத்தனை எத்தனை காட்டுகின்றனர்.
பாவம்
பச்சோந்திகளை உவமை சொன்னால்
அவையும் கூட தூக்கிட்டுக்கொள்ளும்.

எங்காவது
அண்ணாமலை தீபம் என்றால் போதும்
"தீபத்தின்" உச்சிக்கே சென்று
கருகிச்சாம்பலாய் போய்
இவர்கள் பக்தி காட்டத்தயார்.

ஏதாவது புதுக்கடையை திறக்க‌
"நேற்று தான்
வடமாநிலங்களிலிருந்து
வருவிக்கப்பட கோடம்பாக்கத்து
நடிகை வருகிறார்"
என்ற செய்தீ பரவியதும்
அங்கே உள்ள பலவீதிகளில்
வெப்பமும் புகையுமாய்
அப்பிக்கொள்வார்கள்
நம் மக்கள்!

இவரும் ஒரு நடிகர் வர்க்கமாய்
இருப்பதால் தான்
இவர் இருமலே
கணினியில் சற்று ட்விட்டினாலும்
லைக்குகள் லட்சங்களில் தான்.
சரி
அவரையே கேட்போம்.

உலகநாயகன் அவர்களே!
உலகத்தரம் வாய்ந்த
உங்கள் சிந்தனைகள்
எங்களை
அவ்வப்போது நன்றாகவே
கிளறி விடுகின்றன.

ரசிகர்கள் என்ற லேபிளை
முழுதுமாக உரித்துப்போட்டு விட்டு
மக்கள் என்று
இவர்களை தரிசிக்கத் தொடங்கிவிட்டீர்களா?

நம்
தேர்தல் கால‌
தேசிய பதாகை
பண நோட்டுகளால்
ஒட்டுப்போட்டு தைக்கப்பட்டுத்தான்
ப‌லப்பல ஆண்டுகளாய்
பட்டொளி வீசிக்கொண்டிருக்கிறது
என்று
உங்களுக்கு தெரியாமல் இருக்கிறதே
என்பதும்
ஒரு உலகமகா ஆச்சரியம் தான்.

நீங்கள் பல‌
சிந்தனைவாதிகளின்கருத்தோட்டத்துடன்
சிங்க்ரோனைஸ் செய்து கொள்வதற்காக‌
சித்தாந்தத்தை ட்யூன் செய்கிறீகள்
என்பதன் சான்றுகளே
இந்த ஆனந்தவிகடனின் பக்கங்கள்.

உங்கள் குதிரை
ஓட்டுவார் இன்றி
லகானை தரையில் விட்டு
இழுத்துக்கொண்டே
ஓடிக்கொண்டிருப்பதாகத்தான்
இவர்கள் பார்க்கிறார்கள்.
அரசியலில்
குதிரை பேரமும்
குதிரை வேகத்தில் தான்
ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டுகளும்
இன்ஸ்டாகிராம்களும்
உங்கள் தேசத்தின்
மேப்பை காட்டும்
"கானல் நிழலுக்குள்"
கால் வைக்கும் முன்
ரத்த சதையான‌
வாக்காளனின்
அவலங்கள் காட்டும்
அனாடமியை நன்கு
உணர்ந்து பாருங்கள்!

உங்கள் காகித ரதங்கள்
எப்போது
உயிர்த்து வந்து
இந்த ஓட்டுகளின்
ராஜவீதியில்
தூசி கிளப்பப்போகின்றன?

=================================================================


ஞாயிறு, 7 ஜனவரி, 2018

கடவுள்.

வெங்காயோபநிஷதம்
=============================================ருத்ரா

குழம்புபவர்கள்
குழப்புபவர்கள்
இவர்கள்
சொல்லாடலில்
ஜனித்த குழந்தையே
கடவுள்.

அன்றைய ரிஷிகள்
சோமச்செடியை நசுக்கிய‌
சோமபானத்தில் தான்
கடவுளை தர்சித்தார்கள்.

இன்றைக்கும்
ஒரு போதையே
கோவில்களுக்குள்
மக்கள் எனும்
மந்தைகளை
இழுத்துச்செல்கிறது.

அகரம்
உகரம்
மகரம்
கடைந்து கடைந்து
ஒலிப்பது
ஓம்
என்றார்கள்.

அதற்குள்
ஒரு கரும்பு பிழியும் எந்திரம்
இருக்கிறது.
அதில் உங்களை
கசக்கிப்பிழிந்து
அந்த இனிப்பை
பருகுங்கள் என்றார்கள்.

இந்த வேதங்கள்
வறட்டு த் தவளைகள் போல
கத்துகின்றன
என்று
ஒரு தவளை
முனிவன் ஆகி
சில வரிகளை மற்றுமே
ஒலிப்பித்தது.
தவளை போல உடற்குறையுடன்
இருந்திருப்பான் அந்த ஞானி
அதனால்
அவன் பெயர் மண்டூகன்.
அவன் படைத்ததே
மாண்டூக்யோபநிஷதம்.

அடிப்படையான
ஞான இதழ் களை
உரித்துக்கொண்டே போனால்
அதுவும்
"வெங்காயத்தை உரிப்பது போல்
இறுதியில்
ஒரு வெறுமையில் தான் முடியும்.
அதனால் தான்
நம் "வெண் தாடி" வேந்தர்
அடிக்கடி
"வெங்காயம் வெங்காயம்"
என்கிறார் போலும்!

சரி
மாண்டூக்யோபநிஷதம்  எனும்
அந்த வெங்காயோபநிஷத்தின்
உரித்து உரித்து முடித்த
இறுதி வரிகளைப்பார்ப்போம்.

நாந்தஹ ப்ரக்ஞம்  ந பஹீஹ ப்ரக்ஞம் நோப்யதஹ  ப்ரக்ஞம்
ந  ப்ரக்ஞானகனம்  ந ப்ரக்ஞம்  நா (அ )ப்ரக்ஞம் .
அத்ருஷ்டம்   அவ்யவஹார்யம்  அக்ராஹ்யம்  அலக்ஷணம்
அசிந்த்யம்  அவ்யபதேஸ்யாம்

(வெங்காயம் கண் கரிக்கிறது அல்லவா
அப்புறம் தொடர்வோம்..)

==================================================
 


ஏ.ஆர்.ரகுமான்

இசைக்கடலுக்கு அம்பது வயது
===============================ருத்ரா இ பரமசிவன்.
திரு.ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு பொன்விழா

...
மோகமுள் என்றொரு படம்
அதில் "நெடுமுடி வேணு"
ஒரு சேவலை பின் தொடர்ந்து
போய்க் கொண்டிருப்பார்!
"நேற்று ஒரு ஸ்வரத்தில் கூவியது
இன்று எந்த ஸ்வரத்தில் கூவும்
என்று
அதன் பின்னால் போய்க்கோண்டிருக்கிறேன்"
என்பார்.
கர்நாடக சங்கீத மேதைகள்
கொசுக்களின் ரெக்கைகளின்
"ஞொய்.."ல் கூட
மேள கர்த்தா ராகங்களையும்
ஜன்ய ராகங்களையும்
பிச்சு பிச்சு புரிந்து கொள்ளுவார்கள்!
மேலை நாட்டு இசை மேதைகளுக்கு
ஒலி செவிக்குள்
நுழைய வேண்டியதே இல்லை.
மௌனப்பிழம்பில்
மன அதிர்வுகளின்
அலை எண்களை காகிதத்தில்
பதிப்பித்த "நோட்டுகளின்" மூலம்
இந்த உலகத்திற்கு
ஓசை இன்பத்தை
தெவிட்டாத அமுதமாய் புகட்டினார்கள்.
"பீத்தோவன்" என்ற‌
அந்த மேதையை
பில்லியன் ஒளியாண்டுகள் அப்பால் நின்றும்
பிரபஞ்ச செவிகள் ருசித்து
"அப்ளாஸ்" செய்யும்.

ஏ.ஆர்.ரகுமான்
நம் நாட்டுக்கு கிடைத்த‌
இசைக்கருவூலம்.
மேலே சொன்ன இசைக்கீற்றுகளின்
எல்லா "நெய்தலும்"
அவரிடம் விந்தை கூட்டும்.
உலகத்தமிழர்கள் கொண்டாடும்
இசைப்பேரொளி!
உலக இசைத்தேனீக்களின்
உணவுக்கிட்டங்கி அவர்.
அவரது இசை மகரந்தங்கள்
மானுட ஆளுமையின்
பூக்களில் கடல்கள் போல் பொங்கும்.
கணினியில்
கரு பிடித்து
இசையின் உரு காட்டுவார்,
பல்லியும் பாச்சாவும் கூட‌
சிலிர்த்துக்கொண்டு ஓசையெழுப்பினால்
திரைப்பட டூயட்டுகளுக்கு
அவர் ஆத்ம ஒலி என்னும்
கேளா ஒலிக்குள் (அல்ட்ரா சோனிக்ஸ்)
வர்ணங்களாய் மெட்டு அமைக்கும்.
இசைத்துடிப்புகளில்
நான்கு வர்ண எச்சில் படுத்தும்
அற்பங்களுக்கு
அவர் விரல் கார்வைகளில் இடமில்லை.
காக்கை குருவிகூட‌
அவர் சாதி தான்.
அந்த அலகுக் கீற்றுகளிலும்
அவரது பல்கலைக்கழகம் தான்.
இந்த படம் ..அந்த பாட்டு என்று
இவருக்கு
மேப் வரைந்தால்
அந்த "சப்த" ரிஷி மண்டலம் தான்
எல்லை.
வயதுகள் எனும்
"ஸ்பீடு ப்ரேக்கர்கர்"களை
அவர் முன் காட்ட வேண்டாம்.
அந்த இசைப்பிரளயம்
பொங்கிக்கொண்டே இருக்கட்டும்.
வாழ்க!வாழ்க!
அவர் நீடூழி நீடூழி வாழ்க!

===============================================
ஒரு மீள்பதிவு ....06 01 2017 ல்  எழுதியது.