தொலைந்து போனவன்
__________________________________
எப்சி
உன் முகவரியை சொல்கிறேன்
அருகில் வா
என்றது அந்த ஆளுயரக்கண்ணாடி.
என் முகத்துக் கவலைக்கீற்றுகளில்
ஒரு கோடம்பாக்கத்து
படப்பிடிப்பு ஓடுவதாக சொன்னது.
உன் கண்களுக்குள்
கண்களாக
அந்த காமிரா ஒரு
குறும்படம் எடுத்துக்கொண்டிருப்பதாக
ரீல் விட்டது.
அதுவே ஒரு குட்டித்திரைக்கதையை
முக்குளி போட்டு
குமிழிகள் விட்டது.
வழக்கமான காதல் கதையை
சாதி மோதல் மசாலாக்களில்
பொரித்து எடுத்துக்காட்டியது.
கொலுசு ஒலிக்குள்
இலக்கியம் தேடும்
இயக்குநரின் இனிய தினவுகளின்
வரி பிளந்து காட்டியது.
காதல் முற்றும் போது
ரத்தத்தின் ரங்கோலி
எங்கும் தெறித்தது...
என்ன..கண்ணாடி முழுவதும்
ஈரமாய் சிவப்பு...
அப்போது தான் தெரிந்தது
அந்தி நேரத்து ஒளியின்
சவக்களையும் கூட
சன்னல் வழியே கண்னாடியில்
புதிதாய் ரசம் பூசியது..
என்ன கண்ணாடியே?
எங்கே என் முகவரி?
முகத்தை இழந்து நீ
வெகு காலம் ஆச்சே.
முகத்துள் அகம்..
அகத்துள்
இனிதாய் ஆழத்தின் ஆழத்துள்
அல்லவா
நீ
அமிழ்ந்து கிடக்கிறாய்.
நிழலாக அல்லவா என் முன்
நிற்கிறாய்.
உன் நிஜங்களை
உன் தூக்கத்தில்
உன் கனவுகளில் தானே
தேடிக்கொண்டிருக்கிறாய்.
என்னில் என்னை
தொலைத்தவனை
உன் பிம்பத்தில் மீண்டும்
தொலைந்து போனவனை
காட்டிக்கொடுத்து விட்டாயே!
கையால் ஓங்கி
ஒரு குத்து விட்டேன்.
கண்ணாடி இன்னும்
ஆயிரம் பிம்பம் காட்டி
என் முகம் தொலைந்ததை
காட்டி காட்டித் தெறித்தது.
_________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக