சனி, 30 செப்டம்பர், 2017

கமலின் பதினொண்ணாவது அவதாரம்.


கமலின் பதினொண்ணாவது  அவதாரம். 
 ==================================================ருத்ரா

உலகநாயகன் அவர்களே!
இந்த பட்டம்
நாங்கள் விசிலடித்து
காகிதப்பூக்கள் சிந்தி
சினிமாஅரங்கத்தின்
இருட்டு உலகத்தில் மட்டுமே
மின்மினிப்பூச்சிகளாய்
துடி துடித்துச்சிதறும்படி
கொடுத்தது.
இதைத்தாண்டி
எங்கோ கரீபியன் தீவுகளின் இடையில்
ஏதாவது ஒரு
கொசுத்தீவிலும்
இப்பட்டம் பட படக்குமா
எனத்தெரியவில்லை.
கச்சாபிலிமின் பொந்தைவிட்டு
வெளியே வந்து
அவ்வப்போது
"ஊசிப்பட்டாசே ஊசிப்பட்டாசே
வச்சாலே வெடி டமார் டமார்"
என்று
திகம்பர சாமியார் கணக்காய்
அறிக்கைகள் தந்த போது
நாங்கள்
புல்லரித்து தான் போனோம்.
அதுவும்
தமிழனின் தொன்மை ஒளி தொட்டு
சிந்துவெளி..திராவிடம்
என்றெல்லாம் நீங்கள் பேசியபோது
அன்று மெரினாவில்
ஆயிரக்கணக்காய் முளைத்த
மினி சூரியன்களின்
வெளிச்சத்தை  கொஞ்சம்
அள்ளிபருகி விட்டீர்கள்
என்றல்லவா நினைத்திருந்தோம் !
ஆனால் திடீரென்று
உங்கள் ட்விட்டர் குரல் பிஞ்சுகள்
கொஞ்சம் இசகு பிசகாய் பிய்ஞ்சு
போய் விட்டதோ என்று
கலவரம் அடைந்திருக்கிறோம்.
கருப்புக்குள்  சிவப்பு ..
அப்புறம் சிவப்புக்குள் காவி?!
அது எப்படி?
உங்கள் "தசாவதாரத்தில்"
உங்கள் நடிப்பின் அவதாரங்கள்
அத்தனையும் அற்புதம்..
அந்த முக்காடு பாட்டி உட்பட !
அமெரிக்காவின்
"புஷ்ஷுக்குள்ளும் " புகுந்து
விளையாடி விட்டீர்களே !
அப்படியே "மோடிஜி"குள்ளும்
ஒரு அவதாரம் எடுக்க ஆசையோ?
நம் சூப்பர் ஸ்டார் இப்படி
எந்த சட்டைவேண்டுமானாலும் போட்டு
வாய்ஸ் கொடுப்பார்.
அப்புறம் அதை நான் போடலை
செந்தில் தான் போட்டிருக்கிறார்
ஆனால் சட்டை என்னுது என்று
சொல்லாமல் சொல்லி
 தியேட்டரையே வெடிச்சிரிப்புகளால்
தூளாக்கிவிடுவார்.
அந்த படையப்பாவுக்கு எல்லோரும்
பாபாக்கள் தான்.
பசுவுக்கு பாப்பா பாட்டு
ஏற்கனவே
அண்ணாமலையில்
பாடியாகி விட்டது!
ஆதலினால் கமல் அவர்களே
நீங்களும் அவரைப்போல்
ஏதாவது இமயமலையைக்கெல்லி
காவி   பாபாக்களைஎல்லாம்
கொண்டு வரவேண்டாம்.
புதிய தலைமுறையினரிடமிருந்து
புதிய யுகம் ஒன்றை
பதியமிடும் இயக்கத்தை
விட்டு விடாமல்
முன்னெடுத்துசெல்லுமாறு
அன்போடு வேண்டிக்கொள்கிறோம் .

============================================



















மனிதனைத் தேடும் கடவுள்

மனிதனைத் தேடும் கடவுள்
============================================ருத்ரா

கடவுள் இது அல்லது அது
என்று சொல்லும்போது
அது கடவுள் இல்லை
இது கடவுள் இல்லை
என்று சொல்பவர்களின்
வாதங்கள் தான் உபனிஷதங்கள்.
இன்னும்
பிரம்மசூத்திரம்
நியாயவைசேஷிகம்
சாங்க்யம்
என்று சிந்தனையின்
"ஆற்றொழுக்கியல்" (லாஜிக்)
எல்லாம்
அந்த "இல்லைப்பாட்டுகள்" மூலம் தான்
சொல்லாடல் புரிகின்றன.
கடவுளைத் தேடும் மனிதன் என்பதெல்லாம்
மனிதனைத்தேடும் கடவுள் என்று தான்
பொருள் கொள்ளப்படவேண்டும்.
ஏனென்றால்
"கடவுள்" கருத்தை படைத்தவனே மனிதன்.
அந்த கருத்தோட்டம்
மனிதனுக்குள் புகுந்து குடைச்சல்
கொடுப்பதெல்லாம்
மனிதனுக்குள்ளேயே அந்த மனிதனைத்தேடி தான்.
அந்த "உருவெளி மயக்கத்தூண்டுதல்களே"
கும்பாபிஷேகங்களையும்
கும்பமேளாக்களையும்
ஈசல் கூட்டங்களாய் மொய்க்கச்செய்கின்றன.
இல்லாத அந்த ஒன்றுக்கு
ஒரு ஆயிரம் பெயர் சொல்லிப்பார்த்தாலாவது
அதை அலங்காரம் செய்யலாமா
(சஹஸ்ரநாமம்)என்பதும்
ஒரு பிள்ளை விளையாட்டு தான்.
அதையும் எல்லோரும் விளையாட்டுத்தனமாய்
விளையாடுவதில் ஒரு உற்சாகம் தான்.
"எல்லோரும்" என்ற உரிச்சொல்
மனிதனிடம் அப்பிக்கொள்ளும்
ஒரு மானிடவியல் அன்பை
மறைத்துப்பூசும் சாதி வர்ணங்கள் தான்
இந்த ஞானத்தின் பெருங்கடலை
சில குறுகிய ஸ்லோகங்களின்
"தொன்னைக்குள்" வைத்து
ஒரு ஆதிக்க அரசியல் செய்கிறது.
அறிவின் ஆழக்கடலில்
கடவுளைத்தேடி
நங்கூரம் வீசுபவர்கள்
இறுதியில் அது
இல்லை என்பதில் விழுந்துகிடக்கிறது
என்று
அறியாமல்
அல்லது அந்த அறியாமையில்
இன்பம் கொள்ளுகிறார்கள்.
அந்த அபரிமிதமான உணர்ச்சிவெறியில்
அவர்களை ஒத்துக்கொள்ளாதவர்களை
வதம் செய்கிறார்கள்.
கடவுளை ஒத்துக்கொள்ளவேண்டும்
என்ற வட்டமே
கடவுள் "அம்சமாய்"
இந்த அரசன் அல்லது அரச ஆதிக்கத்தையும்
ஒத்துக்கொள்ளவேண்டும்
என்ற பெரு வட்டமாய் விரிகிறது.
இதில் மக்கள் ஜனநாயக வட்டம்
சுறுங்கிப்போய் ஒன்றும் இல்லாமல் போகிறது.
இதை மதத்தின் "ஃபாசிசம்" என்று தான்
சொல்லவேண்டும்.
கடவுள் எனும் எல்லையில்லா கயிற்றின்
மறு முனையே
கடவுள் இல்லை என்பது.
சிந்தனையின் நேர்கோட்டை
முறித்து நசுக்கி
சிந்தனையே அற்ற பாழ்வனத்தை நோக்கி
பயணம் செய்வதே "கடவுளிஸம்"
முண்டியடித்து சிந்தனையை கூரான‌
சக்தியாக்கி வளமாக்கி பரந்த அன்போடு
புதிய உலகம் படைக்கும்
பார்வைகள் கொண்டதே "மனிதனிஸம்"
ஆத்திகம் விஞ்ஞானத்துக்குள்ளும் போய்
வேர் பிடிப்பது போன்ற‌
பார்வைகள் வலம் வருகின்றன.
அதையும் சிந்தனையியல் கொண்டு
பார்ப்பது
அறிவியல் வளர்ச்சிப்பரிணாமத்தில்
ஒரு படிக்கல் தான்.
எப்படியும் சிந்தனையை தேங்கச்செய்யாமல்
வைத்திருப்பது நாத்திகப்பார்வை மட்டுமே.
நாத்திகம் என்றால் உங்களுக்கு அலர்ஜி என்பது
உங்கள் சிந்திக்கும் ஆற்றல்
நோய்வாய்ப்பட்டிருப்பதையே குறிக்கும்.

================================================





வியாழன், 28 செப்டம்பர், 2017

மணல் சிற்பம்...குறும்பாக்கள்



மணல் சிற்பம்...குறும்பாக்கள்
========================================ருத்ரா

மணல்

கனவுகளை பிசைந்தனர்.
கையில் வந்ததோ
கடலின் சதை.

____________________________________________


கைவிரல்கள்

உருவம் தேடி அளைந்தனர்.
நெருடியது
நண்டின் கொடுக்குகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________

அலைகள்

தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்
என்று வந்தன
துடைத்து அளிக்க.

________________________________________________

பரிசு

உலகப்போட்டியில் இதற்கே பரிசு.
இதன் தலைப்பே காரணம்
"இது பரிசுக்கு அல்ல"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________


இருவர்

அகங்களில் அணைத்திருக்க‌
முகங்களில் பட்டிமன்றம்.
மண முறிவா? மண மகிழ்வா?

__________________________________________________

மனிதன்

கடவுள் ஒத்திகை.
அரங்கேறும்போதோ
இருவரும் அங்கு இல்லை.
___________________________________________________

கடவுள்

இங்கே மணல் துளிகள் எத்தனை
என்று எண்ணிக்கொண்டிருங்கள்.
"நான் இல்லை"என்று தெரியும் வரை.
___________________________________________________

சிற்பம்

பிரம்மன் தோற்றான்.
மனிதன் வென்றான்.
உளி இங்கே உள்ளம் அல்லவா.
______________________________________________________

உதயம்

இன்று ரொக்கம் நாளை கடன்.
"போர்டு" மாட்டியிருக்கிறது கிழக்கில்.
விடியாததன் பெயரே விடியல்.
_______________________________________________________

கோட்டை

உதிரும் என்று தெரியும்.
கலையும் என்றும் தெரியும்.
நம்பிக்கை இங்கு லட்சம் ஆண்டுகள்.

__________________________________________________________

சுண்டல்

தேங்காய் மாங்காயோடு
காகிதம் சுற்றியிருந்தது.
முண்டகோபனிஷதம் அச்சிட்டது.

___________________________________________________________

காற்று

வாங்க வந்தேன்.
கவிதையெல்லாம் வேண்டாம்
இங்கே ஏற்கனவே குப்பை.

________________________________________________________

புதன், 27 செப்டம்பர், 2017

குறும்பாக்கள்

குறும்பாக்கள்
==============================ருத்ரா

நரகாசுரன்கள் காத்திருக்கிறார்கள்
தீபாவளியில்
நரகாசுரன்களை வதம் செய்ய.

____________________________________

தாலிக்கயிறுகளின் சேரியில்
பிரம்மாண்ட‌ விளம்பர போர்டு!
மனைவிக்கு வைரநெக்லஸ்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

அந்த உயிர் சடக்கென்று எழுந்தது!
"இந்த பிணங்களா எனக்கு
விசாரணை கமிஷன் அமைப்பது?"

____________________________________

சங்கிலிகள்

சங்கிலிகள்
========================================ருத்ரா

சமுதாயம் குப்பை.
அரசியல் சாக்கடை.
சாதிமதங்கள் நோய்கள்.
நோய்கள் அறியாமை.
டிவிக்கள் மூட்டைப்பூச்சிகள்.
"பிக் பாஸ் " "சோசியல் ஃ பிராய்டிசம்"
கைபேசிகள் கல்லறைகள்.
சமூக அநீதிகள் சுரண்டல்கள்.
காதல் ஹார்மோன் நொதிப்புகள்.
ஆட்சி பணம் காய்ச்சி மரம்.
தமிழ் "கீழடிக்குழிகள்"
ஓட்டுகள் "அமரர் ஊர்திகள் "
நலத்திட்டங்கள் சோப்புக்குமிழிகள்.
ஊழல்   நரம்புக்குள்ளும் ஊடுருவல்.
பொருளாதாரம் நச்சு வட்டம்.
டாஸ்மாக் "பாட்டில்" தீர்வுகள்.
ஹைட்ரோகார்பன் டெல்லி சாட்டை.
பெருமாள் முருகன்கள் ரத்தம் கக்கிகள்.
திராவிடம் அறிவு ஆயுதம்.
சினிமாக்கள் "இருட்டறைப்பிணங்கள்"

"போதும் புலம்பல்கள்
இவனை
ஏர்வாடி சங்கிலிகளில் மாட்டு!"

=======================================

வளையல்கள்

வளையல்கள்
=============================ருத்ரா

வளையல்குலுங்க
வளைந்து நெளிந்து
எங்கே ஓடுகிறாய்?
சற்று நில்!
மௌனமாய் உதிரும் ஒலியில்
அவள் வளையல்களும் ஒலிக்கிறது.
ஓ! வளையல் பூச்சியே!

=================================

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஓவியா (2)

 ஓவியா  (2)
==========================================ருத்ரா

ஓவியா ஏன் இன்னும்
அந்த "அபினிகளின்" சுரங்கத்தை
வெட்டிக்கொண்டிருக்கிறார்?
அஜந்தா எல்லோரா
குகை ஓவியமா அவர்?
டிவிக்களின் வவ்வால் காடுகளில்
தொங்கும்
தலைகீழ் வக்கிரங்களுக்கு
இன்னுமா "லேஸர் பூச்சுகள்?"
இவரின் பின்னே ஒரு ஆர்மியா?
இந்த நிழற்படையால்
இந்த மண்ணுக்கு சொரியாஸிஸ்
வரவிடலாமா?
ஓ! இளைஞர்களே!
உங்கள் உள்ளம் ஒரு
சூன்யமான குகைபோல் ஆனது
என்பதற்காக‌
இந்த புகைமூட்டத்தைக்கொண்டா
அதை ரொப்புவது?
பாதையும் வேண்டாம்.
பயணமும் வேண்டாம்.
சிந்தனைகள் வேண்டாம்.
சித்தாந்தங்கள் வேண்டாம்.
மானிடமும் வேண்டாம்
மண்ணாங்கட்டியும் வேண்டாம்.
பிரம்மாண்ட விளம்பரங்கள்
ஏந்தியிருந்தாலும்
அவை உங்கள்
பாயின்ட் ஆஃப் நோ ரிடர்ன் எனும்
குட்டிச்சுவர் தானே!
வரலாற்றின் ஊற்றுக்கண் அடைக்கவா
இந்த "ஆர்மி"?
உங்கள் நியூரான் முடிச்சுகளின்
சினாப்டிக் ஜங்ஷன்களில்
வேண்டாம் இந்த விபத்துக்களின்
ட்ராஃபிக் ஜாம்?

================================================






திங்கள், 25 செப்டம்பர், 2017

கருப்புடா...கருப்பன்டா

கருப்புடா...கருப்பன்டா
==============================================ருத்ரா

விஜயசேதுபதி அவர்களே
கபாலிடா நெருப்புடா என்று
திரையெல்லாம்
சமூகநீதி புகை கக்கினாலும் கக்கியது
கும்கி யானைக்காரரும்
நெருப்புடா..நெருப்புடா
என்று கல்லாப்பெட்டியருகே
கலக்கிக்கொண்டிருக்கும் போது
ஒரு முரட்டுக்காளையை
கட்டித்தழுவும்
மெகா முரட்டுக்காளையான நீங்கள்
கருப்புடா...கருப்பன்டா என்று
எங்களை
கதிகலங்க வைக்கவேண்டியது தானே.
கிராமத்து மண்ணில்
அந்த ஜல்லிக்கட்டுக்கொம்புகள்
குத்திக்கிளறும்
புழுதிப்புயல்களில்
சமூக அநீதிகளின்
முகம் கிழிக்கும் செங்காற்றும்
சூறைக்காற்று ஆகியிருக்கிறதோ ?
இன்னும்
உங்கள் திரைக்கதையின்
அனாட்டமி எல்லாம் எங்களுக்குத்
தெரியாது?
இன்னும் அந்த "உடன் நடிக்கும்"
நடிக நடிகையர் பற்றி
பால பாடம் போன்று
அ.....அணில் என்றோ
ஆ ....அடு என்று கூடத்தெரியாது.
வாலை முறுக்கும்
வீரக்காளையின்
அந்த "திமில்" வழியே
நீங்களும் "தமில் " வாழ்க
என்று ஏதாவது
ஒரு "வெள்ளாவி"நடிகையுடன்
விழுந்து புரண்டு
கலித்தொகை அகநானூறு  எல்லாம்
சும்மா பிச்சு பிச்சு
ஒரு வீச்சு பரோட்டா போடப்போகிறீர்கள்
என சப்பு கொட்டிக்காத்திருக்கிறோம்.
அதெப்படி?
ரயில் டிக்கெட்டில்
"தமிழ்" இல்லை என்றல்லவா
முழங்கியிருக்கிறீர்கள்.
அந்த "வீரப்பொங்கலுக்கு"
எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!
"ஐ நா" திடலில்
இனவெறியர்கள் மிருகங்களாய்
நம் தமிழ்ச்சிங்கத்தின்  மீது
பிறாண்ட முயற்சித்திருக்கின்றனவே!
நம் அசோகச் சக்கரங்களும்
வேடிக்கை பார்க்கும்
வெறும் கல்தூணா?
உங்கள் "மாட்டுப்படம்"
காட்டவேண்டும்
தமிழன் எனும் நல்ல மாட்டுக்கு
ஒரு சூடு என்று.

============================================
















அந்த இடைவெளி

அந்த இடைவெளி
===================================ருத்ரா

எத்தனை காலம் நூற்றுக்கொண்டிருக்கிறோம்!
இந்த இழையை.
நம் கைவிரல்கள் கோடி கோடி கணக்கில்
பின்னி பின்னி வருகின்றன.
எது பஞ்சு?
எது பருத்தி?
தெரியவில்லை.
நிகழ்வுகள் சுழல்கின்றன.
கடல் பாசியிலிருந்து
ஒற்றை செல் உயிர்த்துளி
ஊழிகள் அடர்ந்த உயிர்களின்
வனம் ஆயிற்று.
நீரிலிருந்து மண்ணுக்குத்தாவிய
உயிர்
பல வடிவங்கள்
உடுத்துக்கொண்டிருக்கின்றன.
கொம்புகள்.
கோரைப்பற்கள்.
கூர்நகங்கள்.
இறுதியாய்
மனிதன் கையில் வில் அம்பு ஈட்டி!
மனிதர்கள் தங்கள் தலைகளை
தாங்களே கொய்து கொள்கின்றனர்.
மகுடங்கள்
அலங்கரிக்கப்பட்ட கபாலங்களாய்
சரித்திரம் பேசுகின்றன.
வானம் வாக்குகளை உமிழ்கிறது.
பயத்தையும் மரண மழையையும்
தூவுகிறது.
அச்சத்தின் மெல்லிய சல்லாத்துணி
மண்ணின் அடி வரை
மூடிப்படர்கிறது.
மனிதன்
இன்னொரு மனிதனைப்பார்த்து தான்
கடவுளின் பிம்பம் அறிகிறான்.
அது எப்படி
ஒருவன் மீது இன்னொருவன் ஏற்றும்
சிலுவை ஆனது?
ஒருவன் துப்பாக்கி
இன்னொருவன் இதயத்தின்
துடிப்புசதைகளையும்
குருதி ஓட்டத்தையும்
ஏன் சிதைக்கத்துடிக்கிறது?
இந்த கேள்வியின்
ரத்தக்கசிவுகள் இன்னும்
நம் பக்கங்களை
வர்ண அச்சில் வார்த்து வார்த்து
பதித்துக்கொண்டே இருக்கின்றன.
கம்பியூட்டருக்குள்
தெரியும் மூளைப்பிதுங்கல்களிலும்
செத்துப்போன ரத்த அணுக்களாய்
கிராஃபிக்ஸ் காட்டுகின்றன.
மனிதம் மறைந்தே போய்விடுமா?
எங்கிருந்தாவது ஒரு ஏலியன்
மனிதப்பூவின்
அன்பு மின்சாரத்தை
புதிதாக நம்மிடையே
பாய்ச்சாமலா இருக்கப்போகிறது?
இன்னும்
நம் குவாண்டம் கம்பியூட்டிங்
காம்ப்ளெக்ஸ் "ஹில்பெர்ட் ஸ்பேசில்"
அதன் க்யூபிட்ஸ் ல்
நம்பிக்கையின் அந்த
இடைவெளி இருக்கிறது!

================================

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இட்லி சாப்பிட்டார்.


இட்லி சாப்பிட்டார்.
==========================================ருத்ரா

"இட்லி சாப்பிட்டார்.
இடியாப்பம் சாப்பிட்டார்."

பொய்யின் பொய்யா
மெய்யின் பொய்யா?
இல்லை
மெய்யின் பொய் மெய்யா?
மெய்யிலும் மெய்யானவையே
பொய்யான போது
பொய்மெய் மெய்பொய்
மெய்மெய் பொய்பொய்
எப்படி இனி சொல்ல?
புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்
பொய்மையும் வாய்மையிடத்தே
என்று
இன்னும் இன்னும்
நூறாண்டுகளுக்கு
குத்தகை டெண்டர் கட்டிங்குகளோடு
மண்வளம் மலைவளம் எல்லாம்
பினாமி சொத்தாக்கி ஆண்டு மகிழ
நல்லாட்சி தொடர‌
இந்த
பொய்மெய் மெய்பொய்
பொய்பொய் மெய்மெய்
ஜிகு ஜிகு ஜிகு
ரயில் விளையாட்டு
சுகம் சுகம் பரமசுகம்!

========================================

சனி, 23 செப்டம்பர், 2017

சாக்கலேட்

சாக்கலேட்
==============================================ருத்ரா

சாக்கலேட்டை சுற்றியிருக்கும்
பேப்பரை
கொஞ்சம் கொஞ்சமாய்
பிரிப்பதில் கூட‌
வாழ்க்கையின் துளி
ஒட்டிக்கிடக்கிறது.
நாக்கை சப்பு கொட்டி
இனிப்பான தருணங்களை
எதிர்பார்த்து
நம் மைல்கற்களை
எதிர்நோக்கி நடக்கின்றோம்.
நம் தோள்களில்
கனவுகளின் சுமையோ
குறைந்த பாடில்லை.
தூக்கம் தராமல்
கவலைகள்
நமக்கு பீஷ்மரின் அம்புப்படுக்கையை
அந்த ரத்தம் கசியும் முனைகளில்
நிறுத்தியிருக்கலாம்.
யாரெல்லாம் இந்த அம்புகளை எய்தது?
வெறும் தூசி துரும்புகள் கூட‌
எப்படி இப்படி ஊசிமுனைகள் ஆயின?
காதல் எனும் தீவுகளில்
சுற்றித்திருந்த போதும்
அவள் எய்த ஆயுதங்களைக்கணக்கிட்டால்
ஆயிரம் கையுடைய காளியின்
ஆயுதங்களையும் விட எவ்வளவோ
அதிகம் அல்லவா?
ஆயினும்
அவளின் ஒற்றைக்கீற்று மின் சிரிப்பு
தூண்டில் மீனாய் துடிக்க துடிக்க வைத்து
இன்பம் கூட்டுமே!
இப்போதும்
குடும்பம் குழந்தைகள் என்றும்
ஜல்லிக்கட்டின் திமில்கள்
மதுரைவீரன் கணக்காய்
மீசைவைத்து
செல்ஃபோன்களுக்குள்
ஏதாவது புதையலைத்தேடிக்கொண்டிருக்கும்
மகன்களாயும்
தலைக்கு மேல் வட்டமிடும்
டெங்கி காய்ச்சல் புகைப்படிமங்கள் போல‌
அவன் பொருளாதார பொன்னுலகங்களாயும்
அந்த புண்களின் மேகம்
துன்புறுத்துகிறது.
வாழ்க்கையின் அனாடமியை
கூறுபோட‌
எத்தனை எத்தனை உளைச்சல்கள்?
பருவ வாசலுக்கு வந்துவிட்ட‌
மகள்களோ
வாசலைத்தாண்டி உள்ளேயே
வருவதில்லை.
என்னவோ
சேட்டிங்காம்! டெக்ஸ்டிங்காம்!
புத்தக சைசுக்கு
காதில் வைத்துக்கொண்டு
கண்ணில் "செல்ஃபிகளை" ஒற்றிக்கொண்டு
எங்கேயோ நிற்கிறார்கள்.
உலகத்தைவிட்டு
தூரவெளியில்
ஒரு நெம்புகோல் தாருங்கள்
இந்த உலகத்தை புரட்டிவிடுகிறேன்
என்றானாமே ஆர்க்கிமெடீஸ்!
இவர்கள் இந்த கைபேசிகள் கொண்டு
உலகத்தின் பிரம்மாண்டத்தை
இரண்டு மூன்று ஜிபி களில்
கைக்குட்டைபோல் சுருட்டிக்கொள்கிறார்கள்.
மனிதன் முகம்
மனிதன் அகம்
எல்லாம்
இப்போது வெறும் "வெர்ச்சுவல் ரியாலிடீஸ்".
என் பிள்ளைகள்
எப்படி கரையேறுவார்கள்?
கவலைகள் எனும் கூரியமுட்கள்
என் ரத்தசிவப்பு அணுக்களைக்கூட‌
தின்று கொண்டிருக்கின்றன.

இப்போதும்
அவளுடையது
அழகான மின்னல் சிரிப்பு தான்.
அவள்
நான் மிகவும் நேசிக்கும்
என் வாழ்க்கை எனும்
காதலி அல்லவா?

==========================================================

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கமலும் ரஜனியும்

கமலும் ரஜனியும்
===================================ருத்ரா

கடவுளையும்
ஊழலையும்
நிரூபிக்கும்
ஆதாரங்கள்
இல்லை.
ஆனால்
கீரியையும்
பாம்பையும் காட்டி
கொட்டு அடித்துக்கொண்டே
இருக்கலாம்.
கமல்
அரசியல் பறை
அறைய வரட்டும்.
அதற்கு இசைஅமைக்க‌
இளையராஜாவோ
ஏ ஆர் ரஹ்மானோ
வேண்டும் என்றும்
"கோட்டை செட்டிங்"க்குக்கு
பாகுபாலி கிராஃபிக்ஸ்
வேண்டும் என்றும்
கேட்காமல் இருக்கவேண்டும்
அடுத்த படம்
இந்த படத்தின்
நூறு நாள் ஓட்டத்தை
பொறுத்தே அமையலாம்.
அதற்காக‌
முதலிலேயே
நூறு நாட்கள் தவணைக்குள்
தேர்தல் வேண்டும்
என்று கேட்பது
ஒரு நவீன
பஞ்ச்டைலாக் உத்தியாய்
ஆகிவிடக்கூடாது.
அந்த "கபாலீஸ்வரரையும்"
கை குலுக்க அழைத்தது
ஒரு நயமான கூட்டணி.
ஆனாலும்
அவரது கீரி பாம்பு ஆட்டத்தில்
மோடியின் உத்தியே
சத்தமாய் மகுடி வாசிக்கிறது.
ஆளும் ஆதிக்கமும்
எதிர்க்கட்சிகளும்
ஒரே தட்டில் தட்டில் நிறுக்கப்படும்
இந்த "ஊழல்" வியாபாரத்தில்
வெற்றித்"தங்கம்" கிடைக்க‌
சேதாரமாய் நாம் கொடுப்பது
நம் ஜனநாயகத்தையே தான்.
நம் தமிழ் நம் மூச்சுகளில் இருந்தே
பறிக்கப்பட்டுவிடும்
அபாயம் நம் மூக்குமுனை அருகேயே
வந்து விட்டது.
கமலும் ரஜனியும்
ஒன்று சேர்ந்து நம் தமிழை
காப்பாற்றட்டும்.
அவரோ ஒரு பரமக்குடித்தமிழர்.
இவரோ நம் எல்லைப்புறத் தமிழர்.
அவரே சொல்லியிருக்கிறார்
பச்சைத்தமிழர் என்று.
மதம் பூஜை பஜனை என்று
ஏற்கனவே சமஸ்கிருதம் பஞ்சடைத்த
தலையணைகளில் தான்
தமிழன் சோம்பித்தூங்குகிறான்.
இனி புதிதாய் திணிக்க எதுவுமில்லை
நீங்கள் இரு துருவங்கள் தான்.
ஆனால் எதிர் துருவங்கள் இல்லை.
எங்கள் தமிழைக்காத்திட‌
எங்களோடு தோள்கொடுங்கள்.
ஒத்தக்கருத்துள்ளவர்களோடு
ஒன்று திரளுங்கள் !
உங்கள் ரசிகர்கள்
ஜனநாயகம் வென்றெடுக்கும்
"மக்களாக" முதலில்
பரிணாமம் அடையட்டும்.
சாதி மத அசிங்கங்களை
மந்திரங்கள் ஆக்கும்
தந்திரங்கள் யாவும்
தவிடு பொடியாக‌
தேர்தல் படம் வெளிவரட்டும்.
திரைப்படம் அல்ல அது.
மக்கள் உலா வரும்
தரைப்படம் அதுவே அதுவே தான்.

============================================














வியாழன், 21 செப்டம்பர், 2017

அவை தான் அது!


அவை தான் அது!
==========================================ருத்ரா

கண்ணே!
காதலின் தொன்மையை
எந்த ஃபாசில்களிலிருந்து
நிறுவுவது?
அதோ மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த
ஒரு பெண்ணின் கபாலம்
அந்த மியூசியத்தில்
இருக்கிறது.
எனக்கு அந்த கண்குழிகளில்
ஒன்றும் தெரியவில்லை.
பெண்ணே!
இன்றும் உன் ஆழம் காணமுடியாத
ஒரு அமர்த்தலான பார்வை தான்.
மண்டையோட்டின் மேடுகளில் கூட
மயில் தொகை அன்ன
கூந்தல் கண்ணுக்குத்தெரியவில்லையே.
வெறும் பாஸ்வரத்தின் ரசாயன
உன் மிச்சத்தில்
காதலின் உன் முதல் ரசாயனத்தின்
பக்கம் எங்கே?
ஆ! அதோ
உன் சிரிப்பு
எவ்வளவு அழகு?
அந்த பல் வரிசையில்
வள்ளுவன் காட்டிய
அந்த வாலெயிற்று இன் நீர்
வைரத்திவலைகளை
வாரி இறைக்கின்றதே!
அந்தக்கடல்களில்
எல்லா "சுராசிக்" மற்றும்
"பிரி கேம்பிரியன்"யுகங்களும்
அல்லவா மூழ்கிக்கிடக்கின்றன.
உற்றுக்கேட்கிறேன்
டி.ரெக்ஸ் எனும் பயங்கர‌
டினோசார்களின் உறுமல்கள் மட்டும்
அல்ல அவை.
நீ அன்றொரு நாள்
நான் ஒரு முத்தம் கேட்டதற்கு
அடம்பிடித்து
மறுத்து அதிர்வு அலைகள்
ஏற்படுத்தினாயே
அவை தான் அது!

====================================

புதன், 20 செப்டம்பர், 2017

எங்கிருந்தாவது ஒரு புயல்




எங்கிருந்தாவது ஒரு புயல்
======================================ருத்ரா

அது
வானத்திலிருந்து வந்து
விழுந்த‌
சுத்தமான ஒலித்துண்டுகள்
என்றார்கள்.
ஒலி என்றால்
அதை ஏற்படுத்திய‌
குரல் வளையின் தசைநார்கள்
யாருடையது
என்ற கேள்விகள் எழுந்தன.
கேள்விகள் கேட்டு
எச்சில் படுத்தாதீர்கள்
என்றார்கள்.
அது
மனித செவிகளுக்குள்
நுழைவதும்
மறுபடியும்
மனித நாக்குகளின்
உமிழ்நீர் தோய்ந்து
குரலாக வெளிவருவதும்
தீட்டுக்கு மேல்  தீட்டு என்றார்கள்.
அப்படியென்றால்
அது
எவ்வளவு புனிதம் வாய்ந்ததாய்
இருக்கவேண்டும்?
அறிவு மழுங்குவதே அந்த புனிதம்.
மனிதர்கள்
அதை "அறிவு"ப்புலன் கொண்டு
ஸ்பர்சிப்பதே
ஆபாசம் என்றார்கள்.
அதை "அஸ்பர்ஸ்யோகம்" என்று
ஒரு மாண்டூக ரிஷி
வறள வறள மந்திரம் சொன்னான்.
அது
அப்படியே
எங்கே எல்லாமோ போனது.
உள்ளூர்க்காரர்கள்
அர்த்தம் தேடவே
பயந்தார்கள்.
வெளிதேசக்காரர்கள்
அந்த வெங்காயத்தோல்
உரித்தார்கள்.
இப்போது எல்லாம் புரிந்தது.
மனிதனுக்கு மனிதன்
யுத்தம் புரிந்தது...
எல்லாம் புரிந்தது.
இவன் சொன்னது அவனுக்கு
அதர்மம்.
அவன் சொன்னது இவனுக்கு
அதர்மம்.
ரத்தம் பீறிட்டு
வானத்தையே சிவக்க வைத்தது.
சோமாச்செடியை நசுக்கி நசுக்கி
கள் குடித்தது.
அதையே ஒருவனுக்கு
ஊற்றி ஊற்றிக் கொடுத்து
வெறி யேற்றி யுத்தம் செய்யச்சொல்லி
மந்திரங்கள் குவித்தது.
வஜ்ராயுதங்கள்
மக்களை கொத்து கொத்தாய்
தலை கொய்தது.
அடுத்தவன் அணைக்கட்டுகள்
பொறாமையால்
அடித்து நொறுக்கப்பட்டது.
வெள்ளம் மனித இனத்தை
பூண்டற்று போகச்செய்தது.
எல்லாம் புரிந்தது.
யாவும் "ஸ்லோகங்களின்"
இரைச்சல்களால்
திரை  போடப்பட்டன.
இந்த குட்டு உடைந்ததை
தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே
கடவுளின் புத்திரர்கள்.
இதை அறிய முற்படும்
மற்றவர்கள் காதுகளில்
ஈயத்தைக்காய்ச்சி ஊற்றுங்கள்
என்றார்கள்.
மனித சரித்திரத்தின்
அருவறுத்த முகங்களைக்
காட்டும்
அவை இன்னும்
மனிதம் எனும்
வெளிச்சத்தின் மீது
சடங்கு சம்பிராயதங்களின்
கல்லறைகளாய்
அழுத்திக்கொண்டிருக்கின்றன.
எங்கிருந்தாவது
ஒரு இர்மா புயல் வேண்டும்
இவற்றை அடித்து நொறுக்க!

==========================================






புதிய வானம்



புதிய வானம்.
=====================================ருத்ரா

வானத்தை நோக்கி
கைகூப்புகிறோம்
படைப்பின்
புதிர் புரியவில்லை என்று.
கவலைகள்
கரையான்களாய்
நம்மை அரித்துவிடும்போது.
கடலின் வயிறு கொந்தளித்து
நம் கட்டிடங்களையெல்லாம்
உருட்டித்தள்ளி விடும்போது.
யாரோ ஒரு பலம் பொருந்தியவன்
அங்கே இருந்து
நம்மை நோக்கி நாக்கு துருத்தி
நரகம் தருவதாய்
நம்மை மிரட்டும்போது.
இல்லாவிட்டால்
கோடி கோடி பொன்மழையை
நம் மீது தூவுவதாய்
அபிநயம் செய்யும்போது.
ஒரே ஒரு தடவை அதை
உற்றுப்பாருங்கள்.
நம் அறிவின் கேள்வித்திரி முனை
"பிக் பேங்க்" எனும்
விடைப்பாய்
நம் எல்லா இருப்புகளின்
வாசல்களுக்கு
ஒரு சாவித்துவாரமாய்
தெரியுமே
அது உங்களுக்கு தெரிகிறதா?
உற்று நோக்கல் எனும்
உங்கள் அம்புமுனை
ஒரு போதும் மழுங்குவதில்லை.
முன்னோர் சொல்லிப்போன
வசனங்கள்
உங்கள் சிந்தனையில்
கூர் தீட்டப்படவேண்டும்.
ஆம்
அந்த வான உச்சியிலிருந்து
சிந்தியுங்கள்.
பரிணாமம்
உங்களை முண்டியடித்துக்கொண்டு
உந்திக்கொண்டு போகிறது.
குப்புற விழுந்து விடாதீர்கள்.
அது எப்போதுமே
உங்கள் புதிய வானம்.

===================================

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

மகாளய அமாவாசை


மகாளய அமாவாசை
====================================ருத்ரா

இந்த
ஈசல் கூட்டங்களைக்கண்டு
ஈசனுக்கு சிரிப்பு தான் வருகிறது.
இந்த‌
வாழைக்காய் கத்தரிக்காய்
பச்சரிசி வகையறாக்களா
பிதுர்களை பசியாற்றுகிறது?
நீல விசும்பும்
நீள் பெருங்கடலும்
ஆபாசபடுத்தப்படுவதில்
அந்த "ஹிரண்யகர்ப்பனுக்கு"
கொஞ்சமும் உடன்பாடில்லை.
வேத மந்திரங்களைக்கொண்டு
ஒரு "எலக்ட்ரோமேக்னடிஸத்தின்"
சுவடுகளைக்கூட‌
கண்டுபிடிக்கமுடியாத மனிதன்
இன்னும் இன்னும்
பல நூற்றாண்டுகளை
நோக்கிப்பின்னோக்கி
ஒரு பேரிருளில் போய் விழுவதில் தான்
சந்தை இரைச்சல்களை
சரித்திரம் ஆக்கிக்கொண்டிருக்கிறான்.
டிவி ஊடகங்களுக்கும்
ஹிட்ரேட் எனும்
பிண்டங்கள் கிடைத்துவிடுவதால்
அற்பத்திலும் அற்பமான மகிழ்ச்சி.
"தமஸோ மாம் ஜோதிர் கமய‌"
தலைகீழாக உச்சரிக்கப்படுகின்றன.
எங்களுக்கு
வெளிச்சமே வேண்டாம்.
இருட்டு தான்
எங்களுக்கு பிடித்த‌
பிண்டமும் பண்டமும்!

=============================================




ஹைக்கூ


ஹைக்கூ
==================================ருத்ரா

அடையாறு ஆலமரத்தை
மேஜைமீது
வைக்கும் "போன்சாய்"

************************
யாப்பிலக்கணத்தை
பலூன் ஊதி
விளையாடுவது.

***************************
என் பேனாவைக்கொண்டு
வானத்து நட்சத்திரங்களை
துப்பிக்கொண்டே இருப்பது.

*****************************
பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும்
எட்டிக்காய்கள்.

*****************************

அவள் காதலைச்சொல்ல
அவள் வெட்டிய நக வளைவுகளின்
மூன்றாம் பிறைகளே  போதும்.

*******************************

இங்கு "உருவெளி மயக்கங்களே "
துணைக்கு வரும்
தொல்காப்பியம்.

**************************************









திங்கள், 18 செப்டம்பர், 2017

மனிதன்

மனிதன்
=================================ருத்ரா

எனக்குத்தெரியாது என்று
தெரியாது.
எனக்கு தெரியாது என்று
தெரியும்.
எனக்கு தெரியும் என்று
தெரியாது.
எனக்குத் தெரியும் என்று
தெரியும்.
அறிவின் நான்கு நிலைகள் பற்றி
அறிஞர்களின் கருத்து.
நான்காவது நிலையே
ஆன்றோர் நிலை.
முதல் நிலையே
பிள்ளைநிலை.
மனிதனின் குறுக்குவெட்டுத்தோற்றம்
மூளையைப் பற்றியது அல்ல.
உணர்வைப்பற்றியது.
கல்லும் புழுவும்
சமன்பாட்டுக்குள் வராது.
புல்லும் புழுவும்
சமன் செய்து சீர் தூக்கலாம்.
உயிர் தான் அங்கு இணைப்பிழை.
இன்னும்
மனிதர்கள்
மண்ணுக்குள்ளிருந்தும்
கல்லுக்குள்ளிருந்தும்
விழித்து எழுந்த பாடில்லை.
சதை கிழிக்கும் கோரைப்பல்லோடு தான்
அவன் தூக்கம் கலைத்தான்.
அவன் இமைகள் உயர்ந்த போது
"கல்லைக்"கொண்டு தான்
"கல்"வி கற்றான்.
வாயின் மாமிச நாற்றம் நின்றபோது
சொல்லைக்கற்றான்.
படிப்படியாய்
அவனுக்கே அவன் கடவுள் ஆனான்.
புரியாதவர்கள்
கல்லின் முன் நிற்கிறார்கள்.
புரிந்தவர்கள்
தந்திரம் செய்தார்கள்.
மனிதன் மனிதனை தின்ன ஆரம்பித்தான்.
நச்சு வட்டம் சுழல்கிறது.

==================================

"தனக்குத்தானே....."


"தனக்குத்தானே....."
====================================ருத்ரா


யார் அங்கே நடப்பது?
முதுகுப்புறம் மட்டுமே தெரிகிறது.
நானும் பின்னால் நடக்கிறேன்.
அவர் யாரென்று தெரியவில்லை.
அந்த முகத்தைப் பார்த்து
ஹலோ என்று சொல்லிவிடவேண்டுமே.
அறிமுகம் ஆனவர் என்றால்
"அடடே" என்பார்.
"நீங்களா" என்பார்.
அப்புறம் என்ன?
சங்கிலி கோர்த்துக்கொண்டே
போகவேண்டியது தான்?
இன்று அதி காலை நான்கு மணிக்குத்தான் படித்தேன்.
ரேண்டல் சுந்தரம் தியரி பற்றி..
அந்த‌ "ப்ரேன் காஸ்மாலஜி"பற்றி..
அவரிடம் பேச வேண்டும்.
எலக்ட்ரான்
புள்ளியும் இல்லாமல் கோடாயும் இல்லாமல்
சவ்வு மாதிரியான‌
ஒரு துடிப்பின் சுவர் அடுக்குகளால்
ஆனது இந்த "டி ப்ரேன்" என்கிறார்களே
அந்த ஸ்ட்ரிங்கை வைத்து
அவரிடம் "பிடில் வாசித்துக்கேட்கவேண்டும்"
அப்புறம் நம் ஊர்
வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பற்றி
ரொம்பவே சிலாகிக்க வேண்டும்.
வேதியலில் நோபல் பரிசு பெற்றவர்.
அது மட்டுமா?
உலக அறிவின் சக்கரவர்த்தி நாற்காலியில்
அவரை அமர வைத்து விட்டார்கள்
இங்கிலாந்துக்காரர்கள்!
வெள்ளைக்கும்பினி ஆட்சியை
நம் தலையில் கவிழ்த்த போதும்
அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கும்
சுதந்திரம் எனும் சுவாசத்தை
நமக்கு பாய்ச்சியதும்
அந்த அறிவு வர்க்கம் தானே.
உங்களுக்கு உங்களை ஆளத்தெரியாது
என்று
நம்மைத்தோலுரித்துக்காட்டியதும்
அவர்கள் தானே.
இந்த "நெல்லிக்காய் மூட்டையின்"
சுறுக்காங்கண்ணி முடிச்சை அவிழ்த்துவிட்டதும்
நம் அசோக சக்கரக்கொடியின் முடிச்சை
அவிழ்த்து விட்டதும் ஒன்று தானே!
நமக்கு காலுக்கு கீழே ஓடும் நதிகளும்
நமக்கு தலைக்கு மேலே பந்தல் போட்ட
ஆகாயத்தையும் காற்றையும்
கோடரி போட்டு வெட்டிக்கூறு போடுகிறோமே
இதையும் பற்றி
அவரிடம் கேட்க வேண்டும்.
அவரோ சர சரவென்று முன்னே போகிறார்.
அவரை எப்படியாது பிடித்து விடவேண்டும்.
கவிதைன்னா அது கவிஜ களுதன்னும்
சிந்தனையை மழுங்கடிக்கும்
மொக்கைன்னும் கலாய்க்கிறாகளே
இந்த அநியாயத்தையும் அவரிடம்
ஷேர் பண்ணியே ஆகவேண்டும்.
ஆனாலும் அந்த வரியில் எல்லாம்
காதல் நெய் பூசி
அதில் கேட்கும் இச்சு இச்சு களை
அவர்கள் இருதயத்துக்குள்
எண்டோஸ்கோபியில் ஒலிக்க வைத்தால்
அவர்கள் அடையும்
கிளுகிளுப்பு கிலுகிலுப்பைகளையும் பற்றி
ரொம்பவே அவரிடம்
மணிக்கணக்காய் பேசலாம்.
இன்னும் அவர் முகம்
நமக்கு எட்டவில்லையே.
டி எஸ் எலியட் என்று ஒருவர்
கவிதை எனும் வாழைப்பழத்துக்குள்
தத்துவம் எனும் ஊசியை ஏற்றும்
அந்த "வித்தகத்தனத்தை"ப் பற்றி
விண்டு உரைக்கவேண்டும்.
பேப்லோ நெருதா எனும்
மானிடனின் உள்ளத்துள்
காதல் குமிழிகளின்
பலூன்கள் மிதந்து கிடந்த‌போதும்
உள்நாட்டுப்போரில்
ஒரு உலக மானிட வீச்சுக்கு
துப்பாக்கிக்குண்டுகளையும்
கட்டி மிதக்க விட்டவர் அல்லவா அவர்.
"சிலி"யில் சிலிர்த்து நின்ற
அவரது அவதாரத்தின் முன்
மற்ற பத்து அவதாரங்கள் எல்லாம்
வெத்து அவதாரம் தானே!
அவரிடம் இதைச்சொன்னால்
எள்ளும் கொள்ளும் எப்படி வெடிக்கும்
என்றும் வேடிக்கை பார்க்கலாம்!
நேற்று விருது வாங்கிய
இளமை பொங்கும் கவிஞனின்
அந்த "அழகே அழகே" பாட்டில்
நரம்புகளும் தோல்களும்
எலக்ட்ரானிக் ஒலியில்
தேன் ஊற்றி
நம் "காப்பி ஆற்றும்"
காப்பியத்தைப்பற்றி
கலந்துரையாடல் செய்ய வேண்டாமா?
நானும் கால்களை எட்டி போட்டு
இதோ
அவர் தோள்பட்டையில்
கை வைத்து விட்டேன்.
அவரும்
முகம் காட்டினார்.
அது
என் மூஞ்சியா?
இல்லை அவர் முகமா?
சிரிக்கிறாரா? சிரிக்கிறேனா?
...................

"போதும் இடம் விடுங்கள்.
கண்ணாடியில்
எவ்வளவு நேரம் தான்
அந்த ஒற்றை முடியையே
சீப்பை வைத்து
ஓரம் கட்டிக்கொண்டிருப்பீர்கள்?
நானும் தலை வாரவேண்டும்.
தள்ளுங்கள்"

விரட்டியது என் "சகதர்மிணி"

==============================================
29 மார்ச் 2015ல் எழுதியது.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

"நவோதயா"

"நவோதயா"
==================================ருத்ரா

இப்படித்தான்
சர்வோதயா என்றார்கள்.
அந்த நீர்த்துப்போன கம்யூனிசம்
வேர் பிடிக்கவே இல்லை.
இப்போது
சரஸ்வதி வீணையை மீட்டிக்கொண்டு
குடிசை வீட்டுக்குள்ளெல்லாம்
வெளிச்சம் ஏற்ற‌
வரப்போவதாய் சொல்கிறார்கள்.
கொஞ்சம் தலையசைத்தால் போதும்.

"இந்த சிக்ஷா மந்திரில்
எப்போது வித்யாப்யாசம்"
வைத்துக்கொள்ளலாம்
என்று
அஷ்டமி நவமி பார்க்கச்சொல்வார்கள்.
அப்புறம்
அறிவின் சிந்தனைவெளியில்
மஞ்சள் குங்குமம் அப்பி
நாலுவர்ண மயமாக்கி
"மேஜ் பர் க்யா ஹை
மேஜ் பர் பச்சோங்கி கிதாப் ஹை"
என்று பாடம் துவக்கி விடுவார்கள்.
நம்
ஆனா ஆவன்னாவும்
அணில் ஆடும்
குப்பைத்தொட்டிக்குள் கிடக்கும்.

=============================================



பெரியார்.

பெரியார்.
===================================ருத்ரா

புத்தகங்கள் யாவும் காடுகள்.
எழுத்து இலைகளின் சராசரப்பில்
முணு முணுப்பது என்ன?
காகித திருப்பல்களில்
கைவிரல் பதிவுகளில்
கால விழுதுகளின் நரம்போட்டம்.
உருவமற்ற மனித சிந்தனைகள்
இந்த பேய்க்காடுகளில்
பிண்டம் பிடிக்கின்றன.
சமுதாயத்தின் நரி ஊளைகளும்
கொலை வெறியின் ஒநாய்ப்பற்களும்
மரண நிழல்களில்
மண்டியிடும் கூடங்கள் ஆகின.
வழிபாட்டு புனிதங்கள் ஆகின.
எழுதிய வரிகளில் சில
இந்த அழுகல் சுவடுகளை
அழிக்க வந்தன.
புத்தகங்களின் காடுகள்
சில அக்கினி ஆறுகளின்
கூடுகள் ஆகின.
தினம் தினம் இருட்டு சிந்தனைகளாய்
கழுவில் ஏற்றும் அந்த
நிழற்கூத்துக்களை அந்த
ஆறுகள் சுட்டெரித்தன.
அந்த புத்தகக்காடுகளில்
ஒரு பொந்திடை
அக்கினிக்குஞ்சை வைத்தது யார்?
அறிவு
சொல்லா? கல்லா?
சொல் கல்லை உடைத்தது.
வெள்ளைத்தாடி இழைகள்
மேல் நோக்கிப்பாயும் நெருப்பின்
அருவிகள்!
புத்தகக்காடுகளிலும்
வெந்து தணிந்தது ஒரு காடு.
மூடத்தனத்தில் மூடிக்கிடந்த காடு
மூண்டு எரியுது பாரீர்!
மூண்டு எரியுது பாரீர்!

=========================================

சனி, 16 செப்டம்பர், 2017

மச்ச அவதாரங்கள்

மச்ச அவதாரங்கள்
==========================ருத்ரா

யார் சொன்னது?
மச்ச அவதாரங்கள்
பகவான்களால்
எடுக்கப்படும் என்று.
ஒரு அசுரனாய் அவதாரம்
எடுத்த‌
பகவானே எடுத்த அவதாரமே
இந்த
"நீலத்திமிங்கிலம்"

=====================================

நம்பிக்கை

நம்பிக்கை
==============================================ருத்ரா

எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின் 
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்று விடுவாயா?
முடிந்தால் விழுங்கிப்பார்.
இருட்டுப்பிழம்பே
கரைந்து போ! காணாமல் போய்விடுவாய்!
ஒரு கோடி வெளிச்சம்
என்னில் உண்டு.
நம்பிக்கை நம்பிக்கை.
ஆம்! நம்பிக்கையால்
இந்த வானம் சுருட்டுவேன்.
எல்லாம் என் காலடியில்.
"ஊழையும் உப்பக்கம்" காண்பேன்.
எப்பவோ எவனோ
எழுத்தாணி கொண்டு 
ஒரு ஓலையில் கிறுக்கிவிட்டுப்போனான்.
ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில்
கோடி கோடி வரிகளில்
அந்த கதிர்வீச்சு பரவிக்கிடக்கிறது.
பூ .... இவ்வளவு தானா?
வரட்டும் அந்த டிராகுலாக்கள்
அவற்றை நான் உறிஞ்சித்தீர்த்துவிடுகிறேன்.
வாழ்க்கை எனும் அழகிய‌
மாணிக்கக்கல் என் மடியில்.
தூரப்போ! அழிந்து போ!
அவற்றின் முகத்தில்
காறி உமிழ்கிறது..அந்த நம்பிக்கை!
சட சடவென்று
ராட்சதத்தனமாய்
மகிழ்ச்சியின் உந்துதல்
ரெக்கைகளாய் என் மீது
இப்போது ஓட்டிக்கொன்டிருக்கிறன!

=================================================



வெள்ளி, 15 செப்டம்பர், 2017

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
================================ருத்ரா

ரொட்டி
============================

பிசைந்து தானே
செய்யப்படுகிறது என்று
பசியும்
வயிற்றைப்பிசைந்தது?
கிடைத்ததா
ரொட்டி?

இவர்கள்
========

பரந்து கெடுக உலகு இயற்றியான்
என்கிறான் வள்ளுவன்.
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்
என்கிறான் பாரதி.
இவர்கள் எல்லாம்
எரிக்கப்படவேண்டிய கம்யூனிஸ்டுகள்
என்கிறது "சனாதனம்"

பிரம்படி
========

ஒரு பிரம்பினால்
விரிந்து பரந்த இந்த‌
பிரபஞ்சம் என்ற முதுகிலேயே
அடி விழுந்ததாமே!
அதே போல்
அந்த "ஒரு வாய் பிட்டு"
ஏன் இந்த பசிக்கின்ற வயிறுகளில்
போய் விழவில்லை?

===============================






திருவல்லிக்கேணி கோயில் யானை.


திருவல்லிக்கேணி கோயில் யானை.
============================================ருத்ரா

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
.........................
கணபதி ராயன் அவன் இரு
காலைப்பிடித்திடுவோம்!
.......................

அன்பார்ந்த அந்த‌
பார்த்தசாரதி கோயில் ஆனையே!
உனக்கு
ஆயிரம் கோடி நமஸ்காரம்.

காற்சங்கிலி உன்னைப்பிணைத்துப்
போட்டு வதைத்த‌
ஆவேசமும் சீற்றமும் தான்
அந்த கோயில் வளாகத்தில்
உனக்கு"மதம்"பிடிக்க வைத்ததோ?

ஒரு புயல் மூச்சை
நிறுத்திவைக்க நீ நினைத்தது ஏன்?
அவன் கொடுத்த விளாம்பழம்
உன்னையும்
நீ கொடுத்த அந்த தும்பிக்கை தடவல்
அவனையும்
ஒரு அகண்ட பிரபஞ்சத்து
உயிர்ப்பசையைத்தானே
மகா கவிதைக்கொத்து ஆக்கியிருந்தது.

இந்த நல்லிணக்கம்
எப்படி அறுந்து போனது?
எங்கள் முண்டாசுக்கவிஞன்
ஆத்மீகமும் பாடியிருக்கிறான்
நாத்திகமும் பாடியிருக்கிறான்.
கடையத்து அக்கிரகாரத்தில்
அவன் வளர்த்த கழுதைக்குட்டியும்
இந்த திருவல்லிக்கேணிகோயில் யானையும்
அவனுக்கு ஒன்று தான்.
அவனைப்பொறுத்த வரையில்
அது
பசு பாசம் கவிதை.
அவன் "பதி" கவிதையே .
இந்த உயிர்கள் மூலம்
தன் எழுத்தின்  மின்சாரக்கயிற்றைக்கொண்டு
அல்லவா
அந்த "பதியை " கட்டிப்போட்டிருந்தான்.
மனித சாதிகளை விட
காக்கைக்குருவிகள் தான்
அவனுக்கு உயர்ந்த சாதி.
கடலும் மலையும் தான்
அவன் கூடும் கூட்டம்.
வேதத்தின்
சோமக்கள்ளை  காட்டிலும்
அதன் ஞானச்சாற்றை
ரசித்தவன் அல்லவா அவன்?
அதனால் தான்
அந்த சேரிச்செல்வர்களுக்கு
பூணூல் அணிவித்தான்.
இருட்டாய் இருந்த வேதம்
அப்போது தான் அவனுக்கு
வெளிச்சமாய் தெரிந்தது.
இப்போது இருந்தால்
அனிதாவை
பாரதத்தாய் என்று
பத்து பாடல் பாடியிருப்பான்.

ஓ! பாரதி!
விடுதலை விடுதலை விடுதலை
என்று
சாதிகளுக்கு எல்லாம்  விடுதலை  என
தீ முழக்கம் அல்லவா செய்தாய்!
குறைந்த ஆயுளில்
உன்னைக் கொள்ளையடித்து போன
அந்த "பார்த்த சாரதி" கிருஷ்ணனுக்கு
சமஸ்கிருதம் மட்டும் தான் தெரியுமா?
உன் "கண்ணன் பாட்டை" படிக்கும்
தமிழ் அவனிடம் இல்லாமல் போனதோ?
இப்போதும்
நினைவு தினம் என்று சிலர்
 "ஸ்ரார்த்தம்" செய்ய
எள்ளும் தண்ணீரும்
தர்ப்பைப்புல்லும் கொண்ட ஒரு
சடங்கு எனும் கிடங்குக்குள் தான்
தள்ளப்பார்க்கிறார்கள்.
எட்டயபுரத்து எரிமலைப்பூவே!
இந்த எருக்கம்பூக்களைபி பற்றி
எங்களுக்கு கவலைஇல்லை.
எழு ஞாயிறே!
எங்களுக்கு எல்லாக்கிழமைகளும் உன்
விழி ஞாயிறு தான்!

==============================================









ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

எங்கே? எங்கே?



எங்கே? எங்கே?
===============================================ருத்ரா

கடவுளைக்கண்டு பயப்படுபவர்கள்
கடவுளைக்கண்டு பயப்படாதவர்கள்
கடவுளைக்கண்டு பரவசப்படுபவர்கள்
கடவுளைக்கண்டு கல்லாய் கிடப்பவர்கள்
கடவுளைக்கண்டு கல்லில் நார் உரிப்பவர்கள்
கடவுளைக்கண்டு மணலைக் கயிறாய் திரிப்பவர்கள்
கடவுளைக்கண்டு சிந்திக்கத்தொடங்குபவர்கள்
கடவுளைக்கண்டு படிக்கத்தொடங்குபவர்கள்
கடவுளைக்கண்டு கடவுளை எங்கே என்று கேட்பவர்கள்.
கடவுளைக்கண்டு கடவுளை மறுப்பவர்கள்
கடவுளைக்கண்டு கடவுளை உடைப்பவர்கள்
கடவுளைக்கண்டு கடவுளில் பிழைப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கேள்விகள் நெய்பவர்கள்
கடவுளைக்கொண்டு முகமூடி தரிப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கடவுளைத்தாண்டுபவர்கள்
கடவுளைக்கொண்டு கர்ப்பம் தரிப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கடவுளைக்கொல்பவர்கள்
கடவுளைக்கொண்டு காசுகள் பார்ப்பவர்கள்
கடவுளைக்கொண்டு மனிதரைக்கொல்பவர்கள்
கடவுளைக்கொண்டு அரக்கர்கள் ஆனவர்கள்
கடவுளைக்கொண்டு கூச்சல்கள் இடுபவர்கள்
கடவுளைக்கொண்டு கல்லறை வடிப்பவர்கள்
கடவுளைக்கொண்டு கண்ணீர் விடுபவர்கள்
கடவுளைக்கொண்டு எழுதிக்குவிப்பவர்கள்
....................................................
..................................................................
தூவிய எழுத்துக்கள் கூவின! கூவின!
கடவுள் எங்கே? கடவுள் எங்கே?

=========================================================



சனி, 9 செப்டம்பர், 2017

நண்பனே! நண்பனே! நண்பனே!

நண்பனே! நண்பனே! நண்பனே!
===========================================ருத்ரா

பெண்ணியத்தின் உரிமைக்குரல் இது.
அது என்ன பெண்ணியம்?
பெருங்கடலில்
துளியைத்தேடினால்
அவளே தனி யொரு பெண்!
அவள் கடல் அலைகளின்
மூச்சாக நிற்கும்போது
ஓ! ஆண் தோழனே
உன் காதல் பீலிகளைக்கொண்டு
அவளை வருடிக்கொடுப்பதைக்காட்டிலும்
அவள் இதயச்சிமிழுக்குள்
உதிக்கும் ஓராயிரம் சூரியன்களுக்கு
முடிந்தால் 
நீயும் உன் சிந்தனைகீற்றுகளை
தழல் பூத்துக்கொடு!
பத்தாம் பசலியாய்
"தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" என‌
ஒரு ஈசிச்சேர் கூட்டுக்குள்
அடைந்து கொள்ளாதே.
வள்ளுவர் சொன்ன உயர்வு நவிற்சி அணியை
உன் சமுதாய முக மூடி ஆக்கிக்கொள்ளாதே.
உனக்கு பருப்பு சாம்பாரும்
கறிக்குழம்பும் அவள் சமைப்பது இருக்கட்டும்!
சமுதாய எரிமலைக்குழம்பைக்கூட‌
அவள் அநாயசமாய்
சமைக்கத்தொடங்கிவிட்ட்டாள்
என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறாய்?
உனக்கு அருகம்புல் மீசை 
வரும்போது தான்
அவளும் "சமைந்து" நின்றாள்.
ஆம்..
மூளியாய் கிடக்கும் இந்த‌
மண்ணுக்கு
விழியின் இமையுரிக்க‌
அவளும் சமைந்து நின்றாள்.
இந்த சமுதாயம் பக்குவமாக சமைக்கப்பட‌
ஒரு "பெண்ணிய சீற்றம்"
தேவைப்படுகிறது.
ஆண் நண்பனே
உன் ஆழ்மனத்து ஆதிக்க‌
வெண்கொற்றக்குடைகளை
ஒதுக்கிவைத்துவிட்டு
இந்தச்சீற்றத்தோடு சங்கமம் ஆகு!
பெண் என்பவள் வெறும்
கலிதொகை அல்ல.
புலித்தொகையும் தான்.
ஒரு விடியலின் வீர விளிம்பை
அவள் ஒரு கோலம் போட்டு
அந்த தெருவாசல் மட்டும் அல்ல‌
உலகத்தின் எல்லா இருட்டு மூலைகளுக்கும்
உயிர் வெளிச்சமாய் படர முடியும்.
பாலியல் உறவுகளை விட‌
பாலியல் நட்பே
நம் புதிய யுகத்தை படைத்துக்காட்டும்!
அறிவு நுட்பத்தின் ஆட்சியில்
பெண் எனும் ஆண்
ஆளப்பிறந்தவளாய் ஆகப்போகும்
ஒரு பரிணாமம்
உன் இமையோரத்தின்
வெகு அருகில்
நங்கூரம் இட்டுக்கொண்டிருக்கிறது 
பார்!
நண்பனே! நண்பனே! நண்பனே!

==========================================

அனிதா

அனிதா
======================================ருத்ரா

மருத்துவக்கனவை
தன் சிவப்பு அணுக்களில்
துடித்துக்கொண்டிருந்தவள்
துடிப்பு அடங்கிப்போனாளே.
கேவலம்
அந்த "போட்டித் தேர்வு கண்டு" அஞ்சியா
தூக்குக்கயிற்றைத் தேடினாள்?
அது பற்றி எதுவுமே தெரியாது
என்ற போதும்
அந்த "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது"
என்றல்லவா
அதையும் எழுதி
எண்பது மதிப்பெண்கள் பெற்றாள்.
ஆனால்
எதிரிகள் எறிந்த அம்பை மார்பில்
வாங்கிய போதும்
முதுகில் குத்தியவர்களின்
தந்திர வியூகத்தில்
தலை சாய்ந்து போனாள்
அந்த வீரமங்கை!

=====================================================

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

பேய் நிழல்

பேய் நிழல்
=======================================ருத்ரா

கணிபொறியை
காட்டினால் போதும்
உடனே "பட்டன்" தட்ட
நீ தயார்!
ஓ வாக்காளனே
உனக்குத்தெரியுமா?
"நீலத்திமிங்கில" விளையாட்டு தான்
உன் தேர்தல் என்று?
ஒவ்வொரு தடவையும்
நீ கொடியேற்றி கொடியேற்றி
கயிற்றை இழுக்கும்போது
அங்கே தொங்கிக்கொண்டிருப்பது
உன்   ஜனநாயகத்தின் பிணம் தான்
என்று
நீ அறிவாயா?
உன் மண்ணைப்பார்.
உன் மனிதர்களைப்பார்.
பணத்தின் பேய் நிழல் ஒன்று
கவிந்து கொண்டிருப்பதை பார்!
அரசு அலுவலகங்களில்
மனுக்களின் அடியில்
"மகாத்மா"வின்
பச்சைப்புன்னகைகளும் இணைக்கப்பட்டு
கண்ணுக்குத்தெரியாமல்
கொச்சைப்படுத்தப்படுகின்றனவே .
இன்னும்
டெண்டர்கள்  குத்தகைகள்
என்னும் துணிவிரிப்பில்
பிரசவம் ஆகும்
கட்டுமானங்கள் எல்லாம்
கடல் கொள்ளா கரன்சிகளாய்
எங்கோ ஒரு பொய்மைக்கஜானாவின்
வயிற்றுக்குள்
தின்னப்படுகின்றனவே.
மணல் குவாரி கல் குவாரி மற்றும்
பளிங்குக்கல்லின் அடுக்கு குவாரிகளிலும்
நாட்டின் வளங்களை எல்லாம்
விழுங்கும்
அசுரங்கள்
அசோக முத்திரைகளால்
அடை காக்கப்படுகின்றனவே !
அந்த பேய்க்கைகள்
உங்கள் வாக்கு கைகளுக்கு
பொன் விலங்கு மாட்டுகிற போது
அந்த பொன்னுக்கு மட்டும்
22 கேரட் இருக்கிறதா என்று
முன்னெச்சரிக்கை கொள்ளும் நீங்கள்
உங்கள் ஜனநாயகம்
"ஈயம் பித்தாளைக்கான பேரீச்சம்பழத்துக்குத் தான் "
பண்டமாற்றம் செய்யப்படுகிறது
என்பதை அறிவீர்களா?
இப்போதாவது விழித்துக்க்கொள்ளுங்கள்.
அப்புறம் விழித்துக்கொள்ள
உங்கள்
இமைகள் இருக்காது
விழிகள் இருக்காது.
இருள் பிழம்புக்குள்
ஆழ்ந்து கிடப்பீர்கள்.
சாதி மதங்கள் பாரமேற்றிய
சடங்குகளின் கிடங்குகளுக்குள்
வீழ்ந்து போகும் முன்
விழித்துக்கொள்ளுங்கள்.
ஆம்
விழித்துக்கொள்ளுங்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்.

============================================

வியாழன், 7 செப்டம்பர், 2017

விழிமின்!எழுமின்!

விழிமின்!எழுமின்!
========================================ருத்ரா

சமுதாயப் ப்ரக்ஞை
பத்திரிகை வரிகளில்
நெருப்பு ஆறாய் பாயும்போது
பாசிசத்தின் ரத்தவெறியும்
உரிமைக்குரல்களின் குரல்வளையை
நசுக்க ஓடிவரும்.
கடவுள் பாதையா?
கடப்பாரை பாதையா?
இங்கே அடித்து நொறுக்கப்படுவது
பளிங்கு கட்டிடமாய் சுடரும்
ஜனநாயகக் கோவில்கள் தான்.
பசுக்கள் என்றார்கள்.
இறைச்சி என்றார்கள்.
மானிட நேயத்தைக் கூறு போடும்
கொடு வாள் உயர்த்தி
கும்பல்கள் கொண்டு
பயமுறுத்தல் எனும்
பேய்நிழலை
அன்னை பாரத முகத்தில்
காறி உமிழ்ந்தார்கள்.
இந்து மதத்தை
குத்தகை எடுத்திருக்கிறோம் என்று
பிற மதத்தைக்
குத்திக்குதறுவதையே
அரசியல் அஜண்டா ஆக்குகிறார்கள்.
ஜனநாயகத்தின் சிற்பிகளே
களிமண்ணாய் நீங்கள்
இருந்தீர்கள் என்றால்
உங்களைக்கொண்டே
ஆயிரம் அடி உயரத்துக்கு
அனுமார் பொம்மை செய்து
வடைமாலை சாத்துவார்கள்.
அவர்கள் சொல்கிற‌
விவேகானந்தர் முழக்கத்தை
நாமும் சொல்கிறோம்
"விழிமின்!எழுமின்!"
இல்லையேல்
இங்கு மானிட நீதியின்
வாசனையெல்லாம்
மானிடத்தின் ஒளிமிக்க‌
பரிணாமங்கள் எல்லாம்
பூண்டற்றுப்போகும்!
ஆதலினால்
விழிமின்!எழுமின்!

========================================

"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"(2)


"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"(2)
==============================================ருத்ரா இ பரமசிவன்.
(பொழிப்புரையுடன்)


"பாலை பாடிய பெருங்கடுங்கோ" அகநானுற்றில் "பாலை"பற்றிய காட்சிகளை மிக நுண்ணிய அழகுடன் பாடியிருக்கிறார்.ஒரு பாடலில் (பாடல்  எண்  5)
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"என்று கொத்துக்கொத்தாய்  கண்ணாடி (கோலிக்குண்டு)போலக்  காய்த்திருக்கும்
அந்த அழகை அப்படியே படம்பிடித்திருக்கிறார்.

நான் கல்லிடைக்குறிச்சி தாமிர பரணி ஆற்றுக்கு குளிக்கச்செல்லுகையில்
வழியில் உள்ள திருவாவடுதுறை "ஆதீன"த்தோப்பில் உள்ள நெல்லி மரத்தின்
நெல்லிக்காய் கொத்துக்களைக்கண்டு கிறங்கிப்போய் நின்றிருக்கிறேன்.
"கோலி" விளையாடும் பருவம் அது.அந்த ஒவ்வொரு நெல்லிக்காயும் பளிங்கு
கோலிக்காய் போலத்தோன்றும். கடைகளில் கண்ணாடி சீசாவில் அழகு அழகு வண்ணங்களில் பளிங்குக்கோலிக்குண்டுகள் விற்பார்கள்.அதில்  ஆறேழு குண்டுகளை வாங்கி என் கால் சட்டைப்பைக்குள் பதுக்கிய பின் தான் நிம்மதி பெறுவேன்.


முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
 பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
 உதிர்வன படூஉம் ......................

"அந்த அழகிய பழங்காட்டின் பட்டுப்போன ஓமை மரங்களிடையே நெல்லி மரத்தின்  பளிங்கு போன்ற நெல்லிக்காய் கொத்துகள் அங்குள்ள உயர்ந்த பாறையில் சிறுவர்கள் விளையாடும் கழற்காய்கள் போல உதிர்ந்து கிடக்கும்" என்பதே அவ்வடிகளின் பொருள்.

ஆம் இதை  என்னைப்போன்ற சிறுவர்களுக்காகவே பாடியிருக்கிறார்.



அன்று அந்த அகநாநூற்றுப்பாடலில் "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"
வரிகளைப்பார்த்ததும் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" எனக்காகவே
அந்த வரியை மின்னலாய் பாய்ச்சியதாய் உணர்ந்தேன். அப்போது உடனே
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி," என்ற தலைப்பில் எழுதிய சங்கநடைச்செய்யுட்  கவிதையே இது. இதில் தலைவிக்கு அந்த பளிங்கத்துக் காய்கள் ஒவ்வொன்றிலும் தலைவனின் அன்புமுகம்  சுடர் விடுவதாக தோன்றுகிறது என்று தோழி சொல்லுகிறாள்.



பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
================================================ருத்ரா

வேழம் பிழிதர புடை பெயர்ந்து
நீள் குடுமிப்பெருங்கல் சிவணிய வீழ்ந்து
புல்லிய பாசிலை இன்  நீர் தடவ
சுரும்பும் மாந்தி மடி கொண்டாங்கு
அடுத்த வேழம் தூம்புக்கை நீட்டும்
சிறு கண் வியப்ப அதிர வியர்க்கும்
கான் மலி இருளிடை அவன் முகம் ஒளித்த
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
ஊழ் ஊழ் உகுக்கும் வால் நுதல் மழைக்கும்!
உன்னுள் ஒலிக்கும் மணி நா நடுங்கும்
அவன் அணித்தேர் ஆண்டு அசைஇ  வருமென
மென் பூஞ்சேக்கையும்   புண் ஆகியதோ
புரள் தரு புரள்  தரு நின் பெயர்ச் செயலால்.
நாகம் தந்த பாலிழை கலிங்கமும்
சுடு நிலை தாளா வெம்மையூட்டிய
நோவு நுடங்கி அறைபடு அறையில்
ஆயிரங்கண்  காட்டிய கிழி மை  வானென
ஆற்றாது கிடந்தாள் அளியள் ஆங்கே.

==========================================


பொழிப்புரை
==============================================ருத்ரா


தலைவன் பொருள்தேடி செல்லும் காட்டுவழியில் குத்து குத்தாய்
முளைத்திருக்கும் கரும்புகள் அருகில் உள்ள ஒரு நீண்ட திரண்ட பெருங்கல் ஒன்று இடம் பெயர்ந்து அவற்றின் மேல் விழுந்து பொருந்தி நசுக்கியதால் அருகில் உள்ள இலை தழைகளில் எல்லாம் இனிய நீர் இழைந்தோடியது.அதை வண்டுகள் அருந்தி மயங்கின.
அருகில் வந்த ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டி சுவைக்க முற்பட்டது.அந்த அடர்ந்த இருட்டு சூழ்ந்த காட்டில் அது தன் சிறுகண் கொண்டு வியந்து நோக்கி விதிர் விதிர்த்தது.பொருள் தேடிச்செல்லும் தலைவனை கற்பனையில் இக்காட்சிகளிடையே காணும் தலைவி அங்கே உள்ள ஒரு நெல்லிமரத்துக்கிளையில் பளிங்கு உருண்டைகள் போல் தோன்றும் அந்த கொத்து கொத்தான நெல்லிக்காய் ஒவ்வொன்றிலும் தலைவனின் சுடர் பூத்த முகத்தைக்கண்டாள்.அவளது நெற்றி முத்து முத்தாய் வியர்வைத்துளிகளை மழைபோல ஒவ்வொரு கணம் தோறும் உதிர்த்துப்பொழியும்.

தோழி இப்படி சொல்லிக்கொண்டே போகிறாள்.
மேலும் தலைவியிடம் கேட்கிறாள்.

"உன் உள்ளத்துள் உன் தலைவன் திரும்பி வருவது கேட்கிறதோ? தேரின் மணியின் நாவொலி நடுங்க இதோ வந்து விட்டான் என்று காதல் நோயால் நீ புரண்டு புரண்டு படுத்து மெல்லிய பூங்கட்டிலும் புண்ணானதோ?"

மேலும் அவள் நிலை கண்டு துயரத்துடன் கூறுகிறாள்.

"கப்பலில் தருவிக்கப்பட்ட பால்போன்ற  அவள் மெல்லிழைப்பட்டாடையும்  காதல் வெப்பம் தாங்காது துவளுகின்றதோ? அத்துணி பாறையில் அறைந்து துவைக்கப்படும்போது கந்தல் கந்தலாய் எப்படி ஆயிரம் கண் கொண்டு கிழிந்த கரும் வானத்தைப்போல கிடக்குமோ அது போல‌அவள் நைந்து கிடந்தாள்" 

புதன், 6 செப்டம்பர், 2017

கவுரி லங்கேஷ்

கவுரி லங்கேஷ்
=============================ருத்ரா

சுதந்திரம்
இனி
உன் மரணத்தைக்கொண்டு தான்
எதிர்வரும்
மூளியான அந்த மைல் கற்களில்
நம்பர்கள் இட வேண்டும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"

"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"
==============================================ருத்ரா இ பரமசிவன்.



"பாலை பாடிய பெருங்கடுங்கோ" அகநானுற்றில் "பாலை"பற்றிய காட்சிகளை மிக நுண்ணிய அழகுடன் பாடியிருக்கிறார்.ஒரு பாடலில் (பாடல்  எண்  5)
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"என்று கொத்துக்கொத்தாய்  கண்ணாடி (கோலிக்குண்டு)போலக்  காய்த்திருக்கும்
அந்த அழகை அப்படியே படம்பிடித்திருக்கிறார்.

நான் கல்லிடைக்குறிச்சி தாமிர பரணி ஆற்றுக்கு குளிக்கச்செல்லுகையில்
வழியில் உள்ள திருவாவடுதுறை "ஆதீன"த்தோப்பில் உள்ள நெல்லி மரத்தின்
நெல்லிக்காய் கொத்துக்களைக்கண்டு கிறங்கிப்போய் நின்றிருக்கிறேன்.
"கோலி" விளையாடும் பருவம் அது.அந்த ஒவ்வொரு நெல்லிக்காயும் பளிங்கு
கோலிக்காய் போலத்தோன்றும். கடைகளில் கண்ணாடி சீசாவில் அழகு அழகு வண்ணங்களில் பளிங்குக்கோலிக்குண்டுகள் விற்பார்கள்.அதில்  ஆறேழு குண்டுகளை வாங்கி என் கால் சட்டைப்பைக்குள் பதுக்கிய பின் தான் நிம்மதி பெறுவேன்.


முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
 பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
 உதிர்வன படூஉம் ......................

"அந்த அழகிய பழங்காட்டின் பட்டுப்போன ஓமை மரங்களிடையே நெல்லி மரத்தின்  பளிங்கு போன்ற நெல்லிக்காய் கொத்துகள் அங்குள்ள உயர்ந்த பாறையில் சிறுவர்கள் விளையாடும் கழற்காய்கள் போல உதிர்ந்து கிடக்கும்" என்பதே அவ்வடிகளின் பொருள்.

ஆம் இதை  என்னைப்போன்ற சிறுவர்களுக்காகவே பாடியிருக்கிறார்.



அன்று அந்த அகநாநூற்றுப்பாடலில் "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"
வரிகளைப்பார்த்ததும் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" எனக்காகவே
அந்த வரியை மின்னலாய் பாய்ச்சியதாய் உணர்ந்தேன். அப்போது உடனே
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி," என்ற தலைப்பில் எழுதிய சங்கநடைச்செய்யுட்  கவிதையே இது. இதில் தலைவிக்கு அந்த பளிங்கத்துக் காய்கள் ஒவ்வொன்றிலும் தலைவனின் அன்புமுகம்  சுடர் விடுவதாக தோன்றுகிறது என்று தோழி சொல்லுகிறாள்.



பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
================================================ருத்ரா

வேழம் பிழிதர புடை பெயர்ந்து
நீள் குடுமிப்பெருங்கல் சிவணிய வீழ்ந்து
புல்லிய பாசிலை இன்  நீர் தடவ
சுரும்பும் மாந்தி மடி கொண்டாங்கு
அடுத்த வேழம் தூம்புக்கை நீட்டும்
சிறு கண் வியப்ப அதிர வியர்க்கும்
கான் மலி இருளிடை அவன் முகம் ஒளித்த
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
ஊழ் ஊழ் உகுக்கும் வால் நுதல் மழைக்கும்!
உன்னுள் ஒலிக்கும் மணி நா நடுங்கும்
அவன் அணித்தேர் ஆண்டு அசைஇ  வருமென
மென் பூஞ்செக்கையும் புண் ஆகியதோ
புரள் தரு புரள்  தரு நின் பெயர்ச் செயலால்.
நாகம் தந்த பாலிழை கலிங்கமும்
சுடு நிலை தாளா வெம்மையூட்டிய
நோவு நுடங்கி அறைபடு அறையில்
ஆயிரங்கண்  காட்டிய கிழி மை  வானென
ஆற்றாது கிடந்தாள் அளியள் ஆங்கே.

=================================================

 (விளக்கவுரை தொடரும்)















நகைச்சுவை (1)

நகைச்சுவை (1)
==============================================ருத்ரா


"ஏண்டா! அவங்க  எல்லாரும் பொதுக்குழுவுக்குத்தான போறாங்க!
ஒவ்வொருத்தரும் கைய்ல ஏண்டா "தொடப்பம்" கொண்டுகிட்டு
போறாங்க ?"

"அம்மாண்ணே..அவங்க  எல்லாரும் பொதுக்குழுவை "கூட்டத்தான்"
போறாங்க. நாள் பட்ட தூசி குப்பையெல்லாம் மொதல்ல
கூட்டத்தான் போறாங்க..

==================================================

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வெறி


வெறி
===================================ருத்ரா

கும்பிட மறுக்கும்
கைகளை முறித்துப்போடு.
குனிய மறுக்கும்
தலைகளை வெட்டியெறி .
ஒப்புக்கொள்ள மறுக்கும்
நெஞ்சங்களை
சல்லடையாக்கு.
மனித நியாயங்களை
சொல்லும்
அரசியல் அத்தியாயங்களை
ரத்த வெள்ளத்தில்
மூழ்கடித்து விடு .
உன்னையே நீ எண்ணிப்பார்
என்று
எவனோ ஒருவன்
ஒரு சிறு கூழாங்கல்லை
அந்த தடாகத்தில் எறிந்தான்.
அதைப்பார்த்து
கரையில் உட்கார்ந்திருந்த
கடவுள்
இன்னும் கல்லை எறிந்து கொண்டே தான்
இருக்கிறார்.
அவரும் ஒரு கடவுளைத்தேடி!

சிந்திக்கும்
அந்தக்கடவுள்களின்
மூளைச் செதில்களையும்
வெறியோடு அறுத்து எறி.
இப்போது பாருங்கள்
எங்கும்
கும்பமேளாக்கள்.
கும்பாபிஷேகங்கள்.
ஏன் ?எப்படி? எதற்கு ?
என்ற கேள்விகளின்
சுடுகாட்டுச்சாம்பல் மேடுகள்.
ஆம்!
ரத்தம் சொட்ட சொட்ட
நிறுத்தப்பட்டிருக்கும்
அந்த அரிவாளுக்குத் தான்
நம் பஜனை கீதங்கள்!

========================================

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
=============================================ருத்ரா இ பரமசிவன்

இந்த
நாட்டின் முதுகெலும்பு
நீங்கள் டிசைன் செய்தது.
இளைஞர்களின் மூளை
நீங்கள் பதியம் இட்டது.
நீங்க‌ள்
அக‌ர‌ முத‌ல
ஒலித்துக்காட்டிய‌பின்
எங்க‌ள் அறிவு
நீள‌மாயும் அக‌ல‌மாயும்
ஆழ‌மாயும்
பாய்ந்து சென்ற‌து.
உங்க‌ள் கையில்
சாக்பீசும் பிர‌ம்பும்
இருந்தாலும் கூட
அதில்
ச‌ங்கு ச‌க்க‌ர‌ம்
ஏந்திய‌வ‌ன் தான்
எங்க‌ளுக்கு காட்சி த‌ந்தான்.
குரு என்னும்
சுட‌ரேந்தியாய்
நீங்க‌ள்
வெளிச்சம் த‌ந்த‌தால் தான்
உங்க‌ளுக்கு பின்னால் இருப்ப‌வ‌னின்
முக‌ம் தெரிந்த‌து.
மாதா பிதா குரு..
அப்புற‌ம் தானே தெய்வ‌ம்!
வெளிச்சம்
எல்லோருக்கும்
கிடைத்ததால் தானே
எங்க‌ளுக்கு
இந்த‌ வ‌ர்ண‌ங்க‌ளும் புரிந்த‌ன‌.
இந்த‌ இருட்டும் புரிந்த‌து.
இருப்பினும்
ஒரு கேள்வி.
ஒரு ச‌மன்பாடு ஒன்றை எழுதி
தீர்வு எழுதி கொண்டுவ‌ர‌ச்சொன்ன‌
அந்த‌ ஹோம் ஓர்க்
இன்னும் ஹோம் ஒர்க் ஆக‌வே
இருக்கிற‌து!
மக்கள் இஸ் ஈக்குவல் டு ஜனநாயம்
என்பதே அந்த சமன்பாடு.
பொதுவான‌ ம‌க்க‌ள் ஒரு சுநாமி.
அதில்
த‌னியான‌ “ஒரு”ம‌க்க‌ள் யார்?
ஏனெனில்
நாங்க‌ள் வெளிச்ச‌ம் என்று நினைத்து
அறுப‌த்தைந்து ஆண்டுக‌ளாய்
ஜனநாயகத்தை விதைக்கிறோம்.
ம‌க‌சூல் என்று பெறுவ‌தோ
பேரிருள் தான்.
நீங்க‌ள் எழுதிக்கொண்டு வ‌ர‌ச்சொன்ன‌
தீர்வு
உங்க‌ளிட‌மாவ‌து இருக்கிற‌தா?
தெரிய‌வில்லை.
ஆச்ச‌ரிய‌மாக இருக்கிற‌து.
இந்த‌ ஆச்சரிய‌ம் தான்
“ஆச்சார்ய‌ தேவோ ப‌வா”வா?

===============================================

09 செப்டம்பர் 2012 ல் எழுதியது.

சனி, 2 செப்டம்பர், 2017

கௌடில்யர்கள்.


கௌடில்யர்கள்.
___________________________________________

"வெள்ளத்தனைய மலர் நீட்டம்"
அல்ல இது.
கள்ள உள்ளத்தின் நீட்டமே
இந்த "நீட்டின்" நீட்டம்.
இது வர்ணாசிரமத்தின் நீட்டம்.
அனிதாக்கள் மூழ்கட்டும் என‌
கௌடில்யர்கள் காவி எழுத்தில்
எழுதிய அர்த்தசாஸ்திரமே இது.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________ருத்ரா

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

நீட்

நீட்
=================================ருத்ரா

கீழ்ச்சாதிக்காரன்
தானே கற்ற வில்வித்தைக்கும்
குருதட்சிணையாக‌
கட்டைவிரல் கேட்ட‌
துரோணாச்சாரியார்கள்
வாழ்ந்த பூமி அல்லவா?
அனிதாக்கள்
நசுங்கிக்கூழாக
பாரத "மாதா"
நர்த்தனம் ஆடினாள் !

-----------------------------------------------------------------

கமலின் கோட்டை

கமலின் கோட்டை
===================================செங்கீரன்

எங்கிருந்து வேண்டுமாலும்
ஆரம்பிக்கலாம் என்றார்.
ஓட்டுகளைக் கொண்டு
கோட்டை கட்டுபவர்களே
நீங்கள்
வேட்டையாடப்படும்
எலிகள் என்பதை
உணருங்கள் என்று
அவருக்கே உரிய நடையில்
சொற்களைக்கொண்டு
அபிநயித்தார் கமல்.
ஆனால்
அதற்கு நண்டு நடனம்
ஆடினார் தமிழிசை அவர்கள்.
தன் சொற்கொடுக்குகளால்
அவரை தாக்கினார்
காயம் பட்டதோ இவர் தான்.
கமல் எனும்
ஒரு நடிகர்
அரசியலுக்கு வருவதில்
இந்த தேசப்படமே
கிழிந்து போனதாய்
தொண்டை கிழிய‌
அறிக்கை விட்டார்.
சூப்பர்ஸ்டார்
அரசியல் பயணம் துவக்குவதாய்
தாரை தப்பட்டைகள்
முழங்கிய போது
உள்ளுக்குள் இருந்து
சுருதி கூட்டுவது
அமித்ஷா என்று
இவர் நினைத்துக்கொண்டதால்
இந்த அளவு
சொற்களைக் கொண்டு
நாட்டியம் ஆடியதில்லை.
அக மகிழ்ந்து கொண்டார்
அவரது ஆத்மீகத்தில்
இந்துத்வா வை
செருகிக்கொள்ளலாம் என்று!
அவரது
"ஆண்டவன் கட்டளை " என்ற
ஃ ப்ரேஸுக்குள்
தங்கள் பாபாக்களை
பரிமாறிக்கொள்ளலாம் என்று!
தமிழிசை அவர்களே !
உங்கள் அழகான தமிழ்ப்பெயர்
நாளை
"மிலேச்சிகா"
என்று பரிணாமம் அடைந்து விடலாம்.
ஏனெனில் இவர்களுக்கு
சமஸ்கிருதம் தவிர
மற்ற மொழியை பேசுபவர்கள்
மிலேச்சர்கள் அல்லவா?
கமலின் மனக்கோட்டை என்றும்
அவர் சினிமாவை கோட்டை விட்டவர் என்றும்
கோபம் கொப்பளிப்பதில்
உங்கள் சிந்தனையின்
வெற்றிடத்தை தான் காட்டிக்கொள்ளுகிறீர்கள்.

கடந்து உள் நோக்கு !
அது அறிவின் எல்லைகளைஎல்லாம்
கடந்து விரிந்து பரவும்.
இந்த பொருள் பொதிந்த
"கடவுள்" எனும் தமிழன் சொல்மீது
கல்லையும் சிலையையும்
கொண்டு நசுக்கும்
ஆரியத்தை அப்புறப்படுத்த
வந்ததே திராவிடம்.
கடல் அலைகள் எனும்
திரைகளையெல்லாம் கடந்து
உலகம் வென்ற
 "திரைவிடன்" எனும் "திராவிடனே "
இந்தத் தமிழன்.
திராவிடம் இல்லாத இந்தியா என்பது
வறட்டு சித்தாந்த மலடர்களின்
பொய்மைக்கருத்தே அன்றி வேறல்ல.

================================================