சனி, 29 பிப்ரவரி, 2020

"தமிழ்"

"தமிழ்"
=========================================ருத்ரா

என்ன உற்றுப்பார்க்கிறாய்?
இது என்ன ஒலி
என்று வியக்கிறாயா?
உன் காயலாங்கடை
சமாச்சாரங்களிலிருந்து
விலகியிருக்கிறதே
என்று முழிக்கிறாயா?
உன் வேர்வை
உன் ரத்தம்
உன் சத்தம்
என்றோ
பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்
கல்லுக்குள்ளும்
மண்ணுக்குள்ளும்
நசுங்கிக்கிடந்து
இன்று உன் உயிருக்குள்
ஒரு மின்னல் பாய்ச்சுகிறது
என உணர்கின்றாயா?
உன் ஓர்மை விளிம்பில்
எட்டுத்தொகையும்
பத்துப்பாட்டும்
வண்ணம் காட்டும்
பளிங்கு வெள்ளத்தின்
பஃ றுளியாறுகள்
பாய்ந்தோடுகின்றனவா....?
...............................
...................................
ஸ்டாப் ஸ்டாப்  மச்சி..
சினிமா பாஷையிலே சொல்லு.
சூப்பர் ஸ்டாரண்டை
இடுப்பு நெளிச்சுக்கிணு
குத்தாட்டம் போட்டுச்சே
அந்தப்படத்துலே
அந்தப்பொண்ணா?
அது பேரு வாய்ல நொழையலே...
இதும் பேரும்
(அதாவது "தமிழ்")
பல்லு  ஒடையுது ..நைனா...
........
அவன் சொல்லிக்கொண்டே போனான்.
இடை மறித்தேன்.

"அல்வா"...
இந்தப்பேரு
எப்படி இருக்கு?
கடுப்படித்தேன் அவனை.
அதுக்கென்ன மச்சி..
ஷோக்கா இனிப்பா
அப்டியே
முழுங்கிடலாமே "அண்ணாத்தெ"


======================================================







அரசியல் ஒரு சாக்கடையா?

அரசியல் ஒரு சாக்கடையா?
========================================ருத்ரா



அரசியல் ஒரு சாக்கடையா?

ஆம்
சாக்கடை தான்.
சாதி மதம்
மனிதன் பேராசை.
மானிடப்பண்புகளை
வெறும்
மாமிசப்பிண்டங்களாக்கி
கூறு போடும்
வியாபாரக்கூச்சல்கள்
மானுடத்தின் சவப்பெட்டிக்கு
ஆணிகளை
ஒவ்வொன்றாய் அடித்து
அலங்கரிக்கும்
விளம்பரக்கூப்பாடுகள்
பொய்யை
கடவுளாக்கி
மனிதர்களை கசாப்பு செய்யும்
தந்திரங்கள்
...................
இவையெல்லாம் சாக்கடை தானே !
இவற்றில் நெளியும் புழுக்கள்
என்றாவது ஒரு நாள்
புயல்கள் ஆகிடுமோ?
என்ற நம்பிக்கைகளும்
இங்கே
நெளிந்துகிடக்கின்றன.
புயல் வீசும்போது
பார்க்கலாம்.
அது வரை இது இங்கே
சாக்கடை ..சாக்கடை ..சாக்கடையே தான்.

================================================


எது காதல்?





எது காதல்?
=======================================ருத்ரா

காதல் இது அல்ல.
காதல் அது அல்ல.
பின் 
எது காதல்?
அந்த பட்டாம்பூச்சிகளின் 
பின்னே போ!
பூக்களுள் நுழைந்து
மகரந்தக் கடல் துளிகளுக்குள்
இழைந்து விடு.
இன்னும்
காதலின் ரங்கோலிகள்
உனக்கு வண்ணம் காட்டவில்லையா?
அதோ
அந்த அடி வானவிளிம்பை
அதன் மீது கவிழ்ந்துகொண்டிருக்கும்
மேல் வானக்கிண்ணத்தை 
உற்றுப்பார்.
ஆம்.
அது உன் காதலியின்
இமை மூடிய‌ 
ஏக்கத்தில் எழுதிய கிறக்கத்தின்
பிஞ்சுக்கவிதை.
காதல் பிழம்பின்
அந்த விடியல் கீற்றை 
இன்னுமா நீ புரிந்து கொள்ளவில்லை?

========================================================

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

டெல்லி எனும் காடு.

டெல்லி எனும் காடு.
==============================================ருத்ரா


நம் தலை நகரம்
தலை கொய்யப்பட்டு
முண்டமாய்
அநீதியின் பிண்டமாய்
மரண ஓலங்களின்
காடுகள் ஆகிப்போன‌
காட்சி அல்லவா இது!

தன் குறைகளை
வெளிப்படுத்தும் மக்கள்
இங்கே
குப்பையாக்கப்பட்டார்கள்.
குதறப்பட்டார்கள்.
துப்பாக்கிகள்
"ஜெய்ஸ்ரீராம் "கள் ஆகி
அந்த மக்களை தின்று தீர்த்தன.
தீ மூட்டி
டெல்லியையே
சுட்டு சாப்பிடத்துடித்தன‌
அரக்கத்தனங்கள்.
நெருப்பின் வாய்ப்பட்ட
மிச்ச சொச்சங்கள்
பிய்த்து எறியப்பட்ட‌
பறவைகளின் சிறகுகளாய்
கருகிய காய் கறி பழக்குப்பைகளாய்
வெந்தும் வேகாத கட்டிட எலும்புக்கூடுகளாய்
வாகனங்களின்
உடைந்த விலாஎலும்புகளோடு
கிடந்தன.
"மாட்டிக்கிட்டயா?
என் துப்பாகிக்குறிக்கு
உன் குறியைக்காட்டு"
என்ற‌
அசுரக் குரல் எச்சங்கள்
அந்த நகரை ஆபாசங்களால்
கறைப்படுத்திக்கிடக்கின்றன.
அந்த
அசிங்கங்களை
சுத்தப்படுத்தாதீர்கள்.
அப்படியே கிடக்கட்டும்
இவை தான்
இனிமேல் நம்
அற்புத மியூசியங்கள்.
சதி எனும் உடன் கட்டை "ஏற்றும்"
மதச் சடங்கை
நம் ஜனநாயகத்தாய்க்கு
நடத்திப்பார்க்கும்
பாசிச வல்லூறுகளின் நிழல்
நம்
தலை நகரை
கற்பழித்துவிட்டுப் போய்விட்ட‌
சுவடுகளின்
அநாகரிக‌ மியூசியங்கள் இவை.
உலகத்தீரே
உங்கள் சுற்றுலாத்தினவுகளுக்கு
எங்கள்
வாக்குப்பெட்டிகளின்
சிதறிய குடல்களும் ரணங்களும்
குருதி கொப்பளிக்கக்கிடந்து
காட்சி தருவதை
கண்டு மகிழ வாருங்கள்.
கை நிறைய டாலர்களோடு
வாருங்கள்.
அதிதி தேவோ பவ.

=============================================

திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாஜ்மகால்

தாஜ்மகால்
=====================================ருத்ரா

விருந்தினர்
அயல் நாட்டு நண்பர்.
தாஜ்மகாலின்
உள்ளும் புறமும்
கொடியும் பூக்களுமாய்
அங்கு கலை ஒளியாய்
பின்னிக்கிடப்பதை
கண்டு கண்டு ரசித்தார்.
உள் நாட்டு நண்பர்
மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
"நமஸ்தே ஜி!
நன்றாகப்பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்த தடவை
நீங்கள் பார்க்க வரும்போது
இது கட்டாந்தரை ஆகிவிடலாம்.
எங்கள் கடப்பாரை சேனைகளின்
கைகள்
துறு துறுத்துக்கொண்டிருக்கின்றன."

================================================

கண்ணொடு கண்ணோக்கின்

கண்ணொடு கண்ணோக்கின்
==============================================ருத்ரா

கண்ணொடு கண்ணோக்கின்..
என்று
முடிந்து விட்ட பிறகு
என்னவோ
"ப்ரோபோஸ்"பண்ணறது அது இது
என்றெல்லாம்
சடங்குகள் இருக்கிறதாமே
காதலுக்கு?
அவை என்ன ஈமச்சடங்குகளா
காதலுக்கு?
அப்புறம் அந்த
அந்த ரோஜாவை நீட்டி
அதையும் கொச்சைப்படுத்தி
கருக வைத்து...
"ஓ காதலே!
உனக்கு இத்தனை சித்திரவதைகளா?"

=====================================================

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

அண்ணே..அண்ணே

அண்ணே..அண்ணே
=========================================ருத்ரா
(நகைச்சுவைக்காக)



"அண்ணே அந்த மண்டலத்துக்குப்போகணும்னா
"இஸ்ரோ" வழியாத்தான் போகணும்மா அண்ணே?"

"என்னடா மண்டலம் கிண்டலம்னு சொல்றே.
எதைச்சொல்றடா நீ?"

"அதாண்ணே..அந்த "வேளாண் மண்டலம் வேளாண் மண்டலம்னு
சொல்றாங்களே.அதத்தாண்ணே சொல்றேன்.
சந்திர மண்டலத்துக்கு அடுத்தால தானே அது இருக்கு?"

"ஏய்..ஏய்ய்..அடேய்.."டெல்டா மண்டையா" உன்னே...."
(அடிக்க கை ஓங்குகிறார் இவர்.அவர் தப்பி விடுகிறார்)


===================================================================

தாமிரபரணி.





தாமிரபரணி.
======================================================ருத்ரா

பளிங்கு நீரை
எங்கள் உயிராக்கி பயிராக்கி
மண்ணின்
பரிணாமத்தை
மலர்த்திக்காட்டி
ஓடுகின்ற பொன்னின் பொருநையே
வாழி நீ வாழி!

கல்லிடைக்குறிச்சி
கள்ளிக்காடாயிருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

அம்பாசமுத்திரம்
வம்பாய் வறண்டு தான் கிடக்கும்
நீ
வரவில்லை என்றால்!

சேரன் மாதேவி
சோறு கண்டிருப்பாளா
நீ
வரவில்லை என்றால்!

நெல்லைச்சீமை
இல்லை சீமை ஆயிருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

சிந்து பூந்துறையும்
சீரிழந்து நிற்கும்
நீ
வரவில்லை என்றால்!

திருவைகுண்டம்
வெறும் வைகுண்டம் ஆகியிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

ஆறுமுகன் ஏரி
மாறு முகம் கொண்டு பாழ் பட்டிருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

காயல் பட்டினமும்
காய்ந்தே கிடந்திருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

வங்காள விரிகுடாவும்
அலை விரியாக்  கடலாகும்.
நீ
வரவில்லை என்றால்!

"திருச்சீர் அலைவாய்" இல்லாத
திருமுருகாற்றுப்படைதான்
நமக்கும் கிடைத்திருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

செலவாய் செலவாய்  எங்களுக்கு
இழப்புகள் எத்தனை வந்தாலும்
வருவாய் வருவாய் எங்களுக்கு
வருவாய் அருள்வாய் பல கோடி!

எங்கள்
உயிரினும் மேலான பொருநையே
ஊழிகள் பலவாக ஓடிவிடினும்
வாழி நீ !வாழி நீ!!
எங்கள்
நீடு வளர் பொருநையே !

=====================================================






சாய்வு நாற்காலி........

சாய்வு நாற்காலி........ 
===========================ருத்ரா இ பரமசிவன்


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" 
என்று 
நாலாங்கிளாஸில் சத்தம் போட்டு படித்தோம். 

ஒன்றும் புரியவில்லை. 

"அன்னையும் தந்தையும் தானே"... 
அப்போதும் எம்.கே.டி.பாகவதரின் 
கணீர்க்குரலில் வடிந்த தேனை 
நக்கியவர்களாக மட்டுமே நாம். 

அங்கு அம்மா வெறும் சும்மா. 

"அன்னையின் ஆணை" படம் பார்த்த போதும் 
நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் 
ரசித்து போற்றினோம் 

அன்னை அங்கு வரவில்லை 

"தாயில்லாமல் நானில்லை" என்று 
வாத்தியார் வாயசைத்து நடித்தபோதும் 
நாம் வாயில் ஈ நுழைந்தது தெரியாமல் 
படம் பார்த்தோம். 

தாயின் பக்கம் நாம் போகவே இல்லை 

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" என்று 
அன்று 
அவள் நம்மை தன் இதயத்தில் 
சாய்த்திருந்தது எல்லாம் 
இன்று 
இந்த‌ "சாய்வு"நாற்காலியில் ம‌ட்டுமே 
நினைவுக்கு வ‌ந்த‌து!

எனது அந்திவானம் 
என்னை மறைக்க 
வந்து விட்ட வேளையில்
இன்னும் ஒரு விடியலாய்
அம்மாவின் தோளில் நான்
சாய்ந்தாடும் 
இன்னும் ஒரு குழந்தையாய் நான்.
அம்மா பற்றிய 
பழைய சினிமா பாட்டுகள்
என் சுகமான தொட்டில்.



==============================================

வியாழன், 20 பிப்ரவரி, 2020

விஜய்

விஜய்
================================================ருத்ரா

திரைப்படங்களின்
நிழல்களுக்குள்
மக்களின் ரத்த ஓட்டங்கள்
சூடேறுவது
ஒரு சமுதாய ஆபாசம் என்றே
சிந்தனையாளர் சிந்திக்கிறார்கள்.
மக்கள்
ஒரு கூட்டமாக இல்லாமல்
தனி மனித மலர்ச்சிகளின்
தொகுப்பாக உருவாகுவதே
பரிணாம இயலின் சிகரம் எனலாம்.
மேலை நாடுகள்
அந்த மலையின் உச்சியை நோக்கி
சென்று கொண்டிருக்கின்றனவா
இல்லையா
என்பதும் கேள்வி நிலையில் தான்
உள்ளது.
எம் ஜி ஆர் தொடங்கி
ஜெயலலிதா உள்ளிட்டு
இந்த அரிதார அலப்பறைகள்
மக்களை
மந்தைகளாகத்தான்
மிச்சப்ப்டுத்தி இருக்கின்றன.
நம் நாட்டில்
சாதிகளும் மதங்களும்
இந்த மக்களை
மானுடம் என்பதன் ஒட்டுதலே
இல்லாத‌
வறட்டு அச்சுகளில் தான்
ஊற்றி வார்க்கின்றன‌
என்பதே
நம் நீண்ட வரலாறு.
அந்த மலைப்பாம்பின் விழுங்கலில்
மனிதத்தன்மையின்
எலும்புகள் எல்லாம்
நொறுங்கித்தான் கிடக்கின்றன.
இந்த லேசர் லைட்
சாக்கடை மழையில்
ரஜனி என்ன?
விஜய் என்ன?
எல்லாருமே
மக்களுக்கு வேடிக்கை காட்ட வந்தவர்களாய்
மக்களை வேதனைகளின் வாடிக்கைகளில்
வாட்டி வதக்கி
உப்புக்கண்டம் போடுபவர்களாகத்தான்
இருக்கிறார்கள்.
இந்த இருட்டு
எப்போது ஒளியால்
கீறப்படப்போகிறது?
விடியல் வெகு தூரம் இல்லை என்று
நம்புவோமாக!

___________________________________________________________________



காதலுக்கு கண்ணில்லை.

காதலுக்கு கண்ணில்லை.
‍‍‍‍_________________________
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கண்ணில்லை தான்.
அதனால்
விழியாவும் முகம் ஆச்சு.
முகம் யாவும் விழி ஆச்சு.



உன்னைக்காணாத கண்ணும்..
____________________________‍‍‍‍_____________

அவளைக்"கண்டதில்லை."
விரல்கள் ப்ரெய்லி ஆயின.
தடவு மொழியில்
தடவு இன்பம்.
கண்டேன் கண்டேன்
அந்த எழுத்துக்கள்
அவள் "பெயர்".
அதுவும் நானாக வைத்த
பெயர்.

______________________________________________



பொன்சிறகு
_____________

மனதைக் கண்கள் ஆக்கி
தரிசித்துக்கொண்டோம் அந்த‌
காதல் பொன் சிறகை!


காதலுக்கும் ஒரு கண்ணாடி.
____________________________

கிட்டப்பார்வையில்
அவள் நகவளைவுக்குள்
ஆயிரம் நிலாப்பிறைகள்.
தூரப்பார்வையில் அவள்
நட்சத்திரங்களின் பூ மழை!


________________________________________________

திங்கள், 17 பிப்ரவரி, 2020

அழல் நெய் கலிங்கம்....பொழிப்புரை

அழல் நெய் கலிங்கம்.
=============================================

குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்
வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்
கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு
நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்
குறி இடம் விரைய மெல் இறை நெகிழ
அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌
கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்
ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை
அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌
நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.
"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான் 
ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.

========================================ருத்ரா

பொழிப்புரை 
------------------------------------------------------------------------

அழல் நெய் கலிங்கம்.

=====================================ருத்ரா.

குரவம் மற்றும் மரவ மரங்கள் தூவிய‌ அடர்நிழல் செறிந்த காட்டில் வேங்கை மரமும் தன் வரிகளால் அச்சமூட்ட‌ விளங்கும் இருளான காட்டுவழியை  அகன்ற வீரம் செறிந்த மார்பனான தலைவன் போர்க்களம் புகுவது போல் கடந்து முன்னேறுகிறான். அப்போது அவன் காலில் உள்ள வேலைப்பாடுகள் நிறைந்த அவன் கழல் நிலம் அதிர ஒரு செய்தியை நுண்மையாக தலைவிக்கு ஒலிபரப்புகிறது. அவன் தன் காதலியை சந்திக்கும் இடத்தின் குறிப்பை அல்லது குறியை விரைவாக தெரிவிக்கிறது.அப்பொழுதே காதலியின் அழகிய மெல்லிய் முன் கை மெலிந்து வாடி வளைகளை நெகிழ்த்துகிறது.நுண்மையான அந்த பசலை நோய் (அதாவது காதலனைப் பிரிந்த  துன்பம்) அவளை வதைக்கிறது. ஆனால் அவள் விழிகளோ கூரிய அம்பாக அவிழ்ந்து தலைவனை காதலால்
தாக்குகின்றன.அவளும் அந்த மூங்கில் காட்டு மலை அடுக்குகள் நிறைந்த நாட்டவனான தலைவனை நோக்கி அந்த நெடிய வழியில் நடந்தாள். அந்த பிரிவு நோய் எரிக்கும் துன்பமாய் 
அவளை போர்த்தியிருக்கிறது.நெருப்பு இழையில் நெய்த ஆடையை உடுத்தியிருப்பது போன்ற துன்பத்தில் அவள் அந்த காடு நோக்கி நடந்தாள்.
போரில் பல வேல்களை வெற்றியுடன் கையாண்ட அவன் அவளது ஆழம் மிக்க விழிகளை வெல்ல முடியவில்லை.அதில் அவன் தோற்றுபோகிறான்.
ஆனால் அவள் காதலை  அவன் வென்று விடுகிறான்.

==============================================












வேலன்டைன் ‍..3



துடியன்ன இமைகள் காட்டுதி
=====================================
ருத்ரா இ பரமசிவன்



ஈயல் மூசு அடர்கான் அறையிடை
ஆறு உய்த்தன்ன ஏகுவன் ஆகி
ஆளித் தடம் ஒற்றி ஆர்சிலை சிலம்ப‌
பொருள்வயின் பிரிந்தான் கண்ணுள் அடைந்து
தும்பி இனங்கள் அலமரல் வெளியிலும்
துடியன்ன இமைகள் காட்டுதி நீயோ?
மென்மயிர் இறையின் நெகிழ்வளை காட்டி
இறைஞ்சும் அவிர் ஒலி பரப்புதி என்னை?
ஓங்கல் இடையும் நெறித்தே நோக்கி
விடியல் காட்டி விரையும் மன் அறிதி.
பசலை நோன்றனை பூவின் மஞ்சம்
அல்ல இஃது கடுவாய் முள்ளின் குடுமியென‌
கணந்தொறும் கணந்தொறும் கரைதல் ஆற்றாய்.
தீர்க நின் படரே. கொம்பொலி கேட்கும்
அவன் கால் சுவட்டின் இன்னொலி இழைத்து.

================================================

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

வேலன்டைன் 2

அழல் நெய் கலிங்கம்.
=============================================

குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்
வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்
கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு
நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்
குறி இடம் விரைய மெல் இறை நெகிழ
அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌
கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்
ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை
அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌
நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.
"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான் 
ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.

========================================ருத்ரா 


அன்பு நண்பர்களே


சங்க நடைத் தமிழில் "வேலண்டைன்" விழா
கொண்டாடும் தலைவியும் தலைவனும்
இதோ இங்கே உலா வருகின்றனர்.
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
சொல்லாத காதல் நுண்சொற்களா ?
காதலில் தான் தோற்பது என்பது வெல்வதும்  ஆகும்.
வெல்வது என்பது தோற்பதுவும் ஆகும்.

--------------------------------------------------------------------ருத்ரா










வியாழன், 13 பிப்ரவரி, 2020

வேலன்டைன்

வேலன்டைன்
===================================ருத்ரா

பொன் வண்ண
அட்டையில் தான்
நம் இருதயத்தை
செதுக்கினேன்.
ஆனாலும்
ரத்தம் ரத்தம் ரத்தம்.
இந்த‌
பூமி முழுவதும் !

=============================================

புதன், 12 பிப்ரவரி, 2020

"டெல்லி"

"டெல்லி"
____________________________________________ருத்ரா

டெல்லி நகர்
முகமூடிகளால்
மூடப்பட்டுள்ளுது.
அத்தனை தூசி மயம்.
அந்த படலத்துக்குள்
அரவிந்த் கெஜர்வால்
அரசியலும்
ஒரு ஆரண்யகாண்டம் தான்.
ஆனாலும்
மத வன்மைத்தை எதிர்த்த‌
ஒரு ஊமை மூட்டமும்
அங்கே அந்த வெற்றியைக்
கொடுத்து இருக்கிறது.
இருப்பினும்
பி ஜே பி காரர்கள்
அங்கே
"ஒரு அலிபி"யை நிறுவியிருக்கிறார்களோ
என்ற ஐயம் இருக்கிறது.
இவிஎம் மோசடி
பேசப்பட்டு வரும் இந்த வேளையில்
பார்த்தீர்களா
எங்கள் நேர்மையை
என்று காட்டிக்கொள்ளுகிறார்களோ
என்றும் சிந்திக்க வைக்கிறது.
அவர்களுக்கு வேண்டியது
பாராளுமன்ற மிருகபலம்.
இந்த சுண்டைக்காய் பிரதேசங்களுக்குத்தான்
கவர்னர்கள் கொடுக்கும்
குடைச்சலே போதுமே.
இவர்கள் ராமாயணத்தில் நடக்கும்
"மாயமான் வேட்டையோ" இது?
என்ற நெருடல்களும் இருக்கின்றன.
இருப்பினும்
கொண்டாடப்படவேண்டிய
நம்பிக்கைகளின் வெற்றி தான் இது.
____________________________‍‍‍‍‍‍___________





"பெரியாரிசம்"

"பெரியாரிசம்"
====================================================ருத்ரா
(குறும்பாக்கள்)



கடவுளை மற...
=========================

பெரியார் மொழியில்
இரு வரியில் கடவுள்
மனிதனுக்கு பாடிய ஒரு
விஷ்ணு சஹஸ்ர நாமம்.


தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை
=====================================

மீண்டும் மொழி பெயருங்கள்.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே"
முன் தோன்றியது தமிழ்
என்கிறார் பெரியார்.

பெண்ணியம்
=======================================

மானுட நேசம் எனும்
நட்பு தான்
பெண்ணிடம் முதலில் பூக்கும் பூ
என்று கண்டார் பெரியார்.

கோபம்
==================================

கண்மண் தெரியாமல்
கோபம் வந்த போதும்
இவர் திட்டும் கெட்ட வார்த்தை
இது தான்.
"வெங்காயம்"

திராவிடம்
=======================================

நோய் உற்ற தமிழர்களுக்கு
இவர் கண்டு பிடித்த‌
நோய் எதிர்ப்பு எனும்
(இம்யூனிடி)
மருந்தே இது.

ராமாயணம்
===========================================

தேசிய இனத்தை
அரக்கர்களாக்கி
அடிமையாக்க வந்த‌
வெறும் அம்புலிமாமாக்கதை
என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்
பெரியார்.

கடவுளை நம்புபவன்...
======================================

அறியாமைச்சிதை அடுக்கி
தன்னையே கொளுத்திக்கொள்ளும்
ஒரு மன முறிவின்
வெளிப்பாடே இது.

சாதியும் மதமும்
========================================

இந்த சதுப்புநிலக்காட்டில்
மானுடம்
புதைந்து போவது கண்டு
பொங்கி எழும் அறச்சீற்றமே
பெரியாரிசம்.

=========================================






செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ரஜனிக்கு இரட்டைத்தலைச் சின்னம்

ரஜனிக்கு இரட்டைத்தலைச் சின்னம்
=========================================ருத்ரா

ரஜினி
வீட்டின் கேட்டைத்திறந்து வந்து
அறிக்கை கொடுத்துவிட்டார்
நாட்டின் ஜனநாயகக்கேட்டை
அறைந்து சாத்தி விட்டு.
சி ஏ ஏக்கு ஆதரவாய் 
குரல் கொடுத்தார்.
முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை
என்றார்.
அப்படி யாராவது ஒரு முஸ்லீம்
பாதிக்கப்பட்டால்
அவர்க்கு துணைநின்று
குரல் கொடுக்கும்
முதலாமவன் நான் தான் என்றார்
நாளைய முதல்வன் என்ற தொனியில்.
நிருபர் உடனே கேட்டார்.
அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில்
நம் பெருமைக்குரிய முன்னாள் ஜனாதிபதி
ஃபக்ருத்தின் அலி அகமதுவின் 
குடும்பத்தார்கள் தானே..
இதற்கு உங்கள்...
நிருபர் முடிக்கும் முன்
அவர் கேட்டைச்சாத்திவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தார்.
மக்களிடம் காட்ட அவர்
இரு தலைகள் வைத்திருக்கிறார்.
முதலில் சொல்லியதை
மறுக்க அல்லது  மழுங்கடிக்கவே
இந்த இன்னொரு தலை.
வரும் தேர்தலுக்கு 
தேர்தல் ஆணயம் அவருக்கு
இந்த சின்னத்தை தாராளமாய் வழங்கலாம்.
அது இரட்டை இலைக்குப்பதில்
இரட்டைத்தலை ஆகும்.

===============================================

பெரியார்.

பெரியார்.
==================================ருத்ரா

பெரியார் 
ஒரு தீப்பெட்டி.
அறிவின்மை எனும் 
இருட்டைக் கொளுத்த வந்த‌
வெளிச்சம்.
கடவுள் இருக்கிறார் என்பதில்
அந்த "கிறார்"லிருந்தே
இலக்கணப்பிழை தொடங்குகிறது.
மனிதன் 
தன்னை இன்னொன்றில் 
அப்பிக்கொள்வதில்
அந்த இருக்கிறார் 
எனும் கற்பிதத்தின் தப்பிதம்
துல்லியமாக தெரிவிக்கிறது
கடவுள் என்ற கற்பனையை.
மனிதன் மனிதனைத்தாண்டி
யோசிக்க முடியாது என்பது தான்
கடவுளுக்கு மனிதவேடம் போடவைக்கிறது.
வேடம் போட்டாவது
மனிதன் மனிதனை சுரண்ட‌
தந்திரம் செய்வதே
மதம் ஆகும்.
கடவுளை மற என்றால்
அந்த மூடப் போர்வையை 
உதறு என்று பொருள்.
மனிதனை நினை என்றால்
மனிதனுக்கு மனிதன் 
இடையே பாயும் அந்த‌
மானுட மின்சாரத்தை
கண்டு கொள் என்று  பொருள்.
இந்த மெய்யறிவை
கோடரி கொண்டு பிளப்பதே
வர்ணாசிரமம்.
அந்த கொலைவெறி எனும்
கோடரியை ஏந்திக்கொண்டிருப்பவர்கள்
எல்லாம் 
சிறியாரிலும் சிறியார்.
அந்தக்கொடரியையே
தன் அறிவால் பிளப்பவர்கள்
பெரியாரிலும் பெரியார்.
ஆம்
பெரியார் பார்வையில்
சாதி மத இமயங்கள் எல்லாமே
வெறும் கூழாங்கற்கள் தான்.

"மானுடம் வென்றதம்மா"
பெரியார் எனும் 
"ஆயுத" எழுத்துக்களால்.

========================================
Click here to Reply

சனி, 1 பிப்ரவரி, 2020

கூச்சல்



கூச்சல்
================================================
ருத்ரா



ஆடு மேய்க்கும் அப்பன்.
வயலில் களை பறிக்கப்போகும்
அம்மை.
வயிற்றுப்பாட்டுக்கே
மாடு போல் 
நுரை தள்ளி 
பாரம் இழுக்கும் தகப்பன்.
எச்சில் பாத்திரம் கழுவி 
அதில் மிஞ்சிய எச்சிலையும்
வீட்டுக்கு கொண்டுவந்து
பிள்ளைகளுக்கு
உணவு ஊட்டும் தாய்.
இது நம் பெரும்பான்மைச் சித்திரம்.
உழைக்காமலேயே 
உண்டு
ஏப்பம் விட்டு
அந்தக்குரலையே 
வேதம் என்று சொல்லி
மக்களுக்கு "கடவுள்"புரோக்கர்களாக‌
ஏமாற்றும் சிறுபான்மைச்சித்திரமாக‌
இருப்பவர்கள்
அறிவு வெளிச்சம் 
எனும் 
மொத்த சொத்தை 
சுரண்டுவது தானே
புதிய கல்விக்கொள்கை.
மூன்றாவது வகுப்பிலும் 
ஐந்தாவது வகுப்பிலும் 
இந்த ஏழை எளிய வர்க்கத்தை
பொதுத்தேர்வு மூலம்
வடிகட்டி எறிந்து விட்டு
இந்தியாவையே ஒரு
இருட்டுக்குள் தள்ளி விடுவது தானே
இந்த புதிய கல்விக்கொள்கை.
முகமூடி போட்டுக்கொண்டு வரும்
இந்த "குலக்கல்வித்திட்டத்தின்"
சூழ்ச்சியை 
அழித்தொழிப்பதே
தற்போதைய நம் ஜனநாயகப்போரின் 
முழக்கம்.
ஏ! ஊடகங்களே! ஏடுகளே!
நாடே தீப்பற்றி எரிகையில்
இந்த சுரண்டல் கூட்டங்களுக்கு
கற்பூரம் காட்டிக்கொண்டிருக்கவா
வெறும் 
கூச்சல் கிளப்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

================================================================