திங்கள், 30 செப்டம்பர், 2019

ஓலைத்துடிப்புகள்


ஓலைத்துடிப்புகள் 
=============================================ருத்ரா இ பரமசிவன்


"வெண்பூப் பகரும்"

இச்சொற்றோடர் ஓரம்போகியார் எனும் சங்கத்தமிழ்ப் புலவர் ஐங்குறுநூறு பாடல் எண் 13 ல் எழுதியது.வெள்ளைக்குஞ்சம் போல்
காற்றில் அழகாய் ஆடும் அந்த "பொங்குளை அலரி" பூக்கள் பற்றி பாடுகிறார்.மருதத்திணைப்பாடல் அது.அதை பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பொங்கும்.மேலும் அப்பூக்கள் தலைவியோடும் தலைவனோடும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றும்.அல்லது இவர்கள் அப்பூக்களோடு பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.அப்படி ஒரு நுண்மையான உணர்வை அச்சொற்களில் ஓரம்போகியார் காட்டுகிறார்.அந்த பூக்கள்  ஒரு நுண்செய்தியை தலைவிக்கு எப்படி உணர்த்துகிறது தெரியுமா? அவன் வரும் குதிரையின் தலைப்பூ அத்தகைய குஞ்சம் போல்ஆட்டி ஆட்டி சொல்வதைப்போல்  இந்த ஆற்றங்கரையின் "வெண்பூக்களும்" அவளுக்கு அவன் வருவதைச் சொல்கின்றனவாம்.என்ன ஆழமான அழகான கற்பனை!

"பரியுடை நன்மான் பொங்குளை அன்ன‌
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்.."

அந்த கரும்புப்பூக்கள் ஒரு இனிய காட்சியை அல்லவா நமக்கு சொல்கின்றன."வெண்பூப் பகரும்" என்ற சொற்றொடர்களையே தலைப்பாக்கி  இச்செய்யுளை செய்துள்ளேன்.
கல்+இடை=கல்லிடை.குறிஞ்சி மருவி குறிச்சி ஆனது.பொதிகை மலையிடை அமைந்த ஒரு குறிஞ்சி ஊர் தான் எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சி.அங்கே தாமிரபரணி எனும் ஆறு சங்கத்தமிழின் பெயரான "பொருனை" என்ற பெயரில் அமைதியான அழகுடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்று எழிலில் மனம் கரைந்து சுழித்து நுரை பூத்து நாணல்கள் பச்சைத்தூரிகைகள் போல் படர்ந்திருக்க அந்த தலைக்குஞ்ச பூக்கள் தூரிகைகளாய் நீல வானத்திரையின் பின் புலத்தில் சங்கத்தமிழ் காட்சிகளை தீட்டிக்காட்டியதே இந்த சொல்லோவியம்.
ஐங்குறுநூற்றுப்பாடல் எண் 23 ல் ஓரம்போகியார்

"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்"


என்ற வரிகளில் இன்னும் நம் நெஞ்சம் பிழிகிற காட்சியை காட்டுகிறார்.
புள்ளிகள் நிறைந்த அந்த நண்டு எனும் தாய் சாகும்படி அதன் குஞ்சுகள் பிறக்கும்.ஆனால் முதலை ஈன்றதனால் பசியுடன் கூடிய  ஈன்ற வலியைப்போக்க தன் குட்டிகளையே தின்னும்.இந்த இரு வேறு துன்பியல் காட்சிகளும் தலைவன் தனக்கு ஏற்படுத்தும் பிரிவுத்துன்பத்தை நன்கு புலப்படுத்துவதாக தலைவியின் துன்பம் மிக்க உரையாக‌ ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.இக்காட்சியும் என் செய்யுளில் பதிந்து உறைந்து வருகின்றன.
நாங்கள் சிறுவயது நண்பர்களாய் "கல்லிடைக்குறிச்சியின்" தாமிரவருணிக் கீழாற்றில் நுரை சிதற பாறைகளிடையே பரவி ஓடும் நீரில் குடைந்து குளித்து மகிழும்போது "முதலையின்" அமைப்பு போல் இருக்கும்  ஒரு குத்துப்பாறையில் நாங்கள் விளையாடும்  அந்த "பிள்ளைப்பருவ" படலங்களின் தூரிகையாகவே இந்த வரிகள் காட்சிகள் தீட்டுகின்றன.
அந்த புள்ளி நண்டுகள் முதலைப்பாறைகள் "சிறிய அந்த வெண்பூக்கள்" எல்லாம் இனிமை குழைத்து பளிங்கு உருக்கி பால் நுரை பொருது இழையும் பொருநை எனும் எங்கள் தாமிரபரணியே இந்த "வெண்பூப் பகரும் "சங்கநடைக்கவிதையாய் சல சலத்து ஓடுகிறது.

==================================================


வெண்பூப் பகரும்
====================================ருத்ரா இ பரமசிவன்

பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.
தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் "சிறை"யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.
அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்"
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் "பகன்றனை"வாராது மறைந்து.
ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

==================================================

பொழிப்புரை
===================================================
பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.

பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரைக் காட்சி இது.புள்ளிகள் படர்ந்த பாறைகள் தோறும் மோதி மோதி இனிமையாய் தண்ணீர் பாயும்.அந்த துள்ளல் நிறைந்த நீரில் தலைவி கால் நனைத்து மகிழ்கிறாள்.அந்த நுண்ணிய பொழுதுகளின் இடைவெளிக்குள்ளும் அவனைப்பற்றிய கனவே அவளுக்கு.அவன் வரும் வழி தன் மனக்கண்ணில் ஆறுபோல் பெருக அதன் ஓங்கிய அலைகள் ஒளிசிந்தும் பால் நிலவை எதிரொளி செய்கின்றன.(ஓங்கு திரை வாங்கும்).அந்த நிலவை கடல் கண்டு பொங்கி எழுவதைப் போல் ஆர்ப்பரிக்கும் தலைவனின் குதிரைத் தலையில் சூடிய அலரிப்பூ (வேழப்பூ எனும் ஒரு வித பேய்க்கரும்புப் பூ)ஆடி அசைவது (தலைவியை நோக்கி) ஒரு ஒலியை ஏற்படுத்தும்.

தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் "சிறை"யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.

அங்கு உலவும் வண்டு தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அங்கு உலவும் வண்டு ஒன்றை அவள் காண்கிறாள். தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அந்த வண்டு உறிஞ்சிய தேனில் அமிழ்ந்ததால் சிறைப்பட்டு போனதால் தான் அஞ்சிறைத்தும்பியாய் ஆனாயோ ஓ வண்டே என்கிறாள் தலைவி.சிறகை அது குறித்த போதும் தான் ஒரு சிறைப்பட்ட நிலையில் இருந்ததால் அப்படி அழைக்கிறாள்.அதன் உள்ளிருந்து தலைவனின் குரல் கேட்கிறது.உண்மையில் அவன் தான் சிறைப்பட்டிருக்கிறான் போலும்.அவன் குரல் அவளுக்கு களிப்பின் கடல் நிறைந்து வழிந்தாற்போல் இருக்கிறது.அவன் சொன்னதும் கேட்டது.அவன் சொல்லாததும் அவளுக்கு கேட்டது.அது அவள் உள்ளத்தில் துன்பம் ஏற்படுத்தி அவளை பறித்துக்கொண்டது.மீண்டும் அவன் குரல் பகன்றது அவளுக்கு "பகன்றை" மலர் போல் மெல்லிய உணர்வுகளை எழுப்புகிறது. இருப்பினும் அத்தகைய மலர் போல் அல்லாமலும் துன்பம் செய்கிறது.துன்பம் தரும் குரல் என்னவாக இருக்கும்? "நான் இப்போது உடனே வருவதற்கில்லை" என்ற இன்னொரு குரலும் தலைவனிடமிருந்து அவள் கேட்டாள் போலிருக்கிறது. அந்த ஆற்றங்கரையின் குருகுகள் மிக்க உணர்ச்சிமிக்க ஒலிளை எழுப்பும்.அதைப்போல மெலிதாய் முறுக்கேறிய பூவின் மொட்டு  இதழ்கள் திறக்கும். அதைப்போன்றே நலிவுற்ற என் கண்கள்  பெருக்கும் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் இறங்கி சூடு ஏறி என்னுயிரையே உலுக்கிவிடும்.

அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்"
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் "பகன்றனை"வாராது மறைந்து.

அவன் எந்தக்குரலும் எங்கிருந்தும் எழுப்பவில்லை.இருப்பினும் அந்த வேழப்பூக்கள் அவளுக்கு ஒலியை கதிர்ப்பது போல் உணர்கிறாள்.அந்த மெய் விதிர்ப்பில் ஒருபக்கம் அவன் குரல் இனிக்கிறது.இன்னொரு பக்கம் தீய செய்தியை தாங்கி வருகிறது.படுக்கையில் தூக்கம் வரவில்லை.அடர்ந்த முள் காட்டில் கிடந்தவளாய் துன்புறுகிறாள்.இரவே நெருப்பு பற்றிக் கொண்டாற்போல் துடிக்கிறாள்.இப்போதும் தலைவனின் அந்த ஆற்றங்கரை தான் நினைவுக்கு வருகிறது.அவன் காதல் இனிதாய்
பிறக்கும்.ஆனால் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் தன்மையும் அதற்கு இருக்கிறது போலும்.அவன் இருக்கும் அந்த துறையில் புள்ளிகள் நிறைந்த ஒருவகை நண்டு உள்ளது.அது ஈனும் குஞ்சுகள் அதனையே கொன்று தான் பிறக்கும்.("தாய்சா(க)ப்பிறக்கும் புள்ளிக்கள்வன்)அவன் காதலும் அப்படியே தான்.அது பிறக்கும் நானே கொல்லப்படும் விந்தை வேதனை அல்லவா?அந்த வேழப்பூந் தட்டைகள் மண்டிய அந்த சேற்று நிலமும் நீரும் நிறைந்த கரையிலிருந்து அவன் குரல் கேட்கிறது."நீ என்ன சொல்கிறாய்? எதையோ சொல்லிவிட்டு வாராது மறைந்து கொண்டாயே!"என்று தலைவி புலம்புகிறாள்.

ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

அடுத்ததாய் முதலை ஒன்றின் உருவம் அவளுக்கு தோன்றுகிறது.அதுவும் அந்த ஆற்றில் தான் இருக்கிறது.அதற்கு இரண்டு விழிப்படலங்கள் உண்டு.நீலிக்கண்ணீருக்கு ஒன்று.சாதாரணமாய் இன்னொன்று.அகன்ற கண்களில் தோன்றும்.(ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு...) பெரிய பற்களையுடைய முதலையோ தான் முட்டையிட்டு ஈன்ற குஞ்சுகளையே தின்னும். முதலைகள் பாய்ந்து வரும் ஆறும் அவன் ஊரில் தான் இருக்கிறது. நண்டு முதலை ஆகிய இரு விலங்குகளைப்போன்று அல்லவா அவன்
இக்கொடிய‌ காதல் நோய் மூலம் என் உயிர் தின்னுகின்றான். குளிர்ச்சி பொருந்திய கனவு மிதக்கும் என் மையுண்ட கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.அதோ அந்த கரையில் ஆடும் அந்த சிறிய வெண்பூக்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன? குழைவோடு வெண்சாமரம் போல் வீசுகின்ற அந்த மலர்க்குஞ்சங்கள என் துன்பத்தை தான் குழைய குழைய சொல்லிக் கொண்டிருக்கின்றன.

================================================
மீள் பதிவு அக்டோபர் 2016

சனி, 28 செப்டம்பர், 2019

கீழடி..2

கீழடி..2
====================================ருத்ரா

தமிழர்களின் எழுச்சி
இப்போது பொங்குமாங்கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
"விழியங்கள"
எத்தனை எத்தனயோ
இணையத்தின் தமிழச்சோலையில்
விழி காட்டுகின்றன.
ஆனால்
வழி காட்டுகின்றனவா?
ஐயமும் பயமும் தான்
ஏற்படுகிறது.
தமிழன்
கன்னடம் தெலுங்கு மலையாளம்
ஆகிய மொழிகளையும்
தமிழ்க்கிளைகளாகத்தான் கருதினான்.
அவர்கள் தமிழ் நாட்டில்
தமிழின் உள்ளத்தோடு
இருப்பதாகத்தான்
கருதிக்கொண்டிருக்கிறான்.
திராவிடம் எனும்
ஒரு பாசக்கயிற்றால் தான்
அவர்களை
பிணைத்துக்கொண்டிருக்கிறான்.
திடீரென்று
"தெலுங்கர்கள்" எனும்
குரல் தெறிப்பதன் பின்னணி என்ன?
தம் தந்தை பெரியாரையும்
தமிழர்கள் தமிழராகத்தானே
பார்க்கிறார்கள்.
அப்படியென்றால்
உள் குத்துப்பகை வாளின்
உரசல் ஒலியை
கொஞ்சம் கிளப்பலாம்
என அவர்கள் நினைக்கிறார்களா?
கிருஷ்ணதேவராயனின்
வாள் வீச்சை
தமிழ் மூவேந்தர்களின் மற்றும்
தமிழ் மொழியின் கூர்மையோடு
தெறிக்கவிடும் ஒரு தந்திரத்தில்
ஆரிய சூழ்ச்சியினை
அரங்கேற்ற முனைந்திருக்கிறார்களா?
ப்ரோட்டோ திராவிடம் என்றாலும் சரி
திராவிடம் என்றாலும் சரி
அது
கடல் கடந்து
"திரை"களையும் ஆண்டு
திரைவிடன் ஆகி தமிழன் ஆன‌
திராவிடனே அது.
வேத ஒலியில்
"த்ரவ" எனும்
நீர் (கடல்) பற்றிய‌
தமிழ்ச்சொல்லே அது.
தமிழ் எதிரிகளே!
தமிழனின் வரலாறு
பல  இமயங்களை அடுக்கி வைத்து
புதைந்து போன‌
குழிகளில் கிடக்கும் சுவடுகளாய்
இருப்பதை
இப்போது ஒரு பெரும் உயரத்துக்கு
எழுப்பப்பட்டு வருகின்றது.
அதில்
குறுக்கே  வந்து
ஊளையிடுவதை நிறுத்துங்கள்.
இங்கு
திராவிடத்தமிழன் என்றால்
கடலலைத் தமிழன்.
தமிழ்த்திராவிடன் என்றால்
நிலத்தடி தமிழன்.
குழிகளில் கண்டுபிடித்ததை
குழிக்குள் மூடிவிடும்
குள்ளநரித்தந்திரமா இது?
இதில் பகைமை நஞ்சை
புகைமூட்டம் போட முயன்றால்
பொடிப் பொடியாவீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள்.
வீறு கொள் தமிழா!
பெருங்கடல் நீ.
இவர்களின்
கொட்டாங்கச்சி அலைகளுக்குள்
நீ
உன் வீரத்தை
விரயம் ஆக்கிக்கொள்ளாதே!
ஒற்றுமை கொள்.
உறுதி கொள்.
தமிழ் வாழ்க!

=======================================================










தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா

தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா




தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா
========================================
ருத்ரா இ பரமசிவன்.



மராஅத்த அடர்கான் விரிவெண் வீதூஉய்
படுத்த மன்றில் திங்களும் தோய்தர
வெண்கடல் ஆர்த்த வெள்ளிடைப் பறந்தலை
பொருள் வேட்டுனன் சென்றான் ஆங்கு
நெடிய ஊழும் ஊழ்த்தது மன்னே.
ஆறு ஊர்வழி மன்பதை உருட்டும்
அடு நனி வாழ்வின் முறைப்படுஊம்
நோன்பின் ஊடிழை நெட்டிழையாவும்
தேர்ந்தவன் அவனே பொருள்வயின்தேடி
பொல்லாக்கானம் பொறிகிளர் வேங்கை
உறுத்து விழித்தது மருட்டியும் அஞ்சா
தீவிழிக் காட்டில் கதழ்பரிக் கலிமா
விரைய ஓட்டிச்செல்லும் காலையும்
எந்தன் மைவிழி மீமிசை ஆரிடை
ஏகிட செய்யும் அவல் பரல் கடாஅத்து
அஃதே எந்தன் செவ்வரி மழைக்கண்
நம் அணிலாடு மூன்றில்  வெரூஉ செய்திட
மீட்டு இவண் சேர்க்கும் நம்
வெள்ளிய மன்று  வள்ளியில்  படர்ந்த
அகன் மனை ஈண்டு அறிவாய் தோழி.

=============================================
இது நான் 30.04.2019 ல் எழுதிய ஒரு சங்கநாட்டைச் செய்யுள் கவிதை.

வியாழன், 26 செப்டம்பர், 2019

ஒரு பூவின் தீக்குளிப்பு





ஒரு பூவின் தீக்குளிப்பு
==================================ருத்ரா


பசுந்தீயில்
தீக்குளிக்கும்
மஞ்சள் சீதையே!


ராமன் ஆணையிட்ட 
குளியலின் நெருப்பில் 
நனைந்து கொண்டிருப்பவனும்
ராம‌னே.


ஊரில் எவ‌னோ
ஒருவ‌ன் சொன்னான்
என்ற‌தும்
அவ‌ன் செவிக‌ள் வ‌ழியே
தீக்குளித்திருக்க‌வேண்டும்.


க்ஷ‌த்ரிய‌ த‌ர்மத்தின் பெயரில்
ஆயிர‌ம் ராவ‌ண‌ன்க‌ளின்
அழுக்கை அல்ல‌வா
ம‌டியில் க‌ட்டிக்கொண்டிருக்கிறான்.


அவ‌தார‌த்துக்காக‌
த‌ரையில் இற‌ங்கிய‌வ‌ன்
அப்போதே அவ‌ச‌ர‌மாய்
சிக்ம‌ண்டு ஃப்ராய்டின்
அரிதார‌த்தைப் 
பூசிக்கொண்டு விட்டானோ?


மில்லிய‌ன் மில்லிய‌ன்
ஆண்டுக‌ள் ஆனாலும்
பெண்ணிய‌ம் எனும்
க‌ண்ணிய‌ப்பூவே!


உன் பூப்பு நீராட்டின்
ம‌ஞ்ச‌ள் குங்கும‌ ச‌ந்த‌ன‌க்குழம்பில் 
எந்த‌ எரிம‌லைக்குழ‌ம்பும்
ப‌ன்னீர் ம‌ழை தான்.



============================================
o4 ஜூன் 2013




பொங்கல் வெண்மழை





பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன..

============================================================கல்லிடை சொற்கிழான்.




கழை நரல் தும்பி கவின் மொழி தூஉய் 

இழை படுத்தாங்கு பண்தொடை பரவ 

பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன 

மயிலிய நுண்மயிர் மெல் இறை எல் வளை 

கனை குரல் ஆங்கே தேன் பிலிற்று மிதப்ப 

யாதானும் நாடாமால் ஊராமால் 

விண் உரிந்து மண் உறைந்து 

விழி ஓரா சுரன் புக்கு முள்ளியாற்று 

முளி இருள் மூழ்கியதோர் வருங்காலை 

களிகூர் நறிய நல் புகை ஊட்டும்

அவள் வால் எயிற்றுக் கொல் நகை

கல்லென் கடும் ஊழும் கால் இடற

மண் சாய்த்தும்  மகிழ்வன் யான் 

ஊர் தரும் அவள் வளை நிரல் 

மீள் தரும் அணி இழை களிபெய்ம் 

நாள் மீட்டு கவின் உறுத்த 

கடுகும் விரையும் மன்னே 

கல் பொரியும்  இக்கடுஞ்சுரம் காண் .


=================================================

(இதை எழுதியது "கல்லிடை  சொற்கிழான்" எனும் 

நானே தான்.( ருத்ரா இ.பரமசிவன்)


===================================================



(காதலியை விட்டு பொருள் தேடிச் செல்லும் காதலன் 

காட்டின் கரடு முரடு வழியில் அவள் மீது  கொண்ட காதல் 

நினைப்பில்  கால் இடறி விழுகின்றான்.அதை நினைத்து 

மகிழ்ந்து விரைவில் மீண்டும் வீடு திரும்பும் களிப்பில் 

திளைக்கிறான். இதுவே இச்சங்கநடைச்செய்யுளின் 

உட்பொருள்.)


===================================================================



புதன், 25 செப்டம்பர், 2019

கீழடி

       நன்றி: "உலகத்தமிழர் பேரவை"



கீழடி
========================================ருத்ரா இ பரமசிவன்.

தமிழா!
உன் காலடி கீழடியில்
உன் இமயம்.

பனை ஏடுகள்
பாதி திறந்தன.
பானை ஓடுகள்
மீதி திறந்தன.

இவர் மீறல்கள்
உன் கீறல்களில்
உடைந்து போயின.

உன் தன்மையே
உன் தொன்மை தான்.
நீ தந்த சமக்கிருதமா
உனக்கு சமாதி ஆவது?

தமிழா!
இப்போதாவது விழி.
இது தான் உன் ஒளி.
இதுவே உன் வழி.

அர்ச்சனை மந்திரங்கள்
இப்போதாவது மற!
இல்லெனில்
உன் வீடு உனக்கில்லை.
உன் கூடும் உனக்கில்லை.
பிறகு
ஏது சிறகு?

ஈசன்கள் தேடி
ஈசல்கள் ஆனாய்.
நீ கட்டிய
பெரும் கோவில்களில்
வெறும்
படிக்கட்டுகளே நீ!

சிந்து வெளி
வெளிச்சம்
உனக்கு உண்டு.
சமக்கிருதம் எனும்
"சிந்துபாத்"கிழவனா
உன் தோளில் ?

அந்தக் கீறலில்
ஒரு "அந்துவன்"உண்டு.
நம் கலித்தொகைக்
கவிஞன்
"நல் அந்துவனும்"
அதில் உண்டு.
தமிழா
இதைக்கண்டு
அறி !
இந்த நாடு எனும்
பட்டா
உனக்கே உண்டு
அறி !

======================================================









திங்கள், 23 செப்டம்பர், 2019

மிகச் சிறப்பான புகைப்படம்




திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களே!


மிகச் சிறப்பான புகைப்படம் இது.






ஒரு பெரும் வியப்பு


இந்த புகைப்படம் !


இந்த வண்ணக்குழம்பில்


பச்சை நிறத்தில் கூட


ஒரு "எரிமலை லாவா" இப்படி


வந்து நின்று சிரிக்க முடியுமா?


சமுதாயத்தின் ஒரு மௌன தாகம்


அந்தக்கண்களில்  அலையடிக்கிறது.


இதுவும் கூட ஒரு "சவுந்தர்ய லஹரி தான்"


காலடியார்களும் நாலடியார்களும்


தத்துவங்கள் எத்தனையோ


சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள்.


நான் தேடியது


இங்கு அல்லவா இருக்கிறது.


என்ன அது?


அந்த "நான்கு வர்ணம்"இங்கு இல்லை


என்பதே


நான் தேடிய சமுதாய வர்ணம்.


தூரிகை கொண்டு


தீட்டும் வர்ணங்களுக்கு


கோடரியையா கொண்டு வருவது


என்ற கேள்வியின்


அடர்த்தியான ஆரண்ய காண்டம் இது!


நெற்றி அடிச் சித்திரம் இது.


அருமை ! அருமை !அருமை.!


====================================== ருத்ரா இ பரமசிவன்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கலிஃபோர்னியப் பனைமரங்கள்.




கலிஃபோர்னியப் பனைமரங்கள்.
====================================
ருத்ரா இ பரமசிவன்.



கலி ஃபோர்னியாவில் 
மக்கள் தங்கள் வீடுகளின் அருகே 
மிகச்செல்லமாக 
வளர்க்கும் மரங்கள் இவை.
நெடு நெடுவென்று 
கல்யாணத்திற்கு காத்திருக்கிற 
இளமங்கைகள் போல் 
அந்த கீற்றுகளை 
அசைத்து அசைத்து 
கனவுகளை உதிர்க்கின்றன.
நான் 
இதை ஒட்டிய பாதையில் 
நடைப்பயிற்சி செய்யும்போது 
அவை 
ஏதோ மௌன சலங்கைகள் ஒலித்து 
என் மனத்தை ஆட வைக்க்கிறது.
கீழே நிழல்கள் எல்லாம் 
அவை 
உதிர்த்த அமுதக்கனவுகள்.
என் அருமை மரங்களே 
என்ன சொல்கிறீர்கள்?

கவிஞரே!
இந்த பனை ஏடுகளிலும் 
சொட்டுகின்ற 
அந்த குறுந்தொகைச்  சிலிர்ப்புகளை 
உணர்ந்து 
கொள்ள முடியவில்லையா?
"அணிலாடு முன்றில்" 
என்றானே ஒரு தமிழன்.
காதல் ஏக்கத்தை கிச்சு கிச்சு மூட்டி 
ஒரு நெருப்பை ஏற்றி வைத்து 
அந்த செய்யுளுக்குள் 
தமிழ் எழுத்துக்களின் கருப்பையை 
உயிர்க்க வைத்த 
அந்த புல்லரிப்பின் கூச்சம் தாங்காமல் தான் 
நெளிந்து நெளிந்து காட்டுகின்றேன்.
என் மெல்லுடலில் 
இந்த அணிலின் விளையாட்டு 
இந்தக்கீற்றுகளில் 
பச்சையாக எரிந்து 
தணல் பூக்கிறதே! தெரியவில்லையா?

யாதும் ஊரே யாவரும் "கேளீர்!"
ஆம் 
கேட்டுக்கொள்ளுங்கள்!
பசிபிக் கடலோரத்திலும் 
இலக்கியப்பசியெடுக்கும் தமிழ் இது!

====================================










சனி, 21 செப்டம்பர், 2019

தோழமை மிகு சியாமளம் அவர்களே

 
   
Syamalam Kashyapan






தோழமை மிகு சியாமளம் அவர்களே


உங்களுக்கு என்
அன்பான வாழ்த்துக்கள்.
உங்கள் பாப்பாகுடி அல்லது
பொட்டல் புதூர் தமிழில்
நாலு திட்டு திட்டிவிடுங்கள்.
இவ்வளவு காலம் தாழ்த்தி
உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எழுதியமைக்கு.
அந்த இனிப்புத்திட்டுகள்
எல்லாம் எனக்கு
இருட்டுக்கடை அல்வா தான்.
அம்பாந்த்ரம் தொட்டு ஓடும்
அந்த பளிங்கு தாமிரபரணி
எங்கள் கல்ட‌குரிச்சியையும்
நனைத்துக்கொண்டு செல்லும்போது
நம் தமிழைத்தானே
இனிக்க இனிக்க தடம் பாய்ச்சிச்செல்கிறது.
உங்களுக்கு இந்த
வரிகளை மிதக்கவிடும்போது
நாணற்கூட்டங்களின் இடுக்குகள் வழியாக‌
கண்ணடிக்கும் அந்த தாமிரபரணி
நம் நெஞ்சத்தைக்கிள்ளிக்கொண்டல்லவா
செல்கிறது.
அந்த நினைப்புகளை
நெளியல் இட்டு அதில் விடும்
பம்பரம் தான் இந்த எழுத்துக்கள்.
ஆனால்
அது காலத்தை பின்னோக்கிச்சென்று
இழுத்து வைத்து
நம் இதயங்களை சுழலச்செய்கிறது.
சுழலும் வரை சுழலட்டும்.
பழம் நினைவுகளே
இப்போது நம் கையில் உள்ளக்கருவூலம்.
வணக்கம்
மீண்டும் சந்திப்போம்.

இப்படிக்கு
உங்கள் தோழன்
செங்கீரன்.

=========================================================

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஒரு குழந்தை பிறக்கிறது..


ஒரு குழந்தை பிறக்கிறது..

=============================================
ருத்ரா இ.பரமசிவன்.





தாய் வயிறு கிழிந்து

இப்போது தான் வந்தேன்.

அவள் மூச்சுகள் எனும்

வைரக்கம்பிகள்

வைத்து நெய்த சன்னல் பார்த்து

கனவுகள் கோர்த்தபின்

அவள் அடிவயிற்றுப்

பொன்னின் நீழிதழ்

அவிழ்ந்த கிழிசலில்

வந்து விட்டேன் வெளியே!



நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.

சூரியசெப்புகளும் கொண்டு

விளையாட மனம் வரவில்லை.

வண்ணத்துப்பூச்சிகள்

சிமிட்டும் சிறகில்

வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.

பூக்கள் எனக்கு

புன்னகை சொல்ல

வந்தன என்றார்.

புன்னகைக்குள் ஒரு

இருண்ட நீள் குகை

எப்படி வந்தது?

மான் குட்டிகள் மந்தை மந்தையாய்

மனதை அள்ளும் என்றார்.

மண்பொம்மைகளாய் அவை

யாவும் கரைந்து மறைந்தே போயின.

அடி வான விளிம்போரம்

தொடு வான இதழோரம்

சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்

கீற்று என்னை அறுப்பது

உணர்ந்தேன்.

என் தாயின் இதயச்சுவர்களில்

பாயும் குருதியில்

வலியின் குதிரைகள்

விறைத்து எகிறும்

காட்சிகள் கண்டேன்.

அழகாய் பூத்த அவள்

தாமரைச்சிரிப்பிலும்

மறைந்த ஓர் மெல்லிழை

கோடி கோடி உலகங்களின்

கனங்கொண்ட சோகமாய்

அழுகையின் லாவா

அடங்கித்தேய்ந்து

அவள் கருப்பைக்குள்ளேயே

கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.

பிரம்ம வாசலில்

பெண் ஒரு கேவலம்!

அவள் கதவு திறந்து

வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌

கேவலம் கேவலம்.

முக்தியும் நாசம் அதன்

பக்தியும் நாசம்

என்றொரு

மூளிக்குரல் மூள எரியும்

பிணத்தீ மூட்டிய‌

வேள்விகள் கொண்டா..ஞானக்

கேள்விகள் வளர்த்தீர்!

வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!

பெண்மை எனும் தாய்மையின்

தங்கமுலாம் பூசிக்கொண்டு தான்

இனி நான் பிறப்பேன்.

மானிட நேய ஊற்றாய் தான்

வருவேன்.

அப்படி நான் பிறக்கும்போது

என் விடியல் அங்கு பூக்கட்டும்!

அப்போதே நான் ஒரு பூம்புயலாய்

புறப்பட்டு வருவேன்

புதிய தோர் காலம் படைத்திடுவேன்.



==========================================
13 .டிச‌.2018

இமையோரத்தில்....

இமையோரத்தில்....
===========================ருத்ரா இ.பரமசிவன்.

"என்ன நடக்குது இங்கே?"
நாம் இந்த தூசிப்படலங்களில்
இமை விரிக்கிறோம்.
திடீரென்று கருட புராணம்
சிறகடித்துக்கொண்டு பறக்கிறது.
"கும்பி பாகம் கிருமி போஜனம்"
தூள் பறக்கிறது.
குற்றமும் தண்டனையும்
தராசுத்தட்டுகளில்
தட தடக்கிறது.
பாற்கடல் எனும் அரசியல் அமைப்பின்
ஷரத்துக்கள்
கடையப்படுகின்றன.
யார் அசுரர் ? யார் தேவர்?
எதுவும் தெரியவில்லை.
எதுவும் தேறவில்லை.
ஜனநாயகச் சிவனின்
தொண்டைக்குள் நஞ்சு!
வெளியில் சில அசுரர்கள்
தேவர்களின் மடியில் சில அசுரர்கள்.
கொள்ளை உறிஞ்சலில்
கார்ப்பரேட்டுகளின் கோரைப்பற்கள்
இவர்களின் எல்லா சந்நிதானங்களிலும்
தரிசனம் தருகின்றன.
அமுத குடம் எனும் ஓட்டுப்பெட்டிக்குள்
இன்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
பாற்கடல் எனும் போலியான
ஒரு நச்சுக்கடல்.
சிவன் என்ன? அரி என்ன?
ஊழல் சிந்தனையில்
உருண்டு திரண்டு
வரும்
அந்த பொருளாதாரப்பேயாசைகள்
எந்தக்குரல் வளையையும்
நெறிக்காமல் விடுவதில்லை.
சாதி மதங்களின்
சாக்காட்டு சாஸ்திரங்கள்
"ஓட்டு" சாஸ்திரங்களை
ஓட ஓட விரட்டுகின்றன.
அரசியல் சாசனத்தில்
தனக்கு வேண்டியவாறு
பொந்துகள் ஏற்படுத்திக்கொண்டு
பொல்லாத சாஸ்திரங்கள்
மகுடம் சூட்டி வலம் வருகின்றன.
பணத்தை மட்டும் கருப்பு என்று சொல்லி
அதே கருப்புப்பொருளாதாரத்தை
வெள்ளையடித்து
வெறும் நகப்பூச்சு செய்தாலும்
அந்த கூர்நகங்களில்
சொட்டும் ரத்தம் எங்கும் தெரிகிறது.
தூங்கிக்கிடப்பவர்களே ..இந்த
தூசிக்கடல் தாண்டி
எதிர் நீச்சல் போடுங்கள்.
உங்கள் விடியலுக்கு
இன்னும் எத்தனை எத்தனை
நூற்றாண்டுகள் வேண்டுமோ தெரியவில்லை?
திடீரென்று சோம்பல் முறித்து
படுத்துக்கிடக்கும்
மூடத்தனத்தின் இந்த பழம்பாயை
சுருட்டியெறியுங்கள்!
கணிப்பொறிகள் உங்கள் வழிகளை
மறித்துக்கொண்டு விட்டன.
ஓட்டு வெளிச்சங்கள் எல்லாம்
ஒரு மரண அரக்கனின்
இருட்டு நிழல்கள் ஆகிப்போயின!
ஆனாலும்
அதோ இமையோரத்தில்
வருடும்
ஒரு புத்தம் புதிய‌
பூங்காலையின் ஒளிக்கீற்றுகள்!
அதன் பெயர்..
நம்பிக்கை.

================================================
15.11.2017

பதஞ்சலி.

பதஞ்சலி.
========================================ருத்ரா

நாட்களை
தினமும் புளி போட்டு
விளக்கி விளக்கி
பளபளப்பாக வைத்துக்கொள்ள
நினைக்கிறோம்.
நிகழ்வுகளைக்கொண்டு
துடைத்து
பளிச்சென்று தெரிய
பாடான பாடு படுகிறோம்.
நம்மையோ
மனப்பாம்பு நம் உள் புகுந்து
முறுக்கு முறுக்கு என்று
முறுக்குகிறது.
மூச்சுக்கயிற்றைக்கொண்டு
அதை இறுக்கி
முடிச்சு போட
என்னென்னவோ யோகா செய்து
அதாவது "ஓகம்" செய்து
பழகிக்கொள்ள வேண்டும் என்று
சொல்கிறார்கள்.
அப்படித்தான்
விரலை மாற்றி மாற்றி வைத்து
மூக்கைப் பிடித்து
மூக்கை விட்டு
பயிற்சி செய்ய ச்சொல்கிறார்கள்.
அதெல்லாம் சரி தான்.
இப்போது
மூக்கைப்பிடித்த நான்
மூக்கை த் திறக்க முடியவில்லை.
முடை நாற்றம்!
பதஞ்சலி சொன்னார்
அவர் சொன்னார்
இவர் சொன்னார்
என்பதெல்லாம்
இந்த மனிதனை
சாதி மதங்களின் மலக்குழியில்
அமிழ்த்தி விடைத்தானா?
அப்படித்தள்ளியவர்கள் தான்
பிரம்மனின் புத்திரர்களா?
மும்மலம் அறுக்கும் உபாயம்
சொல்வது இருக்கட்டும்.
மனம் நிறைய சுமக்கும்
இந்த சாத்திர மலங்களை
சுத்தப்படுத்துவதற்கு
என்ன ஆசனம் இங்கே இருக்கிறது?


=====================================================



வியாழன், 19 செப்டம்பர், 2019

மனிதன் நினைப்பதுண்டு

https://www.youtube.com/watch?v=HvtLC3NvI4c&list=RDHvtLC3NvI4c&index=1



மனிதன் நினைப்பதுண்டு......
=========================================ருத்ரா

இந்தப்பாடலைக்கேளுங்கள்.
"அவன் தான் மனிதன்"
என்ற படத்தில் வரும் பாடல் இது!
இது ஒரு தத்துவப்பாடல்தான்.
மனிதன்
தன் மனப்புண்களின்
வலி தெரியாமல் வருடிக்கொண்டிருக்க
கண்டு பிடித்தது தான்
இந்த தத்துவங்கள்.
கடவுள் இருக்கிறது என்று
சொன்னாலும் தத்துவம் தான்.
என்னடா!
கடவுளாவது கத்தரிக்காயாவது
என்று
சொன்னாலும் தத்துவம் தான்.
வாழ்க்கை எனும் பாறாங்கல்லில்
உரசி உரசித்தேய்த்து
அந்த மீனின் செதில்களை
அப்புறப்படுத்தி
அப்புறம் அதை துண்டு போட்டு
சமைத்து சாப்பிடுவது
வாழ்க்கை.
அந்த உரசலும்
அந்த உதிர்தலும் தான்
தத்துவம்.
செதில்களாய் உதிர்ந்து கிடப்பது
யாரென்று நினைக்கிறீர்கள்?
நாமும் கடவுளும் தான்.
போகட்டும்.

இந்தப்பாடலில்
ஒரு மின்னல் குழம்பு
நம் உயிருக்குள்
ஒரு ஊற்றாக சுரக்கிறது.
அந்த பின்னணி இசை.
இசைக்கருவிகளைக்கொண்டு
நம் மதிப்பிற்குரிய
எம் எஸ்.வி அவர்கள்
நம்மீது பிழிந்து ஊற்றுகிறார்.
அவருக்கு
இசை விரும்பிகள் தான்
தெய்வம் என்றால்
அந்த தெய்வங்களுக்கு
அவர் கும்பாபிஷேகம் செய்கிறார்.
அந்த தேன்மழையைப்பொழிந்து
நம் மீது
உருகிக்காட்டுகிறார்.
உருக்கிக்காட்டுகிறார்.
அழுது காட்டுகிறார்.
நம் அழுகையையும்
அதில் காட்டுகிறார்.
அந்த இசை "லாவா"வில் எல்லாம்
உருகி ஓடுகிறது.
உணர்வின் சிவப்புக்குழம்பு.
வாழ்க்கையின் அர்த்தங்கள்
சிலிர்த்துப் பாய்கிறது.
இறுதி வரிகளில்
நடிகர் திலகத்தின் கைகளில்
வரும் அந்த வெள்ளைப்புறாவின்
இறக்கைகளில் நாம் துடிக்கிறோம்.
நாம்
"இறக்கையில்"
இப்படித்தான் துடிப்போமோ?
அந்த இசைக்கருவிகளின்
பின்னணி இசையில்
பிரபஞ்சத்தின் ஒரு பிரளயம்
நம் உடலின்
கோடிக்கோடி செல்களின்
அந்த உயிர்த்துளி அறைகளுக்குள்
புகுந்து புகுந்து நிரம்பி
வெளியேறுகிறது.
அப்பப்ப !
தாங்க முடியவில்லை
எம் எஸ்.வி அவர்களே
உங்கள் இதயப்பிழிசலை.
உங்கள் இதயக்கிழிசலை!!

================================================







உடைத்து எறி !

உடைத்து எறி !
====================================================ருத்ரா


என்ன கவலை உனக்கு தமிழா?
உன் தமிழை பிடுங்கியெறிந்து விட்டு
ஒரு கள்ளிப்பூவை
உனக்கு மத்தாப்பு காட்டும்
இந்த உன்மத்தர்களா
உன் வீட்டுக்கு பூட்டு போட முனைவது?
கற்பனையாய் ஒரு கடவுளுக்கு
இரைச்சல் மழை தூவும்
சத்தங்களா உன் வரலாறு?

மாடி மனைக்கட்டிடங்கள்.
இன்றைய நகர்களே  வியக்கும்
நகர அமைப்புகள்.
இன்னும் இன்னும்
நாம் படிக்கும் தமிழ்ப்பாடம் போல்
அந்த முத்திரைகள்!
இவையெல்லாம் நம்
வாழ்க்கைசசுவடுகளின்
அரிய சுவடிகள்.
சிந்து என்ற தூய தமிழ்ச்சொல்லே
அந்த பேராற்றுக்கு பெயர் ஆகிப்போன
ஒரு சான்று போதுமே
அது நம் தமிழ் நாகரிகத்தின்
உயிர் நாடி என்று.

உலகம் எல்லாம் சென்று
திரட்டிய ஒலிக்கோவைகளை
ஒரு மொழியாக்கி உலவவிட்டு
அதை சமக்கிருதமாய்
ஒரு சம உரிமை தந்து
அதற்கு புலமை ஊட்டிய
ஒரு நாகரிக மாண்பு கொண்டதல்லவா
உன் தமிழ் மொழி!
ஆனால்
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல்
அந்த சமஸ்கிருதமா
உன்னை வீழ்த்தும் தந்திரம் வகுப்பது?
நாகரிகம் மிக்கவர்கள் ஒரு
பொமரேனியனை
கையில் பிடித்துக்கொண்டு
போனது போல்
நீ வளர்த்த குட்டியா
உன் ஈரக்குலைகளை தின்ன வருகிறது?
போதும் தமிழா.
இனியாவது நீ விழித்துக்கொள்ள வேண்டும்.
பொருளே புரிந்துகொள்ளாமல்
பெயர் சூட்டிக்கொள்வதும்
திருமணம் புரிந்து கொள்வதும்
ஏன்
இறந்து போய் ஈமசடங்கு
செய்து கொள்வதும்
உனக்கு
வசதியாய் இருக்கிறது
சௌகரியமாய் இருக்கிறது
என்று
நீ உட்கார்ந்து இருப்பது
அந்த பூதத்தின் வாய்  அல்லவா!
அந்த பிணத்தின் உடல் அல்லவா!
உன் உயிர்மொழியைச்சுற்றி
அடைத்திருக்கும் இந்த‌
சூழ்ச்சிக்கூடுகளை
உடைத்து எறி!
உன் செல்ல மொழியை வைத்தே
உனைக் கொல்ல ஒரு மொழி செய்த
வர்ண பேதம் எனும் அந்த கசாப்பு அரிவாளை
உடைத்து நொறுக்கி விடு.
உன் மொழியும் மண்ணும்
உனக்கு மீண்டும் வெற்றி சூட
வீறு கொண்டு  எழு தமிழா!
வீறு கொண்டு எழு!

==========================================================


செவ்வாய், 17 செப்டம்பர், 2019

உற்றுப்பார் உன் கண்ணாடியை


உற்றுப்பார் உன் கண்ணாடியை
=========================================ருத்ரா

ஏன் வளையவேன்டும்?
எதற்கு இந்த மண்டியிடல்?
கவலைகளும் துயரங்களும்
அந்துப்பூச்சிகளாய்
நம் வாழ்க்கைப்பக்கங்களை
அரித்துத்தின்பதா?
வலியின் எல்லைக்கோடு
உடலின் விளிம்புகள்.
மனச்சிதைவின் கோடரிமுனைகள்
உன் கண்ணாடி பிம்பத்தை
தூளாக்க விட்டு விடாதே!
அந்த பிம்பத்தோடு நீ
உன் தலைவாரிக்கொள்வதோடு மட்டும்
நிறுத்திக்கொள்வதில்லையே.
இந்த துன்பங்களின்
ஏழு சமுத்திரங்களும் உன்னை
மூழ்கடிக்க வரும்போது
இதைப்பார்த்து
கட கட வென்று ஒரு வெடிச்சிரிப்பு செய்.
உன் அவநம்பிக்கைகள்
உன் காலடியில் தூள் தூள்..
ஆம்..
உன்னையே நீ
உற்றுப்பார்.
கோடி உலகங்கள்
உன் இமைச்சிமிட்டலில்
உன் ஆணைகள் கேட்டு நிற்கும்.
உற்றுப்பார் உன் கண்ணாடியை.

==============================================
15.10.2017