ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நான் யார்?

SDC10550.JPG


நான் யார்?
======================================ருத்ரா இ.பரமசிவன்

நிச்சயம் நான் ஒரு ரமண முனி அல்ல.
என்னை
என் இரைப்பையில் தேடுவதா?
என் விதைப்பையில் தேடுவதா?
என்றெல்லாம்
என் மூளைச்செதில்களை 
செதுக்கிக்கொண்டிருக்கவும் விரும்பவில்லை.
மணிப்பூரகம் கும்பகம் ரேசகம்
என்று மூக்குத்துளைகளை பொத்தி பொத்தி
விளையாடவும் விரும்பவில்லை.
சமுதாய முடை நாற்றங்களுக்கு
பயந்து கொண்டு 
மூக்கைப்பிடித்துக்கொண்டிருக்கும்
ஒரு சாதாரண ஆம் ஆத்மி தான்.
ஆத்மீகத்தை தேடு
என்று
ராமனையும் கிருஷ்ணனையும் சிவனையும்
"பஜிக்கும்"
சப்பளாக்கட்டைகளில் நசுங்கும்
வெறும் பூச்சியும் அல்ல நான்.
ஏதோ ஒரு கட்டம் போட்ட சட்டையில்
மையோபிக் பார்வையை திருத்தும்
கண்ணாடிகள் வழியே
என் விழி உருண்டைகளை
அசைத்துக்கொண்டிருக்கும்
நடுத்தர குடும்ப அட்டைகளில் ஒட்டியிருக்கும்
ஒரு அந்துப்பூச்சி நான்.
இந்த சமுதாயம் ஒரு நாள்
விழித்துக்கொள்ளும் என்கிறார்கள்.
அந்த மாத்தாப்பு வெளிச்சங்களையெல்லாம்
தேடிக்கொண்டிருக்கும்
கனவுகளின் கூட்டுப்புழு நான்.
ஒரு நாள் அந்த‌
வர்ணப்பிரளயம் சிறகு விரிக்கலாம்.
அது வரை காகிதத்தை உழுது கொண்டிருக்கும்
வெறும்
வறட்டு விவசாயி நான்.

=================================================================

நிழல்

 2014-07-02_19-01-23_972.jpg


நிழல்
========================================================ருத்ரா

 கனமான தருணங்களை சுமந்து சுமந்து
காய்த்துப்போனது என் உள்ளம்.
கவிஞர்கள் காலத்தை மையில் தோய்த்து
அன்னத்தூவி என்பார்கள்.
மயிற்பீலிகள் என்பார்கள்.
அவர்கள் காலம் எனும் உத்திரக்கட்டைகளை
தன் கற்பனை எனும்
பஞ்சு மண்டலங்களில் படுத்துக்கொண்டு
உருட்டித்தள்ளி விடுகிறார்கள்.
கடிகார முட்களையே உற்றுப்பார்
ஒரு ஐந்து நிமிடத்துக்கு!
முடியுமா?
"பாப்பிலான்" எனும் நாவலில்
அவன் பல ஆண்டுகளை
தனிமைச்சிறையில் 
நடந்து நடந்து தேய்த்து
அந்த காலப்பாம்பை நசுக்கியதை
மூச்சிறைக்க மூச்சிறைக்க எழுதியது தான்
நம் நினைவில் வந்து
கழுவில் ஏற்றிக்கொல்லும்.

 அந்த ஐந்து நிமிட தவம்
காப்பிக்கு "பால் காய்ச்ச" தேவைப்படுகிறது.
மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம்
என்று
பெண்மையை மென்மையின் உருவகமாய்
வள்ளுவன் எழுதியிருக்கும்போது
இந்த காலத்தின் கனபரிமாணம்
அவனை என்ன பாடு படுத்தியிருக்கும்?
பத்து பன்னிரெண்டு நீண்ட கழுத்துக்களுடன்
அல்லது 
வெளி நோக்கி பிதுங்கிய குடல்களுடன்
அந்த அபூர்வ மரம்
நம் கண்ணுக்குத்தெரியாமல்
காலத்தின் நச்சரிப்புகளோடு
யுத்தம் செய்கிறதோ?
கணினி யுகம் என்றாலும்
பெண் என்பவள் 
கணினியையும் முந்திக்கொண்டு
முனைந்து ஓடுகிறாள்.
படைப்பின் ஒரு "சூபர் கம்ப்யூட்டரை"
தன் "சூலில்" முடிந்து வைத்திருப்பவள்.
ஒவ்வொரு பிரசவமும்
ஆயிரக்கணக்கான வெற்றுப்பக்கங்களை
சுருட்டி அவளிடம் வீச மட்டுமே
தெரியும் இறைவனுக்கு!
அவற்றை உயிர் நிரப்பி
இறைவன் தேடும் அர்த்தங்களையும்
அதில் அச்சிட்டு வார்ப்பவள் அல்லவா
தாய் எனும் பெண்!
இந்த மரம்
ஒரு தாயின் நிழல்

=============================================

கோட்டை"கோட்டை "
===================================================ருத்ரா இ.பரமசிவன்வெள்ளையன் விட்டுப்போன பேய்வீட்டில்
ஜனநாயகம்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது.

புது மனை குடிபுக‌
குறுகிப்போன மனத்தில்
இடமே இல்லை.
அதனால்
இந்த பூத பங்களாவில் தான்
வாக்குகளுக்கு
ஜமா பந்தி!

வாசிக்கப்படுவது கேட்கிறது.
விவாதங்கள் கேட்கவில்லை.
மரத்துப்போன மரமேஜைகளில்
கைகள் வரட்டி தட்டுவது
மட்டுமே கேட்கிறது.

மின்னணுப்பொறியின்
வாயில்லா பூச்சிகளின்
வாய்களுக்கும் கூட‌
அதிசய "ப்ளாஸ்திரி" அல்லவா இது.
நூத்திப்பத்து விதி.

கணினித்திரை திறந்து
நதிகள் ஓடுகின்றன.
மெட்ரோ ரயில்கள் தடதடக்கின்றன.
கோடி கோடி ரூபாய்கள்
நலத்திட்டங்களாய்
விசை தட்டலில்
வீசி யெறியப்படுகின்றன.

கோட்டையை இயக்க‌
புழக்கடையில்
பாட்டில் பாட்டில்களாய்
கோட்டை அடுப்பில்  தயார்.
டாஸ்மாக் சமையல் தான்.
இந்த போதைகளின் பாதைகளுக்கு
மைல் கற்களே இல்லை
என்ற ரகசியம் மட்டுமே
இவர்கள் கம்பியூட்டர்களின் பாஸ்வர்டு.

தேர்தல் ஆணையம்
கழுத்தைப் பிடித்துக்கொள்ள‌
கண்ணுக்குத்தெரியாத வெட்டரிவாளும்
கைகளும்
ஓங்கி ஓங்கி விழ‌
வெற்றிகளின்
பிரியாணி ரெடி.
பாவம்
மாமிசமாகிப்போன ஆடுகளே
தன் மாமிசத்தை
கறி விருந்து சாப்பிடும்
வினோத கிராஃபிக்ஸ் தான்
உலகின் மிகப்பெரிய நம் ஜனநாயகம்.

==============================================================


சனி, 19 செப்டம்பர், 2015

கனவு
 கனவு
=========================ருத்ரா இ.பரமசிவன்

தலையணைகளின் காடு அல்ல.
காலத்தைபிடிக்கும்
தூண்டில்களின் கூரிய கடல் அது.


சூரியன் வேண்டுமானால்
கொட்டாவி விட்டு சோம்பல் முறிக்கட்டும்.
நீ விழித்துக்கொண்டிரு.

காதலுக்காக கனவு.
கனவுக்காக காதல்.
போதும் இந்த "டெட்டி பேர்" விளையாட்டு.

விழிகள் தேவையில்லை.
ப்ரெய்லியில் கூட‌
ஆயிரம் சூரியன்கள் கருவுயிர்க்கும்.

சுனாமி பேரழிவைக்கூட‌
அணை போட உன் விழியோரம்
கனவு "காங்க்ரீட்" ரெடி.

========================================

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

காஃபிக்கோப்பை ஆறுகிறது


SDC12989.JPG


காஃபிக்கோப்பை ஆறுகிறது
=============================================ருத்ரா இ.பரமசிவன்

டேபிளில்
காஃபிக்கோப்பை ஆறுகிறது.
பத்திரிகை பக்கங்கள் படபடக்கின்றன.
அவன் அவசரம் அவசரமாய்
பத்திரிகைப்பக்கங்களை தேடுகிறான்.
ஆம்.
அவன் படத்துடன்
கட்டத்துள் செய்தியுடன்
மூக்குக்கண்ணாடியையும்
பிதுங்கி வழிய பார்த்துக்கொண்டிருந்தான்.
இது போதும்.
அவன் படுக்கையில் போய்
விறைத்துக்கொண்டான்.
சூரியன் ஒளியை துப்பிக்கொண்டு
எழுந்திருந்தான்.
அந்த வீட்டின் அந்த படுக்கை அறையிலிருந்து
கூக்குரல்கள் ஓலங்கள்
வெளிக்கிளம்பின!
கண்ணீர் அஞ்சலியுடன்
அந்தப்படத்தில்
அருமையாய் விழுதிருந்தான்
ஒரு முற்றுப்புள்ளியாய்!

 ========================================================