திங்கள், 21 ஜூலை, 2014

காக்காய்ப்பாட்டு




காக்காய்ப்பாட்டு
==================================================ருத்ரா

வீட்டின் பின்னால் தோட்டத்தில்
நான் அந்த புல்லாந்தரிசில்
பனித்துளிகளை
கால் கட்டைவிரலால்
நக்கிப்பார்த்துக்கொண்டே நடந்தேன்.
சூரியன் சமைத்துக்கொடுத்ததில்
அவற்றிற்கு
ஏழுவர்ண ருசி.
இன்று காலை கண்விழித்ததிலிருந்தே
உள்ளம் உள்ளே எல்லாம் கலவரம் தான்.
இன்னும் சிறிது நேரத்தில்
என் நெஞ்சுக்கனத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு
புத்தகங்களை அள்ளி அணைத்துக்கொண்டு
கல்லூரி கிளம்பிவிடுவேன்.

கனம் தாங்க முடியவில்லை.
அவன் பாட்டுக்கு
ப்ராஜக்ட் நோட்டில்
ஐ லவ் யூ என்று 
ப்ரொபோஸ் பண்ணிவிட்டான்.
பென்சில் எழுத்துதான்.
ரப்பரில் அளித்துவிட்டு
நெஞ்சில் செதுக்கிக்கொண்டேன்.
காதல் கல்வெட்டுகளுக்கு
வெண்ணெய் இதயங்கள் கூட‌
கருங்கல் சிற்பம் காட்டி நிற்கும்.
அதனால் இத்தனைப்புத்தகங்களில்
அதற்கு தொட்டில்.

"ஏண்டி!இத்தனை புத்தகங்களை சுமக்கிறாய்
நீ என்ன கழுதையா?"
அம்மா அதட்டினாள்.
ஏதோ சொல்லிவிட்டு நடந்தேன்.
அவன் பென்சில் இனிப்பு
புத்தகங்கள் எல்லாமே தான்.
கற்பூரவாசனை... இதுகளுக்கு எங்கே தெரியும்.
அவள் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

முழுதாக சொல்லவில்லை.
அம்மா இலேசாக சொல்லியிருக்கிறாள்.
இப்படி கடுதாசி கொடுத்து தான்
அப்பாவை கல்யாணம் செய்துகொண்டாள் என்று.
கொஞ்சம் சொல்லும்போதே
அம்மாவுக்கு முகம் எல்லாம்
குப்பென்று சிவந்து 
வாய்க்கு பூட்டு விழுந்து விட்டது.
அப்படி இருந்தும்
சில டி.வி சீரியல்களில்
இந்த சாக்கரின் தடவிய காட்சிகள்
வரும்போதெல்லாம்...
"பொண்ணுங்களா இதுக?
காலை முறித்து அடுப்பில வைக்கணும்."
என்பாள்.

இப்போது
ஆஃபீஸில் எல்லாம் போய் சம்பாதிக்கும்
புதமைப்பெண் அம்மாவின் நெஞ்சுக்குள்
அன்று கூவிய "புதுச்சேரியின்"குயில்பாட்டு
கர்ண கடூரமாய் காக்காய் பாட்டு பாடுகிறதே.
இது தான் புரியவில்லை.
அந்த நோட்டுக்குள் விழுந்த கற்பூர வாசனையை
அம்மாவுக்கு எப்படி புரியவைப்பது?
பாவம்.அம்மா!
வாழ்க்கையின் முட்கூட்டில் தான்
இந்த காக்காய் பரிணாமம்.


கல்லூரிக்காம்பவுண்டுக்குள் எல்லாம்
காக்காய்களின் இரைச்சல்.
ஹிட்ச்காக் படத்து காக்காய்கள் போல்
கொத்து கொத்தாய் கூட்டம்.
மின்சாரக்கம்பியில் இசகு பிசகாய்
மாட்டிய ஒரு காக்கை 
மின்சாரம் தாக்கி இறந்து அங்கேயே
தொங்கிக்கொண்டிருந்தது.
"மின்சாரப்பூவே" என்ற வழக்கமான
அவள் ஹம்மிங்
சடக்கென்று நின்றது.
வகுப்புக்கு நோக்கி 
செல்லும் அவளின்
படபடப்பு அடங்கவில்லை.
என்ன இது?
காக்காய் சென்டிமெண்ட்ஸ்.
குயில்கள் கூ வென்கின்றன.
காக்காய் தானே அந்த 
முதலெழுத்தை
உயிரெழுத்தை ஒலிக்கிறது..
அவள் படபடப்பு சட்டென்று அடங்கியது.
எதிரே அந்த "பென்சில்" மன்மதன்
முறுவல் வளைவின் கரும்புவில்லுடன்!
"ஹாய்" என்றான்.
இப்போது அவளும் ஒரு கம்பத்தில்
தொங்கிக்கொண்டிருந்தாள்.

=======================================================ருத்ரா










திங்கள், 14 ஜூலை, 2014

அருகம்புல்லும்....

vaanavil vithaiyoonri...jpg



அருகம்புல்லும்....
====================================ருத்ரா இ.பரமசிவன்


வானவில்லுக்கும் 
விதையூன்றினேன் .
சூரியனைக் கொஞ்சம் கிள்ளி .
வானத்தையும் பிசைந்து
ஊன்றி வைத்தேன் .
புல்லே ஒரு நீர்ச்செடி .
வளர்த்தது.
ஏழு வர்ணத்தில்
இலை விரித்த காட்சி இது.
அழகு பொழியும்போது
பாருங்கள் அங்கே.
அருகம்புல்லும் 
வயதுக்கு வந்து விடும்.


காணாமல் போனது

2014-06-28_10-27-25_243.jpg

காணாமல் போனது
==========================================ருத்ரா

கூட்டம் கூட்டமாய் கூடிக்களிக்கிறோம்.
கூச்சல்கள்.கும்மாளங்கள்.
வெள்ளை ஆப்பங்கள்
கருப்பு ஆலிவ் பதித்த பீட்ஸாக்களாய்
பரிணாமம் ஆனபோதும்
கண்ணாடி வளையல்களின் கிளுகிளுப்புகள்
கண்ணாடிக் கிண்ணங்களில்
சிவப்பு மதுவின் குமிழிகளாய்
"க்ளுக்" என்று சிரித்தபோதும்
உதட்டு விளிம்புகளில் கூட‌
அண்ட்ராய்டு முத்தங்களாய் உரசிய போதும்
கூட்டங்கள் கூட்டங்கள் கூட்டங்கள் தான்.
காணாமல் போனது
தனிமையான இனிமை மட்டுமே.....


ருத்ரா



சொற்பொழிவு





சொற்பொழிவு
=============================================ருத்ரா

கவலைகளை
என்னிடம் தாருங்கள்.
கனவுகள் ஆக்கித்தருவேன்.
அதைக்கொண்டு
எதையும் நீங்கள் தாண்டமுடியும்.
புனித வசனங்களை
புடம் போட்டுத் தருவேன்.
மந்திரங்களை
எச்சில் படுத்தித்தருவேன்.
அதை நக்கி
இந்த பேய் பிசாசுகள் பசிதீரும்.
நீண்ட நாக்கும்
கோரைப்பல்லும்
உங்கள் தலையணையில்
உங்களோடு படுக்கவே அஞ்சும்.
செப்புத்தகடுகளில்
வட்டங்களும் கோணங்களும்
கட்டங்களும்
உங்களை இறுக்கிக் கெட்டியாக பிடித்துக்கொள்ளும்.
அப்புறம்
கனக மழை தான்.
பதினஞ்சு அடுக்கு கட்டடங்கள் தான்.
பூரண கும்பத்தில்
மாவிலைகள் குத்தி நிற்க‌
மாடுகள் கொம்புகளை ஆட்டிக்கொண்டு
உங்கள் படுக்கையறைக்கு வரும்.
ஜன்னல் கம்பிகளில் எல்லாம்
லட்சுமி கடாட்சம்.
நாராயண சொரூபம்.
ஹிரண்ய கர்ப்பம்.
தங்கப்பாளங்களில்
உங்கள் முதுகெலும்பை
புதிதாய் உருக்கி செய்து மாட்டிக்கொள்ளலாம்.
நம்புகள்.
விசுவாசம் கொள்ளுங்கள்.
விசுவாசமே விசுவரூபம்.
குருக்ஷேத்திரத்தின்
ரத கஜ துரகபதாதிகளோடு
சர்ப்பவியூகங்கள்
உங்கள்
மண்டையின் "மெடுல்லா ஆப்லாங்காட்டாவில்"
ரங்கோலிகள் போடும்போது
தீர்வு மின்னல் பளிச்சிடும்.
உள்ளங்கை ரேகையில்
சக்கரம் காட்டும் ரேகைகள்
உங்களை உயரமான நாற்காலியில் உட்கார்த்தும்.
நினைத்தது நடக்கும்.
நடப்பதை உள்ளம் நினைக்கும்.
"ராஜ குஹ்யம்" இது.
இந்த ரகசியம்
உன் காதுகளுக்கு மட்டும் ஓதப்படும்.
வர்ணங்களில் உயர்ந்த வர்ணம்
உன் செவிப்பறைகளுக்கு உண்டு.
இந்த‌
ஷீர ஸாகர ஸயனத்தை
சேவித்துப்பாருங்கள்.
யோகம் என்றால் எல்லாம் ஒன்றாய் ஆவது.
யோஹம் என்றால் இல்லாதது இருப்பது அல்லது கிடைப்பது.
ஆத்மா இருந்தால் தான் ஆத்மி.
மிருகங்களுக்கு இருப்பது ஆத்மா இல்லை.
அது "ம்ருக்யம்"
ஆனால்
உயிரின் அச்சு தான் நிழல்.
உயிரின் நிழல் தான் ஆத்மா என்ற சிந்தனை
உயர்வான சிந்தனை.
அதற்குள்
கத்தி இல்லை ஈட்டி இல்லை
துப்பாக்கிகள் இல்லை.
ரத்தம் சதையின் தீண்டல் இல்லை.
கம்பை எடுத்தாலும்
அதை ஒடித்து எரித்தாலும்
விழும் நிழல் தான் ஆத்மா.
ஆனால் அந்த நிழலைக்காட்டும்
கீதையின் ஆற்றில் நிழல் காட்ட நிறுத்தியிருப்பது
ரத்த விருட்சங்கள்.
மரணக்காடுகள்.

"அன்யே த்வ ஏவம் அஜானந்தஹ ச்ருத்வா அன்யேப்ய உபாஸதே
தே அபி ச அதிதரந்த ஏவ ம்ருத்யும் ச்ருதிபராயணாஹ.."
கீதை 13.25
(க்ஷேத்ர க்ஷேத்ஜ்ஞ விபாக யோகம்)

நீ உன் சேவியை நீட்டிவிட்டுக்கொண்டு
இதைக் கேளாமல் அறியாது கிடந்தாலும் கவலையில்லை.
உன் காதுக்குள் அதுவே விழுந்துவிடும்.
அது உன்னைக்குடைந்து குடைந்து
அந்தக்குகைக்குள் தள்ளிவிடும்; கவலற்க.

ஆம்.
மரணம் தான்.
ஆனால் அதற்குப்பெயர்
மரணத்தை கடந்து..என்று பெயர்.
மரணத்தைக்கடந்த மரணம்.
அல்லது
இந்த மரணப்பையைக்கூட‌
ஒரு கர்ப்பப்பை என்று உருவகித்துக்கொள்.
இந்த பை கிழிந்து
இன்னொரு பைக்குள் போய் விழுவதை
கற்பனை செய்.

மரணத்தை கடப்பது என்பது என்ன?
மரணம் அடைவதே அது?

எப்படியோ
அம்புகளை கூர் தீட்டு.
குருதியை பருக கொடுத்து
மரணத்தை
தாக சாந்தி செய்து கொள்.

யுத்தகளத்து சத்தங்களின் சந்தம் எல்லாம்
மரணம்.மரணம்.மரணம் தான்.
மரணம் தவிர வேறில்லை.
கிருஷ்ணன்
பாஞ்ச ஜன்யம் ஊதிச்சொன்னாலும் சரி.
சங்கரர் அதை
பாஷ்யமாக்கித் தந்தாலும் சரி.

மரணத்தைக்கண்டு அஞ்சாதே.
அப்போது தான்
யுத்தத்தைக்கண்டு அஞ்சமாட்டாய்.

மனிதனுக்கு மனிதன் சத்ரு ஆகுமுன்னமேயே
மனிதனுக்கு சத்ருவே யுத்தம் தான்
என்பதை தவிர‌
மற்றைதையெல்லாம்
நீ புரிந்து கொள்.
அதுவே கீதை.
அது மட்டும் தான் கீதை.

தர்மத்தின் வாழ்வுதன்னை
சூது கவ்வும் என்பதெல்லாம்
விஷ சாக்லேட்டை சுற்றியிருக்கும்
ஜிகினா பேப்பர்.


================================================ருத்ரா