சனி, 13 ஜூலை, 2024

புழுக்கம்

 புழுக்கம்

_________________________________________

கல்லாடன்



வெயில் புழுக்கம் தாங்கவில்லை.

இது ஒரு குளிரான சொற்றொடர்.

எப்படி?

வேர்வை சொதப்பும் 

உடம்புக்குள் குளிர்பூந்தீவுகள்

எப்படி முளைத்தன என்று

வியக்கின்றேன் 

வியர்க்கின்றேன்.

அப்படித்தான் புழுக்கம் தாங்கவில்லை

என்று 

அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

அதற்குள்ளும்

எப்படி ஒரு அண்டார்ட்டிகா

பனிச்சிப்பம் ஓங்கி உயர்ந்து 

நின்று கொண்டிருக்கிறது.

எப்போதும் நல்லதே நினை

என்று

எப்போதும் ஒரு கிளி சொல்லிக்கொண்டே

இருக்கிறது.

ஆமாம்

பகலில் வரும் குளிர்நிலவாய்

என் கனவுச்சாளரங்களை

கள்ளத்தனமாக திறந்து வைக்கிறாய்.

அப்போது

அந்த சூரியப்பழத்துண்டுகள் கூட‌

பனிக்கட்டியிடையிடையே

படுத்து எழுந்து வரும்

தர்பூஸ் துண்டுகள் எனக்கு.

மடநெஞ்சே!

பகவானுக்கு ஜொள் விட்டு 

பழகிப்போன உனக்கு

இப்படித்தான் ஜில்லுன்னு

ஒரு காத்து அடிக்கிறதே என்று

காத்துக்கொண்டிருப்பாய்.

மனத்தின் நெளிப்புகள்

ஏதோ ஒரு மூலையில் 

எறும்பு மொய்த்துக்கொண்டிருக்கும்

அந்த இனிப்பை நோக்கியே

வாழ்வின் நீள நீள வினாடிகள் எனும்

சாரைப்பாம்பாய் 

ஊர்ந்து கொண்டிருக்கிறது.

________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக