என்றால் என்ன?
____________________________________
சொற்கீரன்.
இப்படி ஆரம்பித்து
விளையாடிப்பாருங்கள்.
வாழ்க்கை என்றால் என்ன?
அது ஒரு விளையாட்டு.
விளையாட்டு என்றால் என்ன?
அதுவா?
அதுவும் ஒரு பட்டாம்பூச்சியை பிடிக்க
முயலும் விளையாட்டு தான்.
ஆனால்
அதன் பேர் காதல்.
காதலா?
அப்படியென்றால்
வேண்டாம்
கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு
கல்லெறியும் விளையாட்டு.
நாளைக்கு கட்டும் கூடு
முள்ளிலும் குச்சியிலும் ஆனது தான்.
இன்றைக்கு நுரைச்சிறகு கட்டி
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
சுற்றி சுற்றி வருவானேன்?
அப்புறம்
குடும்பம்
நல்ல குடும்பம்
பல்கலைக்கழகம்
இதெல்லாம் என்ன?
நர்சரித்தொட்டியிலிருந்து
அந்த ரோஜா நாற்றைக்கொண்டு வந்து
நம் வீட்டுக்குள் வைத்தாகி விட்டது.
அங்கே மொய்த்த தேனீக்கள்
இங்கே எப்படி வெறும்
ஈக்கள் ஆகின?
சரி.
புத்தகம் புரட்டிக்கொண்டு தானே
இருக்கிறாய்.
இல்லை
என்னிடம் ஏ ஐ சிப்புடன்
மடியில் ஒரு ஐ பேடு இருக்கிறது.
இப்போது
வாழ்க்கை பற்றி ஒரு கட்டுரை கேள்.
அது
தட தட வென்று புல்லட் ரயில் மாதிரி
ஓடி விட்டது.
இப்படி ஆரம்பிக்கிறது அது.
முதலில் உன் வயது என்ன என்று பார்?
ஓரிரண்டு வயதா?
இப்போது தான் நீ
டையாப்பர் கழன்றவன் அல்லது வள்..
கையில் கொடுத்தால்
கைபேசி கூட முதலில் வாய் வைத்து
ருசிப்பாய்.
அப்புறம் எப்போதும்
அதில் கேம்ஸில்
முதலைக்குட்டி முதல் முயல் குட்டி வரை
கட்டி அணைத்து விளையாடுவாய்.
இப்போது உன் வயது
மின்னல் விளிம்பை தொட்டு விட்டதா?
அப்புறம் என்ன?
வானத்தை பிசையவேண்டும் போல் இருக்கும்.
நட்சத்திரங்கள் உன் பாப் கார்ன்.
என்ன சொல்கிறாய்?
இப்போது அர்த்தமே இல்லாத சொற்கள்
மட்டுமே
உன்னை மொய்த்துக்கொண்டிருக்கும்.
கனவு என்றால் என்ன
என்று
உன் கண்கள் தீசிஸ்
எழுதிக்கொண்டே யிருக்கும்..
சரி..
வாழ்க்கை என்றால் என்ன
அதை நீ கேட்கவேயில்லையே.
எதற்கு இங்கே வந்தாய்
என்று அதை நீ தேடவே இல்லையே
மாண்டூக்யோபனிஷத் காரிகையில்
தொடாமல் தொடுவது
வாழாமலேயே வாழ்வது
இன்னும் இன்னும்...
கௌடபாதர்...
அந்த..
"அஸ்பர்ஸ் யோகம்"
என்றால் என்ன என்று சொல்லியிருக்கிறாரே..
என்றால் என்ன?
என்றால் என்ன?
என்றால் என்ன?
...............
ஏ ஐக்குள் கூட கீறல் விழுந்த
ரிக்கார்டுகள் இருக்கும் போலிருக்கிறது.
_____________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக