வலது என்றால் அப்படியே இரு
இடது என்றால் எகிறு
என்று எப்படி இந்த
சமுதாய மனக்குமிழிக்கள்
மிதந்து கொண்டிருக்கின்றன.
மனிதனின் கருத்துகள் புதிது புதிதாக
குருத்துகள் விட்டு
எழ வேண்டும் என்ற
முனைப்பே இடது.
இதுவே
மனிதன் உருவாக்கிய கடவுளை
தோலுரிக்கிறது.
அவன் அறிவு ஒவ்வொரு நொடியும்
இப்படித்தான் கூர் தீட்டப்படுகிறது.
இந்த சாணை தீட்டலில்
புது புது நிகழ்வுகள் பொறி கிளப்புகின்றன.
மனிதன் அண்டத்தின் ஒரு பிண்டம்
என்பதும்
தலைகீழாகி இந்த மனிதன் கைவிரல்களில்
மூளையின் விரிவுகள் பூதங்கள் ஆகி
அண்டங்களையே
புதுப்புது முட்டைகளாய் இடுகின்றன.
வலது என்பதோ தேக்கம்.
அது அப்படியே இருந்து
நாற்றம் பிடித்துக்கிடக்கிறது என்பதைக் கூட
அறிந்து கொள்ள மறுக்கிறது.
அப்படியென்றால்
இந்த கார்ப்பரேட்டுகளின்
வலதுக்குள் இருக்கும்
இருட்டுக்கர்ப்பமே இடது.
அறிவின் மலர்ச்சி ஒவ்வொரு இதழாக
திறக்கப்படுவதின்
அறிவு எனும் விஞ்ஞானங்களை...
இந்த இடதுகளின் மகரந்தங்களை...
தன் ரூபாய் அணா பைசாவாக
அதாவது லாபம் எனும்
கோட்டையாக மாற்றி அதையே
ஆளும் செங்கோல்களாக
உருமாற்றிக்கொள்ள முனைவதே வலது.
மனிதம் எனும் பேராற்றல்
இந்த வலது முதலைகளின்
கோரப்பிடியில் இரையாகிக்கொண்டிருப்பதே
பள பளப்பான அதன்
அந்த "தாராள மய" ஏற்பாடு.
அனகோண்டாவின் நீண்டல் உடல்
அழகிய புள்ளிகளில்
ஊர்ந்து கொண்டே இருக்கிறது.
மனித வளர்ச்சியின் அறிவு முனையை
தன் தேவைக்கு ஏற்ப
கொம்பு சீவி விட்டுக்கொள்வதோ
இல்லை
மழுங்கடித்துக்கொள்வதோ
எல்லாமே இங்கு
வலதுவின் பிடிக்குள் தான் இருக்கிறது.
இதில் பிதுங்கி வழியும்
உலகத்து சமூக பொருளாதார
பிரச்னைகள்
போர்களின் புகைமூட்டத்தில்
இன்னும் மறைவாகவே
வலதுகளை கொழுக்க வைக்கிறது...
சுருக்கமாய்ச் சொன்னால்
மனிதன் தன் கழுத்தை தானே
நெறித்துக்கொள்ளவே
வலதுத்தனம்
இந்த பழமைவாதத்தை
ஒரு லாப வாதமாக
பாது காத்துக்கொண்டிருக்கிறது.
__________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக