வியாழன், 11 ஜூலை, 2024

மருத மரங்களில் ஒரு மண்டபம்.

 மருத மரங்களில் ஒரு மண்டபம்.

____________________________________




அம்பாசமுத்திரத்தில் 

ஆறு நோக்கி

வரும் சாலையில்

மருத மரங்கள்

பெரிது பெரிதாய்

முண்டு தட்டி நிற்கும்.

பட்டை உரிந்தும் உரியாமலும்

ஓ மனிதர்களே

ஆடு மாடுகளே

சீக்கிரம் சாலையை

காலி பண்ணுங்கள்.

புதிய உடை நான்

எப்போதான் உடுத்துவது?

இலைகள் சல சலத்து

சொல்லிக்கொண்டே இருந்தன.

அழகிய துளிர் இலைகள்

இளஞ்சிவப்பில்

வண்ணம் காட்டியது.

ஆனல் 

கன்னம் எங்கே?

இலைகளின் "க்ளுக்"

சிரிப்புகள்

கேட்டுக்கொண்டு தான்

இருந்தன.

இரவில் பேய் என்று 

அலறியடித்து ஓடுகிறீர்களே.

பகலில்

நெளிவு நெளிவாய் 

அந்த சிற்றிலைகள்

சித்திரம் காட்டுவது

தெரியவில்லையா?

ஓங்கி வளர்ந்த அந்த 

பிரம்மாண்ட மரங்கள்

ராமேஸ்வரம் கோயிலின் 

நீண்ட பிரகார மண்டப வெளியாய்

நிழலை

ரத்தினக்கம்பளம்

விரித்து வைத்திருக்கிறது.

தாமிரபரணி அதன்

கூப்பிடு தூரத்தில்.

பாறையில் தப் தப்பென்று

துணிகள் அறையும் துவையல்களிலும்

ஒரு ஒலிச்சுவை உண்டு.

ஆற்றின் பளிங்கு ஓட்டங்கள்

மருத மரங்களின் 

இலைகள் ஊடு நரம்பு காட்டி

மெல்லிய யாழ் மீட்டும் 

பண் ஒன்றை இழுத்துச்செல்லும்.

வயல் விரிப்புக்காகிதம் 

காற்றில் சிலிர்த்து சிலிர்த்து

எழுதிய கவிதைகளின்

ஊமை சாட்சிகக் இந்த 

உயர்ந்த மரங்களே தான்.

வான நீலம் ராட்சத நாக்கால்

இலைக்குடையை நக்கியதில்

பசுமை எழில் 

ஜொள் விட்டது அங்கே

சொட்டிக்கொண்டே இருக்கிறது.


_____________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக