வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இசைக்கடல்

இசைக்கடல்
================================28 ஆகஸ்டு 2019  இரவு 11.50



மதுரை சோமு
===================================ருத்ரா இ பரமசிவன்


ஒரு இசைப்புயல்
இனிய மூச்சை
உருட்டித்திரட்டி
பிழிந்து
கடைந்து கடலாகி
உயிரை
செதில் செதிலாய்
இழைவித்து
உடம்பின் ஒவ்வொரு
மில்லி மீட்டரிலும்
அல்லி அரும்பாக்கி
துள்ளி சுருண்டு...
அய்யா ..
இதற்குமேல்
என்னால்
எழுதமுடியவில்லை.
வானமே தேம்பி தேம்பி
அழுகையை அமுத மழையாக்கித்
தரும்
ஆனந்தக்கண்ணீர் மழை..
இது.
நரம்பு முடிச்சுள்
யாழை சுருட்டி மடக்கி
இன்னொலியின் பிரசவத்தில்
பிரபஞ்சமே
கன்னிக்குடம் உடைத்து
ஒரு சங்கீதப்பிரளயம்
பிறந்தது.

==================================================


என்.எல்.கானசரஸ்வதி.
================================================ருத்ரா இ பரமசிவன்.

கர்னாடக இசையின்
தேனருவி!
பந்து வராளியின்
தியாகராஜர் கீர்த்தனை
இந்த மெல்லருவியின்
தாலாட்டில்
இசையின்
ஏழுகடல்களும்
அலையடிக்க மறந்து
சுகமாய் தூங்கின.

==================================================

புதன், 28 ஆகஸ்ட், 2019

ஓலைத்துடிப்புகள்



ஓலைத்துடிப்புகள்
==============================================
ருத்ரா இ பரமசிவன்.


"வெண்பூப் பகரும்"


இச்சொற்றோடர் ஓரம்போகியார் எனும் சங்கத்தமிழ்ப் புலவர் ஐங்குறுநூறு பாடல் எண் 13 ல் எழுதியது.வெள்ளைக்குஞ்சம் போல்
காற்றில் அழகாய் ஆடும் அந்த "பொங்குளை அலரி" பூக்கள் பற்றி பாடுகிறார்.மருதத்திணைப்பாடல் அது.அதை பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பொங்கும்.மேலும் அப்பூக்கள் தலைவியோடும் தலைவனோடும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றும்.அல்லது இவர்கள் அப்பூக்களோடு பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.அப்படி ஒரு நுண்மையான உணர்வை அச்சொற்களில் ஓரம்போகியார் காட்டுகிறார்.அந்த பூக்கள்  ஒரு நுண்செய்தியை தலைவிக்கு எப்படி உணர்த்துகிறது தெரியுமா? அவன் வரும் குதிரையின் தலைப்பூ அத்தகைய குஞ்சம் போல்ஆட்டி ஆட்டி சொல்வதைப்போல்  இந்த ஆற்றங்கரையின்
"வெண்பூக்களும்" அவளுக்கு அவன் வருவதைச் சொல்கின்றனவாம்.என்ன ஆழமான அழகான கற்பனை!

"பரியுடை நன்மான் பொங்குளை அன்ன‌
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்.."

அந்த கரும்புப்பூக்கள் ஒரு இனிய காட்சியை அல்லவா நமக்கு சொல்கின்றன."வெண்பூப் பகரும்" என்ற சொற்றொடர்களையே தலைப்பாக்கி  இச்செய்யுளை செய்துள்ளேன்.

கல்+இடை=கல்லிடை.குறிஞ்சி மருவி குறிச்சி ஆனது.பொதிகை மலையிடை அமைந்த ஒரு குறிஞ்சி ஊர் தான் எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சி.அங்கே தாமிரபரணி எனும் ஆறு சங்கத்தமிழின் பெயரான "பொருனை" என்ற பெயரில் அமைதியான அழகுடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்று எழிலில் மனம் கரைந்து சுழித்து நுரை பூத்து நாணல்கள் பச்சைத்தூரிகைகள் போல் படர்ந்திருக்க அந்த தலைக்குஞ்ச பூக்கள் தூரிகைகளாய் நீல வானத்திரையின் பின் புலத்தில் சங்கத்தமிழ் காட்சிகளை தீட்டிக்காட்டியதே இந்த சொல்லோவியம்.
ஐங்குறுநூற்றுப்பாடல் எண் 23 ல் ஓரம்போகியார்

"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்"

என்ற வரிகளில் இன்னும் நம் நெஞ்சம் பிழிகிற காட்சியை காட்டுகிறார்.

புள்ளிகள் நிறைந்த அந்த நண்டு எனும் தாய் சாகும்படி அதன் குஞ்சுகள் பிறக்கும்.ஆனால் முதலை ஈன்றதனால் பசியுடன் கூடிய  ஈன்ற வலியைப்போக்க தன் குட்டிகளையே தின்னும்.இந்த இரு வேறு துன்பியல் காட்சிகளும் தலைவன் தனக்கு ஏற்படுத்தும் பிரிவுத்துன்பத்தை நன்கு புலப்படுத்துவதாக தலைவியின் துன்பம் மிக்க உரையாக‌ ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.இக்காட்சியும் என் செய்யுளில் பதிந்து உறைந்து வருகின்றன.

நாங்கள் சிறுவயது நண்பர்களாய் "கல்லிடைக்குறிச்சியின்" தாமிரவருணிக் கீழாற்றில் நுரை சிதற பாறைகளிடையே பரவி ஓடும் நீரில் குடைந்து குளித்து மகிழும்போது "முதலையின்" அமைப்பு போல் இருக்கும்  ஒரு குத்துப்பாறையில் நாங்கள் விளையாடும்  அந்த "பிள்ளைப்பருவ" படலங்களின் தூரிகையாகவே இந்த வரிகள் காட்சிகள் தீட்டுகின்றன.

அந்த புள்ளி நண்டுகள் முதலைப்பாறைகள் "சிறிய அந்த வெண்பூக்கள்" எல்லாம் இனிமை குழைத்து பளிங்கு உருக்கி பால் நுரை பொருது இழையும் பொருநை எனும் எங்கள் தாமிரபரணியே இந்த "வெண்பூப் பகரும்" சங்கநடைக்கவிதையாய் சல சலத்து ஓடும்படி இச்செய்யுளை  எழுதியிருக்கிறேன்.

================================================





வெண்பூப் பகரும்
==============================================
ருத்ரா இ பரமசிவன்.




பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.
தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் "சிறை"யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.
அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்"
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் "பகன்றனை"வாராது மறைந்து.
ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

================================================


பொழிப்புரை
===========================================
ருத்ரா இ பரமசிவன்.



பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.

பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரைக் காட்சி இது.புள்ளிகள் படர்ந்த பாறைகள் தோறும் மோதி மோதி இனிமையாய் தண்ணீர் பாயும்.அந்த துள்ளல் நிறைந்த நீரில் தலைவி கால் நனைத்து மகிழ்கிறாள்.அந்த நுண்ணிய பொழுதுகளின் இடைவெளிக்குள்ளும் அவனைப்பற்றிய கனவே அவளுக்கு.அவன் வரும் வழி தன் மனக்கண்ணில் ஆறுபோல் பெருக அதன் ஓங்கிய அலைகள் ஒளிசிந்தும் பால் நிலவை எதிரொளி செய்கின்றன.(ஓங்கு திரை வாங்கும்).அந்த நிலவை கடல் கண்டு பொங்கி எழுவதைப் போல் ஆர்ப்பரிக்கும் தலைவனின் குதிரைத் தலையில் சூடிய அலரிப்பூ (வேழப்பூ எனும் ஒரு வித பேய்க்கரும்புப் பூ)ஆடி அசைவது (தலைவியை நோக்கி) ஒரு ஒலியை ஏற்படுத்தும்.


தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் "சிறை"யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.


அங்கு உலவும் வண்டு தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அங்கு உலவும் வண்டு ஒன்றை அவள் காண்கிறாள். தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அந்த வண்டு உறிஞ்சிய தேனில் அமிழ்ந்ததால் சிறைப்பட்டு போனதால் தான் அஞ்சிறைத்தும்பியாய் ஆனாயோ ஓ வண்டே என்கிறாள் தலைவி.சிறகை அது குறித்த போதும் தான் ஒரு சிறைப்பட்ட நிலையில் இருந்ததால் அப்படி அழைக்கிறாள்.அதன் உள்ளிருந்து தலைவனின் குரல் கேட்கிறது.உண்மையில் அவன் தான் சிறைப்பட்டிருக்கிறான் போலும்.அவன் குரல் அவளுக்கு களிப்பின் கடல் நிறைந்து வழிந்தாற்போல் இருக்கிறது.அவன் சொன்னதும் கேட்டது.அவன் சொல்லாததும் அவளுக்கு கேட்டது.அது அவள் உள்ளத்தில் துன்பம் ஏற்படுத்தி அவளை பறித்துக்கொண்டது.மீண்டும் அவன் குரல் பகன்றது அவளுக்கு "பகன்றை" மலர் போல் மெல்லிய உணர்வுகளை எழுப்புகிறது. இருப்பினும் அத்தகைய மலர் போல் அல்லாமலும் துன்பம் செய்கிறது.துன்பம் தரும் குரல் என்னவாக இருக்கும்? "நான் இப்போது உடனே வருவதற்கில்லை" என்ற இன்னொரு குரலும் தலைவனிடமிருந்து அவள் கேட்டாள் போலிருக்கிறது. அந்த ஆற்றங்கரையின் குருகுகள் மிக்க உணர்ச்சிமிக்க ஒலிளை எழுப்பும்.அதைப்போல மெலிதாய் முறுக்கேறிய பூவின் மொட்டு  இதழ்கள் திறக்கும். அதைப்போன்றே நலிவுற்ற என் கண்கள்  பெருக்கும் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் இறங்கி சூடு ஏறி என்னுயிரையே உலுக்கிவிடும்.


அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்"
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் "பகன்றனை"வாராது மறைந்து.

அவன் எந்தக்குரலும் எங்கிருந்தும் எழுப்பவில்லை.இருப்பினும் அந்த வேழப்பூக்கள் அவளுக்கு ஒலியை கதிர்ப்பது போல் உணர்கிறாள்.அந்த மெய் விதிர்ப்பில் ஒருபக்கம் அவன் குரல் இனிக்கிறது.இன்னொரு பக்கம் தீய செய்தியை தாங்கி வருகிறது.படுக்கையில் தூக்கம் வரவில்லை.அடர்ந்த முள் காட்டில் கிடந்தவளாய் துன்புறுகிறாள்.இரவே நெருப்பு பற்றிக் கொண்டாற்போல் துடிக்கிறாள்.இப்போதும் தலைவனின் அந்த ஆற்றங்கரை தான் நினைவுக்கு வருகிறது.அவன் காதல் இனிதாய் பிறக்கும். ஆனால் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் தன்மையும் அதற்கு இருக்கிறது போலும்.அவன் இருக்கும் அந்த துறையில் புள்ளிகள் நிறைந்த ஒருவகை நண்டு உள்ளது.அது ஈனும் குஞ்சுகள் அதனையே கொன்று தான் பிறக்கும்.("தாய்சா(க)ப்பிறக்கும் புள்ளிக்கள்வன்)அவன் காதலும் அப்படியே தான்.அது பிறக்கும் நானே கொல்லப்படும் விந்தை வேதனை அல்லவா?அந்த வேழப்பூந் தட்டைகள் மண்டிய அந்த சேற்று நிலமும் நீரும் நிறைந்த கரையிலிருந்து அவன் குரல் கேட்கிறது."நீ என்ன சொல்கிறாய்? எதையோ சொல்லிவிட்டு வாராது மறைந்து கொண்டாயே!"என்று தலைவி புலம்புகிறாள்.


ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.


அடுத்ததாய் முதலை ஒன்றின் உருவம் அவளுக்கு தோன்றுகிறது.அதுவும் அந்த ஆற்றில் தான் இருக்கிறது.அதற்கு இரண்டு விழிப்படலங்கள் உண்டு.நீலிக்கண்ணீருக்கு ஒன்று.சாதாரணமாய் இன்னொன்று.அகன்ற கண்களில் தோன்றும்.(ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு...) பெரிய பற்களையுடைய முதலையோ தான் முட்டையிட்டு ஈன்ற குஞ்சுகளையே தின்னும். முதலைகள் பாய்ந்து வரும் ஆறும் அவன் ஊரில் தான் இருக்கிறது. நண்டு முதலை ஆகிய இரு விலங்குகளைப்போன்று அல்லவா அவன்
இக்கொடிய‌ காதல் நோய் மூலம் என் உயிர் தின்னுகின்றான். குளிர்ச்சி பொருந்திய கனவு மிதக்கும் என் மையுண்ட கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.அதோ அந்த கரையில் ஆடும் அந்த சிறிய வெண்பூக்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன? குழைவோடு வெண்சாமரம் போல் வீசுகின்ற அந்த மலர்க்குஞ்சங்கள என் துன்பத்தை தான் குழைய குழைய சொல்லிக் கொண்டிருக்கின்றன.

===============================================
8 ஜூன் 2015.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கலைஞராற்றுப்படையே!

கலைஞராற்றுப்படையே!
======================================ருத்ரா


தமிழினத்தலைவரே!
எங்கள் கலைஞரே!
வயதுகள் எனும்
வெற்று எண்கள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.
அவற்றை எப்போதும்
நீ வரலாறு ஆக்கினாய்.

உன் எழுத்துக்களுக்கு
முற்றுப்புள்ளி இடும்போதெல்லாம்
அதில்
உதய சூரியனைத்தானே
கண்டாய்.
எங்கள் ஆட்சியில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லை
என்றானே அந்த
பெருமைக்கார வெள்ளையன்!
உன் தமிழ்
உலகத்தின் எல்லா கிழக்குவிளிம்பிலும்
உதயசூரியனாய்த்தானே
சிரித்துக்கொண்டிருக்கிறது.
"கிழக்கிலே அஸ்தமிக்கும் சூரியனே"
என்று பாமரத்தனமாய்
இவர்கள் கூறினாலும்
அது கண்ணீர் கசியும்
"பா மரத்து" வரிகள் அல்லவா!

அந்தக்காவேரி
மில்லியன் மில்லியன்களாய்
தண்ணீரை டி எம் சி யாய் மாற்றியபோது
இந்தக்காவேரி
பில்லியன் பில்லியன் டி.எம்.சி களை
கண்ணீராக்கி
கலங்கடித்து விட்டதே
இத் தமிழ் நாட்டை.
உன் இழப்பின் சோகம்
எத்தனைக்கு எத்தனை
கொடுமையானதோ
அத்தனைக்கு அத்தனை
வீரம் செறிந்தது.

தமிழ் இனப்போராளியே!
திராவிட மானம் காக்க‌
அந்த நடுநிசியிலும்
நீதியரசர்களின் மரசுத்தியலை
மேசை தட்ட வைத்து
ஒரு சமூகநீதியை நிமிர்த்திவைத்தாயே.
விஸ்வரூபம் எடுத்த
அந்த நெத்தியடித்தீர்ப்பு தான்
உன் முரசொலியின்
கடைசி இதழில்
நீ இட்ட முற்றுப்புள்ளி.

தமிழ்க்கருவூலமே
இனி இந்த மெரீனா தான்
நம் தமிழின் "சங்கப்பலகை"
போராளிகளின் "பொருநராற்றுப்படையே!"
படைப்பாளிகளின் "கலைஞராற்றுப்படையே!"

தமிழ் வாழ்க!
கலைஞர் வாழ்க!

===========================================
ஒரு மீள்பதிவு.

தமிழ் வாழ்க!

தமிழ் வாழ்க!
===========================ருத்ரா இ பரமசிவன்.

தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க! வாழ்க!!
தமிழ் வாழ்க!வாழ்க!! வாழ்க!!!

முதற் சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம்
என்று சுடர்ந்த தமிழ்
இன்று எங்கு ஒலிக்க வில்லை.
ஏடுகள் மட்டுமே
இயம்பிக்கொண்டிருக்கின்றன.

கும்பிடக் கடவுள் வேண்டும்
என்றவன்
தமிழில் ஏன் கும்பிட மறந்து போனான்?
ஏன் ?
தமிழில் அறிவு மட்டுமே அங்கு
கடவுளாய் நின்றது.
கடவுள் என்று
ஏமாறியவர்களும் ஏமாற்றியவர்களும்
தமிழ் மீது பாய்ந்தனர்.
பாய்ந்தவர்கள் தமிழர்களாகவும் இருந்தனர்.
பக்தி எனும் நஞ்சு
அவர்களின் அறிவு செல்களை
அழித்து விட்டிருந்தது.

அவன் மீது
ஒரு ஆதிக்க நிழல் விழுந்தது.
அந்த நிழல் பூசிய வர்ணங்களில்
தமிழன்
அடியில் புதைந்து போனான்.

குடை பிடித்து ஆண்ட மன்னர்களுக்கும்
குடை பிடித்து
குகை வைத்துக்கொண்டது
ஒரு குள்ளநரி வர்க்கம்.
அவர்கள்
கடவுள் தோல் போர்த்திய
கயவர்கள்!
கடவுள் தோல் அவர்களுக்கு
எப்படிக்கிடைத்தது?
கடவுளைக்கொன்று தான்,
ஏனெனில்
கடவுள்கள் அவர்களுக்கில்லை.
அவர்களுக்குள் இருந்ததெல்லாம்
தமிழ் இன அழிப்பும்
தமிழக ஆக்கிரமிப்பும் தான்.


வாயில் நுழையாத ஒரு மொழி
நம் வாசல் நுழைந்தது.
கிச்சு கிச்சு மூட்ட வந்தது போல் வந்த
அந்த இரைச்சல்களுக்கு
இரையாகிப்போனது நம் இனிய மொழி.
நமக்கு அறைஞாண் பூட்டும் போதும்
நம் வீடுகளின் வதுவை விழாக்களிலும்
ஏன்
நாம் இறந்து விட்ட போதும்
அதன் நமைச்சல் மந்திரங்கள்
நம்மை ஆழ் குழிக்குள் தள்ளின.

தமிழனின் மாபெரும் நாகரிகம்
மண்ணில் புதைந்து போன
எலும்புக்கூடுகள் ஆகின.

இன்று தமிழன் எரிமலை ஆகினான்.
தோண்டும் இடமெல்லாம்
அவன் வரலாறு
வீரம் கொப்பளிக்கிறது.
தொட்டனைத்த மண் தோறும்
தமிழின் சூரிய வெளிச்சம் தான்.

தமிழர்களே! தமிழர்களே !
"தன் திறம்" அறிந்து கொள்வீர்.
தந்திரம் முறியடிப்பீர்! நம்
"மன்திறம் "தெரிந்து கொள்வீர்.
மந்திரம் விரட்டிடுவீர்!

தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க! வாழ்க!!

==========================================================





திங்கள், 26 ஆகஸ்ட், 2019

காதல் வாழ்க!

காதல் வாழ்க!
=================================================ருத்ரா

சமுதாயம் எனும்
உடம்புக்குத்தான்
எத்தனை வலி?
எத்தனை வதம்?
கஞ்சிக்கவலையால்
"பசி"பிக் பெருங்கடலின்
பேரலைகள் ஒரு பக்கம்.
சாதி மதம் எனும் அசுரர்களின்
ரத்த வெறி ஒரு பக்கம்.
அரசியல் சகுனிகளின்
சூதாட்டங்கள் ஒரு பக்கம்.
மக்கள் அரசியலின் நியாயங்கள்
பாதாளங்களில்
வீழ்ந்து கிடப்பது ஒரு பக்கம்.
தமிழ் எனும் நம் மொழி
உலகத்துக்கே "அகர முதல"
ஆன போதிலும்
கந்தல் ஆக்கப்பட்டு
சிதைந்து கிடக்கிறது.
ஆனாலும்
நம் இளைஞர்கள்
அந்த விடியல் விளிம்பில் நின்று
இத்தனை வலிகளையும்
கடந்து அல்லது
மறந்து
ஒரு ரோஜாவை ஏந்தி
நிற்கிறார்கள்.
அதன் பெயர் "காதல்".
காதலுக்கு
காதல் என்பது
மட்டும் அர்த்தம் அல்ல.
தீர்வுகள் முளைக்கும்
நாளைய புது வெளிச்சத்தின்
நம்பிக்கை என்றும் தான் அர்த்தம்.
"கல் பொரு சிறு நுரை.."
என்று குறுந்தொகை சொல்கிறதே!
அந்த பிரிவு வலியில்
ஊமை வலிகளாய்
குவிமையத்தின்
ஒரு கிளர்வுக்கு துடிக்கிறது.
வலிகள் நிறைந்தாலும்
வழிகளும் உண்டு இங்கு.
அதனால்
காதல் வாழ்க!

=====================================================

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

என் வழி தனிய்ய்ய் வழி.....

என் வழி தனிய்ய்ய் வழி.....
===================================================ருத்ரா


சூப்பர் ஸ்டாரின் தனி வழி..
அப்படி என்ன தனி வழி?
போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
கபாலி வந்த பின்
காலா வந்தான்.
பேட்ட வந்த பின்
தர்பார் வரப்போகிறது.
இதெல்லாம்
அவருக்கு மட்டுமே தெரிந்த‌
தனி வழியில் வந்தது தானா?
அந்த வழியில் தான்
அர்ஜுனனை வைத்துக்கொண்டு
கிருஷ்ணன் வந்தானா?
அந்த வழியில் தேர் தெரிகிறது.
ஆனால் போர் தெரிகிறதா
அவரைத்தான் கேட்கவேண்டும்.
கிருஷ்ணன் யார்?
அர்ஜுனன் யார்?
அவரும் சோழி போட்டு பார்த்து
பிரசன்னம் பார்க்கவேண்டும்
போலிருக்கிறது.
கதை
திரைக்கதை
கதை வசனம்
இதெல்லாம் இருக்கட்டும்.
இதை
எழுதிய வியாசன் என்ற‌
ஜனநாயகன்
எங்கே இருக்கிறான்?

விரலில் மை வைத்தவர்கள் என்றால்
இப்படி மை வைக்கப்பட்ட விரல்கள்
எத்தனை கோடிகள் வேண்டும்?
இதோ ரெடி
என்கின்றன
கார்ப்பரேட்டுகள் .

பட்டன்கள் தட்டிய  குரல்கள்
தேக்கிவைக்கப்பட்ட‌
கணிப்பொறிகள்
எத்தனை கோடி வேண்டும்?
இதோ சப்ளை
என்கின்றன.
கார்ப்பரேட்டுகள்.

மதம் என்னும் வண்ணப்பலூன்களை
கோடி கோடியாய் மிதக்கவிட்டு
இந்த வானத்தை மறைக்கவேண்டுமா?
அறிவின் வெளிச்சத்தையே
விழுங்கிவிடக்கூடிய‌
விஸ்வரூப பூச்சாண்டிகளை
தினம் தினம் மக்கள் மீது
கொட்டிக்கவிழ்க்க வேண்டுமா?
கார்ப்பரேட்டுகளின்
ஊடகங்கள்
இதோ வாசலில் கோலம் போட்டு
பூரண கும்பங்களுடன்
காத்திருக்கின்றன.

வியாசன் தான் தடுமாறிப்போனான்.

இன்னுமா
அந்த மகாபாரதக்கதையை
சொல்லிக்கொண்டிருப்பது?

பாண்டவர்கள்
கௌரவத்தை தொலைத்து விட்ட‌
கௌரவர்கள் ஆகிப்போனார்கள்.
இந்த சகுனிகள் போதும்!
சூப்பர் ஸ்டார் அவர்களே!
உங்கள் பங்குக்கு
நீங்களும் பகடை உருட்ட வேண்டாம்.
அவர்களின்
குருட்சேத்திரப்போர் எனும்
கட் அவுட் செட்டிங்கில்
படுகொலை செய்யப்படுவது
கட் அவுட் மக்கள் அல்ல.
ரத்தமும் சதையுமாய்
கனவும் லட்சியமுமாய்
உயிர்த்து நிற்க வேண்டிய‌
இந்த ஜனநாயகம் தான்.

"எண்ணிக்கை"யை கொடுத்த மக்கள் மீதே
எண்ணிக்கையற்ற  அம்புகள் எய்து
வதம் செய்யும்
அடக்குமுறையின் ராஜ தந்திரம்
உங்களுக்கு புரியவில்லையா
ரஜனி அவர்களே?
கண்ணுக்குத்தெரியாத ராட்சசம்
சனாதனம்.
இதை வீழ்த்த
புத்தியை தீட்டினால் போதும்.
கத்திகள் தேவையில்லை.
உங்கள் அட்டைக்கத்திகளையும் கூட‌
தூர எறிந்துவிடுங்கள்.
அரிதாரம் இல்லை அரசியல்!
வலிய வலிய இருட்டுதனை
பூசிக்கொண்டு
வெளிச்சம் என முழக்கம் இடாதீர்கள்
ரஜனி அவர்களே.

==========================================================

















சனி, 24 ஆகஸ்ட், 2019

அவள் வருவாளா?

அவள் வருவாளா?
=====================================ருத்ரா

அவள்
வருவாளா?
அவன் காத்திருந்தான்.
மெரீனா கடற்கரையில்.
ஒரு காகிதம் கிடைத்தது
சில சொற்களுடன்
என்னவோ காதல் சிற்பி
என்ற பெயரில்
யாரோ எழுதிய கவிதை.
என்னத்தை
எழுதியிருக்கப்போகிறான்.
அலட்சியமாக
அதை எறிய
சுருட்டிக்கசக்கினான்.
அதிலிருந்து குப்பென்று
ஒரு மணம்!

ஆவலுடன் பிரித்தான்.
ஆஹா!
அது தேங்கா மாங்கா பட்டாணி
சுண்டல் இருந்த மணம்.

அதற்கு மேல்
காதலின் நுண்மாண் நுழைபுலம்
அவனுக்கு இல்லை.
அந்த காகிதத்துக்கு
மணம் வந்தது எப்படி?
அது அவன் காதலி
சுவைத்து விட்டு போட்ட
சுண்டல் காகிதம்.

அந்தக் காகிதம்
பறந்து போயிற்று
அதில் இருந்த
ஒரு காதல் கவிதை
படிக்கப்படாமலேயே.

அது சரி.
அப்படி என்ன கவிதை அது.?
இப்போது படிக்கிறீர்களே
அது தான் இது.
தலைப்பு?
"காகிதத்துக்கும் மணம் உண்டு".


============================================


=======================================================

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

abyss of despotism


abyss of despotism

===================================
ruthraa e paramasivan.



the idealism is a multi-foliate Rose
with prickly dreams!
can we shape the clouds to our choice?
the tumultous rivers are the lava
of doomsdom..
yet we swim out
our whims and fancies
our voices died and drowned
yet we proclaim a prophecy
of smashing all the stumbling blocks.
god is not
just a monolithic stone
man chisels it out and chips off.
the religion may be
by the people
and for the people
but not off the people
to be just massacred with unjust dogmas.
these philosophies of caste and creed
are axing
on our vision and wisdom.
how can become this "Vox populi"
a killing and crushing boulder
rolling and rolling on people
with obnoxious Machiavellian designs.
Raise your voice.
Sharpen your tone
protest and radiate to destroy
all these shrouds
of ignorant and illusory forms
of submission
to the abyss of despotism.
===================================

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

எம்.ஜி.ஆர் தொப்பிக்குள் ரஜனி !

எம்.ஜி.ஆர் தொப்பிக்குள் ரஜனி !
====================================================ருத்ரா


எங்கள் அன்பான
சூபர்ஸ்டார் அவர்களே
"சிஸ்டம் கெட்டு விட்டது "
என்று கண்டுபிடித்த நீங்கள்
எம் ஜி ஆர் தொப்பிக்குள் புகுந்தா
அதை தேடப்போகிறீர்கள்?
இந்த தமிழ் நாட்டு ரசிகர்கள்
எதைக்கண்டாலும் விசிலடிப்பார்கள்!
இனி அந்த அந்த விசில்
உங்களுக்கா?
இல்லை
அந்த தொப்பிக்கா?
போகப் போகத் தெரியும்.
அதெல்லாம் சரி.
ஹதம் கதம் என்று
ஏதோ விரல் முத்திரை காட்டி
அதர்மத்தை வதம் செய்துவிட்டதாக
கூறுகிறீர்களே.
உங்கள் காலடியை உற்றுப்பாருங்கள்.
நீங்கள் மிதித்து மிதித்து
நசுங்கிக்கிடப்பது
மக்கள் ஜனநாயகம்.
கணிப்பொறியின்
மாயக்கணக்கு எனும்
ஏதோ ஒரு அல்காரிதம் காட்டிய‌
எண்ணிக்கையில்
நம் அரசியல் அமைப்பே
கந்தலாய் கிழிந்து போகும்
அபாயம் தெரியாமல்
கிருஷ்ணர் என்றும் அர்ஜுனர் என்றும்
அதற்கு
அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறீர்களே.
என்றைக்கு
மக்கள் அரசியல் சிந்தனை எனும்
அறிவு கொண்டு
உங்களை வெளிச்சப்படுத்தப்போகிறீர்கள்?
காஷ்மீர் நமது இந்தியாவுக்குள் இருக்கிறது
என்பதை
ஏதோ ஒரு வெறி வந்து தடுப்பதுபோல்
அல்லவா
இப்போது கூறு போடப்படுகிறது.
இந்தக்கத்தி காஷ்மீர் ஆப்பிளை மட்டும்
வெட்டாது
நினைத்தால் இந்தியாவைக்கூட‌
பழைய அம்பத்தாறு தேசமாக
துண்டு போட்டு விடும்.
ஆர்டிகிள் 370 என்ன‌
உங்கள் "ஸோன் பப்டியை"
கூறு போடும் கத்தியா?
அரசியல் சட்டம்
எண்ணிக்கை ஜனநாயகத்தால்
கசாப்பு செய்யப்பட முடியுமா?
மக்களின் ஆழ்கடல் மன எழுச்சியில்
எழும் கேள்விகள் இவை.
வில்லனாக வரும்
பிரகாஷ் ராஜ்கள் ஒரு வீரக்கதானாயகனாக‌
உலா வரும் போது
சூப்பர் கதானாயகனாக நிழல் காட்டிய‌
நீங்கள் இப்போது
மக்கள் விரோத வில்லனாக வருவது
ஒரு நகைமுரண் அல்லவா?
போகட்டும்
மகாபாரதத்தை உங்கள் சினிமா பாணியில்
காமெடி செய்ய‌
அந்த கிருஷ்ண அர்ஜுன பாத்திரங்களை
எடுத்துக்கொண்டது கூட‌
எங்களுக்கு மிக மிக‌
சிரிப்பு மூட்டுகிறது.

=====================================================









சிறகுகள்

சிறகுகள்
============================================ருத்ரா

புழு பூச்சிகள் கூட
நசுக்கப்படும் வரை
சிலிர்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
முடியும் வரை தன்னை
மிதிக்கும்
கால் கட்டை விரல்களை
எதிர்த்து
தன்னிடம் இருக்கும்
மிருதுவான
கொடுக்குகளையும் கொண்டு
குடைச்சல் கொடுக்கத்தான்
செய்கின்றன.
மனிதன் ஏன் இப்படி
கல் பொய்மை சாமிகளின் முன்னே
கூழாகிப்போகிறான்.
அறிவின் கூர்முனை
தன்னிடம் இருக்கும்போது
இந்த சாதி மதப்பேயாட்டங்களுக்கு
இரையாகிப்போவதேன்?
டிவி சினிமாக்களின் முன்
மரவட்டைகளாய்
மல்லாந்து கிடப்பதேன்?
சிந்தனையின் மின்னல் கீற்றுகள்
அவனுள்
இடி இடிக்கத்தளும்புகையில்
அரசியல் ஜிகினாக்களில்
அடைபட்டுக்கிடப்பதேன்?
உண்மையான அரசியலின்
மனித முகம் இழந்துபோன
ஓட்டுகள்
எனும் பாப்கார்ன்களில்
கனவுகளை கொறித்துக்கொண்டே
நனவுகளின் கசாப்புக்களில்
செதில் செதிலாய்
சிதறிக்கொண்டிருப்பதேன்?
சாதி மத வெறிகள்
உங்களை தின்று கொண்டிருப்பது
புரிகின்றதா?
ஓ! காகிதப்புழுக்களே!
இந்த தேர்தலின் தேர்க்காலில்
வாக்கு இறந்து
நசுங்கிப்போகுமுன்
மாமேதை அப்துல் கலாம்
உங்கள் உள்ளத்தில் ஒட்டிக்கொடுத்த
அக்கினிச்சிறகுகளை
கொஞ்சம்
அலை விரியுங்கள்.

=============================================
07 அக்டோபர் 2017

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

Oh! My fellow travelers

Oh! My  fellow travelers
========================================

Oh! My fellow travellers
The time has come
To a point of hinge
At which the doors
Of history flutter with prophecy
Not for bloom
But for gloom and doom 
Of course the woods are
Deep and beautiful but with
Deceiving divinity..
The wolves fill the woods
With deadly hymns and chants 
To kill all the serenity and harmony. 
Now the doors habe been
shut and sealed
To ignorance of caste and creed.
Our franchise fell apart bleeding.
We voted ourselves to be looted
By the slogan mongers of
monarchy couched in holy sentiments.
Our hard-won constitution is imminent
To be torpedoed or thrown to nowhere
 up side down.
The justice of social equity is now
A wounded swan to which the hands
Of hunting with fury and frenzy
and with moth-eaten concepts
of god and godly stories claim.
Religion is but a frozen myth
a parasite of past on our
present and future
and
always cutting our bridge
to a way of light and wisdom.

========================================
ruthraa e paramasivan


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்...?


எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்...?
==========================================================ருத்ரா

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே...
என்று குதிரையைப்பிடித்துக்கொண்டு நடந்து
நாமக்கல் கவிஞரின் வரிகளை
சொடுக்கிவிட்டுப்போனாரே
அவரும் அரசுக்கட்டிலில் உட்கார்ந்து
ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார்.
ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களின் மீது
சினிமா காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

வறுமைக்கு மருந்து இது.
அறியாமையின் திறவுகோல் இது
விடுதலை மூச்சின் வெளிப்பாடு இது
இன்னும் என்னவெல்லாமோ பாடி ஆடி
எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தொலைத்துவிட்டோம்.

முதலில் ஒரு பெட்டியை வைத்தார்கள்.
அதில் பல வர்ணங்கள். பல சின்னங்கள்
எல்லாம் வைத்தார்கள்.
எல்லாவற்றிலும் இருந்தது "நான்கு வர்ணம்"

பொது மானிட நீதி  சித்தாந்தங்கள்
துளிர்த்தன.மலர்ந்தன..
ஆனாலும்
தறிகெட்ட தனிமை சுதந்திரமே
மக்களையெல்லாம்
ஒரு அபினிக்கடலில் தள்ளியது.
சாதி மதங்கள் அமிழ்த்தியதில்
மானிட நேயம் மறைந்தே போனது.

மனித உழைப்பை உறிஞ்சும்
அட்டைவர்க்கத்தினரே
ஆளும் வர்க்கம் ஆனார்கள்

சினிமா வந்தது.
புரிதலின் இமைகள் திறந்தன.
ஆனாலும்
பொருளாதார அடிப்படை சூத்திரம்
அடியில் போனது.
மனிதனை மனிதன்
சுரண்டுவது மட்டுமே
இங்கு சட்டம் ஆனது திட்டம் ஆனது
இன்னும் எல்லாம் ஆனது.

தொலைகாட்சிகள்
மனிதர்களை மாடுகள் போல்
வீடுகளின்
அந்த முற்றத்துத்தொழுவத் திலேயே
கட்டிப்போட்டன.
செல்ஃ போன்கள்  வந்தன.
ஆயிரங்கண் இந்திரன் போல
அதில் ஆயிரம் காமிராக்கள்
முளைத்திருந்தன.
அதனால்
இங்கு எங்கும் ஆபாசமே
சமுதாயக்"கண்"ணோட்டம் ஆகிப்போனது.

மனிதனை மலர்த்தும் அரசியல்
இங்கே தடம் மாறி
குப்பை ஆனது கூளம் ஆனது.
ஊழல் லஞ்சம் இங்கே
வாழ்க்கையின் முறைகள் ஆனது.

ஜனநாயகம் இங்கே
லஞ்ச நாயகம் ஆகிப்போனது.
அறிவியல் உயர்ந்தது என்று
கணினி ப்பெட்டிகள்
இவர்களை ஆள வந்தது.
ஓட்டுகள் இங்கே நோட்டுகள் ஆனதே
நம் விலையுயர்ந்த ஜனநாயகம்.

முடிவுகள் உமிழ
படுத்துத்தூங்கும் அந்த பெட்டிகளில்
எல்லாம்
மலடாகிப்போன
நம் கனவுகள் தூங்குகிறன.
மரத்துப்போன நம் சுதந்திர தாகங்களும் கூட
குறட்டைவிட்டுத் தூங்குகின்றனவே.

==================================================
29.04.2019










சனி, 17 ஆகஸ்ட், 2019

குடி உயரக்கோன் உயரும்

குடி உயரக்கோன் உயரும்

================================சொற்கிழார்



காய்நெல் அறுத்து களம் வரும் முன்னே

கால் கை ஓய்ந்து சருகுகள் ஆனார்

கழனியர் வாழ்க்கை ஏழ்கடல் உப்பும்

கொள்ளா வியர்வை கரிக்கும் அந்தோ!

வெள்ளம் வந்தது பூதம் ஆயினும் அது

விழுங்கியதை விடவும் பெரியவிழுங்கல்

ஆயிரம் கைகள் முளைத்த பூதம்

அங்கிங்கெனாது நாவுகள் நீட்டும்

மறைவாய் கரும்பணம் தின்றிட ஈட்டும்.

யானை புக்க புலம் போல

யாத்த செலவம் பாழ்பட்ட தம்மா!

திரையின் பின்னே வீழ்ந்ததோர் கூட்டம்.

இருளை ஒளியென சமைத்து உண்ணும்.

கோனும் குடியும் குட ஓலை முறையும்

பொம்மை ஆட்டம் அன்னதோர் காட்சி

பொருந்திடக்கண்டோம் மனம் வெந்தோம்.



======================================================

06.02.2016

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

மின்னலைக்காய்ச்சி..

மின்னலைக்காய்ச்சி..

SDC11933.JPG
மெரிக்கா அரிஸோனாவில் "அண்டிலோப் கேன்யான் "


மின்னலைக்காய்ச்சி..
============================================ருத்ரா


எதிரிகளை மயக்க‌
உடம்பு வண்ணங்கள்.
குச்சி போல் ஒடிந்து கிடந்து
உட்காரவந்த சிறு பூச்சியை
பலகாரம் பண்ணிவிடுதல்.
பாறை போல் படர்ந்து கிடக்கும்
இடத்தில்
குழு மீன்கள்
திடீரென்று காணாமல் போதல்.
பாறையே நாக்கு ஆகிவிடும்
பகீர் வேட்டை.
அழகாய் வாய் பிளந்து
இதழ்கள் முறுவலித்து
ஆடும் கிண்ணப்பூக்களில்
சின்ன வண்டுகள் சிறை.
மனிதனின் மூளை
விரிந்து பரந்து
ஒளி உமிழும் ஆலவிழுதுகளாய்
வெளியே பிதுங்கி
கேலாக்சி விண்மீன் மகரந்தமாய்
தூவி மயக்கி
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
"அவதார்"புகை மண்டலமாய்
கிராஃபிக்ஸ் காட்டுகிறது.
புடைத்த தொடையுடன் வாலுடன்
முண்டைக்கண் உருள்விழியிலும்
காதலின் பாதரசம் ஊற்றி
.............
கடைசியில் அங்கும்
மனிதன் கற்றாய் கரைய‌
ஒன்று ஒன்றை விழுங்கி..
கீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌
வர்ணம் பூசி அழைக்கிறது.

