மழை
________________________________________
மழை
இப்போது எதை சொல்லவருகிறது?
மேகக்கரு மண்டலத்தில்
இருந்த நடப்புகளையா?
அங்கே நெளிந்து பின்னி
நெய்தல் பாட்டுகள் சொன்ன
நாளங்களையா?
மண்ணின் நெருப்பு தாகங்களை
அசைபோட்டு அசைபோட்டு
இதற்கு மேலும்
முட்டிக்கொண்டு நிற்கிற
நீர்க்கர்ப்பத்தின்
நெருக்கடித்தருணங்களின்
கன்னிக்குடங்களை உடையவிடாமல்
எப்படி கோர்த்துக்கொண்டிருப்பது?
மழையே!
உன் கட்டுகள் அறுந்தது.
உன் விடுதலைக்கு
இங்கே யாரும் சரித்திரம்
எழுதிக்கொண்டிருக்க வில்லை.
சரித்திரத்தின் சரித்திரத்தையே
இவர்கள்
கரையான்களுக்கு
தின்னக்கொடுத்தவர்கள்.
மழையே நீ
உன் கனத்த எழுத்துக்களில்
ஏதாவது எழுதிக்கொண்டிரு.
புரிந்து கொள்ளவேண்டியதை
இவர்கள்
புரிந்து கொண்டே ஆகவேண்டும்.
மழையே
நீரிழைகளின் ஒலிகள் கோர்த்த
உன் சொற்பொழிவுகள் தொடரட்டும்.
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக