குரங்கு
___________________________________
மூடிய கையை திறந்து
காட்டியாகி விட்டது.
போதும்
நீ இங்கிருந்தது.
அந்த பூவசரச மரத்தின் கிளைகளில்
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடிக்கொண்டிருந்த அணில்
வாலை ஆட்டி ஆட்டி சொல்வது
போல் இருந்தது.
என்ன சாதித்து இருக்கிறேன்
என்ற
பூஜ்யக்கணக்கில்
என் புலம்பல் மட்டுமே
குவிந்து குவிந்து குன்று ஆகியிருந்தது.
புறநானூற்று மன்னர்கள்
அந்த ஆற்றின் இடைக்குறை எனச்சொல்லப்பட்ட
"உள்ளாற்றுக் கவலை புள்ளி நீழல்"
ஒன்றைத்தான் உள்ளம் தேடுகிறது.
உள்ளாற்றுக்கவலை என்றால்
நடு ஆற்றில் கவடு பிரிந்து
திட்டு போல் ஆவதைக்குறிக்கும்
சொல் அது.
அதில் மரத்து நிழல்
புள்ளி புள்ளியாய் விழுவதைச் சொல்வதே
புள்ளி நீழல்.
இந்த பேரழகு மிக்க வரிகள்
நிறைந்தது நம் புறநானூறு.
அகழ்நானூறு என்று நான் எழுதிய
பாடல்களில் இந்த நிழல்
இன்னும் அசைந்து அசைந்து
அழகை சொட்டு சொட்டாய்
உதிர்த்துக்காட்டிக்கொண்டிருக்கிறது.
வடக்கிருந்து
உயிர் இற்று வீழ்த்திக்கொள்ளும்
வீரம் மட்டும் இன்னும்
எனக்கு வரவே இல்லை.
அது கோழைத்தனம் என்று
சமாதானப்படுத்திக்கொண்டேன்.
அது கோழைத்தனமா?
இது கோழைத்தனமா?
போகட்டும் அந்த
முற்றுப்புள்ளி
வந்து வந்து முகம்
காட்டி விட்டுப்போகிறது.
எதுவுமே பிடிப்பு இல்லை
என்று
ஏதோ ஒன்றின் பிடி
இறுகிக்கொண்டே இருக்கிறது.
ஒரு கப் காப்பிக்கு
ஏங்கிக்கொண்டிருக்கிறது
மனக்குரங்கு.
_____________________________________________
கல்லாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக