திங்கள், 15 ஜூலை, 2024

மயக்கம்.

 


மயக்கம்.
_____________________________________‍


இந்த சமுதாயம் விழிப்பு நிலை
அடைய வேன்டும்.
மக்கள் எல்லோருக்கும் 
வாழ்வதற்கு சம வாய்ப்புகள்
இருக்க வேண்டும்.
திடீரென்று பேனா 
முறுக்கிக்கொண்டு
வளைந்து கொண்டன.
இப்படி எழுதியது போதும்
காதல் உணர்வுக்குத்தேவையான‌
பூக்கள்
பட்டாம்பூச்சிகள்
குயில்கள்
இவை பற்றி எழுதினால் தான்
நான் உன்னை எழுதவிடுவேன்
என்று
பேனா இன்னும் சுருண்டு கொண்டது.
சொற்களின் சுருதியை
கொஞ்சம் மாற்றிக்கொண்டேன்.
அதோ அந்த வானம் 
வானவில்லை கொடுத்து விட்டது.
அதில் அம்புகள் ஏற்றி
உங்கள் மண்ணின் வண்ணக்கனவுகளுக்கு
வளைத்துக்க்கொள்ளுங்கள்.
எல்லாப்பூக்களுக்கும்
இலைகளுக்கும்
உணவும் மூச்சும்
சூரியன்கள் சமமாக‌
வழங்குகின்றன.
பட்டாம்பூச்சிகள் பட்டா தேடி
தாலுகா அலுவலகத்திலா
பறந்து கொண்டிருக்கின்றன.
குயிலின் குரல்கள் உரிமைக்காக‌
கோர்ட் தாழ்வாரங்களிலா
குக்கூ என குரலெழுப்புகின்றன.
நத்தைகள் கூட‌
தன் பாதுகாப்பான வீடுகளை
தன் மீதே சுமந்து திரிகின்றன.
பளிங்கு ஓடைகள் 
பாட்டுகள் பாடி 
உரிமைகளின் ஈர்ப்புவிசை தேடி
ஊர்வலம் போகின்றன.
வாழை மரங்கள் இந்த‌
சிவப்பு விடியலுக்கு
பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருக்கின்றன.
பறவைகள் வரிசை வரிசையாய்
தங்கள் கோரிக்கை முழக்கங்களின்
வரிகள் எழுதி
வானத்துக்காகிதத்தை
நிரப்பிக்கொண்டிருக்கின்றன.
ஆகா!
இயற்கைக்காட்சிகள் தான் இனி
வேலன்டைன் கார்டுகள்
என்று 
பேனாவும் அரைமயக்கத்தில்
உலா வரத்தொடங்கின. 

_________________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக