ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

பரியேறும் பெருமாள் "கருப்பி"

பரியேறும் பெருமாள் "கருப்பி"
===============================================ருத்ரா

எத்தனை படங்கள் வந்து விட்டன.
காதல் கௌரவக்கொலை
மற்றும் சாதி மத வெறியின்
ரத்தக்குழம்புகளோடு?
இதிலும்
காதல் மெல்லிய அருவி தான்.
அந்த உணர்வு வெளிப்படுத்தும்
நளினங்கள்
ஒரு நுட்பமான குறுநாவல்
எழுதப்பட்டது போல்
இயக்குனரின்
மயிற்பீலி கொண்டு அழகாய்
எழுதப்பட்டு இருக்கிறது.
வழக்கமான முரட்டுத்தனம்
சாதி ஆதிக்கத்தில் இருந்த போதும்
ஒரு புதிய கோணம்
கோடம்பாக்கத்து காமிராக்களிடையே
இருந்தது இந்தப்படத்தில்.
வெள்ளைக்காரர்கள் தங்கள்
சட்டத்தால் நம்மை
அடிமைப்படுத்தியிருந்தாலும்
அவர்கள் ஆங்கிலத்தால்
நாம்
நம் கண்களைத்
திறந்து கொண்டோம்.
நம் கட்டுகளை
அவிழ்த்துவிட்டுக்கொண்டோம்.
அதனால் தானோ என்னவோ
தமிழும் இங்கிலீஷும்
இங்கே காதலிக்கும் நேர்த்தியை
கதாநாயகனும் கதாநாயகியும்
தங்கள் அற்புத நடிப்பில்
உயர்த்திக்காட்டியிருப்பது
இப்படத்தில் இன்னொரு சிகரம்.
அப்படியென்றால்
அந்த மற்றொரு சிகரம்..
அது தான் கருப்பி.
"கருப்பி" என்ற பெயரில்
அந்த பாத்திரம்
சிலிர்த்துக்கொள்வதைப்பார்த்தால்
ரஜனி தான்
அதற்குள் இருந்துகொண்டு
மனித உரிமைக்கு
கருப்பு செங்கீதத்தை
"காலா"வாக 
முழங்குகின்றாரோ
என்று நம்மை
அதிர வைத்துவிட்டது இந்தப்படம்.
எழுத்தாளர்களின்
மனிதநேய எழுத்துக்கள்
பொமரேனியன்கள் என்றால்
அவற்றை வேட்டையாடுவது
சாதி மத ஆதிக்கங்களின்
"அல்சேஷியன்கள்" தான்.
இவற்றைக்கண்டு கொள்ளாத‌
தெரு நாய்களாய்
தெருக்கள் தோறும்
மக்கள்
நாய்களின் மந்தைகளாகி
ஆகி விட்டனரோ என்ற‌
ஆதங்கம்
இந்தப்படத்தின் "பூதாகரமான"
கருப்பொருள்.
அந்த கருப்பிக்கு நிகழும் க்ளைமேக்ஸை
கவனிக்கும் போது
இங்கு
"கருப்பி ஒரு சிவப்பி"ஆனது
புரிகிறது.
சமுதாய மாற்றங்களின்
ஒரு எச்சரிக்கையாக‌
விடியும்  "சிவப்பு விளக்கு" ஒன்று
நாய்வேடம் போட்டுக்கொண்டு
நம்மை திகைக்க வைத்துவிட்டது.

=====================================================

விடியல்




    விடியல் 

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சரணம் அய்யப்பா!




சரணம் அய்யப்பா!
================================================ருத்ரா

இருமுடி தாங்கு.
கல் முள் பாராமல்
உயரம் கண்டு
சளைக்காமல்
முன்னேறு.
ஏன்? எதற்காக? என்ற
கேள்விகளும்
அந்த கேள்விகளே
விடைகளாகி
விஞ்ஞானமாகிப்போன‌
ஒரு கண்ணுக்குத்தெரியாத‌
மாயமூட்டை தானே
இந்த இருமுடி.
படித்தவர்கள்
மெத்தப்படித்தவர்கள்
படிக்காதவர்கள்
கண்ணுக்கு முகமூடி போட்டு
வெல்டிங் செய்யும் தொழிலாளிகள்
பாரஞ்சுமக்கிறவர்கள்
எல்லோருமே
சுமக்கின்ற இந்த பக்தியில்
மதங்கள் இல்லை.
கடவுள்கள் இல்லை.
சமுதாயப்பிரளயத்தின்
சிறு பிஞ்சாய்
சிறிதிலும் சிறிதான‌
சமுதாய தாகமாய்க்கூட‌
இது மலையேறிக்கொண்டிருக்கலாம்.
இதில் எப்படி
பெண்மை எனும் தாய்மை
விலக்கப்பட்டது.
அந்த "மாதவிலக்கு" தான்
விலக்கியதா?
அது விலக்கப்படவேண்டியதல்லவே!
நம் ஆன்மாவை விளக்கும்
மகரவிளக்கே அது தானே.
உயிர் ஊற்றின் இந்த‌
ரத்தம் சுரந்த
தாய்ப்பாற்கடலில் தானே
பரந்தாமன் படுத்துக்கொண்டு
முதல் தோற்றம் எனும் அந்த‌
பிரம்மத்தின்
நாபிக்கமலத்தை உயர்த்திப்
பிடித்துக்கொண்டிருக்கிறான்.
ஓங்கி உலகளந்த அந்த உத்தமத்தை
ஓங்கி ஒலிக்கப்பாடியதே
அந்த பெண்மை தானே.
"பெண் அசிங்கம்"என்றும்
அது வேதச்சுவடிக்குள் கரையான்கள்
என்றும்
பாஷ்யம் சொல்பவர்களே
இதன் மூலம் உங்கள்
அத்வைதத்தையும் அல்லவா
குப்பையில் எறிகிறீர்கள்!
பேரிடர் இதனால் தான் வந்தது
என்றீர்கள்.
இப்போது தான் புரிந்தது
அந்த சமூக அநீதியை
எதிர்த்து அல்லவா வந்தது
அந்த பிரளயம் என்று.
மதவாதிகளே
இப்படி உங்கள் முகம்
அசிங்கப்பட்டு நிற்கும் அந்த‌
களங்கம் துடைக்கப்பட‌
துடைப்பம் தந்த அந்த‌
நீதியரசர்களுக்கு எங்கள் வந்தனங்கள்

==========================================================






உன்னையே நீ அறிவாய்









    ருத்ரா 

உன்னையே நீ அறிவாய்
==========================================ருத்ரா


எவ்வளவு அழுத்தம் திருத்தமான
சொற்கூட்டங்கள் இவை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும்   முன்னதாக
அந்த கிரேக்கத்து சான்றோன்
சாக்ரடீஸ் சொன்னவை இவை.
ஏதோ காலைக்காப்பியை
குடிக்கும் சாவதானத்தில்
அந்த "ஹெம்லாக்" விஷக்கோப்பையை
அருந்தியவன் அல்லவா அவன்.
புதிய சிந்தனையை
புதிய கோணத்தில்
தந்ததற்காக
கிரேக்க நாட்டுச்சட்டம்
அவனுக்கு தந்த பரிசு 
அந்த மரணம்.
சட்டம் என்றால்
கட கடத்த ஆணிகள் முறுக்கப்பட்ட
எந்திரம் தானே அது.
பல ஆயிரம் ஆண்டுகள்
எனும் இறுக்கமான உதடுகள்
பாறாங்கல்லாய்
அழுத்திக்கொண்டு
எப்போதோ
ஒரு மூட இருட்டு எனும்
சொல்லில் வேய்ந்த "கடவுள் சாட்சியாக"
என்று ஒலிக்கும் அதன்
கோரைப்பற்களிலும்
கடைவாய்ப்பற்களிலும்
ரத்தம் ஒழுக
தீர்ப்புகளை உச்சாடனம் செய்யும்
எந்திரம் தானே  அது.
உயிரற்ற அதன் ஒலிகளுக்கு
உயிர் கொடுப்பதற்கு
அதன் ஒலிகளில் பலியான
ஆன்றோர்கள் அன்றைக்கு இருந்தார்கள்.
"பெயக்கண்டும் நஞ்சுண்டு  அமைந்த
நயத்தக்க நாகரிகம் "கொண்டவனாயிருந்த
சாக்ரடீஸ் அந்த நச்சுக்கோப்பைக்கு
அஞ்சவில்லை.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
உருண்டபின்
அந்த நச்சுக்கோப்பைக்கூட
உருண்டு விழுந்து
நொறுங்கிபோகிறது.
நாகரிகம்
பாம்புசட்டைகளை கழற்றிக்கொண்டே
இருக்கிறது.
மனித நீதி
அந்த ஆகாயக்குரல்களுக்குள்
புதிதாய் சமூக நீதியை
பாய்ச்சுகிறது.
மாற்றம் எனும் காட்டாறு
"கல் பொருது இறங்கும்
பஃறுளியாறாய்"
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்கிறது.
சாக்ரட்டீஸ் புன்னகை செய்கின்றான்.

==================================================


பாய்




பாய்

=========================================================

ருத்ரா  இ பரமசிவன்





என் உள்ளே

வெங்காயக்குகை.

உரித்தேன்

ஆயிரம் ஆயிரம் வானம்.

சந்திர மண்டலத்து சதை பிய்ந்து இருந்தது.

ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால் நகம் பட்டு.

பழனி போகரும்

அங்கிருந்து மண் எடுத்து நெய்து

ஞானப்பழத்துச் சின்னப்பயலுக்கு

கோவணம் கட்டினார்.

"ஃபான்டாஸ்டிக் வாயேஜ்" நாவல் மாதிரி

என் சிறுகுடலுக்குள் சென்றேன்.

நுரையீரல் பூங்கொத்துகளில்

பிருந்தாவன் நந்தகுமாரன்களை

மயில்பீலி கிரீடத்துடன்

நடமாட விட்டேன்.

மூளையின் ஆப்லாங்காட்டா

அப்புறம் நியூரான் சினாப்டிக் ஜங்ஷன்

பர்கிஞ்சே செல்களோடு

கிசு கிசுத்து என் முந்தைய‌

ஐயாயிரத்து ஒன்பதாம் ஜன்மாவில்

திளைத்துக்களித்தேன்.

கடைசியாய்

குண்டலினியின் பிரம்மரந்தரத்தின்

நுனிக்கொம்பர் ஏறி

"அஃது இறந்து ஊக்கி..."





"போதும் எழுந்திருங்கள்.

ட்ரான்செண்டென்டல் தியானம் முடிந்தது.

போகும்போது

ஃபீஸ் பாக்கி இல்லாமல் கட்டி விட்டுப்போங்கள்.

மகரிஷி ஹோலோகிராம் போட்ட‌

ரசீது வாங்கிக்கொள்ளுங்கள்"



நான் அந்த‌

குட்டிச்சதுரப்பாயை

சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.



===================================================
26.08.2016

புதன், 26 செப்டம்பர், 2018

கவுடபாத காரிகை

கவுடபாத காரிகை
===========================================ருத்ரா


ஆத்மீகவாதிகள் தூக்கிப்பிடிக்கும்
"ஆத்மா" என்பது
இலக்கணத்தில் "தன்மையை"க் குறிக்கிறது.
கடவுளைத்தேடாதே.
அது வெளியில் இல்லை.
அது "நான்" தான் என்று
(அஹம் ப்ரமாஸ்மின்")
"நீ" உணரவேண்டும்.
இப்போது நான் (ஆத்மா) என்ற "தன்மை"
நீ எனும் "முன்னிலை"க்கு வருகிறது.
நீ உணர்ந்த பின் அந்த கடவுளே
சொல்கிறான் உன்னிடம்
"தத்வம் அஸி"
"நீயே அதுவாக இருக்கிறாய் என்று."
இங்கே "தத்" அது
(அல்லது அவன் ,பிரம்மா சிவன் பார்வதி விநாயகன் விஷ்ணு லக்ஷ்மி
எக்செட்ரா எக்செட்ரா....)எல்லாம்"
இலக்கணத்தில் "படர்க்கை" ஆகிறது.
எனவே கடவுளின் இலக்கணத்தில்
"நான் நீ அவன் அது அந்த..." எல்லாம்
மறைந்து போகிறது.
கடவுள் என்பதை
தேடுவதே தேவையற்றது ஆகிவிடுகிறது.
முற்றிய ஆத்மீகம் அதை விட முற்றிய‌
நாத்திகம் என்று ஆகி விடுகிறது.

கவுடபாதர் தான் எழுதிய கவுடபாத காரிகையின்
கடைசி வரிகளைப்பாருங்கள்.
இது நூறாவது ஸ்லோகம்.

கவுடபாதரின் காரிகை ஒரு ஆழ்ந்த குகை.
அதில் நுழைந்தவன் தட்டு தடுமாறி
ஆத்திகன் நாத்திகன் ஆகி விடுகிறான்.

இதோ ஸ்லோகம்

துர்தர்ஸனம் அதிகம்பீரம் அஜம் சாம்யம் விஸாரதம்
புத்த அபதமனானத்வம் நமஸ்குர்மோம் யதா பலம்.

ஆத்மிகத்தின் சூட்சுமமே நாத்திகத்தில் இருக்கிறது.

அது எப்படி?

(தொடரும்)







வாழ்க்கையை வாழ்ந்து பார்

வாழ்க்கையை வாழ்ந்து பார்

================================ருத்ரா இ பரமசிவன்



சீட்டுக்கு லட்சங்கள் வீசுகிறாய் படிக்க.

சீட்டுக்கு கோடிகள் தெளிக்கிறாய் தேர்தலில்.

வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வர்ணங்கள்

கலையம்சத்துக்கும் குறைச்சல் இல்லை

கரன்சிகள் லட்சங்களாய் தூரிகைவீச்சில்.

பத்து வயது பையனுக்கு ஸ்கூட்டி.

ஷேவ் செய்யும்போது துடைத்துப்போட‌

சட்டென்று சட்டைப்பையிலிருந்த

ரூபாய் நோட்டுகள் கற்றையாய்.

உன் கைக்குள் வரும்.

அதில் ஒன்றை..

காது குடையவும்  சுருட்டிக்கொள்வாய்.

தராசுத்தட்டில் இவ்வளவையும் வைத்து

உன் வாழ்க்கையை நிறுத்துபார்.

சந்தோஷம் காட்டும் முள் சாய்ந்து நிற்கிறது.

கரன்சி தட்டு மேலே மேலே செல்கிறது.

வாழ்க்கை

காகிதமும் அல்ல

பணமும் அல்ல.

வாழ்க்கை கண்ணுக்கு தெரியும் மனிதர்கள்

அவர்களோடு மனங்கலந்த சங்கமம்.

மனவியின் ஒரு வெட்டுப்பார்வை

செல்லச்சிணுங்கல் இதன் மதிப்பு

கோடிக்கு மேல் கோடி பெறும்.

கோடீஸ்வரன் மனைவியின்

வைர அட்டிகையில்

நகைக்கடை விலைச்சீட்டே

பெரு"நகை" புரியும்.

வாழ்க்கையின் மணமும் ருசியும்

அவள் இவனுக்கு தரும் சாதாரண‌

டபரா தம்ளர் காபியிலேயே தெரியும்.

பல ஆயிரம் ரூபாய்க்கு

தங்க கோப்பையில் குடிக்கும் மதுவில்

பணத்தின் ருசியே போதையாய் நுரைக்கும்.

மனம் எனும் வானத்துச்சுவை கிடைக்குமா?

அந்த டீக்கடை நாயர் தூக்கி தூக்கி ஆற்றி

"சாயா"வை முழம் போட்டு

நம் கையில் தரும் போது

அதன் சுவைக்குள் வாழ்க்கையின் உள்ளம் தெரியும்.

வாழ்க்கையை "படம்" பார்ப்பவன்

நிழலை சமைத்து உண்பவன்.

வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பவன்

இயற்கையை உண்டு களிப்பவன்.

வாழ்க்கையே வாழ்வதற்கு தான்.

மரணத்தை விரித்து படுக்கை போட்டு

மயானத்துக் கனவுகள் அல்ல வாழ்க்கை.



==============================================

10.04.2016


செவ்வாய், 25 செப்டம்பர், 2018

தேடிச்சோறு நிதம் தின்று....




தேடிச்சோறு நிதம் தின்று....

==========================================ருத்ரா இ பரமசிவன்



தினமும் செய்திகள் செய்திகள்

துணுக்குகள்

கவிதை மொக்கைகள்

பின் நவீனத்துவ‌

முன் நவீனத்துவ‌

மாயாவாதக் கனவுவாத‌

வார்த்தை ஆலாபனைகள்.



யாரோ ஒரு நடிகை

அங்கம் எல்லாம்

துண்டு துண்டாய் வெட்டப்பட்ட விவரிப்பும்

காவல் நாய்கள்

அந்த மாமிசத்தை மோப்பம் பிடிக்கும்

இராட்சத காமிரா காட்சியும்..

மயிர்குத்திட்டு நிற்கவைக்கும் எழுத்துகளும்...



ஒரு புது மாதிரி

தாடியோ

குல்லாவோ

வைத்துக்கொண்ட‌

சாமியாரின்

ஆன்மீகக்குடல் உருவிய‌

ஸ்லோக சங்கிலித்தொடர்

வாக்கியங்களும்.....



பங்கு மூலதனத்தில்

கரடியும் காளையும்

கட்டிப்புரண்டு

புழுதிகிளப்பியதில்

கருப்புப்பணங்கள் கூட‌

கை கட்டி வாய்பொத்தி

கும்பாபிஷேகம் பண்ணி

சம்ப்ரோக்ஷணம் செய்து

பொருளாதாரத்தை புள்ளி விவர‌

ஆணி அடித்து ஆணி அடித்து

ஆலவட்டம் போடும்

பத்தி பத்தியான கட்டுரைகளும்....



தேடிச்சோறு நிதம் நின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

சிந்தனைக்குள்

சிதறுகின்ற பாரதியின் எரிமலைகளையே கூட

அவித்துப் போடும்

அரட்டைக்கூளங்களும்....



எம்.எல் ஏ சீட்டு.

இல்லாவிட்டால்

எம்.பி சீட்டு

இல்லாவிட்டால்

ராஜ்ய சபா சீட்டு

இன்னும்

மெடிகல் சீட்டு

இஞ்சீனியரிங்க் சீட்டு

என்று

அரசியலின் சாயப்பட்டறைகள்

கழுவி கழுவி ஊற்றிய‌

வாய்க்கால் வரப்பு செய்திகளும்....



மணல் அள்ளிச்செல்லும்

கொள்ளைகளும்

ரோடுகளில் மக்கள்

மறியல் செய்து மறியல் செய்து

டிவிக்களில்

முகங்கள் மொய்த்த செய்திகளும்....



அணு உலை வேண்டாம் என்று

அடுக்கு அடுக்காய்

ஜனங்கள் குவித்து

தொட்டில்கட்டி குழந்தைகளுடன்

சுருண்டு கிடந்தும்

அணுவின் எலக்ட்ரானுக்குள்ளும்

பிளக்கமுடியாத‌

இனவாத மயிரிழை அரசியலும்

அது சார்ந்த‌

விஞ்ஞான அஞ்ஞான எடுத்துக்காட்டுகள்

குவிந்த செய்திகளும்.....



காவிரியும் முல்லையாரும்

இனி சங்கத்தமிழ் ஒலிக்காது

என்னும்

ஒப்பாரி முழக்கங்களும்

ஒரு சொட்டு கூட தர மாட்டோம்

எனும்

தேர்தல் பருவகால‌

நரம்பு புடைக்கும்

நாக்கு தெறிக்கும்

பேச்சுகளின் ஒளிபரப்பு செய்திகளும்...



கோவில் நடை திறப்பது போல்

நாடாளுமன்ற நடை திறக்கும் போதெல்லாம்

புறக்கணிப்போம் எனும்

ஜெண்டை மேள ஜால்ரா தட்டல்

ஒலிகளின் தலைநகர்ச்செய்திகளும்



உள்ளுக்குள்ளே

உயிரற்ற மைக்குகளுக்கு

கை கொடுக்கும்

மேசை தட்டல் மழையோசைகளும்...





இன்னும்

இன்னும்

பூனைமயிரில்

புதுக்கவிதைகள் செய்து

காதலின் ரத்த அணுக்களின்

சத்த மியூசிக்குகளில்

சரித்திரம் படைக்க கிளம்பிய‌

லேசர் அரங்க பட்டைகிளப்பும்

சினிமா கலைநிகழ்ச்சி செய்திகளும்..



மூச்சு முட்டுகிறது.

செய்திகள் தின்று தின்று..

பாவம்.

கொண்டுவாருங்கள்

யாராவது

ஆக்சிஜன் சிலிண்டரை

நம் ஜனநாயகத்துக்கு..



======================================================

4 ஆகஸ்டு 2013 ல் எழுதியது

கணினியில் நான் வரைந்த ஓவியம்.


    1996 ல் நான் கணினியில் வரைந்த ஓவியம்.

   

    கணினியில் நான் வரைந்த ஓவியம்.
    ===========================================ருத்ரா

   விரலைத் தூரிகை
   ஆக்கினேன்.
   விசைப்பலகையே
   அந்த தடாகம்.
   நான் தொட்டு தொட்டு
   தந்த அந்த எண்ணக்குழம்புக்குள்
   அந்த வெள்ளைச் சிறகு விரிந்தது.
   கற்பனையை
   தாறுமாறாய் கலக்கிய வண்ணம்
   அது நீரில் மிதந்தது.
   அதற்கு மீன் வேண்டும்.
   எனக்கோ
   அந்த திவலைகளில்
   தெறிக்கும் மின்னல்கள் வேண்டும்
   கவிதை ஆக்கிக்கொள்ள !

   ========================================================



திங்கள், 24 செப்டம்பர், 2018

ஓவியக்காடுகள் (3)

    ஓவியக்காடுகள்  (3)




ஆசை .
===========================================ருத்ரா

ஆசையை ஒழி
ஒரு போதி  மரத்து நிழல்
கண்டு பிடித்து சொன்னது.
மனிதன்
தான் பிறக்கவேண்டும் என்ற
ஆசையை
அந்த இருட்டுக்குகையில்
இருந்துகொண்டு
ஒழிக்கமுடியாமல் போனதால்
அவன்
ஆசையின் வெளிச்சமாக
வெளிப்பட்டவுடன்
எதுவும் செய்ய முடியவில்லை.
இன்னொரு மனிதன்
பாடையில் வைத்து எரிக்கப்பட
கொண்டுசெல்லப்படும் போது தான்
"வெளிச்சமாக" பிறந்தவன்
இன்னொரு இருட்குகைக்குள்
விழப்போவது தெரிகின்றது.
இந்த "ஞானோதயம்"
உலகம் முழுதும் கிடு கிடுக்க வைக்கிறது.
தானே இப்படி உதிர்ந்து போவது
இயற்கை.
ஆனால் அடுத்தவன் மீது பகைமை கொண்டு
அவன் உடைமைகளை கவர்ந்து கொள்ளும்
ஆசை குமிழியிடும்போது
உயிர்கள் செயற்கையாய் உதிர்க்கப்படுகின்றன.
இந்த ஆசை மன்னர்களுக்குள்
பிரம்மாண்ட வெறியாய் பதாகை விரிக்குபோது
உயிர்கள் ஆயிரம் ஆயிரமாய்
கொல்லப்படுகின்றன.
ஆனால்
மனிதன் இன்னொரு மனிதனிடம்
அன்பு காட்டும்போது
இந்த ரத்தத்தின் காட்டாறுகள்
ஓடத்தேவையில்லை.
மன்னர்களின் தேசப்படங்களும்
இந்த "அன்பு" எனும்
எல்லைக்கோடுகள் கொண்டு
வரையப்பட்டால்
உலகம் முழுமை பூத்து
இன்பம் எனும் மகரந்தங்கள்
எங்கும் தூவிக்கிடக்கும்.
ஆனால்
"ஆசை"பூதம் நுழைந்து விட்டால்
அந்த மகரந்தத் தூள்
ஒவ்வொன்றும்
துப்பாக்கிக்குண்டுகள் ஆகும்.
"என்னைகாப்பாற்ற
நீ துப்பாக்கி ஏந்து " என்று
எந்தக்கடவுளும் சொன்னதில்லையே.
மனிதனை மனிதன் ஆளும் ஆசையே
இந்த உலகத்தில்
பிரம்மாண்டமான ஒரு துப்பாக்கியாய்
அவதாரம் எடுத்திருக்கிறது.
தாராளமய பொருளாதாரத்திற்கு
அது பற்றிக்கவலையில்லை.
லாபம் குவிந்ததால் சரி.
ஆயிரம் அடிக்கும் மேல்
"துப்பாக்கிக்கு" ஒரு சிலை செய்து
அதை சுற்றுலாத்தலம் ஆக்கிட
அதற்கு ஆட்சேபணை இல்லை.



பூமி முழுவதும்
மயானம் ஆகினால்
இந்த "பட்டுப்போன" பூமியை
வைத்துக்கொண்டு என்ன செய்வது?
அழிவு தரும் ஆசையை ஒழிப்பதே
அறம்.
"அறம் செய்ய விரும்பு"
ஆம்.
ஆசையை ஒழிக்கும்
ஆசையே அறம்!

=========================================




ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

குப்பைகளை அகற்று.



குப்பைகளை அகற்று.
=============================================ருத்ரா

குயவன்
சட்டி
இதெல்லாம்
சித்தர்களின்
கடவுள் பற்றிய கற்பனைகளுக்கு
சொல்லப்பட்ட‌உருவகங்கள்.
உருவங்களும் உவமைகளும்
உண்மையின் பொ(ய்)ம்மைகள் தான்.
உண்மைகள் அல்ல.
அவனன்றி
ஓர் அணுவும் அசையாது.
அந்த உள்மனிதன் நீயே தான்.
கணினி யுகம் கண்டுபிடித்த
அந்த "மார்ஃ ப் " கர்ப்பத்தில்
வந்த அந்த "வெர்ச்சுவல் மனிதன்"நீயே.
உன் மூளை
இந்த "பூலியன் அல்ஜீப்ரா"வுக்குள்ளிருந்து
உன்னையே
அந்த வெர்ச்சுவல் மனிதன் ஆக்கியிருக்கிறது.

அணுவும் அதன் உள்ளணுவும்
எப்படி தன்னைச்சுற்றி
மிகவேகமாக ஓடி ஓடி வந்ததில்
இன்னொருமனிதன்
"குவா குவா" என்றது.
அது தான் "குளுவான்"
அளப்பறிய ஆற்றல் உட் துகள்களை
ஒட்டுவித்து  அதை ஒரு புலம்
ஆக்குகிறது.
ஒட்டு எனும் "குளு" தான்
இங்கே குளுவான் ஆகியுள்ளது.
அறிவு செதில்கள்
நம் மூளைக்குள் இருக்கிறது.
இவையே எல்லாவற்றையும்
வெளிப்படுத்துகிறது.
ஆற்றல் துகள் ஆற்றல் உமிழ‌
ஒரு புலம் வேண்டும்.
இந்த ஆற்றல் துகள் பொதுவாய்
"பெர்மியான்" ஆகும்.
இதில் நிறை உள்ளது.
இதன் ஆற்றல் களமான அந்த
புலமே பொதுவாய் "போஸான்" ஆகும்.
இது "நிறை" அற்றது.
அந்த அந்த அணு உட்துகள் உலையில்
திடீரென்று ஒரு
புதிய போஸான்
"நிறைக்கு காரணமான ஒரு நிறையை"
வெளிப்படுத்தியது.
இந்த போஸானை "ஹிக்ஸ்"
என்பவர் கண்டுபிடித்தார்.
இந்த பிரபஞ்சம்
ஆற்றல் (நிறை)
புலம் (ஃபீல்டு)
என்ற இரண்டால் மட்டுமே
மிடையப்பட்டிருக்கிறது
என்பது ஒரு அறிவியல் கணித சமன்பாடு.
இந்த "ஹிக்ஸின் போஸான்"
அந்த சமன்பாட்டை உடைப்பதாக
அல்லவா இருக்கிறது.
விஞ்ஞான உலகம் அரண்டு போனது.
அந்த ஹிக்ஸ் போஸான் இருப்பது
உண்மை என சமீபத்திய ஒரு சோதனையும்
நிரூபித்து விட்டது.
அண்டத்துள் ஒரு எதிர் அண்டமும்
கரு தரித்திருக்கிறது
என்ற இந்த விஞ்ஞானமே
இன்றைய மனித மூளை கண்டுபிடித்த‌
புதிய மைல்கல்.
அணு ஆற்றலை
தன் செல்ல "பொமரேனியன்"ஆக்கி
கையில் பிடித்து
"வாக்" போகும் மனிதன்
இப்படி பிரபஞ்சங்களையும்
தன் "மேஜையின்" மீது
"போன்ஸாய்" மரம் ஆக்கி
அதன் நாடி பிடித்து
பார்க்கத்துவங்கும் காலத்தின்
ஒரு புதிய விளிம்புக்கு வந்திருக்கிறான்.


மனிதனின் மூளையே
கோவில்களுக்கெல்லாம் பெரியகோவில்.
அதை கூர்தீட்டி
அதன் பொறிகளில் தீமூட்டி
வெளிச்ச வெளியில் மிதந்து கொண்டிரு.
நீயே கடவுள் என்பதே
உண்மையிலும் உண்மை.
இன்னும் இது போல்
ஆயிரம் பிரபஞ்சங்களை
உன் அறிவியல் சிந்தனை
எனும் சோதனைக்குழாயில்
நீ உருவாக்க முடியும்.
அதைத் தடுக்க உன்னை
அனக்கோண்டா பாம்பாக
சுற்றிக்கொள்ள வருவதே
மதம் பற்றிய எண்ண நொதிப்புகள்.
இந்தப்போதையில் நீ
மூழ்கினால்
ஓ மனிதா!
நீ உன் பாதை இழப்பாய்.
நீ பயணம் இழப்பாய்.
இந்த மதக் குப்பைகளை அகற்று.


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________ருத்ரா

சனி, 22 செப்டம்பர், 2018

கமலின் குடவோலைக்குள்ளிருந்து ஒரு "விஸ்வரூபம்."

கமலின் குடவோலைக்குள்ளிருந்து ஒரு "விஸ்வரூபம்."
================================================‍‍=======ருத்ரா

"புல்லின் வேர்" எனும் கிராம நிலையிலிருந்து
ஜனநாயக விருட்சங்களை
கமல் அவர்கள் பதியம் போட‌
முனைந்திருப்பதை வரவேற்கலாம்.
இந்த "போன்ஸாய்" பொம்மை முறை
எந்த அளவுக்கு பயன்படும்?
நம் ஜனநாயக நாற்காலியின்
நான்கு கால்களும்
கால் ஊன்றியிருப்பது
ஊழல் ஊழல் ஊழல் ஊழலே தான்.
அதில் பஞ்சாயத்து ஆட்சியில்
என்ன மாற்றங்களை சாதிக்க இயலும்?
பஞ்சாயத்துகள் கூட
ஊழல் எனும்
நாகப்பாம்பின் குட்டிகள் தானே.
கூரிய விஷப்பல்லை மக்கள் மீது
அவை கூர் தீட்டுவதை
நாம் பார்த்துதான் இருக்கிறோம்.
பெண்களுக்கு ஒதுக்கப்படும்
தலைவர் பதவிகளின்
முந்தானைக்குள் கூட
அந்த கணவன்மார்களே
டீல் பேசும் காட்சிகள்
நம் ஜனநாயகத்தில் அரங்கேறும்
அவலங்கள் தானே.
ஊராட்சி
ஐம்பேராயம்
என்ற‌
சோழர் காலச்சொற்களுக்கு
புளி போட்டு விளக்கமுயன்றாலும்
அது "கிராம சபை"என்று தானே
வழக்கத்திற்கு வருகிறது.
தமிழின் மீது நாமே
காலம் காலமாய் இந்த‌
பாறாங்கல்லைப்போட்டு
மூடித்தானே வைத்திருக்கிறோம்.
தமிழ்விடுதலைக்கு அவர்
மருதநாயகமாய்
எப்போது குதிரையேறி வருவாரோ?
"அலாவுதீன் அற்புதவிளக்கில்"
நடித்த கமலுக்கு அந்த‌
விளக்கைத்தேய்த்த அனுபவம் உண்டு.
அது போல்
இந்த "குடவோலை"யைத்தேய்த்து
ஜனநாயக பூதத்தை அவர்
எழுப்பித்தர நாமும் அந்த "குடத்துள்"
ஒரு "ஓலைச்"சீட்டு போடுவோம்.
நல்லாட்சி எனும் "விஸ்வரூபம்- 3"
விரைவில் வெளியிடப்பட
நாம் தோள்கொடுப்போம்.

கமல் முயற்சிகள்
நீர்த்துப்போகக்கூடாது.
அவரது "கிராமசபை"இயக்கத்திற்கு
நம் வாழ்த்துக்கள்.

=================================================================










பிம்பம்

பிம்பம்
===================================ருத்ரா

இது உலகம் அல்ல
உன் பிம்பம்.
அங்கு தெரியும்
உன் முகமே
உன் வாழ்க்கை.
உற்று ப்பார்த்து
உன் மீசையை
சரி பார்த்துக்கொண்டதெல்லாம்
போதும்!
உன் வீரம் காட்ட
வாள் சுழற்றியதும்
போதும்.
இந்த துப்பாக்கிக்குண்டுகளா
உன் வாழ்க்கை?
சாதி மாதங்கள்
உன் பார்வையை மறிப்பது
உன் பார்வைக்குள்
வரவில்லையா?
மரணங்களை
தினந்தோறும்
உன் மீதே காறி உமிழும்
காட்டுமிராண்டியாய்
காட்டுவதற்கா
இங்கு முகம் பார்த்தாய்?
சகிக்கவில்லை!
எங்கே உன் மனித முகம்!
சமாதானபூங்கொத்தோடு
ஒரு சரித்திரத்தின்
முகம் காட்டு.
போ!
ரத்தக்கறை
படிந்த உன் முகத்தை
கழுவிக்கொண்டு வா!

=============================================
21.09.2016 ல் எழுதியது.









வெள்ளி, 21 செப்டம்பர், 2018

ஜ்யாமெட்ரி ஆஃப் "கடவுள்"

ஜ்யாமெட்ரி ஆஃப் "கடவுள்"
================================================ருத்ரா

மனிதனுக்கு முன் ஒரு மனிதன் இருந்தான்
இவன்
அவன் பெயரைக் கடவுள் என்றான்
அதற்கு முன்னும் போய் யோசிக்க முடியாதவன்
கடவுளோடு நின்று விட்டான்.
விஞ்ஞானியால் அதற்கு முன்னும் போகமுடியும்.
ஆனால்
எல்லா விஞ்ஞானிகளும் நாத்திகர்கள் இல்லை.
எல்லா நாத்திகர்களும் விஞ்ஞானிகள் இல்லை.
பகுத்து அறியும் அறிவே
அறிவுகளில் சிறந்த அறிவு.
ஆம்
அப்படி பகுத்து அறிந்தால் தான்
கடவுள் தெரியும் என்றார்கள் கடவுள் கருத்தாளர்கள்.
அறியாததை அறிந்ததாக பாவ்லா காட்டுவது
இவர்களுடைய பகுத்தறிவு.
அறியாததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அறிவை வெட்டியெடுப்பதே பகுத்தறிவு.
இது நாத்திகர்களின் பகுத்தறிவு.
அறியாததை பத்திரமாக வைத்திருந்து
அதற்கு குடமுழுக்கு செய்வதே
ஆத்திகர்களின் அன்றாடப்பணி.
ஆனால்
அறியாமையை எல்லாம்
அறிவால் வகுத்து
மிச்சமே வராத ஒரு "கோஷியண்ட்"
ப்ளாங்க்ஸ் கான்ஸ்டாண்டிலிருந்து தொடங்குகிறது.
சாத்தான்களையெல்லாம்
எலிமினேட் செய்யும் கணிதம்
கடவுளுக்கும் தெரியாது.
கடவுள் சாத்தான் இரண்டும்
ஒரு டியுவாலிடி ஜ்யாமெட்ரி.
ஒரு புள்ளியில் இன்ஃபினிடி ஆஃப் லைன்ஸ்.
ஒரு கோட்டில் இன்ஃபினிடி ஆஃப் பாயிண்ட்ஸ்
என்பதுவே டியுவாலிடி ஜ்யாமெட்ரி.
கடவுள் சாத்தான் எனும்
டியுவாலிடி ஜ்யாமெட்ரியில்
இருக்கும் கணிதமே நாத்திகம்.
மனிதனை பிறக்க வைத்து கடவுளை
சிந்திக்க வைப்பதற்கு பதில்
கடவுளே பிறந்து விடலாமே.
பிறப்பு இருந்தால் கடவுளுக்கும்
இறப்பு உண்டு.
இப்படி தர்க்க சாஸ்திரம் எல்லாம்
சொல்கின்ற நாத்திகம் கூட‌
ஒரு சாஸ்திரமே.
விஞ்ஞானமாய் எல்லாம் சிந்திக்க
ஆரம்பித்து விட்டால்
கடவுளே சொல்லுவார்
கடவுளே இல்லை என்று.

===============================================================

வியாழன், 20 செப்டம்பர், 2018

ஷாமியானா பந்தல்

ஷாமியானா பந்தல்
=========================================ருத்ரா

எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள்
அந்த பந்தலின் அடியில்.
பந்தல் துணி
அற்புத ஓவியங்களுடன்
தையல்வேலை செய்யப்பட்டு
அழகாய் இருந்தன.
அந்த யாளி போன்ற உருவம்
பூங்கொத்துக்களோடு பின்னிப் பிணைந்து
நன்றாய் காட்சி தந்தது.
ஒரு பெண் ஒரு புள்ளிமானைத்தழுவிக்கொண்டு
அதை முத்தம் கொடுத்து
மகிழ்ச்சியில் அந்த பந்தல் துணியையெல்லாம்
ஈரப்படுத்தியிருந்தது போல்
மிக அற்புதம்.
ஓரங்களில் எல்லாம் அவள்
காதோரம் லோலாக்குகள் போல்
டிசைன்கள் அழகாய் தொங்கி
காற்றில் அசைந்து கொண்டிருந்தது.
பந்தலை இழுத்து நிறுத்த‌
கயிறுகள் பூமியில் அடிக்கப்பட்டிருந்தன.
விறைத்த கால் எலும்புகள் போல்
இரும்புக்குழாய்கள் தாங்கிப்பிடிக்க‌
ஷாமியானா பந்தலின் அழகும் கவர்ச்சியும்
வெகு நேரம் உட்கார்ந்திருந்த என்னை
ஒரு உன்மத்தக் களிப்பில்
கரைத்து கரைத்து ஒன்றுமில்லாமல்
செய்து விட்டிருந்தன.
திடீரென்று
ஓலம் ஒப்பாரி..குரல்கள்
கொத்து கொத்தாய் அந்தப்பந்தலை
சல்லடை ஆக்கின.
திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
ஓ!
அந்த உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து
அந்த "சொர்க்க ரதத்தில்"
ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
அந்த கொள்ளிச்சட்டியில்
அந்த உடலின் முற்றுப்புள்ளிகள்
கங்குகளாய் கனல் பரப்பின.
மரணம் ஆழமானது தான்.
என் துக்கவிசாரிப்பு எனும்
ஒரு மனப்புண் இந்நேரம் வரை
ஆறாத புண்ணை யெல்லாம் ஆற்றும்
ஒரு "ஆறுமுகக்களிம்பு" எனும்
அந்த பந்தல் மூலம்
மூடியாக்கிடந்தது?
"அத்வைதம்" அது இது என்று
நம்மீது  அணி அடித்து
வைத்திருந்ததெல்லாம் கூட
இந்த தருணங்களின் நடு நெஞ்சில்
சிலுவையாய்  அறையப்பட்டிருந்தன.
இயற்கை தான்
அந்த சுத்தியலையும்  ஆணியையும்
வெறியாய் அங்கே வீசியெறிந்ததா?

அழுகையின் கடலில் அந்த உடல்
மிதந்து கொண்டிருந்தது.
ஷாமினா மங்கையின் முத்தம்
இப்போதும் அழகாய்த்தான் இருந்தது.

========================================================



முகம்

முகம்
===========================================ருத்ரா

என் மீது எல்லோரும்
கடந்து போனார்கள்.
என் முதுகின் நரம்புகளில்
ரோடு ரோலர்களை
கடமுடா என்று ஓட்டினார்கள்.
என் முகம் தேய்ந்தே போனது.
கனத்த அந்த அரசியல் சாசன
புத்தகத்தின்
பக்கங்களில் மாட்டிக்கொண்டு
லேமினேட் செய்தது போல்
நசுங்கிப்போன ஒரு
கரப்பான் பூச்சியாய்
சிதைந்து போனது
என் முகம்.
ஒவ்வொரு ஆண்டையும்
என்மீது உருட்டி உருட்டி
என்னைக்கூழாக்கி
எழுபது ஆண்டுகளுக்கும்
மேலாய்
இன்னும் என்னை
எழுந்திருக்க விடவில்லை.
பொருட்களை பண்டமாற்றம்
செய்ய வந்த பணம்
மக்களைபிணமாக்கி
பண்டமாற்றம் செய்ய வந்திருக்கிறது.
"தராசு" தட்டுகளில் 
\எடைக்குப்போடப்பட்ட
பழைய பேப்பர்களாய்
மசோதாக்கள் குவிந்து போனதில்
தேச  சக்கரத்தின்
அச்சு முறிந்து போனது தான் மிச்சம்.

அறியாமையும் பழமைவாதமும்
மட்டுமே
நம் மண்ணின் வாசம் ஆனது.
அந்த துர்நாற்றத்தை கங்காஜலம் கொண்டு
மந்திரம் சொல்லி
மிச்சமான நம் சடலங்களால் நிரப்பி
அந்த "ஜீவ நதியையும்"
சவ நதியாய் ஆக்கி விட்டோம் .
கும்பமேளாக்கள் மட்டும்
நம் கும்பமேளாக்கள் அல்ல
நம் தேர்தல்களும் தான்.
நாம் நடத்தும்
இந்த ஐந்தாண்டு ஒலிம்பிக் விளையாட்டு
வெறுமே
வரிசையில் நின்று கொண்டிருப்பது தான்.
ஒவ்வொரு தடவையும்
ஓட்டுகளைத்தான் அதில் போட்டோம்.
எப்படி
ஒவ்வொரு தடவையும்
அதிலிருந்து
ஹிட்லர்கள் வந்தார்கள்?

என் முகம் இன்னும் சிதைந்து தான்
கிடக்கிறது.
ஆம்
ஜனநாயகத்தின் அந்த
"முக"வரி
உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
தெருக்களெல்லாம் பாழாய்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.

====================================================


ஓவியக்காடுகள் (2)



   ஓவியக்காடுகள்  (2)
=====================================


குமிழிகள்
----------------

ஊதுவது யார்
இந்த சோப்புக்குமிழிகளை?
அவள் விழிகளின்
மாயச்சுழிகள்
ஒரு இருட்டுக்கடலுள்
அமிழ்த்திக்கொண்டிருக்கிறது.
இந்த நகரம்
ஜனக்கூட்டம்
அம்மா ..அப்பா
தம்பி தங்கை
இவர்கள் எல்லாம்
எல்லாம்
தொலைதூர
பொம்மைக்கொலுவாய்
மங்கல் உருவங்களாய்...

ஒரு சிரிப்பொலியில்
அவள் வீசிய ஒலிக்கீற்று
ஒரு கயிறாய்
அல்லது
பளிங்கு ப்புன்னகையில்
உருக்கி வார்த்து
"அனக்கோண்டாவாய்"
என் மீது முறுக்கிக்கொண்டிருக்கிறது.
இன்பவலியை
ஒரு ருசியான விஷ ஊசியாய்
என் நாளங்களுக்குள்
ஏற்றுகிறது.
எனக்கு இந்த குமிழிகளைத்தவிர
மற்ற கல் கட்டிடங்கள் எல்லாம் ..
மற்ற கல்லூரிப்பாடங்கள் எல்லாம் ..
காலமே அர்த்தமற்றதாய்  போன பிறகு
நிகழ் காலம் வருங்காலம் எல்லாம்
தூள் தூள்.
இந்த நிழலை
என் உடலில் என் உயிரில்
தொங்க விட்டுக்கொண்டிருக்கிறேன்.
இதன் முகம் எது?
கை எது? கால் எது?
எங்கள் உருவங்கள் இதயங்கள்...
யாவும்
காய்ச்சி வடித்த
ஒரு மூளித்தனமான திரவமாய்
நொதித்துக்கொண்டிருக்கிறது..
தளும்ப இடமில்லை.
இந்த கிண்ணங்களின்
கண்ணாடி விளிம்புகள்
உடைந்து நொறுங்கட்டும்.

=============================================





செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வீணையடி நீ எனக்கு...

வீணையடி நீ எனக்கு...
================================================ருத்ரா

பெண்சுதந்திரம் வேண்டுமென்று
மீசை முறுக்காத குறையாய்
பெண்களே விழிப்பு உணர்வு பெற்று
இணைய தளத்தின்
சந்து பொந்துகளில் எல்லாம்
குரல் எழுப்புகிறார்கள்.
இதற்காக‌
மலைபோல குவிந்த‌
குறும்படங்களும்
நெடும்படங்களும்
அங்கங்கே விருதுகள் பெற்று
உலக கவனம்
திருப்பு முனை அடைந்து
வீறு பெற்று எழுகிறது.
தன் வாழ்க்கையின்
முழு நீள படத்தையெல்லாம்
எந்த சம்பவங்களும் இன்றி
வெறும் கச்சா பிலிம் ஆக்கி
வெள்ளை வெளேர் என்ற‌
நரைப்பூக்களின் வனத்தில்
வந்து நின்றபோதும்
அந்த பெண்மை எனும் சக்திக்கு
எழுச்சி ஏற்படுத்திய‌
எத்தனையோ பெண் திலகங்கள்
ஆணாதிக்கத்தின் அச்சில் சுழலுகின்ற
இந்த பூமியின் தலையெழுத்தை
மாற்றியே தீருவோம்
என்ற வேள்வியில் தாமே
ஆகுதியாய் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அந்த பெண்ணியம்
முன்னேற்றத்தின் பாதையில்
முனைந்து வந்து கொண்டிருக்கிறது.
கணினி யுகம் கூட‌ அவர்களின்
கைவிரல்களுக்கு
புகுந்து கொண்டுவிட்டது.
இந்த கார்ப்பரேட்டுகள்
பெண்மை என்றால்
வண்ண வண்ணமான நகப்பூச்சுகளின்
குவியல் என்றும்
சருமத்தை பொன் திட்டு ஆக்கும்
சாதனங்களின் கடல் என்றும்
கருப்பாய் மின்னும்
அவர்கள் கூந்தல் இழையைக்கொண்டு
இந்த பிரபஞ்சத்தின்
இருட்டையெல்லாம் ஒளிபூசி
சுடரச்செய்யலாம் என்றும்
ப்ளாப் அப் விளம்பரங்கள்
ஆயிரம் குவிக்கிறார்கள்.

"பெண்ணே
உனக்கு மதம் இல்லை.
அது உனக்கு பாதுகாப்பும் இல்லை.
சமுதாய மானிட நேயமே
நீ உன் சிந்தனைக்குள்
உன்னை ஓவியமாக்கும் மெகந்தி"
என்று
எந்த கம்பெனியாவது
விளம்பரம் செய்கிறதா?

அவை
பெண்மையின் மீது
அழுந்திகிடக்கும் நுகத்தடிகளுக்கு
ஆயிரம் "ஜுவெல்லரி" டிசைன்களை
அடுக்கி அடுக்கி காட்டுகின்றன.

இன்னும் "அண்ட்ராய்டுகளில்"அவை
பெண்ணே
உன்னை அந்த செல்ஃபோன்கள் வழியே
காதல் எனும்
"காக்காய் முள்" காட்டில் தள்ளி
குயில்பாட்டு பாடுகின்றன.

காதல் உனக்கு
ஒரு சமுதாய ஆயுதம் தான்
அந்த காதலன் உன்
"தோழனாகவும்" இருக்கும்போது.
இருவரும் சேர்ந்து
அந்த வானவில்லை
உங்களோடு கோர்த்துக்கொள்ளுங்கள்.
பட்டாம்பூச்சிகளை
வர்ணப்பிரளயங்களாய்
உங்கள் இமைகள் மீது
வழிந்தோடச்செய்யுங்கள்.
ஆனாலும்
சமுதாய முரண்பாடுகளில்
சாதி மதப்பேய்களால் உருவாக்கப்படும்
யதார்த்தமும்
உங்கள் காதோர கூந்தற்சுருளில்
மௌனமான சுநாமிகளாய்
மிரட்டுவதை ஓர்மை கொள்ளுங்கள்.
சமுதாயச்சீற்றம் எனும்
ஒரு மெல்லிய லாவா உங்கள்
காலடியில் ஒரு
செம்பஞ்சு ஓடையாய் நெளிவதையும்
உணர்வில் வையுங்கள்.

பெண்கள் தான்
மாற்றங்களின் மிகப்பெரிய நம்பிக்கை.
உங்களுடைய அந்த‌
மரணவலி என்னும் பிரசவவலி
கண்ணுக்குத்தெரியாத‌
அல்லது
உணர்ச்சி நரம்புகளில் படராத‌
ஒரு ஊமைவலியாய்
இந்த சமுதாயத்தை
பிசைந்து பிசைந்து
கொடுமைப்படுத்திக்கொண்டிருக்கிறது.
பெண்ணே!
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
என்று
புல்லாங்குழல் வழியே
புளகாங்கிதம் கொள்ளும் வேளையில்
இந்த வலிபற்றிய "வலியை"
அந்த நந்தகுமாரனுக்கும் புரியவை.
புராணங்களில் வரும் பக்திலீலையில்
குளிக்கும்போது
உங்கள் துகில்களை எல்லாம் களவாடி
ஒரு "பக்தி தத்துவத்தை"உங்களுக்கு
புரியவைக்க முயலும்
இந்த நந்தகுமாரன்களை எல்லாம்
உன் வீட்டு அடுப்பெரிக்கும்
விறகுகள் ஆக்கி விடு.
ஆம்.
இந்த சிலிண்டர் யுகத்திலும்
இந்த விறகு கட்டைகளே உனக்கு
வீணை வாசிக்க காத்திருக்கின்றன.

===================================================







எதைப்பற்றி...

எதைப்பற்றி...
=======================================ருத்ரா

எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...

அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...

வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடக்கும்போது...

எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்பதை
ஒத்திகை பார்க்க...

============================================
ஒரு மீள்பதிவு.

திங்கள், 17 செப்டம்பர், 2018

ஓவியக்காடுகள்








ஓவியக்காடுகள் 
================
ருத்ரா 

காகிதத்தை எடுத்துவைத்துக்கொண்டு 
என்ன எழுதலாம் 
என்று 
பேனாவை உருட்டிக்கொண்டே இருக்கும்
கவிஞன் 
நுழைந்து கொண்டிருப்பது 
இருட்டே அங்கு மரங்களாய் கிளைகளாய் பூக்களாய் 
இருக்கும் 
ஒரு அடர்ந்த காட்டைத்தான்.
ஆம் 
ஓவியனும் 
அப்படி நுழைவது 
ஒரு தூரிகைக்காட்டைத்தான்.
அது 
பெண்ணின் கண்களின் 
கன அழுத்தம் கொண்ட 
சுநாமித்துடிப்புகளாய் இருக்கலாம்.
அவள் கனவுகளெல்லாம் 
தீப்பற்றி எரியும் 
அக்கினியின் அட்லாண்டிக்கடல் சீற்றங்களாக 
இருக்கலாம்.
நசுங்கிப்போகும் அந்த 
நத்தைக்கூட்டிலா 
நாலாயிரம் பிரளயங்கள் 
கருக்கொண்டிருக்க இயலும்?
சித்தனைகளின் 
"அவலாஞ்சி "
முகடு தட்டி நிற்கின்ற 
அவன் இமயசெறுக்குகளை 
தவிடு போட்டி ஆக்கி விட்டது.
அவன் 
அந்த தூரிகையில் 
மறைந்தே போனான்.
ஓ 
அன்பான பார்வையாளர்களே 
அந்த லகானை 
நீங்களே கைப்பற்றுங்கள்.
அவன் 
முரட்டுக்குதிரையாய் 
திமிறுவான் குதிப்பான் 
அதில் 
சமுதாய ரத்தம் 
வண்ணப்பிழம்புகளாய் 
அங்கே 
அடர்மழைபெய்யலாம்.
ஓவியமும் தலைப்பும் 
உங்கள் 
இதயக்காடுகளில் சிக்கிக்கிடக்கிறது.
அதை 
பூர்த்தி செய்யுங்கள்.
ஆம் 
அதை பூர்த்தி செய்யுங்கள்!

========================================




".......அது ராங்கா போகாம இருந்ததில்லே "

".......அது ராங்கா போகாம இருந்ததில்லே "
==================================================ருத்ரா

பிள்ளையார் பிடிக்கப்போய்....
குரங்காய் முடிந்தது
என்பது பழமொழி.
அதற்குள்
வெறும் சாணிப்பிள்ளையார்
பிண்டம்பிடிக்கப்படும் கதை
மட்டும் இல்லை.
சைவம்
வைணவத்துக்கு மாற்றப்படும்
"மத மாற்ற" அரசியலும் உண்டு.
அந்த
"ஷண்மத"ப் பிரிவுகளிடையே
சிரச்சேதங்களும்
கழுவேற்றல்களும்
கல்லில் பூட்டி
கடலில் பாய்ச்சிய கொடூரங்களும்
யானையால்
தலைகள் மிதித்து
நசுக்கப்படுவதுமான‌
கோரதாண்டவங்களுக்கு
பஞ்சமில்லை.
இதன் அடிக்காரணம்
கடவுள் தத்துவம்
அது இது எனும்
எந்த மண்ணாங்கட்டியும் இல்லை.
"அரசாளவேன்டும்" என்ற‌
அந்த ஒரே நாற்காலி வெறி தான்.
இன்று ஒரே தேசம்
என்பவர்களும்
அந்த வெறிக்கு தான்
வெறியோடு பல்லக்கு தூக்குகிறார்கள்.

முருகனும் மாரியம்மனும் தான்
தமிழ் மண்ணுக்குரியவை.
அந்த ராட்சச "விநாயகர்களின் ஊர்வலமும்"
குழப்பம் விளைவிக்கும்
கோஷங்களும்
பழைய ஷண்மத போர்க்கலவரங்களை
புதுப்பிக்கின்றனவோ
என்ற ஐயமே பெரும் அச்சமாக‌
இங்கு கவிகிறது.
அதனுள்
தமிழர்கள் நாத்திகம் பேசுவதை
நசுக்கிவிடவேண்டும் என்று
ஒரு உட்புகைச்சலும் உருவாக்கப்படுகிறது.
அந்த கலகங்களுக்கு
"பிள்ளையார் சுழி" போடும் இடம்
மசூதிகளாக இருப்பது
ஒரு அரசியல் சாணக்கியம் ஆகும்.
ராஜா கைய வச்சா அது
ராங்கா போனதில்லை என்று
யாரோ புளகாங்கிதமாய்
பதிவிட்டிருந்தார்.
அந்த ராஜா போட்ட கூச்சல்
"ராஜா கைய வச்சா அது
ராங்கா போகாம இருந்ததில்லை"
என்று தான் நம்
காதில் விழ வைத்தது.

=========================================================


குட்கா

குட்கா
==============================ருத்ரா

இது என்ன‌
மந்திரவாதிகளின் குகையா?
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு கிளியின்
வயிற்றுக்குள் அடைத்து
வைத்திருக்கும் ரகசியமா இது?
மக்களை...
ஜனநாயகத்தை...
சில்லறை சில்லறையாக‌
மரப்பு செய்து
சிந்தனையற்ற மூளைகளின்
வெறும் கபாலக்கூடுகள் ஆக்கும்
திருப்பணியை செய்வதற்குத்தான்
பெட்டிக்கடைகள் தோறும்
இந்த பிளாஸ்டிக் குடல்கள்
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
சமுதாயத்தின்
ஒரு நீண்டகால மரணச் சித்திரம்
நீள நீளமான சவப்பெட்டியாகி
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
வீரதீரமாய் இதை வெட்டிவீழ்த்த‌
வந்துவிட்டோம்
என்கின்ற விக்கிரமாதித்தன்களோ
இந்த லஞ்சத்தின் வேதாளவயிற்றுக்குள்
விழுங்கப்பட்டு கிடக்கிறார்கள்.
ஆட்சி எந்திரமோ
தன் விழாக்களுக்கு அவற்றையே
தோரணங்கள்
ஆக்கிக்கொண்டன போலும்!
குட்கா ஆண்டால் என்ன?
கூஜா ஆண்டால் என்ன?
எனக்கொரு கவலையில்லை
என்று
ரஜனி ஸ்டைலில்
குத்துப்பாட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
ஒட்டுப்பூச்சிகள் எனும்
விட்டில் பூச்சிகள்.
நீதிமன்றங்களோ
"சூ மந்திரக்காளி!
பயம் வேண்டாம்
எல்லாம் சரியாகிவிடும்"
என்று
மரச்சுத்தியல்கள் தட்டி
சப்தம் எழுப்பிவிட்டன!
எல்லோருக்கும்
நன்றி நன்றி நன்றி.
இந்த குட்காவுக்கும் தான்.
நமது மோசமான முகமூடியை
இந்த அளவுக்கு கிழித்து
கடை கடையாய் தொங்கவிட்டிருக்கிறதே!
அதன் மசாலா நெடி தாங்காமல்
நம் தூக்கங்களெல்லாம் கலையட்டும்.
இனி புதிய விழியல் தான்
நம் புதிய விடியல்!

===============================================================



ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
============================================ருத்ரா

அண்ணே நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப்போறேண்ணே.
நான் தலவர்.நீங்க பொதுச்செயலாளர்..

அடீன்ங்க்க்..ஞொக்க மக்கா..அப்றம் கட்சி பேர் என்னடா?

அ அ க !

அப்டீன்னா

அய்யா அம்மா கழகம் ..இல்லேண்ணா அம்மா அய்யா கழகம்
எல்லாக்கட்சிலேயும் அய்யாவும் இருப்பாங்க அம்மாவும் இருப்பாங்க..அவிய்ங்க ஓட்டெல்லாம் நமக்குத்தாண்ணே..

படவா.. ஓடிப்போய்டு. கட்சி ஆரம்பிக்கிறானாம் கட்சி..
இதுக்குப்பதிலா "குண்டக்க மண்டக்க கழகம்" னு வையேண்டா..

அய்ய்ய்..இது கூட நல்லாத்தான் இருக்கு.

இருங்கண்ணே வந்துடறேன்  (ஓடுகிறார்)

எங்கடா ஓடுறே..

தேர்தல் ஆணையத்துட்ட நீங்க சொன்னமாதிரி  கே ஏம் கேன்னு
பேர மாத்தி மனு குடுத்துட்டு வந்துடறேண்ணே..


============================================================
(நகைச்சுவைக்காக )


A breaking News


A breaking News
________________________________

Life does not mean a lamp
in a beautiful glass.
it means only when 
it is broken
and you have to know
that you have also to break
one thing
that is the FATE
of our Corrupetd
Democracy.
_____________________________
Ruthraa

சனி, 15 செப்டம்பர், 2018

ரஜனி கட்சிக்கு இப்படி பெயர் வைத்தால் எப்படி இருக்கும்?

ரஜனி கட்சிக்கு இப்படி பெயர் வைத்தால் எப்படி இருக்கும்?
=======================================================
ருத்ரா


தல..தெறி என்ற வரிசையில்
பேட்ட என்று
படத்துக்கு பெயர் வைத்தாகி விட்டது.

"சர்த்தான் தலிவா
நம்ம கட்சிக்கு என்ன பேர் வய்க்கிறது?"
ஒரு தொண்டனிலும் தொண்டன்
அடித்தொண்டை கிழிய கதறுகிறானே!

தலைவர் சிந்திக்கிறார்.
தலையைச்சொறிகிறார் அல்லது
பிரபஞ்சம் போல் இருக்கிற‌
அந்த தலையை சொடுக்குகிறார்.

கூட்டத்தின் குரல் சுநாமியில்
அரங்கமே ஆடுகிறது.
ஊடே வருகிறார்
தமிழ் அருவி...
"சு அ க"...அதாவது
"சுதந்திர அர்ப்பணிப்புக் கழகம்!"
"இதெப்டி இருக்கு?"
யார் தமிழ் அருவியா இப்படி
சூப்பர்ஸ்டாருக்கு "டப்பிங்" தருவது?
கூட்டம் சல சலக்கிறது.

"அருவி அய்யா
அங்ஙன போய் உக்காந்துக்குங்க அய்யா"
பொறுக்கமுடியாத
யாரோ ஒரு தொண்டர் கத்துகிறார்.

தலைவர் வந்து அமைதிப்படுத்துகிறார்..
பிறகு அவருக்கே உரித்தான
ஹ..ஹ..ஹஹ்..ஹா ஹா
எனும் சங்கிலிச்சிரிப்பில்
அரங்கத்தில் மழை பொழிகிறார்.
"யாரும் சங்கடப்பட வேண்டாம்"
மீண்டும் அதே
ஹ ஹ ஹஹ் ஹா ஹா சிரிப்பு

"சும்மா அதிருதுல்ல.."
ஆமாம் அது தான்
அந்த சு.அ.க..
"சும்மா அதிருதுல்ல கழகம்"
நீங்களே சொல்லி முழங்கலாம்
அரங்கம் முழுதும்
சீழ்க்கை ஒலிகள்..வாழ்க ஒலிகள்..
சும்மா அதிருதுல்ல..கழகம்
சும்மா அதிருதுல்ல...கழகம்
கட்சி பிறந்து
குவா குவா என்றது!

=========================================================
(ஒரு கற்பனை விழாக்  காட்சி இது)





வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஓலைத்துடிப்புகள் 27


ஓலைத்துடிப்புகள் 27
===================================ருத்ரா

மொழிபெயர் தேஎம் இறந்து..
=============================================ருத்ரா

யாமை ஓடன்ன குடுமிகள் அறைய‌
கவலையாற்று நாணல் நீளல்
அளையும் குறும் புள்  வண்ணச்சிறை
அலைபடுத்தாங்கு அவள் விழிச்சிட்டுகள்
அலைக்கும் என் நெஞ்சு அழலெழு துயரில்.
பொருள்கோள் நசைஇ வன்சுரம் ஊர‌
முளிசினை முறுக்கிய பாம்புகள் சுருள்தரு
கானம் நத்தி மொழிபெயர் தேஎம் இறந்து
கல்லிடை முள்ளிடை கொல்லாற்றுப்போக்கிடை
இடறு கலிமா நிலம் வீழ்ந்தன்ன‌
இடர்ப்பட்டுழியும் நின் வால்செறி எயிற்றின்
நறவொழுகு நகையின் எண்ணி எண்ணி
அடர்க்கான் படர்தர தொடர்வேன் யானே.

===================================================

பொருள் தேடி வன்சுரம் ஏகும் தலைவன் தலைவியின்
தேன் ஒழுகும் புன்னகையை எண்ணி எண்ணி
அக்கொடுங்காட்டையும் பொருட்படுத்தாது தொடர்ந்து
செல்லும்போது பாடிக்கொண்டதாக நான் புனைந்த‌
சங்கநடைச்செய்யுள் இது.

=======================================================
பொழிப்புரை தொடரும்.

சீம ராஜா என்றொரு வசூல் ராஜா

சீம ராஜா என்றொரு வசூல் ராஜா
================================================ருத்ரா


சிவகார்த்திகேயன் ஒரு காமெடியனா?
சிவகார்த்திகேயன் ஒரு (வளரும்) சூப்பர்ஸ்டாரா?
சிவகார்த்திகேயன் ஆக்சன் ஹீரோவா?
சிவகார்த்திகேயன் ஒரு நடிப்புச்செம்மலா?

இந்தக்கேள்விகள்
அவரது ரசிகர்களிடம் கேட்கப்பட்டால்
அவர்கள் திணறலாம்.
ஆனால் சினிமா பார்க்கும்
குட்டிப்பயல்கள் எல்லாம்
சொல்லிவிடுவார்கள்
அவர் இல்லாமல் சினிமா இல்லை என்று.
இத்தனைக்கும்
அவர் தன் பாக்கெட்டிலேயே
வைத்திருப்பது போல்
சூரியை கங்காரு குட்டியாய் ஆக்கி
ஓடி ஓடி நடிப்பார்.
இவர்கள் இருவரும்
அடிக்கும் லூட்டியில் தான்
இந்த வசூல் ரகசியம் இருக்கிறது.
"கலாய்த்தல்" என்பது தான்
இப்போதைய தலைமுறையினர்
கையாளும்
நடிப்புக்கலையின் இலக்கணம்.
சிவகார்த்திகேயன் ரஜனி ரசிகர்தான்.
ஆனால் அவர் போல்
சிகரெட்டுகளை ஆகாசத்தில் போட்டு
வாயில் கவ்வும் சர்க்கஸ் எல்லாம்
இல்லாமலேயே
ஒரு "கலாய்த்தல்" மன்னராக வலம் வந்து
தான் வகிக்கும் பாத்திரம்
தளும்ப தளும்ப சிரிக்கவைத்து
சிலம்பம் ஆடுவதில் வல்லவர்.
அவர் கதாநாயகிகளிடம் கூட‌
காதலில்
ஒரு ரோஜாப்பூவை நீட்டும்போது கூட‌
அந்த கலாய்ப்பின் வாசனையில்
தியேட்டரே திக்கு முக்காடிப்போய் விடும்.
ஒரு வித்தியாசமான ஹீரோயிசத்தை
அவர் வெளிப்படுத்தும் விதமே
இன்றைய அவர் வெற்றிகளுக்கு காரணம்.
பழைய தலைமுறைக்காரர்கள் இன்னும்
அந்த "காதலிக்க நேரமில்லையையே"
மென்று மென்று குதப்பி
சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
ஆனால்
சிவகார்த்திகேயன் படங்கள்
அதே காமெடி ரசனையை இன்றும்
தந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து
அவர் ஒரு பந்தயக்குதிரையாய்
எல்லோரையும் முந்திக்கொண்டு ஓட‌
நமது வாழ்த்துக்கள்.

=============================================================






கனவுக்குள் அகப்படவில்லை!

thoorikaikkaadukal.png
ருத்ரா




கனவுக்குள் அகப்படவில்லை!
================================================ருத்ரா

ஏன் அகப்படவே மாட்டேன் என்கிறான்?
இமைகளை அழுத்தியும்
மூடிப்பார்த்து விட்டேன்.
அன்னத்தூவிகளாலும்
மூடிப்பார்த்து விட்டேன்
ஏன் இன்னும் வரவில்லை?
சைக்டெலிக் நரம்புகளை
என் இமைகளில் ரங்கோலி
போட்டுக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு போய் தொலைந்தான்?
அந்த இரவின்
வெளிச்சதை பிழம்புக்குள்
விஞ்ஞானிகளின் டார்க் மேட்டரின்
இருட்பிண்டமாய்
இழைந்து கொண்டிருக்கிறானோ!
பெண்களின் தடிமான அமுதக்கவர்ச்சிகளை விடவும்
அந்த எம் தியரியின்
தலையணை புத்தகங்களோடு
அமுக்கிக்கொண்டு கிடப்பவனாயிற்றே!
ஏதாவது
காதல் வசனம் இரண்டு சொல்லடா
என்றால்
"ஏடிஎஸ்ஸும் ஹோலோக்ராஃபிக் பிரபஞ்சமும்"
என்று
விளக்கத்துவங்குவானே!
இருப்பினும் அவனை என்னால்
மறக்க முடியவில்லை.
அந்த சோடா புட்டி கண்ணாடிக்குள்
கூகிள்களை சுரங்கம் வெட்டி வைத்திருப்பவன்
அல்லவா!
அடியில் தீ எரியும்
உடல் புணர்ச்சிக்கு
பெர்ஃப்யூம் எழுத்துக்களால்
கிச்சு கிச்சு மூட்ட‌
இன்னும் ஏன் அவன்
கூகிளுக்குள் போகவில்லை?
இருப்பினும்
அவனை எனக்கு
ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
டேய்..
சீக்கிரம் வந்து கனவுகுழம்புக்குள்
கலக்கேண்டா!
வா!வா!...


...................
................


"ஏண்டி காஃபி கலந்து கொண்டு வருவாய்
என நினச்சிட்டிருக்கேன்..
நீ இன்னும் எழுந்திருக்கவே இல்லை..
அடச்சீ..எழுதிந்திரு..
உன் "சோடா புட்டி"
உனக்காக வராண்டாவில்
வெகு நேரமாய் உட்கார்ந்திருக்கிறான்"


=================================================

வியாழன், 13 செப்டம்பர், 2018

நினைக்க நினைக்க...

நினைக்க நினைக்க...
==========================================ருத்ரா

கண்ணே!
காதலின் தொன்மையை
எந்த ஃபாசில்களிலிருந்து
நிறுவுவது?
அதோ மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த
ஒரு பெண்ணின் கபாலம்
அந்த மியூசியத்தில்
இருக்கிறது.
எனக்கு அந்த கண்குழிகளில்
ஒன்றும் தெரியவில்லை.
பெண்ணே!
இன்றும் உன் ஆழம் காணமுடியாத
ஒரு அமர்த்தலான பார்வை தான்.
மண்டையோட்டின் மேடுகளில் கூட
மயில் தொகை அன்ன
கூந்தல் கண்ணுக்குத்தெரியவில்லையே.
வெறும் பாஸ்வரத்தின் ரசாயன
உன் மிச்சத்தில்
காதலின் உன் முதல் ரசாயனத்தின்
பக்கம் எங்கே?
ஆ! அதோ
உன் சிரிப்பு
எவ்வளவு அழகு?
அந்த பல் வரிசையில்
வள்ளுவன் காட்டிய
அந்த வாலெயிற்று இன் நீர்
வைரத்திவலைகளை
வாரி இறைக்கின்றதே!
அந்தக்கடல்களில்
எல்லா "சுராசிக்" மற்றும்
"பிரி கேம்பிரியன்"யுகங்களும்
அல்லவா மூழ்கிக்கிடக்கின்றன.
உற்றுக்கேட்கிறேன்
டி.ரெக்ஸ் எனும் பயங்கர‌
டினோசார்களின் உறுமல்கள் மட்டும்
அல்ல அவை.
நீ அன்றொரு நாள்
நான் ஒரு முத்தம் கேட்டதற்கு
அடம்பிடித்து
மறுத்து அதிர்வு அலைகள்
ஏற்படுத்தினாயே
அவையும் தான் அது!
நினைக்க நினைக்க‌
அந்த இருதய நாளம் என்ன‌
பில்லியன் பில்லியன் நீள‌
ஆண்டுகளின்
காதலையா இன்னும்
இங்கு துளிர்த்துக்கொண்டிருக்கிறது?

==========================================

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

....தருணம் இது!

....தருணம் இது!
===============================================ருத்ரா

இளைய பாரதமே
இளைய தமிழகமே

ஓட்டமும் நடையுமாய்
நீ விரைந்து ஏக வேண்டிய தருணம் இது!
காற்றுக்கு போட்டி போடு.
கடல் அலைகளை க்கூடக் கட்டிபோடு.
மொத்த வேகத்தையும்
குத்தகைக்கு எடுத்துக்கொள்.
இந்த பிரபஞ்சத்தில்
ஒளியை மிஞ்சிய வேகம் இல்லை
என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அவர்களுக்கே தெரியவில்லை
அவர்கள் சிந்திக்கும் வேகம்.
ஒரு குரங்கு மனிதனாக மாற
பல மில்லியன் ஆண்டுகள்
தேவைப்பட்டதாமே.
இன்று நிலாவின் அடிவயிற்று
நீரை உறிஞ்சி அங்கேயே
விவசாயம்
பண்ணி விடுவான் போலிருக்கிறது...
அவனுடைய சிந்திக்கும் வேகத்தால்!
இந்த விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு
மனிதன்
கடவுளையே படைக்கலாம்.
"பைத்தியக்காரா
இப்படி உன்னை நினைக்கவைப்பவனே
அவன் தானே!"
என்று தாடியை வருடிக்கொண்டு
தத்துவ மழை பொழியும்
பெரியவர்கள்
கடவுளை எதிர்த்து கடவுளே
சிந்திப்பது தானே
"டயலக் டிகல் மெட்டிரியலிசம்"
என்று
மார்க்ஸ் எனும் அந்த பெரிய ரிஷி
சொன்னதன் நுட்பம் அறிவார்களா?
மனிதனுக்குள்
முண்டி க்கொண்டிருக்கும்
மூளையின் நியூரான்களின் 
அந்த நுண்ணொலியைக்கேட்க
முயல் மனிதனே முயல்!

மனிதனே
நீ நட்டு வைத்த மைல்கல்லோடு
உன் பயணம் முடிந்து போகவில்லை.
அதற்கு கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டு
முடங்கிப்போகவா
உன் மூளையின் கதிர்வீச்சு
இங்கே முளை விட்டிருக்கிறது?
அதே போல்
விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு
அதன்  "அண்ட்ராய்டு" நுட்பத்தில்
வேடிக்கை விளையாட்டு "கேம்களில்"
புதைந்து போகவா
நீ துடி துடித்துக்கொண்டிருப்பது?

கோடி ஒளியாண்டுகள் தள்ளி நின்று கொண்டு
உனக்கு புதிர்கள் வீசும்
அந்த "குவாஸர்கள்  பல்சார்கள்"பற்றி
சிந்திப்பதைப்பற்றி சிந்தித்துப்பார்.
இந்த சினிமாவும் விசிலடிப்புகளும்
உனக்குள் தகிக்கும் அறிவு சூரியனை
அணைக்க அனுமதிக்கலாமா நீ?
தினவெடுக்கும்  உன் வெற்று ஆசைகளுக்கு
தீனி போட மட்டுமே
உன்னைச்சுற்றி
ஊடகங்கள்.ஊடகங்கள்.ஊடகங்கள்.
இந்த நாடகங்களுக்குத் திரைபோடு.
காலத்திரைகளுக்கு  ...அதன்
மூர்க்கத்தனமான சீற்றங்களுக்கு
கடிவாளம் போட
வீறு கொண்டெழு !

==========================================================



சனி, 8 செப்டம்பர், 2018

ரஜனியின் அடுத்த படம் "தமிளு"

ரஜனியின் அடுத்த படம் "தமிளு"
===========================================ருத்ரா

இப்போது
கார்த்திக் சுப்பராஜாவின் படம்
"பேட்ட" என்று ஒன்று
தயாரிக்கப்பட இருக்கிறது.
இப்படித்தான்
"தல" என்றார்கள்.
அதைத்தொடர்ந்து
கையி
காலு
முண்டம்னு
படங்கள் தொடருமோ
என்று பயந்தார்கள் நம்
தமிழ் ஆர்வலர்கள்.
அப்புறம் மதுரமான மதுரையை
மதுர என்று படம் எடுத்து
வசூல் அள்ளினார்கள்.
விசிலடிச்சான் குஞ்சுகளின்
இந்த "கொசுத்தொல்லை"
தாங்க முடியலைடா சாமி!
இப்படித்தான்
"காவியணிந்து கடவுள்டா
கருப்புச்சட்டை கரிகாலன்டா"
என்று போஸ்டர்களில் கலக்கினார்கள்.
இதே "ரேஞ்சில்"
சிஷ்யப்பிள்ளைகள்
தமிளா....
அப்டின்னா இன்னாங்க்றே?
ரஜனிதாண்டா தமுளு!
தமுளுதாண்டா ரஜனி!
இப்படியும்
ரஜனியின் அடுத்த படமாய்
பூஜை போடப்படலாம்!
சூபர் என்றால் அதற்கு
"சூப்பரான" அர்த்தம் உண்டு
என்று ஆக்கியவர் ரஜனி!
ஆனா இந்த பாசக்கார பயலுவ‌
சூப்பர் என்பது ஆபாசத்துக்கு
இன்னொரு பெயர்
என்று
அதை ஆக்கிவிடக்கூடாதே
என்பதே எங்கள் அச்சம்!

========================================================

புதன், 5 செப்டம்பர், 2018

"கடவுளும் கந்தசாமியும்"

"கடவுளும் கந்தசாமியும்"
================================================ருத்ரா


உனக்கு என்ன வரம் வேண்டும்
கடவுள் கேட்டார்
எனக்கு பளிச்சென்று பொறி தட்டியது.
"இறைவா
அவள் கடைக்கண் என் மீது விழவேண்டும்.
அதோடு
என்னிடம் அவள்
ஐ லவ் யூ சொல்லவேண்டும்."

"தந்தேன் வரம் "

மறைந்து விட்டார் அவர்.

அவர் சொன்னது போல்.
அவள் எதிரே தோன்றினாள்
வா என் அருகில் வா
என்றாள்
அடக்க முடியாத ஆசையில்
அவள் அருகில் சென்றேன்.
என் தலையை நெகிழ்ச்சியோடு வருடினாள்.
எழில் கொஞ்சும் தோற்றத்தில்
அம்பிகை போல் நின்றிருந்தாள்.
அவள் தான் சந்தேகமில்லை.

"வா மகனே வா."

"என்னது.  மகனேயா"..
வடிவேல் பாணியில் வீறிட்டுவிட்டு
மயங்கி வீழ்ந்தேன்.
கூட்டம் கூடிவிட்டது.
தண்ணீர் தெளித்து
என்னை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.
நான் இன்னும் கண் விழிக்க வில்லை.
கனவு உலகில் நான்.
மேகமண்டலங்கள் என்னைச்சுற்றி.
எதிரே கொண்டையில் பூ சுற்றிக்கொண்டு
துந்தணாவை நிமிண்டி விட்டுக்கொண்டு
நாரதர் "நாராயணா" என்றார்.
அவரிடம்
எங்கே ஈசன் என்று
அவர் கொண்டையை பிடித்து ஆட்டி
கோபத்துடன் கேட்டேன்.
ஈசன் பின்னாலேயே நின்றிருந்தார்.
இறைவா என்ன சோதனை.?
ஏன் இப்படி பண்ணி விட்டீர்கள்..
அவர் விளக்கினார்.
ஓ அதுவா!
நீ என்னவோ சொன்னாயே என்ன ..அது...
ஆம் "லவ்"..அது என்ன என்று
நாரதரைக்கேட்டேன்.
அன்பு என்றார்.
ஓ ..அப்படியா!
உனக்கு
அம்பிகையின் கடைக்கண் வேண்டும்
போலிருக்கிறது.
அவள் அன்பு வேண்டும்
போலிருக்கிறது
என்று தான்
அவளை உடனேயே அனுப்பினேன்...

"போதும் சாமி..போதும்..
"உங்களுக்கு ஒரு கும்பிடு
உங்கள் வரத்துக்கும் ஒரு கும்பிடு"

கூட்டத்திலிருந்து
திமிறிக்கொண்டு ஓடினேன்.

=========================================================
15.05.2015

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

எங்கள் திருமணநாளின் பொன்விழா இன்று


    ( அமெரிக்காவின் "ஹவாய் தீவில்" எடுக்கப்பட்ட படம்)

எங்கள் திருமணநாளின் பொன்விழா இன்று
==============================================ருத்ரா

ஐம்பது நீண்ட ஆண்டுகளா?
அல்லது
ஐம்பது நிமிடங்களாய்

பறந்து விட்ட காலத்துணுக்கா?
என்று எடைபோடும்
நாள் இன்று!
அது நம் உள்ளத்து அருவியைப்பொறுத்தது.
இந்தக்குளியலில்
நம்முள் எழுதப்படும்
வரலாற்று எழுத்துகளுக்குள்
எத்தனை எத்தனை
பூந்திவலைகள்!
எழுவண்ண ப‌ளிச்சிடல்களின்
எத்தனை எத்தனை
பளிங்கு நுரைகள்!

நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்பெறின்
என்று வள்ளுவர்
அந்த கடிகாரமுள்ளின்
"டிக் டிக்" களில்
பயமுறுத்திக்கொண்டிருந்தாலும்
அந்த வாள்
எங்கள் இனிமையான "கேக்"வெட்டும்
கத்தி தான் என்றும்

அன்பின் இனிய தருணங்களை
பங்கு போட்டுத் தரும்
என் உயிரினும் மேலான‌
என் மனைவியை
மறக்க இயலுமோ
என்றும்

என் இதய முரசை
கொட்டி கொட்டி
இசைக்கும் நாள் இந்த பொன்னாள்!

அமெரிக்காவில் இருக்கும்
எங்கள் மகள் எங்கள் மகன்
மருமகள் மற்றும் மாப்பிள்ளை
பேரன்கள் பேத்திகள்
எனும் அன்புதேசம்
ஒரு பேரன்பின் நுண்சிறகுகளைக்கொண்டு
எங்கள் மீது அரண்காத்து
மகிழ்விக்கும் திருநாள் இந்நாள்!

அமெரிக்காவின்
கலிஃபொர்னிய
கடற்கரை மணற்துளியெல்லாம்
எங்கள் சுவடிகளின்
எழுத்துக்களை தூவி நிற்கும்.
அந்த கடற்குருகு ஒலிப்புகள் கூட‌
கரைகாணாத ஒரு உற்சாகக்கடல் நோக்கி
பாடும் ஒரு "ஆற்றுப்படை".
ஆம்
எங்கள் திருமண பொன்விழாவுக்கு
அவை அமுத ஒலிகளின் தோரணங்கள்.

மதுரை கற்பகநகரில்
எங்கள்
இல்லச்சிமிழுக்குள்ளிருந்தும்
கணியன் பூங்குன்றன்
வரிகள் ஒலிக்கட்டும்.
யாதும் ஊரே.யாவரும் கேளிர்.

அன்பு நண்பர்களே
உங்கள் வாழ்த்துக்களோடு தான்
எங்கள் மிச்ச வாழ்க்கையின்
நறுமண மாலைக்கு நார் எடுத்து
பூத்தொடுக்க விழைகின்றோம்.

உங்கள் அன்புக்கு நன்றி.

இப்படிக்கு
அன்புடன்

இ.பரமசிவன்
ப.கஸ்தூரி.

=======================================================



திங்கள், 3 செப்டம்பர், 2018

"சீதக்காதி"விஜயசேதுபதி.

"சீதக்காதி"விஜயசேதுபதி.
====================================ருத்ரா

வில்லும் அம்புமாய்
விஜய சேதுபதி
ஏதோ அந்தக்காலத்து
மூச்சை இழுத்துப்பாடிய‌
"மேவாத மான்.."பாட்டின்
உயிர்மூச்சை தன் மீது
மேய விட்டுக்கொண்டு
லுக் விடுவது போல்
ஒரு ஆழமான பார்வை
ஆனந்தவிகடன் ஸ்டில்களில்
கண்டேன்.
சுவாமி சங்கரதாஸ் அந்த‌
கதைக்குள் இருப்பாரா என்பதும்
தெரியவில்லை.
ஆனால்
மிக உயரிய கவிதைவரிகளுக்கான‌
விருது தரப்படவேண்டிய‌
ஒரு இயக்குநர் அல்லவா
இங்கே தன் முகவரியை
தந்திறுக்கிறார்.

"நடுவுல கொஞ்சம்
பக்கத்தைக்காணோம்"

என்ற அந்த தலைப்பே
ஆழமான கவிதைகளின்
தொகுப்பு அல்லவா?
சீதக்காதி என்றதுமே
சமாதியிலிருந்தும் கூட‌
அந்த வள்ளலின் மோதிரம் நீட்டிய‌
காட்சிதானே
நம் மனக்கண்ணில் இருக்கும்.
இதில் விஜயசேதுபதியும்
காட்டவிருப்பதும்
"ந‌டிப்பின்"ஒரு விலையுயர்ந்த‌
மோதிரமாக இருக்கலாம் அல்லவா!
நடிப்புக்குள் நடிப்பாக‌
தண்ணீருக்குள்
கண்ணீர் விடும்
துடி துடிக்கும் ஒரு மீனாக‌
அவர் அவதாரம் எடுத்திருக்கலாம்.
ஒரு புகழ் பெற்ற நடிகன்
தன் கடந்த வாழ்வின்
பக்கங்களை திருப்பினாலும்
அதில் "வாழ்க்கையின்" நிழல்
கொஞ்சம் கூட ஒட்டியிருக்காது.
ஏனெனில் அவன் வாழ்க்கை முழுவதும்
அரிதாரங்கள் பூசிய அசைவுளே
வலம் வந்து கொண்டிருக்கும்.
உப்புக்கரித்த
அவன் உண்மைக்கண்ணீரில் கூட‌
கிளிசரினே சுவை கூடியிருக்கலாம்.
அந்த "ஐயா"தன் முத்திரையை
அந்த நரையிலும் திரையிலும்
காட்டியிருப்பதை விடவும்
வாழ்க்கையின் கச்சா ஃபிலிமிம்
ஓவ்வொரு ஃப்ரேமிலும்
நடிப்பின் பெருங்கடல்
தளும்பமுடியாமல் தளும்பும்
காட்சிகளைத்தான் காட்டியிருக்கும்
என நினைக்கிறேன்.
அவர் கையில் இருக்கும்
வில்லும் அம்பும்
சமுதாய வக்கிரங்களை நோக்கியும் கூட‌
படையெடுத்திருக்கலாம்.
படம் வெந்தபின் ..திரைக்கு
வந்த பின் அவர்
புரட்சிகரமான பரிமாணங்கள்
பல திருப்புமுனைகளை
நமக்குக்காட்டலாம்.
அந்த "ஐயா"வுக்கு
ஏற்ற ஒரு "அம்மா"வாக வரும்
கதாநாயகியின் முகரேகைகளில் கூட‌
ஒரு பூகம்பத்தின் முக ரேகைகள்
மெல்லிய மயிற்பீலி வருடல்கள் போல‌
தெரிகின்றன.
பொறுத்துப்பார்க்கலாம்
திரையில் நிகழப்போகும்
ஒரு "பிக் பேங்க்"
எனும் நடிப்பின் "பெருவெடிப்பை!"

============================================










சனி, 1 செப்டம்பர், 2018

ரஜனி கடைவிரித்து விட்டார்

ரஜனி கடைவிரித்து விட்டார்
=============================================ருத்ரா

கை சுத்தமானவர்களே!
மனம் சுத்தமானவர்களே!
தயாராய் இருங்கள்
கட்சி துவக்கும் நேரம் வந்து விட்டது.
கட்சி வெறும் சீட்டாட்ட கிளப் அல்ல‌
ரம்மி சேர்ப்பது போல்
ஆட்ளை சேர்க்க.

நாம் நாலு காசு பார்க்கலாம்.
நாற்காலி சுகம் தரும் அனுபவத்தில்
நாலு வீடு வாங்கலாம்.
ஏரிப்பரப்புக்களில்
நம் குப்பத்து ராஜாக்களுக்கு
பட்டா போட்ட வகையில்
நாமும் கொஞ்சம்
உசந்து நிக்கலாம்...
இந்த கனவுகளையெல்லாம்
அந்த தலையணயோடு
மூட்டை கட்டி வைத்து விட்டு
வாருங்கள்.
இலவசங்கள்
பணப்பட்டுவாடா எல்லாம்
உண்டு...
ஆம்
நன்கொடை திரட்டுங்கள்
அதில் தான்
ஏழைகளுக்கு
எல்லாம் வழங்கப்படவேண்டும்.
"நீங்களே செலவு செய்து
ஓட்டுப்போட்டால் தானே
ஓட்டின் மதிப்பு உங்களுக்கு புரியும்"
என்று அவர்களை
புரியவைப்பதே
நம் தொண்டர்களின்
தேர்தல் வேலை!
ஓட்டு போட்டால்
வேட்டி தருவோம்
சேலை தருவோம்
என்று அந்த
மக்கள் குல மாணிக்கங்களை
வெறும் கூழாங்கற்கள் ஆக்கி விடாதீர்கள்.
மகான் ராகவேந்தர்
நமக்கு வெளிச்சம் காட்டவே
கல்லை அடுக்கி அந்த இருட்டுக்குள்
புதைந்து கொண்டார்.
மக்களுக்காகவே
நாம்
மக்களின் சேவையில்
அடி பட்டு மிதி பட்டு
நசுங்கிப்போனாலும்
அஞ்சல் வேண்டாம்.
புதுப்பொலிவு பெற‌
இந்த சமுதாயத்தை
மில்லி மீட்டர் மில்லி மீட்டர் ஆக‌
மாற்றியாக வேண்டும்.
இருங்க தலைவரே
கொஞ்சம் மில்லி யடித்து விட்டு
வந்துவிடுகிறோம்
என்று நினைக்கிறவர்கள்.
இங்கே வரவே வேண்டாம்.
........
.......
ஏம்ப்பா
எனக்கு ஒண்ணுமே பிரியலயே (புரியலையே)
உனக்கு என்னாச்சும் பிரிய்தா? (புரியுதா/)
என்ன்னாச்சும்
பஞ்ச் டையலாக் வச்சு சொருகிருக்காரா?
நல்லா கவனிச்சு சொல்லுண்ணே...
.........

ஜனநாயகத்தின்
அந்த உண்மையான வேர்வைதான்
அந்த மண்ணின் நாற்றத்துடன்
அங்கே
அந்த பாபாவுக்கு
பன்னீர் அபிஷேகம் நடத்தப்படவேண்டும்
என்பது
அவரை "கட் அவுட்" போல நிறுத்தி
பேசவைப்பவர்களுக்கு
தெரியுமா? தெரியாதா?
ஆத்மீக வெளிச்சத்தை
இவர்கள் முகத்தில் "டார்ச்" அடித்து
இவர்கள் முகத்தைக் கழுவி விடும் முன்
இந்த நாட்டின் ஆத்மிக வெள்ளத்தின்
கங்கோத்ரி எனும் ஊற்றுக்கண்
ஒரு சோமக்கள்ளின்
நொதிப்பிலும் நுரைப்பிலும் தான்
மறைந்து கிடந்திருக்கிறது என்பதை
பின்புலத்தின்
அந்த"அருவிக்காரரும் "மற்றவர்களும்
உணர்ந்திருப்பார்களா ? இல்லையா?
அதுவும் அந்த பாபாவுக்கே வெளிச்சம்!

==================================================

எந்திர மிருகம்



எந்திர மிருகம்

=============================================ருத்ரா இ பரமசிவன்



அது தட தடவென்று ஓடுகிறது,

என் முகத்தை நெஞ்சையெல்லாம் அது

மிதித்துக்கொண்டு ஓடுகிறது.

என்னில் உண்டானது அது,

என் சிந்தனைகளில் மிடையப்பட்டது தான் அது,


கனவு வடிவங்களாய் வார்த்துக்கொடுத்த‌

என் உள்ளத்தையெல்லாம்

பொடி பொடியாக்கிக்கொண்டு ஓடுகின்றது.

அது எந்திரமா?

அது கொடும் மிருகமா?


அன்று

அந்த "முகூ ர்த்த தேதியை"

குறித்து விட்ட போது...

காக்காய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்பார்களே

அது போல் தான்

ஊரெல்லாம் தாரை தப்பட்டை முழக்கங்கள் தான்.

பூதாகாரமாய் ஒரு சிரிப்பை

கட்  அவுட் வைத்தது போல்

அது இந்த ஊரின்

தெருக்களில்

சாக்கடை ஓரங்களில்

இன்னும் தூசி துரும்புகளிலும்

ஒட்டிக்கொண்டு கிடந்தது.

உயர்த்தி உயர்த்தி கும்பிடும் கைகள்!

அது எப்படி

இன்று "கில்லட்டின்" ஆனது?



வாக்குகள் எனும்

தலைகளை மட்டும்

வெட்டிக்கொண்டு விட்டு

முண்டங்களை குவிய விட்டு

எறிந்து போனது அது.

அந்த எந்திர மிருகம்

தின்னாதது விழுங்காதது

எதுவும் இல்லை.

மலை ஆறு மணல்

எல்லாம்

ஏப்பம் விடப்பட்டு

மூளியான தேசம் மட்டும் மிச்சம் !

அதுவும்

சுதந்திரக்கொடியேற்றத்துக்கு

விழா நடத்தி

சல்யூட் போட்டுக்கொள்ள!



அன்றைக்கு  எல்லாம்

என் தோளிலும் நெஞ்சிலும்

அணிற்பிள்ளையாக

அண்டை மானிட சுவாசங்களாக

அணி வகுத்து அணி வகுத்து வந்தது அது!

என் பிள்ளைகளுக்கு

புத்தகப்பைகளை சுமப்பேன் என்றது.

என் வீட்டில் நிம்மதியாய்

அடுப்பு எரிந்து

அறுசுவை உணவு படைக்க‌

எல்லாம் நானாச்சு என்றது.

ஆகாசத்தில் எங்கோ கங்கை ஓடுகிறதாமே

அதிலிருந்தே குடி தண்ணீர் குழாய் வழியாய்

வீட்டுக்குள் வரச்செய்து தாகம் தணிக்கிறேன் என்று

இன்னும் என்னவெல்லாமோ

நிறைவேற்றித்தருகிறேன் என்று

வண்ண வண்ணமாய் அச்சடித்துத்தந்தது

அடியில் சில கரன்சிகளின் கற்றையோடு !

இலவசங்கள் இலவசங்கள் .....

எல்லாம் இலவங்காடுகள் ஆனது!

அந்த காய்கள் பழுக்குமென்று

சொப்பனங்களில் படுத்துக்கிடந்தவர்கள்

பதை பதைத்து எழுந்தார்கள்

எரியும் சொக்கப்பனைகளில்

தூக்கி வீசப்படுவதற்கா

அந்த "மின்னணுப்பொறிக்குள்"வீழ்ந்தார்கள்?





எல்லாம் வீழ்ந்தது.

எல்லாம் சரிந்தது.

எல்லாருமாய் அடியற்றுக்கிடக்கின்றோம்.

அன்று "கைபேசிகளில் "

ஒரு உரிமைப்புயல்

சுநாமி பிஞ்சுகளை  உயர்த்திக்காட்டின!

சில காளைகளின் கொம்பும் சிலிர்ப்பும்

ஊர் தோறும் விழா நடத்தின.

"ஓட்டு"கசாப்பில்

அடி மாடுகளாய்  வரிசையில் நின்று

வதை படும் மாட்டு ஜனங்களுக்கு

கிழக்குச்சூரியன் கண்ணில் தெரிவதெப்போ?

அந்த எந்திர மிருகத்தின்

இருட்டுப்பற் சக்கரங்களில்

நம் சிந்தனை வானத்தின் சதை வெளிச்சங்கள்

காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.



நம் ஆட்சி மன்றம் ஜனநாயக உயிர் பூசிய

அந்த கட்டிடம் என்று தானே

நினைத்திருந்தோம்

அது எப்படி ஒரு கூவத்துச் சதுப்பு நிலக்காட்டின்

"பேய்"பங்களா ஆனது?

ஊழல் நாறும் சாக்கடையிலா

நம் ஜனநாயக "கங்கோத்ரி"யின் ஊற்றுக்கண்

அவிந்து போனது?



பொது வளங்களின் ரத்தம் உறிஞ்சிய

டிராகுலாக்களாய்

"அனிமேட்டட்" பயங்கரத்தை

கடைவாய்களில் வழிய விட்டு

எங்கள் குரல்களை

எங்கள் ஏக்கங்களை

எங்கள் வாழ்க்கையின் வார்ப்புகளை

அதன் உயிர் நாளங்களை

மிதித்துக்கூழாக்கி  கொக்கரித்துக்கொண்டு

ஓடுகிறது..

அந்த எந்திர மிருகம்...



======================================================

21.02.2017