போதும்
_______________________________
"ஒளிமயன்"
நிலவு
கசக்கிப்பிழியப்படுகிறது
அந்த தடாகத்தில்
ஒரு சிறு பூ விழுந்ததில்.
நிழல்களில்
இமயம் இருந்தாலும்
உச்சியின் உணர்வு
கால்களில் இல்லை.
கந்தலாக்குகின்றன
வானத்தை நட்சத்திரங்கள்.
விலகவே மறுக்கிறது
மொக்கை இருள்.
கனவுகள் குடைகள் தான்.
வெயிலும் வாழ்க்கையுமே
சுடுபவை.
காளான் குடைகள்
வெண்கொற்றக்குடைகள்
ஆகிடுமா?
நெட்டைப்பகலின்
அரைத்தூக்கக்கனவுகளும்
அப்படித்தான்.
புலம்பல்களைக் கொண்டு
கூரை வேய்ந்திட முடியாது.
மரணம் மரணம் அல்ல.
ஆற்றாமைகளின்
புதைகுழிகளில் ஆழ்ந்து
போவதைவிடவா
மரணங்கள் நம்மை
விழுங்க முடியும்?
முகத்தைக்கழுவிக்கொண்டு
பளிச்சென்று இரு
என்று சொன்னார்கள்
முகம் இழந்தவனைப்பார்த்து.
பேடி கை
வாளாண்மை போலக்கெடும்.
வாழ்க்கையை வாழாமல்
வாளாயிருப்பதே
அந்த "வாழாண்மை"
அவநம்பிக்கையை
கஞ்சி காய்ச்சிக்குடிக்க
நம்பிக்கைகளை
விறகாக்கிக்கொண்டிருப்பவர்களே
இங்கு அதிகம்.
கொசுக்களை விரட்டுவது போல்
இந்த கவலைகளையும் விரட்டும்
"கொசுவர்த்திச்சுருள்"
கடைகளில் கிடைக்குமா
கேட்டுச்சொல்லுங்கள்.
போதும்
முறுக்கிப்பிழிந்தது.
துணி
கிழிந்து விட்டது.
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக