விடியலுக்கு வெகு தூரம் இல்லை.
____________________________________________
அஸ்வத்தாமாக்களே!
இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு
இந்த ஊசிப்போன கதைகளுக்குள்
பஞ்சடைத்த பொம்மைகளாய் வந்து
வில் அம்பு தூக்கி
வித்தைகள் காட்டிய போதும்
மானுடத்தின் அறிவுத்தீயை
உங்களால் அணைத்து விட முடியாது.
கந்தல்களாகிப்போன
சாதி சாஸ்திரங்களைக்கொண்டா
இந்த அறியாமை நிர்வாணங்களை
மூட நினைக்கிறீர்கள்?
பாரதக்கதைகள் மூட்டை மூட்டையாய்
சொன்னது என்ன?
நச்சு சிந்தனைகளின்
வர்ணாசிரம தந்திரங்கள் தானே.
கல்கி அவதாரங்கள்
கற்றாழை வனங்களாக வந்து
மக்களின் அவலங்களுக்கு
மேலும் மேலும் பூதம் காட்டும்
உங்கள் ஹாலிவுட் ஜிகினாக்களால்
எதுவும் நடக்கப்பொவதில்லை.
கோடி கோடியாய் இந்த
கரன்சிகளின் வசூல் காட்டில்
எந்த நியாயங்களும் நீதிகளும்
இந்திய மக்களின்
வாழ்க்கைக்கு விளக்கேற்றப்பொவதில்லை.
அவர்களை மேலும் மேலும்
இந்த வேதனைகளின் ஆரண்யங்களுக்குள்
தள்ளி விட்டு
மனிதத்தின் சமநீதியை ஒரு
சமாதிக்குள் அமிழ்த்தப்பாக்கும்
கம்பியூட்டர் சிலந்திக்கூடுகளே இவை.
அறிவின் விடியல் வெளிச்சம்
இந்த விட்டில் பூச்சிகளால்
விழுங்கப்படவே முடியாது.
______________________________________________
கல்லாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக