வியாழன், 31 ஜனவரி, 2019

"ம்"

"ம்"
===========================================ருத்ரா

இந்த விரிந்த வானத்தில்
"ம்" என்று
உன் ஒற்றைச்சிறகை
உதிர விட்டாய்.
அதற்குள்
என் ஆனந்தக்கடல்கள்
அத்தனையும் அலையெழுப்பின.
உன் முகமே எல்லா வானத்தையும்
விரவி நின்று
வித்தை காட்டியது.
முகம் என்பதின்
"ம்"ன்
முற்றுப்புள்ளியில்
முடிவே இன்றி முற்றாக்கனவுகள்
ஆயிரம் சித்திரங்கள் காட்டுகின்றன.

====================================================









புதன், 30 ஜனவரி, 2019

வர்ணப்புகை மூட்டம்.

வர்ணப்புகை மூட்டம்.
===================================================ருத்ரா

முயற்சிகளையெல்லாம்
முதலில் வில்லாக‌
வளைத்து விடு.
ஆம்
கனவுகளைக்கொண்டு
வண்ணங்களைக்கொண்டு
வான வில்லாக‌
வளைத்து விடு.
அதன் பின்
உன் அகச்சுரப்பிகளின்
அசுர விரல்கள்
காதலை மலர்க்கணையாக்கி
எய்வதற்கு அங்கே வந்து விடும்.
ஒரு போதையை வைத்து
ஒரு போதையை நோக்கி
எய்து விளையாடும் ஆட்டம் அல்ல‌
வாழ்க்கை!

சூரியன் கொடுத்த ஒளிக்கயிறு போல்
வில் வளைக்க‌
இங்கு
உன் அவநம்பிக்கை
மலை இடுக்குகளிடையே
பளிச்சிடும்
உன் புது நம்பிக்கையின்
வெளிச்சம்
முதலில் கனவாக வரும்.
அதன் பின்
செயல் ஆற்றலின் கனபரிமாணம்
ஒரு வெற்றியை உன் முன்
கை நீட்டும்.
நுரைக்கோபுரங்களில் ஏறி
நொறுங்கி விடாதே.
தோல்விகள் புடை சூழ்ந்தாலும்
வெற்றிக்கோட்டை
உன் காலடிகள் தொடும்.
வாழ்க்கை
வெறுமையின் குவளை அல்ல.
உன் உள்ளப்பூக்களை
எழுச்சியுடன் அதில் செருகி வை.
கவலைகளும் அச்சங்களும்
அனக்கொண்டாவாய் உன் முன்
வாய் பிளக்கும்.
அவற்றையும் பிளந்து எறிவாய்.
உன் உள்ளச்சீற்றமே
உன் பிரம்மாஸ்திரம்.
உனக்கு எதிரிகள் இல்லை.
சமுதாய முரண்களின்
கண்ணுக்குத் தெரியாத‌
கவர்ச்சிக்கூடுகள் உன்னை
சிறையாக்கி
ஒரு புழு மண்டலத்துள்
அடைத்து வைக்கும்.
உதைத்து எழு.
உன்னுள் சிறகு முளைத்து
இந்த விண்ணையும்
நீ அதிர வைப்பாய்.
விழித்தெழு!
சிலிர்த்தெழு!
அறியாமையின்
இந்த வர்ணப்புகை மூட்டங்கள்
தொலைந்து போகட்டும்.

==============================================





செவ்வாய், 29 ஜனவரி, 2019

அஜித்தின் முகமூடி

அஜித்தின் முகமூடி
=======================================ருத்ரா

அஜித்
நல்லவர் வல்லவர்
பால்முகத்தோடு
வெள்ளைச்சிரிப்பை மட்டுமே
ஏந்தியிருப்பவர்.
நடிப்பில் புயல் போல வீசி
தனக்கொரு முத்திரை வைத்திருப்பவர்.
திராவிடம் என்றாலே
அது ஏதோ திராவகம்.
அதன் நெடி நமக்கு வெடி
என்று
ஒதுங்க நினைப்பவர்களில்
அவரும் ஒருவர்.
கார் நாடு (மழை நாடு)
எனும் கர்நாடகா
திராவிடத்தின் உந்துவிசைகளின்
ஊற்று எனும் போது
அவருக்கு ஏன் இது அலர்ஜி ஆனது?
அவர் தனிப்பட்ட‌
சட்டைப்பாக்கெட்டில்
என்ன வேண்டுமானாலும்
வைத்திருப்பார்.
அதற்கு அருகே துடிக்கும்
இதயம்
ஏதாவது "மாட்லாடு" என்று
பாடிக்கொண்டிருக்கும்.
ஆனால் தமிழ் நாட்டு
மக்களின் கலை ஆர்வம்
எனும் வெள்ளத்தில் தான்
அவர் மிதந்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும்
தமிழ் நாட்டு வெள்ளங்களோ புயல்களோ
அவரை ஒரு அங்குலம் கூட‌
அசைக்க வில்லையே.
அல்லது
விளம்பரங்கள் ஏதேனும் இன்றி
மானிட நேயத்தால் உந்தப்பட்டு
சில நற்பணிகளை செய்திருக்கலாம்.
அவர் ரசிக மன்றங்கள் கூட‌
அந்த நற்பணிகளை ஆற்றியிருக்கலாம்.
அவர் சொந்த முகம் என்ன முகம்
என்று நாம் தெரிந்து கொண்டதே இல்லை.
மேடைத்தோற்றங்கள்
அவர்க்கு பிடிக்கவில்லை என்றால்
அன்று கலைஞரிடம்
தனிப்பட்ட முறையில் பகிர்ந்திருக்கலாம்.
அந்த மேடையில்
அந்த திருஷ்டி பூசணிக்காயை
உடைத்து
அவர்
"உலகத்தோடு ஒட்ட ஒழுகும்"
இயல்பு கற்றவர் அல்ல என்று
காட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.
நமக்குத்ந்தெரிகிறது
அவர் மாட்டியிருப்பது
வெறும் வெள்ளை முகமூடி என்று.
பதவி நாற்காலியின்
ம்யூசிகல் சேர் விளையாட்டுக்கு
அவர் அழைக்கப்படுவதில்
பயன் ஒன்றம் இல்லை.
அவர் ஒரு பந்தயக்கார் குதிரை.
அரசியல் மியாவ் களின் பூனை அல்ல!

=============================================================







திங்கள், 28 ஜனவரி, 2019

"தமிழுக்கும் அமுதென்று பேர்"

"தமிழுக்கும் அமுதென்று பேர்"
=================================================ருத்ரா

முதல் சொல் தமிழ்
அடுத்த சொல் தமிழா?
அமுது என்றால்
அம்ருத்யு எனும் அமிர்தம்
என்ற வடசொல் தானே!
அப்படியென்றால்
தமிழுக்கும் வடமொழி தான்
இப்படி இங்கு வந்து
பேர் வைக்க வேண்டுமா?

மரம் என்ற சொல்லில் இருந்து
அதன் பகுதியை பிரித்தால் அது மர.
மர என்றால் உணர்வற்றுப்போ
என்று பொருள்.
செத்துப்போதல் என்பது இன்னொரு சொல்.
இந்த மர மரணம் ஆகி
ம்ருத் ஆனது வேற்று மொழியில்.
அதன் எதிர்றையே அம்ருத்
அது அமிர்தம் ஆகி அமுதம் ஆனது.
பார்த்தீர்களா நம் தமிழ்மொழியே
அயல் மொழியை வளர்த்தபின்
மீண்டும் நம்மிடையே
அயல் மொழி போல் மயக்கியிருக்கிறது.
இதைப்போல்
வடமொழியை செதில் செதில் ஆகப்
பிரித்தால்
அது நம் தமிழே என்பது புரியும்.
அதையும் தாண்டி தமிழ் போல‌
ஒலிக்காத ஒலியெல்லாம்
தமிழ் "திரைகடலோடி"க்கொண்டு வந்த
திரைவியம் அதாவது திரவியம்.
அந்த ஒலித்தொகுப்பு
எழுத்து வடிவம் பெறாமல்
தமிழ்ச்சொல்லான "ஓதம்"(அலை ஓசை)
என்றே வழங்கப்பட்டு
அது "வேதம்" ஆனது
இந்த திரைவிடமே நம் இன்பத்திருவிடம்.


தமிழர்களே
இது போன்ற மயக்க வெளிகள்
நம் தமிழ்க்களத்தில்
நிறைய உண்டு.
மொழிகள் ஒன்றுக்கொன்று
கொடுத்து வாங்கிக்கொள்ளும் தன்மை
உலகியலில் ஒரு மொழியியல்
தன்மை தான்.
ஆனால் தமிழ் தன் சொற்களை
மற்ற மொழியிலிருந்து
எடுத்ததை விட‌
மற்ற மொழிக்கு கொடுத்ததே
அதிகம்.
மேலும் தமிழ் மொழியில்
எடுத்ததற்கெல்லாம்
வடமொழிச்சார்பு உள்ள சொற்களில் தான்
நாம் இடறி விழவேண்டியிருக்கிறது.
அதைத்தவிர்க்க‌
நாம் சங்கத் தமிழ்ச்சொற்களையெல்லாம்
தூசி துடைத்து நம் வழக்கத்தில்
மிதக்க விடவேண்டும்.
அதற்கு அரசும் மக்களும்
தமிழ் உணர்வு மிக்கவர்களாக‌
இருக்க வேண்டும்.
அப்படி வழக்கப்படுத்தும்போது
அந்த தமிழே
மிகவும் கடமுட என்று
நமக்கு ஒரு அயல் மொழிபோல்
ஆகி விடுகிறது.
அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்
தமிழர்களே
இதை தமிழ்வெறி என்று
தனிமைப்படுத்தி விடுகிறார்கள்.

ஒரு வரலாற்று உண்மை
நமக்கு அடியில் புதைந்து கிடக்கிறது.
"கல் தோன்றி மண் தோன்றா
காலத்தேயும் முன் தோன்றிய"
அந்த தொன்மையை
நான் குறிப்பிட வில்லை.

ஆரியர்களும் திராவிடர்களும்
ஒரே தமிழ்ப்பழங்குடியிலிருந்து
கிளைத்து வந்தவர்களாய் இருப்பார்களோ
என்பது
என் கருத்து..ஆம் கருத்து தான்.
இது நிறுவப்பட
ஒரு ஆழமான அகலமான ஆராய்ச்சி
தேவைப்படுகிறது.

வேறு ஒன்றுமில்லை.
தமிழை விட மிகச்சிறந்த தமிழர்கள்
ஓர் இனமாகவும்
தமிழர்கள் ஒரு இனமாகவும்
இருந்திருக்கலாம் அல்லவா.
ஆரிய திராவிட என்பது
ஆங்கிலேய அறிவினால் ஏற்பட்ட‌
சொற்றொடர்கள் என்கிறார்கள்.

ஆனால் என்கருத்தின் படி
"ஆர்" "திரை" என்ற‌
இரு சொற்களின் ஆழமும் நுண்மையும்
நம் இந்தியாவின் முதன்மை மொழி
தமிழே தான் என்பதை
சான்று பகரும்.
இது இந்தியா அல்ல.
இது சிந்தியா.
ஆம் சிந்துவெளித் தமிழர்களின்
நாடு தான் இந்தியா.


இது எப்படி இருக்கு
என்று கேட்டு
உங்களுக்கு சிரிக்க தோன்றுகிறதா?
சிரித்துக்கொண்டிருங்கள்.
நம் சிந்தனையை தொடர்வோம்.

(தொடர்வோம்)

===================================================


வெற்றி மீது வெற்றி வந்து...

வெற்றி மீது வெற்றி வந்து...
=============================================ருத்ரா

வாழ்க்கையில்
வெற்றி தேடுவது
ஒரு படத்துக்குள் சிறிதாய்
இன்னொரு
படம் பார்ப்பது போன்றது.
வெற்றியே அடையாமல்
வாழ்கையின் விளிம்பில்
நிற்கும் போது
கீழே
ஒரு உயரத்தைப் பார்க்கிறான்.
அட!
இத்தனை படிகளை
நாம் எப்படி ஏறினோம்
என்று
முதலில் வியக்கிறான்.
அப்புறம்
அச்சம் கொள்கிறான்.
அப்புறமும்
உடம்பெல்லாம்
அவன் வியர்த்துப்போகிறான்.
அவன் நினைத்திருக்கும்
வெற்றி அவனுக்கு கிடைக்கவில்லை.
வெற்றியே இல்லாமல்
வாழ்க்கையின் உச்சிக்கே வந்துவிட்டோமே!
அவனுக்கு இப்போது தான்
புரிகிறது
வெற்றியே இல்லாமல்
இந்த முழுநீள வாழ்க்கையை
வாழ்ந்து முடித்த
எல்லைக்கு வந்துவிட்டோமே!
வெற்றியை சுவைக்காமலேயே
வாழ்க்கையை சுவைப்பது
எத்தனை பெரிய வெற்றி?
வெற்றி என்றும் தோல்வி என்றும்
ஏமாற்று வித்தைகள் காட்டி
வாழ்க்கையின் சிகரத்துக்கே
இழுத்து வந்து விட்ட
சொல்லின் மயக்கம்
அவனுக்கு நன்றாக புரியவைத்துவிட்டது
ஒரு வெற்றியின் இலக்கணத்தை.
அவன்
அதோ அதை உடைத்து
சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறான்.
எதை?
ஏமாற்றம் எனும்
வெற்றியின் அந்த‌
இன்னொரு சொல்லை!

===============================================================

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

சோம்பல் முறிப்பு

சோம்பல் முறிப்பு
===============================================ருத்ரா

கைகளை உயர்த்தி
நெட்டி முறித்துக்கொண்டேன்.
என் சோம்பேறித்தனத்தை
என் உடல் மொழி
மொழி பெயர்த்துச்சொன்னது.
என்னத்தை செய்வது?
கொஞ்சம் படித்தேன்.
அந்த வரிகள் தையல்மிஷின்
ஊசி மாதிரி
சொற்களை
தைத்துக்கொண்டே போனது.
அதன் வழியே சென்று
ஒரு காதலனும் காதலியும்
கற்றைப்புல் மேட்டில் உட்கார்ந்து
வானத்து ஒற்றையான அந்த பருத்த‌
நட்சத்திரத்தையே லுக் விட்டு
ஏதேதோ உரையாடியதன்
வார்த்தை உராய்வுகளில்
நானும் சிக்கி ரத்த சிராய்ப்புடன்
போதும்
என்று புத்தகம் மூடினேன்.
டிவியில்
சீரியல் என்ற பெயரில்
அவியல் காட்சிகள்
தோன்றி தோன்றி போய்க்கொண்டிருந்தன.
ஒரு ஆட்டோ டாணா டாணாவாய்
பல தெருக்கள் வழியே
பச்சைமரங்களின் நிழல்கள்
அந்த ஆட்டோவின் கண்ணாடிகளில்
பிம்பங்களை
எச்சம் இட்டுக்கொண்டே
சென்று கொண்டிருந்தது.
அந்தக்காட்சிக்கு மையமும் இல்லை
விளிம்புகளும் இல்லை.
அடுத்த விளம்பரத்தை தழுவிக்கொள்ள‌
தடவி தடவி நகர்ந்து கொண்டிருந்தது.

டிவியை கிளிக்கிவிட்டு
சமாதி கட்டியதில்
அந்த மௌனம் கிடைத்தது.
அந்த துல்லியத்தில்
பல்லியின் வலிப்பு சத்தம் கூட‌
காது மடல்களை நிமிண்டியது.

என்ன செய்ய?
சோம்பல் முறித்ததில்
ஒரு சுகம் கிடைத்தது.
அப்படியே ஈசிச்சேரில்
சாய்ந்து எதிரே தெரியும்
கடிகாரத்தின்
பெண்டுல அசைவைப்பார்த்து
அதில் கொஞ்சம் கரைந்தேன்.
எந்த அமிலத்தைக்கொண்டு
இந்த காலத்தை கரைத்து
வைப்பது?
காலம் "காலம் ஆவதே"
அந்த அமிலம்!

இந்தக்காலத்துக்கு
இப்படி நெட்டி முறித்து
சோம்பல் முறிக்கத்தெரியாதா?

வெளியே சென்றிருந்த‌
அம்மா பர பரப்பாக
அம்மா ஓடிவந்தாள்

"என்னம்மா? என்ன விஷயம்?"

"தெருக்கோடி
சுப்பு மாமா இறந்திட்டாராம்."

சொல்லிக்கொண்டே அம்மா
கிளம்பி விட்டாள்.

நானும்
என் பனியன் மீது
சட்டையை மாட்டிக்கொண்டு
அங்கே கிளம்பி விட்டேன்.

இதுவும் ஒரு வகை
சோம்பல்முறிப்பு தான்.
காலம்
இப்போது
அந்த மாமாவின் மீது
சோம்பல் முறித்துக்கொண்டது.

================================================================




சனி, 26 ஜனவரி, 2019

ஞாழல் பத்து

ஞாழல் பத்து
=====================================================ருத்ரா


ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும் வழக்கும் தமிழின் "செம்மை மற்றும் தொன்மை" சாற்றும் தன்மையுடையன.

மூ என்றால் மூன்று என்ற பொருள் யாவரும் அறிந்ததே.ஆனால் மூ என்று தனியெழுத்தே தமிழின் தொன்மை சுட்டுகிறது.அழகிய சிறந்த அறிவார்ந்த மூத்த குடிப்புலவன் என்று தான் "அம்மூவன்" என்பதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும்.மூவேந்தர்கள் என்று "மூன்று" அரசர்களோடு முடக்கிக்கொள்வதல்ல அப்பெயர்கள்.காலத்தால் மூத்த இனத்தின் அரசர்கள் என்பதே பொருள்.தமிழ் நாட்டில் "மூதேவி" என்றால் துடைப்பம் கொண்டு விரட்டி விட்டு ஒரு ஸ்ரீ யைச்சேர்த்த "சீர் தேவி(இது தமிழ்ச்சொல் தான்)யை நடு வீட்டுக்கே கொண்டு வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏன் வந்தது.இவள் செல்வம் கொண்டு வருவாள்.அவள் வெறுமே தொன்மை அறிவு மட்டுமே தானே தருவாள் என்ற அந்தக்காலத்து "பணப்பேராசை" எனும் டாஸ்மாக் தனம் நம்மிடையே நுழைந்ததால் இருக்கலாம்.மனிதர்கள் செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் தான்.அதற்காக மூத்தோர்கள் மூளி அலங்காரிகளாக வெறுக்கப்படும் கலாச்சாரம் எப்படி நுழைந்தது?  "மூதேவி" என்றால் வறுமை அல்லது தரித்திரம் வந்து விடும் என்று  அடித்த‌ கோடாங்கியின் ஒலி இன்று வரை எதிரொலிக்கிறது.சரி போகட்டும்.

அம்மூவன் எழுதிய அரிய தமிழ்ச்செய்யுட்கள் கண்டு இன்புறுவோம்.

ஞாழல் பத்து
==============

"எக்கர் ஞாழல் செருந்தியோடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே."....(செய்யுள்.141)


மூன்று வரிகளில்
அந்த புலிநகக்கொன்றையும்
செருந்தியும்
மலர்கள்
என்று பெயர் சொல்லிக்கொண்டு வந்து
அவள் உள்ளத்தையே
பெயர்த்து எடுத்து
காதலில் கடைந்து
வதை செய்ததை
காட்டுகின்றான் அம்மூவன்.
பயலை என்பது
பசலை என்று
இடைப்போலியின் இலக்கணம் தந்தாலும்
அவள் உடலில்
மாயக்கைகள்
மருதாணிக்கீற்றுகள் (மெகந்தி)போல்
சித்திரம் காட்டி
சித்திரவதை செய்வது எல்லாம்
துவலைத் தண் துளி வீசும்
பனிபடுத் துறைவன் தானே!
அந்த "துவலைக்குள்" அல்லவா
அம்மூவன்
அழகாக நெய்யப்பட்டிருக்கிறான்.
"நெய்யப்பட்டிருக்கிறானா?"
அவன் தானே
அச்செய்யுளை நெய்தது?
அவன் நெய்திருக்கலாம்
அதில் அவளது "பசலையின்"
தீச்சுடும் வரிகளில்
ஒரு துன்ப "டிசைனை"
கோர்த்து நெய்தது
அந்த பிரிவுத்துயரின்
வலியும் வேதனையும் தானே!
"துவலைத் தண்துளி" என்று
பாம்பே டையிங்
தேங்காய்ப்பூத்துவாலையை
அலைத்துளியாய் வீசி
அம்மூவன் அங்கே
போர்த்த நினனத்தாலும்
தலைவியின் உணர்ச்சியே
அங்கு கடல்.
அங்கு அலைகள்.

=========================================================
22.03.2015


தேசப்பிதாவே!

தேசப்பிதாவே!
====================================================ருத்ரா

தேசப்பிதாவே!
இந்த தலைமுறைகள்
மனப்படங்களில்
ஒரு பொக்கைவாய்ப்புன்னகை என்று
உன்னை ரூபாய் நோட்டுகளின்
ஸ்பரிசத்தில் வாசனை பிடித்தபோதும்
நம் மூவர்ணக்கொடியின் நிழலில்
உன் இதய நரம்புகள்
இன்னும்
இராட்டை சுழற்றிக்கொண்டிருப்பதையும்
அவர்கள் அறிவார்கள்.
குத்துக்கு குத்து
வெட்டுக்கு வெட்டு
என்றும்
ஒரு ப்ளஸுக்கு ஒரு மைனஸ் என்றும்
சமுதாய டைனாமிக்ஸ்ன் கணிதம்
சமன்பாடு காண வெறியுடன்
முனைந்திருந்தால்
இந்நேரம் இந்தியா முழுவதும்
ஒரு சுடுகாடாக சாம்பல் மேடு இட்டிருக்குமே!
ஆம்..
கண்ணுக்குத்தெரியாத‌
அந்த "அஹிம்சை"ச்சக்தியின்...
வண்ணமாய் இராவிட்டாலும்
வலுவான
அந்த மூக்குக்கண்ணாடியுடன் கூடிய‌
அந்த கார்ட்டூன் சித்திரத்தின்......
கோட்டுச்சித்திரமே
நம் ஓட்டுச்சித்திரம்.
நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிற‌
வன்கொடுமையும்
கருப்புப்பண லஞ்சப்பேய் ஆட்டங்களும்
நமக்கு பழகிப்போனதால் தான்
உயிருக்கு உயிர் பறிக்கும்
விளிம்பு நிலைப் பேரழிவு
இந்த மண்ணில் நிழலாடவில்லை.
பழகித்தான் போய் இருக்கிறது.
மரத்துப்போகவில்லை.
அதனால் சீற்றங்களையும் சீர்தூக்கி
காந்திய சிந்தனையின் சுவடுகளை
மௌன ஆயுதமாய் மனக்கிடங்கில்
வைத்துக்கொண்டிருக்கிறோம்!
உலகப்பட சித்திரங்களைப்பார்த்தால்
தெரியும்
அண்ணல் காந்தியடிகள் என்னும்
எனும் ஒரு அமானுஷ்ய உணர்வு
நம்மை எப்படி
அண்டை கொடுத்து
காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
என்று!
அந்த கொடூரங்களின் நசுங்கல்கள்
கோடானு கோடி இந்தியர்களை
சமுதாயத்தின் முரட்டு பற்சக்கரங்களில்
கூழாக்காமல் தடுத்துக்கொண்டிருப்பது
அதோ அந்தக் குரல்கள் தான்.
"ஈஸ்வர அல்லா தேரே நாம்"
சப்கோ சன்மதி தே பகவான்.."
காந்தியடிகள் எனும்
அந்த கோவர்த்தன கிரியை
நம் கோடி கோடி விரல்கள்
இன்னும் பாதுகாப்பாய்
தூக்கிப்பிடிக்கட்டும்.
அண்ணலே உன் பெயர் மட்டுமே
இந்த நாட்டில்
மொழி புரியாமல் வெறும்
ஒலிப்பாக இல்லாத‌
உயிர்ப்பு மந்திரம்.
வாழ்க நீ எம்மான்
இந்த வையத்தையெல்லாம்
வாழ்விக்க வந்த ஒளியே!
வாழ்க வாழ்கவே!

========================================================
27.09.2015

வெள்ளி, 25 ஜனவரி, 2019

காகிதம் தாண்டிய வெளி....

காகிதம் தாண்டிய வெளி....
==============================================ருத்ரா

எழுத்து 

காகிதம் தாண்டிய வெளியில்
என் பேனாவின்
ஏவுகணைகள்...


அந்தி

சூரியன் குளித்துவிட்டு
வானத்து டவலைக்கொண்டு
தலை துவட்டிக்கொள்கிறான்.


மீன்கொத்தி

தண்ணீர்ப்பளிங்கில்
எழுதுகிறது
ஒரு குத்துப்பாட்டு.


கஜாப்புயல்

குடிகாரக்கணவன்
மனைவியின் கூந்தலைப்பிடித்து
விசிறியடிக்கும் கார்ட்டுனை
வரைந்தன தென்னைமரங்கள்.


தேர்தல்

காக்கை கல் போட்டது
அந்த கொஞ்சம் தண்ணீருக்கு.
வாக்காளர்கள் ஓட்டு போடுவது
கானல் நீருக்கு.

வறுமைக்கோடு

"நூல்"பிடித்து
அளந்து விட்டார்கள்
எட்டு லட்சம் என்று.

ஸ்டெர்லைட்

சாப்பிடும் தட்டை
ஓட்டை போட்டுக்கொண்டு
வரும் பூதத்திற்கு
சூடம் காட்டி பூஜை நடக்கிறது.


செல்ஃபோன்

தகவல் சுரங்கத்துள்
பூமிக்கு கட்டினார்கள்
கல்லறை.

காதல்

சமுதாயம் எரிகின்றபோது
பட்டாம்பூச்சி சிறகுகளோடு
விளையாட்டு.

கவிதை

எழுத்துக்களைக்கொண்டு
எரிமலையை வடிகட்டும்
செப்பு விளையாட்டு.

புதுக்கவிதை.

மேலே தெரிகின்ற வானத்தை
தேடி
மண்ணுக்குள் தோண்டுவது.

==============================================================



என்ன பார்க்கிறாய் ?




















                                                                                                                                                   ருத்ரா                                                                                                                                               


என்ன பார்க்கிறாய் ?
========================================ருத்ரா


நான் உன்னைப்பார்த்தது போல்
நீயும் பார்க்கிறாயா?
கண்ணின் கருவிழிகள்
ஒரு தேன்பாய்ச்சலாய்
ஒரு மின் பாய்ச்சலை
நம் உள் இழையோட‌
வைத்து வீட்டது.
அதன் நெசவுக்குள் நாம்
இனி நூல்
கோர்த்துக்கொண்டிருப்போம்.
ஆனால் அது ஆடை அல்ல.
மூடிவைத்திருந்த நம்
ஆசைப்பிழம்புகளை
உரித்துப்போட்டு விட்டு விட்டது.
நம் பார்வைகள்.
நம் சொற்கள் எல்லாம்
இனிப்பு தான்.
ஈக்களும் எறும்புகளும் மொய்க்கும்.
அதாவது
சம்பந்தமற்ற‌
சொற்துண்டுகளும்
வாக்கியப்பூச்சிகளும்
சந்திப்புகளின் போது
நம் மீது ஊர்ந்துகொண்டிருக்கும்.
எதற்காக என்று
அவை நம்மிடம்
அர்த்தம் கேட்கும்.
நீண்ட இரவுகளின்
குகைப்பாதையில்
நம் பயணம்.
வெளிச்சத்தின் அந்தப்பக்கமே
தெரியாத பயணம் அது.
பகல்களில் கூட‌
நம் உடம்புக்கூடுகள்
இருட்டின் புழுக்கூடுகளாய்
நெளிந்து கொண்டிருக்கும்.
பாதைக்கு அடையாளம் இல்லை.
கண்ணுக்கு தெரியாத‌
ஊழிக்காலப்பறவையின்
எச்சங்கள்
அங்கே இங்கே தோன்றும்
நம் மைல் கற்கள்.
அருகருகே
தழுவிக்கொள்ளாத குறையாய்
அமர்ந்து
நாம்
பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
அந்த சொல்லின்
எள்ளுமுனையில் கூட‌
எந்த அரத்தமும் இருக்கப்போவதில்லை.
நம் உயிர் கரைந்து
ஒலிக்கும்
வெறும் இந்த அருவியில்
நம் அர்த்தமற்ற மௌனத்தை
குளிப்பாட்டிக்கொள்வோம்.
காலத்தின் மகரந்தங்கள்
சொட்டு சொட்டாய்
நம் மீது வீழ்ந்து
ஓர் இருண்ட ஆரண்யமாய் அவை
நம்மைப் போர்த்திக்கொள்ள‌
பேசிக்கொண்டே இருப்போம்.
இந்த பிரபஞ்சத்தின்
செவிட்டுக்காதுகள் அதை
கேட்டுக்கொண்டிருக்கட்டும்.

====================================================




மௌனம் என்றொரு தேசம்


மௌனம் என்றொரு தேசம்
=========================================ருத்ரா

சட்டென்று
கேட்க முடியவில்லை.
இதே தவிப்பும் பரபரப்பும்
அவளிடமும் தெரிகிறது.
ஆனால்
இதை கேட்டுவிட வேண்டுமென்று
நான் கண்களை
உயர்த்தியது போல்
அவள் இன்னும்
ஏறிட்டு நோக்கவே இல்லையே!
ஆனால் அந்தக்கேள்வியின்
தூண்டில் முள்
அவள் ஆழத்தில் விழுந்து
அது ஏற்படுத்திய காயம்
அவள் உள்ளத்தில்
ரத்தக்கடலை கொந்தளித்தது.
அந்த சிவப்பு
கவிழ்ந்த அவள் முகத்தில் கூட‌
ஒரு அழகு ஊட்டியது.
அது அழகா?
அவளுக்கு அல்லவா தெரியும்
அது கழுமரத்தின்
கூர்முனை என்று!
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
என்று
நான்கு கதவுகள் வைத்து
நாலாயிரம் பூட்டுகள் அல்லவா
மாட்டி வைத்துக்கொண்டிருக்கிறாள்!
அமுதம் கசியும் அந்த‌
கேள்வி
இன்னும் தெறிக்கவே இல்லை
பெண்ணே
உன் புன்னகையை மட்டும்
பாஸ்வேர்டு ஆக வீசினாய்
காதல் கணினி இன்னும்
கதவு திறக்கவில்லையே !


=======================================================

வியாழன், 24 ஜனவரி, 2019

வந்தா ராஜாவாத்தான் வருவேன்

"வந்தா ராஜாவாத்தான் வருவேன்"
==============================================ருத்ரா

"ராஜாவே வருக
இந்த கட்டெறும்புகள் கடிப்பது
தாங்க முடியவில்லை"
"வாங்க மச்சான் வாங்க மச்சான் "
என்று ஆட்டம் அதிருகிறது.

டீசர் பாட்டு தூள் பறக்கிறது.
சிம்பு என்ற சிலம்புக்குள்
இருக்கும் பரல்கள்
உண்மையிலேயே
மாணிக்க முத்துப்பரல்கள் தானா?
இல்லை
பரபரப்பு "பீப்"பாடல்களின்
ஒலிச்சிதைவுகள் தானா?
பேர் சொல்லும்படி
ஓரிரு படங்கள் தந்திருக்கிறீர்கள்!
உங்கள்  இடத்தை
ஏன் நீங்கள்
தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை?

இன்றைய வெற்றிக்கதாநாயகர்கள் எல்லாம்
பஞ்ச் டையலாக் எனும்
மாஞ்சா தடவிய பட்டங்கள் தான்.
நமக்கோ
சோறு என்று
சீட்டில் எழுதினால்கூட போதும்
அதையும் தின்று தீர்க்க‌
இந்த சினிமாநிழலையே
ஊறுகாய் ஆக்கிக்கொள்வோம்.
அதனால்
அரசும் கூட இலவசங்களை
முட்டையிட்டு
இந்த ஈசல்களை வைத்து
தங்கள் நாற்கலிக்கு
காங்கிரீட் போட்டுக்கொள்ளுகின்றன.
இந்த குத்தாட்டங்களில்
இவர்கள்
வலிப்பு வந்தவர்களாய்
தங்கள் வலிகளை மறைத்து
தங்கள் வழிகளை மறந்து
சாமி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக்கூட்டத்தில்
நீங்களும்
அந்த காக்காய் இறகுகள் சூடிய
மகுடம் தரித்த
ஜிகினா ராஜாவாய்
வருவதில் எங்களுக்கு ஒன்றும்
ஆட்சேபணை   இல்லை.
அடேயப்பா!
உங்கள் ஆட்சியில்
பாலாறு தேனாறுகளின்
காட்டாறுகள் அல்லவா
ஓடும்போலிருக்கிறது!
அண்டா அண்டாவாய்
உங்கள் கட் அவுட்டுக்கு
பாலாபிஷேகம் செய்ய
இப்போதே
அரசாணை பிறப்பித்து விட்டீர்கள்
போலிருக்கிறதே.
தமிழ் மக்களுக்கு
எதுகை மோனைகள் சொல்லி
அப்புறம் ஓய்ந்து உட்கார்ந்து விட்டாரே
உங்கள் தந்தை.
அது போல் நீங்களும்
இந்த சினிமாவின் சீட்டுக்கட்டு
ராஜாவுக்கா
இப்படித்துள்ளிக்குதிக்கிறீர்கள்.
சிலம்பு என்ற உங்கள் பெயர்
தமிழ் மக்களின்
அக்கினிக்கனவுகளை
விடியலின் பரல்கள் ஆக்கி
உள்ளே ஒலித்துக்கொண்டிருப்பது
உங்களுக்கு கேட்கிறதா?
யோசியுங்கள்!
எது எப்படியாயினும்
உங்கள் முயற்சிகள்
இமாலய வெற்றி பெற
எங்கள் வாழ்த்துக்கள்!

===========================================================













செவ்வாய், 22 ஜனவரி, 2019

சென்னை புத்தக விழாவும் நானும்

சென்னை புத்தக விழாவும் நானும்
==============================================ருத்ரா

இப்படித்தலைப்பிட்டு எழுத‌
வெட்கம் இல்லையா உனக்கு?
நீ என்ன
புத்தகம் ஏதாவது எழுதிருக்கிறாயா?
அல்லது
புத்தகம் வாங்கி
குவிக்கப்போகிறாயா?
இரண்டும் இல்லை.
அப்புறம்
கொல்லம்ப்பட்டறையில்
ஈக்கு என்ன வேலை?
புத்தகம் வெளியிட ஆசைப்பட்டதுண்டு.
அவ்வப்போது
சில பத்திரிகைகளில்
என் படைப்புகள் வெளிவந்தது உண்டு.
இப்படி
புத்தகங்கள் எனும் ஈசல்கள்
கடை பரப்பி
கனவுகளின் கடல் பரப்பி
சிறகடிப்பது கண்டு
அந்த உற்சாகம்
என் இருட்டு மூலைகளின்
அவநம்பிக்கைத்தீவுகளுக்கு கூட‌
வெளிச்சம் படர்வது
உன்னதமானது தான்.
ஆவலும் ஆர்வமும்
கூடவே பொறாமையும்
கொழுந்து விட்டு எரிந்தது உண்டு.
கொழுந்து விட்டுக்கொள்ளட்டும்
எனக்கு கவலையில்லை.
எனக்குத்தகுந்த எள்ளுருண்டை
இந்த விரல்களிலும் விசைப்பலகையிலும்
தினமும் உண்டு.
இதில் என்னைக் "கண்டு" கொண்ட‌
வாசகர் உலகம்
தினமும் "பூச்செண்டு" ஒன்றை
என் முன் நீட்டுவது கண்டு
எனக்கு மிக்க மகிழ்ச்சி!
அச்சு எந்திரங்கள்
என் எழுத்துக்களை
கறைப் படுத்தவில்லை.
என் கன்னித்தமிழுக்கு
என்றைக்கு சாந்திமுகூர்த்தம் என்று
இன்னமும்
கவலைப்பட்டுக்கொண்டதில்லை.
வாழ்க்கை எனும் கிண்ணத்தில்
சுவைக்கப்படாத‌
மதுத்துளிகள் இருந்து கொண்டே
இருக்கவேண்டும்.
காக்கையாக பறந்து பறந்து
ஒவ்வொரு கல்லாக‌
போட்டு
என் எழுத்துத்தாகம்
தீர்க்க
இந்த விசைப்பலகையின் 
வானம் தோறும்
வருடிக்கொண்டே இருக்கிறேன்.

===============================================================

அதிர்ச்(சி)குமார் எனும் அஜித்குமார்

அதிர்ச்(சி)குமார் எனும் அஜித்குமார்
===================================================ருத்ரா

சினிமாவின் நிழல்
உயர்த்தித்தரும்
நூலேணி கொண்டு
வானத்தில் ஏறி
ஒரு நட்சத்திரம் ஆகி
அதையே
அரசியலின் ராஜபாட்டை
ஆக்கிக்கொள்ளும் நிலையை
விரும்பாமல்
அந்த "சப்னோங்கி சௌதாகர்களுக்கு"
(கனவு வியாபாரிகள்)
அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கும்
அஜித்குமார் அவர்கள்
மிகவும் பாராட்டுக்கு உரியவர்.
கதாநாயகர்களின்
கச்சா பிலிம் மசாலாக்களைக்கூட‌
தாமரையிலையாய் நினைத்து
ஒட்டாமல்
ஆனால் நடிப்பின்
எழுவர்ணங்களை வாரியிறைக்கும்
நீர்த்துளியாகச்
சுடர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த தாமரையிலையில்
ஒரு நான்கு வர்ணத்தாமரைப்"புஷ்பத்தை"
பதியம் இட்டுவிட பார்த்தவர்கள்
ஏமாந்து தான் போனார்கள்.
எங்கள் மீது வேண்டாம் அய்யா
இந்த அரசியல் சாயம் என்று
கலைஞரிடமே இந்தக் கலைஞர்
வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
வாலி
வில்லன்
வரலாறு
என்று தன் படங்களின்
தரத்தின் முத்திரையை
உயர்த்திக்கொண்டே போயிருக்கிறார்.
அப்படியிருந்தும்
தன் ரசிகர்களிடையே அவர் வலம் வந்தது
"ஆசை" நாயகனாகத் தான்
கோட்டையை
ஆளவரும் நாயகனாக அல்ல.
அதனால் தான்
அவர் குரலான‌
"வாழு வாழவிடு"
நமக்கு இப்படி கேட்கிறது:
"ஆளு "ஆள"விடு"
நீ எப்படியோ ஆளு.
"ஆள விட்டுடுப்பா" என்னை!
என்பது போல கேட்கிறது.
ரசிகர் மன்றங்கள்
அரசியலின் சதுப்புக்காடுகளுக்குள்
புதைந்துவிட‌ வேண்டாம் என்று
தன் ரசிகர்மன்றங்களையே கலைத்தவர் இவர்.
"கலை என்றால்
கலையும் ஆகும் கலைத்தலும் ஆகும்"
என்று நகைச்சுவையாக பாடிய‌
கலைவாணர் என் எஸ் கே தான்
நம் நினைவுக்கு வருகிறார்.
நம் மதிப்பிற்குரிய தமிழிசை அவர்கள்
என்ன தான்
அவர் அறிக்கையை
ஆகா ஓகோ என்று பாராட்டினாலும்
"வடிவேலுவின்" "வட போச்சே"
என்ற உட்பொருள் தானே தொனிக்கிறது!
அஜித் அவர்களுக்கு
அரசியல் என்றால் அலர்ஜி
என்றொரு நோய் இருக்கலாம்.
ஆனால் சமுதாயத்தின் சாயம் ஒட்டாமல்
இருப்பது
அதுவும் தமிழ்நாட்டின்
தமிழ் என்றால் என்ன?
கிலோ என்ன விலை என்று
கேட்கும் அளவுக்கு அளவுக்கு
இருப்பாரோ என்ற‌
ஒரு அன்னிய உணர்வை
இங்கு பதியம் இடுவது
அவருக்கும் நல்லதல்ல!
அவர் கலைக்கும் நல்லதல்ல.
ஆனால்
தமிழை அவ்வளவு அழகாக ஒலிக்கும்
அவர் அப்படியெல்லாம்
இருக்க மாட்டார் என்று நம்புவோமாக.
இருப்பினும்
இவர் போல் நிறைய‌
தமிழ்ப்படங்கள் நடித்துக்குவித்தவர்
வெறும் "டப்பு"க்கு "டப்" செய்த‌
ஒலியையே நம்மிடை வேரூடவைத்தவர் தான்.
அவர் நம் பாசத்துக்குரிய
நடிகர் மோகன் அவர்கள்!
இவர் அப்படி இன்னொரு மோகனாக‌
போய்விடக்கூடாது என்று
ரசிகர்கள் அவர்களின் தோள்களில்
ஏற்றி கோட்டைக்கு உயர்த்திட‌
முந்துகிறார்கள்.
அப்போதும் அவர் அந்த
கோட்டைகளையெல்லாம்
ஒரு கோடு போட்டு
அப்பால் நகர்த்திவிட்டார் என‌
நினைக்கும் போது
அவர் பெருமையுடன்
உயர்ந்து நிற்கிறார்.
அவர் புகழ் வளர்க!

==================================================================








திங்கள், 21 ஜனவரி, 2019

திமில்

திமில்
====================================ருத்ரா

புறநானூற்றுக் காளைகளே
அந்தக் காளைகளின்
திமிலைச்சுற்றி
தழுவிக்கொண்டு
விடாமல் தொற்றிக்கொள்கிறீர்கள்.
திமில் மீது
கை பட்டதும்
அவை துள்ளியெழுந்து
அந்த வானத்தையே
குத்திக்கிழித்துவிடும்
போலிருக்கிறது.
உணர்வு எனும்
எரிமலைக்குழம்பில்
யாரும் கிச்சு கிச்சு
மூட்ட முடியாது.
அந்த கொம்பு சிலிர்ப்புகளில்
வில் புலி மீன் கொடிகளின்
படலங்கள்
அசைவது உங்களுக்குத்
தெரிகிறதா?
தமில் தமில் என்று
நுனி நாக்கில்
தமிழை ஒலிப்பவர்களே.
இந்த திமில்
தமில் அல்ல.
தமிழ்.
இதனைத்தொடும்போது
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வீரங்கொண்டு
அந்த சிகரத்தையே பிடித்து
விற்கொடி நிறுத்தினானே
அந்த எழுச்சியைத்தான்
இந்த திமில் தருகிறது!
தமிழ்க்காளையே
மீண்டும் உணர்வு கொள்.
தமிழ் தமில் அல்ல‌
திமில்.
உன் அடையாளம் உணர்த்தும்
வீரத்துடிப்பு அது!

====================================================================

மெரீனா

மெரீனா
===========================================ருத்ரா

காதல் என்றால்
அதன் குப்பைத்தொட்டி
மெரீனா.
ஏனெனில்
அங்கே தான்
காதல் கடிதங்கள்
எல்லாம்
"பழைய பேப்பர்" கடைகள்
வழியாய்
சுண்டல் மடிக்க
வந்து விடுகின்றன.
பாருங்கள் அவள் வருவதற்காக
காத்திருக்கும் போது
சாப்பிட வாங்கிய
சுண்டல் பொட்டலத்து
காகிதத்தில்
என் கையெழுத்து.
"அன்புடன்...."
என்று என்னைகாட்டிக்கொடுத்தது.
என் ஒவ்வொரு கடிதமும்
பொக்கிஷம்
என்று சொன்னவளையும்
காட்டிக்கொடுத்தது.
இந்த குப்பைக்காட்டில்
என் கவிதையா?

அவள் வந்தாள்
காட்டினேன்
இங்கே எப்படி வந்தது?
நான் கேட்டேன்.
இங்கே எப்படி வந்தது 
அவளும் கேட்டாள்.
"சரி விடுங்கள்.
எப்படியோ வந்தது.
ஏதோ ஒரு புத்தகத்தில்
வைத்திருந்தேன்.
எடைக்கு போடும்போது
அந்த புத்தகத்தோடு
போயிருக்கலாம்." என்றாள்.
............
"இதயத்துள் இதயம்
விழுந்த பின்
இந்த காகிதங்கள்
எங்கே கிடந்தால் என்ன?"
என்றாள்.
ஆம்
அவை நான் அந்தக்கடித்தில்
எழுதியிருந்த வரிகள்!

=======================================

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

மனிதன்

மனிதன்
=================================ருத்ரா

எனக்குத்தெரியாது என்று
தெரியாது.
எனக்கு தெரியாது என்று
தெரியும்.
எனக்கு தெரியும் என்று
தெரியாது.
எனக்குத் தெரியும் என்று
தெரியும்.
அறிவின் நான்கு நிலைகள் பற்றி
அறிஞர்களின் கருத்து.
நான்காவது நிலையே
ஆன்றோர் நிலை.
முதல் நிலையே
பிள்ளைநிலை.
மனிதனின் குறுக்குவெட்டுத்தோற்றம்
மூளையைப் பற்றியது அல்ல.
உணர்வைப்பற்றியது.
கல்லும் புழுவும்
சமன்பாட்டுக்குள் வராது.
புல்லும் புழுவும்
சமன் செய்து சீர் தூக்கலாம்.
உயிர் தான் அங்கு இணைப்பிழை.
இன்னும்
மனிதர்கள்
மண்ணுக்குள்ளிருந்தும்
கல்லுக்குள்ளிருந்தும்
விழித்து எழுந்த பாடில்லை.
சதை கிழிக்கும் கோரைப்பல்லோடு தான்
அவன் தூக்கம் கலைத்தான்.
அவன் இமைகள் உயர்ந்த போது
"கல்லைக்"கொண்டு தான்
"கல்"வி கற்றான்.
கல்லோடு கல்லை உரசி
அவன் கண்டதே
அவனது முதல் "அகர முதல".
அந்த "தீ"யின் வெளிச்சம்
அவனை குகையிலிருந்து
வெளிவரச்செய்து
"நகர்"கள் அமைக்க
"நகர்தல்"தொடங்கினான் .
வாயின் மாமிச நாற்றம் நின்றபோது
சொல்லைக்கற்றான்.
படிப்படியாய்
அவனுக்கே அவன் கடவுள் ஆனான்.
புரியாதவர்கள்
கல்லின் முன் நிற்கிறார்கள்.
புரிந்தவர்கள்
தந்திரம் செய்தார்கள்.
மனிதன் மனிதனை தின்ன ஆரம்பித்தான்.
நச்சு வட்டம் சுழல்கிறது.

==============================================
19.09.2017

சனி, 19 ஜனவரி, 2019

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு
================================================ருத்ரா
03.01.2016



கல் பொருதிறங்கும் மல்லல் யாறு
புல் தடவி பூக்கள் வருடி
நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி
வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி
புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி
வேங்கை படுத்த வேங்கை வெரூஉய்
பெயரும் காட்சியும் மலியும்.
அற்றை வானின் அகல்வாய் திங்கள்
ஒளியுமிழ் காலை வருவாய் என்ன‌
விழிஅவிழ் குவளை விரியாநின்று
நோதல் யான் உற்றது அறிவையோ
வாடிய காந்தள் அன்ன ஊழியும்
கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ.
வளி அவி அடவி வெம்மை தாளா
ஆயிரங்கண்ணின் நுண்ணறைச்சிறையில்
ஆலும் ஆரும் வால்நீள் தும்பி
இனத்தொடு பெயரும் காட்சியும் மலியும்.
எல்லா!பொறிச்சிறைத்தும்பியும்
இமை அதிர்ந்து உதிர்க்கும் உதிர்க்கும்
ஆயிரம் ஆண்டுகள் தோற்றும்
காலம் நீள்பு கடுங்கண் இடையும்
ஒரு புது ஆண்டாய் மின்னல் விழிப்ப‌
என்று தருங்கொல் இரட்டும் படுமணி
நின் தேரின் இன்னொலி ஆங்கு.
அறியா நின்று ஆவிஉதிர்த்து
ஆவி விதிர்த்து மீளும் மீளும்
செங்கோட்டு யாழென நடுங்குவன் யானே!

==================================================

சுருக்க உரை
=============
ஓலைச்சுவடிகளின் தொன்மை காலத்தும் ஒரு தலைவி வெளிப்படுத்தும்
புத்தாண்டு ஏக்கம் பற்றிய பாடல் இது. தலைவன் வரவு நோக்கி
காத்து காத்து நொந்து போன தலைவிக்கு அது நெடிய யுகம் ஆனது.
திடீர் என்று மின்னல் வெட்டு போல் தலைவன் வரும் தேரின் ஒலி கேட்கும்
அந்த தருணமே அவளுக்கு புத்தாண்டு.


=============================================================
(தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்)










"ஜெல்லி ஹவுஸ்"

"ஜெல்லி ஹவுஸ்"
=======================================ருத்ரா

கற்பனை ஜெல்லியில்
கட்டினேன் ஒரு ஜெப வீடு.
வழ கொழ வசனங்களில்
சன்னல்கள் திறந்து வைத்தேன்.
ஆகாயமும் உருகி வந்து
மூக்குநுனியில்
சளி பெய்தது.
குற்றம்
தண்டனை
நல்வினை
புண்ணியம்
கும்பிபாகம்
கிருமி போஜனம்
எல்லாம் கிராஃபிக்ஸில்
உறுமியது.
செறுமியது.
சொர்க்கம் என்று
காமனின் கரும்பு வில்லை
வளைத்து நெளித்து
குழைத்து தந்தது.
இந்திரனும் இந்திராணியும்
சோமத்தில்
குமிழி விட்டார்கள்.
காட்சிகள்
காமா சோமாக்கள்.
டாஸ்மாக்குகளில்
ஆர்டிகிள் முன்னூத்தி அறுபத்தெட்டு.
ஜனநாயகத்தைக்கூட்டல் செய்து
ஜனநாயகத்தை கழித்தல் செய்வோம்.
ஒண்ணு மட்டும் மிஞ்சும்.
உருட்டுக்கட்டை தான் அது.
இனி
அம்பத்தொண்ணு சதவீதம்
எல்லாம் வேண்டாம்
ஆள்வதற்கு.
ஒண்ணே ஒண்ணு
போதும் ஜனநாயகத்துக்கு!
அதுவே கட்டிங்க்..கட்டிங்க்
கட்டிங்க் தவிர வேறு இல்லை.
பாட்டில்கள் உடைத்து
சத்தியம் செய்தன.
மேலவை கீழவை எல்லாம்
இந்த ஜெல்லி ஹவுஸ் தான்.
ஜெல்லிப்புழுக்கள் எனும்
ஓட்டுகள் நெளியும்
"கரன்சி"ப்புழுக்களின்
அரங்கம் தான்.

=================================================
21.05.2015



"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."

"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."
=============================================ருத்ரா

ஐம்பெரும்பூதம் தெரியும்
ஆறாவது பூதம்
தெரியுமா?

இந்த பூதங்கள்
ஒன்றை ஒன்று காதலிப்பதே
ஆறாவது பூதம்.
நீருக்கு
நெருப்பின் மேல் காதல்.
நெருப்புக்கு
காற்றின் மேல் காதல்.
காற்றுக்கு அதன்
வெளியிடையே காதல்.
வெளியும் மண்ணும்
பிசைந்து கிடப்ப்தே காதல்.

ஜி யூ டி எனும்
இந்த பெருங்காதல் மீது தான்
(க்ராண்ட் யுனிஃபிகேஷன் தியரி
எனும் "பேரொன்றியக் கோட்பாடு)
விஞ்ஞானிகளுக்கும் காதல்.
மெய்ஞானிகளையும்
இந்த காதல் பூதம்
படுத்தும் பாடு
கொஞ்ச நஞ்சமல்ல.

"காதலாகி கசிந்துருகி"தான்
அதை நினைத்துப்பாடுகிறார்கள்.
நீயும் நானும் ஒன்று தான்
என்று அத்வைதம் சொல்கிறார்கள்.
சிற்றின்பத்துக்கும்
பேரின்பத்துக்கும்
இடையே
இவர்கள் கிழித்திருக்கும் கோடு
ஒவ்வொரு "ஜன்மத்தின்"கன்னிக்குடம்
உடையும் போதும்
ஓவ்வொரு "மரணத்தின்"கொள்ளிக்குடம்
உடையும் போதும்
கிழிந்து போகிறது.

"பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்.
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."
ஆம்.
உண்மை தான்.
அவள் "சிரிப்பில்"
நான் மறைந்து போகிறேன்.
என் "சிரிப்பில்"
அவள் மறைந்து போகிறாள்.

===================================================
21.06.2013






"கண்ணே!"

"கண்ணே!"
===================================ருத்ரா இ.பரமசிவன்

நீ பார்த்தபோது
உன் விழிகள்
என் மீது உரசுவதை
தவற விட்டேன்.
உன்னைப்பார்க்காமலேயே
அந்த உரசலில்
அமுதத்தீயின் பெருங்காடு
என்னுள் கொழுந்து விடுவதை
நான் உணர்ந்தேன்.
எதிர் எதிர் பார்க்கும்போது
என்னைப்பார்க்காது தவிர்த்து விடுவாய்
என்பது எனக்குத்தெரியும்.
அதனால்
அந்த மரத்தைப்பார்க்கிறேன்
அந்த மட்டையைப்பார்க்கிறேன்.
அந்த குருட்டுக்காக்கையையும் பார்த்தேன்.
அது அந்த
மின்சாரக்கம்பியில்
இசகு பிசகாய் பட்டுப் பொசுங்கிப்போனது!
என்ன கொடுமை இது?
அப்போது தான்
என்னை நீ பார்த்திருக்கிறாய்!
இதைத்தான்
அந்த கிறுக்குக்கவிஞன் எழுதினானோ
"மின்சாரக்காதல்" என்று!
அந்த காக்கை சாம்பலாய் போனது போனது தான்!
அதிலிருந்தா
என் காதல் "ஃபினிக்ஸ்"
சிறகு விரிக்க வேண்டும்?
வேண்டாம்..
அந்த பார்வை ஒன்றே போதும்!
உன் முன்
நான் சாம்பல் ஆகவும்
ஆயத்தமாய் தான் இருக்கிறேன்.
இதைக் கொண்டு
உன் முகப்பவுடர் ஆக்கிக்கொண்டால்கூட‌
உன் முக ஆகாயம் முழுதும் பூசி
உன் மனத்துள் விரவிக்கிடப்பேன்.
அந்த பார்வை ஒன்றே போதும்
ஆனாலும்
அந்த தீயை வடிகட்டி விட்டு
காதலை மட்டும் அனுப்பு "கண்ணே!"
என்னைப் பொசுக்கி விட‌
காதல் ஒன்றே போதும்
இரண்டு "தீ" தேவையில்லை!

===============================================
14.03.2016




மணல் கூட...

மணல் கூட...
====================================ருத்ரா இ பரமசிவன்
29.01.2017 ல் எழுதியது.




மணல் கூட
ஒரு நாளில் பொன்னாகலாம்
என்றான் கவியரசன் கண்ணதாசன்.
அற்றைச் சில திங்கள்களில்
நம் சென்னை நகரக்கடற்கரை
மணற்துளிகள் ஒவ்வொன்றும்
பகலில் சூரியன்கள் ஆகின.
இரவில் நிலவுகள் ஆகின.
பொன்னையும் விட‌
விலை மதிக்க முடியாத‌
தமிழ்க்குரல்கள் ஆகின!
உரிமைக்கதிர் வீச்சின்
உண்மை ஒளிப்பூக்கள் ஆகின.
கைப்பொறியில் தன்  க‌னவுகளை
விண் முட்டும் வரை சென்று
முட்டித்திரும்பிய‌
புயற்காளைகளின் புறநானூறுகள் கண்டு
புல்லரித்து நின்றோம்.
பதிலைக் கூட எதிர்பாராமல்
வெறும் அஞ்சல் அனுப்பி
மாமூல் கடன் கழித்த நம்
மாநில அரசு செயல் வீரம் காட்டியதும்
கண்டோம்.களித்தோம்.
அது வெறும்
திருப்புமுனையா?
இல்லை
நெருப்பு முனையா?
ஆனால்
அது நம் தமிழின்
கரு உயிர்ப்பு முனை!
என்ன இது?
பலப் பல ஆயிரம் ஆண்டுகள்
தொன்மை கொண்ட தமிழ்
இப்போது தான்
குவா குவா என்று
குறுந்தொகையும் கலித்தொகையும்
ஒலிக்கின்றதா?
இது கேள்வி அல்ல.
ஒரு வெடிப்பின் திரிமுனை.
நம் வரலாறு நீர்த்துப்போனதாக‌
தூர்த்துப்போனதாக‌
நம் அறிவின் நிறம் மாறிவிட்ட‌
நிகழ்வுகளின் தளும்பல் முனை இது.
ஆம்..
மீண்டுமாவது
நம் தமிழ் தளிர்த்து தான் ஆகவேண்டும்!
நம் மாண்பு உயிர்த்து தான் ஆகவேண்டும்!

=================================================
ஒரு மீள்பதிவு


வெள்ளி, 18 ஜனவரி, 2019

காலண்டர் தாள்கள் இன்னும் எத்தனை கிழிக்க?

காலண்டர் தாள்கள் இன்னும் எத்தனை கிழிக்க?
===================================================================
ருத்ரா




நீ சிரிக்க நினைக்கிறாய்.
அதுவே வயிற்றைப்பிசைகிறது.
சிரித்து விட்டால்...

உன் பார்வைக்கா பகீரதன் தவம்?
தண்ணீர் லாரிக்கு
குடங்களோடு காத்திருக்கிறேன்.

அடுத்த பிப்ரவரி பதினாலு.
காலண்டர் தாள் இன்னும் எத்தனை கிழிக்க?
தாத்தா சொல்லியிருக்கிறார்..அது
இன்னும் துவாபரா த்ரேதா என்று
என்னென்னவோ யுகமாம்!
யுகங்கள் முன்னும் நகர்ந்தாலும்
தாத்தாவின் பிப்ரவரி பதினாலு
அப்படியே நிற்கிறது.

சன்னல் கம்பிகள் தெரியவில்லை.
அவள் தோன்றும் வரை..அது
கரும்புக்காடு.

எதிர்வீட்டு தாத்தா சென்று கொண்டிருந்தார்
பளபளப்பு கவருடன் போஸ்ட் ஆஃபீசுக்கு.
"என்ன தாத்தா?
பேத்திக்காக போஸ்ட்மேன் வேலையா?"
"எனக்குத்தான்..நேரமே கிடைக்கலே.."
அவர் கையில் பிரிட்டிஷ் காலத்து
பழுப்பேறிய கவர் தான்
பளபளப்பாய் தெரிந்தது.
அவள் எழுதியதாம்
பிரித்துப் படிக்க
வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.
திருப்பி அனுப்பப்போகிறார்.

"பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை..."
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
நீண்டும் நீண்டும்
மின்னலடிக்கும்  இது..
மீண்டும் காத்திருப்பாராம்
அதே பழுப்பேறிய கவருக்கு!

==================================================
17.02.2015






வியாழன், 17 ஜனவரி, 2019

வர்ணப்புயல்

வர்ணப்புயல்
=============================================ருத்ரா

அது போதும்!
அந்த இனிய சாக்கலேட்
பொட்டலத்தை
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
அந்த வண்ணப்பேப்பர்
ஆயிரம் குமிழிகளாய்
கனவுகளாய் அந்த
நினைவின் இனிப்பை
சுற்றி வைத்திருக்கிறது.
அதை
திடீரென்று
திறந்து பார்த்து சுவைத்திட
வேண்டுமா என்ன?
நான் அவசரப்படவில்லை.
அந்த சாக்லேட் என் கையில்
இனிப்பின் அடர் மழையை
கொட்டக்காத்திருக்கிறது.
அதை திறக்காமல்
என் ஆவலை மட்டுமே
அங்கு திறந்து திறந்து
மூடிக்கொண்டிருக்கிறேன்.
ஆமாம் எப்படி நான்
ஒரு சிறுவன் ஆனேன்?
அவள் அன்றொரு நாள் வீசிய
அந்த இனிமை ததும்பும்
ஒரு பார்வை மட்டுமே
இப்படி ஒரு சாக்லேட் பொட்டலம் ஆகி
என்னை ஒரு பொட்டலம்
போட்டுவிட்டதே!
இந்த புழுக்கூட்டு மண்டலத்திலிருந்து
வர்ணப்புயலாய்
என் காதல் சிறகுகளை
எப்போது விரிப்பேன்?
தெரியவில்லை.

=============================================

அருவி

அருவி
============================================ருத்ரா

அந்த‌ கூந்தலை
மீண்டும் மீண்டும்
உன் முகத்திலிருந்து
தள்ளிவிட்டுக்கொள்கிறாய்.
அந்தக் கூந்தல் அருவியை
அப்படியே விட்டு விடேன்!
அந்த குற்றாலத்து
தேனருவியில்
குளித்துக்கொண்டே
ஒளித்து ஒளித்து விளையாடும்
உன் முகத்தின் ஒளியில்
நானும் குளிப்பேன்.

===============================================




=====================================================

புதன், 16 ஜனவரி, 2019

சூப்பர்ஸ்டாரும் தல யும்

சூப்பர்ஸ்டாரும் தல யும்
=========================================================ருத்ரா


சூப்பர்ஸ்டாரும்
தல யும்
பரஸ்பரம் விட்டுக்கொள்கிற‌
இந்த நிழற்கூச்சல்களின்
அம்பு விளையாட்டுகளை
தாங்க முடியவில்லை.


"கொலக்காண்ட்டு"ல இருக்கேன்..
"மவனே..."
என்று இவரும்

"அட்ச்சுதூக்கு அட்ச்சுதூக்கு
அட்ச்ச்சூ தூக்கு"
என்று அவரும்

நம் செவிப்பறைகளை
நவீன இசையமைப்பு வடிவமாம்
"பறையிசையின்"
கம்ப்யூட்டர்
சில்ல்ல்லிர்ப்புகளைக் கொண்டு
கிழித்துத் தள்ளுகிறார்கள்.

அந்த ஜிகினாஉலகின்
வேதாள உலகத்தில்
இவர்கள் நடத்தும்
குருக்ஷேத்திரங்களுக்கு
குறைச்சல் இல்லை.
நம் ரசிக செல்வங்களோ
இதைக்கொண்டு வெறியேற்றிக்கொண்டு
சமுதாய வில்லன்களான‌

லஞ்சம்
ஊழல்
துட்டுக்கு ஓட்டு
இலவசங்களில் ஓடும்
நம் கானல் நீர் ஆறுகள்

இவற்றையெல்லாம்
அடித்து நொறுக்கப்போகிறார்களாம்.

கோபம் கொன்டவர்களிடமே
காசு வாங்கிக்கொண்டு
கோபத்தை
நன்றாகத்தீர்த்துக்கொள்ளுங்கள்
இந்தாருங்கள் அடித்து நொறுக்குங்கள்
என்று சீனாவில்
டிவி மற்றும் உல்லாச சாதன‌ங்களை
கொடுத்து விளையாட்டு காட்டுகிறார்களே
அதே
தீராத விளையாட்டுகளைத் தான்
திரை விளையாட்டுகளாய்
கலர் கலராய் இங்கு காட்டுகிறார்கள்.

அங்கே ஒரு "வடிகால் சைக்காலஜி"க்காக‌
இந்த வியாபாரம் நடக்கிறது.
இங்கே
தமிழன்
தன் மீதும்
தன் தமிழ் மீதும்
அடித்து நொறுக்கிக்கொண்டு
அழிந்துபோகும் விளையாட்டே
சினிமா எனும்
கச்சா பிலிம் விளையாட்டில்
அரங்கேறுகிறது.
"தமிழா நீ
விழித்துக்கொள்"
இது வழக்கமான முனகல் தான்.
ஆனாலும்
இதுவும் ஒரு புயல் ஆகலாம்!
அந்த புயலுக்கு
ஒரு பெயர் வைப்பதற்காகவாவது
விழித்துக்கொள்
தமிழா நீ
விழித்துக்கொள்!

=======================================================






கண்ணாடி


கண்ணாடி
==============================================ருத்ரா


கண்ணாடியில் என்ன பார்க்கிறாய்?
உன் பிம்பத்தையா?
அந்த கண்களையே உற்றுப்பார்
அதன் வழியே
அவள் கண்களின் கருவிழிக்குள்ளும்
புகுந்து கொண்டாயே!
கண்ணாடி மறைந்து போய்விட்டது.
இரண்டு ஜோடிக்கருவண்டுகள்
யாழ் மீட்டி சுருதி கூட்டி
சுற்றுச்சுழலை
ஒரு சோலையாக்கி விட்டது.
அங்கே என்ன நடக்கிறது?
மேகப்பிழம்புக்குள் இருவரும்
உலா வந்து ஊடுருவி
திளைத்துக்களிக்கிறீர்கள்.

"எனக்கு அந்தப்பூ வேண்டும்."
அவள் கேட்டு விட்டாளே
நான் ஏதாவது செய்ய வேண்டுமே.
பாய்ந்து விட்டேன்.
"படீர்"
கண்ணாடி நொறுங்கிக்கிடக்கிறது.
நானும் தான்!

==========================================

செவ்வாய், 15 ஜனவரி, 2019

அடையாளம்

அடையாளம்
======================================ருத்ரா இ.பரமசிவன்

பேனாவும் பேப்பரும் உராய்ந்து கொள்ள‌
அரிப்பெடுத்தால் முதுகு சொறிந்து கொள்ள‌
உதவிக்கு வருவது
மனிதனின் கற்பனை..சிந்தனை.
கவிதை என்று அது கொச்சையாக்கப்படுகிறது
அங்கே தீப்பொறி பறக்க‌
மனிதனின் மன இடுக்குகளின்
சிக்கி முக்கிக்கல்
கடைந்து கொடுக்கிறது.
மெல்லிய அனிச்சம் மலர்கள் போன்ற‌
காதல் உணர்ச்சிகளும் கூட‌
இந்த பற்சக்கரங்களில் தான்
கடகடத்துக்கொள்கின்றன.
மனிதன் பிறப்புக்கு முன் உள்ள‌
இருப்பு பற்றி
எழுதினால் படிக்க ஆளில்லை.
மனித மனக் குறுகுறுப்புகள் மட்டுமே
மசாலாப்பால் தருகிறது.
ஆண் பெண் பற்றிய தீப்பற்றியெரிதல்கள்
மத்தாப்பு கொளுத்தினால் போதும்.
ஆணும் பெண்ணும் அலையடிக்கும்
சமுதாய சித்திரங்கள் 
அந்த சமுதாய "சைக்காலஜி" நமைச்சல்கள்
என்றெல்லாம் 
எழுத்துக்களின் 
அழுக்கு மூட்டைகள் யாருக்கு வேண்டும்?
"சேட்"பண்ணினோமா
கன்னம் சிவந்தோமா
நகங்கள் கடித்தோமா
ஸ்மார்ட் ஃபோன் சாக்கலேட்டை
சப்பி சப்பி சுவைத்தோமா
இதுவே எழுத்து!
இதுவே படைப்பு!
சங்கமாவது வெங்காயமாவது?
தமிழ் ஒரு ஏலியன் ஆகிப்போனது.
தமிழனுக்கு 
அப்படி அது ஒரு "ஆலிவுட் படம்" ஆனால் தான்
அவனின் அடையாளம் அவனுக்கே புரியும்.

==================================================
25.04.2016

சொல் காப்பியம்

சொல் காப்பியம்
============================================ருத்ரா

"ஞெமலி மகிழ்தரு" என்ற சொல்லை ஆக்கி இச்செய்யுளை நான் எழுதியமைக்கு 01.12.2014 அன்று ஒரு நடு இரவில் படித்த "அகநானூற்றுப்பாடல்" (மணிமிடைப்பவளம்)தான் கரு.அதில் "மகிழ்" என்ற சொல் நாய் குரைத்தலை குறித்தது.கூரிய பற்களை உடைய நாய் "மகிழ"த் (குரைக்க)துவங்கியதை புலவர் வெகு நுட்பத்துடன் எழுதியிருந்தார்.
அப்போது தான் என் ஐயம் கூட தீர்ந்தது."கூரிய பற்கள் போல் இதழ்கள் கொண்ட பூவுக்கு "மகிழம்பூ" என பெயர் ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டேன்.சொல் பூவிலிருந்து நாயின் பற்களுக்கு
தாவியதா இல்லை நாய் குரைத்தலே புலவருக்கு மகிழம்பூ இதழ்களை நினைவூட்டியதா என்று தெரியவில்லை.நம் தொன்மைத்தமிழின் சொல் ஆழத்தில் பற்பல மொழிகள் ஏன் இப்படி கிடக்கக்கூடாது? என்ற சிந்தனை என்னுள் எழுந்தது.

.............

5. பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவேல் இளையர் துஞ்சின் வையெயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்
10. பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றவிரி யும்மே
.............

(அகநானூறு.செய்யுள் 122 (மணிமிடைப்பவளம்)
பரணர் பாடியது.குறிஞ்சித்திணை.இரவின் கொடிய பிடியில் துயர் உற்ற‌
தலைவியின் கூற்று.

மகளின் நினைப்பில் ஒரு நோயால் பிடிக்கப்பட்ட அன்னை ஒருவழியாய் தூங்கினாலும்,தூங்காமல் கடுமையாய் விழித்திருக்கும்
கண்களோடு நகரக்காவலர்கள் வலம் வருவார்கள்.அப்படியே வேல் ஏந்திய அந்த இளமை பொருந்திய காவலர்கள் கண் அயர்ந்தாலும்
கூரிய பல்லும் வலஞ்சுழியாய் எப்போதுமே சுருண்டுகொண்டிருக்கும்
வாலும் உடைய நாய் குரைக்கும்.எப்போதும் சத்தம்போட்டும் கொண்டிருக்கும் நாய் கூட குரைக்காமல் இருந்து தூங்கிவிட்டால் கூட பகல்போல் ஒளிவீசும் நிலவின் வெம்மை மிகுந்த கதிர்கள் விண்முழுதும் சூடேற்றி ஒரு வழியாய் அகன்ற விடியலாய் விரிந்து
படரும்...

இந்த வரிகள் இரவின் அமைதி ஒலிளால் சல்லடை ஆக்கப்படுவதை
விவரிக்கின்றன.இதில் வரும் "மகிழும்" "மகிழாது"என்ற சொற்கள் முறையே குரைக்கும் குரைக்காது என்று பொருள் உரைக்கப் படுகின்றன.கூரியபற்களோடு நாய் குரைப்பது புலவருக்கு "மகிழம்பூவை"கண் முன் கொண்டு வந்திருக்குமோ.இந்த எழுத்துக்குள்
குகை வைத்து நான் நீண்ட தூரம் சென்றேன்.அதன் குடைச்சலே
நான் எழுதிய சங்க நடைக்கவிதை இந்த "வெள் நள் ஆறு".







வெள் நள் ஆறு
===============================================ருத்ரா

ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு
நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்
அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌
மைபொதி விசும்பு விரியுளை அன்ன‌
மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா
நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.
ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்
வரிமணல் கீற வடியிலை எஃகம்
பசும்புண் பிளப்ப வெஞ்சமர்  கூர‌
அலமரல் ஆற்றா அளியள் ஆகி
கம்பலை உற்று கண்மழைப் படூஉம்
மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு
ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ
பொடிபட வீழ்க்கும் சேக்கை கண்ணே.
பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி
பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்
யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.
அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்
ஆகுவன் அறிதி.வீடத்தருதி.
மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.

===============================================
11.03.2015


மின்னற்பீலிகள் (8)

மின்னற்பீலிகள் (8)
======================================ருத்ரா


சன்னல் அருகே வந்து வந்து
நின்று விட்டு போகிறாய்.
இப்பொழுது புரிந்தது
ஏன் நிலவில்
கம்பி கம்பிகளாய்
நிழல் விழுந்திருக்கிறது என்று!

-------------------------------------------------------------

கொலுசு என்று பெயர்
யார் வைத்தார்கள்?
அது போகும் தடம் எல்லாம்
என் இதயம் உடைந்து
சிதறுகின்றதே.
உன் கொலுசு என்ன
என் இதயத்தின் காயலாங்கடையா?

-------------------------------------------------------------------


உன் மல்லிகைசரம்
என் ஜெபமாலையானது!
உன் காதோரம்
ஒவ்வொரு பூவிலும்
உன் பெயரை நான் உச்சரிப்பது
உனக்கு கேட்கவில்லையா?

----------------------------------------------------------------------




"மாதொருபாகன்"

"மாதொருபாகன்"
=============================================ருத்ரா
ஒரு மீள்பதிவு  /08.07.2016ல் எழுதியது.


மாதொருபாகன் ஒரு நாவல் அல்ல.
நாம் யுகம் யுகமாய்
முகம் பார்த்த கண்ணாடி.
அதிசயமான ரசம் பூசிய கண்ணாடி.
அழகு முகம் காட்டும்போதே
அதன் அடியில் காட்டும்
நம் ஆபாசம்.
அழகு முகம் தெரிந்தபோது
நாமம் தீற்றினோம்.
விபூதியும் இட்டோம்.
அதில் நம் வக்கிரம் தெரிந்தபோது
பிம்பத்தை
அடித்து நொறுக்கினோம்.
கண்ணாடி நொறுங்கும்.
பிம்பம் நொறுங்குமா?

மலடி என்ற சொல்லே இங்கு நோயாகி...
மனித மனத்தின் வக்கிரங்களில்
அவன் ஆத்மாவை படுகொலை செய்து...
அந்த பட்டாக்கத்தி மீண்டும் நீண்டு
பெண்மையின் உண்மையை கசாப்பு செய்து..
கருவறுக்க வந்தது பற்றிய‌
நிகழ்ச்சிகளின் நிழலே அல்லது
நிழல் காட்டும் நிகழ்ச்சிகளே
"மாதொருபாகன்."

பெண்மலடு மட்டும் பெருந்தீயாகி
பெண்ணையே எரிக்கும்.
குந்திக்கு தெரிந்த அக்கினிமந்திரம்
குப்பத்து பெண்ணுக்கு
தெரியவில்லை என்றால்
குடிசையோடு அவள் எரிவாள்.
புராணங்களா?
புற்று நோய்க்கிடங்குகளா?
சமுதாயமே இந்த மனமுறிவில் முற்றி
சங்கிலியில் கிடக்கிறது.
மூளிச்சமுதாயத்துக்கு
அறிவின் தீ மூட்ட வந்தது
"மாதொரு பாகன்"

ஆண் மலடோ இங்கு புனிதம் ஆகி
இதிகாசமும் கூட ஆகிவிடலாம்.
இறைமை என்பது இரண்டல்ல ஒன்றே
என்று
அத்வைதம் சொன்ன‌ வாய் கூட‌
"நாரியே நரக வாயில்"
என்று கூசாமல் சொன்னது.
அன்னைக்கு
எந்திரம் தந்த ஸ்லோகங்கள்
அவள் கருப்பையே
தீட்டுகளின் பாவக்கடல் என்றன.

பெண்ணின் கண்ணியம்
சல்லடைக்கண்ணாய் துளைக்கப்படவோ
இங்கு பாஷ்யங்கள் செய்தனர்?
"மாதொருபாகன்"
இந்த ஆணாதிக்க காக்காய்வலிப்பு நரம்புகளை
நிமிர்த்தி முறுக்கி மருத்துவம் செய்து
மானுட அநியாயங்களை
மனசாட்சி எனும் தராசுமுள்ளின்
கழுவில் ஏற்றி தீர்ப்பு சொன்னது.

இதை வெறும் கட்டப்பஞ்சாயத்து ஆக்கி
சாதியும் மதமும் சாணை தீட்டிய‌
கொடுவாளின் கைப்பிடி
அரசின் கையில் எப்படி விழுந்தது?
ஓட்டுவங்கிகளுக்கு மட்டும்
தூண்டில் போடும்
அந்த கட்சிகளுக்கே வெளிச்சம்.

முருகனும் கணேசனும்
பார்வதி வயிற்றில் பிறக்கவில்லையே.
இருப்பினும்
தான் பாதி அவள் பாதி
என்று
காட்டினானே அந்த‌ "மாதொரு பாகன்."
இவர்கள் மட்டும்
பொன்னாத்தாக்களை இந்த‌
அவலப்புழுதியில் புரளவிட்டது
ஏன் என்று
பேனாவையே ஒரு திரிசூலமாக்கி
எழுதிக்காட்டியது
இந்த "மாதொருபாகன்!"
என்னும் எழுத்துப்புயல்.

==============================================

எழுச்சிப்பொங்கல்

எழுச்சிப்பொங்கல்
===================================ருத்ரா

மண்பானையில்
பச்சரிசிப்பொங்கல்
பால் பொங்குவதற்கு
ஓசை கிளப்புகிறாய்!
தமிழா!
உன் மனப்பானை
ஓலமிடுவது உனக்கு கேட்கிறதா?
சம்ஸ்கிருத சாமிகளுக்கும்
அவர்கள் தந்த சாதிகளுக்கும்
தமிழ் என்பது அவலங்களின்
ஓலம் தானே!
பொங்கலோ பொங்கல்
என்று முழங்குகிறாயே!
அந்த முழங்கல் தான்
நமக்கு இனிக்கும் தமிழ்ப்பொங்கல்!
அந்த மண்பானைக்குள்
படுத்திருக்கும்
தமிழின்
எழுச்சிப்பொங்கல்
எழும்வரை
இந்த குப்பை கூளங்கள்
குடமுழுக்குகள்
நடத்திக்கொண்டிருக்கட்டும்
கவலையில்லை.
வெறும் பக்திப்பூச்சிகளாய்
அர்ச்சனைத்தட்டுகளுடன்
வரிசையில் நின்றுகொண்டிருக்கட்டும்
கவலையில்லை.
லட்சம் லட்சமாய்
பாத யாத்திரை கூட செல்லட்டும்
பரவாயில்லை.
இவர்களுக்குள் இருக்கும் இந்துக்கள்
தமிழ் மொழியின் நெருப்பாறுகள்.
காவி நிறம் கொண்டு
இந்த கனற் பேரியாற்றின்
பஃறுளிகளை போர்த்தமுடியாது.
தமிழே எழு!
தமிழே விழி!
எனும் முரசுகள் ஆர்க்கும்
மனங்களுக்குள்
ராமனையும் அனுமாரையும்
கதைகளாகக் காய்ச்சி ஊற்றமுடியாது.
வில் புலி மீன் எனும்
வரலாற்றின் வெளிச்சங்களை
ரத்த சிவப்பணுக்களாகக்கொண்ட
தமிழர்களின் அந்த‌
"பொங்கலோ பொங்கல்"
விண்முட்டி முழங்கட்டும்!
பொங்கலோ பொங்கல்!

====================================================

திங்கள், 14 ஜனவரி, 2019

கண்ணாடி சில்லுகள்

கண்ணாடி சில்லுகள்
==============================================ருத்ரா

உடை தரிக்கும் முன்
கண்ணாடி பார்த்தேன்.
நான் உன்னிப்பாக‌
கண்ணாடி பார்ப்பது
மழித்தலின் போது
மட்டும் தான்.
இன்று ஏன் பார்க்கிறேன்
எனககே தெரியவில்லை.
நீயும் உன் முகரையும்
என்று
முகத்தில் ஓங்கி
ஒரு குத்து விடாத ஜீவன்
இந்த கண்ணாடி மட்டும் தானே.
பல தடவை
நான் என் முகத்தின்
எட்டு கோணல்கள் காட்டி
உதடு பிதுக்கியும்
கண்களை உருட்டியும்
இதை
என்ன பாடு படுத்தியிருப்பேன்.
எப்படியெல்லாம்
பொறுத்துக்கொண்டது.
என் பிம்பம்
அதில் ஒட்டிக்கொண்டு
என்னையே
கிச்சு கிச்சு மூட்டியது போல்
எத்தனை விளையாட்டுகள்
அதனிடம்.
இன்னும் ஒரு நாள் தானே.
காத்திருப்போம்.
பிம்பம் பார்க்க‌
இன்னொரு பிம்பம்
வந்துவிடுமாமே.
இப்படித்தான் சொன்னான்
கவிதையாக‌
என் நண்பன் சொன்னான்
ஒரு "மனைவி" என்பவளைப்பற்றி.
கண்ணாடி பார்ப்பது போல்
பார்த்துக்கொண்டே இருக்கலாமா?
எனக்கு ஆவல்
கட்டுக்கடங்கவில்லை.
பெண்ணை நான் பார்க்கவில்லை.
இன்று காலை தான்
இங்கு வந்து சேர்ந்தேன்.
அன்று மாலையே ரிஸப்ஷன்.
பெண்ணின் முகம் ஏறிட்டேன்.
திடுக்கிட்டேன்.
அதிர்ச்சியுற்றேன்.
ஒரு
அமாவாசை முகம் பார்க்க‌
ஒரு
பௌர்ணமியையா
எதிரே நிறுத்துவார்கள்?
என் பிம்பத்தை
அவள் பிம்பத்தில் பார்ப்பதா?
ஆயிரம் மடங்கு
அழகிய பிம்பம்
அவளுடையது.

ஒரு வழியாய்
மறுநாள் காலை
மாப்பிள்ளை அலங்காரத்துடன்
கண்ணாடியின் முன் போய் நின்றேன்.
என் பிம்பங்களை வைத்து
எத்தனை முறை
எப்படியெல்லாம்
அதை வதம் செய்திருப்பேன்.
எனக்குள் கோபம் கொளுந்துவிட்டது.
நரம்புக்குள்
சூரியனின் கொரானவே
கொப்புளித்து விட்டது.
ஓங்கி குத்துவிட்டேன்
கண்ணாடியில்
என் முகத்தின் மீது..
கண்ணாடியின் சார்பாக‌
என்னை பழி வாங்க..
பிம்பம் சில்லு சில்லுகளாய்
தெரித்தது..
கைவிரல் முட்டியெல்லாம் ரத்தம்.
கீழே... கீழே....
கெட்டி மேளத்துக்கு
காத்திருக்கும் கூட்டம்.
திமு திமு என்று வந்து விட்டது.
எல்லாவற்றையும்
துடைத்து வழித்துப்போட்டு விட்டார்கள்.
"மாங்கல்யம் தந்துனானே"
மந்திரமும் துவங்கிவிட்டது.
பெண் வீட்டுக்காரர்
ஒருவர் பெருமையாய்
பீற்றிக்கொண்டார்..
கை நிறைய சம்பாதிப்பவனாம் நான்.
இருட்டுப்பிண்டத்தின் கையில் தாலி.
எனக்காக ஒரு நிலவு
சிரித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தது.

================================================
25.11.2013

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

விஸ்வாஸம் (2)

விஸ்வாஸம் (2)
================================================ருத்ரா

மசாலாப்போஸ்டர்களும் டீசர்களும்
புழுதி கிளப்பி
புழுதியடங்கிய பின்
"புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கும்"
கிராமக்காட்சிகள்
கொஞ்சம் கொஞ்சமாக‌
கீழிறங்கி
"தல"யை
அழகிய முகமாய்
உணர்ச்சிக்கொந்தளிப்பில்
பாசப்பறவைகள் சிறகடிக்க‌
வைக்கிறது படம்.
விட்டால் அல்லது நினைத்திருந்தால்
பாசமலர் "சிவாஜி"ரேஞ்சுக்கு
சிவா அவர்கள் கொண்டு போயிருக்கலாம்.
ஆனால் அந்தக் காலத்து நெகடிவ் சென்டிமெண்டுகள்
இந்த மசாலாத்தனத்தையெல்லாம்
சுரண்டி அழித்துவிடும்.
ஆனால்
சிவாஜி மரணமடையும் போது
சாதாரணமாக இறந்தார்.
ஆனால் பாசமலரில் அந்த‌
"மரணக்காட்சியில்" தான்
இறந்து காட்டி
வாழ்ந்து காட்டினார்.
அதனால் அவர் காலமானது கூட‌
ஏதோ எமனே பீம்சிங்காய் வந்து
அந்த இறுதிக்காட்சியை
ஷூட்டிங் செய்து அவரோடு
கூட்டிக்கொண்டு போன மாதிரிதான் இருந்தது.
அஜித்தின் உருக்கமான நடிப்பு தான்
இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.

மற்றுமொரு பவர்ஃபுல் ப்ளஸ்
நயன் தாரா.
கிராமமும் அந்த ட்ராக்டரும்
அஜித்தை
கம்பீரமாய் காட்டிய போதும்
கிராமத்துக்குடும்ப பாங்கை
தெள்ளிய இளநீர் போல் "தெறிக்க"விட்டு
குளிர்ச்சி மழை தூவியிருக்கிறார்
நயன் தாரா.

தன் பெண்ணுக்கு
விசில் அடிக்க கற்றுத்தரும்போது
அஜித் தன் மூச்சுக்காற்றில்
நடிப்பின் எல்லா பரிமாணங்களையும்
காட்டி விட்டார்.
மக்கள் முன்னே இறுகிய பாறையாய்
நிற்கும்
அவர் மனத்துள் சுரக்கும்
பனை நுங்கின் மெல்லிய பாசம்
மகளை பூவின் ஆடையாய்
போர்த்தி விடுகிறது.
நம் நாட்டில் விவசாயம் இப்போது
கந்தலாய்க்  கிடந்தபோதும்
அது எழுச்சி பெரும் கனவை
அந்த ஏர் தூக்கிய கனமான காட்சியில் 
அஜீத்திடம்
"அட்லஸின்" அசுரத்தனம் அனாயாசமாய்
வெளிப்பட்டது.
தேனி மக்களின்
வீரம் பொங்கும் மொழிக்குள்ளும்
அந்த மண்துளிகள் சிலிர்க்கும்
சிலம்பு பரல்களுக்குள்ளும்
புகுந்து புறப்பட்டு வருகிறார் அஜித்
ஒரு மாபெரும் வெற்றியுடன்!

===============================================================


வெள்ளி, 11 ஜனவரி, 2019

எல்லாப்பெருமையும் கார்த்திக் சுப்பராஜுக்கே....

எல்லாப்பெருமையும்  கார்த்திக் சுப்பராஜுக்கே.....
====================================================ருத்ரா


ரஜினி நெக்குருகி நெகிழ்ந்து
சொன்ன வார்த்தைகள் இவை.

"ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே"

முள்ளும் மலரும் திரைப்படத்தில்
முத்திரை பதித்த‌
அந்த காளியை பத்திரமாக
அதே மிடுக்குடன்
அதற்கும் மேல் "மாஸுடன்"
பேட்டயில் இப்போது
ரஜினியை உலவ விட்டு
உலகத்தையே
ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்
கார்த்திக் சுப்பராஜ்.
சிறுவயதிலேயே
அவருக்குள் ஊறிப்போன‌
ரஜினியை
அப்படியே ஒரு கிம்பர்லியிலிருந்து
பெயர்த்து எடுத்த வைரப்பிழம்பாய்
பட்டை தீட்டிக்காட்டியிருக்கிறார்.

விஜய சேதுபதி
அந்த சினிமாவுக்குள்ளும்
தனக்கென்று தனியாய்
ஒரு சதுரத்தை வெட்டிக்கொள்கிறார்.
நடிப்பின் ஒரு புதுமுகம் போல்
வந்து போகிற மாதிரி தோன்றினாலும்
விழாவில்  ரஜினியே பாராட்டிய
நுட்பம் நன்றாகவே தெரிந்தது.
இது போல்
சசிகுமார் பாபிசிம்ஹா போன்றவர்களும்
படத்தை தொய்வு அடைய விடாமல்
நன்கு முறுக்கேற்றி இருக்கிறார்கள்.
வில்லனாய் வரும் அந்த இந்தி நடிகர்
நமக்கு மிகவும் சகஜமாகிப்போனது போல்
ஒரு அற்புத பாத்திரத்தை
நம் முன் காட்டிவிட்டு போய்விட்டார்.

தமிழ் சினிமாவில்
த்ரிஷாவைத்தொடர்ந்து
சிம்ரனும்
காதல்குமிழிகள் மிதக்கும்
அந்த
"இரண்டாவது வசந்தத்தில்"
நுழைந்திருக்கிறார்.
புதிய சிம்ரன் சிரிப்பில்
புதிதாய் ஒரு மின்சாரக்கவர்ச்சி.
அனால் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம்
தலை விக்கில்
வெள்ளையும் கருப்புமாய்
ஒரு "நந்தவனத்தை" மாட்டிக்கொண்டு
காதல் காட்சியையும்
கலக்கி விடுகிறார்கள்.
ஆனால் அந்த முதுமையின்
இனிமையையும் நுண்மையையும்
உணர்வின் பூக்களாய்
மழை பொழிந்து நம்மை
கிளர்ச்சியடையச்செய்வதில்
நடிகர் திலகத்துக்கு
அடுத்த படியாய் ரஜினியும்
வென்றிருக்கிறார்.
ஆனால் "ஸ்டைல் மன்னன்" என்னும்
கிரீடத்தை அவர்
கடைசி வரை கழற்றவே இல்லை.
அதிலும் நகைச்சுவையில்
புது புது மைல்கல்லை நோக்கி
ஓடுகிறார்..ஆடுகிறார்.
தியேட்டர்கள் எல்லாம்
அதிர்ந்து குலுங்குகின்றன.
இவர் அரசியலுக்கு வந்தால்....
என்ற நினைப்பையே
நம்மிடமிருந்து கழற்றியெறிந்து
வீசி விடுகிறாரே!
நடித்துக்கொண்டே ஆண்டாலும் சரி
ஆண்டு கொண்டே நடித்தாலும் சரி
அவர் ஒரு சூப்பர்ஸ்டார் தான்.

====================================================
















வியாழன், 10 ஜனவரி, 2019

"பேட்ட"யும் "விஸ்வாஸ "மும்...

"பேட்ட"யும் "விஸ்வாஸ "மும்...
================================================ருத்ரா


"பேட்ட"
"விஸ்வாசம்"

இளைய தலைமுறைகளுக்கு
நம் கனிவான வணக்கம்!
இந்த போஸ்டர்களிலும் டீஸர்க‌ளிலும்
நீங்கள் பொங்கும் நுரைகளாய்
நொறுங்கிப்போனீர்கள்.
திரைப்படம் வந்தபின்னோ
கஜாப்புயலால
வீழ்த்தப்பட்ட தென்னைமரங்கள்
ஆகிப்போனீர்கள்.
கட் அவுட் சாம்ராஜ்யம்
நிறுவுவதற்கு மட்டுமே
இப்படி பால்குடங்களுடனும்
மாலைகளுடனும் அலைகின்ற‌
இளைஞர்களே
உங்கள் உண்மையான
ஜனநாயக சாம்ராஜ்யம்
கொள்ளை போய்க்கொண்டிருப்பதை
கொஞ்சமும் உணர்ந்து கொள்ளவில்லையே.
வெறும் நிழலை
மதுச்சரக்காய் உங்களுக்கு
ஊற்றி ஊற்றி கொடுக்கிற‌
இந்த செல்லுலோஸ் டாஸ்மாக் கடைகளை
என்றைக்கு
புறந்தள்ளப் போகிறீர்கள்?
தீப்பற்றி எரியும் உங்கள் கனவுகள் எல்லாம்
இவர்களின்
வசூல்களில் சூல் கொண்டு
கல்லாப்பெட்டிக்குள்
கர்ப்பம் தரிப்பதால்
உங்கள் ஓட்டுப்பெட்டிகள் எல்லாம்
மலடாகிப்போயின.
இந்த நடிகர்கள் "கலைப்படங்களில்"
தங்கள் நடிப்பைக்காட்டினால்
உலக தரத்தில்
நம் படைப்புச் சிந்தனைகள்
புதுப் புது சிகரங்களைத்தொடும்.
ஆனால்
கார்பரேட் மன்னர்கள்
தங்கள் தூண்டிலில் சொருகிய‌
மசாலாத்துண்டுகளை
கவ்விக்கொள்ளவே
நீங்கள்
கூட்டம் கூட்டமாக அலையடிக்கிறீர்கள்.
தந்தை மீது "விஸ்வாசமாக"
இருக்கவேன்டிய மகன்
"விஸ் வாசம்" சினிமாவுக்கு
காசு தராததால்
தந்தையையே பெட்ரோல் ஊற்றிக்கொளுத்த
முயலுக்கும் அளவுக்கு
போகக்காரணமாய்
உங்கள் ட்விட்டர்கள் தீப்பந்தங்களோடு
அலைகின்றன.
மகனுக்கு "அஜித்" என பெயர் வைத்த
அந்த அப்பாவுக்கு
அஜித் படம் பார்க்க காசு தரவில்லை
என்றால்
அவருக்கு "அஜித் விஸ்வாஸம்" இல்லை
என்று மகன் சீறியிருப்பானோ?
"கோட்ட"ய பிடிப்பதாய்
"பேட்ட"
பொய்ப்பாய்ச்சல் காட்டுவதால்
நம் சமுதாயக்கடமைகள் எல்லாம்
தடம் மாறி
சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன.
"பேட்ட"யா? விஸ் வாஸ "மா?
பட்டிமன்றம் எல்லாம் சரிதான்.
ஆனால் அது நடப்பது
எங்கே என்று தெரியவில்லை.
"தல"க்குள்ளா? "தல"க்கு வெளியிலா?

==================================================

==================================================


அரக்குமாளிகை.


அரக்குமாளிகை.
=======================================ருத்ரா


மாயமில்லை.
மந்திரமில்லை.
மோடி மஸ்தான்
வித்தையும் இல்லை.
வாருங்கள் எல்லோரும்.

தமிழகத்தில் யாருடனும்
கூட்டணியில்லை.
தமிழகத்தில்
கூட்டணியின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன.

ஏதாவது புரிகிறதா?

கதவு திறந்தே கிடக்கிறது.
எதிலிருந்து எதற்குள் போக‌
அது திறந்து கிடக்கிறது?
அதற்கு
உள்ளும் இல்லை
வெளியும் இல்லை.
ஏனெனில்
அங்கு வீடே இல்லை.
கதவுகள் மட்டும் செய்து மாட்டி
திறந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த அரக்குமாளிகைக்குள்
போகாமலேயே
நெருப்பு பற்றிக்கொள்ளும்
அபாயத்தை
தந்திரமாக நிர்மாணிக்கும்
பழைமை வாதிகளின்
பசப்பல்களில்
எழுதப்பட்ட மகாபாரதம் இது.

ஓட்டுகளில் நடைபெறும்
இந்த குருக்ஷேத்திரம்
சாதி மதங்களின்
மரண வியூகங்களை
மடக்கிச்
சுருட்டி வைத்துக்கொண்டிருக்கிறது.
துச்சாதனர்கள் வருகிறார்கள்.
மக்களே உங்கள்
ஜனநாயகம் எனும்
கற்பை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

=====================================================



நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
==========================================================ருத்ரா


"ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை"
என்று எழுதிய கண்ணதாசனின்
அடுத்த வரி தான் அது!

கடவுளைத்தேடி
எழுதாத ஸ்லோகங்கள் இல்லை.
லட்சம் லட்சமாய்
ஆத்மா வென்றும்
பிரம்மம் என்றும்
ஓம் என்றும்
அதன்
அகர உகர மகர‌
முத்தோல்கள் உரித்து
துரீயம் எனும்
நான்காவது படலத்தையும்
துளைத்துப்பார்த்தாயிற்று.
அப்புறமும்
அந்த வெங்காயத்தோல் சுரங்கம்
"வெறும்"காயத்தை தானே காட்டுகிறது.
ஆகாயத்தையே
நூலாக்கி ஏணியாக்கி
ஏறிப்பார்த்தாயிற்று.
ஒரு கடவுளின் அடிமுடி தேடிப்போய்
இரு கடவுள்களும்
ஏமாந்து அலுத்தது தான் மிச்சம்.
இந்த விரக்தியில்
ஒருவன் நாத்திகன் ஆனால்
அதற்காக அந்த கடவுள்
"ஐயோ நம் பக்தன்
நம்மை விட்டுப்போய்விடுவானோ?"
என்று பயமடைந்து
எதிரே வந்து காட்சியளிக்கப்போவதில்லை.
தன் பின்னால் விழும் நிழலை
நோக்கி
ஒருவன் முன்னால் முன்னால்
தேடிக்கொண்டு போவது போல் தானே இது?
அறிவு அறிவைத் தேடுவதே
பேரரறிவு!
மெய்யறிவு!
அறிவு அறிவைக்கொண்டு அறிவைத்தேடும்
முயற்சியே மனித முயற்சி.
பயம் திகில் பக்தி  வியப்பு இன்பம் துன்பம்
இவற்றைக்கொண்டு
எதைத்தேடுகிறோம் என்ற‌
அறிவும் இல்லாமல்
எதையோ தேடி தேடி
கண்ணீர் பெருக்கி
காதலால் கசிந்துருகி
என்ன பயன்?
ஆத்திகம் நாத்திகம்
இரண்டும்
ஒன்றுக்கொன்று
மாற்றிக்கொள்ளும்
முகமூடிகள் அல்ல!
ஒன்று
இன்னொன்றுக்கு
எதிரானது அல்ல.
கடவுளைத் தேடுவது
ஒரு விளையாட்டு என்றால்
கடவுள் என்று இல்லாத
இன்னொன்றைத்தேடுவதும்
ஒரு விளையாட்டே.
இயற்பியல் கணிதவியலின்
கனமான சூத்திரங்களைக்கொண்டு
அறிவின் பிழியல் ஒன்றை
முயற்சிக்கும் மனிதன்
தன் சிந்தனைப்பாதையில்
முன்னேறுகின்றான்.
அவனுக்கு லட்சியம் கடவுள் அல்ல.
இருப்பதையும் இல்லாததையும்
சேர்த்து தேடுவது மட்டுமே
அவன் லட்சியம்!
ஏன்? ஏன்? ஏன்?...
என்ற கேள்விகளின் பின் செல்பவன்
நாத்திகன்.
கையில் சுண்டல் இருக்கிறது.
ஆம்.இதுவே போதும்.
ஆம் ..ஆம்..ஆம்
என்று ஒரு வேலியைக்கொண்டு
தன்னை இருளாய்ச் சுற்றிக்கொள்பவன்
அல்லது
அந்த வேலியாக சுற்றிக்கொண்டிருப்பவன்
ஆத்திகன்.
கள்ளிக்குப் போட்ட முள்ளின் வேலி இது!
இருட்டின் வேலியை எல்லாம் உடைக்கும்
அறிவின் ஒளி அது!

============================================================


============================================================




புதன், 9 ஜனவரி, 2019

ஆயிரம் ரூபாய்

ஆயிரம் ரூபாய்
=========================================ருத்ரா

பொங்கல் பரிசாக‌
குடும்ப அட்டை மக்களுக்கு
அரசாங்கம்
மழை பொழிந்திருக்கிறது.
ஐந்து வித அட்டைகளில்
எந்த அட்டைக்கு
பொங்கல் வைக்க‌
பானை கூட இல்லை
எனும் நிலை?
நீதி மன்றமே
ஆராய்ச்சி மணி அடித்திருக்கிறது.
தேர்தல் தேதி அறிவித்த பின்
அந்த கரும்புத்துண்டில் கூட‌
இன்னொரு துண்டு
கொடுத்து விடக்கூடாதே!
தேர்தல் ரத்து செய்தபின்
அவசரமாய் இந்த கரன்சி
தூண்டில் முள்ளில்
செருகப்பட்டு விட்டது.
தேதி அறிவிக்க வேண்டிய தேவையே
இல்லாமல்
தேர்தல்  சூழ்நிலையை
உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
பெரும்பான்மை காட்டவேண்டிய‌
பதற்றம் இல்லை.
பரபரப்பு இல்லை.
அதைப்பற்றிய உறுத்தல் தேவையில்லை.
அரசியல் விஞ்ஞானம் என்றால்
அதன் தர்க்க வடிவமான‌
கோட்பாடுகள் எல்லாம்
பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில்
ஏதாவது இருக்குமே
அந்த "ஏதாவதையும்"கூட‌
குப்பையில் எறிந்து விடலாம்.
ஏனெனில் இலவசம் எனும்
பேய் பிசாசுகள்
பிய்த்துத்தின்ற
"ஜனநாயகத்தின்"சடல மிச்சங்களும்
அந்த குப்பையில் தான்
கிடக்கின்றன.

========================================================










திங்கள், 7 ஜனவரி, 2019

அட்சுதூக்கு..அட்சுதூக்கு..அட்ச்ச்சுதூக்கு

அட்சுதூக்கு..அட்சுதூக்கு..அட்ச்ச்சுதூக்கு
==============================================================ருத்ரா

தலங்க்ற காவியத்துக்கு
இப்டி அடிச்சு தூக்கி
தொங்க விடுறத விட்டா
வேற எதுவும் எழுத
ஒண்ணுமே இல்லையா?
தலையங்கமே இல்லாத கட்டுரையா
"தல"
அவர் ஒரு நடிப்புச்சுரங்கம்
என்பதில் ஐயமில்லை.
ஆய கலைகள் அறுபத்து நான்கில்
கணிசமாய் நிறைய‌
கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.
வெறும் மசாலா கதாநாயகராய்
பல்லைக் கடித்து மீசை முறுக்கி
உறுமிக்காட்டும்
செல்லுலோஸ் சிங்கமா அவர்?
மக்கள் எவ்வழி
மன்னன் அவ்வழி
என்பது போல்
ரசிகர் எவ்வழி
நடிகர் அவ்வழி
என்பதாய்
நம் கோடம்பாக்கத்து
அட்டை ராஜ்யங்கள் ஆளப்படுகின்றன.
சத்யஜித்ரே படங்கள்
ஒவ்வொன்றும்
திரைப்படக்கல்வியின்
ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள்
எனலாம்.
அஜித் அக்கலையின்
ஒரு நடிப்புக்கருவூலம்.
இப்படி கட் அவுட் கலாச்சாரத்துள்
அடக்கப்பட்டு
கொச்சைப்படுத்தப்படுவதால்
என்ன பயன்?
"சமஸ்காரா" தொடங்கி
எத்தனை கன்னடத் திரைப்படங்கள்
உலக தர விரிசையில்
வலம் வந்தன?
அஜித் ஒரு "ஆசை நாயகன்"
மட்டும் அல்ல.
திரைப்படம்
ஒரு இலக்கியம் ஆகும்போது
நடிகர்களின்
நரம்பு "தெறி"ப்புகளில் எல்லாம்
அந்த உயிரோட்டமான கதை மட்டுமே
துடிக்கும் சிலிர்க்கும்.
அஜித் அவர்களிடம்
அத்தகையதோர்
நடிப்புக்காவியம் உண்டு.
அவரை இப்படி
"தல""தல" என்ற
கூச்சல் காடுகளில்
புதைய விடுவது நல்லது அல்ல!

=======================================================

"இப்படிக்கு உன்..."


"இப்படிக்கு உன்..."
==========================================ருத்ரா

என்ன அடைமொழியுடன்
அவளுக்கு எழுதும் இந்த‌
முதல் கடிதத்தை
முடிப்பது?
உள்ளே ஒரு காதல்குருவி
கத்தியது.
"முடிப்பதா?
முட்டாள்.
காதலுக்கு முடிவே இல்லை.
ஒரு முற்றுப்புள்ளி வைத்து
சொற்களைக்கொண்டு
கல்லறை கட்டி விடாதே"
அந்த குருவி கொத்தி கொத்தி
என் இதயம் சல்லடையாகி விட்டது.
மீண்டும் குருவி குறு குறுத்தது.
"அது உன் இதயமா?
யார் இதயம் யார் இதயத்தில்
துடித்துக்கொன்டிருக்கிறது தெரியுமா?"
குருவியா? குருவா?
தெரியவில்லை.
நூற்றுக்கணக்காய்
காகிதங்கள் கசக்கி எறியப்பட்டு
காலடியில் இடறுகின்றன.
கடிதங்கள் முற்றுப்பெறாத
கடல் அலைகளாய் என்னை
விழுங்கிக்கொண்டிருக்கின்றன!

==============================================================

















இடைத்தேர்தல் குறும்பாக்கள்.




இடைத்தேர்தல் குறும்பாக்கள்.
=====================================ருத்ரா



திருவாரூர்


ஒரு போலியான
பாரதப்போருக்கு
சகுனிகள் உருட்டிய‌
தாயக்கட்டை.


தி மு க‌


போருக்குப் புறப்பட்ட போதும்
சூழ்ச்சிகாரர்களின்  வியூகத்தை
அம்பலப்படுத்தி விட்டது.


அ தி மு க‌


வீழ்ந்து கிடக்கும் தென்னைமரங்களை
காரணம் காட்டினாலும்
மவுனமாக அவர்கள் வீழ்த்திய‌
ஜனநாயக மரத்துக்கு ஏது நிவாரணம்?


பி ஜே பி


திருவாரூரா?
அப்படி என்றால் என்ன?
நோட்டாவின்
நிழல் மட்டுமே தெரிகிறது.


அ ம மு க‌


அன்று குக்கர்
இன்று இட்லி
அம்மாவின் ஆவி
எங்கள் பக்கமே!


தேர்தல் அறிவிப்பு


நுனிக்கிளையில் உட்கார்ந்து
அடிக்கிளையை வெட்டியதும் கூட
ஏதோ ஒரு தோல்விப்புயலின்
தாக்கம் தானோ?


=======================================================



















ஞாயிறு, 6 ஜனவரி, 2019

"காந்தள் நெகிழும் கடிவிரல் .."



"காந்தள் நெகிழும் கடிவிரல் .."

__________________________________ருத்ரா இ பரமசிவன்.



"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"


பொருள்
==========================================


தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால்
கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது
வளைவு வளைவுகளாய் இருக்கும்
அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.
அந்த கூந்த‌லைப்போலவே அலை அலையாய்
அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து
களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே!
தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன்
பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும்
ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.
அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக"
என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

=================================================
sanganadaikkavithai
composed by RUTHRAA E PARAMASIVAN
26.05.2017

நீச்சல்

நீச்சல்
========================================ருத்ரா

பட்டர் ஃப்லை ஸ்டைலில்
அந்த நீல நீர்ப்பிழம்பில்
மூச்சுகள் நிறுத்தி உயர்த்தி
ஒரு ராட்சத ரெக்கையை
என் நுரையீரல்களின்
கூடுகளிலிருந்து
பரப்பினேன்.
அந்த கடலோரத்தில்
இந்த நீச்சல் விளையாட்டிற்கே
பாத்தி கட்டியிருந்தார்கள்.
மீன்களுடன்
கெல்ப் பாசிச்சுருளுடன்
அக்கொடியின் தொண்டைக்காய் போன்ற‌
காற்றடைத்த காய்களுடன்
நீச்சல்
என் எலும்புகளையும் தசைகளையும் கொண்டு
அந்த பிரபஞ்ச சிலேட்டில்
ஏதேதோ கிறுக்கிக்கொண்டிருந்தது.
ஒரு முக்குளி போட்டு
தரையோடு தரையாக‌
பரவினேன்.
அந்த உயிர் விளிம்பில்
என்னென்னவோ பிக்காஸோ ஓவியங்கள்.
திடீரென்று
என் கிண்ணத்திலிருந்து
தூரிகை தொலைந்து போனது.
வண்ணக்குழம்புகள்
குமிழிகள் பூக்க‌
நான் எங்கோ தொலைந்து போனேன்.
அரைகுறை ஓவியத்தில்
அந்த கான்வாஸ்
கரைந்தே போய்விட்டது.

===============================================================







பைனாகுலர் (கவிதைகள்)

பைனாகுலர் (கவிதைகள்)
======================================ருத்ரா இ பரமசிவன்

இரண்டு கண்கள் வேண்டும்
ஒரே பார்வைக்கு.
இந்த பைனாகுலர் பார்வையில்
ஆயிரம் கண்ணோட்டங்கள்
இருக்கலாம்.
அவையே இங்கு கவிதைகள்.

--------------------------------------------------------------------------------

புல்லைவிட
அதை ருசித்துத் தின்றன‌
அந்த எருமை மாடுகள்.
தவிடு புண்ணாக்கு கூட‌
அப்புறம் தான்
என்று
கசக்கி கசக்கி தின்றன.
தெருமுனையில்
காகித குப்பைகளாய்க்கிடந்த‌
ஓட்டுக்காகிதங்களை.


‍‍‍‍_______________________________________________1



ஏத்தி விடப்பா!
தூக்கி விடப்ப!
என்று
எகிறி எகிறி வந்த‌
அந்த பக்தர்கள்
திமு திமு என்று
கூழாக்கிச் சென்றனர்.
காயங்களில் கீழே கிடந்தவர்கள்
மணிவயிறு தாங்கிய மங்கையர்கள்.
"மணிகண்டன்"களுக்கு
பிரம்மத்தின் படைப்பு வாசல்கள்
கல்லறைகளாகத்தெரிந்தால்
அந்த மகரஜோதி கூட
இருட்டின் கரும்பிழம்பாகத்தானே
தெரியும்!

___________________________________________________2


நெல்லுமணிகள் எதற்கு?
ஆன் லைனில்
சிலிகான் ரவைகளில்
வைட்டன்மின்களை
பூசி வைத்துக்கொண்டால் போயிற்று.
எதற்கு காளையும் பசுவும்?
எதற்கு தென்னை மரங்கள்?
டெர்மினேட்டில் வருகிற‌
மண்டையோட்டு சிதலங்களில்
சர்க்யூட் சமாச்சாரங்கள்
செயற்கை எச்சில் வடித்து
செயற்கை ரத்தச்சேற்றில்
முடியப்போகும்
நம் கூகிள் வயல்களை
உழுது கொன்டிருப்போம்
வாருங்கள்

_______________________________________________3


திரைக்கதைகள்.
கனல் பொறியும் வசனங்கள்.
ஒற்றை வரித் தீம்கள்.
குத்தாட்டங்கள்.
வானில் பறந்து பறந்து வந்து
வில்லன்களை
அடித்து சலவை செய்யும்
நிழலின் வீரப்புலிகள்.
அன்று பாபு பாய் மிஸ்திரி
இல்லாவிட்டால்
விட்ட்டலாச்சார்யா.
இன்று கிராஃபிக்சின்
அம்புலிமாமா கதைகள்.
சமுதாயத்தின்
மரண வலிகளுக்கு
இப்படி சுகமாய்
சொரிந்து விட்டால் போதும்!
நம் சித்திரத்தை மாற்ற‌
சினிமா எனும்
சித்ரவதைகள் எத்தனை? எத்தனை?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________4


இளைய தலைமுறைகளின்
மூளைக்கபாலம்
கைகளில்
இடம் மாறியது.
எண்கள் ஒளிகசியும்
அந்த செல்பேசிகளில்
உலகக்கோளம்
நசுங்கிக்கிடக்கிறது

‍‍‍‍‍‍___________________________________________________5


இந்த ட்விட்டர்களை
கூட்டிப்பெருக்கி அள்ளினால்
நகராட்சி குப்பைத்தொட்டிகள்
தோறும்
மில்லியன் மில்லியன் மில்லியன்
லைக்குகள்.
முக "நூல்கள்" கொண்டு
திறந்து கிடக்கும்
நம் மானம் மறைக்கும்
ஆடை நெய்ய முடியுமா?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________6


ராமன் சிலைக்கும்
இங்கு
பத்து தலைகள்.
அண்ணாந்து பார்க்க முடியாத
உயரத்தில்...
அத்தனையும்
அதிகாரக்குவியல்கள்!


__________________________________________________7


பின் நவீனத்துவம் கொண்டு
ஒரு பட்டம்பூச்சிச்சிறகில்
கவிதை கிறுக்கினேன்.
கையெல்லாம் ரத்தம்.
பட்டாக்கத்தி
அதற்குள் எப்படி வந்தது?


‍‍‍‍‍‍_______________________________________________8


நிலாவைக்காட்டி
அம்மா சோறு ஊட்டினாள்.
குழந்தை
அந்த நிலா சைஸ் இட்லி கேட்டது.
"அப்பல்லோ"வுக்கு
சொல்லியிருக்கிறேன்
என்றாள் தாய்.
அது அமெரிக்காக்காரன்
ஏவி ஏவி விளையாடும்
விண்கோள்.

_____________________________________________9


தட்டாம்பூச்சியின்
கண்ணாடிச்சிறகை
பிய்த்து பிய்த்து
அழகு பார்த்தார்கள்..
கவிதை என்று
எழுதி எழுதிப்பார்த்து.

_____________________________________________10


சனி, 5 ஜனவரி, 2019

ஊசியிலைக்காடுகள்


ஊசியிலைக்காடுகள்
_____________________________________ருத்ரா இ பரமசிவன்
(கவிதைகள்)

புல்லைவிட
அதை ருசித்துத் தின்றன‌
அந்த எருமை மாடுகள்.
தவிடு புண்ணாக்கு கூட‌
அப்புறம் தான்
என்று
கசக்கி கசக்கி தின்றன.
தெருமுனையில்
காகித குப்பைகளாய்க்கிடந்த‌
ஓட்டுக்காகிதங்களை.


‍‍‍‍_______________________________________________1



ஏத்தி விடப்பா!
தூக்கி விடப்ப!
என்று
எகிறி எகிறி வந்த‌
அந்த பக்தர்கள்
திமு திமு என்று
கூழாக்கிச் சென்றனர்.
காயங்களில் கீழே கிடந்தவர்கள்
மணிவயிறு தாங்கிய மங்கையர்கள்.
"மணிகண்டன்"களுக்கு
பிரம்மத்தின் படைப்பு வாசல்கள்
கல்லறைகளாகத்தெரிந்தால்
அந்த மகரஜோதி
இருட்டின் கரும்பிழம்பாகத்தானே
தெரியும்!

___________________________________________________2


நெல்லுமணிகள் எதற்கு?
ஆன் லைனில்
சிலிகான் ரவைகளில்
வைட்டன்மின்களை
பூசி வைத்துக்கொண்டால் போயிற்று.
எதற்கு காளையும் பசுவும்?
எதற்கு தென்னை மரங்கள்?
டெர்மினேட்டில் வருகிற‌
மண்டையோட்டு சிதலங்களில்
சர்க்யூட் சமாச்சாரங்கள்
செயற்கை எச்சில் வடித்து
செயற்கை ரத்தச்சேற்றில்
முடியப்போகும்
நம் கூகிள் வயல்களை
உழுது கொன்டிருப்போம்
வாருங்கள்

_______________________________________________3


திரைக்கதைகள்.
கனல் பொறியும் வசனங்கள்.
ஒற்றை வரித் தீம்கள்.
இவை
நம் சித்திரத்தை மாற்ற‌
நாம் இன்னும் இங்கு
சித்ரவதைகள் அனுபவிக்க‌
வேண்டியுள்ளது.


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________4


இளைய தலைமுறைகளின்
மூளைக்கபாலம்
கைகளில்
இடம் மாறியது.
எண்கள் ஒளிகசியும்
அந்த செல்பேசிகளில்
உலகக்கோளம்
நசுங்கிக்கிடக்கிறது

‍‍‍‍‍‍___________________________________________________5


இந்த ட்விட்டர்களை
கூட்டிப்பெருக்கி அள்ளினால்
நகராட்சி குப்பைத்தொட்டிகள்
தோறும்
மில்லியன் மில்லியன் மில்லியன்
லைக்குகள்.
முக "நூல்கள்" கொண்டு
திறந்து கிடக்கும்
நம் மானம் மறைக்கும்
ஆடை நெய்ய முடியுமா?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________6


ராமன் சிலைக்கும்
இங்கு
பத்து தலைகள்.
அண்ணாந்து பார்க்க முடியாத
உயரத்தில்...
அத்தனையும்
அதிகாரக்குவியல்கள்!


__________________________________________________7


பின் நவீனத்துவம் கொண்டு
ஒரு பட்டம்பூச்சிச்சிறகில்
கவிதை கிறுக்கினேன்.
கையெல்லாம் ரத்தம்.
பட்டாக்கத்தி
அதற்குள் எப்படி வந்தது?


‍‍‍‍‍‍_______________________________________________8


நிலாவைக்காட்டி
அம்மா சோறு ஊட்டினாள்.
குழந்தை
அந்த நிலா சைஸ் இட்லி கேட்டது.
"அப்பல்லோ"வுக்கு
சொல்லியிருக்கிறேன்
என்றாள் தாய்.
அது அமெரிக்காக்காரன்
ஏவி ஏவி விளையாடும்
விண்கோள்.

_____________________________________________9


தட்டாம்பூச்சியின்
கண்ணாடிச்சிறகை
பிய்த்து பிய்த்து
அழகு பார்த்தார்கள்..
கவிதை என்று
எழுதி எழுதிப்பார்த்து.

_____________________________________________10












வெள்ளி, 4 ஜனவரி, 2019

சீதக்காதி (2)

சீதக்காதி (2)
============================================ருத்ரா

அந்த நடிப்பின் இமயம்
உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார்
என்று ஒரு சிறந்த நடிகனை
பாராட்டுகிறோம்.
ஆனால்
இதோ ஒருவர்
உயிரையும் அதனோடு
அதற்குப்பின் நீண்டுவரும்
ஆவியையையும் சேர்த்து
நடித்துக்கொடுத்து  இருக்கிறார்
என்று சொல்லவைத்திருப்பவர்
விஜய சேதுபதி.
நாடகக்காரர் என்பதால்
அந்த "ஔரங்கசீப்" நாடகம்
எனும் கட்டளைக்கல்லில்
தன் நடிப்பை நன்கு உரசித்தான்
காட்டியிருக்கிறார்.
சினிமா எனும் கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
சினிமாவையே கலாய்க்கும்
கலையில்
நம் முன்னோடிகளான‌
பாலச்சந்தர் கிருஷ்ணன் பஞ்சு
போன்றவர்கள்
நம்மை நிறைய சிந்திக்கவைத்திருக்கிறார்கள்.
ஆனால்
நாம் சிந்திக்கத்தான்
அந்த படைப்புகள்
இல்லை என்பதும்
அதுவும் கூட கல்லாகட்டுவதில்
ஒரு கலை என்பதும்
நாம் புரிந்து தான் வைத்திருக்கிறோம்.
சினிமாவே அல்லது
சினிமா படைப்பாளிகளே
தங்கள் சிகை திருத்திக்கொள்ளும்
அலங்காரத்துக்கு கண்ணாடியில்
தங்களை முகம் பார்த்துக்கொள்ளும்
ஒரு சுயவிமர்சனாமாக இதை
எடுத்துக்கொள்ளலாம்.
நகைச்சுவை மூலம்
அதை சாதிக்காட்டியவர் நாகேஷ்!
மேடையில் மக்கள் முன்னே
நடிப்பின் நரசிம்மாவதாரத்தை
நரம்பு நரம்பாக உரித்துக்காட்டவேண்டும்
என்ற முனைப்பும் தாகமும்
உள்ளவர் தான்
விஜயசேதுபதி என்பது
பளிச்சென்று தெரிகிறது.
அதனால் ஒரு ஆவி அல்லது பேய் வடிவில்
வந்து அந்த ஸ்டில்லில் உள்ள‌
வில் அம்பு கொண்டு
வில்லன்களை எல்லாம் அவர் எய்வது போல்
ஒரு பிரமையைக்காட்டியிருக்கிறார்.
செத்தும் கொடுத்த என்ற சொல்லை வைத்து
உலா வந்த சீதக்காதி எனும்
ஆதிமூலம் அய்யா அவர்களின்
அரிதாரங்கள் வெறும் பவுடர் அல்ல.
தன் ரத்தசிவப்பு அணுக்களையே
கதையில்
அணு அணுவாய் உயிர்பூசி நடித்திருக்கிறார்.
அவர் மீது
கண்ணுக்குத்தெரியாத‌
சினிமாவின் தேசிய‌ விருதுகள்
காய்த்து காய்த்து தொங்குவதாகத்தான்
தெரிகின்றது.
வாழ்த்துக்கள்!

===========================================================

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி
=============================================ருத்ரா

மக்களைக் கவர்ந்தவர்களில்
யாரேனும் ஒருவர் இறந்தால்
இந்தக்கண்ணீர் அஞ்சலிகள்
உலா வரும்.
ஊடகங்களில்
சுவரொட்டிகளில்
இன்னும்
மௌனம் காக்கும்
பொதுக்கூட்டமாய்
இறுகிய மௌனத்தில்
நீள நடக்கும் பேரணிகளாய்..
இது வெளிப்படும்.
இமயம் சரிந்தது
என்ற போஸ்டர்களை
கணக்கு எடுத்தால்
இது வரை சாய்ந்து கிடக்கும்
ஆயிரக்கணக்கான இமயங்களை
தூக்கி
நிமிர்த்தவேண்டியிருக்கும்.
இருப்பினும்
அன்னார் இழப்பில் ஏற்பட்ட‌
சூன்யம்
அல்லது வெறுமை தான்
அப்படிப்பட்ட காற்றுக்குமிழியை
சோகத்தின் பிரம்மாண்ட பலூனாய்
ஊதுகிறது.
லட்சக்கணக்காய் மக்கள்
கொத்து கொத்துகளாய்
சிதறி பதறி ஓடுவது
நாம் காணும் பிரிவுத்துயரத்தின்
சமுதாயம் பிம்பம் தான்.
அந்த மக்கள் கூட்டம்
ஈசல்களா?
விட்டில்களா?
தெரியவில்லை.
கோடிக்கணக்காய்
அந்த ஈசல்கள் அல்லது விட்டில்கள்
வரிசையில் நின்று
ஒரு கணிப்பொறியின்
பட்டன் தட்டி தட்டி
பார்த்தும் அடைந்த அந்த
வெறுமை அல்லது இழப்புக்கு
என்றைக்கு கண்ணீர் அஞ்சலி நடத்தும்?
ஏனெனில்
ஒவ்வொரு தடவையும்
தேர்தல் பிழைத்து விடுகிறது.
ஆனால்
ஜனநாயகம் இறந்து விடுகிறது!
இதற்கு அந்தக்
கண்ணீர்
அஞ்சலி செலுத்துவதைவிட‌
அது எரிநீராய்
கொப்பளித்து தன்
கனவின் கனல்
பரிமாணத்தை இன்னும் ஒரு
பரிணாமத்துக்கு
உயர்த்தவேண்டியதே
பொறுத்தமான அஞ்சலி!

==================================================





அது என் நீண்டவாக்கியம்....

அது என் நீண்டவாக்கியம்....
===============================================ருத்ரா


அந்த நீண்ட வாக்கியம் எனக்கு சுகமாக இருக்கிறது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப்பற்றி
இந்த தூசு துரும்புகள் கவலைப்பட்டுக்கொண்டதில்லை.
பிரமிடுவின் ஒரு மாடாக்குழியில் ஆந்தைப்படத்துடன்
ஒரு ஆத்மா நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்
ரத்தம் கசிந்ததை சித்திரசங்கிலியில் எழுதியிருப்பதை
சிலாகித்து கிளர்வு கொண்டு
அந்த நீண்ட வாக்கிய மலைப்பாம்பை நெளியவிட்டிருப்பேன்.
இல்லாவிட்டால்
ஹோமரின் ஒடிஸியில் அந்த அற்புத தீவும்
போதைப்பழம் உண்ணும் (லோட்ட்ஸ் ஈட்டர்ஸ்) மனிதர்களும்
பற்றியும் கூட்ஸ் ஓட்டியிருப்பேன்.
எனக்கு அது பரமசுகம்.
இல்லாவிட்டால்
பிரச்னோபனிஷத் பிப்பிலாதன் நம் தமிழ்க்கவிஞன் கபிலன் தான்
என நீண்ட வாக்கியங்களுக்குள்
ஒரு உலகத்தமிழ் மாநாடு கூட்டியிருப்பேன்.
இல்லாவிட்டால்
காதல் எனும் சில்லாட்டை வழியே பதனி இறக்கி
சுண்ணாம்பு தடவாத நறவை கலயங்களில் பெய்து
அந்த வாக்கியம் பூராவையும் நனைத்து பிழிந்து கொண்டிருப்பேன்.
அவனும் அவளும் செல்ஃபோன்களின்
பூனைக்கண்களை அழுத்தி அழுத்தி
எலி பிடிக்கும் விளையாட்டை
வளையல் கிலுகிலுப்புகளில்
சதை புடைத்த ஆண்புஜ வருடல்களில்
எழுத்துக்களால் வழிந்தோடச்செய்த‌
அந்த நீண்டவாக்கியத்தை
ஒரு சீன ஓட்டலில் பாம்பு உரித்து தட்டில் வைத்து தருவதுபோல்
பரிமாறிக்கொண்டிருப்பேன்.
சங்ககாலப்புலவன் போல ஒரு "செம்பரணன்"என்ற பெயரை
ஓலையில் நீளமாய் கீறியிருப்பேன்....ஆனால்
நமக்கோ தமிழ் என்றால்
நமைச்சலும் அரிப்பும் பாடாய் படுத்தும் என்பதால்
"மாளவிக்காக்னி மித்ரன்"என்று பெயர் சூட்டி
என் வாக்கியத்தின் நீளப்பட்டியல் கல்லை கிடத்தியிருக்கிறேன்.
ஞான பீடங்கள் இமைஉயர்த்தலாம்.
அகாடெமிகள் விருதுக்காக‌ என்னைப்புரட்டிப்பார்த்து அச்சு கோக்கலாம்.
என் படுக்கையை உதறி தூசி தட்டி விரித்துவிட்டேன் படுத்துக்கொள்ள.
ஆம்..அது
என் நீண்ட வாக்கியம்...
எழுத்துக்களின் ஏக்கத்தின் பெயர்
விருது.
அது ஒரு கல்லறைக்குள்
புதைந்து கிடக்கிறது.

=====================================================
07.12.2014


வியாழன், 3 ஜனவரி, 2019

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்
==========================================ருத்ரா

ஒன்று
நைந்த சிறகை ஆட்டி
அழகு பார்த்துக்கொண்டது.

இன்னொன்று
அலகை ஆற‌ அமர கூர் தீட்டி
தினவை தீர்த்துக்கொண்டது.

ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அப்படி பார்த்ததே போதும் என்று
தாகம் தீர்த்துக்கொண்டது.

ஒன்று சிற்றலகு பிளந்து
உள்ளே செந்தளிர் போல் நா அசைய‌
இனிய ஒலியை
ஜாங்கிரி ஜாங்கிரியாய்
பிழிந்து
காடு கரையெல்லாம் இனிப்பு..

இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை
சிலுப்பி
எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய்
கொத்தி கொத்தி துளையிட்டது
வெறும் காற்றுப்படலத்தை.

ஒன்று
நேர்குத்தாக‌
தலைகீழாய் பாய்ந்து
அதை கவ்வியே தீருவது
தண்ணீர்ப்பிழம்பின்
மணிவயிற்றைக்கீறி
சிசேரியன் ஆவது போல்
சளக் என்ற சத்தத்தை
அங்கே எதிரொலித்தது.

ஒன்று அசையாமல் கிடந்தது.
அவ்வளவு தான்
அதைப்பார்த்து
மற்றொன்று கா கா ..வென்று
கீறல் விழுந்த கர்ர் சத்தத்தை
காற்றெல்லாம் தெளிக்க‌
அதன் சுற்றம் எல்லாம்
கருஞ்சிறகுக் காடாய் அங்கே குழுமி விட்டது
கருப்புச்சட்டைக்காரர்கள்
திடீரென்று அணிதிரள்வது போல்.

தாய்ப்பறவைகள் எல்லாம்
இன்னும்
தன் பொன் முட்டைக்குள்ளிருக்கும்
பொன் குஞ்சுகளோடு
இந்தப் பிரபஞ்சத்துக்கே
ஒரு பொன் விடியலை
கிழித்துக்காட்டும் பெருமிதத்தை
அரங்கேற்றி பாசாங்கு செய்தன.

ஊசி அலகு கொண்டு
பன்னீர்ப்பூக்குள்ளும்
தேன் சுவைக்க
சிறகை வினாடிக்கு
ஆயிரம் அதிர்வுகளாய்
துடித்துத்தீர்த்தது
சிட்டு ஒன்று.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
சிறகொடிந்த‌
அலகொடிந்த‌
ஒலி இழந்த‌
ஒளி இழந்த‌
அந்த பறவைகளின் "வேடந்தாங்கல்" அது.

பாசம் தாங்கியதெல்லாம் போய்
வெறும்
பஞ்சடைத்த
வைக்கோல் கூளமடைத்த‌
பறவைகளாய்
வேடங்கள் தாங்கிய இடம் அது.

அடைய கூடும் இல்லை.
பறக்க வானமும் இல்லை.
கால்களும் இல்லை.சிறகுகளும் இல்லை.
என்ற எல்லைக்கோடு
அங்கு ஆடிக்கொண்டே இருக்கிறது
"ஓலைக்கிளிகள்"போல.

அந்த தொட்டில்களில்
தங்கள் இதயங்களை மட்டுமே
போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும்
அந்த சூன்ய தேசத்தில்
அன்பெனும்
பாசாங்குகள் வேடம் கலைந்த‌
ஒரு வேடந்தாங்கல் அது.
ஆம்
அது ஒரு முதியோர் இல்லம்.

====================================================
16.03.2015