"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ
விவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி"

பக்தி
காதல்
காமம்
கம்ப்யூட்டர்..எல்லாம் பிசைந்து
நியூரானின்
சைனாப்டிக் ஜங்ஷனில்
ஜெல்லி மீன் மயிர்த்தூவல்களால்
பர்கின் ஜே செல்களாய்
ஸ்லோகன்களில் வரிபிளக்கின்றன.

அந்த "அனன்யயோகம்"....
மக்கள் சுவாசங்களையெல்லாம் விலக்கிய‌
ஒரு "உன்மத்த" மோனம் எனும்
"என்னில்" (மயி)மனம் வை
என்கிறான் கிருஷ்ணன்
கூவி கூவி அழைத்து.

சோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து
ரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..
விழிகள் நிலைகுத்தி
செருகிக்கொள்ள வேண்டும்.
மனசு.......
மனசும் மனசும் புணர்ந்து
அறிவு அறிவைக் கலந்து
ஒளிக்கும் நிழலுக்கும்
நழுவிய அந்த‌
பிம்பத்தை
கையில் பிடியுங்கள்.....
மின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.
ஞானத்தின் போதை அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.
"ஹிக்ஸ் போசானை" கையில் பிடித்துவிட்டு
செர்ன் எனும்
நுண்ணணுக்கூடத்து வளையங்களின்
வளையல்களின்
ஒரு கிளுகிளுப்போசைக்கு
தவம் இருக்கும்
அந்த விஞ்ஞானம்
இன்னும் ஒரு கிண்ணத்தைக்கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..
பரிமாணத்தின் கிண்ணத்தை.

============================================================
05.08.2014

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

வாழ்க்கை ஒரு தாகம்

வாழ்க்கை ஒரு தாகம்
================================ருத்ரா இ பரமசிவன்

கவலை... கண்ணீர்
இவை உனக்கு உன்மீது வந்து
எப்போது
கையெழுத்து போட்டன?
பிறந்த உடனேயே
அழுது ஒலிபெருக்கியிருப்பாய்
அது உன் வரவின் அடையாளம்.
கண்ணீரும் கசிந்திருக்கும்
அது சின்னப்பூவின் பளிங்குத்துளி
கண்ணீர் அல்ல.
உன் விடலைப்பருவம் முதல்
கவலையின் ரேகைகள் உன் மீது
ஜியாமெட்ரி போடவில்லை.
அன்று உன் பூச்சிமயிர்களில்
ஒரு மெல்லிய பிக்காஸோ ஓவியத்தின்
தூரிகை இழைகள் சுகமாய் வருடின.
ஆம்
அப்போது உன் முன்னே
ஒரு பிஞ்சுப்பெண் நிழல் காட்டினாள்.
காதல் ஒரு பொய் மெய் இன்பமாய்
அவள் புன்னகைக்கீற்றில்
புல்லரிக்கிறது.
அந்த நிழலைப்பிடித்து
நிஜமாக்கும் வேட்டையில் தான்
உனக்கு
வாழ்க்கையின் கசிவு வலிகள்
வருடிச்செல்கின்றன.
வயது முறுக்கு அவிழ்ந்த போது
வாழ்க்கையின் முறுக்கு
உன்னைப்பற்றிக்கொள்கிறது.
கவலையும் கண்ணீரும்
அதன்பாதையை
வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஒவ்வொரு மைல்கல்லாய்
கடந்து வரும்போது
அந்த காக்கையைபோல
நீயும்
ஒவ்வொரு கல்லாய் போட்டு
தாகம் தணித்துக்கொள்கிறாயே!
உன்னால் இது எப்படி முடிந்தது?
ஆம்
வாழ்க்கை ஒரு தாகம்.
நீயும் ஒரு காகம்.

===================================================
07.10.2016















Happy Independence Day


Happy Independence Day
===================================                      ruthraa e paramasivan




Happy Independence Day
to all of us.
We do not think 
our soil is
soiled with our blood and tears
but 
it is a land 
in one hand
to rise to the occasion 
of this jubilant hope
to preserve our DEMOCRACY
for ever.
Unity in Diversity
is our ever Growing Strength.
Yes
Unity is Strength
and
Diversity is the Multiplicity of 
our Strength of the Strength.
Let our banner say to the world
that 
we are the
UNITED STATES OF INDIA.

====================================

ஒரு சுதந்திர தின விழா.

ஒரு சுதந்திர தின விழா.
========================================ருத்ரா

....................

பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
த்ராவிட உத்கல பங்கா
விந்த்ய ஹிமாச்சல யமுனா கங்கா

....................

....................


நம்ம குஜராத்து இதுக்குள்ளே
இருக்குதுண்ணு
காவிக்கொடி பிடிச்சு
ஆட்சிக்கு வந்து
இங்க கொடியேத்த வந்தா
இத்தனை மாநிலங்கள்னு
பட்டியல் சொல்றாங்களே

பல்லை நற நறத்தார் அவர்.
போங்கடா நீங்களும்
உங்க மாநில சுயாட்சிகளும்...

வந்தேமாதரம்னு
கர்ஜித்தார்.
அவரே
அர்த்தம் சொல்லிக்கொண்டார்.

ஒரே தேசம்
ஒரே தேசம்
ஒரே  தேசம்

வேறு என்ன
சொற்கள்
அதனுள் இருக்கும்.?

அது அவருக்கு
மட்டுமே தெரியும்.

சுதந்திர தின விழா
இத்துடன் முடிந்தது.





===================================================



புதன், 14 ஆகஸ்ட், 2019

தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா




தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா
========================================ருத்ரா இ பரமசிவன்.


மராஅத்த அடர்கான் விரிவெண் வீதூஉய்
படுத்த மன்றில் திங்களும் தோய்தர
வெண்கடல் ஆர்த்த வெள்ளிடைப் பறந்தலை
பொருள் வேட்டுனன் சென்றான் ஆங்கு
நெடிய ஊழும் ஊழ்த்தது மன்னே.
ஆறு ஊர்வழி மன்பதை உருட்டும்
அடு நனி வாழ்வின் முறைப்படுஊம்
நோன்பின் ஊடிழை நெட்டிழையாவும்
தேர்ந்தவன் அவனே பொருள்வயின்தேடி
பொல்லாக்கானம் பொறிகிளர் வேங்கை
உறுத்து விழித்தது மருட்டியும் அஞ்சா
தீவிழிக் காட்டில் கதழ்பரிக் கலிமா
விரைய ஓட்டிச்செல்லும் காலையும்
எந்தன் மைவிழி மீமிசை ஆரிடை
ஏகிட செய்யும் அவல் பரல் கடாஅத்து
அஃதே எந்தன் செவ்வரி மழைக்கண்
நம் அணிலாடு மூன்றில்  வெரூஉ செய்திட
மீட்டு இவண் சேர்க்கும் நம்
வெள்ளிய மன்று  வள்ளியில்  படர்ந்த
அகன் மனை ஈண்டு அறிவாய் தோழி.

======================================================
இது நான் எழுதிய ஒரு சங்கநடைச் செய்யுள் கவிதை.

(ஒரு மீள்பதிவு )



நாணத்தின் மாயக்கண்கள்

நாணத்தின் மாயக்கண்கள்
==========================================ருத்ரா

மோப்பக்குழையும்
அநிச்சம் என்றார் வள்ளுவர்.
அனால் நீயோ
உன் முகத்தை ஒரு அநிச்சம் கொண்டு
நோக்கினாலும்
குழைந்து நாணி என்னை
நோக்கவே மாட்டேன் என்கிறாயே.

பார்!
இந்த அநிச்சப்பூக்களை.
இவை உன் வீட்டுத்தோட்டத்தில்
அரும்பு அவிழும் முன்னரே
கூம்பி விடுகின்றன‌
உன் நாணம் கண்டு.

நீ தலை குனிந்து என்னை நோக்கியதில்
உன் ஓர் அழகு ஆயிரம் அழகாய்
விரிந்தது
நிமிர்ந்தது.
உன் நாணத்தின் மாயக்கண்கள்
எப்படி என்னை உன்னுள் படம்பிடித்தது?

==================================================











செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

குறும்பாக்கள்



குறும்பாக்கள்
============================================ருத்ரா
(அரசியல் நையாண்டிக்காட்சிகள் )


1.காஷ்மீர்

வெள்ளையன்
வீசிய தூண்டில் முள்
நம் அரசியல் சட்டம்
கந்தல் ஆனது.


2. அமித்ஷா

பாரதமாதா தலையில்
முஸ்லீம் தொப்பியா?
அமித்ஷா ஆகிவிட்டார்
ஆக்ரோஷ்  ஷா.


3. மோடி


இதற்கே இப்படியா?
இன்னும் வரப்போகுது சுநாமி.
இனி அம்பத்தாறு தேசங்கள் போல்
யூனியன் பிரதேசங்கள்.


4, ராகுல்


என்னை பப்பு என்று
சொல்லிவிட்டு  அவர்கள்
பஃ பூன் ஆனார்கள் ஆனால்
ஆபத்தான கோமாளிகள்..


5. சோனியா


இந்திய அரசியல் பற்றி
இனிமேல் தான்
 "ஆனா ஆவன்னா .."
படிக்கப்போகிறார்.


6. ஆகஸ்டு பதினைந்து


ஏற்றுங்கள் என்று
காஷ்மீரில்
வெள்ளையன் கொடுத்தது
வெறுங்கொடியே .


7. ஆர்டிகிள் 370 ரத்து.


வாகாவில்
தரையை காலால் ஓங்கி ஓங்கி
அடிப்பார்களே.
அந்த சினிமாகாட்சிகள் ரத்து.


8. மூன்றெழுத்தில் இனி குடியிருக்கும்.


காஷ்மீர் தெருக்கள் மூலை முடுக்குகள்
எல்லாம் இனி
மூன்றெழுத்தில் குடியிருக்கும்.
அதுதான்  "நூத்தி நாப்பத்து நாலு"


==========================================================













திங்கள், 12 ஆகஸ்ட், 2019

"லைட் பாய் ரஜனி"

"லைட் பாய் ரஜனி"
================================================ருத்ரா

ரஜனி அவர்கள்
அமித்ஷா அவர்களை
வாழ்த்தியிருக்கிறார்.
எதற்கு வாழ்த்து?
தெரியவில்லை.
ஸ்க்ரிப்டும் ரெடியாக வில்லை.
படமும் ரெடியாக வில்லை.
ஆனாலும்
மீண்டும் மீண்டும் வாழ்த்து.
இன்னும் வெற்றிகள் குவிக்க வாழ்த்து.
ரஜனி அவர்களே
பாஷா வாக வந்து
உங்கள் ரசிகர்களின்
விசில்களுக்குள்
புயல் வீசினீர்களே.
அது அந்த பட வியாபாரத்தோடு
போயிற்றா?
ஆர்டிக்கிள் 370 ல்
ஜனநாயகம் பள்ளி கொண்டிருக்கிறது.
பாபர் மசூதியை இடிப்பது போல்
அதை இடித்துத்தள்ளிவிட்டு
இன்னும் கடப்பாரையை
கையில் வைத்திருக்கும்
அவர்களுக்கு
வாழ்த்துகள் வழங்குகிறீர்களே.
கடப்பாரையைக் கண்டு அச்சமா?
ஆவேசம் அல்லவா வந்திருக்க வேண்டும்.
ஜனநாயக நெறிமுறைகளின்
குரல்வளை நெறிக்கப்பட்டதற்கு
உங்களுக்கு சீற்றம் அல்லவா
வந்திருக்க வேண்டும்.
அது வெறும் இந்து முஸ்லீம் பிரச்னையா?
ஏதோ நேரு என்பவரால் போட்ட ஒப்பந்தமா?
இந்தியா
சுதந்திரம் எனும் இமைகளை
உயர்த்திய போது
இவர்கள் மதவெறியில்
கண்மூடிக் கிடந்தவர்கள் அல்லவா.
இப்போது காஷ்மீர் எனும் ரோஜா
தீப்பற்றி எரிவதற்கு
எண்ணெய் வார்த்தவர்களே இவர்கள் தான்.
எழுபது ஆண்டுகளாக
இந்தியாவை தன் இதயமாக
எண்ணியிருந்தவர்களிடையே
பகைமையயும் காழ்ப்புணர்ச்சியையையும்
விதைத்து விட்டு
ஆட்சி அறுவடை செய்ய வந்துவிட்டார்கள்.
பகையை மதங்கொண்டு பற்றவைப்பதில்
பயன் ஏதும் உண்டோ?
எல்லா நாடுகளும்
அணுகுண்டுகளை போன்சாய் மரங்கள்  போல‌
தங்கள் மேஜையில்
வைத்திருக்கின்றனவே!
அலங்காரத்துக்கா வைத்திருக்க்கின்றன?
பகைப்பொறி எங்காவது
சிதறினாலும் உலகமே இனி
சுடுகாடு தான்.
இதில் நாலு வேதமாவது? சனாதன‌மாவது?
எல்லா "த்வாக்களும்"
என்ன தத்துவம் பேசினாலும்
மிஞ்சப்போவது
மனிதக்கபாலங்கள் தான்?
மானுடம் காக்கும் பொறுப்புணர்ச்சியற்ற‌
வெறியை வைத்து
கணிப்பொறியை தட்டி விளையாடும்
இந்த செயல்களை
வாழ்த்துவதன் மூலம்
உலக அழிவுக்கே வழிவகுக்கின்றீர்கள்.
இந்த சுடுகாட்டுப்புகை மூட்டமா
ஆன்மீகம்?
தெளிவு அடைவீர் ரஜனி அவர்களே!
இன்று ஜனநாகக் கண்ணியத்தை
புண்ணாக்கி விட்டார்கள்.
இந்த "புண்"ணியத்தால்
சட்டத்தின் வாக்குறுதிகளில்
ரத்தம் சிந்துகின்றன.
சொல்லுங்கள்.
நீங்கள்
பாபா பக்தரா?
இல்லை இந்த‌
"பாப"பக்தரா?
ஜனநாயகம் வெறும் எண்ணிக்கை அல்ல.
கணிப்பொறி அத்தனை எண்ணிக்கைகளை
அளித்திருக்கக்கூடும் என்றால்
அந்த "எந்திரனே" வந்து ஆளட்டும்.
அந்த எத்திரத்தின் 2.0 ஆக வந்து
அக்கிரமத்தை தூளாக்கிய நீங்கள்
இப்போது அந்த எந்திரமே
தூளாகிக்கிடப்பது
உங்களுக்கு தெரியவில்லையா?
இப்போதும் அந்த மதவெறியின்
அல்கோரிதங்களைக்கொண்ட
கணினியையே பிரதமர் நாற்காலி
ஆக்கியிருக்கிறார்கள்.
அந்த விஷமத்து விசைப்பலகையே
சாதி மதங்களின் ஆதிக்கம் தான்.
அந்த கணிப்பொறி மகாபாரதத்து
அரக்கு மாளிகை ஒன்றை எழுப்பி
ஜனநாயகத்தை அதற்குள் சிறைப்படுத்தி
விட்டதோ
என்ற அச்சமும் ஐயமும்
மக்களிடையே நிலவுகிறது.
மேலும் மேலும் வெற்றிபெற‌
வாழ்த்துகள்
குவிக்கச்சொல்லி
உங்களை ப்ரோகிராம் செய்தவர்களை
எப்போது நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?
சூப்பர்ஸ்டார் எனும் எரி நட்சத்திரம்
டூப்பர்ஸ்டார் எனும் "வால்"நட்சத்திரம்
ஆகலாமா?
அரசியல‌மைப்பை மனுஸ்ம்ருதியாக்கி
நான்கு வர்ண மத்தாப்பு கொளுத்தும்
அதர்மங்களும் அநியாயங்களும்
எரிந்து போகட்டும்.
ரஜனி அவர்களே
கபாலிடா! நெருப்புடா!
என்று கர்ஜித்த நீங்கள்
இது வெறும் கபடமடா
என்று
எங்கள் முதுகில் குத்த‌
முன் வரலாமா?
அமித்ஷா கிருஷ்ணர்
மோடி அர்ஜுனர்
என்றெல்லாம்
உங்கள் அரிதாரத்தை
அவர்களுக்கு பூச அரம்பித்து
எப்போது "மேக அப்"மேன் ஆனீர்கள்?
தமிழர்கள்
உங்கள் சூப்பர்ஸ்டார் கவச குண்டலத்தை
கழற்றி விட்டால்
அப்புறம் நீங்கள் இங்கு
வெறும் "லைட் பாய்" தான்.
அதனால் தான் இப்போதே
அவர்களுக்கு "ஃபோகஸ் லைட்"
அடித்து பழகுகிறீர்களோ?
யோசியுங்கள்!

================================================
11.08.2019




வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

அத்திவரதர்



அத்திவரதர்
==============================================ருத்ரா

ஆகா!
மனம் குளிரக்கண்டேன்
அவன் தோற்றம்.
நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும்.
தொண்ணூறு டிகிரி கிடைக்கோடும்
தொண்ணூறு டிகிரி நெடுங்கோடும்
காட்டிய ஜியாமெட்ரியில்
கை வழியே நெய் வழியும் 
தேனமுதத் தோற்றமாய் கண்டேன்.
ஆழ்வார்கள் எனும்
மனத்தினுள் ஆழ்வார்கள்.
ஆழ்ந்து அகழ்ந்து முத்தெடுத்து
திருவாய் மொழியை கடல் ஆக்கினார்கள்.
அடியேன் வெறும் சிற்றெரும்பு
அத்தேன் கடல் அள்ளிப்பருகிட இயலுமோ?
தோற்றம் என்றாலும் அழகன்.
தோற்றம் இல்லை என்றாலும் அழகன்.
கூட்டத்துள் ஊர்ந்து செல்ல இயலவில்லை.
தனி முத்திரையோடும்செல்ல வழியில்லை.
கண்டவர்களைக் கண்ட்டேன்.
விண்டவர்களை வியந்தேன்.
அத்திவரதா! ஆட்கொள் அய்யா!
என்று 
ஈனக்குரல் எழுப்பினேன்.
இடியொன்று முழங்கியது.
அத்திவரதன் பேசுகிறேன்.
என் தரிசனத்தில் உன் ஏக்கம் தீர்ந்தது.
உன் தரிசனத்தில்
என் ஏக்கம் எப்போது தீரும்?
அந்தப்பல்லியும் 
அந்தப் பூச்சியும் 
அந்தப் பூவும் புல்லும்
அந்த நோயும் 
அந்த நோய் தருகின்ற 
நுண்ணுயிரியும்
எல்லாம் ஒன்று தான்.

கோடி மக்களிளின் உயிர்
ஒரே கோட்டில் தான்...
எல்லாம் ஒன்று தான்
என்று சொன்ன மனிதனின்
"சொல்லின்" தரிசனம்
கன பரிமாணமாய்
என் முன் எப்போது வந்து நிற்கும்?
என் ஏக்கம் 
எப்போது தீர்ப்பாய்?
மனிதா! உரை!

===================================================










யார் நீ ? நில் அங்கே !

யார் நீ ? நில்  அங்கே !
=========================================================ருத்ரா

"என்னைப்பற்றி அறிந்து கொண்டாயா?"
கடவுள் கேட்டார்.
"உன்னைப்பற்றி அறியத்தான்
அவர்களிடம் சென்றேன்
நீ எங்கள் குலத்தில் பிறக்கவில்லை.
எங்கள் அருகில் கூட நிற்காதே
என்றார்கள்."
"அப்படியா சொன்னார்கள்?
நான் போகிறேன்"
என்று
கடவுள் அங்கே சென்றார்.
"யார் நீ? நில் அங்கே."
என்கிறார்கள்.
"எங்கே பூணூல்?"
என்று கேட்டார்கள்..
"என்னது எனக்கு பூணூலா?
யாரடா அது என்னையறியாமல்
எனக்கு பூணூல் போட்டது?"
கடவுள் குதி குதியென்று
குதித்தார்.
கோவிலுக்குள் எல்லாம்
போய் பார்த்தார்.
அங்கே எல்லா
கடவுள் சிலைக்கும் பூணூல்!
தொந்திப்பிள்ளையாரிலிருந்து
ஹிரண்யகசிபு குடலை உருவி
மாலையாய் போட்டிருந்த
நரசிம்மருக்கும் கூட
அந்த குடலோடு குடலாய் பூணூல்!
தாம் தூம் என்று குதித்த
கடவுளை
தேசவிரோதி என்று சிறையில் போட்டு
நையப்புடைத்து
வெளியே கொண்டு வந்து போட்டார்கள்
பிணமாக!
கடவுள் தற்கொலை செய்து கொண்டதாய்
"கேஸை " முடித்து விட்டார்கள்.

"மகேஸ்வரா !
என்ன இது பிணமாவா கிடந்தீர்கள்.?
உங்கள் ருத்ர தாண்டவம் எல்லாம்
என்ன ஆயிற்று?"
"தேவி கேட்டாள்.
"எனக்கு நானே கொடுத்துக்கொண்ட
தண்டனை அது."
"உங்களுக்கே தண்டனையா?
ஏன்?"
"நான் முதலில்
என்னைப் படைத்துக்கொண்டேன் .
பிறகு நான்
மனிதனைப்படைத்தேன் "
"அதனால்  என்ன?"
"முதலில் மனிதனைப் படைத்திருந்தால்
இந்த தொல்லையே வந்திருக்காது,
அவன்
கடவுளை படைத்திருக்க மாட்டான்."
அவனோடு நின்று கொள்வான்."

=================================================















புதன், 7 ஆகஸ்ட், 2019

இது கவிதை அல்ல.




இது கவிதை அல்ல.
===============================================ருத்ரா

நீலவானம்
பளிங்கு போன்று
தெள்ளிய மௌனத்தை
மலை முகடுகளில்
பதித்து நிற்கிறது.
பச்சைப்புல் விரிப்பு
அதை தழுவி
நிரவல் செய்கிறது.
ஓ! மனிதா
கோபத்தில் கொப்பளித்து
நிற்கும் நீ
இங்கு வந்தால்
உன் நரம்பு புடைப்புகள்
சமனம் ஆகி விடும்.
சீறும்
அந்த சிவப்பு லாவா
அமைதியின்
பச்சை லாவா ஆகிவிடும்.
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து
இதை சில வினாடிகள்
உற்று நோக்கி இருக்கிறேன்.
அமெரிக்காவின் கலிஃ போர்னியாவில்
லாஸ் ஏ ஞ்சல்ஸில்
ஓக் பார்க் என்ற நகரத்தின்
பூங்கா இது.

அப்போது
என் உள்ளம் பொங்கி
அருவி ஆனது.
தனிமையின் அந்த பசுமை
எனும் புல்லரிப்பு
சிந்தனை இடுக்குகளில்
"கிம்பர்லிகளாய் "
சுடர்கின்றன .
..

அழகின் துடிப்பு இது.
எழுத்திலும் காகிதத்திலும்
இதை பொட்டலம்
கட்டிவிடமுடியாது.
கவிதை என்று தலைப்பு இட்டால்
அந்த நீலவானமும் பச்சைப்புல்லும்
கோபித்துக்கொள்ளும்.
இப்படி
கொச்சைப்படுத்த
நாங்கள் தான் கிடைத்தோமா? என்று.

===============================================================








செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

அவர் நினைவை போற்றுவோமாக‌

அவர் நினைவை போற்றுவோமாக‌
===================================================ருத்ரா


பெருமதிப்பிற்குரிய
சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்
காலமான செய்தி
மிகவும் அதிர்ச்சியை தருகிறது.
உலக நாடுகள் தோறும்
வலம் வரும்போது
நெற்றி நிறைய திலகம் இட்டு
இந்திய நாடு
உலகத்துக்கு ஒரு திலகம் போன்றது
என்ற கருத்தின் உருவகமாய்
கண்ணியம் காத்த தலவர் அவர்.
உலகத்தில் இந்தியர்களுக்கு
ஏதாவது பிரச்னை என்றால்
உடனடியாய் தீர்த்து வைப்பதில்
அவர் காட்டும் வேகமும் அக்க்கறையும்
நம்மால் மறக்க இயலாது.
பெண்ணினத்தின் கண்ணியம் மிக்க‌
அந்த ஆளுமை
மறைந்து போனது
நமக்கு பெரும் இழப்பு.
அவர் நினைவை போற்றுவோமாக!

=============================================






ஒரு வெள்ளை ரோஜா


ஒரு வெள்ளை ரோஜா
======================================================ருத்ரா

காஷ்மீர் என்றால்
நம் கண் முன் வருவது
ரோஜாவும் ஆப்பிளும் தான்.
அரசியல் அமைப்பு சாசனத்தில்
ஒரு நம்பிக்கையும்
மனிதநேயமும்
கொண்டு எழுதப்பட்ட
அந்த ஷரத்துக்களில்
பீரங்கிக்குண்டுகள்
எப்படி கூடு வைத்தன?
சுதந்திரம் பெறத்துடித்த‌
இந்தியக் கைகளின் கூட்டணிக்குள்
ஒரு நச்சுத்தனமான‌
கோடரியை செருகிவைத்த‌
வெள்ளயன் தந்திரம்
காஷ்மீரை செங்காடு ஆக்கிவிட்டது.
நம் நாட்டின் மதங்களுக்குள்
வழிபாடுகளுக்கு
குவிந்த கைகள்
மனித நட்புக்கும்
கைகள் குலுக்கிக்கொண்டுதானே
இருந்தன.
நேற்று வரை
நம் ஜனநாயக கணிப்பொறிக்குள்
முட்டையிட்டவற்றில்
எந்த அசுரக்குஞ்சுகளும்
சிறகடிக்க வில்லையே.
உலகமெலாம் கவ்விக்கொண்டிருக்கும்
தீவிரவாதப்புகை மூட்டம்
இங்கேயுமா
வைரஸ் ஆகவேண்டும்?
அமர்நாத் பனிலிங்கம்
அன்பே சிவம் எனும்
உருவகமாய் உலகத்துக்கு
காட்சி தந்தது.
இதற்குள் வர்ணங்களின் மயக்கம்
எப்படி வந்தது?
ஒரே இந்து மதம் என்று
சொல்லி
அதில் ஆயிரம் சாதிகளை
செருகி
வைத்துக்கொள்ளுவதற்குப்பதில்
ஒரே மனிதம் எனும்
மதம் படைப்போம்.
ஒரு மனிதனுக்கு
ஓராயிரம் இறைவர்களா?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்பது
எம்மதமும் சம்மதம் என்பதன்
முழக்கம் தானே.
முள்ளோடு ஒரு சிவப்பு ரோஜா
நமக்கு இனி வேண்டாம்.
அமைதியின் மகரந்தங்கள் தூவும்
வெள்ளை ரோஜாவே
நம் தோட்டத்தில் பூக்கட்டுமே!

=============================================








வா



வா
========================================ருத்ரா

கண்ணாடிச்சிறகுகள்
கொண்டு
விர்ரென்று காதருகே ஒலித்து
விளையாடும் தட்டாம்பூச்சியின்
த‌ருணங்கள் போல்
செவியோரம் அலைகள்
ஆர்ப்பரிக்க‌
ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்
நடத்துகிறாய்?
கொடி போன்றவளே
கொடியேந்தி போராடும்
உன் கோரிக்கை தான்
என் கோரிக்கையும்.
என்ன செய்வது?
தனிமைக்குள்
தலைகள் நுழைக்கும்
நெருப்புக்கோழியைப்போல‌
இந்த இரைச்சல் காடுகளுக்குள்
ஒரு பதுங்கு குழி கண்டுபிடியேன்.
நம் இதயங்கள் கலக்கும்
ஒலியைத்தவிர‌
வேறு ஒன்றும் கேளாதவாறு
அடைந்து கிடப்போம்..வா.
தனி உலகம் தேடுவோம் வா.

===========================================



திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பெண்ணை மடல் மா


பெண்ணை மடல் மா
==========================================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

=======================================





விளக்க உரை
=========================================


பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!

பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.

தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.

தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)

தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.

அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.

வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!

(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்)

=================================ருத்ரா இ.பரமசிவன்
20.03.2016


வழிபாடுகள்

வழிபாடுகள்
====================================================ருத்ரா

ஆமென்
என்று சொல்லிவிட்டு
எல்லோரும் போய்விட்டார்கள்.
வெறிச்சோடியது.
சுரூபங்கள்
சத்தமிடாமல் மனிதனின்
ரத்த சரித்திரங்களை
மௌனித்து சொற்பொழிவு ஆற்றியது.
மரப்பெஞ்சுகள் நீள நீளமாய்
கால் நீட்டிப் படுத்துக்கிடந்தன.
மனிதர்களின் நிழல்கள் அங்கே
தங்கியிருந்தன.
சோற்றுக்கவலைகளும்
பணத்தின் வேட்டைகளும்
அவர்களை வெளியே
மேய விட்டிருக்கின்றன.
அந்த பெரிய மணியின் ஓசை
அலையின்
ராட்சச நாக்குகளாய்
புல் மேய்ந்து கொண்டிருந்த
ஆட்டுக்குட்டிகளை
நக்கிக்கொடுத்தது.
கசாப்பு கத்திகளின் முனைகளில்
அடுத்த வழிபாடு
ஆரம்பிக்கும் வரை.

==============================================================

சவ்வுப்படலம்

சவ்வுப்படலம்
========================================ருத்ரா


இரண்டு முற்றுப்புள்ளிகளுக்கு இடையில்
ஒரு வாக்கியப்பிரதேசம்.
கருத்து பிரசவிக்கவே இல்லை.
குவா குவா சத்தங்கள் மட்டும்
அமர்க்களம்.
நான் சொல்லவருவது என்னவென்றால்
என்று
கீரியும் பாம்பும் விளையாட்டு காட்டும்
பாய்ச்சல்களே அதிகம்.
தெளிவான சிந்தனை என்பது
கானல் நீரில் படகுவிட
ஒரு வழியாய்
இந்த முற்றுப்புள்ளியில்
கரையேறியது அந்த முற்றுப்புள்ளி.
புரியாதவர்கள் கொட்டாவி விட்டார்கள்.
புரிந்தவர்கள்
எப்போதோ தூங்கிவிட்டார்கள்.
கனவில் போய்
சொற்பொழிவுக்கு அர்த்தம் பிழிந்து கொள்ளலாம்
என்று.
பாஷ்யம் முடிந்து வீட்டது.
இத்துடன் பிரம்மம் பற்றிய
சவ்வுப்படலம் முற்றிவிட்டது.

===============================================

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

கவிதைகளும் காதலித்தன

கவிதைகளும் காதலித்தன
==========================================ருத்ரா



காளிதாசன் என்ற நினைப்பில்

மேகத்துக்குப்பதில்

அவள் நெஞ்சத்தையே அவளுக்கு

தூது அனுப்பினேன்.

அந்தக் கவிதை அழகில்

சொக்கிப்போய்

என்னை மறந்தே போய்விட்டாள்.

காலங்கள் ஓடின.

தூது அனுப்பினேனே

உன் பதில் கிடைக்கவில்லையே

என்று

செல்லில் "மெஸ்ஸேஜி"னேன்.

அவள் கடுந்தமிழில்

குறுஞ்செய்தியிட்டாள்.



"என் நெஞ்சை ஏற்கனவே

உனக்கு அனுப்பியிருந்தேன்.

அதை அழகிய கவிதையாக்கி

எனக்கே திருப்பி அனுப்பி விட்டாயே!

என் நெஞ்சையும் அக்கவிதையையும்

பிரிக்க முடியவில்லை.

போதும் உன் காதல்.

உன்னைவிட உன் கவிதையையே

காதலிக்கிறேன்."



கவுத்து  விட்டாயே!

காளிதாசா!


=====================================================

சனி, 3 ஆகஸ்ட், 2019

ஒருவன் தானே நானும்.



ஒருவன் தானே நானும்.
======================================================================
ருத்ரா இ பரமசிவன்.



வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் கூடவா 
இந்த பச்சை மரகத நிழல்கள்?
என்னத்தை சாதித்துவிட்டோம் என்ற 
ஏக்கத்தின் கூரிய முட்கள் 
ஒரு அம்புப்படுக்கையாய் முன்னின்று 
ரத்தம் கசிய வைக்கிறது.
இந்த வெய்யிலின் பளபளப்பு 
பச்சைப்புல் விரிப்பிற்கு அக்ரிலிக்  வண்ணம் பூசுகிறது.
இந்த பச்சையெல்லாம் 
அன்று அவள் கல கலவென்று சிரித்தாளே 
பச்சைக் கண்ணாடி வளையல்களுடன் 
அதற்கு ஒரு சமன்பாடு எழுதிவிட முடியுமா?
நினைவின் ஒளியாண்டுகளுக்கு 
எத்தனை மில்லியன்கள் எழுதினாலும் 
அது கண்முன்னே  தான் 
"கழச்சி " ஆடுகின்றன.
எது எப்படியிருந்தாலும் 
காகிதத்தின் பின்னும் எழுத்துக்களின் பின்னும் 
ஒளிந்து கொள்ளும் கோழைகளில் 
ஒருவன் தானே நானும்.


=======================================================================



.

  





வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

நாகேஷ்

நாகேஷ்

==========================================ருத்ரா இ பரமசிவன்



( நமக்கு எப்போதெல்லாம் சிரிக்கவேண்டும்

என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம்

நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களை

மனப்படத்தில் மீள்பதிவு செய்துகொண்டு

சிரித்துக்கொண்டே இருக்கலாம். என் கவிதை

சிரித்துக்கொண்டே நினைவு கூர்வதற்காக  இங்கு

பதிவிடப்படுகிறது)








நாகேஷ் 




"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"

என்ற நிகழ்ச்சிக்கு

மடி நிறைய ஒரு கோடியை

கனமான கனவாக்கி

சுமந்து சென்று அதில்

ஒரு ரூபாய் கூட வெல்லாத‌

"தருமி"யின் புலம்பல்

எப்படியிருக்கும்?

இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்

எல்லாம் எதிரொலிக்கிறது.

சிம்ம கர்ஜனையின் எதிரே

இந்த நகைச்சுவைப் பூனையின்

கணீர் கணீர் களில்

மியாவ் களை கேட்கவில்லை.

ஒரு டைகர் நாகேஷ்

அந்த மண்டபத்துத் தூண்கள்

கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.

"கேள்வியை நீ கேட்கக்கூடாது

நான் தான் கேட்பேன்"

என்ற வசனத்தில்

அந்த வெல வெலப்பு.

ஒரு பொய் மிடுக்கு

சிவ பெருமானையே

கடுப்பேற்றிப் பார்க்கும்

ஒரு துறு துறுப்பு...

இந்த நடிப்பெல்லாம்

சொல்லிக்கொடுக்க‌

கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்ஃபோர்டு

பல்கலைக்கழகங்கள் எல்லாம் பற்றாது.

இவரை

அமெரிக்க ஜெர்ரி லூயிஸ்ன் நிழல்

என்பார்கள்.

ஆனால் "சர்வர் சுந்தரம்" எனும்

படத்தில் நாம் கண்டது

நகைச்சுவை....

அடக்கிச் சிரித்து அழுகை....

காதலைக்காட்டும் அற்புத நளினம்...

இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்

ஒரு டைரக்டரிடமே தண்ணி காட்டி

நடிப்பு என்று அவர் தெரிந்து கொள்ள முடியாத‌

இயல்பைக்காட்டி அவரை தவிக்க வைத்தது...

இதெல்லாம்

கோடம்பாக்கத்துக்காரர்கள்

இவரிடம் தோண்டி எடுத்த கிம்பர்லி.

இப்படி

எத்தனை படங்கள்.

எத்தனை பாத்திரங்கள்.

கே எஸ் கோபாலகிருஷ்ணன்

எஸ் வி ரங்கராவ்

நாகேஷ்

...இந்த அபூர்வ‌

பெர்முடா முக்கோணம்

திரைக்கடலில்

எத்தனை சூறாவளிகளை

கிளப்பியிருக்கிறது?

ஒரு "நீர்க்குமிழியில்"

நடிப்பின் ஏழுகடல்களையும்

தளும்பச்செய்தவர்.

இவரை மறக்க முடியாது.

இவர்

ஹிட்லருக்கு முன் நேருக்கு நேர்

நிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்

ஹிரோஷிமா நாகசாகிகள்

சின்னாபின்னம் ஆகியிருக்காது.

நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ்

என்று நாம் சொன்னால்

அங்கிருந்தே கத்துவார்

ஐ ஆம் செலபா யூ கோ அஹெட்ரா

......

காதலிக்க நேரமில்லையில்

பாலையாவுக்கு கதை சொல்லும்

பாணியில்

அராபிய "ஆயிரத்தொரு இரவுகளுக்கு"

அது நீண்டு கொண்டே

விலாப்புடைக்க

சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.

சொல்லிக்கொண்டே போகலாம்..

எமனின் எருமையைக்கூட இந்நேரம்

அங்கே சிரிக்க வைத்துக்கொன்டிருப்பார்.

அந்த எமன் எப்படியோ

ஆனால் இவர்

சிரிக்கவைப்பதில் எமன்.

அவர் சாகடித்தது

நம் கவலைகளைத்தானே.





=============================================



சொர்க்கம் பக்கத்தில்...

சொர்க்கம் பக்கத்தில்...
=====================================ருத்ரா

கடவுள் தாவி தாவி
ம‌ரக்கிளைக்கு வந்தார் குரங்காக.
இங்கிருந்து
தரைக்கு தாவினார்
மனிதனாக.
மனிதனாய் வானத்தின்
உச்சிக்கே தாவி
கடவுள் ஆகி  விட்டால்
அதுவே
முழுப்பரிமாணம்.
ஆனால் குரங்கின் மனிதங்களும்
மனிதனின் குரங்கு மிச்சங்களும்
பட்டி மன்றம் தொடங்கியிருக்கின்றன.
கடவுள்
குரங்கா? மனிதனா?
அதற்கு முன் இதற்கு
நடுவராக யாரை உட்காரவைப்பது?
கடவுளா?
குரங்கா?
மனிதனா?
இரண்டல்ல ஒன்று
என்று சொன்னால் அது
அத்வைதம்.
மூன்றல்ல ஒன்று
என்று சொன்னால் அது
முத்வைதம்.
இது குறும்புக்காக சொன்னது.
சுத்தமாக சொன்னால்
இது "அத்ரையம்".
சங்கரரைக்கேட்டால்
"கோவிந்தனைப்பாடு
கோவிந்தனைப்பாடு
ஓ முட்டாளே"
என்று தான் துவங்குவார்.
சரி.
நமக்கேன் வம்பு.
நாமும் அந்த‌
முட்டாள்களின் சொர்க்கத்தில்
போய் உட்கார்ந்துகொண்டு
கோவிந்தனைப் பாடுவோம்.

====================================================




வியாழன், 1 ஆகஸ்ட், 2019

எங்கே சென்றாய் நீ?

எங்கே சென்றாய் நீ?
==========================================ருத்ரா

குற்றால அருவியில்
குளிக்கையிலே தேடினேன்.
அப்புறமும்
மரக்கிளைகளில் தாவும்
குரங்குகள் போல்
மனத்தை ஊஞ்சல் ஆடவிட்டேன்.
அப்புறமும்
பாபநாசத்து படிக்கட்டுகளில்
கால்கள் அளைய விட்டேன்.
அப்பப்ப!
அந்த பருமீன்கள் ஒவ்வொன்றும்
உன் கூரிய ஆனால் இனிய‌
பார்வைகளால்
என்னை வெல வெலக்க‌
செய்து விட்டனவே.
உன் கண்விழி நெளியலில்
மின்னல் போல்
சில கணங்களை குருடாக்கிய‌
அதே பார்வைகளின்
இடைவெளியில்
எங்கோ தப்பித்து
மறைந்து கொண்டாய்.
எங்கே சென்றாய் நீ?

====================================