வெள்ளி, 19 ஜூலை, 2024

ஈரோடு தமிழன்பன்...20.07.24

 

காலம் ப‌ற்றிய ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை

_______________________________________________________________


நீதியை அநீதி 

கொத்து பரோட்டா போடுவதை

அந்த பட்டாக்கத்தியின்

பட்டயங்களான‌

மனித வக்கிரங்களை வைத்தே

சொற்களை பிசைந்து தந்தீர்கள்.

உங்கள் ஒரு சொல்லில்

கொத்துக்கொத்தாய்

வாழ்கையின் இலக்கணத்தை

தொல்காப்பிய வெளிச்சம் 

ஆக்கியிருக்கிறீர்கள்.

காலண்டர் தாள் கூட கிழித்து

கப்பல் செய்யும் 

மகிழ்ச்சிக்கு பயன் படலாம்.

ஆனால்

கால நெருப்பின் சூட்டுக்கோல் வரிகள்

வரலாற்று நிகழ்வுச்சதைகளை

கருக்கிப்போட்டு விடும்.

மனிதனின் மனம் 

மிக மிக குறுகிய சந்துகளில்

அடைபட்டு போனதால்

அவன் பேசும் மொழி கூட‌

அந்த மூத்திர சந்துகளில் தான்

தோரணம் கட்டிக்கொண்டு இருக்கிறது.

தன் வரலாறு தன் மேன்மை தன் தொன்மை

இதெல்லாம்

வெற்றுப்பிணச்சடங்குகளாகவும்...

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது

என்ற அலட்சியத்தை மட்டுமே 

மந்திரங்களாக இரைச்சல் போட்டுக்கொண்டிருக்கும்

கூட்டங்களின் கொத்தடிமைகளாகவும்...

மாறிப்போனவையா

தமிழர் வாழ்வு?

கடவுளைப்பற்றி கவலைப்படாதவன் தமிழன்.

ஓலையில் எழுத்தாணி கொண்டு

அவன் எழுதியதெல்லாம்

அந்த அணில் ஆடு முன்றில்களைத்தான்...

கல்பொரு சிறுநுரைகளைத்தான்..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற 

பொதுமை இன்பங்களைத்தான்...

இன்று

ஏன் இப்படி குப்பைகள் ஆனான்?

செக்கிழுக்கும் மாடுகளாய்

தேர்கள் இழுக்கின்றான்..

கும்பாபிஷேகம் என்று

கோபுரத்திலிருந்து விழும்

தீண்டாமை எச்சில்களில்

தோய்ந்து களிக்கின்றான்...

தமிழா!

ஏன் இந்த வீழ்ச்சி?

உங்கள் வரிகளில் உள் மறைந்து

பொங்கும் இந்த கோபத்தீயின்

சூடு நன்றாகவே உறைக்கிறது எங்களுக்கு.

உங்கள் வரிகளைக்கொண்டே

ஒரு சூரியன் சமைப்போம்.

இருட்டின்  எல்லாமொக்கைத்தனங்களையும்

சுட்டெரிக்க!


_______________________________________________________





 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக