வெள்ளி, 5 ஜூலை, 2024

வரலாறு

 

வரலாறு
____________________________________________


வறட்டுத்தனமானதாக‌
வரலாறு
உங்களுக்கு புளித்துப்போகலாம்.
மண்ணின் உள் நரம்புகளின்
மின்னோட்டங்கள்
புதைந்து போன நிகழ்வுகளே
அங்கு சொல்லப்பட்டிருக்கலாம்.
அரசர்களின் வாளும் கொடுவாள் மீசையும்
வெண்கொற்றக்குடையும்
அவன் நாட்டு மக்களை
வெறும் "சோற்றுப்பிண்டங்களாக்கி"
போர் எனும் கசாப்பு வெறிக்கு
தீனி போட
நாட்டுக்குள்ளே அவர்களை
கொடும் சட்டங்களால்
கட்டிப்போட்டு வைத்திருக்கலாம்.
கவிஞர்களும் எழுத்தாளர்களும் கூட‌
அவர்களின் கிரீடங்களை
மொய்த்துக்கொண்டிருக்கும்
ஈக்களாகவே இருக்கலாம்.
நாடு பிடிக்கும் ஆசையின்
கவுச்சி மட்டுமே
அவன் மகுடமாக இருப்பதால்
வரலாற்று எழுத்துக்களில் எல்லாம்
அந்த மசாலாவே சப்பு கொட்டப்படுகின்றன.
அறியாமையின் இமைகள்
இரும்பாய் கனத்து பூட்டிக்கிடப்பதால்
மனிதத்தின் வெளிச்சம்
இருள் பிரித்து செல்ல இயலாமல்
இன்னும்
அந்த கணிலிப்பெட்டிக்குள் தான்
உறைந்து போய் கிடக்கின்றன.
கணினி என்றால்
அறிவின் சிகரம் அல்லவா.
முட்டாள்தனம் போதையான போது
அறிவு கூட இந்த‌
நாய்ச்சங்கிலிகளில் தான்.
மனிதா!
என்றைக்கு
உடைத்து நொறுக்கிக்கொண்டு வந்து
உன் முகம் காட்டுவாய்?
__________________________________________________________
செங்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக