திங்கள், 29 ஜூலை, 2024

ஈரோடு தமிழன்பனின் "சொல்லுங்கள்"கவிதை

 Erode Tamilanban

17 நி  · 

சொல்லுங்கள்!

நேற்று முன்னிரவுப்பொழுது

மூச்சுத் திணறியது

நான்கு வீடுகளில் நடந்த

கொள்ளைச்

சம்பவங்களாலா?

தெருக்களைத் தேம்பிஅழவைத்த

விபத்துக்களாலா?

சொல்லுங்கள்!

நேற்று நள்ளிரவு குலைந்தது

நாற்பது

வன்புணர்வுகளாலா??

நான்கு கொலைகளாலா?

சொல்லுங்கள்..!.

நேற்றுப் பின்னிரவின்

தலைதொங்கிப்போனது

வரி ஏய்ப்புச்செய்த

முக்கிய

முதலைகள் மூன்று

தப்பித்து வெளிநாட்டுக்கு

ஓடியதாலா?

சொல்லுங்கள்.!

இன்று விடிகாலைப் பொழுது

முகம் இருண்டு போனது,

கற்பனைக் கடவுள்

கட்டுப்பாட்டில் இல்லாத

போலித்துறவிகள்

பெயர்தெரியாத் தீவுகளில்

அதிகார பலத்தோடு

ஆட்சி நடத்துவதாலா?

சொல்லுங்கள்.!

இன்றின் உடம்பு

ஏன் இப்படி நடுங்கிச் சாகிறது?

கண்ணுக்குத் தெரியாத

நாளையைத்

துளையிட்டுத் தோன்றும்

ஏ.கே.நாற்பத்தேழாலா?

இன்னுமுள்ள இன்றின்

எஞ்சியநொடிகளைப்

காயங்களும் வலியும்

கைப்பற்றிவிட்டதாலா?

.............................................

சொல்லுங்கள்-தலைப்பு

29-07-2024

இரவு9-55


________________________________________________‍

ஈரோடு தமிழன்பனின் "சொல்லுங்கள்"கவிதை

பற்றிய கவிதை

___________________________________________

29.07.2024 இரவு 10.45





நன்றாகத்தான் 

சட்டையை உலுக்கிக்

கேட்கிறீர்கள்.

சட்டைசெய்யாத

ம‌லட்டுச்செவிகளை

வைத்துக்கொண்டு 

என்ன செய்ய?


சட்டம் ஒழுங்கு 

கெட்டது என்று

சட்டாம்பிள்ளைத்தனம் 

செய்யும்

சட்டநாதர்களுக்கு

என்ன "பூசை" செய்வது?


முதலைப்பண்ணைகள்

நடத்துபவர்களுக்கு

கவலையே இல்லை.

அவற்றின் தீனிகளுக்கு

போதுமான மாமிசம்

மக்களின் கனவுகளிடமிருந்தே

எடுத்துக்கொள்ளலாமே.


இங்கே கடத்தல்கள்

அங்கே கற்பழிப்புகள்

இதெல்லாம்

இந்த செய்தித்திருவிழாக்களின்

குடைராட்டினங்களும்

ரங்க ராட்டினங்களும் தானே.


இன்னும் 

அதர்மங்களை எதிர்க்கும்

எந்திரத்துப்பாக்கித் துளைகள்

சிவனின் நெற்றிக்கண்ணாக 

இருந்தாலும்

புராணங்களின்

ரப்பர்குண்டுகள் தானே

இங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.


சாடியில் கற்களை

நிரப்பி நிரப்பிப்பார்க்கும்

இந்த காக்கைகளுக்கு 

தெரியவில்லையே

இவை ஓட்டுகள் அல்ல‌

ஓட்டைகள் என்று.


கோபம் கொப்பளிக்கிறது.

நெஞ்சு வெடிக்கிறது.

எரிமலை சீறுகிறது.

கொதிக்கும் நெருப்புக்குழம்பு

குமிழிகள் பூக்கின்றன.

நாம் தானே சிவகாசியில்

ஆர்டர் கொடுத்திருக்கிறோம்

இந்த தீபாவளிக்கு.


ஈரோடு தமிழன்பன் அவர்களே

அவர்கள் கொலுப்பொம்மைகள்

வைக்கவில்லை

நிஜங்களைத்தான் நச்சு

நிழல்களாக 

வரிசைப்படுத்தி 

நிறுத்தியிருக்கிறார்கள்

என்பதை உங்கள்

சொற்களின் 

ஒளி ஒலிக்காட்சிகளில்

படம் போட்டு

காட்டியிருக்கிறீர்கள்.

அருமை! அருமை!! 

அருமையோ அருமை!!!


______________________________________________

சொற்கீரன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக