உறக்கக் கூரை உடையும் ஓசை
11-17-2024 காலை 5-40
________________________________________________________________________________
கவிச்செம்மல்
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
இது எப்படி
தங்களுக்கு முடிகிறது?
அந்த கனவின் மெல்லிய
இமை மயிர்களில்
மரணக் கிணறு வெட்டி
மோட்டார் சைக்கிள் விடுகிறீர்கள்?
திகில்
தக்கிளி நூற்கிறது
மின்னல் இழைகளில்.
காதலின் முகம் இன்னும்
இலக்கியத்தில்
முகம் தெரியாத
ஒரு முகவரிக்குள் தான்
புதைந்து கிடக்கிறது.
காதலனோ காதலியோ
இருக்கவேண்டும் என்ற தேவையே
இல்லாமல்
ஒரு புழுக்கூட்டு மண்டல
கனவின் பிழம்புக்குள்
ஒரு புழுக்குடைச்சலை அனுபவிப்பது தானே
காதல்!
இறக்கையில் பறக்கும்போதோ
"இறக்கையில்" கரையும்போதோ
பார்த்துக்கொள்ளலாம்
என்று
அந்த மரண சமுத்திரங்களில்
"விரால்"பாய்வது தானே காதல்.
கனவின்
காஸ்மாலஜியிலும் ஒரு
கணிதம் உண்டு.
உங்களுக்கும்
காதல் வருமா? வராதா?
"வரும் ஆனா வராது" என்று
சொல்லும்
குவாண்டம் தானே காதல்.
உங்கள் கவிதையில் பிரிக்கப்படுவது
மூட்டை அல்ல.
தேன்கூடுகளின் குவியல்.
எத்தனை கொட்டினாலும்
அது
இனிமை இனிமை இனிமையின்
அடமழை தான்.
______________________________________________________
சொற்கீரன்.
15.07.2024
________________________________________
கவிதை எனும் கசாப்புக்கத்தி.
_____________________________________
காலத்தை கசாப்பு போடுவதில்
யாருக்கு த்தான் ஆசையில்லை?
கால வெளிக் கணிதக்கோட்பாட்டுக்குள்
நுழைந்து
இயற்பியல் விஞ்ஞானிகள்
"குவாண்டம் நுரைக்கோட்பாடு"
வரை சென்று விட்டார்கள்.
மனிதனின் மனம்
கூறு போட்டு வைத்திருக்கும்
அந்த "கூலக்கடை பஜார்"பக்கம்
போனால் தெரியும்.
அது
மனிதனின் வர்ண வர்ணக்கண்ணாடிகளின்
மனச்சில்லுகளாய் தெறித்து
தெரு முழுவதும் இறைந்து கிடப்பது தெரியும்.
காலம்
கயிறா? பாம்பா?
புதுமைப்பித்தன்
தன் சிறுகதைக்காட்டுக்குள்
தேடி தேடி
பிரபஞ்சத்தின் அந்த தொப்பூள்கொடி வரை
போய் உரசியிருக்கிறார்.
அவரது பேனா
மூட சிந்தனைகளையெல்லாம்
முறித்துப்போட்டுக்கொண்டு
ஆனால்
மூளித்தனமான ஒரு நெருப்பில்
உயர்ந்து புன்னகைத்தது.
இன்னும் வரப்போகிற
எத்தனை யுகங்களை
தேக்கி வைத்திருக்கிறாரோ
அவர் மையில்.
அத்தனைக்கு அத்தனை
தொட்டால் இன்னும் சுடுகிறது
நம் மனைத்தை
அவர் எழுத்துக்கள்.
காலம்?என்ன காலம்?
பேசாமல் கார்த்திக் சுப்பராஜ்
ஜிகர்தண்டா என்று வரிசையாய்
எப்படியெல்லாம் அதன் கையை
முறுக்கியிருக்கிறார்
காமிராவில் என்று பாருங்கள்.
நம் மூளை நம்மையே பிறாண்டுகிறது
ஏன் மொண்ணையாக உனக்கு
இன்னும் முற்பிறவி இப்பிறவி
செப்பு விளையாட்டுகள்.
உன் உள்ளங்கை விரல் ரேகைகளில்
நீயே உன் ஹாலிவுட் கற்பனையை வைத்து
சொரிந்து கொள்.
மனிதம் எனும் மதிப்பற்ற மாணிக்கம்
சாதிச்சாக்கடை எனும் அடி ஆழத்தில்
"அபைஸ்" எனும் ஆங்கிலப்பட ரேஞ்சுக்கு
மூழ்கி மூச்சுத்திணறுகிறது.
அதை மீட்டெடு.
இந்த தெய்வங்களை அந்த
பிணங்களே வைத்துக்கொண்டு
விளையாடட்டும்
______________________________________________
கல்லாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக