ஞாயிறு, 7 ஜூலை, 2024

காத்திருப்போம்.

 

காத்திருப்போம்.

_________________________________________



வீட்டு வாசலில் 

பவழமல்லிச்செடி.

வானத்தை குறுக்கி மடித்து

வைத்தாற்போல்

அந்தச்செடி 

வெள்ளை வெள்ளை நட்சத்திரங்களை

பூத்து உதிர்த்து குவிக்கின்றது.

சிவந்த காம்புகளில்

அவை தரையில் பரவிக்கிடக்கும்போது

நீ

எத்தனை சொற்களை உதிர்த்திருப்பாய்

அவை என்னை 

மூடிக்கொள்ள வருகின்றன.

வாசலில் இந்தச்செடி போடும் 

கோலமே 

உன் ஓவியம் எனக்கு.

அதனுள் சிலிர்க்கும்  ரோமப்புருசுகளில்

அந்த ஓவியம் என்னை

தீண்டும் முன்னே...

படபடவென்று கூட்டிப்பெருக்கி

கூடைக்குள் போட்டு விட்டாள்

வாசல் பெருக்கும் வேலைக்காரப்பெண்.

சுத்தமாய் பளிச்சென்று ஆகி விட்டதாம்.

இப்படித்தான் நிர்மாலயம் என்று சொல்லி

ஆண்டவனைத் தினம் தினம் 

தோலுரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லாத இடத்தை 

திறந்து திறந்து காட்டி

ஏமாற்றிக்கொண்டிருப்பவன் தானே

இறைவன்.

காதலின் நிர்மால்யம் என்பதும்

எங்கோ தொலைதூரத்திலிருந்து

சொட்டுகின்ற‌

பளிங்குக்கண்ணீர்ச்செறிவின்

இனிய சோகத்து விழுதுகள்.

உன் சொற்களில் முதலில் வெறுமை.

அப்புறம் தான் செறிமை...

செழுமை...எல்லாம்.

என்னையும் பெருக்கித்தள்ளி

அந்தக்குப்பையில் தான்

போட்டிருக்கிறாள்.

நாளை விடியட்டும்.

அந்த பவள மல்லிச் செடிக்காக‌

காத்திருப்போம்.


__________________________________________________

சொற்கீரன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக