வெள்ளி, 19 அக்டோபர், 2018

வீணை

வீணை
======================================ருத்ரா

ராகமழையில்
உள்ளம் குளிர்ந்தன.
ஜன்ய ராகங்களும்
மேள கர்த்தாக்களும்
கணக்கற்ற ஒலிவடிவங்களில்
இன்னிசை பெய்தன.
இந்தியக்குழந்தைகள்
ஒவ்வொன்றும்
இந்தியாவின் இந்த யாழ்நரம்பில்
எப்போது
சுருதி கூட்டப்போகின்றன?
சோற்றுப்பஞ்சச் சித்தாந்தங்கள்
சொக்கப்பனையாய்
கொளுந்து விட்டு எரிந்தபோதும்
இந்தியன் என்னும் உள்ளொலியில்
இந்த இசை ஒளியே
நம் மண்ணின் ஒளி.
மொழியற்ற இந்த அமுத ஒலியிலும்
நான்கு வர்ண சுருதிபேதம்
நாராசமாய்க்கேட்கிறது.
சேரி ஜனங்களுக்கு வீணை இசையா?
சேற்றுக்கைக்குள்  இசை
ஊற்றுக்கண்களா?
என தள்ளுபடி செய்ததில்
கலைமகள் எல்லாம்
தெருவில் தான்  கிடக்கிறாள்.
பிறப்பொக்கும்எவ்வுயிர்க்கும்.
பண் என்பதே பள்ளு ஆயிற்று.
பறை எனும் தாளக்கருவி
அதனோடு இயைவது ஆயிற்று.
சிவன்களின் ஆட்டமும் அதன் வழி ஆனது.
ஆனால்
இந்த தொன்மைக்குடிகள் மட்டும்
குப்பைத்தொட்டிக்கு
போனது எப்படி?
பாயிரம் எத்தனை பாடி என்ன?
ஆயிரம் ஆண்டுகள் சூழ்ச்சி இது!
தமிழ்ப் பண்ணும் யாழ்வழி பிறந்ததே.
அந்த வரலாறுகள் திரும்பிட வேண்டும்.
அன்று நம் பத்துப்பாட்டுள் ஒன்றான‌
பட்டினப்பாலை
"பாலை" எனும் பண்(ராகம்)ணில்
பாடப்பட்டது அல்லவா?
தமிழ்த்தாய்க்கு
காங்கிரீட் கட்டிடங்களில்
சில பல கோடிகளைக்
கொட்டிக்கவிழ்ப்பதில்
என்ன பயன் கண்டீர்?
பழந்தமிழ் இனிக்கும்
அந்த "பாலை யாழின்"நரம்பு ஒலியையும்
தோண்டி ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும்
முனைப்பு வேண்டும் இந்த தமிழனுக்கு!
முன்னுக்கு பின்னாய்
மேலுக்கு கீழாய் முரண்பட்ட‌
இந்த வர்ணத்து நீதிகள்
தொலைந்திட வேண்டும்.
கருப்புக்கைகள் விறகு பிளக்க‌
வெள்ளைக்கைகள் மட்டுமே வீணை ஏந்த‌
"வெள்ளைத்தாமரை மகள்" எண்ணவேயில்லை.
வெள்ளைமனத்தவள்
இருட்டை நிரப்பியா இசையின்
விடியல் தந்தாள்?
கருப்பு வைரங்கள் மேலை நாட்டில்
இசையில் மகுடம் சூட்டுதல் அறியீரோ?
பாழாய்ப்போன அரசியல் வக்கிரம் நம்
பாதையை மறித்துக்கிடப்பதே
நம் உயிர்கொல்லி நோய்.
நோய் நாடி நோய் முதல் நாடி
அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
ஆற்றும் நாளே
நமக்கு ஒரு நன்னாள்!

==============================================
வியாழன், 18 அக்டோபர், 2018

"காந்தள் நெகிழும் கடிவிரல்..."

"காந்தள் நெகிழும் கடிவிரல்..."
=========================================ருத்ரா இ பரமசிவன்


"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"


பொருள்
==========================================


தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்
இருக்கும் அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த
கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

=================================================
sanganadaikkavithai composed by RUTHRAA E PARAMASIVAN

26.05.2017


இதோ ஒரு "ஸெல்ஃபி"


இதோ ஒரு "ஸெல்ஃபி"

==============================================ருத்ராயார் இந்த மானிடப்புழு?

நெளிந்து கொண்டிருந்தாலும்

நெளிந்த தடம் எல்லாம்

மின்னல் உமிழ்வுகள்.

ஆயிரம் கைகள்.

ஆயிரம் கண்கள்..தலைகள்.

ஆயிரம் ஓசை எழுப்பும்

ஆயிரம் நயாகராக்களை

கடைவாயில் ஒழுக விடும்

கடையனுக்கும் கடையவன்.

ஒளியாக‌

ஒலியாக‌

நரம்புகளைத் துளை போடும்

அதிர்வுகளை

இரைச்சல்களை வெளிச்சங்களை

சர்க்கரைப்பொங்கலாய்

தின்று கொண்டிருப்பவன்.

எங்கிருந்தோ

எதையோ

எப்படியோ

இழுத்துவந்து வெளியே போட்டு

அதன்

கருப்பொருள் தெரியாமல்

ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன்.

காரணமே கரு தரிக்காமல்

காரியமாய்

பெரிய

அசிங்கமான அழகான‌

ரெட்டை மயிர் மீசையை

ஒற்றி ஒற்றி

இந்த பில்லியன் ஆண்டுகளை

துப்பறிய வந்த கரப்பான் பூச்சியாய்

துரு துருப்பவன்..

கொடிய மரண வடிவத்தை

வைரஸ்ல் புதைத்து

தன் பிம்பம் காட்டுபவன்.

"செர்ன்"உலையில்

குவார்க் குளுவான் குழம்பை

தாளித்துக்கொண்டிருப்பவன்.

ஹிக்ஸ் போஸானயும்

நியூட்ரினோவையும்

கடுகு வெடிக்க வைத்து

கலகச்சமையல் செய்து கொண்டிருப்பவன்.

சீசனுக்கு சீசன்

எந்த நாட்டிலாவது

ரத்தம் கொப்புளித்துக்கொண்டிருப்பான்.

உண்மை சதை பிய்ந்து

கிடக்கும் போது

உண்மையை மொய்த்துக்காட்டும்

ஈக்களாய் அங்கே

அலையடிப்பான்.

வெள்ளமாய் வந்து

தேர்தல் பிரகடன‌ங்களை

கொட்டு முழக்குவான்.

ஈசல்களின் சிறகுகளில்

ஈஸாவாஸ்யம் ஸ்டிக்கர் ஒட்டி

தெறிக்க வைப்பான்.

காளையாய் வந்து

கொம்பை ஆட்டி ஆட்டி

ஒரு தேவரகசியத்தை

தெருவெல்லாம்

மூக்கணாங்கயிறு வழியே

மூசு மூசு என்று

மண் குத்தி

மண் கிளறி

தன் "பார் கோடு" தனை

தரையில் கிழித்துக்காட்டுபவன்.

வதை செய்பவர்கள்

வாலை முறுக்குபவர்கள் அல்ல.

பிரபஞ்ச மூச்சையே சுவாசிக்கத் தெரியாமல்

ஒரு வட்டமேஜைக்குள்

வார்த்தைகளை

சவைத்துக்கொண்டிருப்பவர்கள்

கையில் தான் வெட்டரிவாள்

என்று

கொதித்துக்குதிப்பவன்.

படீரென்று

கீழே விழுந்து

சுக்கல் சுக்கலாக‌

நொறுங்கியது அது.

அது நிழலா?

நிழலின் இமேஜா?

உடுக்கையிலிருந்தும்

வெர்ச்சுவல் ரியாலிட்டியின்

தூரிகை மயிர்கள் துடித்தன.

கோணா மாணா சித்திரத்துள்ளே

கோணல் கோட்டின் இன்ஃபினிடியில்

காட்சியில் பிடி படாத நேர்கோடு

வளைந்து வளைந்து

வக்கிரம் காட்டியது.

யார் அவன்?

எது அது?

அது வேறு ஒன்றுமில்லை.

தன் "செல்ஃபியை"

கீழே எறிந்த‌

இறைவனே அது!===============================================

"சிந்தனை செய் மனமே""சிந்தனை செய் மனமே"

=================================================ருத்ராகாகிதமும் பேனாவுமாக கவிஞன்.

எதிரே கடவுள்

கையில் ஒரு "ரிமோட்டுடன்".

"கவிஞனே!

காதல் கத்தரிக்காய் எல்லாம்

இருக்கட்டும்..

ஒரு பத்துப் பாட்டு

காதலின் வெத்துப்பாட்டு என‌

இல்லாமல் பாடு.

தவறி நீ பாடினாயானால்

இதை ஒரே அழுத்து..

உங்கள் எல்லோரையும் சேர்த்து

நானும் கூட‌

வெடித்துச்சிதறுவேன்.

தயாரா?

இறைவன் சீறினான்.

இப்போது தான்

ஏதோ ஒரு திரைப்படம் பார்த்தான்

போலிருக்கிறது.

காதலை குத்தாட்டம் குரங்காட்டமாக‌

பார்த்துவிட்டு வந்த

அவன் கூட

அதோ வெறி பிடித்து

ரிமோட்டை வெடிக்க காத்திருக்கிறான்.

கவிஞனுக்கு பயம்.

நான் போனாலும் பரவாயில்லை.

இந்த உலகம் காப்பாற்றப்படவேண்டுமே

என்ற நடுக்கத்தில்

"சிந்தனை செய் மனமே..."

பாடல்கள் தொடங்கி விட்டான்.

முதல் பாட்டு..

2 ஆம் பாட்டு..

3 ஆம் பாட்டு..

........

.........

11 ஆம் பாட்டுஇந்த தடவை கவிஞன் ஏமாறவில்லை.

கடவுள் காப்பு பாட்டையும் சேர்த்து தான்

பாடியிருக்கிறான்.

......

ஆனாலும்

என்ன ஆயிற்று?

இறைவன் ரிமோட்டை அழுத்திவிட்டான்..

எல்லாம் தொலைந்தது..

எல்லாம் புகைமயம்.

சூன்யம் எனும் வெறுமை...காளைமாட்டின் மேல் இருந்த‌

தேவனிடம் தேவி

படபடத்துக்கொண்டிருந்தாள்!

"என்ன காரியம் செய்து விட்டீர்கள்?"

கவிஞன் சரியாகத்தானே பாடியிருந்தான்.

"என்ன பாட்டு

காதலாகி..என்று ஆரம்பித்து

கடைசியில் ..இன்பம்" என்று ஒலிக்க‌

அல்லவா அத்தனை பாட்டும் பாடினான்.""சரி தான்.

உங்களுக்கு ஒரு புலவன் பாடினானே

காதலாகி கசிந்துருகி..

அது போல் துவக்கி

பேரின்பத்தை "பெரும்பேர் இன்பம்"

என்று

உங்களைப்பற்றியே அல்லவா

உருகி உருகிப்பாடினான்.அப்படியா?

ஐயோ! தவறு செய்துவிட்டேனே!

மீண்டும்

"ரீ ப்ளே"பட்டனை அமுக்கிவிட்டால்

போயிற்று.

"தேவையில்லை"

இது ஆண்டவனின் அசரீரி அல்ல.

மனிதனின் கணீர்க்குரல்..

படைப்புக்கும் அழிப்புக்கும்

"பாஸ் வர்டே"

இன்பம் தான்..

மகிழ்ச்சி தான்.

இதில் சிறிது என்ன? பெரிது என்ன?

மனிதனே தான்

உனது பாஸ் வர்டு

உன்னை அறிய நீ

என்னைப்படைத்தாய்!

அறிந்து கொண்டாயா?

சொல்?

காளை மாட்டோடு

கடவுள் ஓடியே போய்விட்டார்!==============================================
மீள்பதிவு.

புதன், 17 அக்டோபர், 2018

ஓலைத்துடிப்புகள்ஓலைத்துடிப்புகள்
============================================ருத்ரா இ பரமசிவன்

அம்மூவனார் எழுதிய "நெய்தல் செய்யுட்"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை"..

என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் "செத்த" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் "செத்தவன் கையில் வெத்தலை பாக்கு "இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த "செத்த நிலையை" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் "தங்கப்பதக்கம்" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

"செத்தென" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் "மடநடை"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் "மடம்" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் "போல" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் "போல" என்று வழங்கப்படுவதில் "சங்கத்தமிழின் சொல்லியல் முறை" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி என்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும் இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் "செத்தையாருக்குள் வைக்கப்படும்" என்கிறார் வள்ளுவர்.எங்கள் திருநெல்வேலிப்பக்கம் "செத்தை" என்பது காய்ந்த சருகுகள் மற்றும் குப்பைகள் ஆகும்.இன்னொரு குறளில் "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி "நடைப்பிணங்களாய்"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே "செத்த" "போல" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது. அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது."வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."
=======================================================ருத்ரா


பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

=================================================================
23.06.2015

திங்கள், 15 அக்டோபர், 2018

கமல் எனும் காற்றாடி

கமல் எனும் காற்றாடி
==============================================ருத்ரா


தமிழ் என்றார்.
ஆகா என்றனர்.
சிந்துவெளி என்றார்
மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றனர்.
திராவிடம் என்றார்
அப்படி போடு அருவாளை என்றனர்.
எண்ணூர் ஒட்டிய‌ வாய்க்காலில்
தேனும் பாலும் ஓடவைக்கலாம்
என்றார்.
ஊழல் ஆட்சியை விரட்டணும்
என்றார்.
இவர் தான் நம் "நாயகன்" என்று
இறும்பூது கொண்டனர்.
கவிஞர்களுக்கு கூட புரியாத‌
எதுகை மோனைகளை
எடுத்துவிட்டார்.
சரி தான்.
இவர் தான் நம் சங்கப்பலகையின்
நடு "மய்யம்" என்று
தமிழில் புல்லரித்துக்கொண்டார்கள்.
காந்தி என்றார்
குரு என்றார்
கம்யூனிசம் என்றார்.
காவிக்குள் கருப்பு
கருப்புக்குள் காவி
என்று ஸ்பெக்ட்ரம் எனும்
விஞ்ஞானத்தையும் கூட‌
டிங்கரிங் செய்து
அடித்து நொறுக்கினார்.
பலே! சபாஷ்!
கரகோஷங்களில்
குளிக்கத்தொடங்கினார்.
சாதி மத ஆதிக்கத்தை
தவிடு பொடியாக்க புயல் ஆகினார்.
எல்லா திராவிடக் கட்சிகளையும்
தூக்கியெறி
என்று முழங்குகின்றார்.
அது தானே நியாயம்
என்ற உணர்வு பரவும்படி
ஊழல் பூதம் எதிர் நிற்பதை
பலூன் ஊதுகின்றார்.
காங்கிரஸ்...என்றதும்
அவர் காற்று இறங்கிய பலூனாய்
"கை"களை அங்கே இங்கே
அசைத்து
சலங்கை ஒலி பாணியில்
அபிநயம் செய்யத்தொடங்கிவிட்டார்.

என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்னை?
நான் என்ன பரமக்குடியில்
எருமை மாடு மேய்த்துவிட்டுவந்த பரம்பரையா?
என் ரத்தநாளங்களை பாருங்கள்
தேசிய நீரோட்டம் சிலிர்த்துக்கொண்டிருப்பதை
என்றும் கூட பிரகடனம் செய்வார்.
காங்கிரஸ்  உடைத்துக்கொண்டு வரட்டுமே
என்கிறார்.

காங்கிரசும் மூவர்ணத்தை
இத்தனை ஆண்டுகளாக‌
நான்கு வர்ணக்காற்றில் தானே
"பட்டொளி" வீசி பறக்கவிட்டுக்கொண்டிருந்தது?
முந்த்ரா ஊழல் என்று
முதன் முதலில் அந்த ருசி காட்டி
நாற்காலிகளுக்கு சட்டம் மாட்டித் தானே
வைத்திருந்தது?

ஈழம் எனும் நெருப்பை
வேள்வி போல காட்டியவர்
தேர்தலில் புகைவளையங்கள் விட‌
சிகரெட்டுக்கு நெருப்பு கேட்டு
கூட்டத்தை நோக்கி "கை" நீட்டுகிறார்.
விஸ்வரூபம் ஒன்று இரண்டு மூணு..
இது என்ன‌
விஸ்வரூபமா?
புஸ்வரூபமா?
கமல் எனும் காற்றாடி
விசிலடிக்கும் டவுசர் பசங்களுக்கு
நல்லதொரு விளையாட்டு.

================================================================


நம்பிக்கை

நம்பிக்கை
==============================================ருத்ரா

எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின்
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்று விடுவாயா?
முடிந்தால் விழுங்கிப்பார்.
இருட்டுப்பிழம்பே
கரைந்து போ!
காணாமல் போய்விடுவாய்!
ஒரு கோடி வெளிச்சம்
என்னில் உண்டு.
நம்பிக்கை நம்பிக்கை.
ஆம்! நம்பிக்கையால்
இந்த வானம் சுருட்டுவேன்.
எல்லாம் என் காலடியில்.
"ஊழையும் உப்பக்கம்" காண்!
எப்பவோ எவனோ
எழுத்தாணி கொண்டு
ஒரு ஓலையில் கிறுக்கிவிட்டுப்போனான்.
ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில்
கோடி கோடி வரிகளில்
அந்த கதிர்வீச்சு பரவிக்கிடக்கிறது.
பூ .... இவ்வளவு தானா?
வரட்டும் அந்த டிராகுலாக்கள்
அவற்றை நான் உறிஞ்சித்தீர்த்துவிடுகிறேன்.
வாழ்க்கை எனும் அழகிய‌
மாணிக்கக்கல் என் மடியில்.
தூரப்போ! அழிந்து போ!
அவற்றின் முகத்தில்
காறி உமிழ்கிறது..அந்த நம்பிக்கை!
சட சடவென்று
ராட்சதத்தனமாய்
மகிழ்ச்சியின் உந்துதல்
ரெக்கைகளாய் என் மீது
இப்போது ஒட்டிக்கொன்டிருக்கிறன!

=================================================
ஒரு மீள்பதிவு.
அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
===================================================ருத்ரா


அண்ணே நான் கமல்ஹாசன் ஆரம்பிச்ச "மய்ய"க்கட்சியிலே சேந்துட்டேண்ணே..

சரிதாண்டா..மய்யம்னா என்னன்னு தெரியுமாடா?

அதெல்லாம் தெரியாது.அதன் கொள்கை பிடிச்சுபோய்
சேந்திருக்கேன்.

அப்படியா. அது என்ன கொள்கை?

அதாண்ணே அது.

என்னடா சொல்றே.

ஆமாண்ணே அதாண்ணே அதுன்னு சொல்றேன்.

மய்யம் ஒங்கள்ட்டே இருக்கு.கொள்கை எங்கே இருக்கு?

அதாண்ணே அது..

டேய்..(பல்லை கடிக்கிறார்..அப்புறம் குழைவாய் கேட்கிறார்.)

மய்யத்துலே நீ சேந்தது சந்தோசம் ராசா.இப்ப கேக்கிறேன் நிதானமா
சொல்லு..

மய்யம் ஒங்கள்ட்ட இருக்கு."கொள்கை" எங்கே இருக்கு?

அதாண்ணே ..அது..

(இவர் கோபத்தோடு ஓடுகிறார் அவரை அடிக்க.அவர் தப்பித்து
ஓடிவிடுகிறார்.)

===============================================================
கடவுள்கள்

கடவுள்கள்
===============================================ருத்ரா

கடவுள் கனமானவர்.
ஆம்
அது ஒரு சிலுவையின் கனம்.
கடவுள் கூர்மையானவர்
ஆம்
உடம்பில் ஆணிகள்
அறையப்பட்டபோது
தெரிந்தது.
கடவுள் ரத்தமானவர்.
ஆம்
அது அங்கே பெருகியபோது
தெரிந்தது.
அப்போது அவர் சொன்னார்.
கடவுளே
தான் என்ன செய்கிறோம் என்று
இந்த கடவுள்களுக்கே
தெரியாது.
இவர்களை மன்னியும்.
பாவங்களை படைத்த‌
கடவுள்களும்
காத்திருக்கிறார்கள்
கடவுளிடம்
பாவமன்னிப்பு பெறும்
வரிசையில்.


=========================================================
22.12.2017

சனி, 13 அக்டோபர், 2018

எம்.கே.டி

எம்.கே.டி
==========================================ருத்ரா

"அன்னையும் தந்தையும் தானே..."
"கிருஷ்ணா முகுந்தா..."
அசோக் குமாரில் அந்த‌
தாலாட்டுப்பாடல்..
இன்னும் எத்தனையோ பாடல்கள்..!
பிரபஞ்சமே இழைந்து குழைந்து
நம் உயிர்களில் ஊடுருவும்.

அந்த‌ பாடல்களில்
இன்னும் அந்த சிங்கத்தலையை
சிலிர்த்துக்கொண்டு வரும்
எம் கே டி யின் இசை
யுகங்கள் யுகங்கள் யுகங்கள்
என்று
தாண்டிக்கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு புதிய கடவுள் தோன்றி
இந்த இசைச்செல்வனை
தட்டி எழுப்பி
நமக்குத்தரமாட்டானா?
என்ற ஏக்கத்துக்கு மட்டும்
மரணங்களே இல்லை.
தங்கத்தட்டில் தான் சாப்பிடுவாராம்.
வைர மோதிரங்கள்
விரல்களில் விளையாடுமாம்.
இசை என்பது நாதப்பிரம்மம் என்றால்
அந்த பாடல்கள் எனும்
பிரம்மோத்சவத்திற்கு
பொன்னும் வைரமும்
எவ்வளவு வேண்டுமானாலும்
குவிக்கலாம்.
கர்நாடக இசை என்றால்
அர்த்தம் புரியாத அவஸ்தைகள் நிறைந்த
ஓசைக்கூட்டம் என்று
உணர்ந்த போதும்
அந்த இனிமையான இசை
மேட்டுக்குடிகளின் சன்னல்களையும்
பிதுங்கிக்கொண்டு
வெளியே அருவியாய் கொட்ட‌
சினிமா தான் உதவியது.
அந்த இனிமையின் ஒலிப்பிரளயம்
பட்டி தொட்டிகள் கூட‌
புகுந்து பாய்ந்ததால்
அவர் படம்
மூன்று தீபாவளிகளையும் தாண்டி
புகழின் பாட்டசுகளை
வெட்டித்துக்கொண்டே
தியேட்டரில் ஓடி
வரலாறு படைத்ததே!
வரலாறு வழி விட்டு அந்த மாமனிதனுக்கு
வரவேற்பு அளித்ததை
யாரும் மறக்க இயலாது.
சிறைக்குள்ளும் அவர் அடைத்து வைக்கப்பட‌
அந்த கறைகள் கூட கரைந்து போனது.
இன்று இசைத்திருவிழாக்களில்
அதிகம் அடைத்துக்கொண்டிருப்பது
செவிகள் கிழிபடும்
மின் இசைக்கருவிகளும் மற்றும்
விஞ்ஞானத்தின் லேசர் படலங்கள் மட்டுமே.
தூய ஒலி மட்டுமே
ஒரு இனிய புயலை வாரி இறைத்த‌
அன்றைய அற்புதங்கள்
ஈடு இணையற்றவை!

=================================================

வெள்ளி, 12 அக்டோபர், 2018

"அந்த பசிபிக் கடலோரம்..."

SDC11418.JPG


"அந்த பசிபிக் கடலோரம்..."
====================================================ருத்ரா


கொஞ்சநேரம்
அந்த குத்துப்பாறையை
பார்த்துக்கொண்டிருந்தேன்.
பசிபிக் கடலோரம்.
ரெட் வுட் நேஷனல் பார்க்.
அமெரிக்கர்களுக்கு
அந்த நீல வானமும் கடலும்
காடுமே சொத்து.
தனிப்பட்டதாய்
சட்டைப்பாக்கெட்டில்
சுருட்டிக்கொள்ளும் எண்ணம்
கொஞ்சமும் இல்லாததால்
அந்த இயற்கை செல்வம்
இயற்கை அழகாகவே
அலைவிரிப்பில்
"ஹாய்"யாய் படுத்திருக்கிறது.
வரும்போது ஓட்டலில்
அந்த வழ வழா கிண்ணத்தில்
கொஞ்சம் பாலில்
கொஞ்சம் தானியப்
பொறிகளின் விழுதுகள்
விரவி சாப்பிட்டது தான்.
இப்போது
வயிற்றைக்கிள்ளியது.
ஆனால்
கண்களுக்கு செம விருந்து.
புல்கீற்றுகளின் வழியே
பசும் இலைக்கூட்டங்களின்
கண்களின் வழியே
நீலக்கடல்
அள்ளி அள்ளிக்கொடுத்ததை
நெஞ்சம் நிறைய‌
உண்டோம்.

=============================================
30.12.2016


வியாழன், 11 அக்டோபர், 2018

கனவு மிருகம்

கனவு மிருகம்SDC11958.JPG
ஆண்டிலோப் கேன்யான், அரிசோனா, யு .எஸ்.ஏ


கனவு மிருகம்
================================ருத்ரா


கனவுப்புகை மிருகத்தின்
அந்த வெள்ளிக்கூர் நகங்கள்
இருட்டைக்கிழித்து
வெளிச்சத்தின்
வெள்ளருவி பாய்ச்சின.
நீல மின்னல் திரட்சிகளில்
ஆவேசமான தாகங்கள்
எல்லாவற்றையும்
குடித்து தீர்க்கத் துடித்தன.
ஒலியை
அந்த இளஞ்சிவப்புக்கழுத்துள்
மிடைந்து வைத்து
உடைந்து உடைந்து
கசியச்செய்து
கலங்கடித்தது கனவு.

நான் எங்கு இருந்து
இந்த மண்ணுக்குள் வந்து
நரம்பின் நாற்று பாவினேன்?

எங்கோ ஒரு அரபிய
பாலைமணல் துளியா நான்?

அட்லாண்டிக்
அடிவயிற்று சதைமடிப்புக்குள்
கிடக்கும் கட்டிடச்சிதிலங்களின்
முனகல்களா நான்?

குமரிக்கண்டத்தில் புதைந்து கிடக்கும்
குத்து விழியா நான்?

ஒரு பனிக்காலத்து
பெரும்பிசாசாய் உறைந்துபோன‌
நயாகாராவின்
விறைத்துப்போன‌
பளிங்கின் நாக்குப்படலத்தில்
நழுவி விழும் மௌனப்பிழம்பா நான்?

ஸ்கேன் பார்த்து
உதடு பிதுக்கினார் டாக்டர்.

"நாற்பது நாள் நீலக்குழவி இது.
நாற்பது பிரபஞ்சத்தை
உருக்கிய ஒளியின் மூளையுடன்..
கண்ணைக்கூசுகிறது"
........
டாக்ட்ருக்கு தலை சுற்றியது.
"ராட்சசத்தனமாய்
ஒரு மெமரி சிப்..
இனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.
பைனரி அரிசி சமைத்திடுங்கள்.
அறிவுப்பசி..
அறி அறி அறி அறி
அல்லது
அழி அழி அழி அழி..

மயிர்க்கீற்றில்
நாற்பது கோடி மண்டலங்களின்
கூகிள் கள் கூடு கட்டும்..

கல்லும் ருசிக்கும்
மண்ணும் இனிக்கும்.
கணினிக் கர்ப்பம்
ஊழிகளின் ஊழிகளாய்
உள்ளே கரு பிடித்து..."

விலுக்கென்று விழித்துக்கொண்டேன்.
வியர்வை முத்துக்கள்
உப்புக்கரித்தன.
கனவு மிருகம் செத்துக்கிடந்தது.

=====================================================
அமெரிக்காவின் அரிஸோனா "ஆண்டிலோப் கேன்யானின்"
திடுக்கிடும் கோணம் இது.
======================================================
05.05.2014l ல் எழுதியது.

புதன், 10 அக்டோபர், 2018

நாடகக்காட்சிகள்.

நாடகக்காட்சிகள்.
============================================ருத்ரா


வானம்
விளிம்பு கட்டாத பருவம்.
எங்கிருந்தோ
ஒரு கீற்று மின்னல் வந்தலும்
அத்தனையும்
தேன் கீற்றுகள்.
பள்ளிக்கூட கணித நோட்டுப்
புத்தகத்தில்
பை ஆர் ஸ்கொயர் சூத்திரங்களோடு
பித்தாகோரஸ் தேற்றத்தோடு
பித்தம் கொஞ்சம் தலைக்கேறிய‌
மர்மமான வாத்ஸாயனர் சூத்திரம்.
இன்னும்
மேலே வம்படியாய்
அட்டைபோட்டுக்கொண்டு
படிக்கும் புத்தகத்தில்
நெருப்புக்கோழியாய்
புதையுண்ட தலைகள்.
........................
............................
சட்டென்று
நாடகக்காட்சிகள் மாறின.
விடலைப்பையன்
பெரிய குடும்பி ஆனான்.
காலம்
திடீரன்று செதுக்கித்தள்ளிய
குப்பை மிச்சங்களாய்
அவன் வாழ்க்கை.
பையனாய் இருந்த அவனுக்கும்
இப்போது
இரண்டு பையன்கள்
மூன்று பெண்கள்.
எல்லாம் அதே படிக்கும் பருவத்தில்
பூச்சிகளாய்
சிறகடித்துக்கொண்டிருப்பதாய்
பார்க்கிறான்.
தான் மட்டும் அன்று
பட்டாம்பூச்சியாய் இருந்தை
"கெனா"க்கண்டு
அவ்வப்போது கிறங்கிக்கிடந்தாலும்
தன்  பிள்ளைகள் மட்டும்
விட்டில் பூச்சிகளாய்
உதிர்ந்து வீழ்ந்திடுமோ
என்று பயந்தான்.

அன்று அந்த கடைக்குட்டிப்பெண்
பள்ளியிலிருந்து
வந்ததும்
செல் ஃ போனுக்குள்
புதைந்து போர்த்திக்கொண்டாள்.
அவனது விடலைப்பருவத்து
நாட்கள் அவனை
இப்போது காக்காய் முட்களாய்
குத்தின.
ஜிவ்வென்று சினம் தலைக்கேற
அந்த செல் ஃபோனை
பிடுங்கி தூர எறிந்தான்.
ஏதேதோ கத்தினான்.
சொற்கள் தெளிவில்லை.
நரம்புகள் விடைத்து முகம்
எட்டுக்கோணலாய் விரிந்து
கூச்சல்கள் இட்டான்.
அந்தப்பெண் அச்சத்துடன்
விழிகள் விலுக் விலுக்கென்று
உருண்டு சுழல விழித்தாள்:
"அப்பாவுக்கு என்ன ஆயிற்று?"

அவன் அட்டை கழன்ற புத்தகமாய்
அப்படியே தொப்பென்று
விழுந்தான்  சோஃபாவில்.
சிலுப்பிக்கொண்டிருக்கும்
இந்த தலைமுறையின் தலையை
எப்படி
சீவி சிங்காரித்து
வாழ்க்கைப்பள்ளிக்கூடத்துக்கு
அனுப்புவது?

=========================================================
கம்பளிப்பூச்சி.


கம்பளிப்பூச்சி.
================================ருத்ரா இ பரமசிவன்

அந்த கம்பளிப்பூச்சி
மரத்தின் கிளைகளில்
ஊர்ந்து ஊர்ந்து ஊடுருவி
இலைகளை தின்றது.
கீழே
வட்ட வட்டமாய்
வெள்ளிக்காசுகளை
இறைத்த சூரியன்
அந்த இலைகளின்
குடல்களுக்குள்ளும்
இரைப்பைக்குள்ளும்
புகுந்து வந்து
"பச்சையத்தின்" கவிச்சியோடு
அந்த நிழல்களின்
பச்சைக்கம்பள விரிப்பு
மனதை மயக்கியது.
கம்பளிப்பூச்சிக்கு மிகவும்
அற்ப ஆசை..
அல்ல அல்ல..
அது ஒரு உயிர்த்துடிப்பான கனவு!
ஆம்.
அந்த சூரியனையே
சுவைத்துச் சுவைத்து
தின்றால் என்ன?
உச்சிக்கு சென்று
தின்றுவிடுவதைப்போல‌
கூழ் உடம்பை அங்கு
நீட்டி நெளித்தது.
............
............
சூரியமண்டலத்தின்
புழுக்கூடுகள் போல்
மேகங்கள் உருண்டு திரண்டு
தொங்கிக்கொண்டு இருந்தன.
திடீரென்று
ஏழுவர்ணங்களால்
அந்த மாலை வானம்
மாலை போட்டுக்கொண்டது.

கம்பளிப்பூச்சியை
வண்ணக்குழம்பாக்கி
ஒரு பிக்காசோவின்
மாய விரல்கள்
கனவு எனும் சொல்லை
அங்கே
மொழி பெயர்த்துக்கொண்டிருந்தன.
எங்கோ
காதல் ஏக்கங்கள்
அப்படித்தான் இதயங்களை
"கோக்கூன்"களாக்கி
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அந்த "வானவில்" சிறகுகளே
புழுக்கூடுகளின்  சிறை மீண்ட‌
கனவுகள்!

==================================================


செவ்வாய், 9 அக்டோபர், 2018

விஜய சேதுபதியின் 96 கவிதைகள்

 விஜய சேதுபதியின் 96 கவிதைகள்
=============================================ருத்ரா

விஜய் சேதுபதியின்
நடிப்புக்குள்  இத்தனை பரிமாணமங்களா?
பத்திரிகைகள்
பட்டா கொடுத்து விட்டன.
காதல் என்று காட்டிக்  கொள்ளாமல்
காதலை வெளிப்படுத்துவது
ஒரு நுட்பம்.
இந்த தலைமுறைக்கு
அதை நன்றாகவே
நடிப்பின் கவிதை யாக்கியிருக்கிறார்கள்
விஜய் சேதுபதியும் திரிஷாவும்.
"முதல் மரியாதை"யில்
சிவாஜி ராதாவிடம் காட்டியது என்ன?
அவருக்கு அவர் தடவிய
மயில் ரெக்கை
அவர் மனஆழத்தின்
லாவா (லவ்வா அது?)வரை அல்லவா
சென்றது.
சிறார் பருவம் என்பது
வானிலை அறிவிப்பாளர்களால்
அறிவிக்கப்பட்ட இயலாத
அத்தனை ஆயிரம் சூறாவளிகளையும்
கருக்கொண்டது.

பள்ளிக்கூட த்தின்
அந்த உடைந்து சிலேட்டு வழியாக
அவனுக்கு ஒரு சன்னல் தெரியுமே!
அதில் அவன் மனத்துள் இருத்தியிருந்த
அவளது
குட்டைப்பாவாடையும்
ரெட்டைச்சடையும் கூட
ஒரு ரோஜாப்பூவை நீட்டிக்கொண்டிருக்குமே.
அது
இருப்பது முப்பது
வருடங்களை விழுங்கிய பிறகும்
மில்லியன் மில்லியன்
வருடங்களுக்கும்  முந்திய
டைனோசார்களாய்
இனிமையாய் மத்தாப்பூக்கள்  சிதற
உறுமிக்கொண்டு தான் இருக்கும் போலும்.
இருவரும்
அதை பட்டாம்பூச்சி சிறகுகளின்
வருடல்களாய்
படத்தின்
ஒவ்வொரு  ஃபிரேமிலும்
பாவ்லா காட்டியிருப்பது தான்
அற்புதமான
நடிப்புக்குள்ளும் ஒரு நடிப்பாய்
நம்மை கொத்தி கொத்தி கடிக்கிறது.
அந்த பாம்புகக்கியிருப்பது விஷம் அல்ல.
அமுதக்கடல்.
காதலின் பிரளயம்
விஜய் சேதுபதியின்
நரையிலும்  தொப்பையிலும் கூட
ஒரு "ஞான பீட விருதின்" இலக்கியத்தை
பதிப்பிக்கிறது.
ஆயிரம் ஆயிரம் வானங்களை
தன் ஏக்கத்தின் சிறிய சிமிழில்
அடைத்துக்கொண்டு
த்ரிஷா காட்டும் வெளிப்பாடுகள்
அந்த காதல் தெய்வத்துக்கு
அர்ச்சிக்கும்  வைரப்பூக்கள்.
96 விதமாய் கவிதைகளை
"இம்போசிஷனாய்"
எழுதி அதை யாரோ
ஒரு வாத்தியாருக்கு காட்டியிருப்பது
போல் இருக்கிறது படம்.
காதல் பாடத்தை
சரியாய் படிக்கவில்லை என்றும்
ஆனால் இப்போது
காதல் நூற்றுக்கு நூறு எங்களிடம்
வாங்கிவிட்டது என்றும்
அந்த வாத்தியாருக்கு
காட்டியிருக்குமோ இப்படம்!
இயக்குனர்
காமிராவை அப்புறப்படுத்திவிட்டு
உணர்ச்சிப்பிழம்பை
அப்படியே அள்ளிப்பூசியிருக்கிறார்.
காவியம் படைப்பதில்
"காளிதாசனை"த்தான் முன்னிறுத்துகிறார்கள்.
இப்படத்தின் டீம்  முழுவதும்
காளிதாசன்களைக்கொண்டே
அமைக்கப்பட்டியிருக்கிறது எனலாம்.
இலக்கியத்தின் இமாலயவெற்றியே
இப்படம்.

====================================================


திங்கள், 8 அக்டோபர், 2018

கோப்பை.
கோப்பை
==========================================ருத்ரா இ.பரமசிவன்

குடிக்கும் கோப்பையை
உருட்டி உருட்டி
திருப்பிகொண்டேயிருந்தான்.
இங்க்கிலாந்துக் கவிஞன் "கீட்ஸ்"

கோப்பையின்
கிரேக்கத்து கலை வடிவங்கள்
சுழலும் உலகைப்போல்
அவன் கையில்.
ஆயிரம் ஆயிரம்  கவிதைகள்
அவனுக்கு ஊறி வழிந்தன!

நமக்கு கிடைத்த கோப்பை
வெறும் தாகத்தை மட்டுமே
மொழிபெயர்த்து சொன்னது.
வாழ்கையின் ஆவிபறக்கும்
தருணங்களை இதில்
ஆற்றி ஆற்றி
என்னத்தைக்  குடித்து தீர்த்தோம்.
என்பதே தெரியவில்லை.

போதைக்கு குடிக்கிறவர்கள்
அவர்கள் மேனியை...
அவர்கள் உள்ளச்சிலுப்பல்களை....
ஏதோ  பூங்குரங்கு ஒன்று
சொறிந்து கொண்டே இருக்கும் அளவுக்கு
அங்கு எரிந்து கொண்டே இருக்கும்
"தினவு".....
இனிய சுகமான உட்பிறாண்டலாய்...
நாளங்களில் எல்லாம் மல்லாந்து கிடக்கிறார்கள்.

வாழ்க்கையை  அப்படி வாழ்ந்து தீர்ப்பதற்கும்
வாழ்கையே தான் கோப்பையாய்
 மனிதன் முன் நீட்டப்பட்டிருக்கிறது.
அதில் உற்று நோக்கினால்
அவன் பிம்பமே
கசக்கப்படும் துணிச்சிப்பமாய்
பிழியப்படுகிறது.
இருட்டு முண்டம் உருண்டு திரண்டு
கண்ணில் உயிர்த்து
அவனோடு கூடியிருக்கிறது.
அது அவன் திமிர்த்த பிழம்பு.
அது அவன் குழைத்த சைனாக் களிமண்.

கீட்ஸ் எழுதுகிறான்
அந்த கிரேக்கக்கிண்ணத்து
ஒவியங்களில்
கிறங்கிப்போய்:
"கேட்ட பாடல் இனிது
இன்னும் கேட்கப்படாத‌
அந்தப் பாடல் அதனினும் இனிது!"

இன்னும் கருப்பிடிக்காத‌
அந்த மின்னலின் குழம்புக்கிண்ணத்து
வாழ்க்கை
அந்தக்கடவுளினும் பெரிது!

அவன் கவிதையில்
அவனே பற்றி எரிகிறான்.

பார்த்துக்கொண்டே இருக்கும்போது
கோப்பை நொறுங்கிப்போகிறது.
கோப்பை வடிவம்
இன்னும் கனமாக
இன்னும் இறுக்கமாக
தொடு உணர்வு தாண்டிய
எ ஃ கு போல்
அவன் எச்சில் மிடறுகளில்
இறங்குகிறது.
அது சிலுவையா?
அவித்த பனங்கிழங்கா ?
சவ்வு மிட்டாய்க்காரன்
இழுத்து இழுத்து உருட்டி தரும்
நீள் இழையா?
அல்லது
"மேஜிக் நிபுணன்"
தொண்டைக்குள் செருகும்
பள பள கத்தியா?
நீரே இல்லாமல் ஒரு ஆழக்கடலின்
நீச்சல் பாய்ச்சல்களே
இந்த கோப்பை.

============================================================

சனி, 6 அக்டோபர், 2018

தேர்தல் கால மேகங்கள்.(கார்ட்டூன்)  தேர்தல் கால மேகங்கள்.(கார்ட்டூன்)
------------------------------------------------------------------------ருத்ரா 

வியாழன், 4 அக்டோபர், 2018

ஒரு நீள் தொகைப் பாடல் ..


 ஒரு   நீள்  தொகைப்  பாடல்  ..

"வெண்குருகு ஆற்றுப்படை"


குருகின் வருகை
=======================================ருத்ரா இ பரமசிவன்

போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன‌
பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து
ப‌னிநீர் இழித‌ரும் குழையொலி கேட்டு
அக‌த்திய‌ வாடை உயிருள் ஊர்த்து
அக‌ம் நெளிந்த‌தை ஈங்கெழுதுகின்றேன்
.
பிய்ந்தும் அமிழ்ந்தும் எஞ்சிய‌பின்னே
பிற‌ந்த‌து ஆழியின் ம‌லை
கல்லொடு பொருது புல்லொடு பெயர்த்து
தண்டுளி விழுது இழிதந்தாங்கு
வெண்படல் விரித்து குணில் பாயருவி
ஊர்ந்து ஊர்ந்து காயல் தழுவும்
.
விரிமணல் வரியில் அலவன் எழுதும்
சுவடுகள் சிதைய கால் தெற்றி நடந்தேன்
நுரையில் மாலை திரைகள் தொடுக்க‌
நுவலும் கடற்குரல் பண்ணும் ஒலிக்க‌
இளங்கட்செல்வன் பசுங்கதிர் அளைஇ
பொறிப்பூம் புள்ளினம் கோடுகள் தீற்றும்
வெறிவளர் தீ எழில் கிழக்கினில் மூள‌
நடந்தவன் நின்றேன் திடுக்கிட்டு குனிந்தேன்
கால்விரல் கவ்விய வெண்குருகொன்று
மிளகுக்கண்ணில் குறு குறு விழித்து
அஞ்சிறை கொண்டு அகல மூடி
நீள்க‌ழுத்து உள் புதைத்து நிற்கும்
.
கூஉய்த் த‌ந்த‌ குறுக்கீற்று ஒலியில்
கூதிர் நனைத்த பனிக்குள் விறைக்கும்
.
கைபொத்தி ஏந்தி குருகினை நோக்கி
கூர்விழி வீசி நுண்மொழி யாற்றினேன்

(தொடரும்)

===============================================

வெண்குருகு ஆற்றுப்படை

வெண்குருகு ஆற்றுப்படை

================================================ருத்ரா இ பரமசிவன்

போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன‌

பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து

ப‌னிநீர் இழித‌ரும் குழையொலி கேட்டு

அக‌த்திய‌ வாடை உயிருள் ஊர்த்து

அக‌ம் நெளிந்த‌தை ஈங்கெழுதுகின்றேன்

.
பிய்ந்தும் அமிழ்ந்தும் எஞ்சிய‌பின்னே

பிற‌ந்த‌து ஆழியின் ம‌லை

கல்லொடு பொருது புல்லொடு பெயர்த்து

தண்டுளி விழுது இழிதந்தாங்கு

வெண்படல் விரித்து குணில் பாயருவி

ஊர்ந்து ஊர்ந்து காயல் தழுவும்

.
விரிமணல் வரியில் அலவன் எழுதும்

சுவடுகள் சிதைய கால் தெற்றி நடந்தேன்

நுரையில் மாலை திரைகள் தொடுக்க‌

நுவலும் கடற்குரல் பண்ணும் ஒலிக்க‌

இளங்கட்செல்வன் பசுங்கதிர் அளைஇ

பொறிப்பூம் புள்ளினம் கோடுகள் தீற்றும்

வெறிவளர் தீ எழில் கிழக்கினில் மூள‌

நடந்தவன் நின்றேன் திடுக்கிட்டு குனிந்தேன்

கால்விரல் கவ்விய வெண்குருகொன்று

மிளகுக்கண்ணில் குறு குறு விழித்து

அஞ்சிறை கொண்டு அகல மூடி

நீள்க‌ழுத்து உள் புதைத்து நிற்கும்

.
கூஉய்த் த‌ந்த‌ குறுக்கீற்று ஒலியில்

கூதிர் நனைத்த பனிக்குள் விறைக்கும்

.
கைபொத்தி ஏந்தி குருகினை நோக்கி

கூர்விழி வீசி நுண்மொழி யாற்றினேன்

.
கடற்புள்ளே!கூறிடு படு துயர்.

மடல் கூனல் தடவிய மணற்கரையோரம்

எக்கர் ஞாழல் விரவிய விரிப்பில்

குருகும் ஆங்கு சிறுகப்பறந்து

உருகும் காலைப்போழ்தையும் உருக்கி

வெள்ளி வார்க்கும் அணி மணல் ஊடி

அலகு பிளந்து அழகு தமிழ் பேச

உச்சி உறைந்து ம‌லையா நின்று

உகுக்கும் சொல்லின் தொகுத்த‌ல் கேட்டேன்"

"ப‌ஃறுளி யாறும் ப‌ன்ம‌லை அடுக்க‌மும்

கும‌ரிக்குள்ளே வீழ்திடும் காலை குல‌விக்கிட‌ந்தேன்

பெடையொடு ந‌ச்சி பெட்ப‌ம் கொண்டு

பாச‌டை மூசிய‌ வ‌ண்டின‌ம் ஆர்ப்ப‌

குட‌ந்தைக‌ள் கொண்டு குழுவின‌ம் சேர்த்து

களி ம‌ண்டிய‌ க‌னை குர‌ல் கூட்டி

துஞ்சிய இன்ப‌ம் தொலைய‌ த‌ந்து

விஞ்சினேன் இன்று

ஆயிர‌ம் ஆயிர‌ம் யாண்டுக‌ள் க‌ழிந்த‌

அரும்பெரும் குருகாய்

அலையிடை அலையாய்

அலைந்திட‌க்கிட‌ந்தேன்

.அளியேன் யானே!"

==============================================27.02.2010

(தொடரும்)

புதன், 3 அக்டோபர், 2018

இது விஜய் சேதுபதி வானம்இது விஜய் சேதுபதி வானம்
============================================ருத்ரா

"செக்கச்சிவந்த வானம்"
ஆனந்த விகடன் விமர்சனம் படித்து
அந்த படம் பார்த்து
மெர்சல் ஆவதை விட‌
ஒரு "மெப்ளாங்க்" ஆகி
கில்லி அடிப்பது போல்
ஒரு கிர்ர்ர்ர் வந்துவிட்டது.
மேலே உள்ள சொற்களைக்கண்டு
டர்ர்ர்ர் ஆகவேண்டாம்.
இது கூட ஏதோ
கொஹஞ்சோ ஹடபுடாவில்
தோண்டியெடுத்த சர்கார் மொழியில்
நம் செம்மொழியின்
முன்மொழி வடிவம் தான்.
அது போகட்டும்.
சொற்ப நீளமான
விஜய சேதுபதி பாத்திரம்
எப்படி
அந்த விரிந்து சிவந்த வானத்தை
தன் பாக்கெட்டில்
சுருட்டி மடக்கி வைத்து
மகுடம் சூட்டிக்கொண்டது.
நடிக்காமலேயே
வந்து நின்றுவிட்டு போய்
எப்படி
அத்தனை ஆழமாய் நடிப்பது
என்ற உத்தி
விஜய சேதுபதி அவர்களுக்கு உண்டு.
இயக்குனர் மணிரத்னம் அவர்களும்
அத்தகைய அபூர்வ "ஃப்ரேம்"களை
அவருக்கு உருவாக்கித் தந்திருப்பது
அவரது நுண்கலை வெளிப்பாடு ஆகும்.
ராவணனில் விக்ரமை
அந்த புதிய கோணத்தில்
காட்டியிருப்பதை நாம்
இன்றும் அணு அணுவாய்த்தான்
ரசிக்கிறோம்.
இது ஒரு காலம்.
நடிப்பு மிகை நடிப்பு
என்றெல்லாம் நம் சினிமா
தங்கமான ஒரு எவரெஸ்டில் நின்று
கொடி நட்டிய காலம்
ஒன்று உண்டு.
அந்தக்கொடி நாட்டியவர்
நம் நடிகர் திலகம் மட்டுமே.
நடிப்பு என்றாலே அது மிகை நடிப்பு தானே
என்ற நடிப்பின்
அன்றைய தொல்காப்பிய இலக்கணத்தை
இலக்கியம் ஆக்கியவர் அல்லவா
சிவாஜி.
சம்பூர்ண ராமாயணம் படத்தில்
திரைச்சக்கரவர்த்தி என்.டி ராமராவ் அவர்கள்
அந்த இதிகாசத்தை அற்புத ரசமாக்கி
நமக்கு பருகத்தந்தவர்.
அந்த கிண்ணத்துள்ளும்
நடிப்பின்
ஏழ் கடல் சுநாமியை
ஒரு சில நிமிடங்களில்
அலைவீசி
பரதனாய் மாறி
அந்த ராமாயணத்தை "பரதாயணம்"
ஆக்கியவர் சிவாஜி.
இதைக்கண்டு சிலிர்த்துப்போய்
ரசித்து பாராட்டியவர்
நம் மூதறிஞர் ராஜாஜி.
நமது அந்த பழைய நினைப்புகளை
அசைபோட வைத்துவிட்டது
விஜயசேதுபதியின் பாத்திரம்.
அவர்
அவ்வளவு பெரிய வானத்தில்
நறுக்கென்று சுறுக்கென்று
முள் குத்திய முத்தான நடிப்பில்
வெடுக்கென்ற ஒரு பாத்திரத்தை
விட்டெறிந்து போய் விட்டார்.
அது
படத்தின் "புல்ஸ் ஐயில்"
சரியாக பாய்ந்து
அதகளம் பண்ணிவிட்டது.
ஒரு நாயகனை
நாலு நாயகன் ஆக்கிய‌
மணிரத்னத்தின் இந்த
மணி விரிப்பில்
விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்தது
செக்கச்சிவந்த
"ரத்த"னக் கம்பளவிரிப்பு.

=================================================================
ஒரு தென்னை மரம்.

ஒரு தென்னை மரம்.
======================================ருத்ரா


அந்த தீவில்
ஒரு தென்னை மரம்.
ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாய்
தென்னங்கீற்றுகளுக்கு
தலை வாரும் மென் காற்று
கிசு கிசுக்கிறது.
ஒண்ணு மண்ணாய் இருந்தவனின்
ரத்தம் கொண்டு நீர்பாய்ச்சியா
வளர்ந்திருக்கிறாய்.
அது தான்
உன் ஓலையில் ஒரு காக்காய் கூட
உட்கார வில்லை.
கீதமிசைக்கும் குயில்களைக்கூட
உன் கீற்று வாளால் வெட்டி வீழ்த்துகிறாயே.
இந்த வானத்தின் சுவாசம்
ஒவ்வொரு விடிவிலும்
ஒரு கேள்வியாய் தான்
பிளந்து வருகிறது.
அந்த தென்னை மரம்
மனிதர்களின் குரல்களை
அடையாளப்படுத்திக்கொண்டு
வானத்தின் மூளிப்படலத்தில்
சிராய்த்துக்கொண்டு
அசைகின்றது.

"ஆமாம்
தென்னை நன்கு வளர
என்ன செய்ய வேண்டும்?"
"நாயை அடித்து உரமாகப்போடு.
காய்கள் பீய்ச்சித்தள்ளும்."

அங்கு
நாய்களை விட மனிதர்களே
மலிவு.
அதிலும் தமிழ் பேசும் மனிதர்கள்
கொள்ளை மலிவு.

அந்த மனிதர்கள்
அடியில் கிடக்கிறார்கள்
இளநீர்க்காய்களுக்குள்
கண்ணீர் விட்டுக்கொண்டு.

===============================================


புரியாத புதிர்

புரியாத புதிர்
===================================ருத்ரா

அவன் கேட்டான்.
அவள் சிரித்தாள்.
அவள் கேட்டாள்.
அவன் சிரித்தான்.

அந்த சிரிப்புகளும்
கேள்விகளும்
சிணுங்கல்களும்
இன்னும் புரியவில்லை.

இருவருக்கும் புரியவில்லை
அது காதல் என்று.
காதலுக்கு மட்டுமே புரிந்தது
அது காதல் என்று.

காதல் என்று புரிந்தபோது
வெகு தூரம் வந்திருந்தார்கள்.
அடையாளம் தெரியாத‌
மைல் கற்களோடு
தாலி கட்டி மேளம் கொட்டி..
குடும்பம் குழந்தை குட்டிகள் என்று.

வேறு கணவன்
வேறு மனைவி
எரிமலையில்
அதே உள்ளங்கள்
வெந்து முடிந்தும்
உருகி வழிவது மட்டுமே
காலண்டர் தாள்களை
உதிர்த்துப்போட்டு
காலம் மேடு தட்டிப்போயின.

இருப்பினும்
அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
அந்த கேள்விகளும்
சிரிப்புகளும் சிணுங்கல்களும்
இன்னும் புரியவில்லை.

அவர்கள் குழந்தையின்
கிலுகிலுப்பை ஒலிகள்
அவனுக்கு கேலிக்குரல்கள்.
அவளுக்கு நில அதிர்ச்சிகள்.

அவர்களுக்கு
வாழ்க்கை புரிகிறது.
ஆனால்
காதல் மட்டும்
இன்னும் புரியவே இல்லை.

==============================================
28.06.2016விஜய்யின் ஒருவிரல் புரட்சி !

விஜய்யின் ஒருவிரல் புரட்சி !
========================================ருத்ரா

வெறுமே சிரிப்பு மூட்ட வந்த‌
ஒரு விரல் கிருஷ்ணாராவ் இல்லை
விஜய்!

அந்த தொலைக்காட்சி விழா
கணிப்பொறி தட்டி தட்டி
நம் தலைவிதியை
தொலைத்துக்கொண்டிருக்கும்
நம் "ஒரு விரலில்"
எரிமலைக்குழம்பைத்தடவி
எழுச்சி கொள்ள வைத்திருக்கிறது.
விஜய் சொன்ன குட்டிக்கதைக்குள்
புரிகிறது
ஒரு "எலக் ஷன் மேனிஃ பெஸ்டோ!"

அரசனுக்கு இல்லாததா!
எடுத்துக்கொள்ள வேண்டியது தான்
என்பது
அந்த "உப்புக்கதையில்"
தோலுரித்துக்காட்டப்படுகிறது.
"எட்டுவழிப்பாதையில்"
பசுமையான கிராமங்கள்
பலியிடப்படுவதன்
உருவகக் கதை தானே அது.

அந்த உப்புக்கதையில்
உப்புக்கரிக்கும் வியர்வைக்கடல்களின்
கொந்தளிப்பு  ஒலி நன்கு கேட்கிறது!

விஜய் இங்கே முழங்குகிறார்.
அரசியல் என்பது
அர்த்தம் இல்லாத சொல் ஆகிவிட்டது.
அரசியல் மெர்சல் ஆவதும்
மெர்சல் அரசியல் ஆவதும்
நடைமுறை ஆகிவிட்டது.
அலுவலகங்களும்
அர்த்தங்களை இழந்து விட்டன.
பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்றால்
வைக்க வேண்டியதை  வையுங்கள்.
வேண்டாம் என்றால் போங்கள்
பிறக்காமலேயே இருந்துவிட்டுப்போங்கள்.
யார் வேண்டாம் என்றது?
அது போல் தான்
இறப்பு சான்றிதழ் !
இறக்காமலேயே இருந்துவிட்டுப்போங்கள்
யார் வேண்டாம் என்றது?
அந்தப்படத்தில்
நான் முதலமைச்சராக நடிக்கவில்லை.
ஆனால் நிஜத்தில்
முதலமைச்சராக  நான் நடிக்க மாட்டேன்
என்றார் விஜய்.

அவை வெறும்
பஞ்ச் டயலாக்குகள் இல்லை.
கணிப்பொறிகள் எல்லாம்
விஸ்வரூபம் எடுத்து
அந்த அரங்கத்தில்
காத்திருந்தன போல் இருந்தன
அந்த "ஒரு விரல்" மாஜிக்கில்
மாற்றங்களின் புயல் வீச !


சர்க்காரின் அனாடமி இது தான்
என்று
சாட்டையடிகளாய்
அந்த லேசர் காடுகளின் மேடையில்
சொற்களை
உணர்ச்சிக் காடுகள் ஆக்கினார்
விஜய்.

"சர்கார்" அமைத்துவிட்டு
கேட்கின்றோம்.
"போடுங்கள் உங்கள் ஓட்டுகளை
இந்த படத்துக்கு"
என்கிறார் விஜய்.
ஆம்..
இவை தியேட்டர் கனவுகள் தான்.
செட்டிங் போராட்டங்கள் தான்.
ஆனால்
மக்களின் சோகங்களின்
தீயில் பற்றிக்கொண்ட
இக்கனவுகள் நிஜமே.

================================================செவ்வாய், 2 அக்டோபர், 2018

சமுதாய கட்டாயங்கள்


சமுதாய கட்டாயங்கள்
=================================================ருத்ரா


அறிவு
காட்டு மனிதன் கண்ட‌
முதல் ஆயுதம்.
அறிவு தோன்றும் முன்னரே
தோன்றியது
பயம்.
அதன் பிற வடிவங்களே
கடவுள்.. பக்தி...மதம்.. முதலியன.
அறிவு
மதத்தைப்போல்
கடவுளோடு முற்றுப்புள்ளி வைத்து
மடங்கிப்போவதல்ல.
அறிவின் வளர்ச்சியின்
உச்சமே பகுத்தறிவு.
அது விஞ்ஞானம் (சிறந்த அறிவு)ஆன போது
மனித சமுதாயம் முன்னேற்றம் கண்டது.
சமுதாயத்தைப் பற்றிய
பகுத்தறிவே
ஆணும் பெண்ணும்
சமூக நீதியில்
சமத்துவம் அடைவது.
பக்தி எனும் சம்பிரதாயங்கள்
இதற்கு தடைக்கல் இடும்போது
இது
நீதி மன்றம் மூலம்
திருத்தப்படுகிறது.
அப்படியொரு திருத்தமே
பெண்களுக்கான
"சபரிமலை கோவில் செல்லும்"
உரிமை பற்றிய தீர்ப்பு.


மற்ற நீதி மன்ற தீர்ப்புகளை
வாய் மூடி கை குவித்து
அந்த "நீதி மன்ற அவமதிப்பு"க்கு அஞ்சி
மதிப்பு அளிப்பதாக பாவனை செய்யும்
இந்த ஆணாதிக்கம்
இந்த தீர்ப்புக்கு மட்டும்
ஆவேசமாக கொதித்து
அவமதிப்பு பற்றி கொஞ்சமும்
கவலைப்படாமல்
கருத்துகள் கொப்பளிக்கப்படுகின்றனவே
இது தான் உச்ச பட்சமான இரட்டைவேடம்.

அந்த தொலைக்காட்சியில் ஒருவர்
ஆவேசமுற்று கூறியதைப்பார்த்தால்
இந்திய அரசியல் சட்டபுத்தகமே
அவர் கையில் பட்டால்
சுக்கு நூறாய் கிழித்தெறியப்பட்டுவிடும்
போலிருக்கிறது.
இவர்களுக்கு
ஒரு கோயில் கட்டப்படுவதற்கு
மட்டும் பக்தி வேண்டும்.
இன்னொரு கோயில் இடிக்கப்பட‌
கடப்பாரைகள் போதும்!

கோவிலுக்குள் வர
எனக்கும் உரிமை உண்டு
என்கிறாள் பெண்.
தீர்ப்பு அதை தருகிறது.
அதற்காக அவளை
மலை ஏற்றிப்பார்த்துவிட்டுத்தான்
மறுவேலை
என்று அடம்பிடிப்பதோ
அல்லது
"பாருங்கள்
இந்த கடல் பூமியை விழுங்கப்போகிறதா
இல்லையா" என்று
கறுவுவதோ
எந்த வகையிலும்
கண்ணியமானது அல்ல.
கோயிலுக்குள் போக வேண்டும்
என்று உரிமை இருப்பது போல‌
கோயிலுக்குள்
போகாமல் இருப்பதற்கும்
அவளுக்கு உரிமை இருக்கிறது
மற்ற ஆண்களைப்போல.
உரிமைகள் நிறுவபடுவது
சமுதாய கட்டாயங்கள் ஆகும்.

==================================================ருத்ரா

"மான்தேர் மைக்கண்"

"மான்தேர் மைக்கண்" 
============================================ருத்ரா இ.பரமசிவன்


தண்ணுமை நடுவண் மண்ணார்
மான்தேர் மைக்கண் அதிர்வன்ன‌
கண்ணில் காட்டி விண்தோய் உறீஇ
பொம்மல் ஓதி ஐம்பால் குலைய‌
இருங்கழி இடத்து சில்நீர் தூஉய்
அரிகுரல் நாரை எக்கர் அடைத்தன்ன‌
மென்கை முளிதரு முகம் பொதி செய்து
வரூஉம் வரூஉம் என்றுழி மரூஉம்.
மழைக்கண் பனிப்ப மாவின் நெடுவேல்
நடுக்குறு தளிரின் கூர்நனி பசப்ப‌
செந்தாழி உள்ளறை மாய்ந்து கிடக்குமோ.
நடுநா அசைய இரட்டுற ஈண்டு
அவன் தேர் மணிச்சில் ஒலியில் மின்னல்
ஊழ்க்கும் ஊழ்க்கும் சுடர்நுதல் பூத்து.

===============================================================


விளக்கவுரை 
==================================================================

தலைவனுக்காக காத்திருந்து காத்திருந்து விழி பூத்துக் களைத்த தலைவியின் துயரம் விளக்கும் சங்க நடைக்கவிதை இது.

தண்ணுமை எனும் முழவு இசைக்கருவியின் நடுவில் மண்ணால் நீராட்டி வைக்கப்பட்ட  அகன்ற கருப்பு பொட்டு தேரில் பூட்டிய குதிரையின் அகலக் கருவிழி (மான் தேர் மைக்கண்) போல் அதிர்ந்து விழிக்க அது போல் தலைவன் பால் ஏக்கம் கொண்டு அவன் இன்னும் வராதது கண்டு கண்கள் அச்சம் கொண்டு வானத்தை ஏறிட்டு நோக்குகிறாள் தலைவி. பொலிவு நிறைந்த(பொம்மல்) அவள் கூந்தல் (ஓதி) தன் வகிடுகள் நிலை (ஐம்பால்) சிதைந்துபோக கடற்கரையின் உப்பங்கழி சின்ன சின்ன நீர்த்துளிகளை அலம்பல் செய்ய அங்கு வந்து அரற்றும் குரல் கொண்ட நாரையானது கரைமேட்டில் போய் அடைந்து கொள்வதைப் போல அவள் தன் மெல்லிய குழைந்த கைகள் கொண்டு முகம் மூடி விசும்புகிறாள்.வருவான் வருவான் என்று எதிர் நோக்குங்கால் அவன் வராத நிலைகண்டு அவள் மருவி மயங்குகிறாள்.குளிர்ந்த அவள் கண்கள் கண்ணீரில் தளும்ப நெடிய வேல் போன்ற மாவிலையின் இளந்தளிர் காற்றில் நடுக்கம் உறுவதைப் போல் மிகவும் பசலை பாய்ந்தவளாய்துயரம் அடைந்து கிடக்கிறாள்.இது எப்படிப்பட்ட நிலை என்றால் இறந்து பட்ட மக்கள் கிடத்தி வைக்கப்படும் அந்த சிவப்பு நிற பெருந்தாழிக்குள் அவள் மாய்ந்து கிடப்பதற்கொப்பாகும்.அந்த நிலையில் சட்டென்று அவள் ஒரு கீற்றாய் ஒலிக்கும் மணியொலி கேட்கிறாள்.தலைவன் வரும் தேர் மணியின் உள் நாவு அசைந்து சிற்றொலி செய்ய அந்த இடைவிடாத ஒலி மீண்டும் மீண்டும் (ஊழ்க்கும் ஊழ்க்கும்)மின்னல் வெட்டுவது போல் அவளுக்கு களிப்பு மிக ஊட்டுகின்றது.அவள் நெற்றிப்படலமே வான் போல் சுடர்ந்து ஒளிரும்.

===================================================

-- 

திங்கள், 1 அக்டோபர், 2018

தலைமுறை

                         (சான் ஒசே ..கலிபோர்னியா   யு.எஸ்.ஏ )தலைமுறை
==========================================ருத்ரா இ.பரமசிவன்.


வாழ்க்கை என்னை மிரட்டியது.
இந்த கடல் அலைகளோடு 
யுத்தம் இடு 
அல்லது
முத்தம் இடு
என்றது.
முதற்புள்ளியை இருண்ட‌
கருவறைக்குள் துவக்கியவன்
போக வேண்டிய தூரத்தையும்
மைல் கற்களையும்
என்னோடு கட்டிக்கொண்டு தான்
வெளியே வந்து விழுந்தேன்.
ஒவ்வொரு மைல் கல்லாய் வந்து
நட்டுக்கொண்டது.
பிஞ்சு வயதுகள்
கவலைப்புயலை
ஸ்பர்சித்தது இல்லை.
திடீரென்று வானத்து நட்சத்திரங்கள்
என்னோடு பேசத்தொடங்கின.
மின்னல் தூரிகைகள்
என் மனத்து திரைச்சீலைக்குள்
சில கீற்றுகள் தீட்டின.
அதில் அவளது
க்ளுக் என்ற சிரிப்பும் ஒன்று.
பளிங்குத்தடாகத்தில்
அது ஒரு சின்ன கூழாங்கல் என்று தான்
இருந்தேன்.
அப்புறம் தான் தெரிந்தது
அவை கனவுகளாய் பாரம் ஏற்றி
என் தலையில்
இமயங்களாய் கனத்தன.
வாழ்க்கை என்னைப்பார்த்து
சிரித்தது!
முத்தமா? யுத்தமா?
என்று.
இரண்டும் தான் என்று
நான் சொல்வதற்குள்
அது சொல்லிவிட்டுப்போய்விட்டது.
இனி இது வாழ்க்கை அல்ல.
இது காதல்.
இது உனக்கு மீண்டும் வாழ்க்கை
ஆவதற்கு
உன் மகன் அல்லது மகள்
அந்த காதல் என்னும்
தட்டாம்பூச்சியைப் பிடித்து
விளையாடவேண்டும்!

================================================ 
18.09.2017

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

பரியேறும் பெருமாள் "கருப்பி"

பரியேறும் பெருமாள் "கருப்பி"
===============================================ருத்ரா

எத்தனை படங்கள் வந்து விட்டன.
காதல் கௌரவக்கொலை
மற்றும் சாதி மத வெறியின்
ரத்தக்குழம்புகளோடு?
இதிலும்
காதல் மெல்லிய அருவி தான்.
அந்த உணர்வு வெளிப்படுத்தும்
நளினங்கள்
ஒரு நுட்பமான குறுநாவல்
எழுதப்பட்டது போல்
இயக்குனரின்
மயிற்பீலி கொண்டு அழகாய்
எழுதப்பட்டு இருக்கிறது.
வழக்கமான முரட்டுத்தனம்
சாதி ஆதிக்கத்தில் இருந்த போதும்
ஒரு புதிய கோணம்
கோடம்பாக்கத்து காமிராக்களிடையே
இருந்தது இந்தப்படத்தில்.
வெள்ளைக்காரர்கள் தங்கள்
சட்டத்தால் நம்மை
அடிமைப்படுத்தியிருந்தாலும்
அவர்கள் ஆங்கிலத்தால்
நாம்
நம் கண்களைத்
திறந்து கொண்டோம்.
நம் கட்டுகளை
அவிழ்த்துவிட்டுக்கொண்டோம்.
அதனால் தானோ என்னவோ
தமிழும் இங்கிலீஷும்
இங்கே காதலிக்கும் நேர்த்தியை
கதாநாயகனும் கதாநாயகியும்
தங்கள் அற்புத நடிப்பில்
உயர்த்திக்காட்டியிருப்பது
இப்படத்தில் இன்னொரு சிகரம்.
அப்படியென்றால்
அந்த மற்றொரு சிகரம்..
அது தான் கருப்பி.
"கருப்பி" என்ற பெயரில்
அந்த பாத்திரம்
சிலிர்த்துக்கொள்வதைப்பார்த்தால்
ரஜனி தான்
அதற்குள் இருந்துகொண்டு
மனித உரிமைக்கு
கருப்பு செங்கீதத்தை
"காலா"வாக 
முழங்குகின்றாரோ
என்று நம்மை
அதிர வைத்துவிட்டது இந்தப்படம்.
எழுத்தாளர்களின்
மனிதநேய எழுத்துக்கள்
பொமரேனியன்கள் என்றால்
அவற்றை வேட்டையாடுவது
சாதி மத ஆதிக்கங்களின்
"அல்சேஷியன்கள்" தான்.
இவற்றைக்கண்டு கொள்ளாத‌
தெரு நாய்களாய்
தெருக்கள் தோறும்
மக்கள்
நாய்களின் மந்தைகளாகி
ஆகி விட்டனரோ என்ற‌
ஆதங்கம்
இந்தப்படத்தின் "பூதாகரமான"
கருப்பொருள்.
அந்த கருப்பிக்கு நிகழும் க்ளைமேக்ஸை
கவனிக்கும் போது
இங்கு
"கருப்பி ஒரு சிவப்பி"ஆனது
புரிகிறது.
சமுதாய மாற்றங்களின்
ஒரு எச்சரிக்கையாக‌
விடியும்  "சிவப்பு விளக்கு" ஒன்று
நாய்வேடம் போட்டுக்கொண்டு
நம்மை திகைக்க வைத்துவிட்டது.

=====================================================

விடியல்
    விடியல் 

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சரணம் அய்யப்பா!
சரணம் அய்யப்பா!
================================================ருத்ரா

இருமுடி தாங்கு.
கல் முள் பாராமல்
உயரம் கண்டு
சளைக்காமல்
முன்னேறு.
ஏன்? எதற்காக? என்ற
கேள்விகளும்
அந்த கேள்விகளே
விடைகளாகி
விஞ்ஞானமாகிப்போன‌
ஒரு கண்ணுக்குத்தெரியாத‌
மாயமூட்டை தானே
இந்த இருமுடி.
படித்தவர்கள்
மெத்தப்படித்தவர்கள்
படிக்காதவர்கள்
கண்ணுக்கு முகமூடி போட்டு
வெல்டிங் செய்யும் தொழிலாளிகள்
பாரஞ்சுமக்கிறவர்கள்
எல்லோருமே
சுமக்கின்ற இந்த பக்தியில்
மதங்கள் இல்லை.
கடவுள்கள் இல்லை.
சமுதாயப்பிரளயத்தின்
சிறு பிஞ்சாய்
சிறிதிலும் சிறிதான‌
சமுதாய தாகமாய்க்கூட‌
இது மலையேறிக்கொண்டிருக்கலாம்.
இதில் எப்படி
பெண்மை எனும் தாய்மை
விலக்கப்பட்டது.
அந்த "மாதவிலக்கு" தான்
விலக்கியதா?
அது விலக்கப்படவேண்டியதல்லவே!
நம் ஆன்மாவை விளக்கும்
மகரவிளக்கே அது தானே.
உயிர் ஊற்றின் இந்த‌
ரத்தம் சுரந்த
தாய்ப்பாற்கடலில் தானே
பரந்தாமன் படுத்துக்கொண்டு
முதல் தோற்றம் எனும் அந்த‌
பிரம்மத்தின்
நாபிக்கமலத்தை உயர்த்திப்
பிடித்துக்கொண்டிருக்கிறான்.
ஓங்கி உலகளந்த அந்த உத்தமத்தை
ஓங்கி ஒலிக்கப்பாடியதே
அந்த பெண்மை தானே.
"பெண் அசிங்கம்"என்றும்
அது வேதச்சுவடிக்குள் கரையான்கள்
என்றும்
பாஷ்யம் சொல்பவர்களே
இதன் மூலம் உங்கள்
அத்வைதத்தையும் அல்லவா
குப்பையில் எறிகிறீர்கள்!
பேரிடர் இதனால் தான் வந்தது
என்றீர்கள்.
இப்போது தான் புரிந்தது
அந்த சமூக அநீதியை
எதிர்த்து அல்லவா வந்தது
அந்த பிரளயம் என்று.
மதவாதிகளே
இப்படி உங்கள் முகம்
அசிங்கப்பட்டு நிற்கும் அந்த‌
களங்கம் துடைக்கப்பட‌
துடைப்பம் தந்த அந்த‌
நீதியரசர்களுக்கு எங்கள் வந்தனங்கள்

==========================================================