செவ்வாய், 9 ஜூலை, 2024

கல்லிடைக்குறிச்சி எனும் தீவு.

கல்லிடைக்குறிச்சி எனும் தீவு.

____________________________________________________

சொற்கீரன்




நள்ளிரவு.

தலையணக்கும் பாய்க்கும்

பாலம் கட்டும் பதமான நேரம்.

பத்து வயதுகளின் 

கனவுப்பிஞ்சுகளில்

எந்த ஈடன் தோட்டமும் வந்து

பூக்களின் வருடல்களோடு

கிச்சு கிச்சு மூட்டியதில்லை.

வெளித்தாசாலில்

தூங்கிக்கொண்டு சுருண்டுகிடக்கும்

சாதா மண்ணுளிப்பாம்பு போல்

இரவு முழுவதும் கிடந்து கொண்டிருக்கிற‌

பருவம் அது.

வீட்டு வாசலில் பெரிய புளியமரம்.

கிளை படர்ந்து சிற்றிலைக்கொத்துகளில்

வளைவு வளைவுகளாய்

புளியங்காய்களோடு

காற்றில் குலுங்கி குலுங்கி

அந்த இரவு நேரத்து ஆடிக்காற்றில்

மொத்த இருட்டுமே

வானமண்டலத்து "ஓரியன்" அரக்கன் போல‌

என்னோடு பயம் காட்டிக்கொண்டிருக்கும்.















______________________________________________________



கல்லிடைக்குறிச்சி 

ரயில்வே ஃபீடர் ரோடு.

இந்த நரம்பு முடிச்சுகளோடு

என் வயதுகள் பதினேழு பதினெட்டு வரை

சொக்கட்டான் ஆடியது.

புத்தகக்கூடுகள் என்னை 

கங்காருக்குட்டி போல்

சுமந்து சுமந்து திரிவதாய்

இன்றும் உணர்கின்றேன்.

அந்த திலகர் வித்யாலய 

உயர்நிலைப்பள்ளி

வருங்காலத்தில் நான் கடக்கும்

மைல்கற்களையெல்லாம்

மாணிக்க நினைவுகளின் 

சுடர்ப்புள்ளிகளாய் ஆக்கிக்கொடுத்ததை

மறக்கவே இயலாது.


சோழி குலுக்கிக்கிப்போட்டு

நகர்த்திக்கொண்டிருந்த என்

வாழ்க்கையின் பக்கங்கள் எல்லாம்

அந்த ஊரின் குமாரர் கோவில் தெரு

நீளத்தின் அகலத்தின்

தூசி வனங்களிலும்

அந்த ஊரை வளைத்துக்கவ்விப்பிடித்து

பளிங்குத்தடவல்களால்

திருநெல்வேலி அல்வாவின் இனிப்பை

கணந்தோறும் கணந்தோறும்

சுவைக்கும் நினைவுகளால்

வருடிக்கொடுக்கும்

அந்த தாமிரபரணி ஆறும் வாய்க்காலும்

பச்சையை அந்த ஊரின் வயல்

விரிப்புகளில் தூவித்தரும் அழகிலும்

வேர்பிடித்து நின்றவனாய் 

நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டிருக்கிறேன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக