சனி, 29 மே, 2021

விருதுவுக்கே விருது

 


விருதுவுக்கே விருது 

____________________________________________________________________________


ஓ என் வி விருது இப்போது கவிப்பேரரசு அவர்களால் திருப்பி அளிக்கப்பட்ட 

ஓ என் வி விருதாக மதிப்பில் மிக மிக உயர்ந்து விட்டது.விருதுவுக்கே விருது வழங்கும் வல்லமையுடையது அந்தக்கவிஞனின் கவிதைகள்.


"நான் மிக மிக 

உண்மையாக இருக்கிறேன்.

என் உண்மையை

எவரும் உரசிப்பார்க்கத்

தேவையில்லை"

அவர் சொல்லிய கவிதை இது.

ஒரு உச்சியில் அமர்த்தப்படவேண்டிய‌

கவிதை இது.

ஆயிரம் இமயங்கள் விறைத்து

நின்ற போதும்

அவன் உயரம் முன்னே

இவை எல்லாம் கூழாங்கற்களே.

எங்கள் பெருங்கவிஞனே!

சிறுமதியாளர்களின்

இந்த சில்லறை இரைச்சல்கள்

உன் கவிதை எழுச்சிப்பிரவாகங்களில்

காணாமல் போகும்.


_______________________________ருத்ரா

வெள்ளி, 28 மே, 2021

அந்தச்சுருக்கங்கள்.........

 அந்தச்சுருக்கங்கள்.........

_______________________________________ருத்ரா


அன்பின் எரிமலைக்குழம்பு

ஆறி அறி வற்றியபின்

வரிகள் காட்டும்

காதலின் 

ஃபாசில் சித்திரங்கள் இவை.

எலும்பும் சதையும்

ரத்தமும் 

ருசி பார்த்துக்கொண்டே

கடைசியில் தான்

இந்த நெருப்பின் தீஞ்சுவையை

சப்பு கொட்டி சுவைக்கின்றன.

வயதுகளின் குறுக்கெலும்பு 

ஒடிந்து கொண்டன.

நரம்புகள் மட்டும்

மின்னல் தந்திகளின்

யாழ்களாய் இங்கே

இனிய பண் கூட்டுகின்றன.

கொரோனா தோற்றுபோகும்

அமுதச்சுவையின்

அரிய மூலை இது.

அதனிடம் 

போட்டுக்கொடுத்து விடாதீர்கள்.

அது

பொட்டலம் கட்டி எடுத்துக்கொண்டு

எந்த குழிக்குள்ளாவது

கிடத்திக்கொண்டு

அவர்களின் அந்த அற்புத ரகசியம்

என்ன என்ன என்று கேட்டு

இன்னொரு புதிய வடிவம் கொண்டு

இந்த மனித இனத்தின்

உள் கனலை உறிஞ்சிப்பார்க்க‌

வந்து விடும்.

______________________________________________________

நூறு வயதைத்தொடும் ஒரு தம்பதியர் தம்

சுருக்கம் விழுந்த முகத்தோடு முகம் உரசி

காதலின் மிகப் பழுத்த தீப்பொறியை 

பற்றவைத்துக்கொண்டிருக்கும் காட்சியை

காட்டும் கவிதை இது.

___________________________________________



 


உலக பட்டினி தினம்

 உலக பட்டினி தினம்

______________________________ருத்ரா.


இன்றைக்கு மட்டும்

உற்றுப்பாருங்கள் 

இந்த உலகத்தை.

உருண்டை அல்ல அது.

தட்டையான நசுங்கிப்போன‌

காலியான ஒரு

அலுமினியத்தட்டு.


_________________________

வியாழன், 27 மே, 2021

நிழல்கள்

 


நிழல்கள்

_________________________________ருத்ரா

இவை இந்த இலைகள்

இட்ட எச்சங்களா?

அல்லது 

அந்த சூரியன் உமிழ‌

முடியாத எச்சில்களா?

எப்படி இருப்பினும்

இவை என் சரித்திரங்கள்.

என் எலும்பு சூப்பைக்குடிக்க‌

நினைக்கும் 

கொலைவாள் பற்களின்

நற நறப்பு மெல்லிதாய்

கேட்கும்

என் அவலங்களின் ஒலிகள்.

என் மொழியை

என் மண்ணை

கவ்விக்கொண்டு ஓடும்

கடமுடச் சத்தங்களின் 

சித்திரங்கள் இவை.

என் மீது 

அப்பிக்கிடக்கும்

இவற்றின் இதயங்கள் 

துடிப்பதும் எனக்கு கேட்கிறது.

இவற்றின் அசைவுகளில்

வரலாற்று ஏடுகளின்

எழுத்துக்கள் 

கண்ணுக்குத்தெரியாமல் 

எழுதப்படுகின்றன.

________________________________________

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

_____________________________________


எழுத்து 

நீரலைகளின் குளம்.

அதில் 

எறிவது எதுவாய் இருப்பினும்

வட்ட வட்ட விரிவலைகளை

அது 

பரப்பிக்கொண்டே இருக்கும்.

ஆம்.

அங்கே

எறிந்தது

கல்லுக்குப்பதில்

வைரம் என்றால்

இந்த உலகின் இருட்டு மூலைகள்

எல்லாவற்றிலும்

ஒளியின் கசிவு தானே இருக்கும்.

கவிப்பேரரசு

நம் தமிழ் நாட்டின்

ஒளிக்களஞ்சியம்.


_____________________________________

ருத்ரா

எனக்குள் ஒரு இலை உதிர் காலம்

 



எனக்குள் ஒரு இலை உதிர் காலம்

_____________________________________


ஒவ்வொன்றாய் 

விழுந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொன்றாய் 

எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொன்றாய்

எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.

உதிர்ந்த ஒவ்வொன்றும்

மலர்ந்து கொண்டிருக்கும்

என் கனவுகள் தான்.

என் நினைவுகள் தான்.

கண்ணீரிலேயே

சலவை செய்யப்பட்டு

கண்ணீரையே கழுவி விட்டு விட்ட‌

புதினங்கள் அவை!

உதிர்ந்து விழுந்தவை 

முற்றுப்புள்ளிகள் அல்ல.

எழுத்துக்கள் தொடரும்.

புதிய புதிய விடியல்களாக!


______________________________________

ருத்ரா

செவ்வாய், 25 மே, 2021

தம்பி

 


1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்
செங்கோடி இசக்கி




தம்பி

____________________________________ருத்ரா



மெரீனா அலைத்திவலைகளா?

இல்லை

சென்னையின் தூசிப்படலங்களா?

தம்பி!

நீ

இப்போது எதில் இருக்கிறாய்?

எதில் இருந்தாலும் சரி!

வருவதற்கும் போவதற்கும் 

ஒரு காரணம் வேண்டும்.

வருவதற்கு அம்மா அப்பா.

போவதற்கு ஒரு கொரோனா.

கண்ணதாசன் வரிகளைக்கொண்டு

பிழிந்து பிழிந்து

இந்த வாழ்க்கை மிச்சத்தின்

சாறு பிழிந்து கொண்டிருக்கிறேன்.

எத்தனை எத்தனை நிகழ்வுகள்?

உன்னிடமிருந்து என் மீதும்

என்னிடமிருந்து உன் மீதும்

அந்த கல்லிடைக்குறிச்சி

தாமிரபரணி நீர்ப்பளிங்குத்திவலைகள்

வீசி வீசியெறிந்து விளையாடியிருக்கின்றன.

அம்பாசமுத்திரத்தின் வண்டிமரிச்சான்

சிலைகளாகட்டும்

அந்த ஊமை மருதங்களின்

ஊடே 

முண்டைக்கண்ணும் துருத்திய நாக்குமாய்

பயமுறுத்தும் 

சுடலைமாடன்களாகட்டும்

நமக்கு மைல்கற்கள் நட்டுவைத்து

நம் வாழ்க்கை சரித்திரத்திற்கு

அடையாளம் காட்டிக்கொண்டிருக்கின்றன.

சின்ன வயதுகளின் பிஞ்சு வெள்ளரிக்காய்களாக‌

அந்த பிரகாசத்தின்

மின்னல் பிஞ்சுகளை இன்னும்

தின்னுவதற்கு கொடுத்துக்கொண்டு தான்

இருக்கின்றன.

எத்தனை சண்டைகள்?

கல கல வென்று எத்தனை சிரிப்புகள்?

சிந்துபூந்துறை

ஆற்றின் விளையாட்டுகளில்

நம் ஒலிம்பிக் மைதானம் இன்னும்

நம் நினைவுகளின் சுடரேந்தி 

சென்று கொண்டிருக்கிறது.

பல்லாங்குழியின் ஒவ்வொருகுழியாக‌

அந்த ஞாபகச்சோழிகள்

நிறைந்து நிறைந்து செல்கின்றன.

நாம் அன்று அரங்கேற்றும் "கள்ளக்குழியல்கள்"

அதாவது வீட்டுக்குத்தெரியாமல் குளிப்பது..

நம் சாகசங்களாய் இன்றும் நம் முன் 

தோன்றுகின்ற‌ன.

நம்ம ஊர் கல்லிடைக்குறிச்சி வாய்க்காலில்

தளச்சேரிக்கு செல்லும் பாலத்திலிருந்து 

விழுந்து

கோட்டைதெருவைத்தொடும்

வாய்க்கால் வரை அந்த‌

நீரின் ஓட்டத்திலேயே சென்று களிப்பது.

வழியில் இடறும் பாசிகள் 

நீள் கூந்தல்சுருள்களாய்

நம்மை சுருட்டிய போதும்

கரையில் நிற்கும் பனங்குட்டிகள்

அதனோடு தழுவி வரும்

பச்சைப்புல் வரப்புகள்

திருவாடுதுறை மடத்தின் தோப்புகள்

அந்த படிக்கட்டுகள்

எல்லாம் நமக்கு கையசைத்து

உற்சாகமூட்டுமே.

இறுதியில் வெற்றியில் திளைத்த‌

நமது அந்த மகிழ்ச்சிகளுக்கு 

ஏது விலை?

ஏது விருதுகள்?

எதை மறப்பது?எதை நினைப்பது?

இப்போதும்

கண்ணீரின் வாய்க்காலில்

மிதந்து கொண்டுதான் இருக்கிறேன்.

"அம்பை கிருஷ்ணா டாக்கீஸ்"

தம்பி 

இந்த மூன்றெழுத்தில் 

நம் மூச்சுகள் 

பலீஞ்சடுகுடு ஆடியதை

மறக்க முடியுமா?

நம் பரீட்சை விடைத்தாள்கள் மற்றும்

பேப்பர்கள் எல்லாம்

எடைக்குபோட்டு

காசு சேர்த்து சினிமாவுக்கு 

செல்லும் நம் "சினிமா"

உன் ஆவிக்குள் படம் காட்டுவதை

நீ

போட்டுப்பார்க்கிறாயா?

அவசரம் அவசரமாய்

அந்த வாய்க்கால் கரையோரம் ஓடி

ஆற்றுப்பாலம் வழியே

அந்த சாலையில்

மருதமரங்களோடு மனம்விட்டு 

பேசிக்கொண்டு

மீண்டும் அவசரமாய்

இரண்டு கல் நட்டிய அந்த‌

தொண்டு வழியே வரப்புகள் ஓடி

சோலாப்புரம் ஊருக்குள்

புகுந்து

மூச்சிரைத்து மூச்சிரைத்து

கடைசியாய்

கிருஷ்ணா டாக்கீஸை

தரிசனம் செய்யும் போது..

ஆகா!

அருகில் இருக்கும் 

கிருஷ்ணன் கோவில் கூட‌

நமக்கு ஒரு பொருட்டே அல்ல.

அப்பாடா! நல்லவேளை

இன்னும் படம் போடவில்லை

என்று 

மூச்சைப்பிடித்துக்கொண்டு

நுழைவோமே!

அந்த மூச்சுப்பூக்களில்

தெரியும் நம் சரித்திரத்தின் வாசனையை

இறுதியாக அன்று பிடித்துக்கொண்டாயா?

அரக்கத்தனமான அந்த "ஆக்சிஜனுக்கு"

இரக்கம் என்பது தான் இம்மியும் இல்லையே!

தம்பி..தம்பி..

குமாரகோவில்  சுப்பிரமணியசாமி கோயிலில்

அந்த சப்பரவண்டியை

கால்களால் நகர்த்தி நகர்த்தி

எங்கோ கொண்டுபோய் விடுவோமே!

இன்னும் அந்த நினைவில் 

அந்த முருகனுக்கு

ஆண்டு தோறும் "சப்பர அலங்காரத்துடன்"

விழா நடத்துவாயே.

அந்த வேலவனுக்குள் பொங்கும் கருணையெல்லாம்

எங்கு போயிற்று?

நெஞ்சுக்குள் பூகம்பகம்

அந்த காங்கோ நாட்டு எரிமலைக்குழம்பாய்

வெடித்து வடிகின்றது.

தம்பி!

சட்டென்று எப்படி அந்த மேகங்கள்

கலைந்து போயின.

அந்த மூளிவானம்

மூர்க்கமாய் பிளிறுகின்றது.

சின்னஞ்சிறிய கடல் நண்டுகள்

அளையும் என் கால்விரல்களை

கவ்விக்கொள்கின்றன.

தம்பி!

உன் அமுத அலைகள்

பக்கம் பக்கமாய் எழுதி எழுதி அழிக்கும்

ஒரு  "ஆயிரம் பக்க"நாவல் போல‌

வந்து வந்து போகின்றன.

ஞானபீடங்களும் சாகித்ய அகாடெமிகளும்

வறட்டுக்கிளிஞ்சல்களாய்

கரையொதுங்கிக்கிடக்கின்றன!

_____________________________________________

அதி காலை 3.30 மணி.

26.05.2021.

ஞாயிறு, 16 மே, 2021

ஈசல்களின் சிறகுகள்.

 கிராமங்கள் நாட்டின் 

முதுகெலும்புங்கிறாங்களேன்னு பார்த்தா 

நகரங்களின் அக்கிரமத்துக்கு 

ப்ளூப்ரின்ட் அல்லது ஸ்கெலிட்டன் அங்கே தான் இருக்கா? 

முதுகெலும்புன்னா இது தான் அர்த்தமா? 

உண்மைகளின் பரிமாணாங்கள் இப்படியும் இருக்கின்றனவா?

என்று எண்ண வைக்கிறது......

இவர்கள் சாதிமதக்கொடிகள் தூக்கி 

அரசியல் நடத்துவதைப்பார்த்தால்.

இன்று சாதிவெறியின் கொடுமையாக 

பேசப்படும் "கௌரவக்கொலையின்" 

மூலக்களமே அங்கு தான் இருக்கிறதோ? 

ஒரு யதார்த்தத்தின் நெருடல்களை 

சினிமாக்களின் "தேசிய விருது"கள் 

நன்றாகவே அம்மணமாய் காட்டி விடுகிறது.

பாரதிராஜா அவர்கள் "கிராமராஜா"வாக 

படம்பிடித்துக்காட்டியதெல்லாம் 

லேண்டட் ஜென்ட்ரி எனும் 

இந்த 

மினி அடக்குமுறை ராஜ்யங்களைப்பற்றி தானே!


நான் இன்னும் "கர்ணன்"பார்க்கவில்லை.

அதில் 

குதிரை வருகிறது.

வாளேந்திய தனுஷ் வருகிறார்.

அருவாள் வருகிறது.

உணர்ச்சிக்கொப்புளங்கள் இருக்கின்றன.

நியாயத்துக்கு

சீற்றங்கள்

படமெடுத்து இந்த படத்தில் 

ஆடுகின்றன.

விழிகள் கங்குகள்.

கை நரம்புகளில் எரிமலை வெடிப்புகள்.

இப்போது

இவை தான் ஃபார்முலாப் படங்களா?

கிராமத்து ட்யூன்களில்

பிரபஞ்ச வெள்ளம் பெருக்கெடுப்பதாய்

ஓசைக்குள்ளும்

பச்சை ரத்தத்தின் சத்தங்கள் தான்.

வெறும் "பேருந்து நிறுத்தம்"

இந்த கிராமத்து ஈசல்களின் சிறகுகளை

விடியல் நோக்கிய ஏவுகணைகளாய்

மாற்றிவிடுமா?

_________________________________________________ 



 





சனி, 15 மே, 2021

பாலயோகி பாலா


https://www.youtube.com/watch?v=_md8CyZFT3w

https://www.youtube.com/watch?v=WCqtC7sVglo


பாலயோகி பாலா அவர்களின்

இந்த ஆர்மோனிய இசையும்

அதை அவர் இயக்கும் நேர்த்தியும்

ஒரு அருமையான காவியம்.

அம்பதுகளில் வந்த‌

இந்த சினிமாப்பாட்டு

(எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவதும் ஏனோ?)

எம்பதைத் தொடப்போகும்

என் செவிகளுக்குள்

ஒரு இசை பிருந்தாவனத்தை

பதியம் இடுகிறது.

இசையின் இன்னருவி திருமதி பி சுசீலா

அவர்களின் பாடலும்

அந்தப்பாடலுக்கு திருமதி லலிதா அவர்களின்

நடனமும் மிக மிக அற்புதமானது.

அவர்களின் நளினமான கைகள்

நாகம் போல் நெளியும் அழகும்

ஒப்பற்ற ஒரு காவியம்.

அதை அப்படியே

ஆர்மோனியக்கட்டைகளில்

அரங்கேற்றித்தரும்

திரு பாலயோகி பாலா அவர்களின்

தேனொலி அருவி

என்னுள்ளே நயாகராவாய்

பாளம் பாளமாய் ஓசையின்

இனிமையைக்கொண்டு போர்த்துகிறது.

அவர் திறமைக்கு

என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

___________________________________________ருத்ரா




வெள்ளி, 14 மே, 2021

பாலகுமாரன்

 பாலகுமாரன்

=======================================ருத்ரா



மெர்க்குரிப் பூக்கள் எனும்

தொடர்கதை மூலம்

மற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத‌

ஒரு நெருடல் மூலையில்

தன் பிரகாசத்தை துவக்கினார்.

அவர் எழுத்துக்கள்

துண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல்

சொல் கோர்த்து வந்து 

பக்கங்கள் நிறையும் போது

சிந்தனையின் கூர்மை அங்கே

பொய்மான் கரடு போல்

ஒரு பிரமிப்பான உவமையை

வேர் பிடித்து நிற்கும்.

அற்புத எழுத்தாளர் சுஜாதாவை

அடுத்து நிற்கும் நிழலா இவர்

என்று சில சமயங்களில் தோன்றலாம்.

இரும்புக்குதிரை தாயுமானவன்

போன்ற நாவல்கள்

இவர் தனித்தமைக்கு உயர்வான சான்றுகள்.

நவீனத்துவம் பின் நவீனத்துவமாக‌

முரண்டு பிடித்துக்கொண்டு

பிரசவம் ஆகும் போது

அந்த இலக்கியத்தின் வடிவத்தை

கன்னிக்குடம் உடைத்து

ரத்தம் சொட்ட சொட்ட‌

தமிழ்ச் சொற்களில் பிழிந்து தந்தவர்.

மிஸ்டிக் தனமாய் முகம் மறைக்கும்

அவர் குங்குமப்பொட்டில்

ஏதோ அபிராமி வழிபாடு தென்பட்டபோதும்

ஜெயகாந்த யதார்த்தத்தை 

நிறைய தூவித்தருவார்.

படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கத்தோன்றாத‌

அருமையான நடை.

கரடு முரடாக நம்மை எங்கோ

தள்ளிக்கொண்டு போய்

ஒரு குகைக்குள் முட்ட வைப்பார்.

ஆம் ஆன்மீகத்தின் நெருக்கடிக்குள் தான்

நாத்திகம் நாற்று பாவுவதாக‌

காட்டுவார்.

வாழ்க்கையின் முற்றிப்போன‌

முரண்பாடுகள் தான்

தத்துவம் என்று உட்பொதிவாய்

நிறைய எழுதியுள்ளார்.

ஆம் ஒரு கோணத்தில் அந்த‌

வெண்தாடியில் சிவப்புப்பொட்டு

இனம் புரியாத ஒரு "மார்க்ஸ்"

போல தோன்றலாம்.

எழுத்தில்

அவருடைய அதிரடி நடைகள் தான்

சினிமாக்களுக்கு "வசனம்" எழுத

அழைத்துச்சென்றது.

கமல் ரஜனியோடு

இவர் வசனமும் அங்கே நடித்தது

என்றால் மிகையாகாது.

"நான் ஒரு தடவை சொன்னா

நூறு தடவை சொன்ன மாதிரி"

என்ற "ப்ஞ்ச்" நாளைக்கு

அவரது செங்கோல் ஆகலாம்.

ஆனாலும் அந்த செங்கோல்

இவரது பேனாவிலிருந்து தான்

கிளைக்கின்றது.

எழுத்தை ஒரு மவுன ஆயுதம்

ஆக்கியவர் பாலகுமாரன்.

நாத்திகத்தின் ஒரு காக்டெயில் வாடையுடன்

ஆத்திக தோற்றம் 

பொய்மை எனும் விசுவரூபம் 

எடுப்பதை நாம் இவர் கதைகளில்

பார்க்கலாம்.

சிந்தனைகளின்

சைக்கடெலிக் எனும் 

காமாசோமா வண்ணக்கலவையில்

சைகோத் தனங்களின் 

சவ்வூடு பரவல் தான் 

மனித வாழ்க்கை என்றே

தன் கதைகளில் நிறுவி நிற்பார்.

உபனிஷதங்கள் எனும் வைக்கோற்படப்பில்

நாத்திக ஊசி கிடப்பதை

கையில் எடுத்து தன் கதையின்

கந்தல் யதார்த்தங்களை அழகாய்

தைத்துத் தந்து இலக்கியம் படைத்தவர்

இந்த எழுத்துச்சித்தர்.

இவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.


================================================

15.05.2018 ல் எழுதியது.

இரண்டாம் அலை

 இரண்டாம் அலை

______________________________________________

ருத்ரா


அன்பான கொரோனாவே!

எங்கள் உயிரினும் 

மேலான கொரோனாவே!

எங்கள் உயிரை தந்து விட்டு

சென்றால் தானே

எங்கள் உயிரினும் மேலான...என்று

உனக்கு வாழ்த்துமடல் நாங்கள்

எழுதமுடியும்.

எங்கள் நுரையீரல் கொத்துக்களை

கொத்துக்கறி போடும்

உன் மூர்க்கத்தனத்தை

மூடி வைத்துவிட்டு கொஞ்சம் யோசி!

வெறும் கல்லான "செல்லா"நீ.

உன் மண்டைக்குள்ளும்

கோடியிலும் கோடியாய்

கொஞ்சம் துளி மூளையிருக்குமே!

அதை வைத்து சிந்தி.

பரிணாமம் என்ற 

அதிவிரைவு எக்ஸ்பிரஸ்ஸில்

நீயும் எங்களோடு தானே பயணிக்கிறாய்

நாம் இந்த 

வளர்ச்சியில் ஒரு மலர்ச்சியை நோக்கித்தான்

விரைகிறோம்.

இந்த உயிர் மகரந்தங்களில் ஒரே ஒரு

ஒற்றை ரோஜாவைத்தானே

நாம் கையில் ஏந்தி செல்கிறோம்!

நம்மைப்படைத்ததாக சொல்லப்படும் 

ஆண்டவனுக்கு 

நம் மலர் முகத்தின் வெற்றியைத்தானே

தரப்போகிறோம்.

நீயே ஏன்

மானிட உயிர் எனும் 

மாணிக்கசுடரை அணைத்து

உன்னையும் இதில் 

அணைத்துக்கொள்ளபோகிறாயே!

இது சரியா?

இது முறையா?

விவாதத்தை தொடர்ந்து கொண்டே போகிறேன்.

"நிறுத்து"

அது கத்தியது!

பசுமை கவித்து 

இந்த உலகை... உன்னை

தன் ஆக்சிஜன் சிறகு கொண்டு

அடைகாத்துக்கொண்டிருக்கிற‌தே

அந்த வனப்பறவையை

உன் பேராசைக்கோடரியால்

சிதைத்துக்கொண்டிருந்தாயே.

நீ

உன் பாசாங்கு பிராணாயாமத்தை

எல்லாம் இப்போது

நிறுத்திவிட்டு

ஆக்சிஜன் ஆக்சிஜன் என்று அல்லவா 

ஜபித்துக்கொண்டிருக்கிறாய்.

நான் யோசிப்பது இருக்கட்டும்.

இப்போது

நீ அல்லவா யோசிக்கவேண்டும்.

சரி.நீ யோசி.

அதற்காகவாது 

உன்னை விட்டு விலகுகிறேன்.

என்றது.

அந்த தினசரி

புள்ளிவிவர வளைகோடு 

மட்டையானது..மடிந்து கொண்டது.

மனிதன் தப்பித்துக்கொண்டான்.

மகிழ்ச்சியோடு கூறினான்.

"உன்னை

வைரஸ் என்று 

கொச்சைப்படுத்த மாட்டேன்.

நம்பிக்கை 

அறிவு

எனும் இரண்டு இழைகளின்

டி என் ஏ மற்றும் 

ஆர் என் ஏக்களின்

தங்கச்சங்கிலியாய் உன்னை

தாங்கிப்பிடிப்பேன்.."

_______________________________



வியாழன், 13 மே, 2021

தெய்வங்களே

தெய்வங்களே

_________________________________

(04.00PM / 11.05.2021 Chennai 600044)


என் தம்பியின் மனைவியை

அந்த கொரோனாக் கொடூரப் பூனை

எலியைக் கவ்வுவது போல் 

கவ்விக்கொண்டு ஓடிவிட்டது.

அந்தப்பாசக்காரத்தாயின்

பாசம் 

தனக்கு வேண்டுமென்று அது

தன் பொந்துக்குள் கொண்டுபோனதோ?

இங்கே

அவள் மகன்கள் பேரன் பேத்தியர்

துன்பக்கடலில் மூழ்கித்தவிக்கின்றனர்.

என் தம்பியும் மருத்துவமனையில்

துயர் உழன்று கொண்டிருக்கிறான்.

அவன் மூச்சுகளை

அந்த அமுதவாசலின் ஆக்சிஜன் சிலிண்டர்தான்

இன்னும் குத்தகை எடுத்து வைத்திருக்கிறது.

அவன் கணீர்க்குரலும் பளீர் சிரிப்பும்

மீண்டும் நிச்சயம் எனக்கு

கிடைத்துவிடும் என்ற கனமான நம்பிக்கையை

என் துன்பக்கடலில்

நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டிருக்கிறேன்.

பாசமும் நேசமும் கொண்டு

எங்களை 

ஊன் உருக வைக்கும் 

அவன் மனைவியின் இழப்பைச்சொல்லும்

வரிகள் எவையும்

அர்த்தம் இழந்தவை.

வெறும் மலட்டுத்தனமான சொல் விரிப்புகள்.

உள்ளுர்ணவுக்குள் அந்த சோகத்தீ

சொக்கப்பனை கொளுத்துகிறது.

உள்ளத்தின் ஆழத்தில்

துயரம் கொதிக்கும் அக்கினிக்குழம்பை

அள்ளி வீசுகிறது.


தெய்வங்களே!

உங்களுக்கு தீபங்கள் வேண்டுமென்றால்

அன்பின் 

இந்த தெய்வத்தையா கொளுத்துவீர்கள்?


இப்படிக்கு

சோகம் தாங்காத‌

இ.பரமசிவன் மற்றும்

ப‌.கஸ்தூரி.


________________________________________





செவ்வாய், 11 மே, 2021

ஓ இறைவா!

 


ஓ இறைவா!

நீ இருக்கிறாய்.

நீ எங்கும் இருக்கிறாய்.

நீ எங்களை காக்கவே இருக்கிறாய்.

உன் அருள் 

உன் இரக்கம்

உன் அரவணைப்பு

எல்லாம் தான் ஒரு பெருங்குடையாய்

எங்களைக்கவிந்து நின்று

காப்பாற்றுகிறது.

உன்னைப்

போற்றி போற்றி என்று

கோடிக்கணக்கான போற்றிகள்

தினமும் பாடுகிறோம்.

ஏதோ சிலர் நாத்திகம் பேசுவதால் 

கடவுளே

நீயுமா நாத்திகம் பேசுவது?

என்ன?

அது சீறியது?

நானா பேசுகிறேன்?

என்னையே நான் இல்லை என்றா

சொல்கிறேன்..

அதன் சீற்றம் அடங்கவில்லை.

பார்!

பெருந்தொற்று காரணமாய்

கூட்டம் சேர்க்காமல்

உனக்கு சேரவேன்டிய 

பூசனைகள் குடமுழுக்குகள் 

தூப தீபங்கள்

எல்லாம் காட்டுகின்றார்களே

இவர்கள்.

தங்கள் வீட்டில் பிணங்களைக்

குவித்துக்கொண்டாவது

உனக்கு 

குவிக்க வேண்டிய பூக்கள்

கொட்ட வேண்டிய பால் தேன்

இவைகளுக்கு 

இவர்கள் பாக்கி வைக்கவில்லையே.

நீ இருக்கிறாய்

என்று தானே

தங்கள் கண்ணீர் வழியாகவேனும்

உன்னை தரிசனம் செய்கிறார்கள்.

நீ இருக்கிறாய் என்று

அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த போதும்

நீ இல்லை 

என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்.

மக்கள் களிப்புடன் 

நிறைத்துக்கொள்ளும் தெருக்கள் 

விழாக்கள் இன்றி

வெறிச்சோடுகின்றன.

இப்போது

நீ தான் நாத்திகன்.

நான் இல்லை என்று நீ

"இந்த பாலைவனத்தை"

எங்களுக்கு காட்டுகிறாய்.

கேவலம்

நுண்ணுயிரியிலும் நுண்ணுயிரி

அதுவா

உன் பிரம்மாண்ட தேர்களை

நிறுத்துவது?

கடவுளே நீயும் நாத்திகன் ஆனாய்.

தடுப்பூசி எனும் அறிவியல் கொண்டு

இந்த நாத்திகன் தான்

உன் தேர்களை மீண்டும்

ஓட வைக்க வேண்டுமா?

கேட்டால்

இது உன்னை நான் செய்யும் சோதனை என்று

மழுப்பவேண்டாம்.

நீ இல்லை என்று எங்களுக்கு

தெரிவிக்கவே 

இந்த "மரண மழை" பெய்கிறது

என்கிறான் நாத்திகன்.

சரி!போகட்டும்.

இப்போது நாங்கள் எதைக்கும்பிடுவது?

உன்னையா?

இல்லை 

அந்த வினோத ம்யூட்டென்ட் ப்ரொடீன்

வைரஸையா?

அவனும் முழித்தான்.

இவனும் முழித்தான்.

எட்டு திசைகளிலிருந்தும் 

கப்பல் கப்பலாய்

தடுப்பூசிகள் வந்து இறங்கின.

________________________________________________

ருத்ரா

திங்கள், 10 மே, 2021

ஒரு ஆங்கிலப்படம்

 


ஒரு ஆங்கிலப்படம் தான் 

நினைவுக்கு வருகிறது.

அது"வாட்டர் வொர்ல்ட்".

சுற்றிலும் கடல்.

ஒதுங்க  

மண்திட்டு கொஞ்சம் கூட இல்லை.

யாரோ  வில்லன்கள் 

ஏதோ ஒரு விசைக்கப்பலை 

வைத்துக்கொண்டு கிடைத்ததை 

கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்த கொரோனாவும் அப்படி 

ஒரு பிணக்கடலாய் நம்மைச்சூழ்ந்து

அச்சுறுத்துகின்றது.

மருத்துவமனைப்பற்றாக்குறைகள்

அதன் கட்டணங்கள் 

ஆக்சிஜன் சிலிண்டர்

ரெம்டெசிவர்கள் 

தடுப்பூசிகள் போன்றவை 

சுராக்களின் கோரப்பற்களாய்

நம்மையெல்லம் அப்படித்தான் 

ஒரு திகில் கடலில் ஆழ்த்துகிறது.

மனிதனின் விஞ்ஞான ஆராய்ச்சி 

எங்கோ மூழ்காமல் மூழ்கி 

மனிதனை மூழ்கிவிடாமல் காக்க 

முயன்று கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் பூதங்கள் கூட‌

தலை காட்டுகின்றன.

ஆனாலும் அவை மானிட "சந்தைகளை"

காப்பாற்றவே துடிக்கின்றன.

அவற்றுக்கு நம் வாழ்த்துக்கள்.

அந்த மனித மூச்சில்

ஆதாம் ஏவாள் மற்றும் நோவாக்கப்பல்

இன்னும் ஆலிலை கிருஷ்ணன் புராணங்கள் 

எல்லாம் குமிழிகள் இடுகின்றன.

பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும்

பாதாம் அல்வா போல்

அந்த கடல் கோள் வாய்களில்

விழுங்கப்படும் காட்சியும் நம்

இமை விளிம்பு வரை அலை அடிக்கிறது.

மனித முயற்சி

மனித நம்பிக்கை

மனிதனின் திரண்ட கூரிய அறிவு

எல்லாம்

உருண்டு திரள்கிறது!

ஒரு மாபெரும் உந்து விசை 

மனிதக்கால்களில் எம்பி எழுந்துவிட 

அதோ ஒரு 

நம்பிக்கையின் கீற்று தலைகாட்டுகிறது.

சடலங்கள் குவிந்தாலும் 

சரித்திரத்தின் உயிரொளியில்

முனைந்து எழும்

அந்த‌ 

வெற்றி நமதே.வெற்றி நமதே!

________________________________________

ருத்ரா

ஞாயிறு, 9 மே, 2021

அம்மா

 அம்மா

_____________________________

ருத்ரா


அன்னையர் தினத்துக்காக‌

அம்மா!

உனக்கு ஒரு கவிதை

வைத்திருக்கிறேன்.

ஆனால் 

அதைக் கொண்டு வர இயலவில்லை.

அதை அங்கேயே வைத்துவிட்டேன்.

அது உன் கருவறை அல்லவா!


___________________________________________

வெள்ளி, 7 மே, 2021

கொரோனாவின் குண்டலினி

 


மணிப்பூரகம் ரேசகம் கும்பகம் என்று

மூச்சுகளோடு விளையாடியவரும்

கண்மூடி படுத்திருக்கிறார்

ஆக்சிஜன் சிலிண்டருக்கு.


கொரோனாவின் குண்டலினி

_________________________________

ருத்ரா

வியாழன், 6 மே, 2021

புரிதல்

 எல்லா மொழிகளும்

தங்கள் எழுத்துக்களைகொண்டு

குகை வெட்டிக்கொள்ளும்போது

இருளில் கலந்த கசிவு வெளிச்சமும்

வெளிச்சத்தைக்கொண்டு தோண்டும்போது

அதில் ஒட்டியிருக்கும்

இருளின் பிசிறுகளும் தான்

இறைவன் சைத்தான ஆகிய‌

இருவரிடையே உள்ள‌

டையலக்டிகல் மெடீரியலிசத்தை

சொற்களில் 

"சொற் கலைக்"கொண்டே

பூசிக்கொள்ளுகின்றன.

எதற்கு இப்படி கடினமாக‌

மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டும்?

மனிதருக்குள்ளே

மனிதரிடையே தான்

இறைவம் அன்பை கசிய விட்டுக்கொள்கிறது

என்ற எளிய புரிதல் ஒன்று போதுமே.

மற்றவை எல்லாம் எதற்கு?

__________________________________________

ருத்ரா






கமலின் தோல்வி



கமலின் தோல்வி

தமிழகத்துக்கு தோல்வி என்று

ஒருவர் 

உருகி எழுதியிருந்தார்.

நடிப்பில் 

பலப்பல கோணங்கள் காட்டியவர்

தமிழ் மீதும்

இந்த சமுதாயத்தின் 

கூர்மை மீதும்

ஏன் வெறும் கோணல்களைக்

காட்டினார்?

கமல் 

திரையிலிருந்து

தரைக்கு வந்தது

பற்றி

எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

ஆயினும் 

அவர் மீது ஒட்டியிருக்கும்

அரிதாரத்தை 

முழுவதும் துடைத்து விட்டதாக‌

தோன்றவில்லை.

முகம் பார்க்கும் கண்ணாடியில்

தன் பிம்பத்தை பார்த்துக்கொண்டே

தெரு மேடைகளில்

மைக் பிடித்து பேசிய்து

போல் தான் 

உலா வந்து போனார்.

மக்களின் மையம் என்றால்

மக்களின் இதயம் தானே.

அந்த இதயத்தின் 

மையத்தை இவர் தொடவே

இல்லை

அறிவு ஜீவித்தனம் 

கேள்விப்பட்டிருக்கிறோம்.

அறிவு அற்பத்தனம் என்றால்

என்ன?

நான் தான் காலையில் எழுந்து

உங்களுக்கு வெளிச்சம் தர நினைத்தேன்.

ஆனால் 

இந்த சூரியன் என்னைப்பார்த்து

காப்பி அடித்து விட்டது

என்று சொல்வது போல்

அலட்டிக்கொள்வது தான் அது.

கமல் 

இப்படி ஒரு 

"உதாரண புருஷர்"

மீண்டும் வென்று வரட்டும்.

அவருக்கு நம்

வாழ்த்துக்கள்!

____________________________செங்கீரன்





புதன், 5 மே, 2021

வா

 


வா

________________________

ருத்ரா



நாளை பிறக்கப்போகும்

எங்கள் அன்பான‌

மனித சிசுவே

நீ தொப்பூள் கொடியோடு 

வரும்போது 

கட்டாயம் 

ஒரு 

ஆக்சிஜன் சிலிண்டரையும்

கொண்டு வா.


________________________________


கடந்து போகும்...

 கடந்து போகும்...

____________________________ருத்ரா



இதுவும் கடந்து போகும்.

எதுவும் கடந்து போகும்.

இது என்ன முணு முணுப்பு?

உன் நம்பிக்கைப்பாதையில்

இந்த மைல்கற்களை 

நட்டு வைத்துக்கொண்டா

அந்த ஆகாசத்தை பந்தல் போடுகிறாய்?

"போனால் போகட்டும் போடா"

என்று

கையை உதறி பாடினானே

கவிஞன்...

அந்த அலட்சியத்தில்

வேண்டாத பிரபஞ்சங்கள் கூட‌

தூசியாய் தூரப்போய் விழும்.

கடலாக ஒரு சோகம்

படரும்போதும்

அமிழாத தீவாய் 

முனை முறியாமல் ஒரு

வெளிச்சம் காட்டுகிறது பார்

அந்த வரிகள்

உன் இதயத்துள் அழியாத‌

கல்வெட்டுகள்.


__________________________________



செவ்வாய், 4 மே, 2021

உள்ளே ஒரு நிழல்

 

உள்ளே ஒரு நிழல்

________________________________ருத்ரா


கை பரப்பி கால் பரப்பி

மண்ணில் கிளை நீட்டி

மனத்துக்கண் ஆயிரம் 

மாசுகள் கூட்டி

பூக்கின்றாய் காய்க்கின்றாய்.

உன் சல்லிவேர்த்துளி வரைக்கும்

ஆசை ஆசை ஆசை..

அது உன் உந்து விசை.

உன்னுடன் பின்னிப்படர்ந்து

இருக்கும்

அந்த ரத்தத்தின் சிவப்பு நிழல்

உன்னையே

தின்றுவிடத் துடிப்பதை

நீ அறிவாயா?

நீ

அழியும் முன்

அது உன்னை

அழிக்கும் முன்

விழி!

இமை உயர்த்து.

உன் நிழல் நீ அறி.


_______________________________



சிவப்பு சுப்ரபாதம்

 


"இந்தக்கொரோனா என்பது...."

_____________________________________________

ருத்ரா


"இந்தக்கொரோனா என்பது...."

சடக்கென்று விஸ்வரூபத்தில்

முள்ளு முள்ளாய் முன் வந்தது 

கொரோனா.

எழுதத்துவங்கிய என் பேனாவை

பிடுங்கிக்கொண்டது.

"ஓ! மனிதா 

நான் ஏன் பிறந்தேன்?"

எம் ஜி ஆர் பாணியில்

கேட்டது.

அவர் போல் 

"புஷ்குல்லா"வைத்திருக்கவில்லை

முள் கிரீடம் சூட்டிக்கொண்டு

அமர்த்தலாக கேட்டது.

"நீங்கள் இன்னும் 

மனிதர்களாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்

மனிதர்களாக வாழ முற்படுவதில்லையே

என்னைவிடக்கொடிய நோய்

வறுமை..

கோடிக்கணக்கான மனிதர்களை

அது தின்று முழுங்கிக்கொண்டிருக்கிறது.

அது பற்றிய திடுக்கிடல்

கொஞ்சம்கூட உங்களிடம் இல்லை.

ஊரடங்கி 

உள்ளடங்கி

அந்த மோட்டுவளையை 

பார்த்துக்கொண்டிருக்கும்போதாவது

உங்கள் சித்தாந்தம் கூர் தீட்டிக்கொள்ளாதா?

வரலாற்றுக்கட்டாயத்தில்

கொஞ்சம் விழித்தெழுந்து 

விறுவிறுப்படைந்தீர்களே.

தனிப்பட்ட சுதந்திரத் தினவுகளின்

குத்தாட்டங்களில்

சமுதாய நாடித்துடிப்புகளை

கோடரி கொண்டு துண்டித்து

விட்டீர்களே!

இந்த அநியாயம் அடுக்குமா?

இந்த அநீதிகள் தான் வெல்ல வேண்டுமா?

இப்போது

வாழ்வாதாரம் பற்றி 

முனகுகின்றீர்களே.

அந்த பிரம்மாண்ட நூலகங்களை

கிண்டி கிளறி 

ஒரு பேரொளியாக‌

மூலதனம் என்றொரு நூல் செய்தானே

அந்த சமுதாய குவாண்டம் மெக்கானிக்ஸை

சொன்ன மானிட விஞ்ஞானி மார்க்ஸ்.

அவன் சொற்களை மறந்து போனது ஏன்?

அந்த கொரோனா 

சொற்பொழிவாற்றிக்கொண்டே இருந்தது.

இந்த மனிதர்கள் 

முழுக்கவசங்களில்

மூச்சடங்கி மண்ணின் குழிக்குள்

விழுந்து கொண்டே இருந்தார்கள்

அல்லது 

எரிந்து கொண்டே இருந்தார்கள்.

கோரோனாவின்

இந்த சிவப்பு சுப்ரபாதம்

மனிதர்களின் செவிகளுக்குள்

பாயுமா? பாயாதா?

இதற்கு இன்னும்

எத்தனை "வெர்ஷன்களில்"

இந்த கொரோனா 

அவதாரங்கள் எடுக்கவேண்டுமோ?

கோவாக்ஸின்களும்

கோவிஷீல்டுகளும்

இந்த வைரஸ் பஜனைகளுக்கு

சப்ளாக்கட்டைகள்

தட்டிக்கொண்டே இருக்கின்றன!


___________________________________________


சமுதாய அறப்போராட்ட வீரர்

 ____________________________________________

சமுதாய அறப்போராட்ட வீரர் 

"ட்ராஃபிக் ராமசாமி"அவர்கள் மறைவு 

ஒரு பேரிழப்பு.

சமூகத்தின் 

ஏதோ ஒரு இண்டு இடுக்கிலிருந்து

ஒரு அக்கினி மூச்சு

கசிந்து வரும்.

அங்கே நடக்கும் அறமற்ற செயலின் மீது

மோதி உடைத்து

அதை வெளிப்படுத்தும் வீச்சு

அந்த வெப்பத்தில் தெரியும்.

யாருக்கும் அஞ்சாத அந்த 

ஒற்றை மனிதரின் துணிச்சல்

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும்

புயல் சிறகுகளை படபடக்கச்செய்யும்.

சமுதாய பிரச்னைகளின் இந்த‌

ட்ராஃபிக் ஜங்க்ஷனில்

இவர் ஒரு விசில் ஊதுபவர்தான்.

இவர் விசிலில் உள்ள‌

ஒலி எச்சரிக்கையே 

ஒரு விழிப்பின் அதிர்வலையை

பரப்பிக்கோண்டே இருக்கும்.

இவர் வாழ்க்கை 

நம் எல்லோரின் வாழ்க்கைப்புத்தகத்திலும்

புரட்டப்படும் பக்கங்கள் ஆகும்.

இவருக்கு

நம் ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக.


அன்புடன்

ருத்ரா இ பரமசிவன்.



திங்கள், 3 மே, 2021

இவன் தந்தைக்கு எந்நோற்றான்...

 இவன் தந்தைக்கு எந்நோற்றான்...

_________________________________________________________

ருத்ரா.



வெற்றிடம் என்றார்கள்.

இவனா அந்த தலைவன் என்றார்கள்.

திராவிடச்சுவடே இருக்கக்கூடாது

என்றார்கள்.

இவன் ஒரு கால் இந்த‌

ஆரியத்தை அடித்து நொறுக்கும்

பூகம்பமாக இருப்பானோ

என்ற பயம்

அவர்கள் தண்டுவடத்துக்குள்

நண்டுகள் சுரண்டியது போல்

இருந்தது.

பங்காளி எதிரிகள்

பகடைக்காயாக இருந்து விட்டுபோவோம்

அதனாலென்ன?

மூட்டை மூட்டையாய் பணம்.

குடித்தீவுகள் பட்டா.

தமிழ் மண்ணாவது புண்ணாக்கவது?

என்று

அநாகரிகக்கோமாளிகள் ஆனார்கள்.

அவர்களுக்கு 

சில்லூண்டி நையாண்டி மேளங்கள் 

கொட்ட‌

ஓரிரண்டு கும்பல்கள்...

இவன்

தயங்கவில்லை

கலங்கவில்லை

மயங்கவில்லை

பத்து பதினைந்து லட்சங்கள்

என்று மக்களை பிணக்குவியல்

ஆக்கிய ஹிட்லருக்கு

ஆப்பு வைத்தனின் 

வைர நெஞ்சம் அல்லவா

அவன் பெயரில்

அக்கினிநாளங்களாக‌

துடித்துக்கொண்டிருக்கிறது.

பொதுஉடைமைப் பூங்காவின்

சிந்தனைத்தளிர்களில்

நெருப்பு மகரந்தங்களைத்தூவிய‌

சிகப்பு விடியலின் சிம்னி விளக்கை ஏந்தி

வெளிச்சம் தேடிய கலைஞரின்

செல்வன் அல்லவா இவன்!

பெரியார் பகுத்தறிவையும்

சமூக சமநீதிக்கொள்கைகளையும்

தமிழ் நாட்டின் தனித்தன்மையையும்

தன்னாட்சித்திறன் கொண்ட‌

தமிழ்க் கதிர்வீச்சையும்

தன் படை வரிசைகள் ஆக்கி

கணிப்பொறிகள் மிடைந்த‌

அந்த குருட்சேத்திரத்தில்

அன்று 

ஆரியப்படை கடந்த தமிழன்

வகுத்த வியூகம் போல்

தேர்தல் திறம் காட்டி நின்றான்

இவன்.

விடியல் தரப்போறான் இவன்

என்ற அதிர்குரலில்

முழங்கிய போர்ப்பரணி

அந்த சனாதன வல்லூறுக்கூட்டங்களை

வெல வெலக்க வைத்தது.

இவன்

இன்று வெற்றி மாலை சூடிவிட்டான்.

தமிழ் மொழியும் நாடும்

ஓர்மை கொண்டது.

கூர்மை மழுங்கிப்போகவில்லை

அந்த புறநானூற்றுத்தமிழ்.

புல்லறிவாளர்கள் மனம்

புழுங்கி கக்கிய‌

விஷமச்சொற்கள் எல்லாம்

புழுதிமண்ணாய் பறந்தோடியது.

"தீய கட்சி..."

தமிழ்ப்பகைவர்கள் மூச்சுக்கு மூச்சு

முனகிக்கொண்டிருந்தார்கள் இப்படி.

ஓ!

என்னருமைத்தமிழ் மக்களே

அந்த ஒட்டுக்கந்தல் கோமாளிகளை

ஓட ஓட விரட்டியவன் அல்லவா

இவன்!

திராவிடத்தின் சுடரேந்தியாய்

உலகத்தமிழனை இமை உயர்த்தி

வியக்க வைத்தவன் அல்லவா

இவன்!

தமிழனின் போரும் போர்சார்ந்த நிலமுமாக‌

விளங்கிய அந்த‌

சிவப்பு மெரீனாவை

திராவிடச்சுடுகாடு என்று 

கொக்கரித்த அரைவேக்காட்டுகுரல்

கோமான்களின் வர்ணதந்திரங்களை

தோலுரித்துக்காட்டிய தீரன் அல்லவா 

இவன்!

தமிழ் மண்ணின் குற‌ளோவியத்தை

குமரி முனையில்

உலகத்தின் கலங்கரை விளக்கமாக்கிய‌

அவனுக்கு

"இவன் தந்தைக்கு என் நோற்றான் கொல் எனும்

சொல்"தந்து

தமிழ்க்காவியமாய் ஒளிர்ந்து நிற்பவன் அல்லவா

இவன்!

வாழ்க இவன்!

வெல்க இவன்!

தமிழாற்றுப்படையாய் இனி

எத்திசையும்

எஞ்ஞான்றும்

இவன்

வாழ்க! வாழ்க! வாழ்கவே


_____________________________